தொடர் : 11
வசந்த சேனை! வட்டமிடும் கழுகு! வாய் பிளந்து நிற்கும் ஓநாய் ! என்கிற வசனங்கள் தமிழகத்தில் பிரபலமானவை. இந்த வர்ணனை, கிழக்கிந்தியக் கம்பெனி என்கிற வணிக நிறுவன வடிவில் வந்து இந்தியாவை கபளீகரம் செய்யத்தொடங்கிய பிரிட்டிஷாருக்கும் பொருந்தும். ஆங்கில நஞ்சு , ஆட்சி என்ற வடிவில் கொஞ்சம் கொஞ்சமாக இந்திய பூமியை ஆட்கொள்ள ஆரம்பித்த நேரத்தில் , வாங்கிய கடனுக்காக, தங்களது இராச்சியங்களை இழந்துகொண்டிருந்த நவாப்களும் எதிர்த்துக் கேட்ட காரணத்துக்காக தூக்கிலடப்பட்டு அவர்கள் ஆண்ட பூமியை தங்கள் வசமாக்கிக் கொண்ட ஆக்ரமிப்பு முறைகளும் தொடர்ந்து கொண்டிருந்த நேரத்தில் தலை நகர் டில்லியில் மொகலாய ஆட்சி வலுவிழந்தாலும் நடந்து கொண்டிருந்தது. ஆங்கில ருசி கண்ட பூனை, மொகலாயர் ஆட்சியையும் மோப்பம் பிடிக்க ஆரம்பித்தது.
இந்த அரசியல் சூழ்நிலையில் டில்லியில் மொகலாயர் ஆட்சியின் வாரிசாக 1837- ல் இந்தப் பதிவின் நாயகன் பகதூர்ஷா ஜாஃபர் அவர்கள் அரியணை ஏறினார். அவுரங்கசீப்புக்குப் பிறகு மொகலாயர் ஆட்சியை மேலும் வலுவானதாக ஆக்கும் ஆற்றல் பெற்ற மன்னர் எவரும் வரவில்லை என்றாலும் மக்களின் மத்தியில் மொகலாய ஆட்சிக்கும் அதன் மன்னர்களுக்கும் இருந்த ஆதரவும் செல்வாக்கும் குறையவில்லை. இந்த நிலைமை ஆங்கிலேயரின் கழுகுக் கண்களை உறுத்தியது. அவர்களின் வஞ்சக குணமுள்ள இரக்கமற்ற நெஞ்சிலும் பிரித்தாளும் கொள்கையிலும் கொடுமையான திட்டங்கள் கருவுற்றன.
இன்றைக்கு முசாபர் பூரிலும் மீரட்டிலும் அலிகாரிலும் அகமதாபாத்திலும் கோத்ராவிலும் எவ்வாறு திட்டமிட்டு இனக்கலவரங்கள் தூண்டப் படுகின்றனவோ அவ்வாறே அன்று ஆங்கிலேயர் ஆட்சியிலும் இந்து – முஸ்லிம் கலவரத்தை தூண்டுவதற்கான தூபம் போடப்பட்டது. மா மன்னர் பகதூர்ஷாவுக்கு எதிராக இந்துக்களைத் தூண்டிவிட்டு டில்லியில் குட்டையைக் குழப்பி ஆட்சி மீனைப் பிடிப்பது ஒன்றே ஆங்கிலேயரின் திட்டம்.
அதற்குச் சான்றாக 1847 –ல் ஆங்கில அரசின் அதிகாரியான கெய்த் என்பவன் தன் மனைவிக்கு எழுதிய ஒரு கடிதம் சரித்திர ஆசிரியர்களின் கண்ணில் பட்டது. அந்தக் கடிதத்தில் அவன் குறிப்பிட்டிருந்ததன் சாராம்சம் என்னவென்றால், “ நாளை பக்ரீத் எனப்படும் ஈத் பெருநாள். முஸ்லிம்கள் மாடுகளை அறுத்து குர்பானி என்கிற பலி கொடுப்பார்கள். இந்துக்கள் மாட்டை தெய்வமாக வழிபடுகிறார்கள். ஆகவே மாடுகளை அறுப்பதை எதிர்த்து இந்துக்களை தூண்டிவிட்டு, அதற்காக இந்துக்கள் கொதித்து எழும் சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறோம். ஆகவே நாளை டில்லியில் இந்து முஸ்லிம் கலவரத்தை எதிர்பார்க்கிறோம். அந்தக் கலவரம் தொடங்கிவிட்டது என்கிற நல்ல செய்தி பகதூர்ஷா உடைய ஆட்சியை சீர்குலைக்க உதவும் கருவி . இதைவைத்து நாங்கள் உட்புகுவோம் “ என்று எழுதி இருந்தான் அந்தக் கொடியவன்.
இந்த கொடிய திட்டத்தை தனது உளவுத்துறை மூலம் அறிந்துகொண்ட மன்னர் பகதூர்ஷா அடுத்த நாள் ஈத் பெருநாள் அன்று ஆடுகளைத் தவிர மாடுகள் எதையும் பலி கொடுக்கக் கூடாது என்று தடை விதித்து வெள்ளையர்களின் எண்ணத்தில் இடிவிழச் செய்தார். ஆங்கிலேயர்கள் டில்லியில் நடத்திக் காட்டவிருந்த நாச நாடகம் நின்று போனதை கெய்த் தனது மனைவிக்கு மீண்டும் குறிப்பிட்டு , எங்களின் எண்ணம் ஈடேறவில்லை. பகதூர்ஷா முந்திக் கொண்டார் என்று எழுதினான். இப்படி ஆங்கிலேயன் தனது சதிவலையை டில்லியை நோக்கி விரிக்கத் தொடங்கினான்.
ஆங்கிலேயர்களின் அடுத்த குறி தான்தான் என்பதை உணர்ந்த மன்னர் பகதூர்ஷா இதுவரை ஆங்கிலேயருக்கு விலைபோன சிற்றரசர்கள், சமஸ்தானங்கள் தவிர எஞ்சி இருந்த மற்றவர்களை இணைத்து இந்தியாவின் சுதந்திரத்துக்கு முதல் குரல் கொடுக்க வேண்டுமென்று தீர்மானித்தார். இதனை முன்னிட்டு மன்னர் பகதூர்ஷாவின் அரசவையிலிருந்து ஒரு பிரகடனம் வெளியிடப் பட்டது.
“இந்திய நாட்டின் இனிய புதல்வர்களே! நம்மிடம் உறுதி இருக்குமானால் எதிரியை நாம் ஒரு நொடியில் அழித்தொழிக்க முடியும். அந்த உறுதியை ஏற்று நமது உயிரினும் மேலான இந்தியத் திருநாட்டையும் அதில் உள்ள எல்லா சமயங்களையும் அவை எதிர்நோக்கியுள்ள அனைத்து ஆபத்துகளில் இருந்தும் காப்போம் “ என்ற அரசின் பிரகடனத்தை மன்னர் வெளியிட்டார். ( Kasim Rizvi – The Great Bahadur Sha Jafer page 117).
அதன் பிறகு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஆங்கிலேயருக்கு எதிரான குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. அதன் விளைவாக மன்னர் பகதூர்ஷா தலைமையில் இந்திய நாட்டின் சுதந்திரம் வேண்டி நின்ற அரசர்கள், நவாப்கள், சிற்றரசர்கள், ஜமீன்தார்கள், சமஸ்தானங்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து , பிரிட்டிஷாருக்கு எதிரான ஒன்றுபட்ட எதிர்ப்புக்கு போர் தொடுக்க திட்டம் வகுக்கப் பட்டது. அந்தத் திட்டத்தை செயல்படுத்த 1857 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி என்று அனைவராலும் தீர்மானிக்கப் பட்டது.
இந்த அமைப்பின் பொது நோக்கம் என்பதே ஆங்கிலேயரை விரட்டி அடிப்பதுதான். இன்றைய அரசியலில் பல கொள்கையுடைய கட்சிகள் ஒன்று இணைந்து ஒரு கூட்டணியாகி ஒரு பொது வேலைத்திட்டத்தில் உடன்படுவதுபோல் ( Common Minimum Program) ஜான்சிராணி லட்சுமிபாய், நானா சாஹிப், தாந்தியா தோப், ஒளத் பேரரசி பேகம் ஹஜ்ரத் மஹால், பீகாரில் இருந்து குவர்சிங்க், மெளலவி அஹமதுல்லாஹ் ஷாஹ், ஹரியானா ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மன்னர்கள் யாவரும் ஒன்றுபட்டு ஒரு பொது வேலைத்திட்டமாக ஏற்றுக் கொண்டதை தனது எரிமலை என்ற நூலில் சாவர்க்கர், “இந்துக்களும் முஸ்லிம்களும் தோளோடு தோல் நின்று தேசத்தின் சுதந்திரத்துக்காகப் போர் புரியவேண்டுமென்றும் இந்தியா சுதந்திரம் பெற்றதும் இந்திய மன்னர்களின் தலைமையில் ஒரு ஐக்கிய அரசாங்கத்தை நிறுவ வேண்டுமென்று முடிவெடுத்தனர்" என்று குறிப்பிடுகிறார். (எரிமலை பக்கம் 58). இந்த மன்னர் பகதூர் ஷா ஜாஃபர் ஆகவே இருக்கவேண்டுமென்றே எல்லோரும் விரும்பினர். ஆனால் சாவர்க்கர் இதைக் குறிப்பிடவில்லை.
இப்படி ஒரு உன்னத நோக்கத்துடன் மன்னர் பகதூர்ஷா தலைமையிலான அமைப்பு தாங்கள் தேர்ந்தெடுத்த தேதிக்காகக் காத்து இருந்தது. இந்தியாவின் சரித்திரத்தில் அந்த 1857 மே மாதம் என்பது மறக்க முடியாத மாதமாகும். இந்துக்களும் முஸ்லிம்களும் விரோதிகள் அல்ல ; அவர்கள் ஒருங்கிணைந்து ஒரு பொது எதிரியான ஆங்கிலேயனை ஒழித்துக் காட்ட மன்னர் பகதூர்ஷா தலைமையில் ஒன்று கூடிவிட்டனர் என்பதை உலகம் அறிந்துகொண்ட மாதம் அது.
அடுத்து என்ன நடந்தது என்று அறியும் முன்பு மன்னர் பகதூர்ஷா அவர்களின் இயல்புகள் பற்றிய ஒரு சிறு அறிமுகம் தேவை என்று எண்ணுகிறேன். மன்னர் பகதூர்ஷா ஒரு மதசார்பற்றவர் என்றே சரித்திர ஏடுகளில் சான்றுகளுடன் குறிப்பிடப்படுகின்றன. இயல்பிலேயே ஒரு கவிஞராகவும் சூஃபி ஞானியாகவும் திகழ்ந்தார். குறிப்பாக சொல்லப்போனால் தனது பாட்டனார்களாகிய அவுரங்கசீப்பை அல்லது அக்பரைப் போன்ற அரசருக்குரிய கம்பீரம், அதிகார தோரணை இவை எதுவுமற்ற ஒரு வெள்ளை மனம் படைத்த ஒரு அப்பாவியாகவே திகழ்ந்தார். “ பந்தா “ எதுவுமில்லாத ஒரு நல்லவர் ஆனால் இவரை வல்லவர் என்று வரலாறு குறிப்பிடவில்லை. தீவிர இஸ்லாமிய வாதங்களுக்குள் சிக்கிக் கொள்ளாத பண்பு இவருக்கு இந்துக்கள் இடமிருந்து நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. அனைவரையும் அணைத்து செல்லும் பாங்கும் பக்குவமும் இவரது தனித்தன்மைகளாகும்.
ஒரு முறை இருநூறுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஒன்றுகூடி மாடுகளை அறுக்க அரசின் அனுமதி வேண்டும் என்று வேண்டி நின்ற போது அதற்கு அனுமதி மறுத்துவிட்டு இஸ்லாம் பசுவதை செய்யத்தான் வேண்டுமென்று கட்டாயமாக வேண்டி நிற்கின்ற மதமல்ல என்று அறிவித்தார்.
மன்னர் பகதூர்ஷாவின் அரண்மனை மருத்துவரான சாமான்லால் என்பவர் கிருத்துவ மதத்துக்கு மதம் மாறியபோது அரண்மனையின் உலமாக்கள் அந்த மருத்துவரை அரண்மனை வேலையில் இருந்து நீக்கவேண்டுமென்று மன்னர் பகதூர்ஷாவிடம் கோரிக்கை வைத்தார்கள். ஆனால் மன்னர் அதை மறுத்துவிட்டார். அரண்மனை மருத்துவரின் மதநம்பிக்கை என்பது அவரது தனிப்பட்ட விவகாரம் அதில் அரசோ அரசரோ தலையிட முடியாது என்று மறுத்துவிட்டார்.
மன்னரின் இப்படிப்பட்ட நல்லியல்புகள் காரணமாகவே ஒட்டு மொத்த இந்தியாவின் சிற்றரசுகள் தங்களுக்கு இருந்த வேறுபாடுகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு ஒன்றுகூடி ஆங்கிலேயரை அடித்துவிரட்ட அமைக்கப் பட்ட அணிக்கு தலைவராக மன்னர் பகதூர்ஷா அவர்களைத் தேர்வு செய்தனர். 1857 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி என்று ஆங்கிலேயனுக்கு நாள் குறிப்பிட்ட நிலையில் வரலாறு வேறுவிதமாகத் திரும்பியது. ஆம்! மே 10 ஆம் தேதியே சிப்பாய் கலகம் வெடித்துவிட்டது.
மன்னர் பகதூர்ஷாவின் தலைமையில் திரளவிருந்த இந்தியப் படை தீட்டிய திட்டம் செயல்படாமல் போனாலும் பல்வேறு திசைகளிலும் ஆங்கிலேயருக்கு எதிராக சிப்பாய்க்கலகம் பரவி, அவர்களில் பலர் மன்னர் பகதூர்ஷாவின் தலைமையை ஏற்க டில்லி நோக்கிப் புறப்பட்டனர். டில்லி சலோ! என்பது ஒரு கோஷமாக முழங்கப் பட்டது. பிரிட்டிஷாரின் படையில் இருந்த மேல்ஜாதி இந்து வீரர்களும் கூட அவர்களுடன் இணைந்து டில்லி நோக்கிக் கிளம்பியது ஒரு சரித்திரத்தின் திருப்பம் ஆகும்.
மேலும் வெள்ளையர் ஆட்சி வீழ்க! மன்னர் பகதூர்ஷா வாழ்க ! என்ற கோஷங்களுடன் 1857ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மீரட் மற்றும் பரக்பூரில் முதல் இந்திய விடுதலைப் போர் வெடித்தது. மீரட் நகரில் 2000 ஆயுதம் தரித்த குதிரை வீரர்கள் 300 இந்திய தரைப்படை வீரர்கள் ஆங்கிலேயரை திருப்பியடித்து, திமிறியெழுந்து தலைநகர் டெல்லி நோக்கி புறப்பட்டனர். டில்லி சலோ! என்கிற கோஷம் முழங்க ரிசால்தார் ஹுசைன் அலி என்பவர் தலைமையில் டில்லி நோக்கிப் புறப்பட்டனர். வழியெங்கும் மன்னர் பகதூர்ஷாவுக்கு வாழ்த்துக் கோஷம் முழங்கப் பட்டது. 82 வயதான உடல்நிலை நலிவுற்றிருந்த பழுத்த பழமாய் காட்சியளித்த முகலாயப் பேரரசர் பகதூர்ஷா ஜாஃபர் அவர்களை தங்களின் தலைவராகவும் மன்னராகவும் அறிவித்தனர். (ஆதாரங்கள் The Lost Mughal, 2006 -& William Dalrymple, A.G.Noorani, Indian Political Trails 1775&1947).
வரலாற்றாசிரியர் ஏ.ஜி.நூரானி இதுபற்றி தனது நூலில் பகதூர்ஷா இந்து, முஸ்லிம் என்ற இரு சமூகங்களின் ஒற்றுமையின் சின்னமாகவும், ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சியின் சின்னமாகவும் திகழ்ந்தார் என்று குறிப்பிட்டார்.
மேலும் லட்சோபலட்சம் இந்தியர்களின் நம்பிக்கையாகவும், மதிப்புக்குரியவராகவும் உருவெடுத்தார். அதற்கு மாமன்னரை தலைமையேற்க அழைத்தது டெல்லி நோக்கி திரண்ட லட்சக்கணக்கானவர்களின் பேரணியே சிறந்த சாட்சியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அந்த சுதந்திரப் போராட்டத் தீ லக்னோ, அலஹாபாத், காஜியாபாத், டெல்லி, கான்பூர், ஜான்சி, குவாலியர், பரேலி, சென்னை , பம்பாய் , பஞ்சாப்பின் சில பகுதிகளிலும் பற்றிப் பரவியது.
இந்தப் புரட்சியின் ஒரு கட்டத்தில் பேரரசர் பகதூர்ஷாவின் இஸ்லாமிய அடிப்படையிலான மனிதாபிமானச் செயல் வரலாற்றில் குறிப்பிடப் படுகிறது. சிப்பாய்களின் எழுச்சியின் போது பேரரசர் தன்னுடைய மாளிகையில் வயதானவர்கள் பெண்கள் குழந்தைகள் என்று 52 ஆங்கிலேயர்களைத் தன்னுடைய பாதுகாப்பில் மறைத்து வைத்திருந்தார். சிப்பாய்கள் இவர்களைக் கண்டுபிடித்து எல்லோரையும் வெளியே இழுத்து வந்தார்கள். எந்தக் கொடிய ஆங்கிலேயர்களை எதிர்த்து இந்தக் கிளர்ச்சி நடைபெற்றதோ அந்த ஆங்கிலேயர்களின் தளர்வுற்ற பிரிவோரைக் காப்பாற்ற மன்னர் பகதூர்ஷா மனிதாபிமானத்துடன் போராடினார். தளர்வுற்ற ஆங்கிலேயர்களை சிப்பாய்கள் இழுத்து வந்த இந்தச் செய்கையால் மன்னர் ஜாஃபர் திகைத்துப்போய் நின்றார். பிறகு சிப்பாய்கள் என்ன செய்ய உத்தேசித்துள்ளார்கள் என்பதை உணர்ந்த உடன் சிப்பாய்களை இந்து மற்றும் முஸ்லிம்கள் என்று தனித்தனியே நிற்க உத்தரவிட்டார். பிறகு இரு சாரார்களிடமும். நிராயுதபாணியான ஆண்கள் பெண்கள் குழந்தைகளைக் கொள்வதற்கு உங்கள் மதம் அனுமதி தருகிறதா என்று அவரவர் மதகுருமார்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுமாறு வேண்டினார்.
"இவர்கள் கொல்லப்படுவதை என்னால் அனுமதிக்க முடியாது“ என்றார்.
ஆனால் சிப்பாய்கள் அதைகேட்கும் மன நிலையில் இல்லை. அவர்கள் மனம் இறங்கவில்லை. சிப்பாய்களின் மனம் இரங்கா நிலையைக் கண்டு மன்னர் பகதூர்ஷா அழத்தொடங்கினார். அப்பாவிகளான இவர்களுடைய உயிரைப் பறிக்கவேண்டாம் என்று இறைவனின் பெயரால் வேண்டிக்கொண்டார். பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே! என்ற கூற்றுக்கு இலக்கணமாய் நின்றார்.
"எச்சரிக்கையாய் இருங்கள்! இந்த கொடூரமானச் செயலைச் செய்து முடித்தால் இறைவனின் சாபம் நம் எல்லோர்மீதும் விழும். இந்த நிராயுதபாணிகளை எதற்காக கொல்லவேண்டும்“ என்று சிப்பாய்களிடம் மன்னர் கெஞ்சினார். ஆனால் இறுதியில் அவர்கள் கொல்லப்பட்டார்கள்.
ஆங்கிலேயரை எதிர்த்து சிப்பாய்களின் கலகம் தீவிரமடைந்தது. கர்னல் ரிப்ளே போன்ற உயரதிகாரிகள் கொலை செய்யப்பட்டனர். நான்கு மாதங்களில் முதல் இந்திய சுதந்திரப் போர் ஆங்கிலேயர்களால் ஒடுக்கப்பட்டது. அதன்பின், ஏராளமான இளவரசர்கள், கவிஞர்கள், மெளலவிகள், வர்த்தகர்கள் வெறித்தனமாக வேட்டையாடிக் கொன்று தீர்க்கப்பட்டனர். தூக்கிலிட்டு கொல்லப்பட்டனர்.
கம்பீர கோட்டைகள், எழில்மிகு பள்ளிவாசல்கள், முஸ்லிம்களின் அடக்கத்தலங்கள், பூங்காக்கள், மொகலாயர்களின் ஆட்சியின் பெருமை கூறும் மாளிகைகள் ஏராளமானவை இருந்த சுவடுகளே இல்லாமல் அழிக்கப்பட்டன.
சிப்பாய்க் கலகத்தில் கைதான - கொல்லப்பட்ட - தூக்கிலேற்றப்பட்ட இஸ்லாமியர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்கள் என்று அறியப்படுகிறது. இந்த சிப்பாய்க் கலகம் 'முதல் இந்திய சுதந்திரப் போர்'' என இந்தியர்களால் போற்றப்படுகிறது. இதில் டெல்லியில் மட்டும் 27 ஆயிரம் முஸ்லிம்கள் நாட்டுக்காக உயிர் துறந்தனர்.
1857 புரட்சிக்குப் பின் பகதுர்ஷாவிடம் இருந்து டில்லியைஆங்கிலேயர் கைப்பற்றினர். டில்லியில் இருந்த முஸ்லிம்கள் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் அப்படியே விட்டுவிட்டு வெளியேற்றப்பட்டனர். அவர்களுடைய வீடுகளை ஆங்கிலேயர்பறிமுதல் செய்தனர். 1859 வரை அவர்கள் திரும்ப வந்து குடியேறஅனுமதிக்கப்படவில்லை. அதுவும் கூட , முஸ்லிம்களின் அசையா சொத்தின் மதிப்பில் நூற்றில் முப்பத்தைந்து பங்கினைத் தங்களைஎதிர்த்து போராடியதற்காக ஆங்கில அரசு தண்டமாக அபகரித்தது.
1857ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி பகதூர்ஷாவை ஆங்கிலேயப் படை சுற்றி வளைத்தது. மறுநாள் ராணுவ அதிகாரி மேஜர் வில்லியம் ஹோட்சன் என்பவன் ஹுமாயூன் கல்லறை முன்பாக பகதூர்ஷாவின் புதல்வர்களான இளவரசர்கள், மீர்ஸா முகல், மீர்ஸா கிஸிர் சுல்தான் மற்றும் பகதூர்ஷாவின் பேரன் மீர்ஸா அபூபக்கர் ஆகியோரைக் கைது செய்தான். கைது செய்யப்பட்ட இளவரசர்களை ஷெர்ஷாஹ் சூரி அவுட்போஸ்ட் அருகே வெறியன் வில்லியம் கொண்டு சென்றான். காபூலி தர்வாஜா அல்லது லால் தர்வாஜா என்று அழைக்கப்பட்ட அந்த இடத்தில் வைத்து இளவரசர்களின் ஆடைகள் கட்டாயப்படுத்தி அவிழ்க்கப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு பகதூர்ஷாவின் இரு புதல்வர்களும் பேரரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மொகலாய இளவரசர்கள் கொல்லப்பட்ட அந்த இடம் அதன்பிறகு கூனி தர்வாஜா (கொலை வாசல்) என்று அழைக்கப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் இன்றும் இருசொட்டுக் கண்ணீர் விடாதவர்கள் இருக்க இயலாது.
மாமன்னர் பகதுர்ஷா ஜீனத் மஹல் மாளிகையில் சிறை வைக்கப்பட்டார். கவிதையுள்ளம் உள்ள மாமன்னர் பகதூர்ஷாவுக்கு ஒரு எழுதுகோல் வைத்துக்கொள்ளக்கூட அனுமதிக்கவில்லை. கவிதை எழுதும் ஆற்றல் கொண்ட அந்த மொகலாயப் பேரரசர் தனது இறுதிக் காலக்கட்டத்தில் இறுதி கவிதை வரிகளை கோட்டைச் சுவர்களில் கரிக்கட்டைகளால் எழுதினார் என்ற செய்தியை, கேட்பவர் நெஞ்சமெல்லாம் ரத்தம் கசியும்.
அப்போது சிறையில் நிகழ்ந்த ஒரு காட்சியை முஸ்லிம் வரலாற்றாசிரியர் காசிம் ரிஜ்வி ( Kasim Rizvi – The Great Bahadur Sha Jafer – Page 10 ) இப்படி உணர்வு பூர்வமாக வர்ணிக்கிறார். நமது உள்ளங்கால்களை கூசவைக்கும் காட்சி இது.
மாமன்னர் பகதூர்ஷா வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை. ஒரு நாள் காலை . காலை உணவு ஒரு பெரிய தட்டில் வைத்து துணியால் மூடப்பட்டு எடுத்துவரப் படுகிறது.
கூடவே மேஜர் ஹட்சன் வருகிறான். ஹட்சன் முகத்தில் ஒரு விஷமம் கலந்த சிரிப்பு .
ஹட்ஸன்: பகதுர்ஷா... நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருந்த கம்பெனியின் பரிசுகள் இவை! என்றவனாக, உணவுத் தட்டுகளை மூடியிருந்த துணிகளை அகற்றுகிறான்.
அங்கே... பகதுர்ஷாவின் மகன்கள் மிர்ஜா மொஹல், கிலுருசுல்தான் இருவரின் தலைகள்! இருவரையும் சுட்டுக்கொன்று, தலைகளைவெட்டித்தட்டுகளில் ஏந்தி வந்ததோடு...
இது பிரிட்டீஷ் கம்பெனியாரின் பரிசுகள் என்று கிண்டலுடன் நிற்கிறான் ஹட்ஸன்.
திடநெஞ்சுடன் அவனைப் பார்த்த
பகதுர்ஷா: தைமூர் வம்சத் தோன்றல்கள் தமது முன்னோர்களுக்கு இவ்வாறு தான் தங்கள் புனிதத்துவத்தை நிரூபிப்பார்கள்!
கம்பீரமான இந்த வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்த ஹட்ஸன், பகதுர்ஷாவின் கண்களில் கண்ணீர் வராததைக் கண்டு
ஹட்ஸன்: உமது கண்களில் என்ன? நீர் வற்றி விட்டதா?
பகதுர்ஷா: ஹட்ஸன்... அரசர்கள் அழுவதில்லை! அதிலும் முஸ்லிம்கள், ஷஹீத் ஆனவர்களுக்காக அழமாட்டார்கள் என்று பெருமிதத்துடன் கூற தலை குனிந்தபடி வெட்கத்துடன் வெளியேறுகிறான் ஹட்ஸன்.
அன்புக் கரங்களால் அள்ளி அணைத்து உச்சி முகர்ந்த முகங்கள் - உடம்பிலிருந்து துண்டாய் சொட்டும் ரத்ததுளிகளுடன் - பெற்ற மனம் எப்படி பதறி இருக்கும். அதனைத் தேசத்திற்கான அர்ப்பணிப்பாய் நினைத்ததால் பகதூர்ஷா கலங்கவில்லை.
இதுவே முஸ்லிம்களின் தியாகம். இதுதான் நாம் செய்த தியாகம் ; இறக்கமற்றோர் இப்போது சொல்வதுபோல் வகுப்புவாதமல்ல.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் என்ற பரந்த பூபாகத்தை நான்கு நூற்றாண்டுகளாக ஆண்டுவந்த மொகலாயப் பேரரசின் இறுதி மாமன்னர் பகதூர்ஷா வந்தேறி ஆங்கிலப் படைகளால் கைது செய்யப்பட முன்பே, நினைத்திருந்தால் ஆங்கிலேயருடன் சமரசம் செய்து வாழ்ந்திருக்கலாம். செல்வ சுகபோகத்தில் இன்றுவரை அவரது வாரிசுகள் திளைத்துக் கொண்டிருக்கக் கூடும். ஆனால் அவர் அதனை வெறுத்தார். மைசூர் சிங்கங்களான ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோர் ஆங்கிலேயரை எதிர்த்து இந்திய விடுதலைக்கு வலுவூட்டியதையும், ஆங்கிலேயரின் அடிவருடிகளாக வாழ்ந்து விண்முட்டும் மாளிகைகளுடன் இன்றும் வாழும் மைசூர் சாம்ராஜ் உடையார் பரம்பரையையும் இங்கு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றுகிறதல்லவா?
சிப்பாய் கலகவாதிகளான புரட்சியாளர்களுக்கு உதவி செய்தார். 47 ஆங்கிலேயர்களைக் கொலை செய்தார் எனப் பல குற்றங்களைப் பகதுர்ஷாமேல் சுமத்தி, அவரை கண்கள் குருடாக்கப் பட்ட நிலையில் பர்மாவிலுள்ள ரங்கூனுக்கு பிரிட்டீஷ் அரசு நாடு கடத்தியது.
ஆதிக்க வெறி பிடித்தவர்களின் வெற்றிக்குப் பிறகு இன்று சதாம் ஹூசேன் தூக்கிலிடப்பட்டது போலவே பகதூர்ஷா ஜாஃபர் நாடு கடத்தப்பட்டார். தியாகிகளுக்கு இது ஒன்றும் பெரிய துயரம் இல்லைதான். அவரே துயரப்படவில்லை. ஒரு சூஃபி ஞானியைப் போல் அவர் தன் முன் உள்ள வாழ்க்கையைப் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டார்.
மன்னராக இருந்தவர் என்கிற காரணத்தினால் மாதம் 600 ரூபாய் உபகாரச் சம்பளம் வழங்க பிரிட்டீஷ் அரசு முன்வந்தது.
"என் மண்ணின் செல்வத்தை எடுத்து எனக்கே கொடுப்பதற்கு நீயார்." - என்று அதனை ஏற்க மறுத்துவிட்டார்.
தாய் மண்ணில் இனி அடங்கப் பெறும் பாக்கியம் தனக்கு கிடைக்காது என வருந்தியவராக, இறந்த பின் தன்னை அடக்கம்செய்யும் சமாதியில் தூவ ஒரு பிடி இந்திய மண்ணை கையில் அள்ளியவராக ரங்கூனுக்கு கப்பல் ஏறினார்.
சற்றும் கருணை காட்டாத பிரிட்டிஷ் அரசின் கொடூரச் செயல் கண்டு பகதூர்ஷா ஜாஃபர் மனம் கலங்காது மரணத்தை எதிர்கொண்டார்.
1862 நவம்பர் 7-இல் தனது 92-ஆம் வயதில் ரங்கூனில் காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அவர் உயிர் பிரியும்போது உடல் சற்றுஆடியிருக்கலாம்.ஆனால் அவரது தியாக மரணம் பிரிட்டிஷ் ஆட்சியை அசைத்துப் பார்த்தது என்று தாமஸ் லோவே தெரிவித்தார்.
ரங்கூன் யார்க் சாலையில் இன்றும் இருக்கும் மன்னர் பகதூர்ஷா அவர்களின் அடக்கஸ்தலத்தை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பர்மா / மியான்மர் சென்றபோது நிதி திரட்டிப் புதுப்பித்தார். அந்த அடக்க ஸ்தலத்தில் இருந்து நேதாஜியும் ஒரு பிடி மண்ணை எடுத்து மக்கள் தனக்குப் பரிசாக வழங்கிய தங்க வாளின் கைப்பிடிக்குள் தூவி அடைத்து ஒருநாள் இந்த வாள் லண்டனின் வாசல்படியைத்தட்டும் என்று முழங்கினார். (அமீர்ஹம்ஷா, நேதாஜியின் மாலைக்கு ரூபாய் 5 லட்சம், தினமணி சுதந்திர பொன்விழா மலர், பக்கம். 69.)
முன்பு பர்மா என்று அழைக்கப்பட்ட மியான்மருக்கு சமீபத்தில் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மன்மோகன்சிங் சென்றிருந்தார். அவருடன் அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களோடு மாமன்னர் பகதூர்ஷா ஜாஃபர் உயிர்நீத்த இடத்திற்குச் சென்று உருக்கத்துடன் தனது கருத்தினைப் பதிவு செய்துள்ளார்.
முன்பு நீங்கள் ஆட்சி செய்த அதே செங்கோட்டையில்தான் நான் கோலோச்சுகிறேன். மாமன்னர் அவர்களே! உங்களைப் போன்று நெஞ்சுரத்துடன் முதுகு வளையாமல் ஆட்சி செய்ய முடியவில்லையே என்று மனதுக்குள் வெதும்பியிருக்கலாம்.
பேரரசர் பகதூர்ஷா ஜாஃபர் - தனது இறுதிக் காலத்தில்
மியான்மருக்கு சுற்றுப்பயணம் செய்த அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி மாமன்னர் பகதூர்ஷா குறித்து அவர் உயிர்நீத்த இடத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்.
‘‘மாமன்னர் அவர்களே! நீங்கள் இந்தியாவில் உங்களுக்கு என்று நிலத்தை எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இந்தியாவே உங்கள் பெயரையும், தியாகத்தையும் மெய்சிலிர்ப்புடன் உச்சரித்துக் கொண்டிருக்கிறது. விடுதலை உணர்வின் அடையாளச் சின்னமான பகதூர்ஷாவின் புகழ் என்றும் வாழும்’’ எனக் குறிப்பிட்டார்.
பகதூர்ஷா ஜாஃபர் என்ற பெயர் ஒவ்வொரு இந்தியனின் உள்ளத்திலும் உணர்ச்சிமிகு உத்வேகத்தை வழங்குகிறது என்பதை மோடி மஸ்தான் கூட்டத்தைத் தவிர மறுப்பார் யாரும் உண்டா?
இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திக்கலாம்.
தொடரும்...
இபுராஹீம் அன்சாரி
17 Responses So Far:
///1847 –ல் ஆங்கில அரசின் அதிகாரியான கெய்த் என்பவன் தன் மனைவிக்கு எழுதிய ஒரு கடிதம் சரித்திர ஆசிரியர்களின் கண்ணில் பட்டது. அந்தக் கடிதத்தில் அவன் குறிப்பிட்டிருந்ததன் சாராம்சம் என்னவென்றால், “ நாளை பக்ரீத் எனப்படும் ஈத் பெருநாள். முஸ்லிம்கள் மாடுகளை அறுத்து குர்பானி என்கிற பலி கொடுப்பார்கள். இந்துக்கள் மாட்டை தெய்வமாக வழிபடுகிறார்கள். ஆகவே மாடுகளை அறுப்பதை எதிர்த்து இந்துக்களை தூண்டிவிட்டு, அதற்காக இந்துக்கள் கொதித்து எழும் சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறோம். ஆகவே நாளை டில்லியில் இந்து முஸ்லிம் கலவரத்தை எதிர்பார்க்கிறோம். அந்தக் கலவரம் தொடங்கிவிட்டது என்கிற நல்ல செய்தி பகதூர்ஷா உடைய ஆட்சியை சீர்குலைக்க உதவும் கருவி . இதைவைத்து நாங்கள் உட்புகுவோம் “ என்று எழுதி இருந்தான் அந்தக் கொடியவன். ///
அப்போ ஹின்து முஸ்லிம் சண்டைகளுக்கும் இருசாராரின் பிரிவினைகக்கும் ஆங்கிலேயர்கள்தான் காரணம் என்பது இந்த வரலாற்றுச் சுவடுகள் மூலம் அறியமுடிகின்றது
காக்கா மிக அற்புதமான வரலாற்று சுவடுகளை
நீங்கள் அந்த காலத்தில் இருந்ததுபோல் இந்த காலத்தில் வாழும் எங்களுக்கு தொகுத்து கொடுத்திருப்பது மிகவும் அற்புதம்
அன்புச் சகோதரர் இப்ராஹீம் அன்சாரி அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)!
முஸ்லிம் மன்னர்களின் வீரம் இஸ்லாம் போட்ட உரம்! (சில மன்னர்களைத் தவிர).
முஸ்லிம்கள், முஸ்லிம் மன்னர்கள் தியாகத்தின் அருகே நெருங்கக் கூட அருகாதை இல்லாதவர்கள் காவிக் கயவர்கள்!
நாடோடியாய் வந்த வந்தேறிகளுக்கு வீரம் என்றால் ஆங்கிலேயனுக்கு அடிமை சேவகம் செய்வது ஒன்றே வீரம் என்று அவர்கள் ரத்தத்தில் ஊறியது.
ஆங்கிலேயனுக்கு அடிமை சேவகம் செய்த காரணத்தால்தான் இன்று இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் போய் சொகுசு வேலையிலும், சொகுசாகவும் வாழ்ந்து கொள்ளையடிக்க முடிகிறது.
ஒரு நெருடல் வல்ல அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கிய குர்பான் என்னும் தியாகத்தை பசுவதை என்ற வட்டத்தில் சுருக்கி விட மனிதர்களுக்கு அதிகாரம் இல்லை.
இந்த உலகையும், உலகில் உள்ள அனைத்தையும் படைத்த வல்ல அல்லாஹ்! மனிதர்கள் ஹலாலான வழியில் பயன்படுத்திக் கொள்வதற்காக உலகில் உள்ள அனைத்தையும் வசப்படுத்திக் கொடுத்துள்ளான்.
வல்ல அல்லாஹ் வழங்கிய சட்டத்தில் கை வைப்பதற்கு மனிதர்களுக்கு அதிகாரம் இல்லை.
கடைசி மன்னர் வரலாறு – தொடர் முடியப் போகிறதா?
வரலாற்றை படிக்கப்படிக்க திகைப்பாய் இருக்கின்றது
அன்புச் சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கு
வ அலைக்குமுஸ் ஸலாம்.
//கடைசி மன்னர் வரலாறு – தொடர் முடியப் போகிறதா?//
இல்லை அப்படி இல்லை. இந்தத்தொடருக்காக படித்தபோது என்னை மிகவும் பாதித்த வரலாறுகளை எழுதிவருகிறேன்.
இப்படி பாதித்த வரலாறுகள் இன்னும் நிறைய இருக்கின்றன. இன்ஷா அல்லாஹ் இவை தொடரும் . து ஆச செய்யுங்கள்.
//ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
என்று சொல்வார்கள். ஒட்டு மொத்த இந்தியாவையே கட்டியாண்ட மொகலாய வம்சத்தின் கடைசிப் பேரரசர் பகதூர்ஷா அவர்கள் இறுதியில்
தனது வம்சம் ஆண்ட நாட்டில் தன்னைப் புதைக்க ஆறடி நிலம் கூட கிடைக்கவிடாமல் அந்நிய நாட்டிற்கு நாடு கடத்தப் பட்டு அங்கே மரணமடைந்து புதைக்கப் பட்ட வரலாற்று நிகழ்வு படிக்கும் யார் மனதையும் யாவர் மனதையும் பாதிக்கும். //
இந்த வரிகள் இந்தக்கட்டுரையில் எழுதப்பட வேண்டுமென்று எண்ணி இருந்தேன். ஆனால் ஏதோ நினைவில் விடுபட்டுப் போய்விட்டது. இப்போது சமர்ப்பிக்கிறேன்.
What an episode!!!
Kaakaa, pls wait for my comment before taking the stage of acknowledgement.
Thanks.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பிற்குரிய காக்கா,
இத்தனை அற்புதமான நிகழ்வுகளை வரலாற்றுப் பாடங்களில் குறிப்பிடாமல் "மொகலாய சாம்ராஜ்யத்தின் எல்லைகளை குறி" என்று மனப்பாடம் செய்யச் சொல்லி மதிப்பெண் கொடுத்ததில் எம்மாம்பெரிய உள்குத்து இருக்கிறது எனபதைத் தங்களின் இத்தொடர் "அக்கு வேறு ஆணி வேறாக பிரிச்சி மேய்கிறது" காக்கா.
மதச் சாயம் பூசி மொழுகியது மடச் சாமிகளோ என்று சந்தேகம் எழுகிறது.
எல்லாவற்றையும் போட்டுடையுங்கள் காக்கா. பேடித்தனமான, கயமை மிகைத்த இந்திய வரலாற்றின் கருப்புப் பக்கங்களை வெளுத்து வாங்குங்கள்.
மதச்சாயத்தை மனசாட்சி கொண்டு சுத்தம்செய்து, உண்மையான வீரத்திற்கும் தீர்த்திற்கும் பெயர் பெற்றது எம் சமுதாயம் என்பதை உலகு அறியத்தாருங்கள்.
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.
ஹட்சனுக்கும் பகதூர் ஷா அவர்களுக்கும் இடையேயான வாக்கு வாதத்தில் பகதூர் ஷா அவர்களின் வீரமும் மார்க்கம் கற்றுத்தந்த பொறுமையும் சிந்தையைக் கவர்கிறது; மனதைப் பிசைகிறது; கண்களைப் பிழிகிறது. வாசிக்கும் நமக்கே பதறுகிறதே வாழ்ந்துகாட்டிய அந்த வீர மன்னருக்கு எத்துணை வலித்திருக்கும்!?
//முன்பு நீங்கள் ஆட்சி செய்த அதே செங்கோட்டையில்தான் நான் கோலோச்சுகிறேன். மாமன்னர் அவர்களே! உங்களைப் போன்று நெஞ்சுரத்துடன் முதுகு வளையாமல் ஆட்சி செய்ய முடியவில்லையே என்று மனதுக்குள் வெதும்பியிருக்கலாம்//
அதானே, எங்கே காக்கா ப்பஞ்ச்சை (punch) காணோமேன்னு பார்த்தேன்.
மதச்சாயத்தை மனசாட்சி கொண்டு சுத்தம்செய்து, உண்மையான வீரத்திற்கும் தீரத்திற்கும் பெயர் பெற்றது எம் சமுதாயம் என்பதை உலகு அறிய தொடர் பதிவுக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்.
மன்னர் ஜாபர் பற்றி படித்து அமைதியாக செல்லாமல் குரல் மன்னன் ஜாபர் ஹசன் குரல் கொடுத்து காக்காவுக்கு துஆ பதிந்து செல்லவும்.
ஆங்கிலேயர்கள் மார்க்க விஷயத்திலும் மூக்கை நுழைத்து இந்து முஸ்லிம் கலவரத்தை ஏற்ப்படுத்த எண்ணியது, அதை பாதூர்ஷா அவர்கள் தந்திரமாக முறியடித்தது உண்மையிலேயே ஒரு அறிவுபூவர்மான சமயோசித சமயமறிந்து செய்த செயல்.
இப்பேர்ப்பட்ட இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்தூக்கி அதற்க்கு ஊக்கு வித்த தலைவர்கள் இந்திய வரலாற்றில் ஏராளம். இவைகளை தங்கள் எழுத்து அழகுற தந்து கொண்டிருப்பது ஒரு வரலாற்றுப்பேராசிரியரின் உரையை வகுப்பில் உட்கார்ந்து கேட்பது போன்ற ஒரு பிரமை.
அல்லாஹ் ஆதிக்கலாபியா
அபு ஆசிப்.
பேரரசர் பகதூர்ஷா ஜாஃபரின் வீரம்/தியாகம் சமீபத்தில்தான் படித்தேன்.. மீண்டும் அதனைப் படிக்க வாய்ப்பு கிட்டியதில் தேங்க்ஸ் டு . அ.நி/ இப்ராஹீம் அன்சாரி காக்கா.
இதுபோன்று இஸ்லாமிய வீரர்களின் வரலாறுகளை அவ்வப்போது நினைவூட்டிக் கொள்ள வேண்டிய தருணம் இது.
பேரரசர் பகதூர்ஷா ஜாஃபர் அவர்களின் வீரம்...! எழுத்தில் வடித்து மட்டும் வாசிக்க கூடியதல்ல ! சிலிர்த்தெழ வைக்கும் தியாகமும், பேரண்மை மிக்கவர்களாக உருவெடுக்க வைக்கும் நிஜம்.
எனக்குப் பிடித்த வரலாறு பல்வேறு சந்தர்பங்களில் வாசித்து வந்தாலும் உங்களின் எழுத்தோடையில் மிதக்கும் சுகமே தனிதான் !...
அன்பானவர்களே!
பின்னூட்டம் இட்டு ஊட்டம் தந்துள்ள அனைவருக்கும் நன்றி.
மதச்சாயத்தை மனசாட்சி கொண்டு சுத்தம்செய்து, உண்மையான வீரத்திற்கும் தீரத்திற்கும் பெயர் பெற்றது எம் சமுதாயம் என்பதை உலகு அறிய தொடர் பதிவுக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்.
Post a Comment