Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கிழக்கே உதித்த சுதந்திரச் சூரியன் – சிராஜ் உத்–தெளலா 23

அதிரைநிருபர் பதிப்பகம் | December 07, 2013 | , ,

தொடர் - ஒன்பது

ஜனவரி-மே,  1857  இல் நிகழ்ந்த இந்திய விடுதலை எழுச்சி பரவலாக இந்தியாவின் முதல் விடுதலைப் போர் எனக் கூறப்படுகின்றது. இதனை வரலாற்று நூல்களிலும் மேற்கு நாடுகளின் எண்ணங்களிலும் "இந்திய சிப்பாய்க் கலகம்" எனக் கூறி இருப்பதனால், இந்தியர்களில் பலரும் இதனைத்தான் முதல் இந்திய விடுதலைக்கான எழுச்சியாக நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் 1757 லேயே வங்காளத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடைபெற்ற பிலாசிப் போரே முதல் சுதந்திர போர் ஆகும். ஆம் வங்காளத்தில் சிராஜ்-உத்-தௌலா சிந்திய ரத்தத்தின் மீதுதான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தன் முதல் அரசுமுறையான ஆக்கிரமிப்புக் கல்லை  இந்திய மண்ணில் நட்டது. இந்தியாவில் பிரிட்டீஷாரின் ஆட்சி முதலில் வங்காளத்தில்தான் ஏற்பட்டது என்பதுதான் வரலாறு ஏற்றுக் கொண்ட உண்மை. ஆகவே மேற்கில் போர்த்துகீசியரை எதிர்த்து சிந்தப் பட்ட முதல் ரத்தத்துளியும் கிழக்கில் ஆங்கிலேயரை எதிர்த்து சிந்தப்பட்ட முதல் ரத்தத்துளியும் முஸ்லிம்களுடையதுதான்  என்பது வரலாற்றில் மதச்சாயம் பூசி மறைக்க முயல்வோரின் முகத்திலும் முதுகிலும்  எழுதப் பட வேண்டிய உண்மை வரலாறு ஆகும். 

The First War of Indian Independence is a term predominantly used in India to describe the Indian Rebillion of 1857 It is also known by a number of other names such as the Great Rebellion, the Indian Mutiny, the Sepoy Rebellion, the Sepoy Mutiny the Revolt of 1857, and the Uprising of 1857.

என்பதுதான் உண்மைக்கு மாறாக நாம் மனப்பாடமாக படித்து எழுதிய பாடம். ஆங்கிலேயர் இந்தியாவை கபளீகரம் செய்யத் தொடங்கக் காரணமாக இருந்தது ஆங்கிலேயர் வர்த்தக முக்காடு போட்டுத் தொடங்கிய கிழக்கிந்தியக் கம்பெனி என்பதாகும். இந்தியாவின் கிழக்கே இருந்தது வங்காளம் அதன் தலை  நகரம் கல்கத்தா. இந்த மறைக்க முடியாத உண்மையை மனதில் வைத்துக் கொண்டு  கேளுங்கள் மாவீரன் சிராஜ்- உத் – தெளலாவின் கதையை.

வரலாற்றுச் சந்தையில் ஒரு சுற்று சுற்றி வருவோம் வாருங்கள். 

Trade Follows Flag  அதாவது வணிகம் என்கிற பசுத்தோலை போர்த்திக் கொண்டே நாடுகளை காலணி ஆதிக்கத்துக்குக் கொண்டு வரும் புலிதான் ஆங்கிலேயரின் கொள்கை என்பதை பறைசாற்றும் வரலாற்றுக் கலைச்சொல்லே  Trade Follows Flag என்பதாகும். அதன்படி தனது ஆக்கிரமிப்பு அரசியலுக்கு போட்டுக் கொண்ட முகமூடியே ஆங்கிலேயருடைய வணிகக் கொள்கையாகும். இந்த வகையில் இவர்கள் சுட்ட, சுருட்டிய, ஏப்பம் விட்ட நாடுகள் ஏராளம். எங்கே போனால் எதை வாங்கலாம் அல்லது விற்கலாம் என்பது சாதாரணமான வணிக நடைமுறை . ஆனால் வெள்ளைக்காரர்கள் என்று சொல்லப் பட்ட கொள்ளைக் காரர்கள் எங்கே போனால் எதைச் சுருட்டலாம் -  புரட்டலாம் - எதை எடுத்து இடுப்பில்  சொருகலாம் - யாரைப் பிரிக்கலாம் - எங்கே கலகமூட்டலாம் - எந்த அப்பத்தைப் பிரித்துக் கொடுப்பதில் குரங்காக செயல்படலாம் -எந்தக் குளத்தை குழப்பிவிட்டு மீன் பிடிக்கலாம் – என்பதே ஆங்கிலேயரின் நோக்கமாக இருந்தது. இந்த அடிப்படையில்தான் அவர்கள் ஆப்ரிக்க மக்களை அடிமைகளாக்கினார்கள்- அங்கிருந்த தங்க சுரங்கங்களை தங்களுடையதாக ஆக்கினார்கள்- அமெரிக்காவை  அடிமைப் படுத்தினார்கள் தூரக் கிழக்கு நாடுகள் முதல் ஆசியாவின் அனைத்து நாடுகளையும் சுரண்டினார்கள்-  சூர்யன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என்று பெருமை அடித்துக் கொண்டார்கள். அந்த வகையில் அவர்களின் கண்ணில் பட்ட அப்பாவிகள் வாழும் வளம் மிக்க நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவும் தப்பவில்லை. 

ஆனால் வரலாறு,  ஒரு உண்மையை ஒப்புக் கொள்ளும். ஆங்கிலேயர்களின் நாடு பிடிக்கும் பேராசையின் ஆக்டோபஸ் கரங்கள் இந்தியாவின் மீது படரத் தொடங்கியது அவுரங்கசீப்புக்குப் பிறகு வீழ்ந்துவிடத் தொடங்கிய மொகலாயப் பேரரசுக்குப் பிறகே. அதுவரை இவர்களால் இந்தியாவை நோக்கி வாலாட்ட  முடியவில்லை. காட்டு மல்லி பூத்து இருந்தாலும் காவல்காரனாக மொகலாயர் காத்து இருந்ததால் ஆங்கிலேயன் என்கிற ஆட்டம் போட்ட மயிலை காளை தோட்டம் மேயப் பார்க்க முடியவில்லை.  மொகலாய அரசின் வீழ்ச்சியின் 66 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட ஒட்டு மொத்த இந்தியாவை கட்டி ஆளும் தகுதியும் தன்மையும் படைத்த வேறு எந்த அரசும் ஏற்படவில்லை. கீரைப் பாத்தி நாடுகள் தங்களுக்குள் அதிகாரத்துக்காக அடித்துக் கொண்டது ஆங்கிலேயருக்குப் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் ஆனது. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது உண்மை ஆயிற்று. இந்தியா வேலி இல்லாத தோட்டமானது. அதனால் ஆங்கில மயிலக்காளை இப்போது ஆட்டம் போட்டுத் தோட்டம் மேயப் பார்த்தது. 

ஆக, இந்த சூழ்நிலைகலைப் பயன்படுத்தி  ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் கம்பெனி,   இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கும் கதையாக, ஆட்சியின் மேலும்  குறி வைத்தது. இந்த வர்த்தகக் கம்பெனி உருவாக்கப் பட்ட நாள் 1.12.1600. “ கம்பெனி என்பது வாங்கவும் விற்கவும் வந்த வர்த்தக ஸ்தாபனம். அதற்குள் அடங்க வேண்டியது பொருள்கள் ; புருஷர்கள் அல்ல” என்கிற வசனங்கள் ஒலிக்காத காதுகளே ஒரு காலத்தில் இல்லை.  கிழக்கிந்தியக் கம்பெனி என்று மெல்லத் தொடங்கி பொருள்களை வாங்கி விற்பதில் தொடங்கி இந்திய நாட்டையே கொஞ்சம் கொஞ்சமாக ஏப்பம் விடத்தொடங்கினார்கள். 

தங்களின் ஆதிக்கப் பசிக்கு இரையாக்கிக் கொள்ளும் செயலுக்கு ஆரம்பமாக கடற்கரைப்பட்டினங்களையே நோக்கி கண் வைக்க ஆரம்பித்தனர். அந்த வகையில் ஆளும் திராணியற்ற அரசர்களை விலைக்கு வாங்கி தங்களின் ஆதிக்கக் கணக்கைத் தொடங்கினர். தங்களின் வர்த்தகக் குடியேற்றங்களை கடற்கரைப் பட்டினங்களில் ஏற்படுத்திக் கொண்டனர். 1612  ஆம் வருடம் சூரத்திலும் 1616- ல் மசூலிப் பட்டினத்திலும்  1633 –ல் ஹர்ஹர்பூரிலும் 1640 ல் சென்னையிலும்  1669- ல் மும்பையிலும்  1686- ல் கல்கத்தாவிலும் தங்களின்  வர்த்தகக் குடியேற்றங்களை நிறுவினார்கள்.

உலகெங்கிலும் அந்நிய நாட்டின் மூலதனம் இப்போதும்  வரவேற்கப் படுகிறது. அப்படி மூலதனம் இடும் எவரும் தங்களின் முதலீடுகளைத்தான் பணமாகவோ அல்லது பொருளாகவோ அந்தந்த நாடுகளில் முதலீடு செய்வார்கள். இத்தகைய முதலீடுகளுக்குரிய தேவையான அனுமதி மற்றும் உரிமைகளைத்தான் தாங்கள் பிறந்த மற்றும் வணிகம் செய்யும் நாடுகளிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள். ஆனால் ஆங்கிலேயன் கிழக்கிந்தியக் கம்பெனியைத் தொடங்கும்போதே தங்களுக்காக ஒரு கப்பற்படையை  வைத்துக் கொள்ளவும் ,  தேவையான சட்டங்களை இயற்றிக் கொள்ளவும் பிரிட்டிஷ் ராணியிடமிருந்து உரிமை பெற்று இருந்தார்கள். இதன் விளைவாக முதலில் வங்காளத்தில் (அன்றைய வங்காளம் என்பது இன்றைய பங்களா தேசமும் சேர்ந்தது) இருந்த சிட்டாகாங்க் துறைமுகத்தைத் தாக்கி அதில் தோல்வி கண்டார்கள். 

1686- ல் கல்கத்தாவில்  கால்பதித்த வெள்ளையர்கள் 1690 –ல் கல்கத்தாவின் ஹூக்ளி நதியின் கரையில் தங்களின் பண்டங்களை பாதுகாக ஒரு கிடங்கும் அத்துடன் ஒரு கோட்டையும் கட்டினார்கள். இந்தக் கோட்டையின் வரலாற்றுப் பெயர் வில்லியம் கோட்டை என்பதாகும். மொகலாய மன்னராக இருந்த பாருஷியாவுக்கு மருத்துவம் பார்த்த ஆங்கிலேயரான அமில்ரன் வில்லியத்தின் நினைவாக இந்தக் கோட்டை கட்டப் பட்டதாக சொல்லிக்கொண்டார்கள். ஆங்கிலேயரின் சூழ்ச்சியின் அடையாளமாக இந்தக் கோட்டைக்குள்ளே ஒரு சிறைச்சாலையைக் கட்டினார்கள். அந்த சிறைச்சாலை 18 அடி நீளமும் 16 அடி 10அங்குல அகலமும் உள்ள சிறிய அறைகளைக் கொண்டது. இப்படி ஒரு சிறையை அவர்கள் கட்டியதன் நோக்கம் தங்களை எதிர்ப்பவர்களைப் பிடித்து இந்த சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தத்தான். ஆனால் இறைவன் போட்ட கணக்கு வேறாக இருந்தது.  வங்காளத்தின் வீரன் சிராஜ் - உத் -தெளலா இந்த சிறைச்சாலையில் தங்களையே  அடைக்கப் போகிறார் என்பதை ஆங்கிலேயர்கள் அறியவில்லை. அதைப் பற்றி பின்னர் காணலாம்.  இப்போது இப்படியெல்லாம் ஆங்கில ஆதிக்கம் விரிவடைந்து கொண்டே சென்றது என்பதை மட்டும் விளங்கிக் கொள்ளலாம். 

சென்னையிலும் மும்பையிலும் இன்னும் இந்தியாவின் பல பகுதிகளிலும் ஆங்கிலேயர்கள் எவ்வித எதிர்ப்புமின்றி காலூன்றத்தொடங்கினார்கள். ஆனால் கல்கத்தாவில் அவர்களது ‘பாச்சா’ பலிக்கவில்லை; பருப்பு வேகவில்லை.  இதற்குக் காரணம், வியாபாரம் செய்ய வந்தவர்களுக்கு நாடாளும் ஆசை வந்துவிட்டது என்பதை முதலில் கணித்து, ஆங்கிலேயரின் நிர்ப்பந்தங்களுக்கும் நிபந்தனைகளுக்கும் எதிராய் இந்த மண்ணில் முதுகெலும்புடன் முதலில் நிமிர்ந்து நின்றவர்தான்  சிராஜ் - உத் –தெளலா. 

ஆப்கானியப் படை வீரர் அலிவர்த்திகான்  1726 ஆம் ஆண்டு துருக்கியில் இருந்து இந்தியா வந்து வங்காளத்தின் படையில் சேர்ந்தார். காலம் அவரை வங்காளத்தின் நவாப் ஆக்கியது.  அலிவர்த்திகானின்  மறைவுக்குப் பிறகு அவரது பேரர் ஆன சிராஜ் - உத் -தெளலா 1740-ல் தனது  24 ஆம் வயதில் இள ரத்தத்தின் துடிப்போடு வங்காளத்தின் நவாப் நாற்காலியின் அதிபதி ஆனார். இவர் நவாப் ஆனதும்,  எதிர்ப்பே இல்லாமல் எங்கும் சுருட்டிக் கொண்டிருந்த கிழக்கிந்திய கம்பெனியின் ஏகாதிபத்திய ஆவலுக்கு  பல வகைகளில் இடிகளை இனாமாக  இறக்க ஆரம்பித்தார்.  ஆங்கில ஏகாதிபத்தியம் கலக்கம் அடைந்தது. 

சிராஜ் - உத் –தெளலா  வங்காளத்தின் நவாப் ஆகப்  பொறுப்பேற்றுக் கொண்டதை பிரிட்டிஷார் விரும்பவில்லை. ஆகவே அவரது அரசவையில் இருந்த சிலரை இரகசியமாக சந்தித்து , ஆசைகாட்டி சிராஜ் - உத் –தெளலாவை பதவியில் இருந்து கவிழ்த்துவிட திட்டம் தீட்டினார்கள். இந்த விபரம் சிராஜ் - உத் –தெளலாவுக்குத் தெரியவந்தது. அவரது கோபத்தைக் கிளப்பியது. அத்துடன் பிரிட்டிஷாரின் மூன்று முக்கியமான செயல்கள் சிராஜ் - உத் –தெளலா உடைய ஆத்திரத்தை அதிகமாக்கியது. 

முதலாவதாக, வில்லியம் கோட்டையில் அவர்கள் செய்த மாற்றங்கள். இந்த மாற்றங்களை அவர்கள் போர்க் கைதிகளை அடைக்கும் விதமாக செய்தார்கள். இந்தச்செயல் சிராஜ் - உத் –தெளலாவுக்குப் பிடிக்கவில்லை. மேலும் நவாப் ஆன தன்னிடம் - இப்படி தனது ஆளுமைக்கு உட்பட்ட பிரதேசத்தில் கட்டிட மாற்றங்களைக் கொண்டுவருவதற்காக அரசின் அனுமதியை பிரிட்டிஷார் கேட்காதது ஏன் என்று சிராஜ் - உத் –தெளலா கேள்வி எழுப்பினார்.  தட்டிக் கேட்க ஆள் இல்லாமல் வளர்ந்த பிரிட்டிஷாருக்கு இது அதிசயமாக இருந்தது. இந்த இந்திய மண்ணிலும் தங்களை எதிர்க்க ஒருவனா என்று சிந்திக்க ஆரம்பித்தனர். முளையிலேயே கிள்ளி எறியும் திட்டம் முளைவிட்டது. 

இரண்டாவதாக பிரிட்டிஷாருக்கு அனுமதிக்கப் பட்ட வர்த்தக சலுகைகளை அவர்கள் மீறி செயல்பட்டார்கள் என்கிற குற்றச்சாட்டை அவர்கள் மீது சுமத்தினார் நவாப் சிராஜ் - உத் –தெளலா. பிரிட்டிஷாரின் அத்துமீறலான செயல்களால் அரசுக்கு சுங்கம் மூலம் வரவேண்டிய வரிகள் பிரிட்டிஷாரால் ஏமாற்றப் பட்டன என்கிற குற்றமும் பிரிட்டிஷார் மீது சுமத்தப் பட்டது. 

மூன்றாவதாக, சிராஜ் - உத் –தெளலா உடைய அரசுக்கு துரோகம் இழைத்து அரசுப் பணத்தைக் களவாடி கையாடல் செய்த கிருஷ்ணதாஸ் மற்றும் ராஜிவ்பல்லவ் ஆகிய  சிலருக்கு தங்க இடமும் பொருளும் கொடுத்து அவர்களை நவாப்புக்கு எதிராக தூண்டிவிட்டு தங்களின் பாதுகாப்பில் வைத்துக் கொண்ட செயல் நவாபின் ஆத்திரத்தை அதிகமாக்கியது.  

இத்தகைய காரணங்களால் நவாப் சிராஜ் - உத் –தெளலாவுக்கும் பிரிட்டிஷாரின் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும்  உறவு சீர்கெட ஆரம்பித்தது. இந்நிலையில் தங்களின் ஆரம்ப கால அனுமதியை வைத்து ஆங்கிலக் கடற்படையை கல்கத்தாவில் குவிக்க ஆரம்பித்தனர் . படைக் குவிப்பை நிறுத்தும்படி  நவாப் சிராஜ் - உத் –தெளலா விடமிருந்து அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப் பட்டது. அந்த எச்சரிக்கைக்கும்  கிழக்கு இந்தியக் கம்பெனியினர் கேளாக்காதினர் ஆயினர். நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்கிற ஆணவம் மிக்க மனோநிலை நவாப் சிராஜ் - உத் –தெளலாவின் கோபத்தைத் தூண்டியது . உடனே ஆங்கிலேயர் கட்டிய நாம் மேலே குறிப்பிட்ட வில்லியம் கோட்டையை தனது படைகளைவிட்டு ஆக்ரமிக்க உத்தரவிட்டார். ஆங்கிலேயர் கதிகலங்கினர். இந்த முற்றுகையில் இருந்து தான் மட்டும் ஹூக்ளி நதியில் நின்ற ஒரு கப்பலில் ஏறி தப்பித்து சென்றான் அட்மிரல் வாட்சன் என்கிற தளபதி. 

அதற்குப் பின்தான் வரலாற்றில் Calcutta’s Black Hole என்று குறிப்பிடப்படும் “கல்கத்தா இருட்டறைத் துயர் நிகழ்ச்சி “  என்பது நடந்தது. எந்த ஆங்கிலேயர்கள் தங்களை எதிர்க்கும் இந்தியர்களை அடைத்துவைத்து சித்தரவதை செய்ய சின்னஞ்சிறு அறை வைத்து சிறைச்சாலை காட்டினார்களோ அந்த சிறைச்சாலை  அறைக்குள்  நவாப் சிராஜ் - உத் –தெளலாவின் உத்தரவின் பேரில் வில்லியம் கோட்டைக்குப் பொறுப்பாளராக இருந்த ஹால்வேல் உட்பட 146 ஆங்கிலேயர்களும் கைது செய்யப்பட்டு கடும் கோடை இரவில் 18 அடி நீளமும் 16 அடி 10அங்குல அகலமும் இருந்த  சிறிய அறையில் அடைக்கப்பட்டு  வினை விதைத்தவர்கள் வினை  அறுத்தார்கள். கெடுவான் கேடு நினைப்பான் என்கிற இலக்கணத்துக்கு இலக்கியமாக அடைபட்ட 146 ல் 22 பேர்களைத் தவிர அனைவரும் மூச்சுத்திணறி இறந்து கிடந்தனர். ஆங்கிலேயர்களின் ஆட்சி எத்தனை இந்திய உயிர்களை காவு வாங்கி இருக்கிறது என்று கணக்குப் பார்த்தால் ஆங்கிலேயர்கள் காவு வாங்கப் பட்ட கணக்கு மிகக் குறைவாகவே இருக்கும். ஆனால் இந்தக் கணக்கைத் தொடங்கி வைத்தவர் நவாப் சிராஜ் - உத் –தெளலா ஆவார். 

அடுத்த நாட்டினரை அடுக்கடுக்காய்க் கொன்று குவிப்பவன்,  தன் நாட்டினர் செத்தால் தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்கிற நிலைக்கு ஆளானான் ஆங்கிலேயன். ராபர்ட் கிளைவ்,  அட்மிரல் வாட்சன் போன்றோர் சென்னையில் இருந்து கல்கத்தாவுக்கு விரைந்தனர். ஆங்கிலேயரின் போர்ப் படை ஒன்றும் அணி வகுத்தது. 

அடுத்துக் கெடுத்தலிலும் ஆசைகாட்டி  மோசம் செய்வதிலும் ஆங்கிலேயருக்கு நிகரில்லை என்பது வரலாறு நிரூபணம். அந்த வகையில் நவாப் சிராஜ் - உத் –தெளலா வின் உறவினர் மற்றும் ஆலோசகர் மீர் ஜாபர் என்பவர் ஆங்கிலேயர் விரித்த சதிவலையில் சிக்கினார்.  நவாப் சிராஜ் - உத் –தெளலா வின் நடவடிக்கைகள் ஆங்கிலேயரின் கவனத்துக்கு உளவாக சொல்லப் பட்டது.  ஆங்கிலேயர் வஞ்சகமாக நவாப் சிராஜ் - உத் –தெளலா வுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டே படை திரட்டினர். உடன்படிக்கைக்கு எதிராக, ஆங்கிலேயப் படை திரட்டப்பட்டதால் வீரன் நவாப் சிராஜ் - உத் –தெளலா 1757 – ல் வெள்ளையர் முகாமிட்டு இருந்த கல்கத்தா துறைமுகத்தை ஆவேசத்துடன் தாக்கினார். 

நவாப் சிராஜ் - உத் –தெளலா ஆங்கிலேயருடன் பொருதிய இந்தப் போர் பிளாசிப் போர் என்று வரலாற்றில் குறிப்பிடப் படுகிறது. மேலும் ஆங்கிலேயரை எதிர்த்து இந்த மண்ணில் நடந்த முதலாவது மிகப் பெரும் போரும் பிளாசிப் போர்தான். இந்தப் போரில் ராபர்ட் கிளைவின் மூவாயிரம் பேர்களை மட்டுமே கொண்ட ஆங்கில மற்றும் அடிவருடிகளின் படை  , நவாப் சிராஜ் - உத் –தெளலா வின் பதினெட்டு ஆயிரம் குதிரைப் படையையும் ஐம்பது ஆயிரம் காலாட்படையையும் தோற்கடித்தது. இதற்குக் காரணம் மீர் ஜாபரின் துரோகம் ஒரு பக்கம் ஆனாலும் இயற்கையும்  சதி செய்தது. பிளாசிப்  போரில் நான்கு மணிநேரம் பெய்த இடைவிடாத மழையால் நவாப் சிராஜ் - உத் –தெளலாவின் படையின் வெடி மருந்துகள் நனைந்து போய் வெடிக்க மறுத்தன. நவாப் சிராஜ் - உத் –தெளலாவின் வீரம் இயற்கைக்கு முன் மண்டியிட்டது. அன்று பெய்த மழை இந்தியாவின் சரித்திரத்தையே மாற்றியது. இல்லாவிட்டால் ஆங்கிலேயர்கள் அன்றே அழிக்கப் பட்டு இருப்பார்கள் என்பதே வரலாற்று ஆசிரியர்களின் கணிப்பு.

போர்க்களத்தில் துரோகிகள் செய்த சதியால் தோல்வியைத்தழுவிய  சிராஜ் - உத் –தெளலா அங்கிருந்து தப்பித்து முர்ஷிதாபாத் சென்று பின் ஒரு படகில் பாட்னா சென்றார். அங்கு கைது செய்யப்பட்டார்.  இறுதியில்   மீர் ஜாபரின் மகன் மீரான் ஜாபர் என்கிற ஆங்கில அடிவருடியின் உத்தரவு பெற்ற அலி பேக் என்பவனால்  நவாப் சிராஜ் - உத் –தெளலா என்கிற  வங்கத்தின் சிங்கம்  July 2, 1757 அன்று கொல்லப்பட்டது.  

வங்காளத்தில் நவாப் சிராஜ் - உத் –தெளலா சிந்திய ரத்தத்தின் மீதுதான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தனது முதல் அடிக்கல்லை இந்தியாவில் நட்டது. இந்தியாவில் முதல் பிரிட்டிஷ் ஆட்சி நவாப் சிராஜ் - உத் –தெளலா ஆண்டு மாண்ட வங்காளத்தில்தான் நிறுவப்பட்டது. இதுவே இந்தியாவில் தங்களின் ஆதிக்கம் நிலைபெற்ற நாள் என்று ஆங்கிலேயரும் ஆணவத்துடன் குறிப்பிடுகிறார்கள்.  
இன்ஷா அல்லாஹ் இன்னும் சந்திக்கலாம். 
இபுராஹீம் அன்சாரி
===============================================
எழுத உதவிய குறிப்புகள் :-
Is the Black Hole of Calcutta a myth? 
The Parliamentary history of England from the earliest period to the year 1803.  
Akhsaykumar Moitrayo, Sirajuddaula, Calcutta 1898.
===============================================

23 Responses So Far:

Unknown said...

சிராஜ்-உத்-தௌலா - இந்திய மண்ணின் வீர ரத்தம்
வெள்ளையரின் சிம்ம சொப்பனம்.
சூழ்ச்சிக்காரர்களின் சூழ்சிகளை முறியடித்த சூழ்ச்சிக்காரர்.

இதுவல்லவோ வீரம், தியாகம்,

அபு ஆசிப்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சிராஜ்-உத்-தெளலா பற்றி சிறிய குறிப்பாக எப்போதோ படித்த ஞாபகம், இந்த அற்புதமான தொடர் வயிலாக மாவிரர்களை அடையாளம் காணப்பட உதவுகிறது !

ஜஸாக்கல்லாஹ் ஹைரன காக்கா !

சரித்திரம் மாற்றிய தரித்திரம் பிடித்தவர்களை ஒரு கை பார்க்கிறது ! இந்த தொடர் !

Ebrahim Ansari said...

தம்பி அபூ ஆசிப் !

நேற்று இன்று நாளை தொடருக்கு தங்களின் கருத்தூட்டம் வரவில்லை என்றபோது எங்கே ஊர் வந்து இருக்கிரீர்களோ என்று நினைத்தேன்.

இப்போது மீண்டும் ஒரு முதள் இடம் பிடித்து இருக்கிறீர்கள். ஜசாக் அல்லாஹ் ஹைரன்.

தம்பி அபூ இப்ராஹீம்!

//சிராஜ்-உத்-தெளலா பற்றி சிறிய குறிப்பாக எப்போதோ படித்த ஞாபகம், //

உண்மைதான் . இவர் பற்றிய கேள்வி நமது பாடங்களில் இரண்டு மார்க் தரும் ஒன் வேர்டு கேள்வியாகவே வரும். பெரும்பாலும் பிலாசிப் போர் எங்கே நடந்தது? என்கிற மாதிரிதான்.

கலகத்தா இருட்டறை சிறை சம்பவம் எல்லாம் பள்ளியில் கல்லூரியில் படித்த நினைவு இல்லை. இப்போது தொடருக்காகவே படித்து எழுதுகிறோம்.

படிப்பதும் பகிர்வதும் உள்ளூர ஆனந்தம் தருகிறது.

Ebrahim Ansari said...

//நவாப் சிராஜ் - உத் –தெளலா ஆங்கிலேயருடன் பொருத்திய இந்தப் போர்//

தம்பி அபூ இபுராகிம்.! பொருத்திய என்பதை பொருதிய என்று மாற்ற வேண்டுகிறேன். தட்டச்சுப் பிழைக்கு வருந்துகிறேன்.

sabeer.abushahruk said...

எத்துணைத் துடிப்பான வீர வரலாற்றுக்குச் சொந்தக்காரர் நவாப் சிராஜ்-உத்-தெளலா!!!
பாக்கிஸ்தான் தீவிரவாதியைப் பிடிக்கப் போகும் நம் சினிமா கதாநாயகர்கள் இதுபோன்ற வீர வரலாற்றைப் படமாக்கி அதில் நடிக்கலாம் அன்றோ? இப்படித்தான் பழைய திரைப்படங்களில் ஒரு மன்னனைப் பற்றியோ ஒரு ராஜாங்கத்தைப் பற்றியோ முக்கியமான நிகழ்வுகளைக் கொண்டு படமாக்கி மூன்று மணிநேரம் உட்கார வைத்து கதை சொல்வார்கள்.

இப்போது வலிமையாய் விளங்கும் சினிமா மற்றும் தொலைக்காட்சிகளில் இந்த வீர நவாபின் காலத்தை நாம் ஆவணப் படுத்துதல் மிகமிக அவசியம். போராடியாயினும் பள்ளிப்பாடப்புத்தகங்களில் இஸ்லாமிய சுதந்திரத்திற்குப் பாடுபட்ட அத்துணை மன்னர் மற்றும் வீரர்களின் வரலாறும் இடம்பெற வைக்க வேண்டும்.

نتائج الاعداية بسوريا said...

அன்பு இப்ராஹிம் அன்சாரி காக்கா !

உறங்கிய உண்மையான சரித்திரங்கள் தட்டி எழுப்பப்படுகின்றன.

இதுவல்லவோ வரலாறு.

இவ்வளவு காலம் படித்தது அனைத்தும் வரலாறு என்ற பெயரில் பொய்களும் புரட்டும், உண்மைக்கு புறம்பானவைகளுமே. மதம் பூசி மறைக்கப்பட்ட உண்மைகள் வரலாற்றுத்துரைகளில் உள்ளவர்களின் செவியில் ஏறும் என்று எதிர் பார்க்கலாமா ?

இவ்வளவு தெளிவான விளக்கங்களுடன் தங்களின் இவ்வரலாற்று ஆராய்ச்சி
உண்மையில் ஒரு வியத்தகு விஷயமே .

உங்களுக்கு அல்லா நீண்ட ஈமானுடன் கூடிய ஆயுளை தரட்டும்.

அபு ஆசிப்.

نتائج الاعداية بسوريا said...

//நேற்று இன்று நாளை தொடருக்கு தங்களின் கருத்தூட்டம் வரவில்லை என்றபோது எங்கே ஊர் வந்து இருக்கிரீர்களோ என்று நினைத்தேன்.//
காக்கா,

கொஞ்சம் தலைவலி .

அதனால் பின்னோட்டம் இடவும், லேப் டாப்பை பார்க்கவும் முடியவில்லை.
ஆதலால் பின்னோட்டம் இடுவதில் சிறு தடங்கலாகிவிட்டது.

எனக்காக என் ஈமானுக்கும் ஆரோக்கியத்திற்கும் துஆ செய்யவும்.

தங்களின் அன்பு தம்பி அபு ஆசிப்.



Ebrahim Ansari said...

//எனக்காக என் ஈமானுக்கும் ஆரோக்கியத்திற்கும் துஆ செய்யவும்.//

நாங்கள் அனைவரும் தங்களின் நல் சுகத்துக்காக து ஆச செய்கிறோம். ஆமீன்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நம்மவர்களின் சுதந்திர வரலாறு இப்படியிருக்க இல்லாததை இட்டுகட்டி பொய்யான கதைகளை வரலாறு என்று சொல்லி அவங்க நோக்கத்தில் தீவிரவாதத்தை தொடர்கிறார்கள்.

நேற்றைய கருப்பு தினத்தையே வெள்ளைதினம்போல கொண்டாடும் காவிக்கயவர்களுக்கு உறு துணையாய் பெரும்பாலான ஊடகங்களும் இருட்டடிப்பு செய்து நமது துயர நாளைக்கூட வெளிக்காட்டாமல் செய்து நடுநிலையிலிருந்து தவறி விட்டன.

முஸ்லிம் லீக்கின் இளம்பிறை மாநாட்டில் அன்னியரை முதலில் எதிர்த்து ஸஹீதான நவாப் சிராஜுத் தெளலா அவர்கள் பற்றியும் நினைவூட்டி பேசச்சொல்லுங்க காக்கா!

sabeer.abushahruk said...

//காட்டு மல்லி பூத்து இருந்தாலும் காவல்காரனாக மொகலாயர் காத்து இருந்ததால் ஆங்கிலேயன் என்கிற ஆட்டம் போட்ட மயிலை காளை தோட்டம் மேயப் பார்க்க முடியவில்லை.//

//கீரைப் பாத்தி நாடுகள் தங்களுக்குள் அதிகாரத்துக்காக அடித்துக் கொண்டது ஆங்கிலேயருக்குப் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் ஆனது.//

//ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது உண்மை ஆயிற்று.//

//இந்தியா வேலி இல்லாத தோட்டமானது. அதனால் ஆங்கில மயிலக்காளை இப்போது ஆட்டம் போட்டுத் தோட்டம் மேயப் பார்த்தது. //

உவமானங்களும் இலக்கிய ரசம் சொட்டும் எழுத்தாள்மையும் நேரடியான நெத்தியடி வசனங்களும் இந்தத் தொடருக்கென்றே பிரத்யேகமாக அமைக்கப்பட்டதா, அல்லது தானாகவே அமைந்து விட்டனவா?

போரைக் குறித்துச் சொன்னாலும் போரடிப்பதில்லை இத்தொடர்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா காக்கா.

Ebrahim Ansari said...

//நேற்றைய கருப்பு தினத்தையே வெள்ளைதினம்போல கொண்டாடும் காவிக்கயவர்களுக்கு உறு துணையாய் பெரும்பாலான ஊடகங்களும் இருட்டடிப்பு செய்து நமது துயர நாளைக்கூட வெளிக்காட்டாமல் செய்து நடுநிலையிலிருந்து தவறி விட்டன.//

தம்பி ஜகாபர் சாதிக் அவர்களுக்கு,

நேற்று நடந்த இயக்கங்கள் நடத்திய போராட்டங்களை கவனிக்கும்போது இதனால் என்ன நடந்துவிடப் போகிறது என்கிற சலிப்பே எனக்கு மேலோங்கி நின்றது.

காரணங்கள் :-

ஒரு இயக்கம் தன்னிடம் உள்ள இளைஞரகளையும் பெண்களையும் வேனில் ஏற்றிக் கொண்டு போய் மாவட்டத்தலை நகரங்களில் முழக்கமிட்டது.

மற்றொரு இயக்கம் இரயில மறியலைத் தனியே நடத்தியது

இன்னொரு இயக்கமும் ஆண்கள் பெண்களுடன் முழக்கப் போர் செய்தது.

இப்படி இன்னும் சொல்லலாம். இந்த இயக்கங்களில் இருப்பவர்களில் ஒருவருக்கு மற்றவரைப் பிடிக்காது. ஒரு இயக்கம் இருக்கும் இடத்தில் மற்ற இயக்கம் இருக்காது.

மாற்றார் என்ன செய்கிறார்கள் என்றால் பிரிந்து கிடக்கும் தங்களின் இயக்கங்களை ஒன்று திரட்டி சங் பரிவார் என்று வைத்து இருக்கிறார்கள். நாமோ இன்று ஒன்றாக இருக்கிறோம் . நாளை பிரிந்து விடுகிறோம். அவர்கள் ஒன்று சேர்ந்து நம்மை அழிக்கப் பார்க்கிறார்கள். நாமோ , பிரிந்து பிரிந்து நம்மையே அழித்துக் கொள்ள கருவியாகிறோம்.

ஒருவேளை பாபர் மசூதியை மீண்டும் கட்ட அரசு உத்தரவும் உதவியும் செய்வதாக வைத்துக் கொள்வோம். அதை எந்த இயக்கம் கட்டும்? ஒரு இயக்கம் தரும் டிசைன் அடுத்த இயக்கத்துக்குப் பிடிக்குமா? ஒரு தலைமையை மறு தலைமை ஏற்குமா?

நண்டின் குணம் நம்மிடையே இருக்கும்வரை அடுத்தவரைக் குறை சொல்லி ஆகப போவது இல்லை. அவன், அவன் பாதையை தீர்மாநித்துவிட்டான். நாம் நம் பாதை எது என்று இன்னும் தேடுகிறோம்.

வரும் தேர்தலுக்கு முன்பாவது அனைத்து இயக்கங்களும் ஒன்று சேரவேண்டும். இதற்கான முயற்சியை - காயிதே மில்லத அவர்கள் கண்ட இந்திய முஸ்லிம் லீக் இளம்பிறை மாநாட்டில் முக்கிய தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்.

செய்வார்களா? சந்தேகமே.

Ebrahim Ansari said...

//உவமானங்களும் இலக்கிய ரசம் சொட்டும் எழுத்தாள்மையும் நேரடியான நெத்தியடி வசனங்களும் இந்தத் தொடருக்கென்றே பிரத்யேகமாக அமைக்கப்பட்டதா, அல்லது தானாகவே அமைந்து விட்டனவா?//

தம்பி சபீர் அவர்களுக்கு,

முதலில் எழுதுவது. பிறகு இப்படியெல்லாம் அலங்கரிப்பது வழக்கம்.

நீங்கள் கவிதை எழுத்தும் போது எப்படி வார்த்தைகள் வந்து விழுந்து எங்களை தேன் குடிக்கும் வண்டாக ஆக்குகின்றனவோ அப்படி சில தானாக வந்து விழுகின்றன. எல்லாப் புகழும் இறைவனுக்கே.

வரலாற்றை வள வள என்று எழுதினால் போரடிக்கும். செந்தூரத்தில் சிறிது தேன் கலந்து கொடுக்க வேண்டுமென்ற பேராசிரியர் ஜெயராஜ் அவகளின் பாலிசி.

Ebrahim Ansari said...

Thambi Jahabar Sadiq,

சுவனப்பிரியனின் வலைதளத்தில் இருந்து :-

முதலில் இவர்களிடத்தில் எவ்விதமான தூரநோக்கு செயல் திட்டங்களும் கிடையவே கிடையாது. “எங்களுக்குள் தீண்டாமை கிடையாது, பேதமை கிடையாது, ஒற்றுமை அதுவும் கிடையாது” என்று கல்லிடைக்குறிச்சி சொற்பொழிவொன்றில், மறைந்த போராளி பழனி பாபா அவர்கள் இசுலாமியர்களைக் குறித்துச் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். உண்மையில் அதுதான் ஆழ்பெரும் உண்மை. வருடம் டிசம்பர் 6 பிறந்துவிட்டால் போதும், அதற்கு முன்பிருந்து ஒரு காலமாக, சுவர் விளம்பரம், தட்டிகள், நோட்டீஸ் பிரச்சாரம், இறுதியில் அன்றைய தினத்தில் ஒரு கண்டனக் கூட்டம், கருத்தரங்கு, பேரணி, இவ்வள‌வுதான் இத்தனை ஆண்டு காலமாக இந்த இசுலாமியர்களும், அவர்களை வழிநடத்தும் தலைவர்களும் கடைபிடிக்கும் போராட்ட வழிமுறைகள். இதனால் கட்டடம் எப்படி உயிர் பெறும்?

"டிசம்பர் 6 போராட்டம் என்பதே ஏதோ 'வருஷம் பாத்திஹா' சடங்கு போல ஆக்கப்பட்டு விட்டது. ராமர் கோவிலைக் கட்டுவதற்காக விஹெச்பியால் தொடங்கப்பட்ட பல பிரிவுகள் தமது இலக்கை அடைய ஒன்றிணைந்து நிற்பதையும், பாபர் மஸ்ஜித் மீட்புக்காகத் தொடங்கப்பட்ட நமது இயக்கங்கள் பல கூறுகளாகப் பிளவு பட்டு நிற்பதையும் தான் நம்மால் காண முடிகிறது” என்று குறிப்பிட்டுள்ளார், திரு.ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் தனது ‘குருதியில் நினையும் நூலில்’(ப-98). மேலும் ஆர்.எஸ்.எஸ்ஸின் நுண் சாதுரியங்களையும் அதில் குறிப்பிட்டுக் காட்டி, இதில் துளியேனும் நம் இசுலாமியர்களிடத்தில் உள்ளதா என்றும் வினவியுள்ளார். அலகாபாத் தீர்ப்பு வெளியான அதே ஆண்டில் இவர் எழுதிய இந்த வரிகளை இரண்டு ஆண்டுகள் கடந்தும் இசுலாமியர்கள் சுயபரிசோதனை செய்துள்ளார்களா என்றால் இல்லை என்பதே வேதனை. எப்பொழுதும் போல இந்த வருடமும் தனித்தனியே ஆரப்பித்துவிட்டனர் தங்களின் துக்க நாள் அனுசரிப்புகளை.

Ebrahim Ansari said...

ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் எழுதிய அதே நூலில், இசுலாமியர்களின் கையறு நிலையினை அவர் தெளிவாகக் கூறியிருக்கின்றார். வி.ஹெச்.பி செய்த பள்ளிக்கூடத் திறப்பு, அதில் இராமர் பற்றிய திணிப்பு, ஊடகங்களில், சின்னத்திரைகளில் இராமர் தொடர் ஒளிபரப்பு, மலைவாழ் மக்களிடத்தில் இராமர் சிலை இலவச அளிப்பு என்று அவர்களின் செயல்திட்டங்களை கூறியிருக்கின்றார். இதில் ஒன்றையேனும் இசுலாமியர்கள் செய்துள்ளார்களா என்றால் இல்லை? சமீபத்தில் 26-இயக்கங்கள் தமிழகத்தில் ஒன்றிணைந்து, முகம்மது நபி அவர்களை இழிவுபடுத்திய அமெரிக்க அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்து, அமெரிக்க தூதரகத்தினை தமிழகத்தை விட்டும் துரத்தியடித்தது. ஏன் இந்த ஒற்றுமை இதில் வருவதில்லை. ஏன் இந்த 26 இயக்க‌ங்களிடத்திலாவது ஒரு பள்ளிக் கூடம் உள்ளதா? ஊடகம் உள்ளதா? அரசியல் பலம் உள்ளதா? தென்னக இசுலாமியர்களின் நிலையே இப்படியென்றால், வடக்கில் உள்ளவர்களின் நிலை இன்னும் மோசமாக உள்ளது. அங்கு அவர்கள் இசுலாமியர்களாக உலாவுவதே பெரிய சிக்கல்.

இப்படி 20 வருடங்கள் கழிந்தும் எந்த செயல் திட்டமும் அற்று இந்த சமூகம் இருப்பதன் பின்புலம், இரண்டு. ஒன்று இவர்களிடத்தில் இல்லாத ஒற்றுமை, இன்னொன்று இந்துத்துவாக்களின் திசை மாற்றும் வேலை.

மசூதி இடிக்கப்பட்டதும் இசுலாமியர்கள் எழுந்து விடுவார்கள் என்ற காரணத்தால், இசுலாமியர்களுக்கு தொடர்ந்து வெவ்வேறு பிரச்சனைகளைக் கொடுத்து, அவர்களை திசைமாற்றிக் கொண்டே உள்ளது காவிக் கும்பலும், அதனோடு இருள் கரம் கோர்த்திருக்கும் காங்கிரஸ் கும்பலும். அதனால்தான் இசுலாமியர்கள் டிசம்பர் ஆறன்றே இதனை நினைவு கூறும் அவலம் தொடர்கின்றது.

மசூதி இடிப்புக்குள்ளான சில வருடங்களில், பழனிபாபா கொலை செய்யப்படுகிறார். ஒரு வீரியமிக்க தலைமையை அழித்துவிட்டது. இந்தியாவெங்கும் தொடர்ந்து குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டு, இசுலாமிய இளைஞர்கள் சிறைகளுக்குள் நிரப்பப்படுகின்றனர், இசுலாமியர்களின் பிற‌ப்புரிமையான இடஒதுக்கீடு மறுக்கப்பட்டு அலைக்கழிக்கப்படுகின்றனர், அப்துல்நாசர் மதானி தொடர்ந்து சிறை பிடிக்கப்பட்டுள்ளார், 2002-ல் குஜராத்தில் இசுலாமியர்கள் கொத்து கொத்தாக கொலை செய்யப்பட்டனர், இப்படி ஒரு இழப்பில் இருக்கும் சமூகத்திற்கு அடுத்தடுத்து பிரச்சனைகளைக் கொடுத்து அதன் மூலம் அவர்களை விழிப்புணர்வு அடையவிடாமல், எக்காலமும் போராடிக் கொண்டே இருக்கும் முகமாக, இசுலாமியர்களை திசை திருப்புவதில் கண்ணும் கருத்துமாக செயல்படுகின்றனர், ஆர்.எஸ்.எஸ் வகையறாக்கள்.

Ebrahim Ansari said...

இசுலாமியர்களின் ஏமாற்றம் தவிர்க்க இயலாததாக உள்ளது. தங்களுக்கென்று ஓர் அரசியல் பலத்தினை உருவாக்காமல், ஊடக வலிமையினை உருவாக்காமல், அறிவுத் தலைமுறைகளை உருவாக்காமல் இவர்களால் என்றுமே எழுந்திருக்க முடிய முடியாது. இதற்க்கெல்லாம் தேவை ஒற்றுமை. அது நிகழ வேண்டுமெனில் ஒவ்வொரு இசுலாமியனும் சிந்திக்க வேண்டும்.

20 வருட காலத்தில், ஒவ்வொரு இயக்கமும் தலைக்கு ஒரு மாணவனைத் தேர்ந்தெடுத்து கல்வி கொடுத்து, சிவில் சர்வீஸ் பரிட்சை எழுதப் பயிற்சி கொடுத்து ஊக்குவித்து, அவனுக்கான எல்ல செலவுகளையும் ஏற்று வளர்த்திருந்தால் இன்று இசுலாமியர்கள் மத்தியில் குறைந்தது பத்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உருவாகியிருக்க மாட்டார்களா? ஐ.பி.எஸ். அதிகாரிகள் உருவாகியிருக்க மாட்டார்களா? ஏன் செய்யவில்லை இந்த இயக்கங்கள்?

இருபது வருடங்களில் இந்தப் போராட்டங்களுக்காக செலவு செய்த தொகையினைச் சேமித்து ஒரு பள்ளிக்கூடம் கட்டியிருக்கலாம். செய்தார்களா? பிரதான இயக்கங்கள் ஒன்றிணைந்து தங்களுக்காக ஒரு செய்தி ஊடகம் உருவாக்கியிருக்கலாம். செய்யவில்லையே ஏன்?
இவர்கள் மத்தியில் நம்பிக்கையில்லை, ஒற்றுமையில்லை. தற்பெருமை, போட்டி மனப்பாங்கு மட்டுமே உள்ளது.

இது கருப்பு நாள் மட்டும், இல்லை காவிகளின் நாள் என்று நாம் உணராத வரையில் வெற்றி நமக்கிங்கு இல்லவே இல்லை. நாம் சக்தி பெற, நீதம் பெற ஒற்றுமை தவிர மாற்று இல்லை என்று உணர்ந்ததை நிறைவேற்றாத வரையில், வெற்றி எட்டாக் கனியே.

பாசிசவாதிகளின் ஹிந்துஸ்தானத்திற்கு, சுதந்திர போரட்ட நாயகர்களின் வழிவந்த இசுலாமியர்கள் என்றும் தடையாகவே இருப்பர். இதனை அடைய இசுலாமியர்களை விரட்டியடிக்கவும், தலித்துகளை ஒடுக்கி வைக்கவும் பாசிசம் உறங்காது வேலை செய்யும். ஆனால் தவறு செய்பவனே, அவனை தண்டிக்கும் வழிமுறையினையும் காட்டிக் கொடுத்து விடுகின்றான். அவ்வகையிலேதான், இந்துத்துவாக்கள் ஒரு தவறு இழைத்துவிட்டனர். அதுவே டிசம்பர்-6. அவர்களால் அந்நியப்படுத்தப்படும் இசுலாமியர்களும், ஒடுக்கப்படும் தலித்துகளும் இணைவு கொள்வது இத்தளத்தில்தான். ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரலாக ஓங்கி மறைந்த சட்டமேதை, இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மறைந்த நாளில், மசூதியை இடித்து இசுலாமியர்களுக்கு தங்களின் தோழமையினை அடையாளம் காட்டிவிட்டது ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத அமைப்பு.

இவர்களின் செயல்பாடுகள் ஒவ்வொன்றிலும் ஒரு உள்ளார்ந்த அர்த்தம் இருக்கும், அவ்வகையில் மசூதியினை இவர்கள் இடித்தது, “நான் சாகும் போது ஒரு இந்துவாகச் சாக மாட்டேனென” கூறி மரணித்திட்ட மாவீரர் அம்பேத்கர் மறைந்த டிசம்பர்-6 ஆகும். வேறு எந்தக் காரணமும் இருப்பதாக இந்நாள் குறித்த வரலாறுகள் இல்லை.

இதனால்தான், “எரிபடும் சேரிகளில், இடிபடும் மசூதிகளில் புறப்படும் விடுதலைச் சூறாவளி' என்று தொல்.திருமாவளவன், திசம்பர் 6 - 1992 அன்றே மதுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இனி இசுலாமியர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான். தலித் சமூக மக்களிடையே நல்லுணர்வு வளர்த்து, தங்களின் பொது எதிரியினை மண்ணைக் கவ்வச் செய்ய வேண்டும். அதற்கு எதிர்வரும் நாடாளுமன்றமும், சட்டமன்றமுமே பாடமாக இருக்க வேண்டும். வீணாக பணத்தினை செலவழிக்காமல் அதனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும். அடுத்த ஆண்டிற்குள்ளாவது இசுலாமியர்களுக்கென்று ஒரு தனி ஊடகமும், ஒருமித்த தலைமை கொண்ட கட்சி கூட்டணியும் அமைந்திட வேண்டும்.

இளைஞர்களை அறிவுத் தளத்தில் ஊக்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு இயக்கமும் குறைந்தது ஐந்து மாணவர்களைத் தெரிவு செய்து, அவர்களுக்கு கல்வி, இருப்பிட, உணவுகளை இலவசமாக்கி, அவர்களை ஒவ்வொரு துறைக்கும் கொண்டு செல்ல வேண்டும். இன்றிலிருந்து முயற்சித்தாலே, அடுத்த வருடங்களில் இசுலாமிய ஆட்சியாளர்கள் சொல்லும் விதமாக‌ ஏற்பட்டு இருப்பார்கள். இதுபோன்ற ஆரோக்கியமான கருத்துக்களைக் கூறி, இவைகளை செயல்படுத்த ஒவ்வொரு இசுலாமியனும் அவரவர் இயக்கத் தலைமைகளை கட்டாயப்படுத்த வேண்டும். இதில் கயமம் காட்டும் இயக்கங்களை இசுலாமியர்களே நீங்கள் புறக்கணிக்க வேண்டும்.

sabeer.abushahruk said...

அன்பிற்குரிய காக்கா,

நான் மேலே குறிப்பிட்டபடி, நம் மூதாதையரின் வீர தீர செயல்கள் உள்ளடக்கிய வரலாற்றை, வலுவான ஊடகமான சினிமாவில் ஆவணப்படுத்துவதைப் பற்றி தங்கள் கருத்தை அறிய ஆவல்.

Ebrahim Ansari said...

தம்பி சபீர் அவர்களுக்கு,

என்னை பொருத்தவரை மெசேஜ் என்கிற வரலாற்று திரைப்படம் ஆங்கிலத்தில் வந்து தற்போது தமிழ்ப் படுத்தப் பட்டு இஸ்லாமிய விழாக்களில் இலவசமாக வழங்கப் படுகின்றன. இந்த ஒலித்தகடு இல்லாத வீடே இல்லை என்று ஆகிவிட்டது.

அதே போல் சில உணர்வு பூர்வமான வரலாற்று வீரர்களின் கதைகளை ஆவணப்படுத்தி வெளியிடுவதில் தவறில்லை. ஊடகத்தின் பல்வேறு பரிணாமங்களை நாம் பயன்படுத்துகிறோம். அந்த அளவில் நம்முடைய வரையறைகளை மீறாமல் பயன்படுத்துவதில் தவறில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து.

அலாவுதீன்.S. said...

அன்புச் சகோதரர் இப்ராஹிம் அன்சாரி அவர்களுக்கு : அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)!

வரலாற்றில் காவிச்சேற்றில் மறைத்து வைக்கப்பட்ட இஸ்லாமிய உண்மைத் தியாகிகள் அனைவரின் வரலாறும் வைரம் போல் வெளியே வரவேண்டும்.

ஒரு வீரரையும் விட்டு வைக்காமல் அனைவரின் வரலாற்றையும் வெளிக் கொண்டு வாருங்கள்.

உமர் முக்தாரின் வீரம் போல் ஆவணமாக வெளிவரட்டும்.

வல்ல அல்லாஹ் தங்களுக்கு நல்லருள் புரியட்டும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மரியாதைக்குரிய இ. அ. காக்கா

எனது ஓரிரு வரி கருத்துக்கு உங்களின் நீளமான ஆழமான ஆதங்கம் மிகவும் கவனிக்கத் தக்கவை.

ஒற்றுமை என்பது அறவே இல்லை என்பது சரி தான்.
ஆனால் மழுங்கிப் போன நம் சமுதாய உணர்வுகளை புதுப்பிக்க வருடத்தில் ஒருமுறையாவது பண்ணுவதே பெரிய காரியம். இன்றைய நம்நாட்டு நிகழ்வுகளை பார்க்கும் போது போராட்டம் என்பது மிகவும் அவசியம் என்பதும் எனது கருத்து.

Ebrahim Ansari said...

தம்பி ஜகபர் சாதிக் அவர்களின் அன்பான கருத்து

//இன்றைய நம்நாட்டு நிகழ்வுகளை பார்க்கும் போது போராட்டம் என்பது மிகவும் அவசியம் என்பதும் எனது கருத்து.//

நானும் உங்கள் கருத்து சரிதான் என்கிறேன். ஆனால் அந்த ஒருநாளைக்காவது அனைவரும் இணைந்து அதைச் செய்யலாமே! உதாரணமாக பல கொள்கைகள் கொண்ட கட்சிகள் தேர்தலில் கூட்டணி அமைக்கும்போது ஒரு காமன் மினிமம் ப்ரோக்ராம் என்று ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அதேபோல் பாபர் மசூதி போன்ற உணர்வு பூர்வமான விஷயங்களிலாவது நாம் ஒன்று பட்டு போராடலாமே.

விஸ்வரூபத்துக்கு மட்டும் சேர்ந்துவிட்டு ??? பாபரி மஸ்ஜித் விவகாரம் இந்திய முஸ்லிம்களுக்கு விஸ்வரூப பிரச்னை இல்லையா?

நான் சொல்வது போராடத்தான் வேண்டும். இந்த போராட்டத்தையாவது ஒன்றுபட்டுப் போராடுங்கள் என்பதுதான்.

யார் கண்டது ஒருமுறை குலுக்கும் கைகள் தொடர்ந்தும் குலுக்கலாம்.

Ebrahim Ansari said...

//மழுங்கிப் போன நம் சமுதாய உணர்வுகளை புதுப்பிக்க வருடத்தில் ஒருமுறையாவது பண்ணுவதே பெரிய காரியம்.//

உண்மைதான்.

ஆனால் நடப்பில் - வேதனையுடன் கூறுகிறேன்- பாபரி மஸ்ஜித் விவகார ஊர்வலத்தில் எனது இயக்கத்துக்கு அதிக கூட்டம் வருகிறதா அல்லது உனது இயக்கத்துக்கு அதிகக் கூட்டம் வருகிறதா என்று காட்டுவதே முதல் குறிக்கோளாக இருக்கிறது.

Ebrahim Ansari said...

வ அலைக்குமுஸ்ஸலாம்.

சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கு, ஜசாக் அலாஹ் ஹைர்.

//ஒரு வீரரையும் விட்டு வைக்காமல் அனைவரின் வரலாற்றையும் வெளிக் கொண்டு வாருங்கள்.//

இன்ஷா அல்லாஹ்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அரசியலில் ஈடுபடுகிறேன் என்று ஓரிரு சீட்டை வாங்கிவிட்டு பெரும்பாலானவற்றை தட்டி கேட்காமலும்,

அரசியலில் ஈடுபடாமல் இருந்தால் தான் எல்லாரையும் தட்டி கேட்க முடியும் என்று சொல்லி தனிப்பிறவியாய் மட்டும் களம் இறங்குவதும், அதே சமயம் இன்னொரு இயக்கம் செய்யும் போது நீ செய்யும் போது நாங்கள் வருவதா என வரட்டு கெளரவத்துகாக ஒதுங்கிக் கொள்வதும்,

நாங்கள் பாரம்பரியம் என்று சொல்லிவிட்டு போராட்டம் எதுவுமே இல்லாமல் ஒரே கட்சியுடன் ஓரிரு சீட்டை வாங்கி விட்டு கழுதை தேய்ந்து கட்டறும்பாய் சிறுத்து நிற்பதையும்,

கிளை ஆரம்பம் என்றவுடன் போட்டி போட்டு தெருதெருவாய் கிளை அமைப்பதையும் இன்று கண்டு வருகிறோம்.

பதவிக்காக அல்லது நானா நீனா என்பதற்காக எதையும் செய்யுங்கள் எப்படியும் போங்கள்.

ஆனால் தேர்தல் என்று வந்துவிட்டால் நியாயமான கோரிக்கையுடன் விகிதாச்சாரப்படி சீட்டைப் பெற
முக்கிய மார்க்க பிரச்சனை என்று வந்துவிட்டாலாவது விஸ்வரூபமாய் ஒன்று சேருங்கள். இன்சா அல்லாஹ்

இது காலத்தின் கட்டாயம்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு