அல்லாஹ்வின் திருப்பெயரால்..
முந்தைய பதிவில் மரணத்தை எதிர்ப்பார்த்து வாழ்ந்த நல்லோர்களில் முன்னோடியாக திகழ்ந்த உமர் (ரலி) அவர்களின் வாழ்வின் சில சம்பவங்களை அறிந்து அதன் மூலம் நாம் என்ன படிப்பினை பெறுகிறோம் என்பதை அறிந்தோம், இந்த வாரமும் மரணத்தை எதிர்ப்பார்த்து வாழ்ந்த ஒரு சில நல்லோர்களின் வாழ்வின் ஒரு சில நிகழ்வுகள் அதன் மூலம் நமக்கு என்ன படிப்பினை என்பதை அறியலாம்.
இஸ்லாமிய உலக வரலாற்றை எடுத்துப்பார்த்தால் எண்ணற்ற ஈமானிய நல்லுள்ளங்கள் மரணத்தை எதிர்ப்பார்த்து வாழ்ந்துள்ளார்கள். அபூதர் அல் கிபாரி(ரலி) அவர்கள் என்ற ஒரு சஹாபி இருந்தார்கள். தபூக் யுத்தம் முடிந்து வரும்போது அவருடைய ஒட்டகம் சாய்ந்து விட்டது, அவருடைய துணிமணிகளை எடுத்துக் கொண்டுத் தனியாக சோர்ந்து போய் நடந்து வருகிறார்கள். இவரைப் பார்த்த அண்ணல் நபி(ஸல்) அவர்கள் “அபூதருக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக, தனிமையில் நடக்கிறார், தனிமையில் மரணிப்பார், தனிமையில் மறுமையில் எழுப்பப்படுவார்.” என்று முன் அறிவிப்பு செய்தார்கள். இந்த சஹாபி அவர்கள் அன்றிருந்த ஆட்சியாளர்களிடம் ஸதக்கா தொடர்பான ஒரு மார்க்க விடையத்தில் கருத்து முரண்பட்டு, ஊருக்கு வெளியில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் வாழ்ந்தார்கள். அவருக்கு மரணத்தருவாய் ஏற்பட்டது, அவருடைய மனைவி அழ ஆரம்பிக்கிறார் “அபூதர் மரணிக்கப் போகிறார், யாராவது வெளியில் நடந்துச் செல்கிறார்களா? என்று பார்க்கிறார், யாருமில்லை. அபூதர்(ரலி) அவர்கள் மரணித்தால் அவருடைய ஜனாசாவை யார் அடக்கம் செய்வார்கள் என்ற கவலை இருந்தது அந்த பெண்மணியிடம்.
அபூதர்(ரலி) அவர்கள் அப்போது தன் மனைவியிடம் சொன்னார்கள் “நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன், ஒரு மனிதர் தனிமையில் வாழ்வார், தனிமையில் மரணிப்பார், ஆனால் அவருடைய ஜனாஸாவை அடக்கம் செய்ய ஒரு முஃமீன் கூட்டம் வரும், அவர்கள் அந்த நபருக்கு கஃபனிட்டு அடக்கம் செய்வார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூதர்(ரலி) அவர்கள் தன் மனைவிக்கு ஆறுதல் கூறினார்.
ஒரு சில நேரத்தில் ஒரு பிரயாணக் கூட்டம் (முஸ்லீம்கள்) அபூதர்(ரலி) அவர்கள் வசிக்கும் வீட்டின் திசையில் வந்தார்கள். அபூதர்(ரலி) அவர்களுக்கு ஸகராத்து நெருங்கி விட்டது என்ற செய்தி அறிந்து அவரிடம் நெருங்கி வருகிறார்கள். அபூதர் இன்னும் உயிரோடு தான் உள்ளீர்களா? என்று அந்த முஸ்லீம்கள் கேட்டார்கள். அப்போது அபூதர்(ரலி) அவர்கள் அந்த பிரயாணக் கூட்டத்தாரிடம் சொன்னார்கள் “நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள் ஒருவர் பாலைவனத்தில் மரணிப்பார், அவரை அடக்கம் செய்ய ஒரு கூட்டம் வரும் என்று சொன்னார்கள்.
ஆகவே, நான் அந்த மனிதன், நீங்கள் அந்த பிரயாணக்கூட்டம், தோழர்களே இதுவரை நான் யாரிடமும் ஒன்றும் கேட்டது கிடையாது, எனக்கு ஒரே ஒரு உதவி கேட்கிறேன். எனக்கு ஒரு கஃபன் துணி ஒன்று தாருங்களேன் என்று கேட்டார்கள். ஒரு அன்சாரித் தோழரின் ஆடை கஃபனாக வழங்கப்பட்டது, அபூதர்(ரலி) அவர்கள் மரணிக்கிறார். அந்த பிரயாணக் கூட்ட்த்தில் ஒருவர் (முஸலீம்) அபூதர்(ரலி) அவர்களுக்காக ஜனாஸா தொழுகை. இந்த உலகத்தில் சொத்து சுகம் மட்டுமே தேவை என்று எண்ணாமால், யாரிடமும் எந்த ஒரு தேவையும் கேட்காமல் மரணத்தை எதிர்ப்பார்த்து வாழ்ந்த ஒரு சாதாரண மனிதர் அபூதர் அல் கிபாரி(ரலி) அவர்கள்.
ஸஃது இப்னு ரபிஹ்(ரலி) அவர்கள் மதீனாவில் ஒரு கோடிஸ்வரர், மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வந்த ஒரு கேடீஸ்வரர் அப்துர்ரஹ்மான் இப்னு ஆவ்ப்(ரலி) அவர்களைத் தன் சகோதரனாக ஹிஸ்ரத்துக்குப் பின் ஏற்றுக் கொண்டவர்கள். அவருடைய சொத்துகளில் பாதியை அப்துர்ரஹ்மான் இப்னு ஆவ்ப் (ரலி) அவர்களுக்கு கொடுக்க முன் வந்த ஒரு மிகப்பெரும் செல்வந்தர். உஹதுப் போரில் பங்கெடுத்து சஹீதான ஸஃது இப்னு ரபிஹ்(ரலி) அவர்கள். உஹதுப் போரில் காயம்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார், அப்போது நபி(ஸல்) அவர்களின் தூதுவராக வந்த ஜையித் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள் ஸஃது இப்னு ரபிஹ்(ரலி) அவர்களைச் சந்திக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் நலம் விசாரித்த செய்தியைச் சொன்னார் ஜையித் இப்னு ஸாபித்(ரலி) அவர்கள்.
அப்போது ஸஃது இப்னு ரபிஹ்(ரலி) அவர்கள் கூறினார்கள் ஜையித் இப்னு ஸாபித்தே, “நான் நன்றாக உள்ளேன், நான் சொர்கத்து வாடையை நுகர்ந்து கொண்டிருக்கிறேன், என்று நபி(ஸல்) அவர்களிடம் சொல்லுங்கள். அன்சாரிகளிடம் சொல்லுங்கள் “அல்லாஹ்வின் தூதரின் மேனியில் ஒரு கண் முடி அளவுக்கு ஒரு கீரல் விழாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று கூறி மரணித்தார்கள் ஸஃது இப்னு ரபிஹ்(ரலி) அவர்கள். சுவர்கத்து வாடையை சுவாசித்துக் கொண்டே, அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் உடலாலும் உள்ளத்தாலும் ஏற்படக்கூடாது என்று உறுதியோடு இருந்து மரணத்தை எதிர்ப்பார்த்து வாழ்ந்து மரணித்தவர்கள் ஸஃது இப்னு ரபிஹ்(ரலி) அவர்கள்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தாரிடம் 70 தோழர்களை (ஹாபிழ்களை) அனுப்பி அவர்களுக்கு மார்க்கத்தைக் கற்றுக்கொடுங்கள் என்று அனுப்பினார்கள். ஆனால் அந்த நயவஞ்சகக் கூட்டம் அந்த 70 காரிகளையும் கண்டந்துண்டமாக வெட்டிக் கொன்றார்கள். கொலை செய்யப்படும் முன்பு அந்த 70 காரிக்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். யா அல்லாஹ் எங்களுடைய மரணத்தை எங்கள் நபிக்கு எத்திவைத்து விடு என்று சொல்லிவிட்டு மரணித்தார்கள். சுவர்கத்துக்கு சொந்தகாரர்களான மரணத்தை எதிர்ப்பார்த்து வாழ்ந்த அந்த 70 ஹாபிழ்கள்.
சில சந்தர்பங்களில் நம் சொந்தங்களில் சிலரின் மரணத் தருவாயில் இருக்கும் நிலைய காணும் வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கும், அந்த நேரத்தில் நம் மனதில் பலவிதமான சிந்தனை ஓட்டம் ஓடும். ஆனால் அந்த மனிதனின் கண் பார்வை திருதிருவென உருள ஆரம்பித்து விட்டால், அவரின் உயிரை எடுக்கும் வானவர் கூட்டம் அவர் அருகில் உள்ளார்கள் என்ற எண்ணம் நமக்கு அந்த நேரத்தில் வந்திருக்காது, மூச்சு வாங்குகிறதே என்ற வருத்தம் மட்டுமே இருக்கும், அந்த நபரின் நாவில் தண்ணீரோ அல்லது பாலோ ஊற்றிக் கொண்டிருக்கலாம், மேலும் அந்த நேரத்தில் லாயிலாஹ இல்லல்லாஹ் சொல்லுங்க, லாயிலாஹ இல்லல்லாஹ் சொல்லுங்க என்று வேண்டுமானால் நாம் சொல்லிக் கொடுப்போம். ஆனால் அங்கே மலக்குகளுக்கும் அவருக்குமிடையே நடக்கும் இறுதிப் போராட்டம் அது.
நன்மை செய்தவர்களின் உயிர் கைப்பற்றப்படும்போது ஏற்படும் உரையாடல் பற்றி அல்லாஹ் தன் அருள்மறையாம் இறைமறையில் கூறுகிறான்.
(குஃப்ரை விட்டும்) தூயவர்களாக இருக்கும் நிலையில் மலக்குகள் எவருடைய உயிர்களைக் கைப்பற்றுகிறார்களோ அவர்களிடம்: “ஸலாமுன் அலைக்கும்” (“உங்கள் மீது சாந்தி உண்டாவதாக); நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) கருமங்களுக்காக சுவனபதியில் நுழையுங்கள்” என்று அம்மலக்குகள் சொல்வார்கள். - அல்குர்ஆன் 16:32
ஆனால் உலக ஆதயத்திற்காக அல்லாஹ்வை அஞ்சாமல் தீமை செய்தவர்களின் உயிர் கைப்பற்றப்படும்போது ஏற்படும் உரையாடல் பற்றி அல்லாஹ் தன் அருள்மறையாம் இறைமறையில் கூறும்போது
அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்பவர்களாக இருக்கும் நிலையில், மலக்குகள் அவர்களுடைய உயிர்களைக் கைப்பற்றுவார்கள்; அப்போது அவர்கள், “நாங்கள் எந்தவிதமான தீமையும் செய்யவில்லையே!” என்று (கீழ்படிந்தவர்களாக மலக்குகளிடம்) சமாதானம் கோருவார்கள்; “அவ்வாறில்லை! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நன்கறிந்தவன்; (என்று மலக்குகள் பதிலளிப்பார்கள்.) – அல்குர்ஆன் 16:28
மலக்குகள் நிராகரிப்போரின் உயிர்களைக் கைப்பற்றும் போது நீங்கள் பார்ப்பீர்களானால், மலக்குகள் அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கூறுவார்கள்: “எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்” என்று. - அல் குர் ஆன் 08:50
ஆனால் அவர் என்ன விதமான வாழ்க்கை வாழ்ந்தாரோ, அது போன்றே அவருடைய இறுதி தருணமும் அமையும். அந்த தருணத்தில் மலக்குமார்களின் ஸலாம் நமக்கு கிடைத்தால் நாம் வெற்றி பெற்றவர்களாகுவோம். மரண வேதனையும் அவரை அடந்தே தீரும், நபி(ஸல்) அவர்கள் தங்களின் இறுதி கட்டத்தில் அன்னை ஆயிசா(ரலி) அவர்களிடம் சொன்னார்கள், “நீங்கள் படும் மரண வேதனையில் ஒரு மடங்கு மேல் நான் அந்த வேதனையை அடைகிறேன்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்களுக்கே அந்த மரண வேதனை இருந்தது என்றால் நமக்கு எம்மாத்திரம்? நமக்கான அந்த நேரம் வருவதற்கு முன்னால் நம்மை நாம் மீள் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டியது காலத்தின் அவசியத் தேவை.
யா அல்லாஹ்! அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்....
M தாஜுதீன்
13 Responses So Far:
உயிர் பிரியும் துயரையும் ! அதற்கான ஆயத்தங்களையும் !
உரக்கச் சொல்கிறது...!
நடுங்க வைக்கும் பகுதி. அல்லாஹ் அனைவருக்கும் அருள்வானாக.
மிக உருக்கமான நிகழ்வுகள்!
ஜஸாக்கல்லாஹ் ஹைர்.
Jasakallah khair thajudeen
இறுதி மூச்சு "லாயிலாஹா இல்லல்லஹு முஹம்மதுர்ரசூளுல்லாஹ்"
என்று நம் அனைவரின் மூச்சும் அடங்கட்டும்.
அபு ஆசிப்.
அந்த முடிச்சு!
அது
சம்பவித்துக் கொண்டிருந்தது
அருகிலிருந்து
அவதானித்துக் கொண்டிருந்தேன்
உடல்
கிடத்தி வைக்கப்பட்டு
உயிர்
கொஞ்சம் கொஞ்சமாக
பிடியை இழக்க
அது
சம்பவித்துக் கொண்டிருந்தது
அது
சம்பவித்து முடிவதில்
ஏதோ ஓர்
எதிர்ப்பு இருப்பதாக
என்னால்
உணர முடிந்தது
எனினும்
அது
கால்களின் விரல்களில் துவங்கி
மேல்நோக்கி
கைப்பற்றிக்கொண்டே செல்வதற்கான
அடையாளங்களைக்
காண முடிந்தது
அது
கடந்து சென்ற வழியெல்லாம்
நரம்பு நெகிழ்ந்து அசைவிழக்க
உஷ்ணம்
குறையத் தொடங்குவதைக்
குறிக்கத் தவறவில்லை நான்.
மரணப் படுக்கையில்
பார்வை
பிரத்தியேகமானது என்று
கேள்விப்பட்டிருந்தும்
அந்த வகையான பார்வையை
நான் என்
வாழ்நாளில் கண்டதில்லை
வெற்றான இலக்கில் குத்தி நின்றாலும்
அடையாளம் காண முடியாத பயமும்
அளப்பதற்கரிய ஆசைகளும்
அது
சம்பவித்துக் கொண்டிருப்பதை
அறியாததோர் அப்பாவித்தனமும்
உச்சகட்ட வலியை
அனுபவித்துக்கொண்டிருக்கும்
சுரணையோ இல்லாத நிலையும்
இன்னும்
அலைகளற்ற கடலை
அடிவானம் வரை பார்ப்பது போலும்
ஒரு பார்வை
மூச்சு இழுத்து விடுவதில்
முடிச்சு ஒன்று
விழுவதும் அவிழ்வதுமாகவே
எனக்குப் பட்டது.
ஒரு சில சமயங்களில்
அவிழ்ந்து முடிகிறதோவென
நினைக்க
சட்டென மீண்டும்
முடிச்சு விழ
அது
எதிர்ப்பை விஞ்சி
சம்பவிக்க முயல்வதைக்
காண முடிந்தது
நான்
வெளியேற எத்தனிக்கயில்
என் முகம் நோக்கியப் பார்வையில்
பிரியாவிடையின் சாயல் தெரிய
சன்னமான சப்தத்தோடு
அவிழ்ந்த முடிச்சில்
இரத்த வாடை வீசியதாக ஞாபகம்.
வாயிலைக் கடக்கும்போது
கோஷம் போன்றதொரு
அதிக ஓசையுடனான
அழுகுரலால்
அது
சம்பவித்து முடிந்திருக்கலாம்
என
யூகிக்க முடிந்தது.
-sabeer.abushahruk@gmail.com
//நமக்கான அந்த நேரம் வருவதற்கு முன்னால் நம்மை நாம் மீள் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டியது காலத்தின் அவசியத் தேவை.//
சுத்திகரிப்புச் சோதனை
சுய
சுத்திகரிப்புச் சோதனை
செய்து கொண்டாயிற்றா?
படைப்பின் இயல்பாம்
இச்சைகள் தலைதூக்க
படைத்தவன் வழிகொண்டு
அடக்கியாண்டு விட்டீரா?
சுயநலக் கிருமிகள்
தொற்றுவது இயல்பு
பொதுநல தடுப்பூசியால்
புத்துணர்வு பெற்றீரா?
கற்றைக் கற்றையாய்
காசுபணம் கிறக்கும்
ஏழைக்குப் பகிர்வதில்
எழுமின்பம் சுகித்தீரா?
நாடி நரம்புகள்
நாடுமின்பம் போதை
நரக நெருப்பெண்ணி
நீங்கிச் செல்வதுண்டா?
தீப்புண்ணை மிஞ்சிவிடும்
தீஞ்சொற்கள் சொல்லி
நல்லோரை வதைக்காமல்
நாவடக்கி நவின்றதுண்டா?
வாய்க்கு ருசியாக
வயிற்றுக்குப் பசிக்கும்
நோய்க்குப் பயந்து
நிதானமா யுண்டீரா?
நீந்தும் மேகங்களாய்
பொழுதுகள் கடக்கும்போது
நின்று பொழிந்ததெனச் சொல்ல
ஞாபகங்கள் ஏதுமுண்டா?
வாகன நிறுத்தங்களோ
வாழ்க்கையின் விருத்தங்களோ
எல்லைக் குறிக்கப்பட்டால்
மட்டுமே ஒழுங்கிருக்கும்
குறித்தாயிற்றா?
கூட்டத்தோடு கூட்டமெனில்
கூடிப்போகிறது மனிதம்
ஒற்றையாய் உமது
உண்மை நிலை என்ன?
நினைவிருக்கட்டும்!
படைத்தவன் மேல்
பயமுள்ள எவர்க்கும்
தனிமை என்றொரு
இருப்பே இல்லை!
யா அல்லாஹ்! அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
அஸ்ஸலாமுஅலைக்கும்.
யா அல்லாஹ்! அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
-----------------------------------------------------------------------------
கூட்டத்தோடு கூட்டமெனில்
கூடிப்போகிறது மனிதம்
ஒற்றையாய் உமது
உண்மை நிலை என்ன?
நினைவிருக்கட்டும்!
படைத்தவன் மேல்
பயமுள்ள எவர்க்கும்
தனிமை என்றொரு
இருப்பே இல்லை!
--------------------------------------------------------------------
தாரக மந்திரம்.
அன்புச்சகோதரர் தாஜீதீன்: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
அவர்கள் வாழ்வும் நம்வாழ்வும்! சிந்திக்க வைக்கும், ஈமானை சோதிக்க வைக்கும் தொடர் வாழ்த்துக்கள்!
அஸ்ஸலாமு அலைக்கும்
இந்த பதிவை வாசித்து கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.
ஜஸக்கல்லாஹ் ஹைரா..
Post a Comment