Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சில தனித்தமிழ் ஆர்வலர்களின் முகமூடி கிழிகிறது.... 11

அதிரைநிருபர் | April 03, 2013 | , , , ,முன்  சென்ற ஓர் இடுகையில் 'மஸ்ஜித்' என்ற பெயருக்கான தமிழ் வார்த்தை 'பள்ளிவாசல்' அல்லது 'பள்ளிவாயில்' என்பது சரியானதுதான் என்று அழகாக விளக்கம் சொன்னார்சகோ.'பசி'பரமசிவம். அவரை தொடர்ந்து மற்றும் சிலரும் பின்னூட்டத்தில் இதே கருத்திட்டிருந்தனர். 'மஸ்ஜித்' என்ற அரபி பெயர் தமிழில் மருவி 'மசூதி' ஆயிருக்கலாமெனசகோ.நாசர் கூறி இருந்தார். 'மசூதி' மரூஉச்சொல்லா? - எனில் எப்படி யாரால் எப்போது மருவியது என்று கொஞ்சம் இணையத்தில் நான் தேடியதில்... பல அதிர்ச்சிகளும் சிலரின் நுணுக்கமான பல உள்குத்து வேலைகளும் அறிவுக்கு பிடிபட்டன.

'மரூஉ' என்பது தமிழ்ப்பெயர்ச்சொற்களில், காலமாற்றத்தினால் அதன் எழுத்துக்களோ, ஒலியோ சிதைவுற்று  மருவி, இலக்கணப்படி வழங்கி வரும் ஒரு சொல். உதாரணமாக, தஞ்சாவூர்=> தஞ்சை ஆகும். உபாத்தியாயர்=> வாத்தியார் ஆவார். சர்க்கரை=> சக்கரை ஆகிவிடும். இதுபோல தமிழில் 'மரூஉச்சொல்' நிறைய இருக்கின்றது=> இருக்கிறது=> இருக்குது=> இருக்கு=> ஈக்கிது=> கீது..! 

ஆனால், 'மஸ்ஜித்' என்ற அரபி வார்த்தை அதுபோல... மஸ்ஜித் - மஸ்சித் -மசித் என்றுதான் மருவி இருக்கலாம். 'மசூதி' என்று பொருந்தா ஒலியாக மருவ வேண்டுமானால் யாரோ சிலர் அந்த பெயரை புதிதாக வேண்டுமென்றே உண்டாக்கி இருக்கிறார்கள். அவர்கள் யார்..?
நன்றி : www.thangampalani.com

எனது தேடுதலில் அநேகமாக அவர்கள்... பிற மொழி வார்த்தைகளையும் தூய தமிழ் எழுத்துக்களை மட்டுமே கொண்டு எழுத நாடும் தனித்தமிழ் ஆர்வலர்களாக இருக்கலாம் என்று புரிகிறேன். மஸ்ஜித் - இதில் 'ஸ்' , 'ஜி' இரண்டுமே அவர்களுக்கு அலர்ஜி. அதனால்... மசுசித் - மசூசித் - மசூசீத் என்றெல்லாம் முயற்சித்து இறுதியில் 'மசூதி' என்பதில் நிலை பெற்றிருக்க இருக்கவேண்டும்..! 

England, British & English  'இங்லிஷ்' ஐ... 'இங்கிலீசு' என்று எழுதப்பிடிக்காமல், 'இங்கிலம்' என்று கூட எழுதாமல் 'ஆங்கிலம்' என்று தமிழில் உருமாற்றி பெயர்வைத்ததும் இப்படித்தானே..?

ஆகவே, 'மசூதி' , மரூஉச்சொல் இல்லை. ஹ ஜ ஸ ஷ ஸ்ரீ போன்ற  எழுத்துக்களை நீக்கி அந்த இடத்தில் க,ச,சிரி என்றெழுதும் 'கொடுந்தமிழ்' ஆர்வலர்கள் சிலரால் புனையப்பட்ட 'புனைவுச்சொல்'தான் மசூதி..!

'ழ' போன்று பிற மொழிகளில் இல்லாத சிறப்பு ஒலிகள் தமிழில் உண்டு. இங்லிஷில் எழுதும்போது நான் கூட THAMIZH என்றுதான் பல இடங்களில்  எழுதுகிறேன். TAMIL என்றல்ல. காரணம், முடிந்தவரை சரியான ஒலி உச்சரிப்பை நாம் சிதைக்காமல் பிற மொழியினருக்கும் வழங்க வேண்டும் என்பதே நோக்கம். அதேபோல... தமிழில் இல்லாத சில ஒலிகள் அரபி/ஹிந்தி/உருது/இங்லிஷ் போன்ற பிற மொழிகளில் உண்டு என்பதையும் நாம் பெரிய மனதுடன் ஏற்றாக வேண்டும்.

தமிழில் இல்லாத பெயர்களாயின் இதற்கு ஒத்த பொருளுடைய தமிழ் வார்த்தைகளைத்தான் தேடிக்கண்டு பிடிக்க வேண்டுமே அன்றி... அது முடியாத போது... அல்லது அதை செய்ய விரும்பாத போது... அந்த பிற மொழிச்சொற்களை அப்படியே சரியாக அதே ஒலியில் உச்சரிக்க... ஹ,ஜ,ஸ,ஷ,ஸ்ரீ,ஃ போன்ற எழுத்துக்களை உபயோகிப்பது ஒன்றும் தண்டனைக்குரிய குற்றமல்லவே..!? எதற்கு பொருந்தா ஒலி எழுத்தை போட்டு அவ்வார்த்தைகள் மீது கொடுந்தமிழ்ப்போர் புரிய வேண்டும்..?

"அதெப்படி...? பிற மொழிச்சொற்களை நாம் உபயோகிப்பது..? பிற மொழிச்சொல்லின் ஒலிக்குறிப்பு எக்கேடு கெட்டால் எனகென்ன" என்று அந்த இடங்களில் எல்லாம் பொருந்தாத தமிழ் எழுத்துக்களை வைத்து தமிழ் போல போலித்தோற்றமளிக்க ஒப்பனை செய்து மாற்றுவது என்பது ஒரு பக்கா மொழியியல் முறைகேடு. கள்ளத்தகிடுதத்தம். பிற மொழிக்கு இக்குற்றத்தை செய்வதை எக்காலமும் ஏற்க இயலாது.

"இல்லை,  நான் செய்வது சரிதான்" என்றால்... இதையே அவர்கள் எல்லா இடத்திலும் எல்லா மொழியிலும் பின்பற்ற வேண்டும் அல்லவா..? அதுவன்றோ நியாயம்..? ஆனால், இவர்கள் தங்களின் இந்நிலைபாட்டில் உண்மையாளர்களாகவும் இல்லை. ஹ,ஜ,ஸ,ஷ,ஸ்ரீ போன்ற எழுத்துக்களை தாங்கள் சார்ந்த விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்துகின்றனர்.

பஸ் என்பதை 'பசு' என்று மாற்றாமல் பேருந்து என்றும், ஆட்டோ என்பதை தானி என்றும், கம்ப்யூட்டரை கணினி என்றும், சாப்ட்வேர் ஹார்ட்வேர் என்பதை எல்லாம் மென்பொருள் வன்பொருள் என்று அழகிய முறையில் தமிழ்ப்படுத்தியது போல அரபி பெயர்களுக்கும் அழகிய தமிழ்ப்பெயர் தர முடியாமல் போனது ஏன்..? அதைவிட ஒரு நபரின் பெயரை - பெயர்ச்சொல்லை- எப்படி இஷ்டத்துக்கு ஒலி மாற்றலாம்..? இதை அரபி அல்லாத வெற்று மொழியினருக்கு செய்வதில்லையே அது ஏன்..?

இப்படியானவர்கள் "நாத்திக, சோஷலிச, கம்யுனிஸ, பின்நவீனத்துவ, முற்போக்கு, தனித்தமிழ் ஆர்லவர்கள்" என்ற பெயரில் இணையத்தில் எழுதுவோராக உள்ளனர். அவர்களின் தமிழ் போலித்தனத்தை கிழித்தெறிவோம் வாருங்கள்..! என்ன ஒரு முகமூடி அது..!

இந்த தமிழ்ப்போலிகள்... தங்கள் தளங்களில்...
இஷ்டம் -இட்டம், கஷ்டம்- கட்டம், நஷ்டம் -நட்டம், புஷ்பம்- புட்பம், ஜன்னல்- சன்னல், ஜகஜாலகன்- சகசாலகன், ராஜராஜ சோழன்- இராசராச சோழன், ரோஜா மலர்- ரோசா மலர்என்றெல்லாம் கொடுந்தமிழில் கொலையாய் கொல்லுவோர்...

ரசுயா என்று எழுதுவதில்லை. ரஷ்யா என்றே எழுதுகின்றனர்.
சோசலிசம்  என எழுதுவதில்லை. சோஷலிஸம் என்றே எழுதுகின்றனர்.
மார்க்குசிசுட்டு கம்யுனிசுட்டு என்பதில்லை. மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் என்றே எழுதுகின்றனர்.
இசுடாலின் இல்லை. ஸ்டாலின் என்றே எழுதுகின்றனர்.
காரல் மார்க்குசு இல்லை. கார்ல் மார்க்ஸ் என்கின்றனர்.
சோதி பாசு இல்லை. ஜோதி பாசு.
மம்தா பானர்சி இல்லை. மம்தா பானர்ஜி.
கமல் காசன் இல்லை. கமல் ஹாசன்.
சூப்பர் இசுடாரு ரசினி இல்லை. சூப்பர் ஸ்டார் ரஜினி.
சவகர்லால்  நேரு இல்லை. ஜவஹர்லால் நேரு.
ராசீவ் காந்தி இல்லை. ராஜீவ் காந்தி.
செயலிலிதா இல்லை. ஜெயலலிதா.
சிவாசி  இல்லை. சிவாஜி.
எம்சியார் இல்லை. எம்ஜியார்.
கிரிசுனமாச்சாரி சிரிக்காந்த் இல்லை. க்ரிஷ்ணமாச்சாரி ஸ்ரீக்காந்த்.
அடல்பிகாரி வாசுபாயி இல்லை. அடல்பிஹாரி வாஜ்பாயி.
கர்கிசன்சிங் சுர்சித் இல்லை. ஹர்கிஷன்சிங் சுர்ஜித்.
ராமதாசு இல்லை. ராமதாஸ்.
சார்சு புசு இல்லை. ஜார்ஜ் புஷ்.
கேமமாலினி இல்லை. ஹேமமாலினி.
சிரிதேவி இல்லை. ஸ்ரீதேவி.
ராசபக்சே இல்லை. ராஜபக்சே.
ஆல்பர்ட்டு ஐன்சுடைன் இல்லை. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.
காருலசு காசுபரோவு இல்லை. கார்லஸ் காஸ்பரோவ்.
கர்சர் இல்லை. ஹர்ஷர்.
மனுசுயபுத்திரன் இல்லை. மனுஷ்யபுத்திரன்.
புதிய சனநாயகம் இல்லை. புதிய ஜனநாயகம்.
விண்டோசு விசுடா இல்லை. விண்டோஸ் விஸ்டா.
கீரோ கோண்டா இல்லை. ஹீரோ ஹோண்டா.
'சீன்ஸ்' இயக்குனர் சங்கர் இல்லை. 'ஜீன்ஸ்' இயக்குனர் ஷங்கர்.
பாரதிராசா/இளையராசா இல்லை. பாரதிராஜா/இளையராஜா. 
அசீத் - விசய்  இல்லை. அஜீத் - விஜய்.
கசோல் இல்லை. கஜோல்.
அனுட்கா இல்லை. அனுஷ்கா.
மகாராசுடிரா  என்று எழுதுவதில்லை. மஹாராஷ்டிரா என்றே எழுதுகின்றனர்.

இப்படியாக... இவர்கள்... எழுதும் கட்டுரைகளில்...   வடமொழி, ஐரோப்பிய, ரஷ்ய, அமெரிக்க பெயர்களை எல்லாம் அப்படியே அதே உச்சரிப்பில் ஒலி கெடாமல் எழுதும் போதெல்லாம் தம்முடைய தனித்தமிழ் ஆர்வத்தை மறக்காமல் மறந்து ஒளித்து வைத்து விடும் இந்த தமிழ் ஆர்வலப்போலிகள்... அரபி வார்த்தை என்று வந்தால் மட்டும் எங்கிருந்துதான் அவர்களுக்கு ஊற்றெடுத்து வருமோ தெரியவில்லை... காணாமல் போன அந்த தனித்தமிழ் ஆர்வம் அப்படி பிச்சிக்கிட்டு அருவியாக வெடிக்கும்..! அடுத்து நீங்களே பாருங்களேன் அவர்களின் வான வேடிக்கையை..!

இஸ்லாம் என்பதை இசுலாம் என்றும்,
முஸ்லிம் என்பதை முசுலிம் என்றும்,
ரம்ஜான் என்பதை ரம்சான் என்றும்,
ஜம்ஜம்  என்பதை சம்சம் என்றும்,
இப்ராஹிம் என்பதை இபுராகிம் என்றும்,
இஸ்மாயில் என்பதை இசுமாயில் என்றும்,
இஸ்ஹாக் என்பதை இசாக் என்றும் என்றும்,
முஹம்மத் என்பதை முகமது என்றும்,
அல்லாஹ் என்பதை அல்லா என்றும், 
ஹாஜா  மைதீன் என்பதை காஜா மைதீன் என்றும்,
ஹலால் / ஹராம் என்பதை கலால் / கராம் என்றும்,
ஆயிஷா  என்பதை ஆயிசா என்றும்,
முஷரஃப் என்பதை முசரப் என்றும்,
சதாம் ஹுசைன் என்பதை சதாம் உசேன் என்றும்,
அஹ்மதி நிஜாத் என்பதை அகமதி நிசாத் என்றும்,
ஏ.ஆர்.ரஹ்மான் என்பதை ஏ.ஆர்.ரகுமான் என்றும்,
பீ.ஜே என்பதை பீ.சே என்றும்,
ஜவாஹிருல்லாஹ் என்பதை சவாகிருல்லா என்றும்,
தவ்ஹீத் என்பதை தவ்கீது என்றும்,
அலஹாபாத் அஹ்மதாபாத் ஹைதராபாத் என்பதை எல்லாம் அலகாபாத், ஆமதாபாத், ஐதராபாத் என்றும்...
கஷ்மீர் என்பதை கசுமீர் என்றும்,
நிஜாம் பாக்கை நிசாம் பாக்கு என்றும் "தனித்தமிழில்" (?) எழுத... கனவிலும் கூட மறப்பதில்லையே இந்த தமிழ்ப்போலி ஆர்வலர்கள்..! அது மட்டும் ஏன்..?

இப்படித்தான், இவர்களின் மூதாதையர் மஸ்ஜித் என்பதை... மசூதி என்றாக்கி இருந்திருக்க வேண்டும்..!

இதைவிட இன்னொரு மிகப்பெரிய உள்குத்து ஒன்று இவர்களிடம் உள்ளது. அதில்தான் இவர்களின் தனித்தமிழ் ஆர்வ முகத்திரை பரிதாபமாக கிழிந்து தொங்குகின்றது. மேலே அரபி பெயர்களை 'தனித்தமிழ் எழுத்தில்தான் எழுதுவோம்' என்று குதறி கிழிக்கும் இவர்களில் பெரும்பாலோர்...

தாவூது இபுராகிம் என்று எழுதுவதில்லை. தாவூத் இப்ராஹீம்.
அல் உம்மா பாசா என்று எழுதுவதில்லை. அல் உம்மா பாஷா.
அசுமல் கசாபு என்று எழுதுவதில்லை. அஜ்மல் கஸாப்.
சல்மான் ருசுடி என்று எழுதுவதில்லை. சல்மான் ருஷ்டி.
தசுலிமா நசுரின் என்று எழுதுவதில்லை. தஸ்லீமா நஸ்ரின். 
அகமதியா என்று எழுதுவதில்லை. அஹமதியா.
சியா என்று எழுதுவதில்லை. ஷியா. 
சாருக்கான் என்று எழுதுவதில்லை. ஷாருக்கான்.
குசுபு என்று எழுதுவதில்லை. குஷ்பு.
சகிலா என்று எழுதுவதில்லை. ஷகிலா.
மும்தாசு என்று எழுதுவதில்லை. மும்தாஜ்.

இப்படியாக... இஸ்லாமிய தொடர்பற்ற காரியங்கள் செய்து பிரபலம் அடைந்தோர் எனில், அவர்களின் பெயர்கள் மட்டும், இப்போது எப்படி அதே அரபி ஒலிக்குறிப்பில் எழுத முடிகிறது..? ஆகவே.... சகோஸ்... புரிகிறதா..? சிலரின் நுணுக்கமான பல உள்குத்து வேலைகளும் அதனாலே எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகளும்..?!

அதுமட்டுமில்லை... எந்த வேற்றுமொழி ஒலிகளும் தேவைப்படாத இஸ்லாமிய விவகாரங்களிலும் கூட...

குர்ஆன் என்பதை குரான் என்றும், (இலக்கணமாம்..!)
கஃபா என்பதை காபா என்றும், (எஃகு என்பதை ஏகு என்று சொல்வதில்லை..!)
மக்கா மதீனா என்பதை, மெக்கா  மெதினா என்றும் (ஸ்டைலாக?) திரிக்கின்றனர்..!

இவர்கள் தளத்தில் "மும்தாசுக்காக தாசுமகாலை கட்டியவர் சாசகான்" என்று கொடுந்தமிழ் போர் புரிவோர்... இருக்கும் இரண்டே எழுத்தும் தமிழாக இல்லாத 'ஹஜ்' என்ற ஈரெழுத்து வார்த்தையை இவர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்பதுதான் சிகரம்..! அச்..? கச்..? அசு..? கசு..?அதுதான் இல்லை..! அவர்கள் அதை 'முசுலிம்களின் புனித மெக்கா யாத்திரை' என்று 17 எழுத்துக்கள் 4 வார்த்தைகள் என்று வெட்டியாய் நீட்டி முழக்குகிறார்கள். தேவையா இந்த படுதோல்வி..?

இவர்களிடம் நான் ஏதும் பின்னூட்டமிட்டால்... இறுதியில், "தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழர். முகமது ஆசிக்." என்று முடிக்கின்றனர்..! 

இவர்களுக்கு என் பெயரில் ஏன் இந்த தட்டச்சு  கஷ்டம்..? எனது பின்னூட்டத்தில் உள்ள என் பெயரை அப்படியே காபி பேஸ்ட் செய்து... "~முஹம்மத் ஆஷிக்_citizen of world~" என்று போட வேண்டியதுதானே..? அட..! நான் இஸ்லாமிய தொடர்பில் உள்ளவன் என்பதால் பெயரை மாற்றுகிறீர்களோ..! நான் கெட்டவனா இருந்திருந்தா அப்படியே போட்டு இருப்பீங்க இல்லே..!? 'அப்போ சரி, என் பெயர் ஒலிக்குறிப்பு சிதைந்தாலும் பரவாயில்லை என்று என் பெயரை அப்படியே தப்பாவே சொல்லிட்டு போங்கன்னு' உங்களை விட முடியாது..!

தயவு செய்து உங்கள் நடவடிக்கையை மாற்றுங்கள்..! ஒலிக்குறிப்பு தேவையோடு பிற எழுத்துக்களை தமிழில் உபயோகப்படுத்துதல் ஒன்றும் தவறில்லை..! மக்கள் அதன் சரியான ஒலிக்குறிப்பை புரிந்து கொள்வதே மிக முக்கியம்..! எழுத்து என்பதே சரியான ஒலியை வார்த்தையாக்கி பிறருக்கு உணர்த்தவே..! 'தமிழார்வம்' என்ற பெயரில்... இந்த அஸ்திவாரத்தை தயவு செய்து இடித்து விடாதீர்கள்..!

முஹம்மத் ஆஷிக்
நன்றி: http://pinnoottavaathi.blogspot.com/2013/03/blog-post_4585.html

11 Responses So Far:

Abu Easa said...

சமீபத்தில் சன் டிவி யின் முக்கியப் பிரமுகர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரைப்பற்றி புகுத்தறிவுக்கு பட்டா வைத்திருப்பவன் எழுதிய ஒரு கட்டுரையில் பல பெண்கள் அவன் வலையில் வீழ்ந்து உயர் பதவி பெற்றதாகவும், சிலர் இடம் கொடுக்காமல் இடம் மாறியதாகவும் ஊர், பேர், சாதி, மதம் இல்லாமல் ஒரு பெண், ஒரு பெண் என்றே சொல்லிக்கொன்டு வந்தவன் ஒரு இடத்தில் மட்டும் இசுலாமியப் பெண் சொல்லி வைத்தான். இப்படித்தான் இருக்கிறது இவர்கள் போடும், பகுத்தறிவு நாத்திக வேடம்.

முகமூடி உண்மையிலேயே கிழிந்துதானிக்கிறது.

نتائج الاعداية بسوريا said...

ஜனாப் ஆஷிக் அவர்களே தங்களின் தமிழ் சொற்றொடர் ஆராய்ச்சி என்னை பிரமிக்க வைத்தது. இப்படியெல்லாம் மொழியில்கூட ஒரு காழ்புணர்ச்சியை கொட்டித்தீர்த்திவிடமுமா ? என்று என்னும்போது இந்த போளித்தமிழ் ஆர்வலர்களின் முகமூடி உங்கள் மூலம் கிழித்து எறியப்பட்டிகிக்கின்றது என்பதை என்னும்போது இப்படி ஒரு தமிழ் சொல் ஆராய்ச்சி உங்களால் ஆராயப்பட்டது நிச்சயம் வீண் போகாது.

இந்த சொல் அம்புகள் மூலம் மொழிமாற்றம் என்னும் நாடகம் ஆடும் இவர்கள் மறுபக்கம் ( போலி முகத்தை ) பார்க்க ஒரு நல்ல சொல் ஆராய்ச்சி பயன் பட்டு இருக்கின்றது உங்கள் மூலம். நம்முடைய திரு மறை வேதத்தின் மூல மொழியான இந்த அரபி மொழி மீது எவ்வளவு அக்கறை இருந்தால் நீங்கள் இதை நேரம் ஒதுக்கி இவ்வளவு வேகமெடுத்து எழுதி இருப்பீர்கள்.

இப்படி ஒவ்வருவரும் உத்வேகத்துடன் செயல் பட்டாள் , சாட்டையடி கொடுத்தால் நம் விஷயத்தில் எவனுக்கும் ( இறை மறுப்பாளன்) விளையாட துணிவு பிறக்காது. இந்திய சுதந்திரத்திற்காக தன உடல் , பொருள், உயிர் அனைத்தையும் துறந்த எத்தனையோ முஸ்லிம்களை மறந்து, காழ்புனர்ச்சியோடு, இந்திய வரலாற்றை தந்த வர்களுக்கு இந்த மொழியில் விளையாடுவது எம்மாத்திரம் ?

ஆதலால் இப்படி துணிவோடு , ஆணித்தரமாக அத்தோடு ஆதாரபூர்வமாக
மொழிமாற்றக் காழ்ப்புணர்ச்சியை வெட்ட வெளிச்சமாக்கிய ஆஷிக் அவர்களே உங்கள் பேனாவுக்கு பல நன்றிகள்.

தொடரட்டும் உங்கள் ஆக்ரோஷம்,
வெல்லட்டும் உங்கள் எழுத்து.

நம்மில் கூட ஆஷிக் போன்றவர்கள் இருக்கின்றார்கள் என்ற பெருமிதத்துடன்
முடிக்கும்.

அன்புடன்,
அப்துல் காதர் ( மரியம்மா)
ரியாத் சவுதி அரேபியா.

Ebrahim Ansari said...

சகோதரர் முஹம்மத் ஆஷிக் அவர்கள் பலரின் பலநாள் கோபத்தை இங்கு கொட்டித் தீர்த்து இருக்கிறார்கள். இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லும் திராணி எவருக்கும் இல்லை. அண்மையில் படித்ததில் அற்புதமான கருத்துக்கள் நிறைந்த பதிவு. மிக்க மகிழ்ச்சி.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சகோ, ஆஷிக் அவர்களின் ஆக்கம் சிந்தனைக்குரியவை. இவைகள் அத்தனையும் திட்டமிட்ட சதியே தவிர வேறல்ல!

Yasir said...

அட...மொழித்தீவிரவாதம் கூட பண்றாங்களா ? இஸ்லாம் என்றால் சிலருக்கு “இல்மா” சாப்பிட்ட வலி...அல்லாஹ்தான் உங்கள் மனங்களை மாற்ற வேண்டும்...சிறந்த சிந்தனை / வேதனையான் செய்தி மிக்க ஆக்கம் சகோ.ஆஷிக்...உங்களைப்போன்றோர்கள்தான் சமுதாயத்திற்க்கு தேவை...

sabeer.abushahruk said...

ஒரே ஸ்க்ரூ ட்ரைவரின் முனையைத் தன் தேவைக்கேற்ப மழுங்க/கூராக்க முனைவதும் ஒரே ஸ்ப்பானரை தன் பிரயோகத்திற்கேற்ப வளைத்து நெளித்தலும் எடுத்தக்கொண்ட பணியைச் சிறப்பாகச் செய்ய ஏதுவாகுமெனில் அது தவறல்ல, திறமை.

இப்படியாகத்தான் புதுப்புது உபகரணங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.

மொழிகூட உணர்வுகளை/செய்திகளைச் சொல்ல உபயோகிக்கும் ஓர் உபகரணம்தான். துள்ளியமான தெளிவான அர்த்தம் தர மொழியை நாம் எப்படி வேண்டுமானாலும் திருத்தலாம். மனிதன் உருவாக்கிய மொழி மாற்றத்திற்குட்பட்டதே.

சகோ ஆஷிக்கின் ஆராய்ச்சி முகமூடிகளைக் கிழிப்பது உண்மை, அதிர்ச்சியும்கூட.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, சகோ.

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Muhammad Ashiq,

Its a sign of intellectual maturity and mastering an another language when a person read, write, speak(pronouncing) it as accurately as possible.

An individual or unit could twist another language out of ignorance.

If an individual or unit deliberately twisting another language for any internal agenda out of racism is an act of indecence, immaturity, and unforgivable.

Thanks a lot for sharing bold thoughts.

Thanks and best regards

B. Ahamed Ameen from Dubai

www.dubaibuyer.blogspot.com

نتائج الاعداية بسوريا said...

நண்பா , சபீர்

இக்கணம் வரை, கொல்லைப்புற வழியாகத்தான் நிருபர் அவைக்குள் நுழைந்து கொண்டு இருக்கின்றேன். காரணம் தமிழ் தட்டச்சில் எக்ஸ்ப்ரஸில் உள்ள வேகம் நிருபரில் முடியவில்லை , வேகமட்டுமல்ல பிழைகளும் கணிசமாக என்னை இடையூறு செய்கின்றன.

எனக்கு உதவிடுவோர் யாராவது உண்டா ?

அப்துல் காதர்,
ரியாத்,
சவுதி அரேபியா.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அப்துல் காதர் காக்கா,

இந்த தளங்களுக்கு சென்று தட்டச்சு செய்து பாருங்களேன்..

http://umar-tamil.blogspot.in/

http://www.google.com/intl/ta/inputtools/cloud/try/

http://www.tamil.sg/

http://www.quillpad.in/editor.html

http://kandupidi.com/editor/

நான் தட்டச்சுவது இந்த தளத்திலிருந்து http://umar-tamil.blogspot.in/

KALAM SHAICK ABDUL KADER said...

அன்புச் சகோதரர் ஆஷிக் அவர்கட்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.

உங்களின் இந்தப் பதிவிலும், இதற்கு முன்னர் ஒரு பின்னூட்டத்திலும் உண்மை, நேர்மை, துணிவுடைமை, நடுநிலைமை நிரம்பக் கண்டேன்; என்னுள்ளத்தில் நீண்ட நாட்களாய், “ஏன் இப்படியெல்லாம் - குறிப்பாக முஸ்லிம் பெயர்களில் தவறான உச்சரிப்பைக் கொடுக்கின்றார்கள்?” என்று என் பெயர் உட்பட ஊரில் வாக்காளர்ப் பட்டியல், குடும்ப அட்டைப் போன்ற மிகவும் முக்கியமான ஆவணங்களில் இப்படி எழுத்துப் பிழைகளை ஏன் செய்கின்றார்கள்?” என்று கேட்டுக் கொண்டிருந்தேன்; சில வேளைகளில் அரசு அதிகாரிகளிடம், வங்கி ஊழியர்களிடம், பள்ளிக்கூட நிர்வாகிகளிடம் வாதாடியும் இருக்கிறேன். காரணம், அடிப்படையில் என் பள்ளிப் பருவத்தில் முதலாம் வகுப்புத் தொடக்கம் பட்டப்படிப்பு வரைக்கும் என் பெயரை “அப்துல் கலாம்” என்றே வாசிக்கவும், எழுதவும் செய்து “அபுல் கலாம்” என்று எழுதவோ உச்சரிக்கவோ மறுப்பதேன்; குறிப்பாக விடுதலைப் போராட்ட வீரர் மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவர்களின் நினைவாகவே எனக்கும் அப்பெயரிடப்பட்டும், வரலாறு அறிந்தும் அப்பெரியாரின் பெயரைச் சொல்ல மறந்ததனால், என் பெயரிலும் அப்துல் சேர்த்து (அப்துல்/ அபுல் இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை எத்தனை முறை எடுத்துச் சொல்லியும் விளங்காமலிருக்கின்றனர் என்பதாற்றான் “கலாம்” என்று சுருக்கினேன்)

வாக்காளர்ப்பட்டியலில்:

தவ்ஃபீக் அஹ்மத் என்பது தொப்பி அகமது
ஃபௌஸுன் நிஸா என்பது பூசனிக்காய்
அஹமத் அன்சாரி என்பது அகமது ஆசாரி(?)

இப்படி எல்லாம் எழுதியிருந்ததைக் கண்டு வேதனைப்பட்டிருக்கின்றேன்; அடிப்படை ஆவணங்களில் இவர்களின் விருப்பத்திற்கு அரபு உச்சரிப்பு விளங்கவில்லை என்பதற்காக இல்லாத ஒன்றை எழுதி விடுகின்றனர்; இறுதியில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பம் செய்யும் பொழுது இதனால் எத்தனை சிரமங்களைச் சந்திக்கின்றோம்.

உண்மையில், பள்ளிப்பருவத்திலிருந்தே தமிழார்வம் கொண்டவனாதலால் “தனித்தமிழ்” என்ற தாகமும் என்னுள் இருந்தது; இன்னும் இருக்கின்றது; இருப்பினும், தனிநபர் மற்றும் இடங்களில் பெயர்ச்சொல்லில் திருத்தம் செய்ய எவர்க்கும் உரிமை கிடையாது; அப்படித் திருத்துவதனால் அப்பெயர் எம்மொழியில் இடப்பட்டதோ அம்மொழியின்படி பொருள் மாறுபடும் என்பதாற்றான் (நீங்களும் குறிப்பிட்டுள்ளபடி) இப்பெயர் மாற்றங்களில் மட்டும் தனித்தமிழ் வேண்டாம் என்பது என் நிலைபாடு;அஃதே உங்கட்கும் உடன்பாடு என்பதை அறிந்து கொண்டேன்; உங்களின் ஆய்வுரைக்கு என் உளம்நிறைவான வாழ்த்துகளும் நன்றிகளும் கூறிக் கொள்கிறேன்.

அபூ சுஹைமா said...

மஸ்ஜிதை மசூதி என்று உள்நோக்கத்துடன் மாற்றி இருக்கக் கூடும் என்று நான் நினைக்கவில்லை. தமிழகத்தில் முஸ்லிம் விரோதப் போக்கு கடந்த சில ஆண்டுகளாகத்தான் நடைபெற்று வருகிறது. அதற்காக மசூதி என்ற பதத்தை நான் தாங்கிப் பிடிப்பவன் அல்லன்.

மஸ்ஜிதுந் நபவிய் சுஜூது செய்யும் இடமாக மட்டும் இல்லாமல் வாழ்க்கைக்கான கல்வியைக் கற்றுக் கொடுக்கும் இடமாகவும் திகழ்ந்ததால் அதுபோன்றே நமது மஸ்ஜிதுகளும் திகழ வேண்டும் என்ற எண்ணதில் பள்ளிவாசல் என்று நமது முன்னோர் அழைத்திருக்கக் கூடும். இவ்வகையில் பள்ளி அல்லது பள்ளிவாசல் என்பதே சாலப் பொருத்தம்.

ஒரு மொழியில் உள்ள சொல் பிற மொழியினரால் மொழியப்படும்போது அதே உச்சரிப்பில்தான் இருக்கும் என்று சொல்ல முடியாது. அரேபு மொழியில் ஜப்பான், ஜெர்மனி என்று எழுதவும் மொழியவும் உரிய சொற்கள் இருந்தும் யபான், அல்மானியா என்றுதான் கூறுவர். அதுபோன்று இதையும் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு