“எஸ்ஸிரூ வலா துஅஸ்ஸிரூ பஷ்ஷிரூ வலா துனஃப்பிரூ” (இலகுவாக்குங்கள்; வன்மையாக்காதீர்கள்! நல்லுரை கூறுங்கள்; வெறுப்பூட்டாதீர்கள்!) என்று நளினம் போதித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அறவுரையைச் சற்று இங்கு நினைவுகூர்வோம். ஏனெனில், முந்தையப் பதிவுகளில் நாம் சற்று வலிமையான கருத்துகளை இடம்பெறச் செய்துவிட்டோம். அவை சிலரின் புரிந்துணர்வுக்குப் பொருந்தாமல் இருந்துவிட்டன போலும்!
எனவே, சிறார்களுக்கு உணர்த்துவது போன்று, கவிதை என்பது யாது என்று கனிவான மொழிகளில் இப்போது பொருளுணர்த்திப் புரிய வைப்போம்.
“உள்ளத் துள்ளது கவிதை – இன்ப
உருவெ டுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை
தெரிந்து ரைப்பது கவிதை.”
என்று இந்த இலகுவான கவியடிகளில் கவிதைக்கு இலக்கணம் கூறுவார் தமிழறிஞர் ஒருவர்.
“வாழ்க்கையே கவிதையின் அடிப்படை. அழியா உண்மையும் ஆழமும் மிகப் பெற்றுத் திகழ்தலே சிறந்த கவிதையின் இலக்கணம்” என்றும், “இயல்பான, விஞ்சிய உணர்ச்சியும் ஒழுங்கும் கலந்து உருவாவதே கவிதையாகும்” என்றும், கவிதைக்கு இலக்கணம் வகுப்பர் ஆங்கில மொழி ஆய்வாளர்கள்.
‘இலக்கியம் ஈந்த தமிழ்’ எனும் தமது ஆய்வு நூலில் என் தமிழ்ப் பேராசிரியர், ‘இறையருட்கவிமணி’, (மர்ஹூம்) அப்துல் கபூர் அவர்கள் தமக்கே உரிய மிடுக்கு நடையில் கூறுகின்றார்:
“நல்லின்பம் பொழிவதற்கு நகைத்து வரும் தண் சுடரும், வல்லிருளைக் கவ்வுதற்கு வந்துதிக்கும் வெஞ்சுடரும், இனிய மலரும், கனியமுதின் இன் தருவும், விலை குறையாப் பொருளளிக்கும் நிலை குலையா மாமலையும், மலை மகளின் தொங்கலைப் போல் வழிந்தோடும் அருவிகளும், அலைக் கரத்தால் நிலம் வருடும் ஆழ்கடலும், ஆகியவற்றின் அழகைக் கவிஞன் நோக்குகின்ற முறையே வேறுதான்.” அத்தகைய அழகிய, ஆழ்ந்த நோக்கின் வழியில்தான் கவிதை பிறக்கும்; அது சிறார்களுக்கான கவிதையாக இருப்பினும் சரியே.
நம் ‘அதிரை அறிஞர்’, (மர்ஹூம்) புலவர் பஷீர் அவர்களின், ‘சிரிக்கும் பூக்கள்’ எனும் சிறார்களுக்குரிய கவிதை நூலில் இடம்பெறும் பாடல் இறைச் சிந்தனையை நமக்கு ஊட்டுவதைப் பாருங்கள்:
“அலகில் கோடி கோடி யண்டம் ஆக்கி வைத்த இறையவன்
உலக மீதில் உனையும் கூட உலவ விட்டு வைத்தனன்.
ஆய்ந்து பார்க்க நூறு நூறாய் அற்பு தங்கள் தோன்றுமே
அத்த னைக்கும் கல்வி என்னும் வித்து னக்கு வேண்டுமே.
கற்ப தற்கு வேத வாக்கை வேத மாக்கித் தந்தவன்
அற்பு தத்தை அகில மெங்கும் அள்ளித் தெளித்து வைத்துளான்.
உலகில் வாழும் கால மட்டும் ஓதும் கல்விச் செல்வமே
கலக மூட்டும் மாந்த ருக்குள் உறவை யூட்ட வேண்டுமே.
ஒய்வு றக்கம் என்றில் லாத ஓரி றைவன் படைப்பினை
ஆய்வு செய்தல் அத்த னையும் அவனை எண்ணிப் போற்றவே.”
‘வாழ்க்கையே கவிதை; கவிதைதான் வாழ்க்கை’ என்று நாம் ஒருபோதும் கூறமாட்டோம். வாழ்க்கையில் கவிதைக்கும் ஓர் இடம் வேண்டும்; இடம் உண்டு; அது வாழ்வை வளப்படுத்தும்; இன்பமும் இறைச் சிந்தனையும் கலந்த இவ்வுலக வாழ்க்கையால் மறுமை வாழ்வு சிறக்கும்; இஸ்லாத்தின் வரம்பு இதற்குத் தடையாக இருக்காது என்பதுவே இந்த எமது ஆய்வின் கருப்பொருள்.
கவிதையால் மட்டுமே நிறைந்திருக்கும் உள்ளம் நமக்கு வேண்டாம்! இறையுணர்வை ஊட்டும் நல்ல கவிதைகளை மதிப்போம்! ஆழ்மனத்து அறிய சிந்தனையின் வெளிப்பாடே கவிதை என்பதை உணர்ந்து, வீண் வாதங்களைத் தவிர்ப்போம்! எதிர் வாதங்களும் வேண்டாம்; பிடிவாதங்களும் வேண்டாம்!
(ஆய்வு இன்னும் தொடரும், இன்ஷா அல்லாஹ்.)
22 Responses So Far:
புலவர் பஷீர் ஹாஜியார் அவர்களின் புலமை மிக்க எழுசீர் விருத்தம் ( ஆறு மாச்சீர்கள்+ ஒரு விளச்சீருடன்) அமையப் பெற்றதைப் படித்தேன்; பொல பொலவெனக் கண்ணீர் வடித்தேன். அவர்கள் உயிருடன் இருந்திருந்தால்:
1) என்னைப் போன்றக் கற்றுக் குட்டிகட்கு இன்னும் யாப்பிலக்கணம் கற்றுத் தருவார்கள்; அதன் மூலம் அவர்கள் விட்டுச் சென்ற இடத்தினை அடியேன் நிரப்பியிருக் கலாம்.
2) விதண்டாவாதமும், பிடிவாதமும், புரிந்துணர்வில் குறைபாடுகளும், முதலில் ஏற்றுக்கொள்ளுதல்- பின்னர் முரண்படுதல்-இறுதியில் முற்றிலும் உணர்தல் என்ற குழப்பங்கள் உடையவர்கட்குச் சரியான முறையில் “புலவர்” என்ற தகுதியுடைய அப்பெருமகனார் இன்னும் தெளிவாகப் புரிய வைத்திருப்பார்கள்
3) எனது முதற்கவிதைத் தொகுப்பு நூலினை அவர்கள் இலக்கணப்பிழைகள் திருத்தி அணிந்துரை வழங்கியிருப்பார்கள்
இப்படியெல்லாம் நினைவலைகள் ஓடியதால், நெஞ்சம் வாடியது.
இருப்பினும், அல்லாஹ்வின் நாட்டத்தை ஏற்றவனாக, தங்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றியவனாகத் தொடர்கின்றேன்.
//்! இறையுணர்வை ஊட்டும் நல்ல கவிதைகளை மதிப்போம்! ஆழ்மனத்து அறிய சிந்தனையின் வெளிப்பாடே கவிதை என்பதை உணர்ந்து, வீண் வாதங்களைத் தவிர்ப்போம்! எதிர் வாதங்களும் வேண்டாம்; பிடிவாதங்களும் வேண்டாம்!//
இறையுணர்வை ஊட்டும் நல்ல கவிதைகளை மதிப்போம்.
இதை அப்பப்ப அழகாய் தரும் கலாம்&ஸபீர்,..அவர்களைப் பாராட்டுவோம்.
தொடர் மூன்றுக்கும்,தொடர் நான்குக்கும் இடையே கடுமையான முரண்பாடுகள்?
அதில் இஸ்லாம் என்ன வரம்பு வைத்துள்ளத்துள்ளது என அழகாக அலசியது,இதுவோ கவிதையை யாத்தவர்கள் சொன்ன கூற்று என்றும்,ரியாவின் சாயலும் எழுத்தில் தெரிகிறது.கவிதை ஒரு முரண் என தெளிவாகிறது.அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்க
அஸ்ஸலாமு அலைக்கும்.
// இறையுணர்வை ஊட்டும் நல்ல கவிதைகளை மதிப்போம்! //
நல்லவற்றை நாமும் கற்றுக்கொள்ளுவோம்.கற்று தருபவர்களை ஊக்கப்படுத்தி மறக்காமல் மதிப்போம்.
கவியன்பர்கள் சகோ.சபீர் காக்கா, கலாம் காக்கா தொடருங்கள் உங்கள் நல்ல கவி வரிகளை மாணவர்கள் நாங்கள் காத்திருக்கிறோம்.
கவிக்கே ஒரு ஆய்வா? கேற்பதற்கே மிகையாகவுள்ளது பாராட்டுக்கள் நம்மூரில் இத்துனை கவிகோ இருப்பார்கள்/இருகிறார்கள் என்பது நான் தாமதமாக தெரிந்தமைக்கு மன்னிக்கவும் காலம் காக்கா, சபீர் காக்கா.....
மெய் சிலிர்க்க வைத்த கவிப்பதிவு அதனுள் அதிரை அறி(கவி)ஞர்’, (மர்ஹூம்) புலவர் பஷீர் அவர்களின், ‘சிரிக்கும் பூக்கள்’ இந்நூல் இருப்பதே பலருக்கு (என்னை போலவே) தெரியாது இப்பதிவின் மூலம் தெரிந்தமைக்கு நன்றி
அதிரை அஹ்மத் காக்கா...தொடருங்கள் உங்களின் கவி ஆய்வை....
இறையுணர்வை ஊட்டும் நல்ல கவிதைகள் இஸ்லாமிய தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் காணலாம்.
உதாரணமாக எல்லா தமிழ் காப்பியங்களிலும், புராணங்களிலும் கடவுள் வாழ்த்துப் பாடல்களில், கடவுளை புகழ்தல், சமர்பித்தல், வேண்டுதல் இதை அடிப்படையாக வைத்தே கடவுள் வாழ்த்துப் பாடல்கள் அமைந்துள்ளன.
ஆனால் சீறாப்புராணத்தில் மட்டுமே இறைவனை மறந்தவர்களுக்கு,
"பிறந்தபல் லுயிரின் மனத்தள வுறைந்து
பிறப்பிறப் பென்றிலா தவனை
மறந்தவர் சுவர்க்கப் பதியையு மறந்து
மண்ணினின் மதிமறந் தவரே."
என்ற யாப்பு அமைந்துள்ளது. இது போன்று தமிழில் எந்த புராணத்திலும், காப்பியங்களிலும் எழுதப்படவே இல்லை.
நல்லதை ஏற்ப்போம். தீயதை நீக்குவோம்.
Noor Mohamed
உண்மையில் சொல்கிறேன், தமிழைக் கவிநடையில் வாசிக்கும்போது கிடைக்கும் இன்பமே அலாதிதான்.
கவிமணி தேசியவிநாயகம்பிள்ளையின் "உள்ளத் துள்ளது கவிதை.." யாகட்டும் பஷீர் காக்காவின் பிள்ளைத் தமிழாகட்டும்(?) தேன் வந்து பாயுது காதினிலே.
ஷிர்க்கான செய்தியை மூமீனே சொன்னாலும்; எழுதினாலும் பேசினாலும் ஜாடையில் காட்டினாலும் ஏற்பதற்கில்லை. அதேபோல, ஓரிறைக் கொள்கையை யார் சொன்னாலும் எந்த வடிவத்தில் சொன்னாலும் ஏற்பதில் தவறில்லை!
என்னைப்பொறுத்தவரை எது கவிதை என்பது கீழே!
அஹ்மது காக்கா, இத்தனைச் சுவையாகவும் மரபுக் கவிதைகள் எழுத முடியும அஎன்ன?
நான் இவற்றை மதிப்பெண்கள் வாங்கப் படித்ததால் அதற்குப் பிறகு நெருங்க பயம்.
எது கவிதை…?
மெல்ல விடிவதை
நல்ல மொழிதனில்
செல்ல வரிகளால்
சொல்ல முடிவதே…கவிதை!
உனக்குள் உருவாகும்
உள்ளத்து உணர்வுகளை
உள்ளது உள்ளபடி
உளராமல் உரைத்தால்…கவிதை!
பாலையில் யாவர்க்கும்
காலையும் மாலையும்
பாலை வார்க்கும்
வேலை பார்க்கும்…கவிதை!
சூரிய கிரணங்கள்
மேவிய தருணங்கள்
கூரிய வார்த்தைகளால்
கூறிய வருணனை…. கவிதை!
நுனுக்க உணர்வுகளையும்
மினுக்கக் கனவுகளையும்
துணுக்குத் தோரணங்களையும்
திணித்துவைத்த அனு...கவிதை!
கலைத்துப் போட்ட
பொம்மைகள்
குப்பை யென்றால்
அடுக்கி வைத்த கண்காட்சி...கவிதை!
உதறிய பூக்களும்
சிதறிய இதழ்களும்
கூலமென்றால்
கோர்த்தெடுத்த மாலையே…கவிதை!
அத்தனை பிள்ளைகளின்மேல்
அன்பிருந்தாலும்
செல்லப் பிள்ளையே….கவிதை!
கவிதை…
எழுதியவர் பிரசவித்தபின்
வாசிப்பவர் கருவுறும் விந்தை.
கவிதை…
காட்டாறு எனினும்
வரம்புகளுக்குள் ஓடுமொரு முரண்பாடு.
கவிதை…
கதையோ கட்டுரையோவல்ல
வரி வரியாய் வாசிக்க,
வரிகளுக்கிடையே வாசிக்கப்படும் வசியம்.
கவிதையில் மட்டுமே…
வார்த்தைகளுக்கு வாய் முளைக்கும்
வாசிப்பவருக்கு வாய் பிளக்கும்
கவிதையில் மட்டுமே
காகிதங்கள் கருவுறும்
காரியங்கள் உருப்பெறும்
வானவில்லை மொழி பெயர்த்தால் கவிதை!
வாசமுல்லை வழி வாய்த்தால் கவிதை!
கானகத்துக் குயில் பாட்டும்
காமமற்ற காதலும்தான் கவிதை!
தேசிய கீதமும் கவிதை
நேசிக்கும் பாஷையும் கவிதை
சாரள வெளிச்சமும் கவிதை
சூரியப் பிரவாகமும் கவிதை
மின்மினி வெளிச்சமும் கவிதை
மின்னாத இருளும் கவிதை
சொல்லிய வார்த்தைகளும் கவிதை
சொல்லாத வெற்றிடமும் கவிதை
வட்டத்துக்குள் அடங்க
ஆரமல்ல கவிதை
மாதத்துக்குள் முடிய
வாரமல்ல கவிதை
வாசிக்கத் திணற
கவிதை பாரமுமில்லை
வார்த்தைகளுக்குள் அடங்க
கவிதைக்கு நேரமுமில்லை.
எது கவிதை?
கரம் கொண்டு விதைத்தால்
மரம்
கருவிதை விதைத்தால்
கவிதை!!!
//கவிதை ஒரு முரண் //
சரியாகச் சொன்னீர்கள் தம்பி,
நூரிறைக் கொள்கைக்கு இஸ்லாம் ஒரு முரண் (மாறுபாடு)
அறியாமை இருளுக்கு குர் ஆன் ஒரு முரண் (பகை)
காஃபிர்களுக்கு எதிராக கண்மணி நபி தொடுத்தது முரண் (போர்)
தீமைக்கு எதிரான நோக்கமும் முரணே (வலிமை)
காகிதங்களை மென்று திண்ணும் நீ...ண்ட வியாக்கியானங்களுக்கு கவிதை ஒரு முரணே!
முரண் என்று உரைப்பதில் முன்னிருக்கிறோம், ஆனால்
முரண் கண்டெடுப்பதில் மாறுபடுகிறோம் - இது ஏன் !?
தம்பி அப்துல் லத்தீஃப் கொஞ்சம் விளக்கினால் நலம் எங்கே முரண் !
கவிதையெல்லாம் எழுதினியலே, தம்பியைக் கானோமேன்னு இருந்த எனக்கு சரி காக்கா வந்தாச்சு எழுதன்னு நினைச்சேனே.. :)
விளங்கி கொள்ளத்தான் கேட்டேன் தம்பி...
அண்ணாவியார்(களை) பற்றி கற்றரிந்த சான்றோர் உரைத்தால் தெரிந்து கொள்ளலாம்...
நேற்று முன் தினம் எனது நண்பனின் காக்கா அவர்களோடு வாயாடியில் உரையாடிக் கொண்டிருக்கும்போது எடுத்த தந்த தகவல் எல்லாமே எனக்கு புதுசு !
புலவர் - அப்படின்னா என்னா ?
அண்ணாவியார் - இது அடை மொழியா அல்லது பட்டமா ?
விளங்கிக்கலாமனு கேட்டு வைக்கிறேன்... விளக்கிட்டு போகலாமேன்னு நீங்களும் வந்து சொல்லுவீங்க தானே !
நுண்ணறிவாளர் "கணிதப்புலி" நூர் முஹம்மத் அவர்கள்
விளம் , மா, விளம், மா / விளம், விளம், மா என்ற வாய்பாடு அமைப்பில் எழு சீர் விருத்தம் சீறாப்புராணம் பாடலைச் சுட்டிக் காட்டியதுப் பொருத்தம் என்றாலும், கட்டுரை ஆசிரியர் அஹ்மத் காக்கா அவர்கள் எடுத்துக் காட்டிய சிற்றுதாரணம் கூடப் புரியாமல் இருப்போர் உளர் என்பதே என் வருத்தம்.
கவிவேந்தர் சபீர் அவர்களின் கவிதைப் பற்றிய கவிதையைப் படித்தால் விளங்கும்" மனதை சொல் விதைகளால் பயிரிடும் உழவன் தான் கவிஞன் " எனும் படைப்பாளி; பயிரை அறுவடை செய்பவர் படிப்பாளி
நச்சு விதையா நல்ல விதையா என்றுத் தரம் பார்த்து விதைப்பது படைப்பாளியின் கடமை; நற்செடியா நச்சுச்செடியா என்றுத் தரமறிந்து நுகர்வது படிப்பாளியின் கடமை
//முரண் என்று உரைப்பதில் முன்னிருக்கிறோம், ஆனால்
முரண் கண்டெடுப்பதில் மாறுபடுகிறோம் - இது ஏன் !?
தம்பி அப்துல் லத்தீஃப் கொஞ்சம் விளக்கினால் நலம் எங்கே முரண் !//
அன்புக்கும்,பாசத்துக்கும் உரிய சகோ நெய்னா தம்பி காக்கா அவர்களுக்கு,
காக்கா,சென்ற பார்ட்டில் முழுக்க இஸ்லாம் கவிதை பற்றி என்ன சொல்கிறது என விளக்கப்பட்டது.அதை அப்படியே ஏற்றோம்,பாராட்டினோம்.இந்த பார்ட்டில் கவிதைகளுக்கு எந்த தமிழ் அறிஞரோ,புலவரோ,பண்டிதரோ சொன்னதை மேற்கோள் காட்டி இஸ்லாத்தின் வரையறைக்குள் கொண்டு வருவதை ஜீரணிக்க முடியாது.அல்லாஹ்வும்,அல்லாஹ்வின் தூதரும் காட்டித்தராத,மேற்கோள் காட்டாத எதையும் ஏற்க முடியாது.அது கவிதைக்கும் பொருந்தும்.குரான் கவிதையை எழுதும் புலவர்களை கடுமையாக கண்டிக்கிறது.ஹதீஸ் முழும் தேடினாலும்,கவிதையை ஊக்குவிப்பதை காண முடியவில்லை.இப்படி இருக்கும்போது,ஏன் இந்தக் கவிதைக்கு - இஸ்லாம் அங்கீகரித்தது போன்ற மாயத் தோற்றம் கொடுப்பது ஏன்?தமக்கு கவிதை தெரியும் என்பதாலா?அல்லது தமிழ்தான் சிறந்த மொழி எனும் துர்கொள்கையை ஏற்பதனால்,இந்த மயக்கமா?
கவிதை என் பார்வையில் என அலசினால்,அது பற்றி இங்கு கதைக்க தேவை இல்லை.ஆனால் இஸ்லாத்தின் பார்வையில் என தலைப்பிட்டு,இஸ்லாமிய அடிப்படையில் விவாதிக்கிறோம் என கூறி,புலவர்கள் சொன்னதை - இஸ்லாத்தின் பார்வையில் இதுதான் கவிதை என்றால்,எப்படி ஏற்க முடியும்.
I DON'T WANT TO GO ON THE FLOW.
சரியென்றால் சரி என்றும்,தவறு என்றால் தவறு என்றும் சொல்ல முஸ்லிம்களாகிய நாம் கடமைப் பட்டுள்ளோம்.நமக்கு தெரிந்தவர்தானே என நாமும் தவறுக்கும் சபாஷ் போட்டால்,கட்டுரை ஆசிரியரும்,மற்ற கமென்ட் கொடுப்பபவர்களும் நம்மை பாராட்டலாம்,ஆனால் அல்லாஹ்விடம் உதை விழும் என்பதை -அல்லாஹ்வின் மீது அச்சம் கொண்டு எழுதுகிறேன்.நீங்கள் தலைமை வகிக்கும் இந்த தளம் இதற்கு அனுமதி கொடுக்க கூடாது.
காக்கா,உங்களுடன் எனக்கு நீங்கள் நியூ காலேஜில்,நான் பாஸ்டன் மெட்ரிகுலேஷனில் படிக்கும்போதே நெருக்கம்.அன்றைய நாளில் சல்மான் ருஷ்டி சைத்தானின் தடை செய்யப்பட்ட,(ராஜீவ் காந்தி தடை செய்தார்)நூலைப் பற்றி,நம் உயிரினும் மேலான நபிமார்களை கொச்சைப்படுத்தி எழுதியதை பற்றி,நீங்களும்,சுப்யான் காக்காவும்,மற்ற சகோதரர்களும் விவாதித்ததை மறக்க முடியவில்லை.அன்று முதல் - இன்று வரை உங்கள் மேல் தனி மதிப்பு கொண்டுள்ளேன்.எனவே,உரிமையுடனும்,முஸ்லிம் என்ற சகோதர வாஞ்சையுடன் கேட்டுக் கொள்கிறேன்,"கவிதை தான் எனினும்,இஸ்லாத்துக்கு முரணான தகவல்கள் இடம் பெறுவதால் அதை அனுமதிக்காதீர்கள்.பிளீஸ்.அல்லாஹ்வே போதுமானவன்.
அன்பு நண்பர்களே!
சலாத்தின் முகமனோடு.
கவிதை பற்றி தம்பி சபீரின் கவிதையை படித்து விளங்கிக்கொள்ளவேண்டியவர்கள் விளங்கிக்கொள்ளவேண்டும்.
தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிக்காரத்தைப்பற்றி ( இதை மேற்கோள் காட்டுவதையும் ஆட்சேபிக்க மாட்டார்கள் என்று கருதுகிறேன்.) தலைப்புக்கு தேவை என்பதால் இந்த கருத்தை சொல்ல வேண்டி இருக்கிறது.
சிலப்பதிகாரத்தைப்பற்றி –அதன் நீண்ட நெடிய கதையைப்பற்றி பள்ளி கல்லூரிகளில் நாம் படித்து இருக்கிறோம்.
ஆனால் அவ்வளவு பெரிய காப்பியத்தின் கதைச்சுருக்கத்தை எனது தமிழ் பேராசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் ரத்தினச்சுருக்கமாக இப்படிப்பாடுவார்.
“பால் நகையாள்- வெண்முத்து
பல் நகையாள்
கண்ணகியாள்- கால்நகையால்
வாய் நகை போய்
கழுத்து நகை இழந்த கதை. “
இதுதான் கவிதைக்கு கிடைத்திருக்கும் சிறப்பு. சொல்வதை சுருக்கமாகவும் – சுருக்கென்றும் சொல்வது..
அதிகாலை நேரம் சுபுஹுக்கு பின்னே என்ற இ.எம். ஹனிபாவின் பாடல் கேட்டு இஸ்லாத்துக்கு வந்தவரை முன்பு நான் குறிப்பிட்டு இருந்தேன்.
அவர் ‘ நமனை விரட்ட மருந்தொன்று விற்குது நாகூர் தர்ஹாவிலே” என்ற பாட்டை கேட்கவில்லையா என்று விவாதத்துக்கு கேட்டிருந்தார்கள்.
இஸ்லாத்துக்கு வந்தவர் பலாப்பழத்தின் பலாச்சுளையை மட்டும் பார்த்து தின்று பழகியவர். சக்கைகளை சாப்பிடத்தெரியாதவர். நான் சுட்டிக்காட்டியது சுளை மட்டுமே.
அவ்வளவுதான் கூற விரும்புகிறேன்.
அதேதான் உதாரணம். கவிதை சுளைகளை எடுத்துக்கொண்டு சக்கைகளை வீசிவிடலாம். சக்கை இருக்கிறதே என்று சண்டை ஏன் போடவேண்டும் ?
நமது மூக்கில் கூடத்தான் சளி இருக்கிறது. சிந்தி விட்டு மூக்கை சுத்தம் செய்ய வேண்டியதுதானே.
புலவர் என்று பட்டப்பெயர் வைப்பது இஸ்லாத்துக்கு விரோதம் என்று ஒரு விவாதம் வந்தது. அது பட்டப்பெயர் அல்ல. நமது ஊரில் பகுதிகளில் குடும்பங்களை அடையாளம் காண அவர்களின் குண. தொழில் இவைகளை வைத்து பெயர் வைப்பது மரபு. சுடுதண்ணீர் மரைக்கா, புளியானத்துவீடு, தேங்காய்ப்பால் வீடு, மண்டையர் வீடு, கொடுவா வீடு, செல்லக்கிளி வீடு இப்படியெல்லாம் வழிவழியாகி வந்த அடையாள்ப்பெயர்களை பட்டப்பெயர்கள் என்ற கருத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது.
விவாதங்களுக்கு நம்மில் பஞ்சமில்லை. உலக வல்லரசுகள் முஸ்லிம்களின் கண்களில் விரலைவிட்டு ஆட்டிக்கொண்டிருக்கின்றன.
ஆனால் இன்னும் நாம் விரலை ஆட்டுவது கூடுமா கூடாதா என்று விவாதித்துக்கொண்டுதானே இருக்கிறோம்.
இன்னொன்று, அனைத்து முஹல்லாவின் ஆரம்பக்கூட்டம் துபாயில் நடந்தபோது தலைமை தாங்கிய ஜனாப். ஜெமீல் அவர்கள் ஒருமுறை பேசினார்கள். சிறப்பு பேச்சாளர் பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் ஒருமுறை பேசினார்கள். ஆனால் அவர்கள் இருவர் மூலமாகவும் இருமுறை பேசியது “ அனைத்து தெருக்களும் அதிரையின் கருக்கள்” என்ற சபீரின் கவிதை என்பதை நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் மறந்து இருக்க மாட்டார்கள். கவிதைக்கு அப்படி ஒரு சிறப்பு உண்டு.
ஆகவே அஹமது காக்கா அவர்களின் தொடர் தொடரட்டும் என து ஆச்செய்கிறோம்.
வஸ்ஸலாம்.
இப்ராஹீம் அன்சாரி.
அஸ்ஸலாமு அலைக்கும்,
இஸ்லாமிய பார்வையில் கவிதை என்ற ஆய்வு தொடரின் முடிவு வரும் வரை காத்திருக்கலாமே, அதற்குள் இடைப்பட்ட நேரத்தில் ஒற்றைவரியில் தீர்ப்பு பின்னூட்டங்களில் சொல்லுவதை தவிர்ப்பது நல்லது.
எதையும் தீர ஆராய்ந்து அறிவை தேடுவது சிறந்தது என்பதை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. இறுதி பதிவு வரை காத்திருக்கலாமே. சகோ. அப்துல் லத்தீப்.
கவிதை - ஓர் இஸ்லாமியப் பார்வை, ஆய்வு தொடர்ந்து வரட்டும். அதேநேரத்தில் பின்னூட்டங்களில் சொல்வோர் அவரவர் கருத்தை கூறட்டும்.
இந்த ஆய்வை பொறுத்தவரை, பின்னூட்டங்களில் வரும் கருத்தைக் கொண்டு ஆய்வின் ஆழம் அதிகரிக்கும் என எண்ணுகிறேன்.
அஹமது காக்கா அவர்கள் ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன் தமிழ் இஸ்லாமிய இலக்கியங்களை ஆய்வு செய்து, அதை பிறை பத்திரிகையில் தொடராக எழுதியவர்கள்.
ஆனால் இதுவரை வந்த இந்த ஆய்வில், அந்த இஸ்லாமிய இலக்கிய சிந்தனை என்ற ஆய்வை சற்றும் தொடவில்லை என எண்ணுகிறேன்.
நூர் முஹம்மது
//சென்ற பார்ட்டில் முழுக்க இஸ்லாம் கவிதை பற்றி என்ன சொல்கிறது என விளக்கப்பட்டது.அதை அப்படியே ஏற்றோம்,பாராட்டினோம்.இந்த பார்ட்டில் கவிதைகளுக்கு எந்த தமிழ் அறிஞரோ,புலவரோ,பண்டிதரோ சொன்னதை மேற்கோள் காட்டி இஸ்லாத்தின் வரையறைக்குள் கொண்டு வருவதை ஜீரணிக்க முடியாது//
தம்பி அர அல வின் இந்த கருத்தில் அர்த்தமுள்ளது. தலைப்பின்படி அஹ்மது காக்கா இஸ்லாத்தின் பார்வையில்தான் கவிதைகளின் நிலைப்பாட்டை ஆராய வேண்டும். தமிழறிஞர்களின் கூற்றுகளைக்கொண்டல்ல.
ஆனால், அதே சமயம் அஹ்மது காக்கா அவர்கள் ஆய்வின் தலைப்பிலிருந்து விலகி இந்தப் பதிவில் சொல்லியிருப்பது ஆய்வின் தொடர்ச்சியல்ல. மாறாக தம்பி அர அலவின் முந்தைய வாதங்களை மனதில் கொண்டு தெளிவு உண்டாக்கவே என்பதும் எனக்கு விளங்குகிறது.
தம்பி, நீங்களும் புரிந்துகொள்ளுங்களேன்.
//அன்று முதல் - இன்று வரை உங்கள் மேல் தனி மதிப்பு கொண்டுள்ளேன்.எனவே,உரிமையுடனும்,முஸ்லிம் என்ற சகோதர வாஞ்சையுடன் கேட்டுக் கொள்கிறேன்,//
தம்பி அப்துல் லத்தீஃப்:
அன்றிலிருந்து தம்மோடு நெருங்கிப் பழகிய உரிமையில் சொல்கிறேன்...
நம்முடைய தனி மின்னாடல் உரைடையாடலில் தூய மார்க்கத்தை எத்தி வைக்க எடுக்க வேண்டிய ஆயத்தங்களுக்கு சுழி போட்டுக் கொடுத்து எனக்கு ஒரு பொறி தட்டிட வாய்ப்பாக இருந்தது தம்முடைய மின்னஞ்சல் வேண்டுகோள்... (நம் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிவான்).. !
யாரும் கவிதை மயக்கத்தில் மூழ்கி இருக்கவில்லை என்பதை நினைவில் கொள்வோம்.
கவிக் காக்காவின் கருத்தோடு நாமும் ஒத்துப் போகிறேன்... அதனையே நானும் சொல்கிறேன்...
காத்திருக்கலாமே...! இன்ஷா அல்லாஹ்!
TO இப்ராஹீம் அன்சாரி காக்கா அவர்களுக்கு,உங்கள் சிலப்பதிகாரம் உவமை தேவை இல்லாதது.கவிதைக்கு இப்படி எல்லாம் மேற்கோள்கள் தேவை இல்லை.உங்கள் கருத்தை வாபஸ் வாங்குங்கள்,அல்லாஹ்விடம் தவ்பா செய்யுங்கள்.
---------------------------
//தம்பி அர அல வின் இந்த கருத்தில் அர்த்தமுள்ளது. தலைப்பின்படி அஹ்மது காக்கா இஸ்லாத்தின் பார்வையில்தான் கவிதைகளின் நிலைப்பாட்டை ஆராய வேண்டும். தமிழறிஞர்களின் கூற்றுகளைக்கொண்டல்ல.//
சரியாக சொன்னீர்கள் சபீர் காக்கா.
-----------------------------------
//எதையும் தீர ஆராய்ந்து அறிவை தேடுவது சிறந்தது என்பதை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. இறுதி பதிவு வரை காத்திருக்கலாமே. சகோ. அப்துல் லத்தீப்.//
காத்திருக்கிறேன் சகோ தாஜ்.
---------------------------------
//காத்திருக்கலாமே...! இன்ஷா அல்லாஹ்!//
காத்திருக்கிறேன் நெய்னா தம்பி காக்கா,இன்ஷா அல்லாஹ்
"சஹன்' முழுவதும் பரப்பியிருக்கும் "ஹல்வா" கையடக்கமானத் துண்டுகளாக்க உதவும் கத்தியே, ஹராமான கொலை எனும் பாவம் செய்யவும் உதவும்.
கத்தியினைப் போலவே
பத்திராமாய்க் கையாளும்
கவிதைத் திறனால்
சுவையூட்டும் துண்டுத்
துண்டாய்ப் பரிமாறப்படும்
நல்லவைகள் ஏவி
தீயவைகள் தடுக்கும்
பார்வையில் இஸ்லாம்
கொலை செய்யும்
நிலையில் ஹராம்
கத்தியின் மீது
பத்திரமாய் நடப்பது போன்று
புத்திக் கூர்மையினை
புலமையோன் அல்லாஹ்
புலமையாய்ச் சிலருக்கு
அளித்துள்ளதை நினைத்துக்
களிப்படைவோம் ...!!!
"சுருக்கெழுத்துக்" கற்றவர்கள் நீண்ட விடயங்களைச் சுருக்கிக் கொண்டு எழுதுவது ஒரு கல்வி; "சீனம் சென்றும் அறிவைத் தேடு" என்கின்றது இஸ்லாமியப் பார்வை என்றால் , சீனம் "காஃபிர்" நாடு என்று ஒதுங்கி விடலாமா?
கவியும் ஒரு கல்வியே. இஸ்லாமியப் பார்வையில் கல்வியைத் தேடுவோம்;பாடுவோம்
எழுதியவர் பிரசவித்தபின்
வாசிப்பவர் கருவுறும் விந்தை
கவிதை
அடடா.... அற்புதம் சபீர்!
Post a Comment