Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

'விக்கிலீக்ஸ்' என்னும் பூச்சாண்டி 9

அதிரைநிருபர் | November 30, 2010 | ,

அமெரிக்கா அதன் நேச நாடுகளும் மற்றும் நேசமில்லாத நாடுகளும் தன் ஆட்சி, அதிகார அடக்குமுறையாலும், ஆணவத்தாலும் திரைமறைவில் செய்து முடித்த, இன்றும் செய்து கொண்டிருக்கும் கணக்கிலடங்கா கொலைபாதக செயல்களையும், கோடிக்கணக்கான ஊழல்களையும், பல ரகசிய ஆவணங்களையும் தன் இணைய தளம் மூலம் 'விக்கிலீக்ஸ்' வெளியுலகிற்கு கசிய விட்டிருக்கிறது.


'அடப்பாவி இவனா அவன்? இப்படி செய்தான்?' என சாதாரன மக்களும் வியப்பால் தன் மூக்கில் கை வைத்து ஆச்சரியப்படும் பல அவலங்களையும், செய்து முடித்த பல கொடூரங்களையும் அவிழ்த்து விட்டிருக்கிறது இந்த விக்கிலீக்ஸ் இணையதளம்.

'பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான்' என்பது பழைய மொழியாக இருந்தாலும் அதை தன் கோடூர முகத்தால் அமெரிக்கா ஏகாதிபத்திய நாடுகள் அவ்வப்பொழுது புதுப்பித்துக்கொண்டிருக்கின்ற‌ன‌.

இன்னும் இந்த‌ இணைய‌ த‌ள‌ம் மூல‌ம் என்னென்ன‌ பூத‌ங்கள் கிளம்பப்போகின்ற‌ன‌வோ? என்று த‌வ‌று செய்த‌வ‌ர்க‌ளுக்கு "குற்ற‌முள்ள‌ ம‌ன‌சு குறுகுறுக்கும்" என்பது போல் புளியைக்க‌ரைத்துக்கொண்டிருக்கிற‌து.

அமெரிக்கா ஈராக் மீது ப‌டையெடுத்து அந்நாட்டை த‌ன் முழுக்க‌ட்டுப்பாட்டிற்குள் கொண்டு வ‌ந்த‌ பிறகும் அங்குள்ள அப்பாவி பொதும‌க்க‌ள் உயிருக்கு ப‌ய‌ந்து கூட்டம், கூட்ட‌மாக‌ த‌ன் கைக‌ளில் வெள்ளைக்கொடிகளை (ச‌மாதானத்தின் சின்னமாய்) ஏந்தி அமெரிக்க‌ ராணுவ‌த்தை நோக்கி ச‌ர‌ண் அடைய‌ வ‌ந்த‌வ‌ர்க‌ளை கூட‌ விட்டு வைக்க‌வில்லை. வானிலிருந்து ஹெலிகாப்ட‌ர் மூல‌ம் அவ‌ர்க‌ளை ஈவு இரக்கமின்றி சுட்டு வீழ்த்தி இருப்பதையும்‌ இந்த‌ இணைய‌ த‌ள‌ம் தெளிவாக‌ ப‌ட‌ம் பிடித்து உலகுக்கு வெளியிட்டுள்ள‌து.

அமெரிக்க அதிபர் முதற்கொண்டு அனைத்து அதிகார வர்க்கங்களும் இணைய தளம் மூலம் உலக ரகசியங்களை வெளியிட்ட 'விக்கிலீக்ஸ்' இணையதளத்தின் மீதும் அதன் உரிமையாளர் மீதும் முழு வீச்சில் நடவடிக்கை எடுக்க திசை திருப்பப்பட்டுள்ளார்களே தவிர தவறு செய்தவர்களை தண்டிக்க அல்ல.

இந்தியா பற்றி மூவாயிரம் ஆவணங்கள் வெளியீடு: "விக்கி லீக்ஸ்' இதன் மூலம் பெரும் பரபரப்பை ஏற்ப‌டுத்தியுள்ள‌து. அது ப‌ற்றி விள‌க்க‌ங்க‌ளை இன்னும் ஒரு சில‌ நாட்க‌ளில் அல்ல‌து ம‌ணித்துளிக‌ளில் வெளிவ‌ர நாம் அறிய‌லாம்.

இது போன்ற‌ உல‌க‌ மகா த‌வ‌றுக‌ளையும், குற்ற‌ங்க‌ளையும் செய்த‌வ‌ர்க‌ள் உல‌க‌ ச‌ட்ட‌த்தின் முன் ஒரு போதும் முறையே விசாரிக்கப்பட்டு த‌ண்டிக்க‌ப்ப‌டுவ‌தில்லை. மாறாக ஊடகங்கள் மூல‌ம் உல‌க‌ ந‌ட்ச‌த்திர‌ அந்தஸ்த்தை பெற்று அத‌ன் மூல‌ம் மேலும் ப‌ல‌ ஆதாய‌ங்க‌ளை அடைந்து கொள்கின்ற‌ன‌ர்.

இது போன்ற‌ ஆயிர‌மாயிர‌ம் அவ‌ல‌ங்க‌ள் ஆங்காங்கே அர‌ங்கேறியிருந்தாலும் இதெல்லாம் அவ‌ல்பொறி திண்ப‌து போல் ஆகிவிட்ட‌து அதை அன்றாடம் கேள்விப்ப‌டும் சாதாரன பொதும‌க்க‌ளுக்கு எதிர் கேள்வி கேட்க‌ எவ்வித‌ ச‌க்தியும் அற்ற‌வ‌ர்க‌ளாய்.

இரும்புக்கோட்டைக்குள் செய்து முடித்த‌ பேர‌க‌சிய‌ங்க‌ளையும், ச‌தித்திட்ட‌ங்க‌ளையும், அவலங்களையும் பாதுகாக்க‌ முடியாத இந்த ம‌னித‌ வ‌ர்க்கம் (வல்லரசுகள்) ப‌டைத்த‌வ‌ன் முன் எப்ப‌டி தன் த‌வறுகளை ம‌றைத்து விட‌ முடியும்?

உல‌க‌ம் இப்ப‌டியே சென்று கொண்டிருந்தால் கடைசியில் 'பூனைக்கு யார் தான் ம‌ணிக‌ட்டுவ‌ர்'? நிச்ச‌ய‌ம் ஒரு நாள் க‌ட்ட‌ப்ப‌டும் அது யுக‌ முடிவு (கியாமத் நாள்) நாளாக‌த்தான் இருக்கும்.

-- மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

இணையத்தில் வலை வீச்சு... 20

அதிரைநிருபர் பதிப்பகம் | November 30, 2010 | ,

Version - 3

இணையத்தில் காண்பது (சமூக) பிணைப்பா அல்து தனிமனித சுதந்திரமா ? இவைகளையும் இங்கே பார்த்து வருகிறோம். இணையத்திலிருக்கும் சாதக பாதக நிகழ்வுகளை முடிந்த வரை என் தேடலுக்குள் எட்டியதையும் சிக்கியதையும் கோர்வையாக்கி உங்களின் சிந்தனைக்காக வைத்திருக்கிறேன்.

இன்றையச் சூழலில் மிகப் பிரபலமாக இருந்துவரும் எத்தனையோ சமூக பிணைப்பு வலைத் தளங்களில் முதன்மையாகவும் அதோடு நாம் யாவருக்குமே நன்கு அறிந்த "சமூக பிணைப்பு" வலைத் தளமான "facebook.com" தோற்றமும் அதன் அசு வளர்ச்சியும் வியக்க மட்டும் வைக்கவில்லை அதன் விபரீதம் எந்த அளவுக்கு பரந்து விரிந்து கடை போட்டிருக்கிறது என்பதும் அதிர்ச்சியை கொடுக்கிறது.

"ஃபேஸ்புக்" 2004ம் வருடம் ஜனவரி இரண்டாவது வாரத்தின் இறுதியில் "ஹார்வர்ட் பல்கலைகழக" மாணர்வகள் விடுதி அறையில் தனியாக இருந்த "மார்க் ஜுக்பெர்க்" தனது தொலைந்த நட்புகளை எப்படி மீட்டெடுப்பது என்று மல்லாக்க படுத்து யோசித்தன் வினையே பின்னர் தனது மற்ற மூன்று நண்பர்களுடன் சேர்ந்து 2004 ஃபிப்ரவரி மாதம் உருவாக்கிய வலைத் தளம்தான் அந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டுமே என்று உலவவிட்டனர், பின்னர் பாஸ்டன் இன்னும் பிற கல்லூரி மாணவர்களையும் வலைக்குள் சிக்க விட்டனர் அதோடில்லாமல் பள்ளிகளிலும் இதன் ஊடுருவல் எத்தியது.

பள்ளிக்கூட எல்லையைத் தொட்டவுடன்தான் ஒரு கட்டுப்பாடு வைக்கப்பட்டது அதில் 13 வயதுக்கு மேல் உள்ளவர்கள்தான் இதில் இணையலாம் என்று ஆனால் அங்கிருக்கும் வரை அவர்கள் வயதைச் சரியாகத்தான் சொல்லி வந்தனர் பின்னர் இதனை வெளியுலகிற்கு திறந்து விட்டதும் எத்தனை பேர் உண்மையான வயதைச் சொல்லியிருப்பார்கள் ? இன்று 500 மில்லியனுக்கு மேல் பயன்பாட்டார்களைக் கொண்டிருக்கிறது இந்த வலைத் தளம் இதுவே தடம் மாறுபவர்களின் மனதையும் கொன்று குவித்து வருவதையும் மறுக்க முடியாது.

ஆரம்பித்தவர்கள் நோக்கம் என்னவோ தொலைத்த நண்பர்களை வலைக்குள் சிக்கவைக்கத்தான், ஆனால் இதனை நாளடைவில் நட்பு என்பதன் அற்புதமான மகிமையை கொச்சைப் படுத்தவும், காமம் கலக்கவும், களவு கற்பிக்கவும், நம்பிக்கை துரோகம் செய்யவும், குழப்பம் உண்டாக்கவும், கணவன் மனைவி உறவுக்குள் ஊடுருவவும், பழிவாங்கிடவும் ஒரு சாரார் பயண்படுத்த ஆரம்பித்து விட்டனர். இதில் மிகச் சிலரே நல்ல முறையில் இந்த தளத்தை ஆக்கப் பணிகளுக்கும் அவர்களின் நலன் தேடும் நேசங்களை ஒன்றினைக்கவும் பயன்படுத்துகிறார்கள்.

இதன் பயன்பாடுகள் பற்றி சொல்வதனால் நீண்டு கொண்டே செல்லும், ஆகவே கேள்விகளாக உங்களிடையே ஏதும் உதித்தால் பின்னுட்டங்களாக அனுப்பித் தாருங்கள் அதற்கான பதிலோடு இன்னும் விரிவாக பார்க்கலாம். சரி, இவர்கள் எப்படி இந்த சேவையை இலவசமாகத் தருகிறார்கள? இவர்களின் வெற்றி எங்கே ஆரம்பித்தது?

முதலில் இவர்கள் வைத்த குறி தடுமாறும் இளமையை இலகுவாக வலைத்துப் போட்டு மிகப் பெரிய வலை வட்டம் உருவாக்கினார்கள் அங்கே அவர்கள் கண்டது இளைஞர்களின் அதீத உலக ஆசைகளும், ஆண் பெண் மோகம் இவைகள்தான். இதனையே முலதனமாக வைத்தார்கள் தங்களின் பொழப்புக்கும் இந்த வலைத் தளத்தை இலவசமாக நடத்துவதற்கும், பெரிய பெரிய நிறுவனங்களிடமிருந்து விளம்பரங்களைப் பெறுவதற்கு சேமித்து வைத்திருக்கும் அங்கே பெற்ற அரிய தகவல்களை பரிமாறிக் கொள்ளச் செய்தார்கள்.

இதன் பயன்பாட்டாளர்கள் ஏற்கனவே பதிந்து வைத்திருந்த தகவல்களை அவர்களுக்குத் தெரியாமலே இவ்வகை வலைத் தளங்களை நடத்துபவர்களின் தகவல் பெட்டகத்திலிருந்து அதாவது சுயவிபரங்களின் குறிப்புகளிலிருந்து அவர்களின் ஆண்/பெண் பால், விருப்பு, வெறுப்பு, இடம், மோகம், செலவீனங்கள், குடியிருப்பு, உறவுகள், எவ்வகையில் தேவைகள் நிறைவு செய்வார்கள் இன்னும் நிறைய விபரங்களை எடுத்து அவரவர் நாட்டிற்கு தகுந்த மாதிரி, மாநிலத்திற்கு தகுந்த மாதிரி நேர்படுத்தி ஆங்காங்கே இருக்கும் நிறுவனங்களுக்குக்கு சந்தைபடுத்தும் ஆய்வு (market study) என்ற பெயரில் கொடுத்து அவர்களின் விளம்பரங்களை பெருவதற்கு பயன்படுத்துகிறர்கள்.

அவ்வாறு பெறப்படும் விளம்பரங்களை பயன்பாட்டாளர்களின் விருப்பு வெறுப்புக்குத் தகுந்தார்போல் அவர்கள் ஃபேஸ்புக் வலைத் தளத்திற்கு வருகை தரும் நேரங்களில் தானாக இவ்வகை விளம்பரங்கள் கண்ணுக்குள் சிக்க வைக்கின்றனர் இதில் சிலர் “அட இதென்ன புதுசா இருக்கேன்னு” அந்தச் சுட்டியை தட்டி விட்டால் வலைத் தளம் நடத்துபவர்களின் கல்லா கட்டும் சொட்டு நீர் பாசனம் போல் அங்கே ஒரு சொட்டு இங்கே ஒரு சொட்டு என்று சிறு துளிகள் அப்படியே பெரும் வெள்ளப் பெருக்கெடுத்து நிறையும் அவர்களது கஜானா. இதுமட்டுல்ல ஆன்லைன் கேம்ஸ் இதில் இவர்கள் அடிக்குக்கும் கொள்ளைக்கும் எல்லையில்லை.

உதாரணத்திற்கு வளைகுடாவில் இருக்கும் ஏதாவது ஒரு நாட்டில் உங்களின் நுழைவு மின் அஞ்சல் முகவரியையும் கடவுச் சொல்லையும் இட்டு இந்த வலைத்தளத்திற்குள் சென்றால் இங்கே இருக்கும் நிறுவனங்களின் விளம்பரங்கள் உங்கள் கண்ணில் படும் அவைகள் உங்களின் விருப்பு வெறுப்புக்கு ஏற்றார் போலிருக்கும், அப்படியே ஊருக்குச் சென்றதும் நடுவிக் காட்டுக்கு போயி அங்கே தோப்பில உட்கார்ந்துகிட்டு ஃபேஸ்புக்கை திறந்து மேய்ச்சலில் ஈடுபட்டால் கண்ணுக்குள் சிக்கும் இந்திய நிறுவனங்களின் விளம்பரங்கள், என்ன ஒரு வித்தியாசம் இங்கே எந்த வகை பொருளின் விளம்பரமோ அதுவே அங்கே இந்திய கம்பெனியாக வரும் ஏன் ஒருவேலை உங்களின் ரசனைக்கு தகுந்தார் போல் "தரமான உரம்" என்ற விளம்பரமும் கூட வரலாம்.

மிகப் பெரிய இரண்டு நிறுவனங்களில் இங்கே இவர்களின் செயல்பாடுகளில் நாம் கண்ட அனுபவம். இவர்கள் எப்படி அனுகுகிறார்கள் என்றால், அவர்களின் முன்னுரையே இப்படித்தான் இருக்கும் "உங்கள் பொருட்களை சந்தைப் படுத்த சரியான வழி என்றும், உங்களின் பொருட்களின் மோகம் அதிகம் எந்த எந்த இடங்களில் இருக்கிறது என்று பட்டியலிடுவதும் அதனை அப்படியே அச்சு எடுத்துவந்து பூச்சாண்டி காட்டுவதும் அதில் முதல் ஒரு இலட்சம் அடி(க்கு) hit இலவசம் அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு அடிக்கும் (hit) இவ்வளவு வரும் என்றுதான் வருவார்கள், முதல் மாதம் நன்றாக இருப்பதாக உணர்வோம், அடுத்தடுத்த மாதம் அவர்கள் கேட்டுவரும் தொகைகயைக் கண்டால் தலையைச் சுற்ற ஆரம்பிக்கும், மூன்றே மாதத்தில் அந்த இரண்டு நிறுவனங்களும் இந்த விளையாட்டுக்கு நாங்க வரலைன்னு பின் வாங்கிக் கொண்டன.

ஒவ்வொரு அடிக்கும் காசு கொட்டுவது "வீட்டு மணைகளில் மட்டுமல்ல" இந்த இணையக் கடலில் வலைகட்டி உல்லாசம் தேடும் இவ்வலைத் தொட்டிலிலும் ஒவ்வொரு அடிக்கும் (click) காசு இதுதான் இவர்களின் வயத்துப் பொழப்பு ???

இந்தப் பாவப்பட்ட "முகப்புத்தகம்" (facebook.com) தனது கிளை தலைமை அலுவலங்களை அமெரிக்கா, ஐயர்லாந்து, சவுத்கொரியா, நியூஸ்லாந்து மற்றும் இந்தியா (ஹைதராபாத்) வைத்திருக்கிறது. சென்ற வருடம் வரை இதன் வருமானம் 800 மில்லியன் டாலர்கள். மொத்தம் 1789 க்கு மேல் வேலையாட்கள் இருக்கிறார்கள்.

எந்தவிதமான ஆக்கபூர்வமான பனிகளுமில்லாமல் வெறுமனே பொழுது போக்குக்காக பயன்படுத்திவருகிறோம்னு நாம் சொல்லிக் கொண்டாலும் இதன் பாதகங்களை உணர்ந்திருக்கிறோமா ? அதனால் பாதிக்கப் பட்டிருக்கிறோமா ? நமது நேசங்களில் எத்தனை பேர்கள் இதனை சிக்கலாக பார்க்கிறார்கள் ? எத்தனை பேர் சிறப்பாக வலைய வருகிறார்கள் ? இதனால் கண்ட பலன்கள்தான் என்ன ?
?!

|-|-|-|-|-|- என்ன |-|-| இங்கே |-|-| மணை |-|-| போட்டிருக்கான்னு |-|-| கேட்டுடாதீங்க !-|-|-|-|-|-|


சொடுக்கு : நினைவலைகள் சும்மா இருக்காமல் "பட்டா இல்லாத (தனி)குடில்கள் என்று ஒரு சிறிய ஆக்கம் ஒன்றினை ஏனோ திடீரென்று ஞாபகத்திற்குள் வரவைத்து யோசிக்க வைக்கிறது இன்னும், அதன் சாரமும் இங்கே:-

தனிக் குடில் blog எனப்படும் வலைப்பூக்கள். இவைகளின் ஆதிக்கத்தினால் வேண்டியவர்கள் தனக்கென தனி வீடு கட்டிக் கொண்டு அங்கே நடத்தும் கொட்டங்கள் ஏராளம், என் வீடுதானே நான் எதனையும் செய்வேன் எப்படி வேனும்னாலும் இருப்பேன், இதுதான் என் வாதமென்று தன்னிச்சையாக செயல் படுபவர்களையும் காண்கிறோம்,.

கிடைத்திருக்கிற இடத்தில் இலவசமாக வீடுகட்டி நல்லது செய்பவர்களும் ஏராளம். அதுமட்டுமா இப்படி கட்டிக் கொண்ட தனிக் குடிலில் தனிமனித துவேஷம், சங்கங்கள், கட்சிகள், இயக்கங்கள் வாடகை கொடுக்காமல் தன்னிச்சையாவோ அல்லது பொது நலனோடும் குடில் கொண்டு வருகிறார்கள்.

சிலர் கதவைப் பூட்டிக் கொண்டு அடிக்கும் கொட்டம், மற்றும் சிலர் கதவை திறந்து போட்டுக் கொண்டு அடிக்கும் கொட்டம், வேறு சிலரோ பினாமியாக (முகமூடியுடன்) இலவசமாக கிடைத்திருக்கிறதே என்று படுத்தும் பாடு அதிகம் அதிகம் அதிகம்.

இந்த இலவச குடில் கட்டி போஸ்டர் ஓட்டுபவர்களோ முழு நேரப் பத்திரிக்கைக்கு நிகராக செயல்படுவதாக சொல்லிக் கொண்டும் அதோடு தங்களின் முகம் மூடிக் கொண்டு ஆனால் ஊருக்கு வெளிச்சம் காட்டுவதாக சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

சரி, இந்த இலவச (மணைப்) பட்டா இல்லாத குடில்களுக்கு இடம் கொடுத்தவர் திடீரென்று பிடுங்கிக் கொண்டால் என்ன செய்வார்கள் இவர்கள் ?

சரி நாம மல்லாக்க படுத்து யோசிப்போமா

- அபுஇபுறாஹிம்

விழித்தெழுவீர் அமைத்திடுவீர் சமுதாய எழுச்சி அணி 4

அதிரைநிருபர் | November 30, 2010 | , ,

எனது ‘அழுதது போதும் சமுதாயமே ஆர்த்தெழு’ என்ற கட்டுரையினைப் படித்து விட்டு தோஹாவினைச் சார்ந்த ஹாஜி முகம்மது, நாகர்கோவிலைச் சார்ந்த அப்துல் ராசிக் மற்றும் பல சகோதர்கள் சமுதாயத்தினை தட்டி எழுப்ப நீங்கள் என்ன யோசனை வைத்திருக்கிறீர்கள் என்ற கேள்வியினை எழுப்பியுள்ளார்கள். அந்த நண்பர்களுக்கு உலக சமுதாய தீங்கினைப் சுகமாக்க அருமருந்தாக இருக்கவே இருக்கிறது அல் குர்ஆனும், இன்று 150 கோடி மக்கள் வரை இஸ்லாத்திற்கு இழுத்துள்ள எம்பெருமானார்(ஸல்) அவர்கள் வாழ்க்கை நெறியிலும் அவர்கள் போதித்த ஹ‌தீசுகளும் இருக்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா?

ஹஸ்ரத் பிலால் தீன்யாத் சபை: நானிலம் போற்றும் நபியவர்களுக்கு ஜிப்ரேயில் (அலை) மூலம் குர்ஆனை இறக்கி வைத்து முதல் கடமையாக அகம்-புறம் அழுக்கினைப் போக்கி மனிதனை புனிதனாக்குவதிற்கு ஐவேளை தொழுகை கட்டாயமாக்கினார்கள். சிலருக்கு ஐவேளை தொழுகை மிகவும் சிரமமாக இருக்கும். ஏனென்றால் நவீன உலகில் நாலு காசு சம்பாதிக்க சுழன்று உழைத்தால் மட்டுமே குடும்பத்தினைக் காப்பாற்ற முடியும் என்ற காலத்தின் கட்டாயம். செக்கு மரமாக உடலை வருத்தி உழைத்துவிட்டு தன் மனதினை பல்வேறு திசையில் அலையவிட்டு நோயாலும் மன அமைதியின்மையாலும் அவதிப்பட்டு ‘யோகா’ என்ற புது பயிற்சியினை போதிக்கும் சாமியார்கள்

தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கும் போது பரிதாபமாகவில்லையா? அந்தக் குறையினைப் போக்கத்தான் ஐவேளை தொழுகையினை நமக்கு முறையாக கட்டாயமாக்கப் பட்டுள்ளது. ஆனால் அதனை முறையாக கடைப்பிடிக்காததால் பல்வேறு உடல்-உள்ளப் பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது. பேன்சில்வேனியா பல்கலைக்கழக சமூக ஆய்வாள‌ர் கிறிஸ்டோபர் கெய்டில் ஓர் ஆய்வு 1972 முதல் 2006 வரை மேற்கொண்டதின் பலனாக இறை வழிப்பாட்டில் ஈடுபட்டவர்கள் சமூக நலம், உடல் நலம் மற்றும் நன்னடத்தையில் சிறந்து விளங்குவதாக கண்டு பிடித்துள்ளார். ஆகவே நாம் நம் சமுதாயத்தினரிடையே முதலில் முறையான ஐவேளை தொழுகையினை வலியுறுத்த ‘பஜ்ரங்தளம்’ போல ஹஸரத் பிலால் தீன்யாத் சபையினை ஆரம்பித்து மார்க்க பிரசங்கத்தில் சமூக அமைப்புகள் ஈடுபட்டு முதலில் ஈமான் மீது முஸ்லிம்களுக்கு பிடிப்பு ஏற்பட வழிவகை செய்ய பாடுபடவேண்டும்.

மௌலான ஆசாத் கல்வியாளர் குழு: கல்வியாளர்கள், மாணவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், அறிவு ஜீவிகள் பி.ஜே.பியில் அகில பாரதிய வித்யாபாரத் சபை இயங்கிக் கொண்டுள்ளது. ஆனால் நமது சமுதாயத்தில் அதற்கு இணையான ஒரு அமைப்பு இல்லை. ஆகவே சமுதாய மாணவர்கள், மாணவிகள், ஆசிரிய பெருமக்கள், மற்றும் அறிவு ஜீவிகள் பல்வேறு இயக்கங்களிலும், அரசியல் கட்சிகளுக்கு உதவி செய்பவர்களாக மாறி வருகின்றனர். ஆகவே அவர்களை ஒருங்கிணைத்து ஒரு அமைப்பினை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகும். நமது மாணவர்களுக்கு மேல்பட்ட படிப்பு தொடரவும், வேலை வாய்ப்பில் வழிகாட்டவும், வேலை வாய்ப்பு முகாம்களை சமூக தொழில் முனைவர்கள் ஆதரவோடு நடத்தவும், சமுதாய படித்த இளைஞர்களிடையே புதைந்து கிடக்கும் திறமையினை வெளிக் கொணரவும் ஒரு அமைப்பு நமக்குத் தேவை. இந்திய நாட்டின் விடுதலை வீரரும், சுதந்திர இந்தியாவில் முதல் கல்வி அமைச்சருமான மௌலான அபுல் கலாம்ஆசாத் அவர்கள் நினைவாக ஒரு கல்வியாளர் குழு எற்படுத்தி கல்வியாளர்கள், மாணவர்களை வழி நடத்தலாம். டாக்டர்கள் மருத்துவப் பணியாற்ற அவர்களையும் ஒரு குழுவாக இணைத்து செயலாற்றலாம்.

பிறைமேடை பிரச்சார சபை: சமுதாயத்தினைப் பாதிக்கக் கூடிய பல்வேறு விசயங்களில் நமது கருத்துக்களை சமுதாய மக்களுக்கும், மற்றவர்களுக்கு விரைவாக எடுத்துச்சொல்ல ஒரு தரமான பத்திரிக்கையோ அல்லது தொலைகாட்சி நிறுவனமோ இல்லாதது பெரிய குறையாக இருந்து வருகிறது. நோன்பு நேர பிரச்சாரத்திற்குக் கூட தனியார் வர்த்தக விளம்பர்ங்கள் தான் ஆக்கிரமித்துக் கொண்டும், மற்றும் மகளிர் பிரசங்கங்களில் இஸ்லாமிய சமுதாயத்தினை ஆணாதிக்க சமூகம் என்று வசைபாடிய பெண்களைக் கொண்டு மார்க்க பிரசங்கம் செய்யச்சொல்லியும், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், வயதானர்கள், ஊனமுற்றோர் போன்றோர் பயன் படும் வகையில் மிகவும் குறைந்தளவே பிரச்சாரமும் செய்யடுவதினை சிலர் ‘இ’ மீடியாக்களிலும் சமுதாய பத்திரிக்கையிலும் குறைகூறியுள்ளனர் என்பதினை அனைவரும் அறிந்ததே. எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு ஆங்கிலத்தில் ‘அல்மைட்டி’ அல்லாஹ் என்று சொல்வோம்.

ஆனால் அந்த ‘அல்மைட்டி டாட் காம்’ என்ற பெயரில் ஒரு சமுதாய கல்யாண கவுன்சிலிங் இணையதள அமைப்பு பெயரிலும் சகர்நேரத்தில் விளம்பரம் வருகிறதினை பலரும் பார்த்திருப்பார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் பெயரில் திருமண கவுன்சிலிங் அமைத்திருப்பது சரியா? என யோசிக்க வேண்டும். ஒரு நாள் சகர் நேர குடும்பவியல் பிரசங்கத்தில் ஒரு சமுதாய அறிஞர் சொன்னதினை உங்களுக்கு எடுத்துச் சொல்வது தவறில்லை என நினைக்கிறேன். ரஸுலுல்லாஹ்வும் அவர்களுடைய துணைவியார் ஆயிசா(ரலி) அவர்களும் எவ்வாறு பாசத்தினை பரிமாரிக்கொண்டார்கள் என்பதினை விளக்கும்போது, ஒரு தடவை ரஸுலுல்லாஹ் தான் குடித்த தேநீர் கோப்பையினை ஆயிசா அவர்களுக்கு வழங்கியதாகவும் அதில் மீதியுள்ள தேநீரை நபி அவர்கள் எந்த இடத்தில் உதடுகளை வைத்து குடித்தார்களோ அந்த இடத்தில் ஆயிசா அவர்களும் தன் உதடுகளை வைத்து குடித்தார்களாம்., அதே போன்று ஒரு பெருநாளன்று மதினாவிலுள்ள மஜ்தியே நக்வி உள்ள மைதான‌த்தில் நடந்த விளையாட்டுப் போட்டியில் நபி அவர்கள் கன்னத்தில் ஆயிசா தன் கன்னத்தினை வைத்து நபியவர்கள் தோள் மீது சாய்ந்திருந்ததாகவும் அதனை அந்த விளையாட்டுத் திடலில் இருந்த அத்தனை பேர்களும் பார்த்ததாகவும் கூறியது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் அந்தரத்தில் நடந்ததினை எல்லாம் அரங்கத்தில் யாரும் செய்வார்களா அதனை அதுபோன்ற பிரசங்கத்தில் ஈடுபட்டவர் போய் பார்த்தாரா? அல்லது சகர் நேரத்தில் ஐம்புலன்களை அடக்க வேண்டிய நேரத்தில் இதுபோன்ற சொற்பொழிவு தேவைதானா என்று ஆராய வேண்டும். ஒரு ஹ‌தீசில் ஒரு பார்வை தெரியாதவர் ரஸுலுல்லாஹ்வினைக் காண அவர்கள் வீட்டுக்கு வருவதாகவும் அப்போது அவர் பார்வையிழந்தவர் தானே என்று மனைவிமார்கள் நின்றதாகவும். அப்போது நபியவர்கள் தன் மனைவி மார்களை அடுத்த ஆண் மக்களிடம் மறைந்து வாழுங்கள் என்று கூறியதாக கதீசுகள் படித்தது ஞாபகம். ஆனால் அந்த சமுதாய தலைவர் சொன்னது போல தேநீர் கிண்ணத்தில் ஆயிசா அவர்கள் உதடு வைத்ததினையும், பலர் முன்னிலையில் கன்னத்தோடு கன்னம் வைத்தினையும் நான் யாரும் சொல்லக் கேள்விப்பட்டதில்லை ஆகவே சமுதாயத்தில் நல்ல கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல முறையான ஊடகங்களும், தொலைகாட்சி நிறுவனமும் அவசியம் தேவை. அது தனிப்பட்டவர் கையில் இருந்தால் அவருடைய கைப்பாவையாகி வுpடும். ஆகவே இந்து அமைப்புகளுக்கென்று இருக்கின்ற ‘துர்கா வாகினி’ போன்ற ஒரு பிறைமேடை பிரசார சபை நமது சமுதாயத்திலும் துவங்க வேண்டும்.

அன்னை பாத்திமா மகளிரணி: பெண்கள் ஒரு சமுதாயத்தின் கண்கள். ஒவ்வொரு ஆணின் முன்னேற்றத்தின் பின்னணியில் ஒரு பெண்ணிருப்பாள் என்று பொது கருத்தாகும். ஆனால் பெருமானார் வாழ்வில் அன்னை கதிஜாவும் அவருடைய அருமை மகளார் பாத்திமா அவர்கள் வீரர் அலியின் அரணாக விளங்கினர். அவர்களைப் போன்று பெண்களை வழி நடத்திச் செல்ல ஒரு நல்ல பெண்கள் அமைப்பு சமுதாயத்தில் உருவாக்க வேண்டும். மணமகள் வீட்டாரிடம் பெண்களே அதிக சீதனம் பேசி அவ்வாறு கொண்டு வராத பெண்களை கொடுமைக்கு ஆளாக்குவதினைப் பார்க்கிறோம். பெண்கள் கல்விக்கு முக்கியம் கொடுத்தால் தான் நவீன சமுதாயத்தில் எதிர் நீச்சல் போட முடியும் என்ற நிலை இருக்கும் போது நாம் மட்டும் பின் தங்கி இருக்கலாகுமா? வேளி நாட்டில் மண முடித்துச் செல்லும் நமது சமுதாய பெண்கள் கல்வி கற்றிருப்பதின் மூலம் எவ்வாறெல்லாம் குடும்ப செலவினை ஈடு செய்ய தாங்களும் வேலைக்குச் சென்று வீட்டின் செலவு பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதினை அங்கு சென்று பார்த்தவர்களுக்கு தெரியும். தன் கணவன் வருமானத்துடன் தன் வருமானமும் சேர்த்து வீடு வசதியோடு வாழ்கிறார்கள். அத்துடன் இந்தியாவிலுள்ள உற்றார் உறவினருக்கும் உதவுகிறார்கள் என்று புரியும். அவர்கள் தங்கள் குழந்தைகளின் உயர்படிப்பில் மிகவும் கவனமும் செலுத்துகிறார்கள். ஆகவே சலுகையுடன் கூடிய கல்வி நமக்கு கிடைக்கும் போது பெண் கல்வி பற்றி விழிப்புனர்வு ஏற்படுத்த வேண்டும். அத்துடன் அரசிலில் பெண்களுக்கு ஒதுக்கீடு என்ற காலக் கட்டத்தில் நாம் தள்ளப்பட்டுள்ளோம். மற்ற சமுதாயம் பெண்கள் அரசியலில் முக்கிய அங்கம் வகிக்கும் போது நாம் மட்டும் பின்தங்கி நிற்க வேண்டுமா? ஆகவே தான் அரசியல் கல்வி பெண்களுக்கு போதிக்க வேண்டும். அத்துடன் சுகாதாரத்துடன் குழந்தைகளை வளர்க்கவும் பெரியோர்கள் நோயுற்று இருக்கும் போதோ அல்லது அசாராண சமயங்களில் மருத்துவ உதவிகள் எப்படி பெண்கள் செய்ய வேண்டும் என்ற மருத்துவ கல்வியும் ஊட்ட வேண்டும்.

ஜின்னா இலவச சட்ட உதவி மையம்: அப்பாவி முஸ்லிம்கள் பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறைக் கோட்டத்தில் வாடும் நிலை இன்றுள்ளது. இலங்கையில் இருக்கும் விடுதலைப்புலிக்காக வாதாடும் தமிழ் தலைவர்களுடன் நம் சமுதாயத்தினைச் சார்ந்தவர்கள் உள்ளனர். ஆனால் அநியாயமாக வழக்கினை சந்திக்கும் முஸ்லிம் இளைஞர்களுக்கு உதவி செய்யவும், முஸ்லிம் சமுதாயம் மக்களை பல்வேறு பொய் வழக்குகளில் தள்ளி நசுக்க நினைக்கும் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக வாதிடவும், சமுதாய உரிமைகளை சட்டப்பூர்வமாக வாதாடிப் பெறவும், வக்ப் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்திருப்பவர்களிடமிருந்து நிலங்களை சட்டத்திற்குட்பட்டு கைப்பற்றவும், அநியாயமாக மணவிலக்கு அளிக்கப்படும் அபலைப் பெண்களுக்கு உதவவும், அரசு உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு அரசிடமிருந்து பெற்றுத் தரவும் சட்ட உதவிமையம் சிறப்பாக பயன்படவேண்டும். மற்ற ஜாதி சட்ட வல்லுநர்கள் ஒரு அமைப்பு தங்களுக்குள் வைத்து ஒருவருக்கொருவர் உதவி செய்யும் போது நமது சமுதாய வக்கீல்கள் மத்தியில் அது போன்ற ஒரு அமைப்பு இல்லை. ஆகவே சட்டம் படித்த சமுதாய தொண்டாற்ற விருப்பம் தெரிவிக்கும் வழக்கறிஞர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். அந்த அமைப்பிற்கு சுதந்திரப் போராட்ட வீரரும், லண்டன் வட்டமேஜை மாநாட்டில் இந்திய மக்கள் கருத்தினை ஆனித்தரமாக எடுத்துச் சொனன ஜின்னா பெயரில் ஒரு இலவச சட்ட உதவி மையம் ஏற்படுத்தலாம்.

அலி சீரணிப் படை: பெருமானார் பெரிய தகப்பனார் மகனாகவும், பெருமானார் அருமை மகளார் பாத்திமா அவர்களின் வாழ்க்கைத் துணைவராகவும், பெருமானார் படைகளை வெற்றி வாகையுடன் நடத்திச் சென்றவருமான அலி(ரலி) அவர்கள் சமுதாயத்திற்கு ஆற்றிய தொண்டு அளப்பிட முடியாது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தான் சீருடை அணிந்து அணிவகுப்பினனை நடத்த முடியும் என்பதினை முறியடித்து பாப்புலர் ஃபிரண்ட் அமைப்பினர் சுதந்திர விழாக்கள் நேரத்தில் மிகவும் சிறப்பான அமைதியுடன் கூடிய அணி வகுப்பினை கோவை, மதுரை போன்ற பகுதிகளில் நடத்திக்காட்டியுள்ளனர். அவர்கள் செயல் கட்டுப்பாடுடன் இருந்தால் நமது சமுதாயத்தாலும் மற்ற அமைப்பு போல சாதித்துக் காட்ட முடீயுமென்பதை உணர்த்தவில்லையா? இது போன்ற அமைப்புகள் ஒவ்வொரு சமுதாய அணியிலும் இருக்கின்றன நமது சமுதாயத்திலும் தொண்டர்களுக்கு உடற்பயிற்சி கொடுக்கவும், சமுதாயம் கூடும் இடங்களில் சீருடையில் ஒழுங்கு படுத்தவும், அவசர காலங்களில் சமுதாயத்தினை தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கவும், தேவைப்படுவர்களுக்கு ரத்ததானம் அளக்கவும், இயற்கை சிற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுனாமியில் நாகூர், பரங்கிப்பேட்டை முஸ்லிம் இளைஞர்கள் உதவி செய்தது போல உதவிகள் அளிக்க முடியுமல்லவா?

உமர் அரசியல் விழிப்புணர்பு கழகம்: இன்றை ஜனநாயக மதசார்பற்ற நாட்டில் அரசியலில் நமது சமுதாயம் ஒரு அங்கீகாரம் கிடைக்க வழியில்லை. ஆனால் சுதந்திர இந்தியாவில் கண்ணியமிக்க காயிதே மில்லத் காலத்தில் அது போன்ற ஒரு அங்கீகாரம் இருந்தது. இன்று சமுதாய அமைப்புகள் பிரதான அரசியல் கட்சிகளுக்கு வழியச் சென்று சேவை செய்யும் பரிதாப நிலை ஏற்பட்டு அங்கீகாரமற்ற நிலையில் நமது சமுதாயம் உள்ளது.. மகாத்மா காந்தி கூட இந்தியாவில் ஒரு சிறந்த அரசு அமைக்க வேண்டுமென்றால் அது கலிபா உமர்(ரலி) அவர்களுடைய ஆட்சிபோன்று அமைய வேண்டுமென்றார். அப்படிப்பட்ட சமுதாய அரசியல் வழிகாட்டுபவர்கள் வழியில் வந்த நாம் நமது உரிமையினை அடைய முடியாத நிலையில் உள்ளோம் என நினைக்கும் போது பரிதாபமாகவில்லையா? தலித் மக்களுக்கு இன்று ஒரு தனி இடம் அரசியலில் தொல்.திருமாவளவன் போன்று இருக்கும்போது நமது சமுதாயத்தில் தலைவர் ஒருவரே உள்ள கட்சி, நாலுபேருக்கு நன்றி சொல்லும் கட்சி, காரில் கொடி பறப்பதிற்காக உள்ள கட்சி, சமுதாய பெயர்சொல்லி பணம், பதவி பெற ஒரு இலக்கிய அமைப்பு, அரசியல் துதி பாடும் அடிவருடிகள் போன்ற அரசியல் அமைப்புகள் தான் ஏராளமாக உள்ளன. ஆனால் சமுதாயத்திற்கு வேலை வாய்ப்பு, கல்வியில் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு, மாநில மைனாரிட்டி கமிஷனில் சேர்மன் அந்தஸ்து, நலிந்த சமுதாய மக்கள் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்த தொழில் உதவி, தனி தொழில் பேட்டை தொடங்குதல், மகளிர் ஒதுக்கீட்டில் சமுதாய மகளிருக்கு உள் ஓதுக்கீடு போன்ற தனிக் கொள்கைகளை முன் வைத்து அரசியல் கூட்டணிக்கு ஆதரவு என்ற ஒரு நிலைப்பாடு எந்த சமுதாய அரசியலமைப்பிற்குமில்லை. ஆனால் சாப்பாட்டிற்கு தொட்டுக்கொள்ளும் ஊறுகாயாக, தாளிக்க உதவும் கருவேப்பிள்ளையாக, நோன்பு திறக்கும் நேரத்தில் கஞ்சி குடிக்க தொப்பி போட பயன்படும் சமுதாயமாக நமது சமுதாயத்தினை பல அரசியல் கட்சிகள் பயன்படுத்துகின்றனர். ஆகவே நமது உரிமைகளுக்கு குரல் கொடுக்கவும், நல்உறவிற்கு கைகொடுக்கவும், அரசியலில் தனித்தன்மை பெறவும் ஒரு அரசியல் கூட்டு விழிப்புணர்வு கழகம் அவசியம் தேவை.தானே!

பல்வேறு சமுதாய அமைப்புகளில் உள்ளவர்களும், அரசியல் கட்சிகளில் உள்ளவர்களும் எப்படி ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பல்வேறு அமைப்புகளிலிருந்தாலும் அவர்களுடைய பயிற்சியின் போது வாஜ்பாய் போன்ற வயதான தலைவர்களிலிருந்து, ராம் மாதவ் போன்ற இளைஞர்வரை காக்கி அரைக்கால் சட்டையும், வெள்ளை நிறச் சட்டையும், கருப்பு தொப்புயுடன் காட்சியளிக்கின்றார்களோ அதேபோன்று சமுதாய விழிப்புணர்வு கழக தொண்டர்கள் கைலி அல்லது பேன்டும் முழுக்கை வெள்ளைச்சட்டையும் அனிந்து, வலது கையில் முனங்கைக்கு மேல் பச்சைக் கலர் உரையும் அணிந்து தனித்தன்மையுடன் செயலாற்ற வேண்டும். தொண்டர்கள் பயிற்சிக்கு சமுதாய கல்வி நிலையங்களை தேர்ந்தெடுக்கலாம்.

நான் குறிப்பிட்டவை அனைத்தும் நமது சமுதாயம் மற்ற சமுதாயத்தினை விட பின்தங்கி விடக்கூடாது என்ற எண்ணத்தில் சொல்லப்பட்டுள்ளன.. என்னுடைய யோசனையை விட மிகவும் சிறப்பான செயல் வடிவம் கொடுக்கக் கூடிய, யோசனை சொல்ல வல்ல பல சமுதாய படித்த இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதினை அவர்கள் அனுப்பும் மின் அஞ்சலிலிருந்து தெரிந்து கொண்டேன். ஆகவே ஒரு கூட்டு நடவடிக்கை ஏற்பட உங்களது ஆக்கப் பூர்வமான கருத்துக்களினாலும் முடியும். அவ்வாறு சமுதாய எழுச்சி அணி ஏற்பட்டால் நமது சமுதாயம் முன்னாள் மறைந்த வயதான எம்.பி. ஜாப்ரே மனைவி அழுதது போன்று அழாது ஆர்த்தெழ பேருதவியாக இருக்குமென்றால் அது பொய்யாகுமா?

-- டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பிஎச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)

தொழு ! 21

அதிரைநிருபர் பதிப்பகம் | November 29, 2010 | , , ,

கரு வறை தொடங்கி
கல் லறை அடங்கி
முடி வுறும் நாள்வரை...
திரு மறை ஓது
ஒரு இறை தொழு!

எத்தனை அழகு
என்னென்ன நிகழ்வு
எல்லாம் உனக்களித்த
ஏகனை தொழு!

காணவும் களிக்கவும்
கண்களால் ரசிக்கவும்
பார்வையைத் தந்தவனை
நேர்மையாய் தொழு!

கேட்கவும் கிறங்கவும்
கேட்டதை உணரவும்
ஒலி புரிய செவி தந்த
வலியோனைத் தொழு!

சாப்பிடவும் கூப்பிடவும்
சண்டையின்றி பேசிடவும்
நாவும் நல் வாயும் தந்த
நாயன் தனைத் தொழு!

சுவாசிக்கும் நாசியாகவும்
முகர்ந்தறிய மூக்காகவும்
அமைத்தொரு புலன் தந்த
ஆண்டவனைத் தொழு!

கையும் காலும்
கச்சிதமான உடலும்
வகையாய் தந்த
வல்லோனைத் தொழு!

முடிந்த இரவை முழுமையாக்கி
விடியும் முன்பு தொழு...

புதிய பூவாய் பூரிப்போடு
மதிய நேரம் தொழு...

மாலை மகுடம் காத்திருக்கு
மாலை வேளை தொழு...

மாலை மயங்கி இரவு தொடும்
வேளையிலும் தொழு...

இன்று நன்றாய் முற்றுப்பெற
இரவு நேரம் தொழு!

காலநேரம் கடக்குமுன்
கவனமாக தொழு!

கடமையுணர்ந்து தொழு!
கண்மனி நபி
கற்பித்தபடி தொழு!

உறுதியாக தொழு
உபரியையும் தொழு!

உன்
உடல் கிடத்தி
ஊர் தொழு முன்-
உயிரோடு நீ...
தொழு!


- Sabeer

தீன்குல ஹீரோக்களுக்கு 17

அதிரைநிருபர் | November 28, 2010 |

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) (உங்கள் மீது எகஇறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)

அன்பிற்கினிய சகோதரர்களே! என் அருமை இளைஞர்களே!நீங்கள் நன்மையடையும் பொருட்டு சில அறிவுரைகளை அல்லாஹ் உங்களுக்கு போதித்துள்ளான்! அவற்றில் சில உங்களுக்கு கூற ஆசைப்படுகிறேன்! சற்று கவனமாக படித்து,சிந்தித்துப் பாருங்கள்!

இன்றைய நவீன யுகத்தில் சினிமா! தொ(ல்)லைக்காட்சிகள்!, இரட்டை வசன மற்றும் ஆபாச பாடல்கள்! அதற்கேற்றவாறு தங்களுடைய ஆடை அலங்காரம், பைக், செல்ஃபோன், இளம் ஆண் மற்றும் பெண்களின் மேல் காதல் எனும் கன்ராவி மோகம் போன்றவைகளின் மூலம் நீங்கள் ஷைத்தானால் தீண்டப்படலாம்! கவனமாக வாழவும்!

மேற்கண்ட பழக்கவழக்கங்களில் மாட்டிக்கொண்ட இன்றைய இளைஞர்கள் தங்களை ஹீரோக்களாக பாவித்து பெற்றோரையும் உடன் பிறந்தவர்களையும் துச்சமாக மதித்து உதாசீனப்படுத்தி வருகின்றனர். மேலும் திருமணமானவுடன் பெற்றோரை கவனிக்கத் தவறுவதும், பெற்றோரால் மணமுடித்து வைக்கப்பட்ட மனைவியை கவனிக்கத் தவறுவதும் இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதாரணமான மாறிவிட்டது. இதனால்தான் சில வயதான வசதி வாய்ப்பற்ற பெற்றோர் திக்கற்றவர்களாக 5க்கும் 10க்கும் மற்றவர்களின் கைகளை பார்த்து ஏங்கித் தவிக்கின்றனர். ஆனால் இப்படிப்பட்ட பெற்றோரின் மகன்களோ 10 ஆயிரம் ருபாய்க்கு கேமரா செல்போன் வாங்கி மூன்றே மாதத்தில் 3-ஆயிரம் ரூபாய்க்கு விற்று ஆன்டியாகும் நிலைமைகள்!!!

பெற்றோர் தட்டிக் கேட்டால் என் பணம், என் வருமானத்தில் வாங்குகிறேன் நீ யார் அதை கேட்க? என்ற பதில் தான் அவர்களுடைய முதல் கலிமாவாக உள்ளது. ஆனால் அல்லாஹ் சொல்வதை சற்று கேட்கவும்

மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம். அவனுடைய தாய் வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள். (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும் அவனுக்கு பால் குடி மறக்கச் செய்வதும்(மொத்தம்) முப்பது மாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும் "இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதம் புரிந்த நிஃமத்துக்காக (அருட்கொடைகளுக்காக!) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய ஸாலிஹான நல்லஅமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாவிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக)சீர்படுத்தி அருள்வாயாக! நிச்சயமாக நான் உன் பக்கமே திரும்புகிறேன், அன்றியும் நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக) இருக்கிறேன்" என்று கூறுவான். (அல்குர்அன் 46:15)

அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும் பொற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கிறான். அவ்விருவறில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்துவிட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்)சொல்ல வேண்டாம்- அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவறிடமும் கனிவான கண்ணியமான பேச்சையை பேசுவீராக! (அல்குர்அன் 17:23)

இன்னும் நினைவு கூறுங்கள் நாம் ( யாஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில் "அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் எதனையும் நீங்கள் வணங்கக் கூடாது! (உங்கள்)பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன் (களான ஏழைகளுக்கும்) நன்மை செய்யுங்கள்! மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்! மேலும்தொழுகையை முறையாக கடைபிடித்து வாருங்கள்! ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்! என்று உறுதிமொழியை வாங்கினோம் ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல் அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள். இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள்! (அல்குர்அன் 2:83)

என் அருமைச் சகோதரர்களே! நம் அன்பிற்கினிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அறிவுரைகளை கேளுங்கள்.

'எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறை நம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரிய வராவது, ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச்செல்வதை வெறுப்பது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள்கூறினார்கள்" என அனஸ்(ரலி) அறிவித்தார். Volume:1 Book:2 : Verse 16


(அல்லாஹ்வுக்காக பெற்றோரையும் தத்தமது குடும்பத்தினரையும்
நேசிக்கக்கூடாதா!)

'ஒரு மனிதன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவனாகத் தன் குடும்பத்திற்குச் செலவு செய்தால் அது அவனுக்குத் தர்மமாம் விடும்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அபூமஸ்வூத்(ரலி) அறிவித்தார். (சஹீஹுல் புகாரி Volume:1 Book:2, Verse:55)

மனைவியின் மீது உங்கள் கடமை

'அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச்செலவு செய்தாலும் அதற்காக கூலி வழங்கப்படுவீர்.உம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி)அறிவித்தார். (சஹீஹுல் புகாரி )

'உங்களில் ஒருவர் தம் இஸ்லாத்தை அழகாக்கினால் அவர் செய்யும் ஒவ்வொரு நன்மையும் பத்து மடங்கிலிருந்து எழுநூறு மடங்கு வரை பதிவு செய்யப்படும். அவர் செய்யும் ஒவ்வொரு தீமைக்கும் அது போன்றே பதிவு செய்யப்படும்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள்கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். சஹீஹுல் புகாரி

திருந்துவதற்கு வாய்ப்புகள் இந்த உலகில் உள்ளது திருந்திக்கொள்ளவும் உங்களை திருத்திக் கொள்ளவும். இறைவன் நாடினால் அடுத்த வினாடி கூட நமக்கு மரணம் சம்பவிக்கலாம் இப்போதே இந்த வினாடியே தங்களை இந்த படுபாதக பாவங்களிலிருந்து தங்களை காத்துக் கொள்ளவும் தங்களது சுவனப் பாதையை எளிதாக்கிக் கொள்ளவும்

அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும்அல்லாஹ்வுக்கே!)

***********************************************

எங்கள் இறைவனே! எங்களையும், விசுவாசம் கொள்வதில் எங்களை முந்திவிட்ட எங்களுடைய சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக! ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் வெறுப்பை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; மிக்க கருணையுடையவன்.- (அல் குர் ஆன்59:10)

"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.(குர்ஆன் 13:11)

தகவல்: சின்னகாக்கா

அற்புதமான ஹஜ் புகைப்படங்கள் 3

தாஜுதீன் (THAJUDEEN ) | November 28, 2010 | ,

இந்த வருட ஹஜ் புகைப்படங்கள் அதிரைநிருபரில் பதியப்பட்டுவருகிறது, இதன் தொடர்ச்சியாக நமக்கு கிடைத்த ஆச்சர்யப்பட வைக்கும் ஹஜ் புகைப்படங்கள் இங்கு உங்கள் அனைவரின் பார்வைக்கு மீண்டும் தருகிறோம்.
நன்றி: மு செ மு நெய்னா முகம்மது

-- அதிரைநிருபர் குழு

சிந்திப்போம்! செயல்படுவோம்!! - தான தர்மம் 14

அதிரைநிருபர் | November 27, 2010 | , ,

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சில வாரங்களுக்கு  முன்பு அதிரையில் நூதன முறையில் திருட்டுக்கள் அதிகம் நடைப்பெறுகிறது என்ற செய்தியை அதிரைநிருபர் மற்றும் மற்ற அதிரை வலைப்பூக்களில் காணமுடிந்தது.

ஏற்கனவே தான தர்மம் சம்மந்தமாக 05/09/2010 அன்று சிந்திப்போம் என்ற எனது கட்டுரை அதிரைநிருபர் மற்றும் வேறு சில வலைப்பதிவுகளிலும் வெளியிடப்பட்டது. பிச்சைக்காரகள் போல் வேசம் போட்டுக்கொண்டு வருபவர்கள் 
பற்றி எழுதியிருந்தேன். நீளமான கட்டுரை என்பதால் அது அதிக நபர்களை சென்றடையவில்லை என்றே நினைக்கிறேன். காலத்தின் தேவை கருதி, சமூக மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற பேராவலோடு இங்கே அதை சுருக்கமாகத் தருகிறேன்.

நம்மால் தான தர்மம் பல்வேறு சந்தர்ப்பங்களில் செய்யப்படலாம். அவை

1) சாதாரணமாக செய்யும் தர்மம்
2) பிரத்தியேகமாக செய்யும் தர்மம்.

சாதாரணமாக செய்யும் தர்மம்: 

நாம் சாதாரணமாக செய்யும் தர்மம் பெரும்பாலும் யாசிப்போரையே சென்றடைகிறது. யாசிப்பவர்கள் பெரும்பாலும் திருடர்களாகவும், மோசடிப் பேர்வழிகளாகவும், அந்நேரத்தைய தேவையற்றவராகவும் இருப்பதனால் நாம் செய்கின்ற தர்மம் இவ்வுலகில் நமக்கு சரியான பலனைப் பெற்றுத்தறாமல் போய்விடுகிறது எனவே, நம்முடைய தர்மத்தை யாசிப்போருக்குக் கொடுக்காமல் "நாங்கள் கொடுப்பதில்லை" என்று மறுத்துவிட்டு அதற்கு பதிலாக நம் வீட்டில் ஒரு உண்டியலை வைத்து அதில் சேகரிக்கலாம். எப்போதெல்லம் நமக்கு தர்மம் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ, எப்போதெல்லாம் யாசிப்போருக்கு தர்மம மறுக்கப்படுகிறதோ 
(பிச்சைக்காரர்கள் என்ற சமூகம் உருவாகாமல்  தடுக்கும் எண்ணத்தில்) அப்போதெல்லாம் அந்த உண்டியலில் பணத்தை போட்டு வந்தால் நாளடைவில் அது ஒரு பெரும் தொகையாக மாறிவிடும். இதை நான் கணக்கிட்டுப் பார்த்ததில் ஒரு ஊரில் (அதிரை போன்ற ஊர்களில்)  நாள் ஒன்றுக்கு சுமார் 50 பிச்சைக்காரர்கள் வந்து சராசரியாக தலா ரூ.100 சேகரிக்கிறார்கள் என்று வைத்தால் ஒரு வருடத்திற்கு அது ரூ.18,25,000-த்தை எட்டுகிறது.  மொத்தமாக கணக்கிட்டுப் பார்க்கும்போது இது மிகப்பெரிய தொகை. இதை வைத்து எத்தனையோ  சமூக  நலத்திட்டங்களை  செயல்படுத்தலாம், இறைவன் நாடினால் எத்தனையோ உண்மையான ஏழைகளின் ஏழ்மைக்கு நிறந்ததர முற்றுப்புள்ளி வைக்கலாம்.


பிரத்தியேகமாக செய்யும் தர்மம்:

சாதரணமாக செய்யும் தர்மம் அல்லாமல் பல சந்தர்ப்பங்களில் பிரத்யேகமான காரணங்களுக்காகவும் நாம் தர்மம் செய்யலாம். அவை

நீண்ட பிரயானங்களை மேற்கொள்ளும் போது அல்லது ஏதேனும் நல்ல காரியங்களுக்காக செல்லும் போது ஆபத்து, வழித்தடங்கள் எதுவும் ஏற்படாமலிருக்க...

 தீய கனவுகளால் ஏதோ ஆபத்து ஏற்படப்போகிறது என்ற எண்ணத்தால் அச்சம் ஏற்படும்போது...

நோயுற்றிருக்கும் போது என்று பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அல்லாஹ்வின் உதவியை நாடி தர்மம் செய்யலாம்.

திருமணம், குழந்தைப் பேறு, வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சி, நாடிய காரியம் நிரைவேறுதல், தேர்வில் வெற்றி பெறுதல், நோயிலிருந்து குணமடைதல் என்று பல்வேறு மகிழ்ச்சியான சந்தர்ப்பங்களில் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் தர்மம் செய்யலாம்.

இவ்வாறாக எல்லா நிலைகளிலும் செய்யும் தர்மத்தை யாசிப்போருக்குக் கொடுக்காமல் பணத்தை உண்டியலில் போட்டு சேகரித்து வரலாம்.

சிறு துளி பெரு வெள்ளமாய் சாதாரனமாக செய்யப்படும் தர்மம் மட்டுமே நம் கணக்குப்படி ஓராண்டில் ரூ.18,25,000/- எட்டியிருக்க பிரத்தியேகமாக செய்யும் தர்மத்தையும் சேர்க்கும் போது அது கோடிகளை எட்டிவிடும். பைத்துல்மால் போன்ற பொது தன்னார்வ அமைப்புகள் இத்தொகையை சேகரித்து அந்த ஊருக்காக, ஊர் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் தங்களுடைய சேவைகளை பெருக்கிக்கொள்ளலாம். சில நேரங்களில் நமக்கு நன்கு அறிமுகமான ஏழைகள் ஆயிரம் இரண்டாயிரம் என்று ஏதேனும் மருத்துவ செலவுகள் போன்ற அத்தியாவசிய தேவைக்காக நம்மிடத்தில் கடனுதவி தேடி வரும் போது அந்த  உண்டியலில் சேகரித்துள்ள பணத்திலிருந்து அவர்களுக்கு தானமாகவே கொடுத்துவிடலாம்.

சமூக மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் சமூக சீர்திருத்தம் செய்யமுடியாது. எனவே, இத்திட்டம் இஸ்லாத்திற்கு மாற்றமில்லாத நிலையில் வீடு வீடாக இதை எடுத்துச் சொல்லி சமூக சீர்தித்தம் ஏற்பட தான்னார்வ அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் முன் வறவேன்டும். இறைவன் நாடினால் இத் திட்டம் செயல்படுத்தப்படும் ஊர்களில் வெளியூரிலிந்து வரும் பிச்சைக்காரர்களின் வருகையை கட்டுப்படுத்தலாம். குறிப்பாக பிச்சைக்காரர்கள் வேடத்தில் வரும் பிரச்சனைகளையும் கட்டுப்படுத்தலாம். மேலும் உள்ளூர் பிச்சைக்காரர்களுக்கு ஏதேனும் ஒரு தொழிலை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் பிச்சை எடுப்பதைத் தவிர்த்து அவர்களும் தன்மானத்தோடு வாழ வழி வகை செய்யலாம்.

மகிழ்ச்சி, துக்கம், சாதாரண நேரம் என்று எல்லா நிலைகளிலும் நாம் அல்லாஹ்விடத்தில் உதவியை எதிர்பார்த்தவர்களாக இருக்க வேண்டும். நேர்ச்சை செய்து பின் காரியம் நிறைவேறியதும் தர்மம் செய்தால் அந்த தர்மம் நமக்கு எந்த நன்மையையும் அல்லாஹ்விடத்தில் பெற்றுத்தறுவதில்லை. அதே தர்மத்தை முன் கூட்டியே செய்துவிட்டு அல்லாஹ்விடத்திலே உதவியை நாடும் போது தர்மத்திற்கான கூலியும் கிடைத்துவிடும், தர்மம் தீய விதியைத் தடுக்கும் என்ற இஸ்லாத்தின் கருத்துப்படி இறைவன் நாடினால் ஆபத்தும் நம்மை விட்டு நீங்கிவிடும்.

நாம் செய்யும் காரியம் பிறருக்கு பயனளிப்பதாகவும் இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டே மேற்குறிப்பிட்ட யோசனைகள் சொல்லப்பட்டுள்ளது.

இது மாத்திரமே என்னிடம் இருக்கின்ற அறிவு, தீர்க்கமான ஞானம் படைத்த இறைவனுக்கே சொந்தம். மேலும் நல்ல யோசனைகள் இருந்தால் இங்கு பகிர்ந்துக்கொள்ளலாம்.

சிந்தனை தொடரும் இன்ஷா அல்லாஹ்..

ம அஸ்ஸலாம்

--அபு ஈஸா

கடன் வாங்கலாம் வாங்க - 8 15

அதிரைநிருபர் பதிப்பகம் | November 25, 2010 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே தியாகத் திருநாளை கொண்டாடி விட்டு வந்திருக்கும் நம் அனைவருக்கும் குர்ஆனையும், இறுதித்தூதர் நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய வழிமுறையையும் பின்பற்றி நடக்கவும், மார்க்கத்திற்கு முரணான அனைத்து வழிமுறைகளையும் விட்டு, ஹலால், ஹராமை பேணி மறுமை வாழ்க்கை ஒன்றையே குறிக்கோளாக கொண்டு இம்மையில் வாழ்வதற்கு வல்ல அல்லாஹ் உறுதியான ஈமானை நமக்கு வழங்க வேண்டும் என்று பிரார்த்தித்த(துஆச் செய்த)வனாக என்னுடைய கட்டுரையை தொடங்குகிறேன்.

நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி.(அல்குர்ஆன் :2:208)

எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! (அல்குர்ஆன் : 2:201)

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் தாம் சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் : 2:82)

இந்த தொடரிலும் சகோதரிகளைப்பற்றியே தொடர்ந்து வருவதால் சகோதரிகள் கவனமாக படியுங்கள். சில சகோதரிகள் கடன் எனும் கடலில் தனது கணவனை தள்ளி விட்டு கவலைப்படாமல் இருந்த நிகழ்ச்சிகளையும், அடுத்து கடன் எனும் கடலில் கணவனை விழாமல் காத்துக்கொண்ட பெண்மனியைப்பற்றியும் பார்ப்போம்.

கடன் எனும் கடலில் தள்ளிய சகோதரிகள்!

கணவனுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டாலோ அல்லது தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்தாலோ தன்னிடம் உள்ள நகைகளை (அசையாத சொத்துக்கள் நிலங்களாக இருக்கும், இன்று அதிகமாக அசையும் சொத்துக்களாக இருப்பது தங்க நகைகள்தான்) கணவனின் கஷ்டத்திற்கு கொடுத்து உதவாமல் கணவன் வெளியில் உறவினர்களிடம் கடன்கள் வாங்கினாலும் பார்த்துக்கொண்டு கடன் உள்ளதே என்ற பொய் கவலையுடன் தன்னிடம் உள்ள நகைகளை மட்டும் பாதுகாத்துக்கொண்டு நடமாடும் சகோதரிகளைப் பற்றி என்ன சொல்வது? (கணவன் வாங்கி கொடுத்த நகைகளையும், சொத்துக்களையும் கொடுத்து உதவி செய்யவே மறுக்கிறார்கள்).

இப்படி நடந்து கொள்ளும் சகோதரிகளே! கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள். கணவனுக்கு அதிக பொருளாதாரம் கிடைத்தால் யாருக்கு தரப்போகிறார்? கணவன் கடனோடு நடமாடுவதை பார்த்துக்கொண்டு இருப்பது நிம்மதியா? அல்லது போலி கௌரவத்திற்காக கணவனுக்கு உதவாமல் நகைகளோடு தாங்கள் நடமாடுவது நிம்மதியா? எது நல்லது?

ஊதாரி கணவனுக்கு கொடுத்து ஏமாந்த சகோதரிகள்!

கணவன் நல்லவனா? கெட்டவனா? என்பது மனைவிக்கு தெரியும். தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டு இருக்கும் கணவனுக்கு உதவி செய்து சொத்துக்களை இழக்கலாமா? என்று சில சகோதரிகளின் கேள்வியாக இருக்கிறது. ஒரு தடவை உதவி செய்து பயனற்ற வழியில் செலவு செய்கிறார், மீண்டும் உதவி செய்கிறார். இப்படியே எல்லாவற்றையும் இழந்த சகோதரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படிப்பட்ட கணவர்களின் விஷயத்தில் தெளிவான முடிவு எடுத்து, இருக்கும் சொத்துக்களை பாதுகாத்துக்கொள்வதில் கவனம் எடுப்பது சிறந்தது. தொடர்ந்து ஏமாறுவது புத்திசாலித்தனம் இல்லை.

பாலைவனத்தில் பிடித்து தள்ளிவிடும் சகோதரிகள்!

கணவன் வெளிநாட்டிலேயே தொடர்ந்து இருந்து பிறகு சில காலம் கழித்து உள்நாட்டில் தொழில் வைத்து தங்கி விடலாம் என்று யோசனை செய்து ஊரில் தங்கினாலும் அல்லது முடிவெடுத்தாலும் உடனடியாக எதிர்ப்பு மனைவியிடம் இருந்து வருவதை காண முடிகிறது. உடனே கணவனை வெறுக்கத் தொடங்கி விடுகிறார்கள். என்ன காரணம் மாதா மாதம் பணம் வந்து கொண்டு இருந்தது. வித விதமான சேலைகள் வாங்கி, புதிய புதிய நகைகள் செய்து, தினமும் தொலைக்காட்சியில் வரும் சமையலை செய்து பார்த்துக்கொண்டும், மற்ற ஆடம்பர செலவுகளும் செய்து வந்த நிலை இனி பறி போய் விடுமே, என்ற மிகப்பெரிய மனக்கவலைதான் காரணமாக இருக்கிறது.

கணவன் ஊரோடு வந்து தங்கி விட்டால் முதலில் அடிபட்டு போவது இவர்களின் ஆடம்பர வாழ்க்கைதான். மிகச் சிக்கனமாக வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என்ற பலவிதமான கவலை இவர்களை வாட்ட ஆரம்பித்து விடுகிறது. இவர்களின் நினைப்பு என்ன ஒரு வருடம், இரண்டு வருடத்திற்கு ஒரு முறை கணவன் பெட்டி நிறைய துணிமனிகளும், நகைகளும் கொண்டு வர வேண்டும். இதைப்பார்த்து மனமகிழ்ச்சி அடைய வேண்டும். இதை தவிர வாழ்வில் வேறு ஒன்றும் இல்லை என்ற எண்ணத்தை சகோதரிகளிடம் காண முடிகிறது. அதே நேரத்தில் கணவன் கடனாளியாக வருகிறானே என்ற அக்கரையெல்லாம் இவர்களிடம் இருக்கிறதா? என்றால் இல்லை என்று சொல்லி விடலாம். வருடா வருடம் வரும்பொழுது பெட்டியுடன் கடனும் சேர்ந்து வருகிறது என்பதை உணராமல் இருக்கிறார்கள். சகோதரிகளே! சிந்தித்து தெளிவுபெற்று கணவனுக்கு உறுதுணையாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

காலமெல்லாம் கணவனை கடனோடு,
பாலவன வெயிலில் போராட வைத்த சகோதரிகள்!


ஒரு சகோதரருக்கு இருப்பதற்கு வீடு இருக்கிறது. ஆனால் ஓட்டு வீடாக இருப்பது மனைவிக்கு பிடிக்கவில்லை. வீட்டை இடித்துவிட்டு புதுவீடு கட்டியே ஆக வேண்டும் என்ற தீராத லட்சியம் கணவரை தொந்தரவு செய்கிறார். இவரின் வருமானத்தில் உடனடியாக வீடு கட்ட முடியாது. மனைவியிடம் சில காலம் ஆகும் என்கிறார். ஆனால் கணவனின் பேச்சை மீறி கூட்டுறவு வங்கியில் வீட்டுக்கடன், கணவனையும் அவருடைய NRE கணக்கு உள்ள வங்கியில் கடன் வாங்கி மாடி வீட்டை கட்டி முடித்து விட்டார். சரி வீடு கட்டியாகி விட்டது. வீட்டில் நிம்மதியாக இருந்து கடன்களை அடைப்பதற்கு முயற்சி செய்வோம் என்ற எண்ணம் வந்ததா? அதுதான் இல்லை. அடுத்த முறையீடு ஆரம்பமாகிறது...

என்ன அது, விரைவில் நகைகள் சேர்க்க வேண்டுமாம். கணவனின் பதில்... வீடு கட்டிய கடன்கள் அடைந்த பிறகு நகைகள் வாங்கிக்கொள்ளலாம் என்று சொல்கிறார். ஆனால் அந்த சகோதரி சொல்வதை பாருங்கள். கடன் இருந்து கொண்டுதான் இருக்கும் அதற்காக நகைகள் வாங்காமல் இருக்க முடியுமா? என்ற அழகான பதிலை தருகிறார். கணவனோ என் வாழ்நாளில் இந்த கடன்கள் அடைந்து விடுமா? என்ற சந்தேகத்தில் புலம்பிக் கொண்டு நிம்மதியற்று தவிக்கிறார் வளைகுடாவில்.

சகோதரிகளே! கடன் வாங்கித்தான் வீட்டை கட்ட வேண்டும், நகைகள் வாங்க வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து விடுபடுங்கள். தங்களின் நிர்பந்தத்திற்காக கடன் வாங்கிய தங்கள் கணவர்தான் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி நிம்மதியற்று வாழ்வார். இது நியாயமா?

இன்னொரு சகோதரியைப்பற்றி பார்ப்போம் இவருக்கு எவ்வளவு பணம் அனுப்பினாலும் பண பற்றாக்குறை. அடுத்த மாதம் பணம் கூட வேண்டும் என்கிறார். பண பற்றாக்குறைக்கு வித விதமாக உணவு செய்து சாப்பிடுவது காரணம் இல்லை. இவருக்கு ஒரு மன வியாதி என்ன தெரியுமா? ஒரு சின்ன தலைவலி வந்தால் கூட உடனடியாக டாக்டரிடம் காண்பிக்க வேண்டும். உள்ளுர் டாக்டரிடம் காண்பித்தால் சின்ன சின்ன நோய்கள் குணமாகாது. அடுத்த ஊரில் உள்ள பீஸ் அதிகமாக வாங்கும் டாக்டரிடம் (கைராசி டாக்டர்) காண்பிக்க வேண்டும். அப்பொழுதுதான் சாதாரண தலைவலி, வயிற்றுவலி குணமடையும். இவருக்கு வந்தது உண்மையில் நோயா? இல்லை மன நோய்.

சாதாரண தலைவலியைக்கூட பெரிதாக போட்டு குழப்பி கொள்வதால் கண்ட பலன் : இவருக்கு டாக்டர் தரும் மருந்தால் பக்க விளைவு நோய் லாபம், டாக்டருக்கோ ஏதாவது ஒன்றில் குணமாகட்டும் என்ற மருந்து பட்டியலால் (மளிகை கடை பட்டியல் போல்) லாபம், கணவருக்கோ கடனாளி என்ற பெயர் லாபம்.

கணவர் தனக்கு உடம்புக்கு முடியாமல் போனாலும் உடனே டாக்டரிடம் போகாமல் மருந்துக்கடையில் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு, பக்குவமாக இருந்து செலவு அதிகமாகி விடுமே என்று முடிந்தவரை டாக்டரிடம் காண்பிப்பதை தவிர்த்துக்கொள்கிறார். கஷ்டப்படும் கணவரே சிக்கனமாக இருந்து தவிர்த்துக் கொள்ளும்பொழுது நிழலில் இருக்கும் மனைவி எப்படி இருக்க வேண்டும். (அதற்காக டாக்டரிடம் காட்டாமல் இருந்து விடாதீர்கள்).

இந்த நேரத்தில் நம் ஊர் வாடகை வாகன ஓட்டி சொன்னதை நினைவு கூர்கிறேன்: நம் ஊரைச்சேர்ந்த சகோதரிகள் திருச்சிக்கு சென்று துணிமனிகள் எடுத்துவிட்டு திரும்பி வரும் வழியில் தொந்தரவு தரும் பல்லை எடுப்பதற்கு தஞ்சை தனியார் பல் மருத்துவ மனைக்கு சென்று இருக்கிறார்கள். (முன்கூட்டியே தொலைபேசி மூலம் அனுமதி வாங்கியிருக்கிறார்கள்). மருத்துவரின் பீஸ் எவ்வளவு தெரியுமா? 3ஆயிரமாம், மேலும் அங்குள்ள நர்ஸ்க்கு 200ரூபாய் கொடுத்தார்களாம். வாகன ஓட்டி அவர்களிடம் கேட்டது ஏன் பட்டுக்கோட்டையில் மருத்துவர் இல்லையா? என்றதற்கு அங்கெல்லாம் சரியான முறையில் எடுக்க மாட்டார்கள் என்று சொன்னார்களாம். அவர் சொன்னது: காக்கா பட்டுக்கோட்டையில் 300ரூபாய்க்குள் இந்த பல்லை எடுத்து விடலாம். முள்ளங்கி பெற்றது போல் பணத்தை எண்ணி கொடுக்கும்பொழுது எனக்கு வயிற்றில் கலக்கம் ஏற்பட்டது என்றார். இதில் வருந்த தக்க விஷயம் என்னவென்றால் அந்த வாகன ஓட்டி காலையில் திருச்சிக்கு புறப்பட்டு அங்கு மதியம் வரை அவர்கள் வாங்கிய பொருட்களை வேலைக்காரனை போல் சுமந்து கொண்டு வந்து சேர்த்து பின் தஞ்சாவூர் வந்து பல் மருத்துவம் செய்து விட்டு பிறகு இரவு திரும்பி ஊர் வந்து வீட்டுக்கு விடும்பொழுது எனக்கு 10ரூபாய் கொடுத்தார்கள் காக்கா நான் ஏன் இதை கொடுக்கிறீர்கள் இதையும் தாங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று திருப்பி கொடுத்து விட்டேன் என்று சொன்னார். டாக்டருக்கு கொடுக்க மனம் வருகிறது, அங்குள்ள நர்ஸ்க்கும் கொடுக்க மனம் வருகிறது. காலையிலிருந்து கஷ்டப்பட்ட வாகன ஓட்டிக்கு பணம் கொடுக்க மனம் வரவில்லை. (அவரின் மனம் எவ்வளவு வேதனை அடைந்திருக்கும்). (இந்த பணத்தை சம்பாரிக்க இவர்கள் வீட்டு ஆண்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள்).

வீண் விரயத்தை விரும்பக்கூடிய சகோதரிகளே! எந்தக் காரியத்திலும் சிக்கனத்தை கடைபிடியுங்கள். டாக்டர் தொழில் என்பது புனிதம் என்று கூறிய காலம் போய் விட்டது. லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து படித்து விட்டு வந்து போட்ட பணத்தை எடுக்க வேண்டும் (விதி விலக்காக நல்ல டாக்டர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்) என்ற வியாபார நோக்கில் சேவை மனப்பான்மை அடிபட்டு பணம் ஒன்றே குறிக்கோளாகி விட்ட உலகத்தில் இருக்கிறோம் என்பதையும், தங்கள் கணவர் படும் கஷ்டங்களையும் மனதில் நினைத்து கைமருந்து சாப்பிட்டால் குணமாகும் என்ற நோய்களுக்கெல்லாம் மருத்துவரிடம் காண்பித்து வீண் விரயம் செய்யாமல், மனதை திடப்படுத்திக் கொண்டு சிக்கனமாக இருந்து கணவனை கடன் என்னும் கடலில் மூழ்க விடாமல் பார்த்துக்கொண்டால் வாழ்வில் நிம்மதி கிடைக்கும்.

கடன் எனும் நிழல் கூட தன் மீதும் கணவன் மீதும் விழாமல் காத்துக்கொண்ட பெண்மனி!

கணவர் கஷ்டப்பட்டு அனுப்பும் பணத்தை வீண் விரயம் செய்யாமல் எப்படியெல்லாம் சிக்கனமாக செலவு செய்ய முடியுமோ அவ்வாறெல்லாம் சிக்கனமாக இருந்து கணவர் ஊர் செல்லும்பொழுதெல்லாம், கடன் வாங்க விடாமல் தாம் சேமித்து வைத்த பணத்தை கையில் கொண்டு வந்து கொடுத்து உங்கள் பணம் செலவழித்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். தானும் கடன் வாங்காமல், கணவனையும் கடன் வாங்கக்கூடாது என்று நிர்பந்தித்து வாழும் மனைவி. இவரைப்போல் சில பேர் இருக்கலாம். (எனக்குத் தெரிந்து இப்படி கடனே இல்லாமல், கணவரையும் கடன் வாங்க விடாமல் வாழ்பவர் என்னுடைய மனைவிதான் அல்ஹம்துலில்லாஹ்!).

சகோதரிகளே! தாங்களும் இப்படி சிக்கனமாக இருக்க முயற்சி செய்யுங்கள். சிக்கனத்தை கடைபிடித்து தாங்களும் கடன் வாங்காமல் தங்கள் கணவரையும் கடனுக்குள் விழுவதை தடுத்து வாழ ஆரம்பித்தால் தங்களுக்கும் - கணவருக்கும் மன நிம்மதி அளிக்கும்.

இன்ஷாஅல்லாஹ் வளரும்...

- S. அலாவுதீன்

கடன் வாங்கலாம் வாங்க 7                                          கடன் வாங்கலாம் வாங்க 9


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு