Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 20 [ஜைனப்(ரலி)] 16

அதிரைநிருபர் பதிப்பகம் | December 04, 2013 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...!

முந்தைய பதிவில் அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை தழுவியதனால் அவர்கள் பட்ட கஷ்டங்கள் பற்றி அறிந்து அதன் மூலம் நாம் படிப்பினைகளை அறிந்து கொண்டோம். இந்த வாரம் நபி(ஸல்) அவர்களின் அருமை மகளார் ஜைனப்(ரலி) அவர்களின் தியாகம் பற்றி நாம் அறிந்திடாத வரலாற்றுச் செய்திகளையும், அதன் மூலம் நமக்கிருக்கும் படிப்பினைகளையும் அறிய முயற்சி செய்யலாம். இன்ஷா அல்லாஹ் !.

உயிரினும் மேலான உத்தம இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களுடைய நான்கு மகள்களில் மூத்த மகள்தான் ஜைனப்(ரலி) அவர்கள். உம்மு குல்தும்(ரலி), ருகைய்யா (ரலி) பாத்திமா(ரலி) ஆகியோர் மற்ற மூன்று பெண்மக்கள். இவர்கள் நால்வரும் அன்னை ஹதீஜா(ரலி) அவர்களுக்கு பிறந்தவர்கள்.

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரம் செய்வதற்கு முன்பே தம் மூத்த மகள் ஜைனப்(ரலி) அவர்களை அபுல் ஆஸ் என்பவருக்கு திருமணம் முடித்துக் கொடுத்திருந்தார்கள். அபுல் ஆஸ் அவர்கள் அன்னை ஹதீஜா(ரலி) அவர்களின் சகோதரியின் மகனாவார். ஜைனப்(ரலி) அவர்களின் கணவர் பண்பானவர், நல்லொழுக்கமானவர் என்று வரலாற்றில் அறியப்பட்டவர். இஸ்லாத்தில் ஒருவர் எவ்விதமான துன்பங்களையும் சகித்துக் கொண்டு பொறுமையுடன் வாழ்ந்து அந்த துன்பங்களிலுருந்து மீண்டு, தான் தழுவிய தூய இஸ்லாம் தன்னுடைய சொந்தத்திற்கும், கணவன், மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஏக்கம் உள்ளவர்களுக்கு அண்ணலாரின் அருமை மகளார் ஜைனப் (ரலி) அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த பின் வரும் உருக்கமான சம்பவங்கள் நல்லதொரு படிப்பினை.

தன் மகள் ஜைனப்(ரலி) அவர்களுக்கும் அபுல் ஆஸுக்கும் திருமணம் முடிந்த சில வருடங்களில் நபி(ஸல்) அவர்களுக்கு நபித்துவம் அருளப்படுகிறது. அந்த சந்தர்ப்பத்தில் அபுல் ஆஸ் அவர்கள் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்றிருந்தார். நபி(ஸல்) அவர்கள் தனக்கு அருளப்பட்ட இஸ்லாத்தை எத்தி வைக்கிறார்கள், முதலில் மனைவி ஹதீஜா(ரலி), பின்னர் மகள்கள் ஜைனப்(ரலி), உம்மு குல்தும்(ரலி) ருகைய்யா(ரலி) ஃபாத்திமா(ரலி) ஆகியோர் இஸ்லாத்தை ஏற்கிறார்கள். இதில் இஸ்லாத்தை ஏற்ற ஒரே காரணத்திற்காக உம்மு குல்தும்(ரலி) ருக்கையா(ரலி) ஆகியோரை அவர்களின் கணவன்மார்கள் விவாகரத்து செய்தனர். அது ஒரு மிக உருக்கமான வரலாற்றுச் சம்பவம். இந்த தருணத்தில் நபி(ஸல்) அவர்களின் மூத்த மகள் ஜைனப்(ரலி) அவர்கள் வெளியூர் சென்றிருந்த தன் கணவனின் வருகைக்காக காத்திருந்தார்.

வியாபாரத்தை முடித்து விட்டு வீடு திரும்புகிறார் அபுல் ஆஸ். வீட்டில் தன் மனைவி இஸ்லாத்தை ஏற்ற செய்தியை அறிந்து கொள்கிறார். ஜைனப்(ரலி) அவர்கள் தன் கணவனைப் பார்த்து “என்னுடைய தந்தை இறைத்தூதராகி விட்டார்கள், அல்லாஹ்விடமிருந்து வஹி அருளப்பட்டது, என்னுடைய தந்தையின் மூலம் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன், நீங்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று அன்பாக ஒரு கோரிக்கையை வைத்தார். அதற்கு அபுல் ஆஸ் “ஒரு பெண்ணுடைய பேச்சைக் கேட்டு நான் இஸ்லாத்தை ஏற்றால் என்னை என் சமூகம் கேவலமாக பேசும் என்பதற்காக நான் அஞ்சுகிறேன், நான் இஸ்லாத்தை ஏற்க மாட்டேன், அதே நேரம் உங்கள் தந்தை உண்மையாளர்” என்று சொன்னார். தன் கணவர் இஸ்லாத்தை ஏற்பார் என்று மிக ஆவலுடன் எதிர்ப்பாத்திருந்த  அண்ணல் நபி(ஸல்) அவர்களின் பாசம் நிறைந்த அருமை மூத்த மகள் ஜைனப்(ரலி) அவர்களுக்கு மிகுந்த வேதனையளித்தது. இவர்கள் இருவரின் வாழ்வும் சிறிது காலம் மக்காவில் சென்றது. பின்னர் தான் காஃபிர்களோடு திருமண உறவு இல்லை என்ற சட்டம் மதினாவில் இறங்கியது.

மக்காவில் மார்க்க பிரச்சாரம் செய்ய பல இன்னல்கள் துன்பங்களைச் சகித்துக் கொண்டிருந்த அந்த காலகட்டத்தில் அல்லாஹ்வின் கட்டளைப்படி நபி(ஸல்) அவர்கள் மக்காவை விட்டு மதினாவுக்கு ஹிஜ்ரத் செய்கிறார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் தம் குடும்பத்தோடு மதீனாவுக்கு செல்லத் தயாராகிறார்கள், நபி(ஸல்) அவர்களின் மூத்த மகள் ஜைனப் (ரலி) அவர்கள் “என் அருமைத் தந்தையே நான் என்ன செய்ய, நானும் உங்களோடு வருகிறேனே” என்று மிகுந்த ஏக்கத்துடன் சொந்தங்களுடன் ஒன்றாக இருக்க வேண்டும் என்று மிகுந்த ஆவலுடன் தந்தையோடு செல்வதா? கணவனோடு இருப்பதா? என்ற குழப்ப எண்ணத்துடன் தன் தந்தையிடம் வினவினார். அபுல் ஆஸ் நல்லவர் என்பதாலோ என்னவோ நபி(ஸல்) தன் அருமை மகளிடம் “நீ உன் கணவனோடு இருந்துவிடு மகளே” என்று கட்டளையிட்டார்கள். தன் தந்தையின் கட்டளையைப் பொறுமையோடு ஏற்றுக் கொண்டார்கள் ஜைனப்(ரலி). தாயில்லாத ஜைனப்(ரலி) அவர்களுக்கு தாய்க்கு தாயாக பாசம் காட்டி கொண்டிருந்த தந்தையான இறைத்தூதர், உடன் பிறந்த சகோதரிகள், இன்னும் பிற சொந்தங்கள் தன்னை விட்டுவிட்டு ஹிஜ்ரத் செய்கிறார்களே என்ற பரிதவிப்பு, பிரிவின் துயரம் தியாகத் திருமகள் ஜைனப்(ரலி) அவர்களுக்கு நிச்சயம் இருந்திருக்கும். ஆனால் இஸ்லாத்தை ஏற்ற ஒரே கரணத்திற்காகவும், தன் தந்தை நபி(ஸல்) அவர்கள் தனக்கு ஒன்று சொன்னால் அது நிச்சயம் தனக்கு நன்மை தருவதாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் மக்காவில் தன் கணவனோடு வாழ்ந்து வந்தார்கள்.

பின்னர் சில காலம் கழித்து பத்ரு யுத்தம் நடைபெறுகிறது. அதில் காஃபிர்களுடைய அணியில் ஜைனப்(ரலி) அவர்களின் கணவர் அபுல் ஆஸ் உள்ளார். பத்ருப் போரின் வெற்றியின் போது அபுல் ஆஸ் கைது செய்யப்படுகிறார். அபுல் ஆஸ் கைது செய்யப்படுள்ளார் என்ற செய்தி நபி(ஸல்) அவர்களுக்கும், ஜைனப்(ரலி) அவர்களுக்கும் வந்தடைகிறது. ஒரு இக்கட்டான சூழ்நிலை நபி(ஸல்) அவர்களுக்கு ஏற்படுகிறது. தன்னுடைய மகளின் கணவர் தன்னை எதிர்த்து போரிட வந்து கைது செய்யப்பட்டுள்ளார் என்று. இது போல் ஜைனப்(ரலி) அவர்களுக்கும் ஓர் தர்ம சங்கடமான நிலை, இறைத்தூதர் தன் தந்தை நபி(ஸல்) அவர்களை எதிர்த்து போரிட தன் கணவர் சென்று கைது செய்யப்பட்டுள்ளார்களே என்ற வேதனை. போரில் கைது செய்யப்பட்டவர்களை நபி(ஸல்) அவர்கள் பரிகாரம் பெற்று விடுதலைச் செய்கிறார்கள் என்ற செய்தி ஜைனப்(ரலி) அவர்களுக்கு வருகிறது. உடனே தன் தாய் அன்னை ஹதீஜா(ரலி) அவர்கள் தனக்காக விட்டுச் சென்ற அழகிய மணிமாலையை கழுத்தில் இருந்து கழட்டி, அபுல் ஆஸ் அவர்கள் சகோதரர் ஒருவரிடம் கொடுத்து, “இதை பரிகாரமாக என் தந்தை நபி(ஸல்) அவர்களிடம் கொடுத்து என் கணவரை மீட்டு வாருங்கள்” என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.

அபுல் ஆஸ் அவர்களின் சகோதரர் சகீக் இப்னு ரபிஹ் என்பவர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று அந்த மணிமாலையைக் கொடுத்து ஜைனப்(ரலி) இதை கொடுத்து அவரின் கணவர் அபுல் ஆஸை விடுதலை செய்ய கோரினார் என்று சொன்னார். அந்த மணிமாலையைப் பார்த்த அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அழ ஆரம்பித்து விட்டார்கள், “இது என் அருமை மகள் ஜைனப்(ரலி) அவர்களுக்கு என் மனைவி ஹதீஜா(ரலி) கொடுத்த மாலை” என்று சொல்லி கண்ணீர் விட்டு அழுதார்கள். என்ன தான் மிகப்பெரிய தலைவராக இருந்தாலும், நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் மகளின் கணவரை உடனே விடுதலை செய்யவில்லை. 

தன் தோழர்களிடம் அபுல் ஆஸின் விடுதலை தொடர்பாக கேட்கிறார்கள், “நாம் ஒரு சிலரை பரிகாரம் இல்லாமல் விடுதலை செய்கிறோம், இந்த அபுல் ஆஸை அது போல் விடுதலை செய்யலாமா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி தோழர்கள் சம்மதித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அபுல் ஆஸை வரவழைத்து “இந்த மாலை ஹதீஜா(ரலி) அவர்களுடையது, என் அருமை மகள் ஜைனப்(ரலி) அவர்களிடம் இருக்க வேண்டியது, எனக்கு என் மகளைத் திருப்பி அனுப்புங்கள்” என்று கூறி அபுல் ஆஸை விடுதலை செய்தார்கள்.

தன் தந்தையின் கட்டளை தன் கணவனை விட்டு விட்டு வர வேண்டும் என்று. மிகுந்த மன பாரத்துடன் மக்காவைவிட்டு தன்னுடைய பெண் குழந்தை உமாமா(ரலி) அவர்களைச் சுமந்து கொண்டு மதீனா வந்தடைந்தார்கள். சில காலம் சென்றதும், நபி(ஸல்) அவர்களிடம் ஜைனப்(ரலி) அவர்களைத் திருமணம் செய்ய ஒரு சில நபித் தோழர்கள் விருப்பம் தெரிவித்தனர், ஆனால் ஜைனப்(ரலி) அவர்கள் விரும்பவில்லை. காஃபிராக உள்ள தன் கணவர் இஸ்லாத்திற்கு வரவேண்டும் என்பதில் முழு நம்பிக்கையுடன் இருந்தார்கள். ஒரு நாள் ஒரு காஃபிர் வியாபாரக் கூட்டம் மதினாவை கடந்து செல்கிறது, அவர்கள் இஸ்லாமிய எதிரிகள் என்பதால், அப்போது பொருட்களுடன் அவர்களைச் சிறைப்பிடிக்கிறார்கள் நபித்தோழர்கள், அவர்கள் அனைவரும் கைது செய்து மதீனா அழைத்து வருகிறார்கள். அல்லாஹ்வின் நாட்டம் அவர்களிடமிருந்து தப்பியோடிய அபுல் ஆஸ் அவர்கள் ஜைனப்(ரலி) அவர்களிடம் அடைக்கலம் தேடுகிறார். “மக்காவில் உள்ள நிறைய மக்களுடைய சொத்துக்கள் அதில் உள்ளது, எப்படியாவது என்னுடைய பொருளாதாரத்தை காப்பாற்றித் தந்து விடுங்கள்” என்று அபுல் ஆஸ் அவர்கள் ஜைனப்(ரலி) அவர்களிடம் கோரிக்கை வைத்தார்கள். 

உடனே தன் பாசம் நிறைந்த தந்தை நபி(ஸல்) அவர்களிடம் “என் கணவரின் சொத்தை நீங்கள் திருப்பி கொடுக்க முடியுமா” என்று தயக்கத்துடன் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “ அந்த விவகாரத்தில் முடிவு செய்ய எனக்கு உரிமை இல்லை என்று சொல்லிவிட்டு” நபித் தோழர்களிடம் கேட்கிறார்கள் “ஜைனப்(ரலி) தன் கணவரின் சொத்தைத் திருப்பிக் கேட்கிறார்கள் நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்” என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள் “ ஜைனப்(ரலி) அவர்கள் யாருக்கு பாதுகாப்பு கொடுத்தார்களோ அவர்களுக்கு நாமும் பாதுபாப்புக் கொடுப்போம்” என்று நபித்தோழர்கள் பதில் சொல்ல, அபுல் ஆஸை விடுதலை செய்து சொத்துக்கள் அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்தார்கள் நபி(ஸல்) அவர்கள். இந்த சந்தர்ப்பத்தில் ஜைனப்(ரலி) அவர்கள் அபுல் ஆஸை அழைத்து “இன்னும் நீங்கள் இஸ்லாத்திற்கு வர மாட்டீர்களா?” என்று மிகுந்த ஏக்கத்துடன் கேட்டார்கள். “இல்லை” என்ற பதில் மட்டும் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டுச் சென்று விட்டார் அபுல் ஆஸ். தன் கணவர் இஸ்லாத்தை ஏற்பார் என்று எதிர்ப்பார்த்துக் காத்திருந்தார் ஜைனப்(ரலி) அவர்களுக்கு பெருத்த ஏமாற்றமும் மன வருத்தமும் ஏற்பட்டது.

மக்காவில் உள்ளவர்களின் பொருட்களையும் சொத்துக்களையும் ஒப்படைத்து விட்டு, சில நாட்களுக்கு பிறகு அபுல் ஆஸ் அவர்கள் மதீனா திரும்பி வந்து, “வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை, நபி முஹம்மது அல்லாஹ்வின் இறைத்தூதர் என்று சாட்சி கூறுகிறேன்” என்று கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றார். இதனை வாசிக்கும் நம் கண்கள் கலங்குகிறதே, ஆனால் காஃபிராக இருந்த கணவர் இஸ்லாத்தை ஏற்ற அந்த தருணத்தில், பல வருடங்கள் அந்த சந்தர்பத்திற்காக காத்திருந்த அந்த பொருமைசாலி ஜைனப்(ரலி) அவர்களின் மகிழ்ச்சி நிச்சயம் எல்லையற்ற மகிழ்ச்சியாக இருந்திருந்தது. சில மாதங்கள் இருவரும் சந்தோசமாக வாழ்ந்தார்கள், அபுல் ஆஸ்(ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற ஒரு வருடத்திற்குள் ஜைனப்(ரலி) அவர்கள் இவ்வுலகைவிட்டு பிரிந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம் என்னவென்றால். இறைத்தூதரின் மகளாக இருந்து, இஸ்லாத்தை ஏற்று, பல இன்னல்களை சந்தித்து, தன் தந்தை படும் கஷ்டங்களை சகித்துக் கொண்டு,  இறைத்தூதரான தன் தந்தைக்கு தன் கணவனால் சங்கடங்கள் ஏற்பட்டுள்ள சூழலிலும், தன்னோடு வாழ்ந்து வரும் கணவரும் இஸ்லாத்தை ஏற்க வேண்டுமே என்ற ஏக்கத்தோடு, நம்பிக்கையோடு இருந்தார்களே அந்த பொருமைசாலி ஜைனப்(ரலி) அவர்கள். அவர்களிடம் இருந்ததைப் போன்று நம் குடும்பத்தவர், தாய், தந்தை, கணவன், மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகள், நண்பர்கள், சொந்தங்கள் ஆகியோர் ‘இணைவைப்பு’, ‘பித் அத்’தான காரியங்களிலிருந்து விடுபட்டு நேர் வழிக்கு எப்போது வருவார்கள்? என்ற கவலை ஏக்கம், நம்மிடம் உள்ளதா?

தன் கணவர் தொழுகை இன்னும் ஏனைய இபாத்துக்கள் ஏதும் இல்லாதவராக உள்ளாரே என்று கவலைப்படாத மனைவிமார்கள், ஜைனப்(ரலி) அவர்களின் இந்த சம்பவங்களை நிச்சயம் அறிய வேண்டும். தன் கணவர் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், எனக்கு தேவை பொருளாதாரம், அவர் சம்பாத்தியம் ஹலாலோ ஹராமோ, அது எனக்கு தேவையில்லை, என்றில்லாமல், அப்படிப்பட்டவர்கள் தொழுகை மற்றும் இபாதத்துக்களை பேணுபவராக இருக்க வேண்டும், அவருடைய சம்பாத்தியம் ஹலாலாகமட்டுமே இருக்க வேண்டும் என்று து ஆ செய்யும் மனைவிமார்கள் எத்தனைப் பேர் நம்மிடையா இருக்கின்றனர் என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

யா அல்லாஹ்! அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.

தொடரும்....
M தாஜுதீன் 

16 Responses So Far:

sabeer.abushahruk said...

அரிதான ஹதீஸ்களையும் அதன்மூலம் இஸ்லாமிய வாழ்க்கையின் பலதரப்பட்ட பரிமாணங்களையும் சுத்திக்காட்டி படிப்பினைகளைத் தந்துதவும் தம்பி தாஜுதீனுக்கு ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.

sabeer.abushahruk said...

அரிதான ஹதீஸ்களையும் அதன்மூலம் இஸ்லாமிய வாழ்க்கையின் பலதரப்பட்ட பரிமாணங்களையும் சுட்டிக்காட்டி படிப்பினைகளைத் தந்துதவும் தம்பி தாஜுதீனுக்கு ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.

sabeer.abushahruk said...

தம்பி தாஜுதீன்,

ஒரு நெருடல்.

ஜைனப் (ரலி) அவர்கள் தம் தந்தையின் சொல்படி கனவர் அபுல் ஆஸ்ஸை மக்காவில் விட்டுவிட்டு மதினாவில் வாழ்ந்த காலங்களில் தலாக் சொல்லப்படாமல் வாழ்ந்தார்களா?

ஆம் எனில், தலாக் சொல்லப்படாத ஜைனப்(ரலி) அவர்களை மணந்துகொள்ள நபித்தோழர்கள் விருப்பம் தெரிவித்தது முறையா?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

சபீர் காக்கா,

ஜைனப்(ரலி) அவர்கள் கணவர் இஸ்லாத்தில் இல்லை என்பதால் அவரிடம் தலாக் பெற்று பின்னார் அவரை நாம் திருமணம் முடிக்கலாம் என்ற எண்ணத்தில் சில நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டிருக்கலாம் என்று எடுத்துக் கொண்டால் குழப்பம் இல்லை.

ஜைனப்(ரலி) அவர்கள் தன் கணவர் இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்று விரும்பினார்கள் என்பதும், காஃபிர்களைத் திருமணம் உறவு தடை என்ற சட்டம் பின்னர் மதீனாவில் வந்தது என்பதும் தான் கவனிக்கப்படவேண்டிய தகவல்.

Ebrahim Ansari said...

//தன் கணவர் தொழுகை இன்னும் ஏனைய இபாத்துக்கள் ஏதும் இல்லாதவராக உள்ளாரே என்று கவலைப்படாத மனைவிமார்கள், ஜைனப்(ரலி) அவர்களின் இந்த சம்பவங்களை நிச்சயம் அறிய வேண்டும். தன் கணவர் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், எனக்கு தேவை பொருளாதாரம், அவர் சம்பாத்தியம் ஹலாலோ ஹராமோ, அது எனக்கு தேவையில்லை, என்றில்லாமல், அப்படிப்பட்டவர்கள் தொழுகை மற்றும் இபாதத்துக்களை பேணுபவராக இருக்க வேண்டும், அவருடைய சம்பாத்தியம் ஹலாலாகமட்டுமே இருக்க வேண்டும் என்று து ஆ செய்யும் மனைவிமார்கள் எத்தனைப் பேர் நம்மிடையா இருக்கின்றனர் என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.//

நச் . நறுக்கென்று கேட்கப்பட்டிருக்கும் கேள்வி. பலர் பதிலை தேடிக் கொண்டு இருப்பார்கள்.

sabeer.abushahruk said...

நன்றி தாஜுதீன்.

இருப்பினும் அடுத்தடுத்த அத்தியாயங்களில் இப்படிப்பட்ட சந்தேகம் எழ வாய்ப்பின்றி எழுதவும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நபிகள் (ஸல்) அவர்களின் மகளார் பொறுமைசாலி ஜைனப்(ரலி) அவர்களிடம் இருந்ததைப் போன்று நம் குடும்பத்தவர், தாய், தந்தை, கணவன், மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகள், நண்பர்கள், சொந்தங்கள் இணைவைப்பு, பித் அத் தான காரியங்களிலிருந்து விடுபட்டு நேர் வழிக்கு எப்போது வருவார்கள் என்ற கவலை ஏக்கம், நம்மிடமும் வரவேண்டும்.

ஜசாக்கல்லாஹ் ஹைர்.

adiraimansoor said...

///தன் கணவர் தொழுகை இன்னும் ஏனைய இபாத்துக்கள் ஏதும் இல்லாதவராக உள்ளாரே என்று கவலைப்படாத மனைவிமார்கள், ஜைனப்(ரலி) அவர்களின் இந்த சம்பவங்களை நிச்சயம் அறிய வேண்டும். தன் கணவர் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், எனக்கு தேவை பொருளாதாரம், அவர் சம்பாத்தியம் ஹலாலோ ஹராமோ, அது எனக்கு தேவையில்லை, என்றில்லாமல், அப்படிப்பட்டவர்கள் தொழுகை மற்றும் இபாதத்துக்களை பேணுபவராக இருக்க வேண்டும், அவருடைய சம்பாத்தியம் ஹலாலாகமட்டுமே இருக்க வேண்டும் என்று து ஆ செய்யும் மனைவிமார்கள் எத்தனைப் பேர் நம்மிடையா இருக்கின்றனர் என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.///

மாஷா அல்லாஹ் நமதூரை போன்ற ஊர்களில் வாழும் பெண்மணிகள் பெரும்பாலும் இஸ்லாமிய மாகூலில் வளர்ந்து வருவதால் பெரும்பாலான பெண்களிடம் மேலே சொல்லப்பட்ட விஷயங்கள் அவர்கள் மனதில் இருக்கத்தான் செய்கின்றன. சரியான இஸ்லாம் எந்த பெண்மனிகளுக்கு போய் சேரவில்லையோ அவர்கள் வேண்டுமானால் உங்கள் கேள்விக்குறிய நாயாகியாக இருக்கலாம் மற்றபடி என் புருஷந்தான் எனக்கு மட்டும்தான் என்ற கருத்துமட்டுமில்லாமல் தன் புருஷன் நேர்வழியில் சம்பாதித்து தருவதையே பெரும்பாலும் விரும்புவார்கள்

தான் தொழுகையில் பொடுபோக்காக இருக்கும் பெண்மனிகள் தொழுகை விசயத்தில் கணவனை மட்டுமல்ல குழந்தைகளையும் கண்டு கொள்ளமாட்டார்கள்

அதுமட்டும் அல்லாமல் தற்பொழுது தனது பிள்ளைகளுக்கு தொழுகை போனாலும் பரவாயில்லை நல்ல தறமான படிப்பை கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் லாரல் போன்ற கல்விக்கூடங்களில் சேர்த்து நேரம் குறிக்கப்பட்ட தொழுகைகளை வீனாக்குகின்றார்கள் அங்கு படிக்கும் மாணவர்களுக்கு ஜும்மா தொழுகைகள் கூட கிடைபப்தில்லை என்பது கண்ணீர் வடிக்கும் செயளாகும்.

பள்ளி பருவத்தில் தொழுகையைவிடுபவர்கள் அவர்கள் வளர்ந்தபிறகும் தொழுகையில் ஈடுபாடுகள் குறைவாகவே இருக்கும் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை

படிக்கவேண்டிய இஸ்லாமிய அடிப்படை கல்வி படிக்க தவறும்போது அது எப்படி வாழ்க்கையில் ஒரு அங்கமாக திகழும் அல்லாஹ் பாதுகாக்கவேண்டும்

இந்த தவறை நம் பெண்மனிகள் உள்பட அறிந்தே செய்கின்றனர் என்பது சிந்திக்க வேண்டிய கட்டாயமாகின்றது


sabeer.abushahruk said...

"Like"
For mansour's smashing comment.

மன்சூர் கோபிக்கும் முன் யாராவது மேலே உள்ள என் கருத்தைத் தமிழாக்கம் செய்து என்னைக் காப்பாற்றவும் :-)

sabeer.abushahruk said...

மன்சூர்,

ஃபாத்திமா (ரலி)யின் கண்கள் இரண்டும் ஜைனப் (ரலி) கண்கள் இரண்டும் மதினாவில் சந்தித்துக் கொண்டதுபோல்; உங்கூட்டம்மா கண்கள் இரண்டும் எங்கூட்டம்மா கண்கள் இரண்டும் சந்தித்துக் கொண்டதாக அறிகிறேனே, தாமும் அறிந்தீரா?

(இது பதிவுக்குத் தொடர்பில்லாததுன்னு அ.நி. எப்புடீ நீக்குறாங்கன்னு பார்க்கிறேன்)

sabeer.abushahruk said...

சாதா எம் ஹெச் ஜே, , லண்டன் எம் ஹெச் ஜே ஆகிப்போனாரே!!! மேலே உள்ள கமென்ட் எம் ஹெச் ஜே வோடதுதானா அல்லது யாரோ அவர் பெயரில் இட்டதா?

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் ஆங்கிலமாகிப் போனதே (பதிவைத் தொடர்பு படுத்துறோமாம் :-)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பெயரனை பெற்ற இளைஞரே!

ஆல்வேய்ஸ் சாதா & தமிழ் நேச MHJ தான்.

எனது இங்லீசு வரி உங்களை மன்சூராக்கா தாக்காமல் திசை திருப்பி காப்பதற்கே!

கப்பாத்துறதுக்கு, அவசரத்துக்கு ஆங்கிலம் மட்டுமல்ல எதுவுமே அளவோட ஓகே தான். ஒரேடியா பிடிவாதம் இருந்தால் கருப்புக்கொடி நிச்சயம்!

Anonymous said...

// தன் கணவர் எப்படிவேண்டுமானாலும்......././.

இன்றைய தாரங்கள் வேண்டுவது கொழுத்த பொருளாதாரம் கொண்ட ஒருவன்! அவனுக்கு - பெயர் கணவன் அல்லது மாப்பிள்ளை!

சமூகத்தில் ஜொலிப்பையும் பளபளப்பையும் அதுவே கொடுக்கிறது.

பணம் அது எப்படி வந்தது என்ற கேள்விக்கே இட்டமில்லை. திருடினாயா?, மோசடி செய்தாயா? கொலை செய்தாயா? வக்கூப் சொத்துக்களை வீட்டுமனை போட்டு காஸு பண்ணினாயா? நோ ப்ராப்ளம். அதுலே எனக்கு ஒட்டியாணம் தட்டித்தா மாட்டிகிறேன் !

தலுக்கு நடை நடக்க தங்க கொலுசு தா மாட்டிக்கிறேன் !

வெட்டி நடை நடக்க வெள்ளி கொலுசு தா போட்டுக்குறேன்!''. என்று கேட்கும் மனைவிகளே அதிகம். ''இதெல்லாம் தந்தால் கிட்டே வா; இல்லேனா எட்டப் போ'''' என்று சொல்லும் மணையாலும் உண்டு!


S.முஹம்மது பாரூக் அதிராம்பட்டினம்

Yasir said...

மனதை உருக்கும் சம்பவங்கள் நிறைந்த ஹதீஸ்கள்....என்ன செய்தீங்க / என்ன எடுத்து வந்து இருக்கீங்க என்று கேட்கும் மனைவிகள் இம்மாதிரி சம்பவங்களை படித்து படிப்பினை பெற்று மறுமை வாழ்விற்க்கு முக்கியத்துவம் கொடுத்து தாமும் நடந்து தன் துணைவர் பிள்ளைகளையும் தூண்ட வேண்டும்...அல்ஹம்துலில்லாஹ்...தினமும் இடையிலும் உறங்கும் முன்னும் இன்று அனைத்து தொழுகைகளையும் நிறை வேற்றினீர்களா ? என்று கேள்வி கேட்கும் மனைவியை அல்லாஹ் எனக்கு தந்திருக்கின்றான்...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு