தொடர் : பகுதி ஐந்து
உலகையே ஆட்டிப்படைக்கிற இந்த உணர்வு பூர்வமான பேசுபொருள் தொடரை தொடர்ந்து எழுதும் முன்பு இத்தொடரின் கடந்த அத்தியாயத்தில் நாம் எடுத்துக் காட்டி எழுதி இருந்த சில வரலாற்றுச் செய்திகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து (தம்பி) சகோதரர் இப்னு அப்துல் ரஜாக் அவர்கள் அதிரைநிருபரின் வாசகராக எழுப்பி இருந்த சில கேள்விகளுக்கு பதில் கூறிவிட்டே தொடர வேண்டுமென நினைக்கிறேன்.
தம்பி இப்னு அப்துல் ரஜாக் அவர்கள் எழுப்பி இருந்த வினாக்களுக்கு கருத்துரைப் பகுதியிலேயே தம்பி கவிஞர் சபீர் அவர்கள் சுருக்கமான ஆனாலும் பொருத்தமான பதிலை பதிவு செய்து இருந்தாலும் தொடரின் எழுத்தாளர் என்கிற முறையில் விரிவான விளக்கம் தேவை என்று சில பெரியவர்களும் உலகின் பல பாகங்களில் இருந்து சில நல்லெண்ணம் கொண்ட சகோதரர்களும் அலைபேசிகள் அழைப்பின் மூலம் கேட்டுக் கொண்டதால் அந்த சந்தேகங்களுக்குரிய பதில்களை நான் அறிந்தவரை எழுதிவிட்டுத் தொடரைத் தொடர நினைக்கிறேன். இன்ஷா அல்லாஹ்.
முதலாவதாக எழுப்பப்பட்டுள்ள சந்தேகம் / ஆட்சேபம் / கேள்வி /கருத்து என்னவென்றால்
என்பதாகும். இதற்கான பதில் :
இதுவரை எழுதி இருந்த அந்தப் பகுதி ஒரு மறைமுகமான நையாண்டியின் முறையிலேயே எழுதி இருந்தேன் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். போப் ஆண்டவர் அர்பன் அவர்கள் தனது பாவத்தை மன்னிக்கும்படி அவர் நம்பிய ஆண்டவர் என்று குறிப்பிட்டது அவர் நம்பிய ஆண்டவரையே நானும் நம்பியதால் எழுதப்பட்டதல்ல. போப்பாண்டவர் நம்பிய ஆண்டவருக்கு அந்தப் பாவங்களை மன்னிக்கும் அளவுக்கு சக்தி அல்லது ஆற்றல் இல்லை என்பதையும் கேள்வி தொடுத்து இருக்கும் தம்பி அவர்களே சுட்டி இருப்பதுபோல் is a prophet and slave தான் என்பதை நானும் உறுதியாக நம்பியே ஈமான் கொண்டு இருக்கிறேன். எனது எழுத்தில் ஒரு இறைத்தூதரான நபி ஈசா (அலை) அவர்களை மனிதர்களின் பாவங்களை மன்னிப்பதற்காக நம்பிப் பயன் இல்லை அந்த ஆற்றல் அவருக்கு இறைவனால் வழங்கப் படவில்லை என்ற செய்தி தொக்கி நிற்கிறது. கருத்தை தொப் என்று முகத்தில் அடித்தாற்போல் போட்டு உடைக்காமல் நளினமாக இப்படி தொக்கி நிற்கும்படி எழுதியது மட்டுமே எனது தவறாக இருக்க முடியும். மற்றபடி Your Comment is unacceptable என்று சொல்லுமளவுக்கு எனது ஈமானை நான் விட்டுவிடவில்லை என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
மேலும், அதே கருத்தில் கேள்வி எழுப்பிய தம்பி அவர்கள் //And the pope believed a fake god, Jesus.// என்று குறிப்பிட்டு இருப்பதில் FAKE GOD, JESUS என்கிற வார்த்தைகளை நான் ஆட்சேபிக்கிறேன். அடுத்த மத நம்பிக்கையாளர்களை நோக்கி, இப்படிப் பட்ட கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. காரணம் “உங்களது மதம் உங்களுக்கு ; எங்களது மதம் எங்களுக்கு” என்கிற பொருள் பதிந்த “ லக்கும் தீனுக்கும் வலிய தீன்” என்கிற அருள்மறையின் வார்த்தைகளை தம்பி அவர்கள் உணர்ந்து பார்த்து விட்டு அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்க வேண்டுமென்று நான் எதிர்பார்க்கிறேன். காரணம் , அடுத்தவர்களுடைய நம்பிக்கைகளை நாமும் நம்ப வேண்டுமென்ற கட்டாயமில்லை எனினும் அவர்களின் நம்பிக்கையைப் புண்படுத்தக் கூடாது என்கிற அடிப்படையிலேயே //அவர் நம்பிய ஆண்டவர் அவரது பாவங்களை மன்னித்தாரா என்று தெரியவில்லை.// என்று மூடு மந்திரமாக நான் குறிப்பிட்டு இருக்கிறேன். மற்ற மதத்தவர்களின் நம்பிக்கைகளை கடினமான வார்த்தைகளால் விமர்சிப்பதை நாம் விரும்பவில்லை. காரணம் அது இறைவனாலும் தடுக்கப்பட்டதாகும்.
“இறைவனை விடுத்து மற்றவர்களை அழைத்துப் பிரார்த்திப்பவர்கள் ஊகத்தைத்தான் பின்பற்றுகிறார்கள் “ (10:66,67)
“அல்லாஹ்வை விடுத்து, இவர்கள் யாரை அழைக்கிறார்களோ அவர்களால் ஒரு ஈயைக் கூட படைக்க முடியாது “ ( 22:73)
“எதனால் படைக்க இயலாதோ , இலாபமும் நஷ்டமும் அளிக்க எதனிடம் ஆற்றல் இல்லையோ, மரணமும் வாழ்வும் எதன் கைவசம் இல்லையோ அது கடவுளாக முடியாது “ ( 25:3 )
ஆகிய திருமறையின் வாசகங்களை போப் ஆண்டவர் அர்பன் வேண்டுமானால் அறிந்திருக்க வாய்ப்பு இல்லாமல் இருந்திருக்கலாம் . நாம் அறியாமல் இருந்திருக்க முடியுமா?
இரண்டாவதாக, கீழ்க்கண்ட கண்டனத்துக்கும் நாம் பதில் அளிக்க வேண்டி இருக்கிறது.
இந்தக் கண்டனத்தில் Where did you take this idea to write against truth. என்று கேட்டிருப்பதற்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கற்பனைக் கதைகளை எழுதுபவர்கள்தான் அவர்களின் ஐடியாவின் பிரகாரம் கதைகளை நகர்த்திச் செல்வார்கள். நாம் எழுதுவது நாவல் அல்ல; வரலாற்றின் அடிப்படையிலான செய்திகள்தான். இவற்றுள் சொந்தக் கருத்துக்களின் சாயலோ சாரலோ துளியும் கிடையாது. Idea என்கிற வார்த்தைப் பிரயோகத்துக்கு எனது கடுமையான கண்டனங்களை நான் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு வேறு வழி இல்லாமல் தள்ளப்பட்டு இருக்கிறேன்.
வேண்டுமானால் இந்த ஐடியா என்கிற வார்த்தைக்கு பதிலாக இந்தத் தகவல்களை எங்கிருந்து பெற்றேன் (Source) என்று கேட்டிருந்தால் வெளிப்படையாக கேட்டிருப்பதாக எண்ணி நானும் அவற்றை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டிருக்க இயலும். ஆனால் நானே கற்பனை செய்து பொய்களை எழுதி இருப்பதாக ஒரு குற்றச்சாட்டை இந்தத் தம்பியிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை.
இந்தத் தொடரை எழுதும் முன்பு பல வரலாற்று நூல்களை நேரிலும் இணைய தளங்களிலும் தேடிப் படித்தே எழுதுகிறேன். அவற்றிலிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சிலவற்றை மட்டுமே நான் குறிப்பிட்டு இருக்கிறேன்.
பெருமானார் (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு பதவி ஏற்ற கலிபாக்களை வரலாறு, The Rightly guided Caliphs என்றே கவுரவித்து அழைக்கிறது. அவர்களுக்குப் பிறகுதான் அனைத்தும் மாறிப்போய் இருக்கிறது என்று குறிப்பிடும் வரலாறுகள் ஹஜரத் அலி (ரலி) அவர்களுக்குப் பிறகு இஸ்லாமிய பேரசின் ஆட்சியானது Umayyads, Abbasis, Ottaman Turks என்று பல கைகளில் மாறி மாறி வந்தது. நான் குறிப்பிட்டு இருக்கிற மத சகிப்புத்தன்மையற்ற செயல்கள் நடைபெற்றது சஹாபாக்கள் ஆண்ட காலத்தில் அல்ல. இதை தம்பி அவர்கள் நன்றாக கவனத்தில் கொண்டு கருத்துத் தெரிவித்து இருக்க வேண்டும். இதையே கவிஞர் சபீர் அவர்களும் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள்.
கி . பி 637 – ல் ஹஜரத் உமர் (ரலி) அவர்களின் காலத்தில் ஜெருசலம் கைப்பற்றப்பட்டு அவர்கள் பொறுபேற்றுக் கொண்ட செய்திகளை முன் அத்தியாயங்களில் விவரித்து இருக்கிறோம். அதன் பின் 1076 - ல் அதாவது நானூற்று நாற்பது ஆண்டுகளுக்கிடையில் ஜெருசலத்தில் நடைபெற்ற செயல்பாடுகள் பற்றி – குறிப்பாக துருக்கியர்கள் கைகளில் பாலஸ்தீனம் அகப்பட்டதும் நடைபெற்ற செயல்களின் சின்ன ஒரு சித்திரத்தைத்தான் வரலாற்று நூல்களில் இருந்து படித்துத் திரட்டி தந்திருந்தேன். அது கூட இத்தகைய மத சகிப்பற்ற தன்மைகள் காரணமாக வெறுப்புத் தீ மூட்டப்பட்டு சிலுவைப் போர்கள் மூண்டன என்று குறிப்பிட்டுக் காட்டவுமே அவைகளை திரைபோட்டு மறைத்து விடாமல் நடுநிலையோடு குறிப்பிட வேண்டி இருந்தது.
வரலாறு நம்மைப் புகழும் வரிகளை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்றவைகளை மறைத்துக் காட்டுவது ஒரு நேர்மையான அரசியல் அல்லது வரலாற்று அரசியலின் விமர்சனம் ஆகாது. அந்த அடிப்படையிலேயே இஸ்லாமிய ஆட்சியாளர்களாக இருந்தவர்கள் செய்த வெறுப்பூட்டும் செயல்களையும் குறிப்பிட்டுக் காட்ட வேண்டியது ஒரு கடமையாக இருந்தது. இத்தகைய காரணங்களால் பாதிக்கப்பட்டவர்கள் திரண்டு ஆட்சியைப் பறித்துக் கொண்டதையும் பல படுபாதக படுகொலைகளை நிகழ்த்தி இஸ்லாமிய சமுதாயத்தை அழித்த காட்சிகளையும் காட்டவேண்டிய கடமையும் இருந்தது.
ஆகவேதான் முஸ்லிம்களாக இருந்தாலும் அவர்களும் நடத்திய சில தவறான நிகழ்வுகள் தகவல்கள் அடங்கிய சரித்திர வரிகளை A History of the Jewish People – என்கிற நூலில் HAIM HILLEL BEN SASSON எழுதி இருந்த சுருக்கத்தையே நாம் நமது இயல்பான தமிழ் நடையில் பகிர்ந்து இருந்தோம். அந்த செய்திகள் எல்லாம் நமது கற்பனையில் உதித்தவை அல்ல. இன்னும் மேலே குறிப்பிட்டுள்ள நூலில் பகுதி இரண்டில் Jews Under Islamic Rule என்ற அத்தியாயத்தை கேள்விகள் எழுப்புவோர் படித்துப் பார்த்தால் இவைகளைத் தெரிந்து கொள்ளலாம். நமது பக்கத்திலும் நடந்த தவறுகள் நமக்குப் பாடமாக அமைய வேண்டும் என்கிற உணர்வையும் பெற முடியும்.
தனிமரம் தோப்பாகாது, ஒரே ஒரு வரலாற்றாசிரியர் சொன்னவைகளை மட்டும் வைத்துக் கொண்டு அந்தப் பட்டியலை நான் தரவில்லை. The Decline and Fall of the Roman Empire என்கிற நூலின் Volume II-ல் Edward Gibbon என்பவர் எழுதியுள்ள பக்கங்கள் 367 to 440 வரை உள்ள நீண்ட நெடிய பல செய்திகளைப் படித்துப் பார்த்தால் பல விபரங்கள் வெளிப்படுகின்றன. மேலும் அனந்தன் ராஜா ராமன் என்பவரும் இவற்றை சொல்லி இருக்கிறார். அவர் கிருத்தவர் அல்ல.
கிருத்தவர்கள் இட்டுக்கட்டி எழுதியதாக மட்டும் இவற்றைப் புறந்தள்ள இயலாது. அப்படிப் புறந்தள்ளினால் சிலுவைப் போர்கள் ஏற்பட்டதற்கான காரணங்கள் யாவை என்பதை நாம் உலகத்துக்குச் சொல்லியாக வேண்டும். காரணமின்றிக் காரியம் நடக்காது என்பதை நாம் அறிய மாட்டோமா?
அதே கிருத்தவர்கள் எழுதிய பல வரலாற்று நூல்களில்தான் நமது நான்கு கலிபாக்களையும் வானளாவப் புகழ்ந்து இருக்கிறார்கள். மேலும் கீழ்க்கண்ட பகுதியும் இஸ்லாத்தின் மாண்புகள் குறித்தும் கிருத்துவ ஆட்சியாளர்களின் சதிகளை அம்பலபப்டுத்தியும் தாக்கியும் கிருத்துவ வரலாற்று ஆசிரியர்களே எழுதியதுதான்.
சாம்பிளுக்காக,
“துருக்கியில் ஒஸ்மான் அலி தலைமையிலான துருக்கி இஸ்லாமியப் படைகள், துருக்கியை கைப்பற்றியதுடன் நில்லாது இன்றைய பொஸ்னியா வரை தமது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். மதம் மாற்றுவதில் கிறிஸ்தவ ராஜ்யத்திற்கும், இஸ்லாமிய ராஜ்யத்திற்குமிடையில் பெரிய வேறுபாடுகள் இருந்தன. கிறிஸ்தவ ஆட்சியாளர்கள் தமது நாட்டினுள் பிற மதங்களை பொறுத்துக் கொள்ளவில்லை. இதனால் பலர் பலவந்தமாக கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டனர். அதற்கு மாறாக இஸ்லாமிய ஆட்சியாளர்கள், தமது நாட்டினுள் கிறிஸ்தவர்களை, (யூதர்களையும்) வாழ விட்டனர். இஸ்லாத்தைப் பிடித்தவர்கள் விரும்பினால் மதம் மாறிக்கொள்ளலாம் என்ற நிலை இருந்தது.
ஐரோப்பியர்கள், அரபு-இஸ்லாமிய ஆட்சியாளரிடம் இருந்து கற்றுக் கொண்டவை நிறைய இருக்கின்றன. ஒரு வகையில் சிலுவைப் போர்களின் எதிர்மறையான, அதே நேரம் அனைவருக்கும் நன்மையளித்த விளைவுகள் அவை. இஸ்லாமிய சாம்ராஜ்ய தலைநகரான பாக்தாத்தில் கணிதம், விஞ்ஞானம், மருத்துவம், வானசாஸ்திரம், தத்துவவியல், இலக்கியம் போன்ற பலவற்றை கற்றுத்தேர்ந்த அறிஞர்கள் இஸ்லாமிய அரசின் உதவியால் பல நூல்களை எழுதினார்கள். அதே நேரம் ஐரோப்பாவில் பெரிய அரசனாக கருதப்பட்ட காரல் சக்கரவர்த்தி தனது பெயரைக் கூட எழுத்துக் கூட்டி எழுதத் தெரியாதவராக இருந்தார். அந்தக்காலத்தில் அனேகமாக போப்பாண்டவர் உட்பட கிறிஸ்தவ மதகுருக்கள் மட்டும், எழுதப்படிக்க தெரிந்தவர்களாக அதுவும் லத்தீன் மொழியில் மட்டும் பைபிளை மட்டும் படித்துக் கொண்டிருந்தனர்.
ஐரோப்பாவை கிறிஸ்தவமதம் இருண்ட கண்டமாக வைத்திருந்த காலம் ஒன்றுண்டு. இங்குள்ள சரித்திர பாடப் புத்தகங்களும் அப்படித் தான் கூறுகின்றன. சிலுவைப் போரில் இஸ்லாமிய ராஜ்யப் பகுதிகளை கைப்பற்றிய கிருஸ்தவ வீரர்கள், அங்கே தம்மை விட நாகரீக வளர்ச்சியடைந்த முஸ்லீம் சமுதாயத்தை கண்டு வியந்தனர். அதன் பிறகுதான் ஐரோப்பா சொந்தம் கொண்டாடும் அறிவியல் ஐரோப்பாவை வந்தடைந்தது. உண்மையில் அறிவியலின் தகப்பன்மார்கள் இஸ்லாமியர்களே!
குறிப்பாக நவீன மருத்துவம் அரேபியரிடம் இருந்து கற்றுக் கொண்டதால் தான் , ஐரோப்பிய மக்கள் உயிர் காப்பாற்றப்பட்டனர். அதுவரை சாதாரண தலைவலி என்றாலும், மண்டைக்குள் இருக்கும் "அசுத்த ஆவியை" ஆணியடித்து ஓட்டை துளைத்து வெளியேற்றும் மருத்துவர்களைத் தான் ஐரோப்பா கண்டிருந்தது. கிருத்துவ மதம் பரவ முன்னர், மூலிகை வைத்தியம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் கிறிஸ்தவ மதம் அவ்வாறு வைத்தியம் செய்வோரை எல்லாம், "சூனியக்காரிகள்" என்று கூறி உயிரோடு எரித்து, மூலிகை மருத்துவர்களை இல்லாமல் செய்து விட்டது.
ஸ்பெயின் எட்டு நூறு ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாமிய நாடாக இருந்தது. அதன் ஆட்சியாளர்கள் இன்றைய மொரோக்கோவில் இருந்து வந்த "மூர்கள்". அன்று கல்வியறிவில் பின்தங்கியிருந்த ஐரோப்பியக் கண்டத்தில், "இஸ்லாமிய ஸ்பெயினில்" பல்கலைக்கழகம் நிறுவப்பட்டிருந்தது. அங்கே பல மருத்துவ, அறிவியல் நூல்கள் வெளியிடப்பட்டன.
ஸ்பெயினில் இஸ்லாமியர்களை சதி செய்து ஓடச் செய்த கிறிஸ்தவப் படைகள் அங்கிருந்த அறிவுபூர்வமான நூல்களை எல்லாம் கைப்பற்றி ஸ்பானிய மற்றும் ஐரோப்பிய மொழிகளுக்கு மொழிபெயர்த்ததால் தான் நாம் தற்போது காணும் நவீன மருத்துவம் தோன்றியது.
முஸ்லிம்கள் கடல் வணிகத்தில் முன்னோடியாக இருந்தனர். அவர்களிடம் இருந்து ஐரோப்பிய நாடுகள் நாகரிகத்தையும், மருத்துவத்தையும், விஞ்ஞானத்தையும், கணிதத்தையும், கடல் வணிகத்தையும், சகிப்பு தன்மையுடைய ஆட்சி முறையையும் கற்று கொண்டனர். இன்று தாம் முஸ்லிம்களிடமிருந்து பெற்ற அறிவை விற்று பொருளீட்டுகின்றனர். சேர்த்த செல்வத்தை முதலீடு செய்து பணமாக்குகின்றனர்.”
என்றெல்லாம் கிருத்துவ வரலாற்று ஆசிரியர்கள் இஸ்லாத்தைப் புகழ்ந்து எழுதி இருக்கிறார்கள். அதற்காக தம்பி இப்னு அப்துல் ரெஜாக் அவர்களின் அச்சத்தை நாம் ஒரேயடியாக மறுத்துவிடவும் முடியாது. முடிந்தவரை நடுநிலையாளர்கள் என்று நாம் நம்புபவர்களின் கருத்துக்களையே படித்த பதிவு செய்து இருக்கிறோம். அதற்குமேல் அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.
இதுபற்றி நாம் மீண்டும் மீண்டும் சொல்ல வருவது என்ன வென்றால் ஒரு நாட்டின் வரலாற்றை அலசும்போது அந்த நாட்டில் நடைபெற்ற நல்லவை கெட்டவைகளையும் எடுத்து வைப்பதுதான் ஒரு நேர்மையான அலசலாக இருக்க முடியும். இல்லையேல் அந்த அலசல் ஒரு சார்பான அலசலாக இருக்கும் ; உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர இயலாது; தெளிவான படப்பிடிப்பைக் காட்ட இயலாது . ஆகவே , இன்று யூதர்கள் செய்த அல்லது செய்யும் கொடுமைகளை சுட்டிக் காட்டிக் கண்டிக்கும் அதே நேரத்தில் இந்த நீண்ட நெடிய வரலாற்றில் இஸ்லாமியக் கொள்கைகள் இடறிய இடங்களையும் அப்படி இடரவைத்தவர்களையும் சுட்டிக் காட்டுவதுதான் ஒரு நேர்மையான முறையாக இருக்குமென்று நாம் நம்புகிறோம். அதே அடிப்படையில் இந்த நடுநிலையான அலசல் இன்ஷா அல்லாஹ் தொடரும்.
இந்தத் தொடரின் அனைத்துவரிகளையும் ஆழ்ந்து படித்து சுய விருப்பு வெறுப்பின்றி கேள்விகளை எழுப்பி எங்களை மீண்டும் மீண்டும் புடம் போடும் தம்பி இப்னு அப்துல் ரஜாக் அவர்களை மனமாரப் பாராட்டுகிறேன். இன்னும் இது போல கேள்விகளை வரவேற்கிறேன். பண்பாடு மிக்க உங்களின் கேள்விகள் எங்களை தலையில் தட்டாது ஆனால் பாராட்டும் நோக்கோடு முதுகில் தட்டுமென்றே நம்புகிறோம்.
இப்போது தொடரின் அடுத்த பகுதிக்குச் செல்லலாம். கிருத்தவர்களிடமிருந்து மீண்டும் பாலஸ்தீனம் முஸ்லிம்களின் கரங்களுக்கு மாறிய வரலாறு. அந்த வரலாற்றின் நாயகன் சலாவுதீன் என்கிற மலைக்க வைக்கிற மனிதாபிமானமிக்க மாவீரன்.
இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம்.
இபுராஹீம் அன்சாரி