கைத்தடி கதையைத் தொடர்ந்தது. அதற்கு முன் இடையில் ஒரு வாரம் நாம் இந்த வழக்குக்கு வாய்தா போட்டு விட்டதால் கடந்த அத்தியாயத்தின் கடைசி வரிகளில் இருந்து தொடங்கலாம். அந்த வரிகள்:-
“ஆக, வரப்பு வழக்கு முடியும் முன்பே இரு தலைமுறையின் உயிர்கள் இவ்வுலகில் இருந்து முடிந்து விட்டன." என்பவையே அவ்வரிகள். இனித் தொடரலாம்.
கைத்தடி கதையைத் தொடர்ந்தது. முதலில் பெரிய எஜமானும் அவருக்குப் பின் சின்ன எஜமானும் உயிரை விட்டாவது எப்படியும் சாதகமாகத் தீர்ப்பு வாங்குவோம் என்று போராடி தங்களின் உயிர்களை விட்ட பிறகு அந்தப் பரம்பரையின் ரத்தம் இன்னும் துடித்தது. சின்ன எஜமானின் மகன் துரை இந்த வரப்பு வழக்குக்கு புத்துயிர் ஊட்ட முயன்றார். தங்களின் பரம்பரை ஜமீன்தார்களின் புகைப்பட வரிசையில் தனது தந்தையின் படத்தையும் மூணு இஞ்ச் ஆணி அடித்து திறந்து வைத்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் முதலில் சந்தித்தது வழக்கை நடத்தி வந்த வழக்குரைஞரைத்தான்.
ஒரு காலத்தில் வடக்கில் வாழைத்தோப்பும் தெற்கில் தென்னந்தோப்புமாகத் திகழ்ந்த ஜமீன், வரப்பு வழக்கு செலவுகளுக்காக சிறுகச் சிறுக விற்கப்பட்டு சொத்துக்கள் வழக்கு செலவுகளால் சூறையாடப்பட்டன. ஆனாலும் பரம்பரை வீம்பும் வீராப்பும் மூன்றாவது ஜமீன்தாரின் நாடி நரம்புகளிலும் ஓடிவந்ததால் விட்டேனா பார்! என்று தொடர்ந்து வழக்கை நடத்தினார். இந்த நிலையில் ஒரு அதிர்ச்சியான செய்தி அம்பலத்துக்கு வந்தது.
வழக்கை இரண்டு தலைமுறைகளாக நடத்தி வந்த வழக்குரைஞர், ஏதோ ஒரு மாநிலத்தில் சட்டம் பயின்றதாக பட்டம் வாங்கி பார் கவுன்சிலில் பதிவு செய்து இதுவரை அரசையும் தங்களது கட்சிக்காரர்களையும் ஏமாற்றியதாக எங்கள் ஜமீனின் வழக்குரைஞர் கைது செய்யப் பட்டார். அவரது அப்பா படித்த வக்கீலாக இருந்ததால் அந்த சட்ட புத்தகங்களையும் குமாஸ்தாவின் அனுபவத்தையும் வைத்துக் கொண்டு காலம் ஓட்டி இருக்கிறார் என்கிற குட்டு வெளிப்பட்டது. இப்படித்தான் பல மருத்துவர்கள் கம்பவுண்டர்களின் அனுபவத்தை வைத்து அல்லது நர்சுகளை “ வைத்து “ காலம் ஓட்டுகிறார்கள் என்று கேள்விப் பட்டு இருக்கிறோம். வக்கீல் , சிறைக்கம்பிகளை எண்ணிப் பார்க்க சிறையில் அடைக்கப் பட்டதால் புதிய ஒரு வக்கீலைப் பிடித்தார் ஜமீன்தார் துரை.
புதிய வக்கீலுக்கோ இதுவரை நடந்த வழக்கின் தஸ்தாவேஜுகள் கிடைக்கவில்லை. ஜமீன்தார் துரைக்கும் புதிய வக்கீல் கேட்ட இதுவரை நடந்த வழக்கில் விபரங்களை முழுமையாகத்தரமுடியவில்லை. ஒரு பழைய இத்துப்போன பைலைக் கொண்டுவந்து கொடுத்தார். அதில் ஏழெட்டு தேள் குஞ்சுகள் குடியிருந்தன. அவற்றைப் பார்த்து பயந்த புதிய வக்கீல் , அந்த தேள் குஞ்சுகள் தனது கனவிலும் வந்து பயமுறுத்தியதால் அதன் பிறகு அந்த பைலைத் தொடவே இல்லை. அந்த பைலை ஒரு ஓரத்தில் போட்டுவைத்தார். யார் கண்டது அந்த பைலில் இன்னும் பத்து தேள் குஞ்சுகள் உருவாகி இருக்கலாம்.
வழக்கு தொடர்ந்து நடந்தது. வழக்கு தொடர்ந்து நின்றது. வழக்கு மீண்டும் நடந்தது. வழக்கு இடையில் நொண்டியது. வழக்கு இடையில் தடுமாறியது. இப்படி நவரசங்களுடன் வழக்கு நடந்தது ஒரு பக்கம் ; ஜமீனின் சொத்துக்கள் கரைந்து கொண்டிருந்தது மறு பக்கம். தெட்டத்துக்குப் பாதியாக தென்னந்தோப்புகள் விற்கப்பட்டன. வந்த விலைக்கு வயல்கள் விற்கப்பட்டன. இறுதியில் மனதாலும் உடலாலும் ஜமீன்தார் துரையும் களைத்துப் போனார். அத்துடன் நாட்டில் புதிதாக அறிமுகப்படுத்தப் பட்ட போதை தரும் பாட்டில்களை விற்கும் கடையில் போய் நின்று பெட்டி பெட்டியாக வாங்கி வந்து மாலை நேரங்களில் மாடியில் தனிமையில் அமர்ந்து குடிக்க ஆரம்பித்தார். இதனால் அவரது செழுமையான முகம் கருத்ததது ; மேனி இளைத்தது – களைத்தது. அப்படி களைத்துப் போன நேரத்தில்தான் இவர்களுக்கு கைத்தடியான என் நினைவும் வரும். இதனால் பேரனும் என்னைக் கையில் எடுக்கும் நிலைக்கு ஆளானார்.
பக்கத்து வீட்டுக் காரர்கள் வந்து பக்குவம் பல சொன்னார்கள். ஒவ்வொருவருவரும் ஒவ்வொரு வைத்தியரிடம் போகச் சொன்னார்கள். அதிலே ஒரு வைத்தியர் சொன்னார். ஜமீன்தார் துரைக்கு ஹைபர் டெண்ஷனாம். அதை கட்டுப் படுத்தாவிட்டால் ஆபத்து அருகில் இருக்கும் என்றார். இதைக் கேட்ட ஜமீன்தார் துரை அதிர்ச்சி அடைந்தார். வழக்கு வெற்றி பெரும் முன்பே எனக்கு வாய்க்கரிசி போடப்படுமா என்று அவரால் கற்பனை கூட பண்ணிப் பார்க்க இயலவில்லை. திடீரென்று நெஞ்சைப் பிடித்தார். உடனே உடன் இருந்த மனைவியும் உற்றாரும் ஜமீன்தார் துரையை கைத்தாங்கலாகப் பிடித்து வந்து பங்களாவில் அவரது படுக்கையில் கிடத்தினார்கள். அதுவே அவரது இறுதிப் படுக்கையானது. வெந்நீர் கொண்டுவரச் சென்ற மனைவி திரும்பி வருவதற்குள் ஜமீன்தார் துரையின் உயிர் திரும்பாப் பயணமாக விடைபெற்றுச் சென்று இருந்தது.
கைத்தடி கண்ணீர் வடித்தது. இந்த வரப்பு வழக்கு முடியும் முன்பே பல உயிர்கள் உலகவாழ்விலிருந்து முடிந்துவிட்டன. மூன்று தலைமுறை முடிந்தும் வழக்கு முடிந்தபாடில்லை. அதனால் நான்காம் தலைமுறையைச் சேர்ந்த அடுத்த வாரிசு , சங்கர் ஜமீன்தார் பொறுப்பெடுத்துக் கொண்டார். இளம் வயது. கணினித் தொழில் நுட்பம் கற்றவர். ஆனாலும் பரம்பரை வீராப்பு இவரைவிட்டும் போகவில்லை. ஆனால் பரம்பரையாக வீட்டில் இருட்டு அறையில் வைக்கப் பட்டிருந்த இரும்புப் பெட்டியைத் திறந்து பார்த்த போது அதனுள் இருந்தது வெறும் எழுபத்திநான்கு ரூபாய் மட்டுமே. ஆனால் வழக்கை நடத்த வேண்டுமே என்ற சிந்தனையே சங்கர் ஜமீன்தாரின் மனதில் ஓடியதாக நான் உணர்ந்தேன். இருக்கும் வீட்டைத் தவிர,மற்ற அசையாச்சொத்துக்கள் அனைத்தும் விற்கப் பட்டுவிட்டன; ஜமீன் என்பது பெயரளவுக்குத் தான் ஜமீன் என்கிற பெருங்காய டப்பா நிலைமை ஏற்பட்டுவிட்டது. வழக்குச் செலவுக்கு என்ன செய்யலாம் என்று சங்கர் ஜமீன்தார் தனது தலையைச் சொரிந்து கொண்டு இருந்த போது அவரது மனைவி வந்து , “ என்னங்க சாப்பாடு எடுத்து வைக்கவா?” என்று கேட்டார்.
மனைவியை ஏறிட்டு நோக்கிய சங்கர் ஜமீன்தார், அவரது மனைவியின் கைகளில் குலுங்கிய தங்க வளையல்களையும் காதுகளில் கழுத்தில் தொங்கிய தங்க ஆபரணங்களையும் கண்டார். ஒரு பொறி தட்டியது. மனைவியை தனது அறைக்குள் அழைத்துக் கொண்டு போனார். அறையைவிட்டு ஐந்து நிமிடங்களில் அவர் வெளிவந்த போது அவரது கைகளில் அவரது மனைவியின் நகைகள் அடங்கிய துணி முடிச்சு ஒன்று இருந்தது. அவர் இளைஞர் ஆகையால் என் துணை தேவைப்படவில்லை. ஆனால் வட்டிக் கடைக்கு செல்கிறார் அல்லது நகைகளை விற்கச் செல்கிறார் என்று சுவற்றின் ஓரத்தில் சார்த்தப் பட்டு இருந்த நான் உணர்ந்து கொண்டேன். மற்ற விபரங்களை அவர் வெளியில் இருந்து வந்ததும், ஜமீந்தாருடன் வெளியில் போய்வரும் எனக்கு அருகே மேலே ஆணி அடித்துத் தொங்கவிடப்படும் கருத்துப்போன பரம்பரை ஜரிகை அங்க வஸ்திரத்திடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று சும்மா இருந்து விட்டேன்.
வெளியே சென்ற ஜமீன்தார் வீடுவந்து சேர்ந்தார். வாயெல்லாம் சிரிப்பு. மனைவியை அழைத்து சொன்னார். இந்த முறை நமக்கு வெற்றி நிச்சயம். வழக்கு முடிந்துவிடும். என்னுடன் கல்லூரியில் படித்த ஒருவர் இப்போது வக்கீலுக்குப் படித்து தொழில் நடத்துகிறார் அவரிடம் வழக்கை ஒப்படைத்துவிட்டேன் என்றெல்லாம் சொன்னார். ஜமீன்தார் மனைவியோ தனது கைகளைத் தடவிக் கொண்டே அவர் சொன்னதைக் கேட்டுக் கொண்டதுடன் இன்னும் கழுத்தில் கிடக்கும் ஒரு சின்ன சங்கிலியைத் தன்னை அறியாமல் தொட்டுத் தடவிப் பார்த்துக் கொண்டார்.
இரண்டு நாள் கழித்து ஜமீன்தாருக்கு ஒரு போன் வந்தது. போனில் புதிய வக்கீல் பேசினார் என்று புரிந்து கொண்டேன். வழக்கு நடத்த வேண்டிய செலவுக்கு மட்டுமே பணம் கொடுத்ததாகவும் மற்றபடி வழக்கின் தஸ்தாவேஜுகள் எதுவும் தரவில்லையே என்றும் வக்கீல் கேட்டார். தன்னிடம் எந்த தஸ்தாவேஜூம் இல்லை. எல்லாம் பழைய வக்கீல் குமாஸ்தாவிடம் இருப்பதாகவும் ஜமீன்தார் சொன்னார். குறைந்தபட்சம் வழக்கின் பைல் நம்பரை மட்டும் சொன்னால் விபரங்களை எடுத்துவிடலாமென்று வக்கீல் சொன்னார். ஆனால் ஜமீன்தார் இடம் அந்த வழக்கின் பைல் கட்டின் நம்பர் கூட இல்லை. என்ன செய்வது என்று தலையைப் பிய்த்துக் கொண்டார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ஒரு நினைவு வந்தது.
இந்த வரப்பு வழக்கைத் தொடங்கிவைத்த முதல் ஜமீன்தார் பெரியவர், வழக்கின் நம்பரை ஒரு காகிதத்தில் எழுதி அத்துடன் சில முக்கியக் குறிப்புகளையும் சில விபரங்களையும் குறிப்பிட்டு அவரது கைத்தடியான எனது தலைப் பாகத்தில் கைப்பிடி உள்ள பகுதியில் பத்திரமாக வைத்தது எனக்கு நினைவுக்கு வந்தது. இப்போது அந்த விபரங்கள் என்னுள்தான் அடக்கமாகி இருக்கிறது. இந்த விபரத்தைத்தேடித்தான் இப்போதுள்ள சங்கர் ஜமீன்தார் அலைகிறார் ஆலாய்ப் பறக்கிறார் . எனக்குள் அந்த விபரங்கள் இருப்பது யாருக்கும் தெரியாது. நான்கு தலைமுறையாக இந்த ஜமீனில் வாழ்ந்து வரும் எனக்கு ஜமீன்தாருக்கு உதவ வேண்டுமென்று தோன்றியது ஆனால் எப்படி என்று முதலில் புரியவில்லை. பிறகு யோசித்து ஒரு முடிவு எடுத்தேன்.
வழக்கின் தகவல்கள் தெரியாமல் இங்கும் அங்கும் பதட்டத்துடன் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்த ஜமீன்தார் நடந்து வந்த அறையின் சுவற்றில் சார்த்திவைக்கப் பட்டு இருந்த நான் உயிர்த்தியாகம் செய்ய முடிவெடுத்து அவரது குறுக்கே விழுந்தேன். அதை கவனிக்காமல் நடந்த ஜமீன்தார் நான் பாதையில் கிடந்ததை கவனிக்காமல் என்னால் தடுக்கிவிழப் பட்டு தடுமாறி கீழே விழப் போனார். உடனே அவருக்கு பாதையில் கிடந்த என் மீது கோபம வந்தது. நான் இருக்கும் நிலை தெரியாமல் இந்தப் பாழாய்ப் போன பழைய கைத்தடி வேறு என்று கோபத்துடன் சத்தம் போட்டுக் கொண்டே என்னைத் தூக்கித் தரையில் ஓங்கி அடித்தார். அப்படி ஓங்கி அடிக்கும்போது எனது தலைப் பாகம் கழன்று விழுந்தது. அதற்குள் இருந்த வழக்கின் விபரங்கள் அடங்கிய காகிதமும் விழுந்தது. அதைப் பார்த்த ஜமீன்தார் அந்தக் காகிதத்தை எடுத்துப் படித்தார். அதில் தனது நாலாம் தலைமுறை தாத்தாவின் கைப்பட எழுதப் பட்ட வழக்கின் விபரங்கள் இருந்ததைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தார். தலை வேறு உடல் வேறாக நான் கிடந்தேன். என்னை அப்படியே போட்டுவிட்டு வழக்கின் விபரங்களை எடுத்துக் கொண்டு வக்கீலை நோக்கி ஓடினார் ஜமீன்தார்.
மீண்டும் வழக்கு புத்துயிர் பெற்றது. இந்த வழக்கை விசாரித்த, ஒய்வு பெற்ற, விசாரிக்கும்போதே மாற்றலாகிய, பதவி உயர்வுபெற்றுப் போன நீதிபதிகளின் எண்ணிக்கை மட்டும் இருபத்தி ஐந்து ஆகும். வழக்காடிய வக்கீல்கள் இருபது பேர். வாதி பிரதிவாதி களையும் சேர்த்து வழக்கின் நடை முறை ஆண்டுகளில் உயிரைவிட்டவர்களின் எண்ணிக்கையை வாக்காளர் பட்டியலைப் பார்த்துத்தான் சொல்ல வேண்டும். இறுதியில் வழக்கின் தீர்ப்பு வந்தது. வந்தே விட்டது!
நீதிபதி வெளியிட்ட தீர்ப்பு இது ஒரு சாதாரண வரப்புப் பிரச்னை. இதில் தீர்ப்புக் கூற ஒன்றுமில்லை. இருதரப்புமே பொதுவாக இந்த வரப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் . பரஸ்பரம் சகிப்புத்தன்மையுடன் நடந்து கொண்டு இருந்தால் இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வரவேண்டிய தேவையே இருந்து இருக்காது. ஆனாலும் இரு தரப்பினரும் கவுரவப் பிரச்சனையை முன் வைத்து மோதிக் கொள்வதால் இதைப் பற்றி இன்னும் விசாரித்து அறிக்கைதர ஒரு அரசு அதிகாரிகள் அடங்கிய ஒரு கமிஷனை இந்தக் கோர்ட் நியமிக்கிறது . அந்த கமிஷன் தரும் அறிக்கையின் அடிப்படையில் இறுதித் தீர்ப்பை இந்தக் கோர்ட் வழங்கும் என்று தீர்ப்பு வந்தது.
ஏதோ பட்ட கஷ்டத்துக்கு பட்டும் படாமலும் ஒரு தீர்ப்பு வந்தது என்று எண்ணி ஜமீன்தார் வீடு வந்து சேர்ந்தார். தலை வேறு முண்டம் வேறாக கிடந்த என்னை ஜமீன்தார் நன்றியுடன் பார்த்து, என் தலையை உடலுடன் பொருத்தி நீ இனி எப்போதும் என்னுடனும் இருப்பாய் என்று என் தலையை அன்புடன் வருடிக் கொண்டே மனைவியை அழைத்தார்.
ஒரு காலத்தில் உடல் நிறைய நகையும் நட்டுமாகக் காட்சியளித்த ஜமீன்தார் மனைவியின் கழுத்தில் அந்த ஜமீனின் மிச்ச சொத்தாக தாலி மட்டுமே தொங்கிக் கொண்டு இருந்தது. அதுவும் வறட்டு ( ப்பு) கவுரவத்துக்கு முன் மண்டியிட்டு தாலியே தாலிப் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தது. ஆனாலும் தாலியின் இடத்தை மஞ்சள் துண்டு ஆக்கிரமித்தது . தாலி தனக்கொரு இடத்தை மார்வாடியின் வட்டிக் கடையில் தேடிக் கொண்டது. கமிஷன் செலவுக்குக் காசு வேண்டுமே.
ஒருநாள் கமிஷன் காரில் வந்தது. கூடவே தாசில்தாரும், மாவட்ட அளவை அதிகாரியும், வருவாய்க் கோட்ட அதிகாரிகளும் வந்தனர். அனைவருக்கும் தாலியின் கருணையால் காபி டிபன் முடிந்ததும் வழக்கில் தொடர்புடைய வரப்பு இருந்த இடம் நோக்கி சர்வேயருடன் போனார்கள். அங்குள்ள ஒரு ஆலமரத்தின் நிழலில் அதிகாரிகள் நின்றுகொண்டிருக்க நிலம் அளக்கும் சர்வேயர்கள் கருவிகளுடன் களத்தில் இறங்கினார்கள்.
திடீரென்று சர்வேயர் தரப்பில் இருந்து ஐயோ! என்று சப்தம் வந்தது. வரப்பில் பாம்பு எதுவும் படை எடுத்துவிட்டதோ என்று திரும்பிப்பார்த்த அதிகாரிகளை நோக்கி சர்வேயர்கள் அலறினார்கள். சார்! இங்கு வயலும் இல்லை! வரப்பும் இல்லை! இந்த இடம் வேறு ஒரு சர்வே எண்ணாக ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்சியால் இருபது வருடங்களுக்கு முன்பே விற்கப் பட்டுவிட்டது. அதற்குப் பட்டாவையும் வருவாய்த்துறை வழங்கி இருக்கிறது இதோ அந்த புல. எண் 643/B(A1) என்று எடுத்துக் காட்டினார். இப்போது கமிஷனால் அனுப்பப்பட்ட தாசில்தாரின் கையெழுத்து அந்தப் பட்டாவில் அனைவரையும் பார்த்து சிரித்தது.
ஜமீன்தாரால் இதைத்தாங்க முடியவில்லை. என்னங்கடா விளையாடுறீங்களா என்று கோபத்துடன் கேட்டபடியே அவர் கையில் இருந்த கைத்தடியான என்னை அங்கிருந்த தாசில்தாரை நோக்கி வீசி எறிந்தார். வீசி எறியப் பட்ட நான் தசில்தாரைவிட்டுத் தவறி, அங்கிருந்த ஒரு வாய்க்காலில் போய் விழுந்தேன். அங்கிருந்து நடப்பதைப் பார்க்கும் போது அரசு ஊழியரைத் தாக்க முயற்சி என்று வழக்குப் போடப் பட்டு ஜமீந்தாரை கைது செய்து அழைத்துப் போனார்கள். நான் விட்ட கண்ணீர் நான் மிதந்த வாய்க்காலோடு கலந்து ஓடியது. மெல்ல மெல்ல அந்த வாய்க்கால் என்னை இந்த ஆற்றில் கொண்டு வந்து சேர்த்தது என்று கைத்தடி தனது கதையை முடித்தது.
தாமதமாக வழங்கப் படும் நீதி மறுக்கப் படும் நீதியாகுமென்று சொல்வார்கள். அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு அவர்கள் ஒரு பேட்டியில் இப்படிக் கூறினார். “ இன்றைய நிலையில் புது வழக்குகள் ஏதும் வராமல் இந்தியா முழுதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் பழைய வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளிக்க 300 ஆண்டுகள் ஆகும். அதுவரைக்கும் யாரும் உயிருடன் இருப்பார்களா? அனைத்து த் தரப்பிலும் ஒரே வேகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால்தான் வழக்குகள் தேங்குவதை குறைக்க முடியும் “ என்று கூறினார்.
- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் வாக்குமூலத்தை தவறாக பதிவு செய்து மரணதண்டணை வாங்கிக் கொடுத்த சி.பி.ஐ அதிகாரி, இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தான் வேண்டுமென்றே வாக்குமூலத்தை மாற்றியதாக ஒப்புக் கொண்டது ,
- ஆருஷி என்கிற பெண்ணின் கொலை வழக்கில் அவளது பெற்றோருக்கே ஆதாரங்கள் இல்லாமலே தண்டனை வழங்கிய சி.பி.ஐ நீதிமன்றம்,
- சங்கர ராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டபட்ட அனைவரையும் விடுதலை செய்த புதுவை நீதி மன்றம்,
ஒரே வாரத்தில் வந்த இந்த செய்திகள் அனைத்தும் நமது நீதி அமைப்பை ஒரு சந்தேகக் கண்ணோடு பார்க்க வைக்கின்றன.
அத்துடன் நமது புலனாய்வு அமைப்புகளும் காவல்துறையும் நடந்து கொள்ளும் முறைகளுக்கு இதோ பாண்டிச்சேரியில் நடந்த ஒரு உண்மை நிகழ்ச்சி.
புதுச்சேரி கந்தப்ப முதலியார் வீதி சாலையோரத்தில் வசிப்பவர் மாசிலாமணி (வயது 45). இவர் ஒரு ரிக்க்ஷா தொழிலாளி. மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த வாரம், வீட்டிலிருந்து கோபத்துடன் வெளியே சென்று விட்டார். கணவரைக் காணவில்லை என, அவரது மனைவி அளித்த புகாரின் போரில், ஒதியஞ்சாலை போலீசார் விசாரித்தனர். கடந்த 23ம் தேதி குருசுக்குப்பம் கடற்கரையில் 40 வயதுள்ள ஆண் உடல் கரை ஒதுங்கியது.
போலீசார் உடலைக் கைப்பற்றி, அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து, இறந்தவர் யார் என விசாரித்தனர். சவக் கிடங்கில் அழுகிய நிலையில் வைக்கப்பட்டிருந்த உடலை பார்த்த, மாசிலாமணியின் மனைவி, கணவரின் தோற்றம் இருப்பதாக தெரிவித்தார். இறந்தது மாசிலாமணிதான் என அவரது மனைவியிடம் எழுதி வாங்கிக் கொண்டு, பிரேத பரிசோதனை செய்து, உடலை ஒப்படைத்தனர். அவரது உடல், வம்பாகீரப்பாளையம் சன்னியாசித்தோப்பு சுடுகாட்டில் ஆட்டம் பாட்டத்துடன் அடக்கம் செய்யப்பட்டது. உடல் அடக்கம் செய்த, மறுநாள் அதிகாலை 3 மணிக்கு, கந்தப்ப முதலியார் வீதியில் தூங்கிய உறவினர்களை, ஒருவர் தட்டி எழுப்பினார். தூக்க கலக்கத்தில் எழுந்தவர்கள், சுடுகாட்டில் புதைக்கப்பட்ட, மாசிலாமணி உயிருடன் கண் எதிரே நிற்பதை கண்டு, அலறியடித்து ஓடினர்.
பின்பு, போன மச்சானாய் திரும்பிவந்த மாசிலாமணியிடம் விசாரித்ததில், மனைவியுடன் கோபித்துக் கொண்டு வேளாங்கண்ணிக்கு நடந்து சென்று விட்டதாகவும், தற்போது திரும்பி வந்ததாக தெரிவித்தார். அப்போது தான், வேறு ஒருவரது உடலை அடக்கம் செய்தது தெரிந்தது. அனாதைப் பிணத்தை யாரிடமாவது ஒப்படைத்தால் போதும் அந்த கேஸ் குளோஸ் ஆகிவிடும் என்ற எண்ணத்தில் மற்றும் அவசரத்தில், காவல்துறை உடலை மாசிலாமணினியின் மனைவியிடம் வழங்கி விட்டனர். தற்போது, மாசிலாமணி உயிருடன் திரும்பி வந்ததால், இறந்தது யார் என்று தெரியவில்லை.
இப்படி கேஸ்களை முடித்துவிடும் அவசரத்தில்தான் பல அப்பாவிகள் மீது நீண்டநாள் நிலுவையில் உள்ள வழக்குகள் போடப்படுகின்றன; செய்யாத குற்றத்தை ஒப்புக் கொள்ளும்படி சித்திரவதை செய்யப் படுகின்றனர்; நீதி மன்றமும் புலன் விசாரணையும் தெனாலி ராமனின் நகைச்சுவை மன்றங்களாக ஆகிவிடுகின்றன.
அப்படி சில வேடிக்கை வழக்குகளை சந்திக்கலாம். முதலில் அண்மைக்கால வேடிக்கை புதுவையில் வழங்கப் பட்ட சங்கரராமன் கொலைவழக்கும் அதன் தீர்ப்பும் .
இன்ஷா அல்லாஹ் தொடரும்.
ஆக்கம்: P. முத்துப் பேட்டை பகுருதீன் B.Sc;
உருவாக்கம் : இப்ராஹீம் அன்சாரி.
12 Responses So Far:
கடைசியிலாவது நல்ல தீர்ப்பு வருன் என்கிற நப்பாசையும் நாசமாகப்போக, நல்லதங்காள் கதையையும் துலாபாரம் கதையையும் சோகத்தில் துச்சமெனக் காட்டிவிட்டதே கைத்தடி!
அந்த வழக்கு விபரங்கள் கைத்தடியின் தலைக்குள்ளிருந்து வெளிவரும் காட்சிகளை வாசிக்கையில் பின்னணியின் மாடர்ன் தியேட்டர்ஸ்காரங்களோட மர்மக்காட்சி இசையை மானசீகமாகக் கேட்டேன்.
வாய்க்கால், நிலமாக விற்கப்பட்டுவிட்டது நிகழ்கால நாட்டுநடப்பும்தான்.
சூப்பர் கதை. கதைதானா?
//சூப்பர் கதை. கதைதானா?// hahahaha. மோப்பம் பிடித்துத்தான் கேட்கிறீர்களா? காத்திருங்கள்.
இது ஒரு காரை வீட்டுடன் தொடர்புடையது. காரைவீடு அதிரையின் காரை வீடல்ல.
இப்போ நான் காரை விடுகிறேன்.
கைத்தடிங்க எவ்வ்வ்வ்ளோ இம்பார்டன்ட் ! இந்த பதிவில் !
சுவராஸ்யம் எகிர்கிறது...!
இன்னும் சில கைத்தடிங்க இருக்கு... போட்டுக் கொடுப்பதிலும் நல்லது நிகழாமல் இருக்க குறுக்கி விழுவதிலும் !
:)
கொஞ்சம்ம் நேரம் வித்தியாசமாக அரசரியல் பேசப் போய், அது அப்படியே உருமாறி இன்று.. கலக்கலாக செல்கிறது... அப்போ நாளை !?
காக்கா,
காரியங்களைக் கொண்டு யூகிக்கவில்லை, இது கதையாகமட்டும் இருக்க வாய்ப்புக் குறைவு என்று.
தங்களின் காட்சிகளை விவரிக்கும் கைங்கர்யத்தால் கொக்கியிட்டு இழுக்கப்பட்டு அப்படி ஒரு சந்தேகத்தைக் கேட்டேன்.
மிதப்புக்கட்டைத் துடிப்பதைப் பார்த்தால் அடுத்தடுத்த வாரங்களில் மீன் கரையிழுக்கப்படும் என்பது எதிர்பார்ப்பு.
தம்பி சபீர் அவர்களின் அன்பான கருத்து
//அடுத்தடுத்த வாரங்களில் மீன் கரையிழுக்கப்படும் என்பது எதிர்பார்ப்பு.//
அடுத்த வாரம் மீன் அல்ல; மீனே கூடாது என்பவர்கள் பற்றி. இப்போது கைத்தடியின் கதை இத்துடன் முடிந்தது.
அடுத்த வாரம் கையில் தடி வைத்திருப்பவர்கள் பற்றி -
அந்தத் தடியால் விளைந்த கொலை பற்றி-
அந்தத் தடியை தற்காலிகமாக வைத்துவிட்டுத் தப்பித்தவர்கள் பற்றி-
அந்த தடியால் அடித்துப் பறிக்கப் பட்ட நீதியின் தீர்ப்பு பற்றி-
அதைத் தடி என்றும் சொல்லலாம் தண்டம் என்றும் சொல்வார்கள்.
இந்த தண்டம் ஒருவனது உயிருக்கு கண்டமான கதை . நீதியும் இந்த தண்டத்துக்கு தலை வணங்கிய கதை.
உங்களைப் போல உயர்ந்த பட்ச யூக அறிவு கொண்டவர்கள் உடனே யூகிக்கலாம்.
ஒன் மினிட் ! புதுவையிலிருந்து ஒரு போன் கால்.
ரொம்பச் சுவராஸ்யம் மிகுந்திருக்கு!
2→3 தலைமுறை வரை இழுத்தடிக்கனும், அப்படியே தீர்ப்பும் சம்பந்தமில்லாமல் இருக்கனும் என்று வழக்கு வாத்தியார்மார்கள் படிச்சு கொடுப்பாங்களா காக்கா?
காக்கா புதுவை 'கால்' புதிரை அவிழ்ததா ? புதைக்கப்பட்டதா ?
கூச்சப்படாம ஊர் பக்கம் வாங்க காக்கா !... டிசம்பர் மாதம் வேளைகள் அதிகம் இருகே ! :)
//ஒரே வாரத்தில் வந்த இந்த செய்திகள் அனைத்தும் நமது நீதி அமைப்பை ஒரு சந்தேகக் கண்ணோடு பார்க்க வைக்கின்றன.//
படைத்தவனின் சட்டங்களை ஏற்க மறுக்கும் அறிவிலிகளுக்கு தங்களின் குறுமதியினால் இயற்றப்பட்ட சட்டத்தின் குறைபாடுகளே இதற்கெல்லாம் காரணம் என விளங்கவா போகிறது. அப்படியே தெரிந்தாலும் அவர்களின் வறட்டுப் பிடிவாதம்தான் அவர்களை அவ்வாறு செய்யச்சொல்கிறது.
''தொலஞ்சது என்னை புடிச்ச சனியன்''னு செத்துப்போன கணவனை குலிலே போதச்சுட்டு ஊடுவந்து' நிம்மதியா' படுப்போம்னு படுத்த மனைவிக்கு செத்துப்போன கணவனே வுயிரோடஎளும்பி வந்து ஊட்டு கதவை தட்டுனது அவளோடகெட்ட காலம்.
//மாசிலாமணி உயுரோட வந்ததால் இறந்தவர் யார் என்றுதெரியவில்லை//உயுருடன் வந்தது என் கணவர் மாசிலாமணி அல்ல;இறந்தவரே என் கணவர்!கொன்றவர் யார்?''என்று கண்டுபிடிக்கவேண்டும்''என்று மாசிலாமணியின் மனைவி போலீஸில் புகார்செய்துள்ளார்.
//காக்கா புதுவை 'கால்' புதிரை அவிழ்ததா ? புதைக்கப்பட்டதா ?//
Thambi Abu Ibrahim!
புதுவையில் கால் பதித்து இருக்கிறோம். நீதி அங்கே புதைக்கப் பட்டு கல் ஊன்றப் பட்டு இருக்கிறது.
அலசுவோம் அந்த வழக்கை.
அதிரையில் தளத்தில் கருத்திடாத பல படித்தவர்கள் இத்தொடரை படித்தவர்கள் என்று இன்று அறிந்தபோது மிக்க மகிழ்ந்தோம்.
கதையின் முடிவு நன்றாக இருந்ததாக சொன்னார்கள். நன்றாக என்றால் Unexpected and Intresting.
Post a Comment