தமிழ்
மண்ணில் கவியரங்குகள் அறவே நடைபெறாத காலம் அது!
சுமார் 1950களில் என்று சொல்லலாம்.
இந்தியாவின் வட பகுதியிலும், ஹைதராபாத் பெங்களூர் போன்ற உர்தூ பேசும் தென்பகுதிகளிலும்,
‘முஷாயிரா’க்கள் எனும் உர்தூக் கவியரங்குகள் பல்லாண்டுகளாக வழக்கமாக நடைபெற்று
வந்துள்ளன. அம்மரபைப் பின்பற்றி, தமிழைத்
தாய்மொழியாகவும், உர்துவைப் பேச்சுமொழியாகவும் கொண்டுள்ள தமிழகத்தின் வட
ஆர்க்காட்டு முஸ்லிம்களும் ‘முஷாயிரா’க்கள் நடத்திவந்தனர். அந்தக் காலகட்டத்தில்தான் ‘இறையருள் கவிமணி’
அவர்கள் வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியை
மேற்கொண்டார்கள்.
‘கருவிலே
திருவான’ கவிஞர் அல்லவா? ‘இந்த முறையைத்
தமிழ் கூறும் நல்லுலகிலும் அறிமுகப் படுத்தினால் என்ன?’ என்ற எண்ணம் தோன்றவே,
தமிழ்நாட்டில் தமிழ்க் கவியரங்கிற்கு வித்திட்டுவிட்டார் நம் பேராசிரியர். பெரிய அளவிலான மாநாடுகளின் கவியரங்கத் தலைமைப்
பொறுப்பு, பேராசிரியருக்கு வழங்கப்பட்டது.
அப்பொறுப்பினைத் திறம்பட நிறைவேற்றி, 1990வரை கவியரங்கத் தலைமைக்கு
‘இறையருள் கவிமணி’யே தகுமானவர் என்ற நிலை நீடித்தது. அன்னாரின் கவியரங்கக் கவிதைகளின் தொகுப்பு, ‘தலைப் பா’ எனும் பெயரில் நூலுருவில் வந்துள்ளது. அதில் மூழ்கி எடுத்த முத்துகளே பின்வரும் கருத்துக்
கோவை.
இறையச்சமும்
இறைநினைவும் இன்றி வாழும் மக்களைப் பற்றி எண்ணிக் கவலைப்பட்ட இறையருள் கவிமணியார்,
“கலியாட்டே மிகுந்தின்று காவலனை மறந்துள்ளோம்
புலிவாழும் குகைகளிலே பூனைகளாய்க்
கிடக்கின்றோம்”
என்று
சலித்துப் பாடுகின்றார். அந்த
இழிநிலையினைப் போக்க வழி வகுத்துத் தருகின்றார் பின்வரும் அடிகளில்:
“இதயந்
திறந்து இறைவனை வேண்டுவோம்!
அனைத்துப்
புகழும் அல்லாஹ் வுக்கே
அனைத்தையும்
காக்கும் ஆண்டவன் ஒருவன்
அவனையே
நாடினால் அனைத்துமே பெறலாம்
அவனையே
மாற்றினால் நம்மையே மாற்றுவோம்!”
இக்கவியடிகளுள்
இறுதி அடியைக் கவனியுங்கள். அதில் ஓர்
இலக்கிய நயம் பொதிந்துள்ளது. ‘அவனையே’ என்பதை, ‘அவனை+ஏ’ எனப் பிரித்து,
‘அவனை ஏமாற்றினால்’ என்றும், ‘நம்மையே’ என்பதை, ‘நம்மை+ஏ’ எனப் பிரித்து, ‘நம்மை
ஏமாற்றினால்’ என்றும் இலக்கிய நயம்பட
விரித்துரைக்கும் தனித் திறன் பேராசிரியருக்குக் கைவந்த கலையாகும்.
மக்களுக்கு
நீதியைக் கற்பிப்பதில் கதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் இருக்கும் வீரியத்தைவிடக்
கவிதைகளின் வீரியம் கூடுதலானது என்பதை இலக்கிய வல்லார் இயம்புவர். இவ்வுண்மை, சங்கப் பாடல்கள் மூலமும் நம்
சமகாலப் பாடல்கள் மூலமும் தெளிவாக உணரப்படும் ஒன்றாகும். ‘இறையருள் கவிமணி’ அவர்களின் நிறையருள்
கவியடிகளில் இது போன்று அறவுரைக் கவிகளாகப் பதிவாகியுள்ளதை நாம் காணலாம்.
“நம்நிழலை நாம்தொடர்ந்தால் நாமதனைப் பிடிக்கமாட்டோம்
நம்போக்கில் நாம்நடந்தால் நிழல்நம்மைத்
தொடர்ந்துவரும்.”
எத்துணை
அற்புதமான அறிவுரை!
நபிவழியை
நம் வாழ்க்கை நெறியாகக் கொள்வதன் தேவையை இனிமையுறப் பாடுவார் இறையருட்கவிமணியார்:
“‘நானாடி’
எனநவின்ற நபிகள்பிரான் நல்லுரைமுன்
தீனாடி
நின்றிடுவோர் திகழழகை நோக்கிடுவோம்
ஊனோடும்
உயிரோடும் உலகோடும் உறவாடும்
தேனோடும்
உரையாடும் திருநபியின் மொழிகற்போம்
வளங்காணும்
வாழ்வினிக்க வள்ளல்நபி வழிநிற்போம்
உளம்வாழும்
நிலைகாண உயர்மறையின் நெறிச்செல்வோம்”
திருமறை
நெறி முறையையும் திருநபி வழிமுறையையும் கற்று, அவற்றின்படி நிற்றலின் தேவையைப்
பாடும் முறை, படித்துப் பின்பற்றத் தக்கது.
(நானாடி = நான் + ஆடி = நான் கண்ணாடி, தீனாடி = தீன் + நாடி = மார்க்கத்தை
நாடி, தேனோடும் = தேன் + ஓடும்)
நபியவர்களின்
ஒப்பற்ற மேன்மைத் தன்மையினை விளக்க, கீழ்க்காணும் இரண்டடிகளில் இலகுவாகப்
பாடுகின்றார்:
“மானிடரின் உயர்வுக்கு மாநபியே
சான்றாவார்
மானிடரின்
இழிநிலைக்கு நாமின்று சான்றாவோம்.”
நமது
அழுகிய குணங்களால் நம் இழிநிலையும், நபியவர்களின் அழகிய குணங்களால் அவர்களின் உயர்
நிலையும் ஒப்பு நோக்கிப் பாடுவது நம் சிந்தனைக்கு உரியவையாகும். இன்னும் இரண்டு வரிகளும் நம் சிந்தனைக்குரியவை:
“நற்குனத்தின்
நாயகராம் நன்னபியார் பிறந்திலரேல்
கற்சிலைசெய்
சிற்பிகளால் கல்மலைகள் மறைந்திருக்கும்.”
அன்று
மக்காவில் இருந்த சிலை வணக்கம் மறைந்து போனதற்குக் காரணம், மாநபி (ஸல்) அவர்கள்
பிறந்ததுதான் என்பதை இலக்கிய நயத்துடன் பாடும் விதம் படித்து மகிழத் தக்கது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
பிறந்திருக்காவிட்டால், மக்கத்து மலைகளெல்லாம் கற்சிலைகள் செய்வதற்காக உடைபட்டுச்
சிலைகளாகச் செதுக்கப்பட்டிருக்குமாம்! எத்துணை
அழகிய கற்பனை!
இது
போன்ற கற்பனை வளத்தினை வேறொரு கருத்தில் கவியரங்கில் பாடுகின்றார்
பேராசிரியர். அது, பெருமானார் அவர்களை
அருமைத் தோழர்கள் பின்பற்றிய விதம்
பற்றிக் கூறுவதாகும்.
“ஊசியைத் தொடரும் நூலினைப் போன்று
காசிம்
நபியைக் கருத்துடன் தொடர்ந்தனர்”
என்று
அழகாகப் பாடுகின்றார். இவ்வரிகளைப் படிக்கும்போது,
நமக்கும் அந்த நபியவர்கள்தாம் வழிகாட்டி; நாமும் அவர்களின் அடியொட்டியே
வாழவேண்டும் என்ற இன்னுரையை வழங்குகின்றார் ‘இறையருட்கவிமணி’.
இனி,
பேராசிரியரின் கவியரங்கப் பாடல்கள் செய்த சிந்தனைப் புரட்சி, கல்விச் சிந்தனை,
கவிதை பற்றிய கருத்து, இஸ்லாமிய விழுமிய உணர்வு முதலானவற்றைப் பற்றி அடுத்த
பதிவில் பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்.
அதிரை அஹ்மது