Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை-5 23

அதிரைநிருபர் பதிப்பகம் | January 28, 2012 | , , , ,


நமது இத்தொடருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குபவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களுள் தலையாயது,

والشعراء يتبعهم ألغاون 

“கவிஞர்கள் - அவர்களை வழிகேடர்களே பின்பற்றுவர்”  (26: 224) எனும் இறைவாக்காகும்.  ‘ஓ! இப்படியோர் இறைவசனம் இருப்பது எனக்குத் தெரியாதே!’ என்று சொல்லும் அளவுக்கு நானொன்றும் அறிவீணன் அல்லன்.  இதற்கும், இது போன்ற வசனங்களுக்கும் வேத விரிவுரையாளர்கள் எவ்வாறு விளக்கம் தந்துள்ளார்கள் என்பதை விளங்குவதே அறிவுடைமை.

இமாம் இப்னு கதீர் (ரஹ்) அவர்கள் தமது ‘தஃப்ஸீர் இப்னு கதீர்’ எனும் விரிவுரையில் கூறும் கருத்து நமக்கு முன் தெளிவாக உள்ளது.  அவர்களின் கருத்துப்படி, அன்றைய மக்காவின் சிலை வணக்கக்காரர்களுள் இலக்கிய வித்தகர்களும் இருந்தனர்.  அவர்கள் குர்ஆனிய வசனங்களைக் கேட்டுவிட்டு எள்ளி நகையாடி, ‘வேத வசனங்கள்’ என்று சிலவற்றைப் புனைந்து, மக்களுக்கிடையே புழக்கத்தில் விட்டனர்.  அவற்றுக்கும் ஆதரவாளர்கள் சிலர் இருந்தனர்.  பொய்யாகப் புனைந்துரை செய்தவர்களைத் தரம் தாழ்த்தியும், அவர்களுக்குப் பக்கத் துணையாக நின்றவர்களை ‘வழிகேடர்கள்’ என்றும் சாடியே இவ்வசனம் இறங்கிற்று எனக் குறிப்பிடுகின்றார்கள் இமாம் இப்னு கதீர் (ரஹ்).  

இறைத் தூதரைக் ‘கவிஞர்’ என்று இணைவைப்பாளர்கள் கூறியபோது, 

و ما علمناه الشعر ما ينبغي له

“(நம் தூதராகிய) அவருக்கு நாம் கவிதையைக் கற்றுக் கொடுக்கவில்லை; அது அவருக்குத் தேவையானதும் இல்லை” (36:69)  என்று மாற்றடி கொடுத்தான் மறை வழங்கிய வல்லோன்.   வேத விரிவுரையாளர்களுள் இன்னொரு மேதையான இமாம் அத்தபரீ (ரஹ்) அவர்களும் தமது ‘தஃப்ஸீர் அத்தபரீ’ எனும் நூலில் இவ்வாறு குறிப்பிடுவதாக இமாம் இப்னு கதீர் (ரஹ்) அவர்கள் இதை உறுதிப் படுத்துகின்றார்கள்.

குர்ஆனிய வசனங்களின் இயல்புகளுள் ஒன்று, ஒரு கருத்தை வலியுறுத்தும்போது, அதன் பின்னே அதற்கு எதிரானதையும் சேர்த்துக் கூறிவிடுவது ஆகும்.  இத்தன்மையில் அமைந்துள்ளதுதான் மேற்காணும் முதல் வசனம்.  அதன் பின்னே இடம்பெற்ற 227 வது வசனத்தைப் பாருங்கள்:

“(ஆயினும்,) அவர்களுள் எவர் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்து, (தங்களின் கவிதைகளில்) அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூர்ந்து, (பிறர்  நிந்தனையால்) அநியாயத்திற்கு உள்ளானதன் பின்னர் பழி வாங்கினாரோ, அவரைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தாம்.)”

நம்பத் தகுந்த நபிமொழி அறிவிப்பாளரும் நபி வரலாற்றாசிரியருமான முஹம்மத் இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது:  மேற்கண்ட 224 வது வசனம் அருளப்பட்டவுடன், நபித் தோழமையைப் பெற்ற கவிஞர்களான ஹஸ்ஸான் இப்னு தாபித், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா, கஅப் இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகியோர் அழுதவர்களாக அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நாங்கள் எல்லாரும் கவிஞர்கள் என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும்தானே;  அந்த நிலையில் அல்லவா இத்தகைய வசனம் அருளப்பட்டுள்ளது!” என்று அங்கலாய்த்தவர்களாகக் கூறினர்.  அப்போது நபியவர்கள் அத்தோழர்களுக்கு மேற்கண்ட 227 வது வசனத்தை ஓதிக் காட்டி, இவ்வசனத்தில் கூறப்பட்ட மூன்று தன்மைகளுக்கு உரியவர்கள் நீங்கள்தாம், நீங்கள்தாம், நீங்கள்தாம்” என்று ஆறுதல் கூறினார்கள்.   

‘அபூ தாவூத்’ எனும் நபிமொழித் தொகுப்பில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வாயிலாக இடம்பெற்ற அறிவிப்பொன்றும் இக்கருத்தை வலுப்  படுத்துகின்றது.

‘அஷ்ஷுஅரா’ (கவிஞர்கள்) எனும் அத்தியாயத்தின் விரிவுரையை நிறைவு செய்யும்போது, இமாம் இப்னு கதீர் (ரஹ்) அவர்கள் ஒரு நபிவரலாற்று நிகழ்வைக் குறிப்பிடுகின்றார்கள்.  அண்ணல் நபி (ஸல்) அவர்களை வசை மொழிகளால் எதிரிகள் திட்டியபோது, தோழர் ஹஸ்ஸானைப் பார்த்து, “இவர்களுக்கு எதிராக வசைக்கவி பாடும்; ஜிப்ரீலும் உமக்குத் துணை நிற்பார்!” என்று கூறி ஊக்கப் படுத்தினார்கள்.
(ஆதாரம்: சஹீஹுல் புகாரீ)

கஅபு இப்னு மாலிக் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் வந்து, “எது அருளப்பட வேண்டுமோ, கவிஞர்களைப் பற்றியான அதை அல்லாஹ் அருளிவிட்டான்” என்று கவலையுடன் கூறினார்கள்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உண்மையான இறை நம்பிக்கையாளன் தன் எதிரியுடன் தன் வாளாலும் நாவாலும் போர் செய்வான்.  இவ்வாறு நாவால் செய்யும் சொற்போரானது, அவர்களை அம்புகளைக் கொண்டு தாக்குவதற்குச் சமமாகும்” என்று கூறி, ஆற்றுப் படுத்தினார்கள்.
(ஆதாரம்: முஸ்னது அஹ்மத்)

(ஆய்வு இன்னும் தொடரும், இன்ஷா அல்லாஹ்....)

-அதிரை அஹ்மது

23 Responses So Far:

sabeer.abushahruk said...

அழகான விளக்கங்கள் காக்கா. விவாதிக்க வாய்ப்புத் தராத ஆதாரங்கள்.

தஃப்சீர் இல்லாமல் நேரடி அர்த்தம் கண்டு பல வசனங்களை நம்மவர்கள் தவறாகப் புரிந்துகொண்டுவிடுகின்றனர். அப்படி ஒரு வசனம்தான் கவிதையைக் குறித்து சொல்லப்பட்டுள்ள வசனமாகும் என்று விளங்குகிறது.

சூரத்துல அஸரில் முதலில் இறைவன் "மனிதர்கள் நிச்சயமாக நஷ்டவாலிகள்தான்" என்கிறான். அதை அப்படியே எடுத்துக்கொண்டால், " அதுதான் அல்லாஹ்வே சொல்லிவிட்டானே நஷ்டவாலிகள் என்று. இனி நாம் என்ன நல்ல அமல்கள் செய்தாலும் செய்யாவிட்டாலும் நஷ்டவாலிதானே" என்ற முடிவோடு மனிதான் வழிகேட்டில் உழல்வான்.

எனவே, அந்த வசனத்தைத் தொடர்ந்து, "யார் ஈமானோடு நல்லமல்களைச் செய்து, பொருமையைக் கடைபிடிக்கிறார்களோ, அவர்களைத்தவிர" என்ற வசனத்தையும் சேர்த்து வாசித்தாலே நேர்வழி விளங்கும்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா காக்கா.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஆய்வுகளையும் ஆக்க பொறுக்க வேண்டும்... அப்போதுதான் ஆச்சர்யங்களை அசைபோட முடியும் !

//அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உண்மையான இறை நம்பிக்கையாளன் தன் எதிரியுடன் தன் வாளாலும் நாவாலும் போர் செய்வான். இவ்வாறு நாவால் செய்யும் சொற்போரானது, அவர்களை அம்புகளைக் கொண்டு தாக்குவதற்குச் சமமாகும்” என்று கூறி, ஆற்றுப் படுத்தினார்கள்.//

நன்மையை நாடியும் அல்லாஹ்வின் பொருத்தத்தையும் முன்னிருத்தியும் நாவாலும் நம்முடைய எழுத்துக்களாலும் வசப்படுத்துவோம் இஸ்லாத்தின்பால் தொட்டெடுக்கும் தூரத்திலிருக்கும் சகோதர சமையத்தைச் சார்ந்த சகோதரர்களை இன்ஷா அல்லாஹ் !

KALAM SHAICK ABDUL KADER said...

"குர் ஆன் மட்டும் போதும்” என்ற புதிய குழப்பவாதிகள் இப்படிப்பட்ட ஹதீஸ்கள்- தஃப்ஸீர்கள் கொண்டு குர் ஆன் வசனங்கட்கு விளக்கம் அறியாமல் “நேரடியான” தர்ஜமாவை மட்டும் வைத்துக் கொண்டு (அதுவும் அரபு மொழியில் ஒரு பதத்திற்கு பல பொருட்கள் உள) தங்கட்குச் சாதகமானதாகத் திரித்து மக்களைக் குழப்பும் கூட்டம் உருவாகி விட்டதும் அறிவோமாக! அவர்களிடம் நான் கேட்டேன்:” தொழும்போது போதை நிலையில் தொழ வேண்டா” என்பதை மட்டும் ஒருவன் விளங்கினால், மற்ற நேரங்களில் மதுவருந்தலாம் என்றல்லவா செயற்படுவான்? குறிப்பிடும் ஒவ்வொரு இறைவசனமும் இறங்கியத் தருணம்-அதற்கான ஹதீஸ் மற்றும் தஃப்ஸீர் விளக்கம் யாவும் துணைகொண்டு படித்தால் மட்டும் தான் விளங்கும் என்பதற்குக் கவிஞர்களைப் பற்றிய மேற்கூறிய வசனங்களும் ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்ட விதம் அதிரை அஹ்மத் காக்காச் சிறந்த கவிஞர் மட்டுமல்ல்- மிகச் சிறந்த மார்க்க வழிகாட்டியும் கூட. தங்களின் அடியொற்றி அடியேன் கவிதையெனும் ஆயுதத்தால் தீமையைத் தடுத்து நன்மைகளை ஏவும் “இஸ்லாமியப்பார்வையில்” இயங்கிட அல்லாஹ்வின் அருளை வே\ண்டி நிற்கின்றேன்.

Shameed said...

அஹ்மத் காகாவின் ஆய்வு கட்டுரை மிக நேர்த்தியகும் திருப்தியாகவும் உள்ளது

KALAM SHAICK ABDUL KADER said...

கவிதைகள் மறுக்கப்படுகிறபோதும், புறக்கணிக்கப்படுகிற போதும் முதலில் அடையாளமற்றுப் போவது மனிதநேயம்தான்!

பொருளைத் தேடும் வாழ்வின் அழுத்தம் மேலோங்கி, கவிதைகள் புறக்கணிக்கப்படுகிறபோது, மனத்துயரங்கள் பெருகி, மருத்துவ ஆலோசனைகள் முந்திக் கொள்கின்றன.

பூமனங்கள் வன்முறையின் முகவரியாவதும், தனக்கான உரிமையை கேட்டுப் பெற சுரணையற்றுப் போவதும் கவிதைகளைப் புறக்கணிப்பதன் துயரமாகும்.

இந்த வாழ்வுக்கு எதிராக துன்பங்களும் துரோகங்களும் வீறு கொண்டு எழுகிறபோது, பொருத்தமான ஆறுதலைத் தரும் வலுவான சொற்களைக் கவிதை தனக்குள் ,எப்போதும் வைத்திருக்கவே செய்கிறது.

தனக்கெதிராக தொடுக்கப்படும் போர்க்குண காரியங்களுக்கு எதிராயுதமாக களமிறங்கும் வீர்ய சொற்களை கவிதை தனக்குள் வைத்திருப்பதை அறிந்தவர்கள் அதையே தங்கள் கேடயமாக பயன்படுத்துவர்.

தன்னை நேசிக்கிறவர்களை என்ன செய்ய வேண்டும் என்று கவிதைக்குத் தெரியும்!

இருளுக்கு அது வெளிச்சமாவதற்குப் பதில் வெளிச்சமேற்றும் ஒற்றைச் சுடராக பிறப்பெடுக்கும்.

துயரங்களுக்கு ஆறுதலாவதற்குப் பதில், துயரங்களைக் களையும் பேராயுதமாக புறப்படும்.

KALAM SHAICK ABDUL KADER said...

"சஹன்' முழுவதும் பரப்பியிருக்கும் "ஹல்வா" கையடக்கமானத் துண்டுகளாக்க உதவும் கத்தியே, ஹராமான கொலை எனும் பாவம் செய்யவும் உதவும்.

கத்தியினைப் போலவே
பத்திராமாய்க் கையாளும்
கவிதைத் திறனால்
சுவையூட்டும் துண்டுத்
துண்டாய்ப் பரிமாறப்படும்
நல்லவைகள் ஏவி
தீயவைகள் தடுக்கும்
பார்வையில் இஸ்லாம்
கொலை செய்யும்
நிலையில் ஹராம்

கத்தியின் மீது
பத்திரமாய் நடப்பது போன்று
புத்திக் கூர்மையினை
புலமையோன் அல்லாஹ்
புலமையாய்ச் சிலருக்கு
அளித்துள்ளதை நினைத்துக்
களிப்படைவோம் ...!!!

"சுருக்கெழுத்துக்" கற்றவர்கள் நீண்ட விடயங்களைச் சுருக்கிக் கொண்டு எழுதுவது ஒரு கல்வி; "சீனம் சென்றும் அறிவைத் தேடு" என்கின்றது இஸ்லாமியப் பார்வை என்றால் , சீனம் "காஃபிர்" நாடு என்று ஒதுங்கி விடலாமா?
கவியும் ஒரு கல்வியே. இஸ்லாமியப் பார்வையில் கல்வியைத் தேடுவோம்;பாடுவோம்

இப்னு அப்துல் ரஜாக் said...

இந்த எபிசோட்,மாஷா அல்லாஹ்,குரான்,ஹதீஸ் துணையோடு ஆராயப்பட்டிருக்கிறது.வெல்டன் சாச்சா.

KALAM SHAICK ABDUL KADER said...

கோபத்தீயில் உருகும்
தங்கக் கருவால்
கவிதாபரணம் உருவாகும்

கவிவேந்தர் சபீர் அவர்கட்கும் தெரியும் கவிதை என்பது சிந்தனைக் "காமிராவில்" பளிச்சிடும் ஒரு பொறி;அதனை யாப்புத்தறியிலும் நெய்யலாம்; புதுக் கவிதை மழையாகவும் பெய்யலாம்.நீங்கள் அதிரை நிருபர் வலைத்தளத்தில் இன்று பதிவு செய்துள்ள "விவேகம்- வேகம்"பற்றியக் கவிதையின் பொறித் தட்டியது நீங்கள் வண்டி ஒட்டிய போது அன்று ஏற்பட்ட நிகழ்வின் சமிஞ்சை; இன்று எங்கட்குக் கிட்டியது அற்புதமானக் கவிதை. எனவே, "கவிதையிலே மூழ்குவதில்லை" என்பதை உணரவார்களா?- கவிதைப் பற்றிய மாற்றுக் கருதுள்ளச் சகோதரர்கள்.
//இந்த எபிசோட்,மாஷா அல்லாஹ்,குரான்,ஹதீஸ் துணையோடு ஆராயப்பட்டிருக்கிறது.வெல்டன் சாச்சா.//

ஜஸாக்கல்லாஹ் கைரன்;அன்புத் தம்பி அர.அல. ஆய்வு முடியும் வரைக் காத்திருப்போம் என்று நெறியாளர் அவர்கள் சொன்னது இப்பொழுதுத் தெளிவாகியிருக்கும் என்று நம்புவோமாக!

இப்னு அப்துல் ரஜாக் said...

சகோ அபுல் கலாம் (த/ பெ. ஷைக் அப்துல் காதிர் ) அவர்களுக்கு,குரான் ஹதீஸ் துணையோடு ஆராயும் போது ஓர் முஸ்லிம் பாராட்ட வேண்டும்,அதை விடுத்து,கண்டவர்,நிண்டவர் சொல்லுவதை எல்லாம் எடுத்து எழுதும்போது தூற்ற வேண்டும்,ஏற்க முடியாது என்ற சிறு பேசிக் விஷயம் கூட தெரியாமல் எப்படித்தான் உங்களால் எழுதமுடிகிறது?மேலும்,எடுத்ததற்கு எல்லாம் கவிதை எழுதி,அதில் பல பொய்யான தகவல்களையும் சொல்லும் நீங்கள் தான் யோசிக்க வேண்டும். எது சரி,எது தவறு என்று?மூச்சுக்கு மூச்சு கவிதை விடும் நீங்கள்,குரான்,ஹதீஸ் எச்சரிக்கை பற்றி அறியவில்லையா?

Noor Mohamed said...

கவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை-5

இதுவரை வெளி வந்துள்ள 5 தொடர்களில் என்னால் ஓர் ஒப்பற்ற உறுதியான கருத்தை உணர முடிகிறது.

எதிர்காலத்தில் நிகழ விருக்கும் விவாதத்தில், கவிதை - இஸ்லாத்தின் எதிரியல்ல என வாதிடுவதற்கு, இப்போதே சொற்போர் பயிற்சி தந்து கொண்டிருக்கிறார்கள் அஹமது காக்கா அவர்கள்.

இடைவிடா தொடரை இன்பமுடன் வரவேற்கின்றேன்.

நூர் முஹம்மது

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஆழமான குளத்திலிருந்து தெளிவான நீரோடை போல்.அஹ்மத் அப்பாவின் கவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை-5 தொடர்.கண்ணியமிக்க குர்ஆன்,ஹதீஸ் லிருந்து.குழம்பியவர்களுக்கு தெளிவுமிக்க ஆக்கம் ஜஜாக்கல்லாஹ்.

Muhammad abubacker ( LMS ) said...

சகோ.அர அல சொன்னது :

// சகோ அபுல் கலாம் (த/ பெ. ஷைக் அப்துல் காதிர் ) அவர்களுக்கு,குரான் ஹதீஸ் துணையோடு ஆராயும் போது ஓர் முஸ்லிம் பாராட்ட வேண்டும்,அதை விடுத்து,கண்டவர்,நிண்டவர் சொல்லுவதை எல்லாம் எடுத்து எழுதும்போது தூற்ற வேண்டும்,

நல்ல விசயங்கள் சொன்னாலுமா?

Anonymous said...

ஆழமான கருத்துக்களை அஹ்மத் காக்கா அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

குர் ஆணையும்,ஹதீசையும் பின் பற்றினாலே எந்த வித குழப்பமும்,பிரச்சினைகளும் வராது. கவிதையாக எழுதாமல் நேரடியாக ஹதீஸாக எழுதீனாலே நன்றாக இருக்கும்.

Anonymous said...

//குர் ஆணையும்,ஹதீசையும் பின் பற்றினாலே எந்த வித குழப்பமும்,பிரச்சினைகளும் வராது. கவிதையாக எழுதாமல் நேரடியாக ஹதீஸாக எழுதீனாலே நன்றாக இருக்கும்//

பொதுவாக அனுபவமுள்ள நடைமுறை பயிற்சி ஒன்றை கூற விரும்புகிறேன்.

கவிதை-செய்யுள் நடையில் 10 பக்கங்கள் எழுதப்பட்ட கருத்துக்களை எழுத்துப் பிழையின்றி, அடிபிறழாமல் மனப்பாடம் செய்து நெஞ்சத்தில் நீங்காத இடத்தை கொடுத்து விடலாம். ஆனால் உரைநடையில் ஒரு பக்கம் எழுதப்பட்ட கருத்தைக் கூட எழுத்துப் பிழையின்றி, அடிபிறழாமல் மனப்பாடம் செய்யவும் முடியாது. அப்படியே மனப்பாடம் செய்தாலும், நெஞ்சத்தில் நீங்காத இடத்தை அதற்கு கொடுக்க முடியாது.

அதனால்தான் கவிதை என்னவென்பதை கவிஞன் கூறும் கூற்று,

“உள்ளத் துள்ளது கவிதை – இன்ப
உருவெ டுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை
தெரிந்து ரைப்பது கவிதை.”


நூர் முஹம்மது

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஆய்வு ஆமோதிக்காதவர்களுக்கெல்லாம் பாடம்!

//கவிதையின் கருத்துக்களை எழுத்துப் பிழையின்றி, அடிபிறழாமல் மனப்பாடம் செய்து நெஞ்சத்தில் நீங்காத இடத்தை பெறமுடியும்.//

100க்கு 100 உண்மை.

Anonymous said...

நூர் முஹம்மது காக்கா அவர்களே நான் எழுதியதை தப்பாக நினைக்க வேண்டாம்.

Noor Mohamed said...

//நூர் முஹம்மது காக்கா அவர்களே நான் எழுதியதை தப்பாக நினைக்க வேண்டாம்.//

தம்பி அபூபக்கர் - அமேஜான் ( மு.செ.மு. ) அவர்களுக்கு, நான் தங்களை எள்ளளவும் தவறாக எண்ணவில்லை.

//கவிதையாக எழுதாமல் நேரடியாக ஹதீஸாக எழுதீனாலே நன்றாக இருக்கும்// என்ற தங்களின் இந்த வாக்கியம், கவிதை கண்டிப்பாக தேவை என என்னை எழுத ஏவி விட்டுவிட்டதே தவிர, வேறதுவும் நான் தங்களை தப்பாக நினைக்கவே இல்லை.

என்றும் வேண்டும் இன்ப அன்பு.

அன்பன் நண்பன் சகோதரன்
நூர் முஹம்மது.

புல்லாங்குழல் said...

ஐந்து பதிவுகளையும் படித்தேன். அருமையான ஆய்வு கட்டுரை. பதிவுக்கு நன்றி!

KALAM SHAICK ABDUL KADER said...

’’தாயிஃப் நகரத்தில் தாஹா நபி(ஸல்) அவர்களைக் கல்லால் அடித்தார்கள்’’ என்று எழுதுவது உரைநடை

கல்லுக்கு பூக்கள் வீசியவர்கள்
பூவின் மீது கல்லை வீசினார்கள்

இ2து ஈர்ப்புச் சக்தியுள்ள கவிதை நடை

’’முஹம்மத்(ஸல்) அவர்கள் “இல்லை” என்று ஒரு போதும் சொன்னதில்லை’’ இ2து உரைநடை

“ஷஹாதத் கலிமாவின் “லா” எனும் இல்லை
என்பதைத் தவிர வேறெதெற்கும்
எங்கள் நபி(ஸல்) அவர்களின் நாவில்
இல்லை என்ற (”லா”) வரவில்லை”

இஃது ஈர்ப்புச் சக்தியுள்ள கவிதை நடை


பிழையாய்த் தமிழில் பேசவும்
****பிழையாய்த் தமிழில் எழுதவும்
விழையா திருக்க வேண்டியே
****விருப்பப் பாடம் நடாத்தியே
அழைக்கும் பள்ளிக் கூடமாய்
****அஹ்மத் காக்கா அவர்களின்
உழைப்பை எண்ணிப் போற்றியே
**** உவகைக் கொண்டேன் இறைவனே

(மர்ஹூம்)கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயீல் சாஹிப், சதாவதானி செய்குத்தம்பி பாவலர், பனைக்குளம் அப்துல் மஜீத் புலவர் பஷிர் போன்ற இஸ்லாமிய இலக்கிய ஆர்வலர்கள் வரிசையில் அதிரையில் நம் கண் முன்னே தூய தமிழில் பேசவும் எழுதவும் கற்றுள்ள/ கற்பித்துக் கொடுக்கும் இதயமுள்ள
(”கற்பவனாய் இரு; கற்றுக் கொடுப்பவனாய் இரு” என்ற போதனையின்படி) இரு தமிழறிஞர்கள்

1) அதிரை அஹ்மத் காக்கா

2) அதிரை அதி அழகு ஜெமீல் காக்கா

இன்ஷா அல்லாஹ் அவர்கள் சொல்லித் தரும் “நல்ல தமிழ் பேசுவோம்” மற்றும் “பகுபத / பகாபத “ பாடங்களைப் பின்பற்றினால் இன்னும் அதிரையில் தமிழறிஞர்கள் உருவாகலாம்

தமிழ் சாகும் மொழி என்று எண்ணுபவர்கள் ஆங்கிலத்தில் பின்னூட்டமிடலாம்.

ஜமாலுத்தீன் புஹாரி said...

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அன்பிற்னிய பின்னூட்டமிடும் சகோதரர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

நானும் கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை என்கிற தொடர் 5-யும் படித்து வருகிறேன். சுப்ஹானல்லாஹ் பாசத்திற்குரிய அஹமது காக்கா அவர்கள் இஸ்லாமிய வரம்பிற்குட்பட்டு எழுதி வருவது உள்ளபடியே பிரம்மிப்பாக உள்ளது. இதில் வருத்தம் என்னவென்றால் தொடரை ஆர்வத்தோடு படித்துவிடலாம் என்றால் இன்னும் என்ன பந்தையும் நான் கெட்டுதான் போவேன் என்கிற பானியில் பின்னூட்டங்கள் இருப்பது மிகுந்த சடைவை ஏற்படுத்துகிறது. தயவு செய்து தொடர் எழுத்தாளரை தொடரவிடுங்கள். இத்தொடரை எழுதக்கூடியவர்களும், இத்தொடரை பின் தொடர்ந்து பின்னூட்டமிடுபவர்களும் அல்லாஹ்வை ஈமான் கொண்டவர்கள், மறுமையில் வெற்றியடைய முயற்சி மேற்கொண்டு வருபவர்கள் என்பதை மனதில் கொண்டால் வீண் விவாதங்கள், வியாக்கியானங்கள், கோபங்கள் தவிர்த்து கவிதை - ஓர் இஸ்லாமிய பார்வை என்ற தொடர் முற்று பெற விடலாம். அதுவரை பொருமையுடன் காத்திருக்கலாம் இன்ஷாஅல்லாஹ். வஸ்ஸலாம்.

என்றும் அன்புடன்,
B. ஜமாலுத்தீன்.
050-2855125

Anonymous said...

//2) அதிரை அதி அழகு ஜெமீல் காக்கா//

அதி + அழகு = அதியழகு

உயிர்முன் உயிர் புணர்தல் உடம்படு மெய். இது தமிழ் இலக்கணம் தரும் விதியாகும்.

ஆதாரம்

"உயிர்முன் உயிர் புணர்தல்
இ ஈ ஐ வழி யவ்வும் ஏனை
உயிர்வழி வவ்வும் ஏமுனிவ் விருமையும்
உயிர்வரின் உடம்படு மெய்யென் றாகும்" (நன்னூல் ௧௬௨).

இது யான் அறிந்த தமிழ்.

கவியன்பன் கலாம் அவர்கள் இவ்விலக்கண விதிப்படியே "அதி அழகு" என்று எழுதியுள்ளாரா? அன்றி வேறு பொருள் தரும் விதியேதும் உண்டோ?

நூர் முஹம்மது.

Unknown said...

தயை கூர்ந்து, சகோதரர்கள் கட்டுரைத் தலைப்பை ஒட்டிய கருத்துரைகளை மட்டும் பதியவும். வேறு விவாதங்களில் புக வேண்டாம்.

KALAM SHAICK ABDUL KADER said...

குறுகீட்டிற்கும், தங்களின் மேலான அன்புக் கட்டளைக்கும் மீறி மறுமொழி ஈண்டு பதிவதற்கும் ஆசான் அவர்கள் மன்னிப்பார்களாக!

நாவலர் நூர் முஹம்மத்,

ஒரு புள்ளி இடையில் தட்டச்சாகவில்லை. எப்படி உங்களின் பதிவில் “இந்து, இஸ்லாமிய” என்பதில் ஒரு காற்புள்ளி விடுபட்டதோ அவ்வண்ணமே. இலக்கணம் மீறவில்லை. எனது மேற்காணும் பாவில்

//விழையா திருக்க வேண்டியே// என்பதில் காண்க ; மேலும் என் பாவில் அத்தகைய “புணர்ச்சி விகுதி” கட்டாயம் பின்பற்றியே ஆக வேண்டும். இங்கு ஜெமீல் காக்கா முன்பு அதி. அழகு (அதாவது அதிரை ஜெமீல் என்பதைச் சுருக்கமாக) அடையாளப் படுத்துவார்கள். வீணானக் குழப்பம் ஏற்படக் காரணம்: ஒரு புள்ளி இடையில் தட்டச்சில் விழவில்லை. புணர்ச்சி விகுதியினைச் சுட்டிக் காட்டியே “ இல்லறமும்; இலக்கணமும்” என்ற தலைப்பில் எழு சீர் விருத்தம் எழுதி எனது மற்றுமொரு ஆசான் (புதுவைப் பாவலர் இராஜ.தியாகராஜன்) அவர்கட்குத் திருத்தம் வேண்டி அனுப்பினேன். அதற்கு அவர்கள் தந்த மறுமொழியில் ‘”இலக்கணம் பிறழாமல் புணர்ச்சி விகுதியினை இல்லறத்துடன் ஒப்பீடு செய்துள்ளீர்கள்; ஆனால், உங்களின் உண்மையான சமுதாய அக்கறையும் இல்லறத்தில் உண்டாகும் குறைகள் நீங்க வேண்டும் என்ற நல்லெண்ணமும் சில குறுமதியாளர்கட்கு- புரிந்துணர்வில் குறைபாடுடையவர்கட்குத் தவறாகவே எடுத்துக் கொள்ளும் வாய்ப்புகள் உள; எனவே பதிய வேண்டா” என்று கட்டளையிட்டதால் அடியேன் யாத்தப் பாக்களில் இன்று வரை பதியப்படாமல் இருப்பது அப்பாடல் மட்டுமே.

அன்பு ஆசான், நாவலரின் ஐயம் தீர்த்து விட்டேன்

இனிமேல், இங்குக் கட்டுரைக்கு ஒட்டிய கருத்துரைகளை மட்டும் பதிவேன்; இன்ஷா அல்லாஹ்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு