Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 5 13

அதிரைநிருபர் பதிப்பகம் | August 07, 2013 | , , , ,


அல்லாஹ்வின் திருப்பெயரால்..

முந்தைய அத்தியாயத்தில் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று தன்னுடைய ஈமானில் உறுதியுடன் இருந்த அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் மனித சமுதாயத்திற்கு முன் மாதிரியாக எவ்வாறு இருந்துள்ளார்கள் என்று நாம் பார்த்தோம்.

இஸ்லாமிய வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் ஒவ்வொரு வரலாற்றுத் தியாகிகளின் பின்னணியில் இருப்பவர்களாக ஒருவரின் தாயோ அல்லது மனைவியோ அல்லது சகோதரிகளோ அல்லது மாமியோ அல்லது சாச்சியோ இருந்திருக்கிறார்கள் என்பதை வரலாறு நெடுகிலும் காணலாம்.

நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு, இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் மிகச் சிறந்த ஆட்சியளராகவும் தலைவராகவும் வாழ்ந்து காட்டி, முதன் முதலில் அமீருல் முஃமினீன் என்று இஸ்லாமிய வரலாற்றில் அழைக்கப்பட்ட உயர்தரமான மார்க்க மேதை. திருக்குர்ஆனுடைய வசனத்தை சுட்டிக்காட்டி அவருடைய கருத்துக்கு மாற்று கருத்து தெரிவித்தால் வேறு வார்த்தை பேசாமால் அப்படியே ஏற்றுக்கொள்வார் என்று வரலாற்று அறிஞர்களால் நற்சான்றிதழ் பெற்ற  இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் இரண்டாவது கலீபா. அல்குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சுன்னா அடிப்படையில் மக்களுக்கு நீதி செலுத்திய நீதியாளர். 

அல்லாஹ்வின் நாட்டத்துடன் இஸ்லாம் இவ்வுலகில் பல்கி பெருக காரணமாக இருந்த உறுதியான அல்லாஹ்வைத் தவிர எதற்கும் அஞ்சாத மிகத் தைரியமான ஆட்சியாளர். நபித்தோழர்களைக் கண்ணியப்படுத்திய கலீபாக்களில் முன்னணியில் இருக்கும் உத்தம நபியின் உன்னத தோழர். கடந்து செல்லும் பாதையில் அவர்  ஒரு வழியில் சென்றால் சைத்தான் வேறு வழியில் செல்வான் என்று நபி(ஸல்) அவர்களால் சிலாகித்துச் சொல்லப்பட்ட அருமை நபியின் நம்பிக்கைக்குரியவர். சுவர்க்கத்தில் அமையப் பெற்ற அழகான மாளிகைக்குச் சொந்தக்காரர் என்று ரஹ்மத்துல் ஆலமீன் நபி(ஸல்) அவர்களால் உயரிய நற்சான்றிதழ் பெற்ற சுவர்கத்துவாசி. 

அல்லாஹ் இவருடைய நாவிலிருந்து பேசுகிறான் என்று பரிசுத்த இறுதித்தூதர் நபி(ஸல்) அவர்களால் சிலாகித்துச் சொல்லப்பட்ட ஏகத்துவாதி, தன்னுடைய மரண வேளையிலும் ஆட்சி அதிகாரத்தைத் துஸ்பிரயோகம் செய்யாமல், தான் நபி(ஸல்) அவர்களுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று தன்னுடைய மண்ணறையை அங்கே அமைத்துக் கொள்ள அன்னை ஆயிசா(ரலி) அவர்களிடம் அனுமதி பெற்று தேர்வு செய்து கண்ணியத்துடன் வீரமரணம் அடைந்த பரிசுத்த வாழ்க்கைக்கும் எளிமையான வாழ்க்கைக்கும் சொந்தக்காரரான நபித்தோழர். நம்முடைய உயிரினும் மேலான உத்தம நபி(ஸல்) அவர்களின், அவர்களின் மதிப்பிற்குரிய மாமனார், உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள்.

உமர் (ரலி) அவர்கள் தூய இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னால், இஸ்லாத்தையும் நபி(ஸல்) அவர்களையும் வெறுப்பவர்களாக இருந்துள்ளார்கள் என்பதை வரலாற்று ஏடுகளில் நாம் காணமுடிகிறது. பல நபித்தோழர்களைக் கொடுமைப் படுத்தியுள்ளவர்களின் கூட்டத்தில் உமர் அவர்களும் இருந்துள்ளார்கள். மக்கத்து குரைஷிகளின் கொடூரங்கள் அளவுக்கதிகமான உச்சகட்டத்தில்  நபி(ஸல்) அவர்கள் மனம் உருகி அல்லாஹ்விடம் “இந்த மக்கத்து குரைஷிகளில் உமர் அல்லது அபூஜகல் இருவரில் ஒருவரை இந்த இஸ்லாத்தை ஏற்க வைத்துவிடு” என்று பிரார்த்தனை செய்ததாக ஹதீஸ்களில் வாசிக்க முடிகிறது.

இஸ்லாமிய மார்க்க பிரச்சாரம் சொற்பமான எண்ணிக்கையிலிருந்த ஒரு சில சஹாபக்களைக் கொண்டு பல இன்னல்கள் கொடுமைகளுக்கு மத்தியில் நபி(ஸல்) அவர்களால் பிரச்சாரம் செய்யப்பட்ட காலகட்டம். அது அன்றைய மக்கத்துக் குரைஷிகளுக்கு மிகப்பெறும் எரிச்சலை ஊட்டியது. ஒரு முறை கொடுங்கோலன் அபூஜகல் (முட்டாள்களின் தந்தை) தன்னுடைய கூட்டத்தாரை அழைத்து ஆவோசமாகக் கேட்கிறான். “இந்த முஹம்மது செய்வதை நீங்கள் பார்க்க வில்லையா?, நம்முடைய முன்னோர்கள் லாத்து உஸ்ஸாவை ஏசுகிறார், நம்முடைய மூதாதையர்களைப் புறக்கனிக்கிறார் அவரை கொல்ல இந்த மக்கத்துவாசிகளில் ஆண்மையுள்ளவர் யாரும் உள்ளீர்களா?” என்ற தோரனையில் அவனுடைய பிரச்சாரத்தில் கோபத்தின் உச்சியில் கொதித்து எழுகிறான். அப்போது ஜாஹிலிய்யா (அறியாமைக்) காலத்தின் பைல்வான் என்று போற்றப்பட்ட ஒரு நல்ல உடல் கட்டான ஒரு வாலிபர் உமர்(ரலி) அவர்கள் எழுந்து வாளை உருவி தன் கையில் வைத்துக் கொண்டு சொல்லுகிறார் “அவரை தீர்த்துக்கட்ட நான் இருக்கிறேன்”. அபூஜகலுடைய கோபத்திற்கு இணையான கோபத்துடன் ஆக்ரோசமாக மக்கா வீதீயில் வாளோடு உமர்(ரலி) அவர்கள் செல்வதைக் கண்ட ஒரு நபர் (அபூ நயீம்) “உமர் எங்கே போகிறீர்?” என்று கேட்க, உமர் (ரலி)  அவர்கள் “முஹம்மதை(ஸல்) கொல்லப் போகிறேன்” என்று சொன்னார். உடனே அந்த நபர் “உமரே முஹம்மதை பார்ப்பதற்கு முன்பு உம்முடைய வீட்டிற்குச் சென்று முதலில் உன்னுடைய குடும்பத்தைப் பார்த்துவிட்டுச் செல்லும்” என்று சொன்னார். மேலும் அந்த நபர் சொன்னார் “உம்முடைய தங்கை உம்முடைய மைத்துனர் முஹம்மது(ஸல்) அவர்களை ஏற்றுக்கொண்டு முஸ்லீமாகிவிட்டார்கள்.” உமர்(ரலி) அவர்களின் கோபம் உச்சத்திற்குச் சென்றது, “முதலில் அவர்களைத் தீர்த்துக்கட்டுகிறேன்” என்று சொல்லியவராக வீட்டிற்கு சென்றார்கள் உமர் (ரலி) அவர்கள்.

வீட்டருகில் சென்றவுடன் அங்கு  உமர் அவர்களின் மைத்துனர் ஹப்பாப்(ரலி) அவர்களும், சகோதரி ஃபாத்திமா(ரலி) அவர்களும் குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கிறார்கள். வீட்டின் கதவை திறந்தவுடன் உமர்(ரலி) அவர்கள் “இங்கு என்ன நடக்கிறது என்று ஆக்ரோஷமான கோபத்துடன் கேட்க, ஹப்பாப் (ரலி) அவர்கள் “ஒன்றும் நடக்கவில்லையே” என்று பதில் சொன்னார். பொய் சொன்னதால், உமர் (ரலி) அவர்கள் தன்னுடைய சகோதரியின் கணவர் ஹப்பாப் (ரலி) அவர்களை அடிக்கிறார்கள். முஸ்லீமான தன்னுடைய கணவர் தாக்கப்படுவதைப் பார்த்த உமர்(ரலி) தங்கை ஈமானிய மங்கை ஃபாத்திமா(ரலி) அங்கு வந்து உமர் (ரலி) அவர்களைத் தடுக்கிறார்கள். அந்த வீரப் பெண்மணிக்கு காயம் ஏற்பட்டு இரத்தம் வர ஆரம்பித்தது. உமர்(ரலி) அவர்களுக்கு முன்பே ஈமானை தழுவிய முன்மாதிரி இஸ்லாமிய பெண் ஃபாத்திமா(ரலி) அவர்கள் சொல்கிறார்கள். “கத்தாபின் மகனே… என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயோ செய், ஆனால் நாங்கள் முஸ்லீமாக இருக்கிறோம்”. தன்னுடைய பாசம் நிறைந்த உடன் பிறந்த தங்கை முஸ்லீமாகிவிட்டேன் என்று சொல்வதை ஒரு நிமிடம் கேட்ட உமர்(ரலி) அவர்கள் ஆச்சரியத்தில் அசந்து போய்விட்டார்கள். அல்லாஹ்வின் மாபெரும் கிருபை உமர்(ரலி) அவர்கள் மனமாற்றம் ஏற்படத் துவங்கியது. 

தன் அருமை ஈமானிய தங்கை ஃபாத்திமா(ரலி) அவர்களிடம் நீங்கள் ஓதியதை எனக்கு ஓதித் தாருங்கள் என்று கூறினார்கள், சகோதரி ஃபாத்திமா சொன்னார்கள் “முதலில் உங்களை தூய்மைபடுத்தி விட்டு வாருங்கள்” கூறினார்கள். குர்ஆனை ஓதினார்கள், நல்ல மனமாற்றத்தை வல்ல ரஹ்மான் உமர்(ரலி) அவர்களுக்கு கொடுத்தான். பிறகு நபி(ஸல்) அவர்கள் சபைக்கு சென்று கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றார்கள். அல்லாஹு அக்பர்!. (உமர் (ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் முன்னணியில் இருந்து இஸ்லாத்தை ஏற்றது ஓர் நெகிழ்ச்சியூட்டும் சம்பவம், அதை ஒரு தனி பதிவாக எழுதலாம்).

நபி(ஸல்) அவர்கள் கஃபாவுக்கு தொழ சென்றால் அந்த குரைஷிக் கூட்டம் தாக்குதல் நடத்திய அந்த கால கட்டத்தில் தான் உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள். உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற பிறகு ஒரு நாள் நபி(ஸல்) அவர்களை அழைத்து காஃபாவின் முன் நின்று “யாரெல்லாம் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு தீமை செய்ய நாடினார்களோ, இதோ இருக்கிறார் முஹம்மது(ஸல்) அவர்கள், ஆனால் ஒன்றை தெரிந்துக்கொள்ளுங்கள் அவர் அருகில் நான் உமர் இருக்கிறேன்”. என்று பலம் நிறைந்த மக்கத்து குரைஷிகளுக்கு முன்பு தனி ஆளாக நபி(ஸல்) அவர்களுடன் அல்லாஹ்வுடைய துணையுடனும் நெஞ்சுறுதியுடன் நின்று கர்ஜித்த வரலாற்றுக்கு செந்தகாரராக உருவானார்கள் உமர்(ரலி) அவர்கள்.

உமர்(ரலி) அவர்கள் முஸ்லீமாகியது எங்களுக்கு ஓர் பலம், அவர்கள் கலீஃபாவாகியது அல்லாஹ் எங்களுக்கு செய்த ரஹ்மத் என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) போன்ற சஹாப்பக்கள் சொல்லி உமர்(ரலி) அவர்களின் சிறப்பை சிலாகித்து சொல்லியுள்ளதை ஹதீஸ்களில் பார்க்கும் போது நாம் அந்த நிகழ்வை போற்றாமல் இருக்க முடியாது.

உமர்(ரலி) அவர்கள் இஸ்லாத்திற்காக ஆற்றிய சேவைகள், தியாகங்கள் என்று எண்ணிலடங்கா சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம். இங்கு நான் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விசயம். உமர் (ரலி) அவர்கள் தூய இஸ்லாத்தை ஏற்றது அல்லாஹ்வுடைய நாட்டம் என்பது நாம் அனைவரின் நம்பிக்கை என்பதில் யாருக்கும் மாற்று கருத்தில்லை. ஆனால் இங்கு உமர்(ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்க மனமாற்றமாக இருந்த ஓர் சம்பவம் தான் மேல் குறிப்பிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம். உமர்(ரலி) அவர்களின் ஈமானிய தங்கை இஸ்லாத்தை ஏற்று, உடலாலும், உள்ளத்தாலும், அதிகாரத்தாலும் கடின குணத்தாலும் பலம் பொருந்திய தன்னுடைய சகோதரனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல், நான் முஸ்லீமாகிவிட்டேன் உங்களால் முடிந்ததை செய்துக்கொள்ளுங்கள்” என்று தெளிவாக எதிர்க்கொண்டு சொன்ன அந்த வைர வரிகளே நபி(ஸல்) அவர்கள், அபூபக்கர்(ரலி) அவர்களுக்கு பிறகு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஒரு தலைசிறந்த மார்க்க அறிஞரை, நீதியை நிலைநாட்டும் நீதியரசரை, வீரமிக்க தலைவரை, மக்களாட்சிக்கு முன்னுதாரணமான ஒரு ஆட்சியாளரை உருவாக்கியுள்ளது.

நம்முடைய வாழ்வில் உமர்(ரலி) அவர்களின் தங்கை ஃபாத்திமா(ரலி) போன்று எத்தனை உடன் பிறந்த சகோதரிகளை காண முடியும்?

தன்னுடைய சகோதரன் தொழவில்லை என்றால், அவனுக்கு ஈமானிய உணர்வுகளை எத்தி வைத்து தொழ வைத்த உடன் பிறந்த சகோதரிகளை நம்மில் காண முடியுமா?

எத்தனை சகோதரிகள் தன்னுடைய சகோதரனை புகைப்பிடித்தல், மது அருந்துதல், விபச்சாரம் போன்ற தீய பழக்கங்களிருந்து மீட்டெடுத்திருக்கிறார்கள் என்பது நமக்குள் கேட்டு சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரமிது.

சகோதரனின் கள்ளக்காதலுக்கு, தூதுவராக உறுதுணையாக இருக்கும் சகோதரிகளின் பட்டியல் போட்டால் நீண்டுக்கொண்டே செல்லும் அளவுக்கு சகோதரிகளின் ஒத்துழைப்புகள் அதிகம் காணக்கூடிய சூழலே அதிமாக இருக்கிறது (அல்லாஹ் பாதுகாப்பானாக!).

நவீன சைத்தானிய ஆதிக்கமிக்க இன்றைய ஊடக சாதனத்திங்களின் மூலம் தொடர் நாடகங்களைப் பற்றியும், டீவி நிகழ்ச்சிகளை பற்றியும், சினிமாக்களை பற்றியும், முகநூல் (facebook), மற்றும் சமூக வலைப்பின்னல்களை ஏற்படுத்தும் GOOGLE HANGOUT, இணையத்தில் கொட்டிக் கிடக்கும் தேவையற்ற காணொளிகளைப் (youTube) பற்றியும் அல்லவா நம் சகோதரிகள் தன் உடன் பிறந்தவர்களிடம் விவாதிக்கிறார்கள்.

இளமையை இழந்து, படிப்பை இழந்து, உடல் நலனை இழந்து, இன்னும் சொல்லப்போனால் பலர் வெளிநாட்டு வாழ்கை என்பதால், தன்னுடைய ஐவேளை கடமையான தொழுகையும் (சில நேரங்களில் பாவியாக) இழந்து உழைத்தெடுக்கும் சம்பாத்தியத்தை தன் அருமை சகோதரிக்காக அனுப்பி இருப்பான், அதில் குறை கண்ட சகோதரிகள் ஏராளம் பார்க்கலாம். என்றைக்காவது  தன்னுடைய சகோதரை பார்த்து “எங்கள் வாழ்வுக்காக நீ இப்படி கஷ்டப்படுகிறாயே, உன்னுடைய வணக்க வழிபாடுகளில் (இபாதத்தில்) கவனம் செலுத்து என்று அந்த சகோதரனிடம் உரிமையோடு நம் சகோதரிகள் கேட்டிருப்பார்களா? 

நீ அல்லாஹ்வை  வணங்காமல் சம்பாதிக்கும் பணம் எனக்கு தேவையில்லை என்று நம்மில் ஒரு சகோதரி தன் சகோதரனிடம், ஒரு தாய் தந்தையர் தன் மகனிடமோ, ஒரு மனைவி கணவனிடமோ என்றைக்காவது கேட்டிருபார்களா?

உமர் (ரலி) அவர்களின்  வரலாற்றில், அவர்களின் தங்கை ஃபாத்திமா(ரலி) அவர்கள் தான் ஏற்றுக் கொண்ட இஸ்லாத்தில் உறுதியாக இருந்து, அறிவாலும், அதிகாரத்தாலும், பலத்தாலும், கோபத்தாலும் தன்னைவிட பல மடங்கு அதிகமான தன்னுடைய சகோதரனுக்கு எவ்வாறு இஸ்லாத்தை உணர்த்தினார்களோ அது போல் நம்முடைய சமுதாய பெண்மணிகளும், அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே அஞ்சியவர்களாக, தன்னுடைய கணவன், மக்கள், உடன் பிறந்த உறவுகள் ஆகியோருக்கு இஸ்லாத்தை படிப்பிக்கும் நன் மக்களாக உருவாக வேண்டும் (இன்ஷா அல்லாஹ்).

ஒரு பெண் இஸ்லாத்தை சரியான முறையில் பின்பற்றினால், நிச்சயம் அந்த குடும்பம் இஸ்லாமிய குடும்பமாக மாறும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. அது தான் எதார்த்தம்.

வல்லவன் ரஹ்மான் நம் எல்லோரையும் ஈமானுள்ள நன்மக்களாக வாழ்ந்து மரணிக்க செய்வானாக.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
M தாஜுதீன்

13 Responses So Far:

sabeer.abushahruk said...

கடந்தகால வரலாற்று ஏடுகளிலிருந்து நிகழ்கால வாழ்க்கைக்குத் தேவையான பண்புகளைச் சொல்லிவரும் இந்தப் பதிவு ஒவ்வொரு வாரமும் விடும் ஈமானைப் பரிசோதிக்கும் சவால்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.

இந்த வாரம் எழுத்தில் ஒரு வீரமான வீச்சும் பேச்சுமாக சிறப்பாக உள்ளது

வாழ்த்துகள் தம்பி அபு மஹ்மூத்

Ebrahim Ansari said...

அன்பின் தம்பி தாஜுதீன்
அஸ்ஸலாமு அலைக்கும்.

சரித்திர சம்பவத்தில் தற்கால நிகழ்வுகளை ஒப்பீடாகக் காட்டி உணர்வு பூர்வமான பதிவைத்தொடர்ந்து தந்து கொண்டு இருக்கிறீர்கள். புதன் கிழமை பஜ்ர் தொழுது வந்ததும் திறந்து பார்க்க வேண்டுமென்ற ஆர்வத்தை தந்து அதன்படி ஏமாற்றாமல் பதிவாகி இருக்கும் இந்தத்தொடர், தங்களின் எழுத்துப் பணியிலும் அதிரை நிருபரின் வரலாற்றிலும் ஒரு மைல் கல்லாக அமையும்.
வாழ்த்துக்கள் .
வஸ்ஸலாம்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அவர்கள் வாழ்வில் கண்ட நெகழ்ச்சியூட்டும் சம்பவங்களும் நம் வாழ்வில் காணப்படும் அதிர்ச்சி தரும் கேள்விக் கணைகளும் சிந்திக்கக வைக்கின்றன.

வல்ல ரஹ்மான் நம் எல்லோரையும் ஈமானுள்ள நன்மக்களாக வாழ்ந்து மரணிக்க செய்வானாக.

ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

Unknown said...

பெண் என்றாலே ஒரு பரகத் (நபி ஸல் )

ஒரு பெண் நினைத்தால் எந்த வித காரியத்தையும் நிகழ்த்திக்காட்ட முடியும்,
அது ஈமான் சம்பத்தப்பட்டதாகவோ அல்லது உலக காரியம் சம்பந்தப்பட்டதாகவோ இருக்கட்டும். , அல்லாஹ் அப்பேர்ப்பட்ட ஈர்ப்பை பெண்ணிடத்தில் வைத்திருக்கின்றான். ஆண் உடல் வலிமையில் வேண்டுமானால் இயற்கையில் பலம் பொருந்தியவனாக இருக்கலாம்

ஆனால் பெண்ணாகப்பட்டவள் நினைத்தால் எதையும் சாதிதுக்காட்டிவிட முடியும். அதிலும் ஈமான் பிடிப்புள்ள பெண் நினைத்தால் வீட்டில் உள்ளவர்களை மட்டுமென்ன , ஓர் ஊரையே ஏகத்துவத்தின் கீழ் கொண்டு வரமுடியும்.

தம்பி தாஜுதீன், தங்களின்

ஈமானியப்பென்களின் வரலாற்று நிகழ்வுகள் தொடரட்டும்

அபு ஆசிப்.


m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கலீபா உமர் (ரலி) அவர்கள் வீரம், கோபம் மண்டியிட்டது ! அவர்களின் சகோதரியின் மன உறுதிக்கு முன்னர் அதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான் !

அ.கா. காக்கா மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள் !

தொடர் கருவுற்ற நாட்களிலிருந்து அதன் வளர்ச்சியில் சீராக சென்று கொண்டிருக்கிறது ! அல்ஹம்துலில்லாஹ் !

ZAKIR HUSSAIN said...

To Brother Thajudeen,

தங்களின் எழுத்துப் பணியிலும் அதிரை நிருபரின் வரலாற்றிலும்
ஒரு மைல் கல்லாக அமையும்.இதை பதிவில் கொண்டுவர எவ்வளவு கஷ்டம் என்று எனக்கு தெரியும். உங்களின் கஷ்டங்களுக்கு இறைவன் ஒரு நல்ல முன்னேற்றமான எதிர்காலத்தை உங்களுக்கு தருவான்.


ZAKIR HUSSAIN said...

இதை படித்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் என் நோன்புப்பெருநாள் வாழ்த்துக்கள்.

SELAMAT HARI RAYA AIDIL FITRI.

From: ZAKIR HUSSAIN BIN ABDUL HAYAR & Family


In Malaysia Eidul Fitr will be on 08th August

crown said...
This comment has been removed by the author.
crown said...

அன்பு சகோ.தாஜுதீன்
அஸ்ஸலாமு அலைக்கும்.
சரித்திர சம்பவத்தில் தற்கால நிகழ்வுகளை ஒப்பீடாகக் காட்டி உணர்வு பூர்வமான பதிவைத்தொடர்ந்து தந்து கொண்டு இருக்கிறீர்கள். இந்தத்தொடர், தங்களின் எழுத்துப் பணியிலும் அதிரை நிருபரின் வரலாற்றிலும் ஒரு மைல் கல்லாக அமையும்.
வாழ்த்துக்கள் .
வஸ்ஸலாம்.

Yasir said...

அன்பு சகோ.தாஜுதீன்
அஸ்ஸலாமு அலைக்கும்.
சரித்திர சம்பவத்தில் தற்கால நிகழ்வுகளை ஒப்பீடாகக் காட்டி உணர்வு பூர்வமான பதிவைத்தொடர்ந்து தந்து கொண்டு இருக்கிறீர்கள். இந்தத்தொடர், தங்களின் எழுத்துப் பணியிலும் அதிரை நிருபரின் வரலாற்றிலும் ஒரு மைல் கல்லாக அமையும்.
வாழ்த்துக்கள் .

Yasir said...

SELAMAT HARI RAYA AIDIL FITRI. Zahir kakka wishing you the same

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இதுவரை வாசித்து கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும், வாசித்த சகோதர சகோதரிகளுக்கும் ஜஸக்கல்லாஹ் ஹைரா..

ஜாஹிர் காக்கா, தொடர்களை தொழுத்து எழுதுவது ஈசியான வேலையில்லை என்பதை நிச்சயம் உணரமுடிகிறது, அதுவும் மார்க்கம் தொடர்பான விசயங்களை எழுத்தும்போது நிறைய தேட வேண்டியுள்ளது. உங்களைப் போன்ற நல்லுங்களின் ஊக்கமும் உற்சாகமும் நல்ல ஆர்வமூட்டுகிறது காக்கா.

Anonymous said...

உமர் [ரலி] அவர்களுக்கு பின்பலமாக அவரகளின் தங்கை ஃபாத்திமா [ரலி] நின்றது இஸ்லாத்திற்கு ஒரு நல்ல பலம். பெண்கள் நினைத்தால் சாதிக்கலாம். ஆனால் இன்றைய பெண்களுக்கோ கோணல் புத்தி!

S.முஹம்மதுபாரூக், அதிராம்பட்டினம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு