Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பிழையறப் பிழை! 21

அதிரைநிருபர் பதிப்பகம் | May 13, 2013 | , , ,


அழிப்பவன் மட்டுமே இறைவன் என
எதிர்மறையாய் எண்ணாதே
அளிப்பவனும் அவனே!

ஆலுக்குப் பிடிமானம் முதுமையில்
விழுதுகள்
ஆளுக்கு வெகுமானம் மறுமையில்
தொழுதுகொள்
இளமையில் கள் ளென
இழிபோதையில் அழியாமல்
இளமையில் கல்

ஈயென்று இளிக்கின்ற
ஈனப்பிறவி யாகாமல்
ஈயென்று எடுத்துச் சொல்
இயன்றவரை கொடுத்துக் கொள்

ஓட்டைச் சரி செய்தால்
கூரை நிறைவாகும் - சலன
ஓட்டையை அடைத்து நல்
ஒழுக்கம் தங்கவிடு

கல்லாமை பிணியாகும்
ஓட்டுக்குள் உடல் முடக்கி
உள்ளுக்குள் தலை யிழுக்கும்
கடலாமை போலாகும்

அம்பின் முனைகூட
அன்பினால் கூர்மழுங்கும்
குத்திக் கொல்லாமல்
புத்தி சொல்லி புன்னகைக்கும்

உண்ணவும் உடுக்கவும்
உடல் உழைத்து வருவாய்
உழைப்பற்ற வருவாய்
நிலையற்ற ஒரு வாயில்!

உடல் களைக்க உழை
ஊர் மெச்சப் பிழை
பட்டினிச்சாவு பயமுறுத்தினாலும்
பிழையறப் பிழை!

Sabeer AbuShahruk
நன்றி : சத்தியமார்க்கம்.com

21 Responses So Far:

Yasir said...

மாஷா அல்லாஹ்...மாஷா அல்லாஹ்....மாஷா அல்லாஹ்....அருமையாக தொடங்கி, ஒவ்வொரு வரிகளும் பல ரத்தினக்கருத்துக்களை பொதிந்து ஜொலிக்கின்றது...இந்தக் கவிதை உங்கள் புகழ் மகுடத்தில் வைக்கபட்ட விலைமதிப்பில்லா வைர(ம்)க்கவிதை..அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்

புருவத்தை உயர்த்தி “வாவ்” போட்டு வாய்பிளக்க வைத்த வரிகள்

//ஆலுக்குப் பிடிமானம் முதுமையில்
விழுதுகள்
ஆளுக்கு வெகுமானம் மறுமையில்
தொழுதுகொள்//

//அம்பின் முனைகூட
அன்பினால் கூர்மழுங்கும்
குத்திக் கொல்லாமல்
புத்தி சொல்லி புன்னகைக்கும்//

Unknown said...

அழிப்பவன் மட்டுமே இறைவன் என
எதிர்மறையாய் எண்ணாதே
அளிப்பவனும் அவனே!

ஈயென்று இளிக்கின்ற
ஈனப்பிறவி யாகாமல்
ஈயென்று எடுத்துச் சொல்
இயன்றவரை கொடுத்துக் கொள்


உனக்கு அளிக்கபட்டிருக்கின்ற உணவு உன்னை வந்தடையும் வரை உன்னை மரணம் நெருங்காது. இதை இக்கவின் வரியில் அழகாக இறைவன் நமக்கென்று விதித்ததை உழைத்துப்பெற்றுக்கள், ஒன்றை அழிப்பவனும், அதை உனக்கு அளிப்பவனும் அவனே என்று இறைவனின் உரிமைகளை உழைப்பவன் முன் அழகாக உணர்த்தி இருக்கின்றாய்.

உழைத்து தானம் செய்யும் கை ( மேலுள்ள கை ) உழைப்பவனிடம் யாசிக்கும் கையை (கீழுள்ள கை) விட மேலானது என்ற நபி (ஸல்) அவர்கள் சொல்லையும் இக்கவியின் மூலம் உணர்த்தி இருக்கின்றாய்.

உழைப்பின் மேன்மையை இவ்வளவு அழகாகச்சொல்ல
வைரமுத்த்வின் வரிகள் கூட உன்முன்னே தோற்றுப்போகும்
சபீரின் வரிகள் சளைக்காமல் நடைபோடும்
சாட்டையடி உன் வரிகளினால்
சல சலசலத்துப்போகும்
யாசிக்கும் சமுதாயம்.

வாழ்க உன் கவி
வளர்க உன் சொல்லாற்றல்.

அபு ஆசிப்.

Shameed said...

//உண்ணவும் உடுக்கவும்
உடல் உழைத்து வருவாய்
உழைப்பற்ற வருவாய்
நிலையற்ற ஒரு வாயில்!

உடல் களைக்க உழை
ஊர் மெச்சப் பிழை
பட்டினிச்சாவு பயமுறுத்தினாலும்
பிழையறப் பிழை!//

உழைப்பை பற்றிய உன்னதமான வரிகள்.இந்த வரிகள் என்னை ஆச்சரியப் படுத்தவில்லை காரணம் ஜுபைலில் உங்கள் கூட இருக்கும் போது உழைத்த வியர்வையுடன் இருக்கும் எங்கள் முதுகை தட்டி கொடுத்த கைகள் எழுதிய வரிகள் என்பதால்

Unknown said...

மாஷா அல்லாஹ்..,,,

// கல்லாமை பிணியாகும்
ஓட்டுக்குள் உடல் முடக்கி
உள்ளுக்குள் தலை யிழுக்கும்
கடலாமை போலாகும்

அம்பின் முனைகூட
அன்பினால் கூர்மழுங்கும்
குத்திக் கொல்லாமல்
புத்தி சொல்லி புன்னகைக்கும் //
அருமையான வரி
அறியாமையை நீக்கும் - அன்பின் முகவரி
ஆயுதத்தின் கூர்மையை விட
அறிவு கூர்மை-வலிமை என்று எண்ணத்தில் பதிவேற்ற
எழுத்தில் வாய்மை
உள்ளத்தில் தூய்மை
கவிக்காக்கவின் சொல்லாட்சி
கவிதையின் அரசாட்சி
----------------------
இம்ரான்.M.யூஸுப்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//உழைப்பை பற்றிய உன்னதமான வரிகள்.இந்த வரிகள் என்னை ஆச்சரியப் படுத்தவில்லை காரணம் ஜுபைலில் உங்கள் கூட இருக்கும் போது உழைத்த வியர்வையுடன் இருக்கும் எங்கள் முதுகை தட்டி கொடுத்த கைகள் எழுதிய வரிகள் என்பதால்//

காது குளிர வரிகள் வடித்து கவிதை எழுதுவதோடு அல்லாமல் கவிதையின் கருவாக வாழ்ந்தும் காட்டுபவர்கள்தான் கவிக் காக்கா !

கண்கூடாகத்தான் பார்க்கிறோமே இங்கேயும் !

உபதேசமும் உண்மையே பேசும் !

crown said...

அழிப்பவன் மட்டுமே இறைவன் என
எதிர்மறையாய் எண்ணாதே
அளிப்பவனும் அவனே!
-------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். ஆம் அவன் கொடுப்பவனும் "கொடையரசன். அதனால்தான் நாம் கொடுத்துவைத்தவர்கள். கவிதை வரியின் தொடக்கமே சொல்லவந்த கருத்தின் மொத்த அடக்கமாய் இருப்பதும், இதுபோல் பல நல்கவிதை(மட்டுமே)எழுதியும் மற்ற கவிஞர்கள் போல் ஆடாமல் அடக்கமாய் இருப்பதுமே உங்கள் அழகு!அல்ஹம்துலில்லாஹ்.

crown said...

ஆலுக்குப் பிடிமானம் முதுமையில்
விழுதுகள்
ஆளுக்கு வெகுமானம் மறுமையில்
தொழுதுகொள்
இளமையில் கள் ளென
இழிபோதையில் அழியாமல்
இளமையில் கல்
-----------------------------------
சுள்ளன குத்தும் ஒவ்வொருசொல்லும் வெரும் கல்லாய் இருப்பவனுக்கு!கள்ளில் தள்ளாடும் கூட்டம் ,இனியெடுக்கும் ஓட்டம் இன்சா அல்லாஹ்! மாறிவரும் சமுதாயம் அதன் விழிப்புணர்வுக்கு இதுபோல் கவிதை அவ்வப்பொழுது வரணும்.

crown said...

ஈயென்று இளிக்கின்ற
ஈனப்பிறவி யாகாமல்
ஈயென்று எடுத்துச் சொல்
இயன்றவரை கொடுத்துக் கொள்
-------------------------------------
சில ஈனப்பிறவிகள் காதில் ஈயத்தை காய்ச்சி ஊத்தினாலும் ஈவது தீயது என்பதுபோல் அள்ளவா இருக்கிறார்கள்?.அவர்களிடையே தர்மம் என்பது எள் அளவினிலும் இல்லை! அல்லாஹ்தான் ஹிதாயத் கொடுக்கணும்.

crown said...

ஓட்டைச் சரி செய்தால்
கூரை நிறைவாகும் - சலன
ஓட்டையை அடைத்து நல்
ஒழுக்கம் தங்கவிடு
------------------------------------------
சிறுத்துளி பெரும் வெள்ளம் என்பதிலிருந்து யுகித்ததா?இப்படி ஒவ்வொரு ஓட்டயையும் அடைக்கும் வித்தை நாம் கற்றால் வாழ்வில் காசுமழை! அது நம் காரியத்துக்கு பின் தருமம் செய்தால் நன்மை தழைக்கும், சுவர்க்க"பூ" கிடைக்கும்.

crown said...

கல்லாமை பிணியாகும்
ஓட்டுக்குள் உடல் முடக்கி
உள்ளுக்குள் தலை யிழுக்கும்
கடலாமை போலாகும்
----------------------------------------
கடலாமை ஆயுள் பல நூறு ஆண்டுகள் என்பதுபோல் கல்லாமை ஆயுள் முழுதும் வேதனைத்தரும் நோய்! நல்ல உவமானம், எதுகை மோனையுடன்!

crown said...

அம்பின் முனைகூட
அன்பினால் கூர்மழுங்கும்
குத்திக் கொல்லாமல்
புத்தி சொல்லி புன்னகைக்கும்
---------------------------------------------
முள்ளில் ரோஜா! அதிரையின் கவிராஜாவின் கவி வார்தையில் வண்ண பூத்தோட்டங்கள், எல்லாம் அல்லாஹ்வின் நாட்டம்! இது போல் சமூக சிந்தனை வராவிட்டால் நமக்குத்தான் நட்டம்! ஆகையால் ஆங்காங்க வரும் காலங்களில் சிறு,சிறு செடிகளாவது நட்டால் நம் சமுதாயத்தில் நந்தவனம் உருவாகும்.

crown said...

உண்ணவும் உடுக்கவும்
உடல் உழைத்து வருவாய்
உழைப்பற்ற வருவாய்
நிலையற்ற ஒரு வாயில்!

உடல் களைக்க உழை
ஊர் மெச்சப் பிழை
பட்டினிச்சாவு பயமுறுத்தினாலும்
பிழையறப் பிழை!
-------------------------------------------------------
ஒரு ஆய்வு கட்டுரை எழுதும் அளவிற்கு ஆழம் உள்ள கவிதை ஆக்கம். இபுறாகிம் அன்சாரி காக்கா போல் உள்ள மேதைகள் இது போல் கவிதையை ஆய்வு கட்டுரை புனையலாம். ராஜ கவிக்கு வாழ்த்துக்கள்.(யாவும் அவசரமாய் எழுதி விட்டேன் பிழைகண்டால் பிழைத்து போக விட்டுவிட கோருகிறேன்.)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஒவ்வொரு வரிகளுமே....
இனிக்கிறது,
சுவைக்கிறது,
மனக்கிறது,

அதோடு க்ரவ்னின் பின்னணி அலங்கரிக்கிறது.

Ebrahim Ansari said...

தம்பி சபீர் அவர்களுக்கு,

ஐந்து அத்தியாயங்களில் சொல்ல வேண்டியதை அழகான அடக்கமான வரிகளில் சாறாகப் பிழிந்து கொடுத்து இருக்கிறீர்கள்.

தம்பி ஜகபர் சாதிக் அவர்கள் குறிப்பிட்டபடி ஒவ்வொரு வரிகளுமே இனிக்க மட்டும் இல்லை; சுவைக்க மட்டும் இல்லை; மணக்க மட்டும் இல்லை. ஜொலிக்கிறது.

மனங்களில் இடம்போட்டு அமர்ந்துகொண்ட அழகுக் கவிதை வரிகள்.
அதிகாலை படித்து ஆனந்தம் கொண்டேன். இன்று முழுதும் இதை அசை போடுவேன்.

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Sabeer AbuShahrukh,

One of the great poems consisting rich thoughts on self discipline guidelines that would nourish individuals' characters.

Jazakkallah Khairan

Best regards,

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கவிதை எழுதுவதில் கைதேர்ந்த, எனக்குப் பிடித்த கவிதைகள் பல எழுதிய ஒரு பிரபல்யமான கவிஞரும் காட்டமான எழுத்துக்குச் சொந்தக்கார 'நம்மூர்க்கார' தம்பி ஒருவரும் "ஆளுக்கு வெகுமானம் மறுமையில் தொழுதுகொள்" என்பதில் பொருள் மயக்கம் காண்பதாக சத்யமார்கம் தளத்திலும் தனி மின்னஞ்சலிலும் சொன்னதால் அதுபோன்ற மயக்கம் அ.நிக்கும் வந்திருக்குமோ என்ற அச்சத்தில் அவர்களுக்குத் தந்த அதே விளக்கம் கீழே:

சொல் மயக்கத்தோடு எழுதப்பட்ட இக்கவிதையைச் சத்தியமார்க்கச் சகோதரர்கள் கனிவுடன் அவற்றைக் களைந்தே அங்கு பதிந்திருக்கிறார்கள்.  பொருள் மயக்கம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.  இருப்பினும், சுட்டுவது 'கவி'யாயிற்றே என்பதால் என்னால் இயன்றளவு பொருள் மயக்கம் தெளிவிக்க முயல்கிறேன்.
 
//ஆளுக்கு வெகுமானம் மறுமையில்
தொழுதுகொள்//
 
ஆளுக்கு – மனிதனுக்கு ; 
வெகுமானம் – கூலி; 
மறுமையில் – மரணித்தபின் வாய்க்கும் வாழ்க்கையில் (ஆகிரத்து வாழ்க்கை) கிடைக்கும் 
அதற்காக நீ இம்மையிலேயே தொழுது கொள்.

சரி. 'ஆலுக்குப் பிடிமானம் முதுமையில் விழுதுகள்' என்பதில் பொருள் மயக்கம் இல்லையெனில் 'ஆளுக்கு வெகுமானம் மறுமையில் தொழுதுகொள்'ள்ளிலும் பொருள் மயக்கம் வரலாகாது. 

ஆலமரம் இளமையிலிருந்தே விழுதுகள் வளர்க்கிறது முதுமையில் பிடிமானத்திற்காக; இதைப்போலவே ஆட்களும் இம்மையிலேயே தொழுதுகொள்ளனும் மறுமையின் கூலிக்காக என்றே பொருள் கொள்ளப்பட வேண்டும். 

ஆட்கள் தொழ வேண்டியதை எடுத்துச் சொல்லத்தான் ஆலமரமும் விழுதுகளும் உவமானங்களாக எடுத்தாளப்பட்டது. அன்றேல், ஆலமரத்தைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் இந்தப் பேசுபொருளுக்கு இல்லை. 

நீங்கள் சுட்டிக்காட்டும் இரண்டு வரிகள் மட்டுமே தனித்து நிற்பின் பொருள் மயக்கம் சாத்தியமே. 

ஆலமரம் முதுமையில் விழுதுகள் வளர்ப்பதில்லை; பூமி வாழும் ஆட்களை விளித்து இதுவரை   'மறுமையில் இதைச் செய்' என்று யாருமே சொன்னதில்லை. 'மறுமையில் இது கிடைக்கும்' என்று சொல்லுதலே மரபும் எதார்த்தமுமாம். 

அன்றியும் பொருள் மயங்கினால் நீங்கள்தான் விளக்க வேண்டும்.

நன்றியும் வாழ்த்துகளும்!
@@@@@@

இதைப்போலவே "எதுகை மோனையில் சிக்கிக்கொண்டீரே" என்று சுட்டிய சகோதரருக்குத் தந்த விளக்கம்;


அனிச்சையாக எழுதிச் செல்லும்போது தானாகவே அமையும் எதுகை மோனையோடு என்றைக்குமே எனக்குப் பிணக்கு இருந்ததில்லை. கூடுதலாக, அப்படி வாய்க்கும் எதுகை மோனை கவிதைக்கு இனிமை சேர்க்கும் என்பதிலும் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. 

வருந்தி, நிபந்தனைக்கு உட்பட்டு, நிர்பந்திக்கப்பட்டு, தேடித்தேடி எதுகை மோனை அமைக்கும்போதுதான் பலர் சொல்ல வந்ததை உறுதியாகச் சொல்ல முடியாமல் பேசுபொருள் உருக்குழைந்து போய் கவிதை ரசம் குன்றிப்போய் விடுகிறது.

'பிழையறப் பிழை' பேசுபொருளை ஓரிரு எழுத்துகள் வல்லினம் மெல்லினம் மாறிப்போனால் எந்தளவு ஆபத்தான அர்த்தங்களைக் கொடுத்துவிடுகிறது என்பதை உணர்த்த வேண்டி சொற்களோடு விளையாடியதால், என் வழக்கத்திற்கு மாறாக எதுகை மோனையில் கவனம் செலுத்தினேன் என்பது உண்மைதான். 

தலைப்பிற்கு அவசியப்பட்டதால் அப்படிச் செய்தேன். 

அதிரை.மெய்சா said...

என் இனிய நண்பா ...உனது இக்கவிவரிகள் உள்ளத்தை தொடும் உண்மை வரிகள். இறைவனை நினைக்கவைக்கும் ஏக்கமான வரிகள். உணராதவர்கள் ஊனமனதுடையோர்கள்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

நிதானமாக படித்தேன் காக்கா,

அனைத்தும் உள்ளத்தை தொடும் வரிகள். ஜஸக்கல்லாஹ் ஹைரன்..

TAKE CARE OF YOUR HEALTH

அதிரைக்காரன் said...

கவிஞர் வாலி எஃப்பெக்டுடன் எனக்குப் பிடித்தமான எதுகை-மோனையுடன் வார்த்தைச் சிலம்பம் ஆடியுள்ள கவிதை வரிகள் ஒவ்வொன்றும் கணீரென்று ஒலிக்கின்றன. அகர வரிசை தவறாமல் தொகுத்திருந்தால் இஸ்லாமிய ஆத்திச்சூடி ஆகியிருக்கும். சரி. யாரந்த காட்டமான தம்பி என்று தனிமடலில் சொல்லிடுங்க. ;)

Unknown said...

'திகட்டி திகட்டி பசிக்க வைக்கும்' சபீர் காக்காவின் வரிகள்

sabeer.abushahruk said...

வாசித்துக் கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும், குறிப்பாக கிரவ்னுக்கும் என் நன்றியும் வாழ்த்துகளும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு