பூமியில் நடமாடித் (தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்;. அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். அல்குர்ஆன் (2:273)
சமீபத்தில் சகோதரர் அதிரை அஹ்மது அவர்கள் அதிரையில் பிச்சைகாரர்களின் அட்டுழியங்கள் பற்றிய ஒரு கட்டுரையை அதிரைநிருபரிலும் மற்ற அதிரை வலைப்பூக்களிலும் பதிந்திருந்தார்கள். அவர்களின் கட்டுரை உள்ளபடியே ஆழமாக சிந்திக்க வேண்டியது.
மகத்துவம் மிக்க ரமழானுடைய மாதத்தில் நாம் இருக்கின்றோம். நன்மையை அள்ளித்தரும் மாதம் என்பதால் இம்மாதத்தில் அதிகமான தான தர்மங்கள் செய்யப்படுகிறது. இதைனை சாதஹமாக்கிக்கொள்ளும் பிச்சைக்கார சமூகம் தங்களால் இயன்ற அளவு வசூல் வேட்டையில் ஈடுபடுவதை நாம் அனைவரும் அறிவோம். பதினோரு மாதங்கள் உழைத்துவிட்டு சிலர் இம்மாத்தில் யாசிப்பது மிகவும் வேதைனையான ஒன்று. எனவே இம்மாதத்தில் புதிய புதிய பிச்சைகாரர்களின் பிரவேசம் அதிகமாகவே இருக்கும். மாற்று மத சகோதரர்களும் முஸ்லீம்கள் முஸ்லீம்களுக்கு மட்டும் தான் தர்மம் கொடுப்பார்கள் என்று தவறாக என்னிக்கொன்டு தலையில் கைக்குட்டையும், தொப்பியும் அணிந்தவர்களாக வலம் வருவதையும் நம்மால் காணமுடிகிறது. பாவம்! "முஸ்லீம்களுக்கும் நிராகரிப்பாளார்களுக்கும் உள்ள வேறுபாடு தொழுகை" என்று அல்லாஹ்வின் தூதர் அறிவித்ததை மாற்று மதத்தவர்கள் அறிந்திருக்க வாய்பில்லை! அதனால் தொப்பியும், கைக்குட்டையும் தங்களை முஸ்லீம்களாக அடையாளப்படுத்திவிடும் என்று நினைக்கிறார்கள்.
இவ்வாறு வீடுவீடாக பிச்சைகாரர்கள் வசூல் வேட்டையாடுவதும் நம்மவர்கள் இதற்காக சில்லறைத் தேடி அலைவதும், வங்கிகளில் சில்லரைத் தட்டுப்பாடு ஏற்படுவதும் காலங்காலமாய் நாம் காணும் விசயங்களாகவே இருந்து வருகிறது.
எல்லாவற்றையும் குர்ஆன் ஹதீஸுக்கு உட்படுத்தி பார்த்து செயல் படும் முஸ்லீம் சமுதாயம், இந்த பிச்சைகாரர்களின் விசயத்திலும் ஒரு தெளிவான ஆய்வு மேற்க்கொள்ள கடமைப்பட்டிருக்கிறது.
நாளை மறுமையில் அல்லாஹ் தன் அடியானிடத்தில் “ஓ அடியானே ஒரு நாள் நான் பசியோடு உன்னிடத்திலே வந்தேன், நீ எனக்கு உணவளிக்க மறுத்து விட்டாய்.. ஒரு நாள் நான் குளிரில் நடுங்கியவனாக உன்னிடத்தில் வந்தேன் நீ எனக்கு ஆடை தர மறுத்துவிட்டாய், என்றெல்லாம் சொல்லுவான். அதற்கு அடியான் யா அல்லாஹ்! நீ யாரிடத்திலும் தேவையற்றவனாக இருக்கின்றாய்! மேலும் நீயே எங்களுக்கு உன்னுடைய புறத்திலிருந்து வழங்குகிறாய்! அவ்வாறிருக்க நீ எப்போது என்னிடம் வந்தாய் என்று கேட்பான். அதற்கு அல்லாஹ் உன்னிடத்திலே ஒரு ஏழை வந்தானல்லவா! அவனுக்கு நீ உணவளித்திருந்தால் எனக்கு அளித்த்தாய் நான் கருதியிருப்பேன். குளிரில் வந்தவனுக்கு ஆடை வழங்கியிருந்தால் நான் எனக்கு ஆடை தந்ததாக பாவித்திருப்பேன் என்று சொல்லி அந்த அடியானை நரகிலே வீசுவான்" என்கிறது அல்லாஹ்வின் தூதரின் எச்சரிக்கை.
குதிரையிலே வந்து யாசித்தாலும்கூட அவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்கிறது அல்லாஹ்வின் தூதரின் போதனை.
தனக்கு கஷ்டம் வரும் என்று தெரிந்தும் செய்யக்கூடிய தர்மமே சிறந்த தர்மம் என்று போதித்த்தோடு அல்லாமல் அல்லாஹ்வுடைய தூதரும் அவருடைய அருமை மகளார் ஃபாத்திமா ரலியல்லாஹு அன்ஹா மற்றும் அல்லாஹ்வின் தூதரை அப்படியே பின்பற்றிய அருமை சஹாப்பாக்கள் ஆகியோர்களுடைய வழிகாட்டுதல்களும் நம்மை தான தர்மங்கள் செய்ய அதிகம் தூண்டுவதோடு, இல்லாத நேரங்களில் சந்தர்ப்ப சூழ்நிலையால் யாசிப்பவருக்கு கொடுக்க முடியாமல் போனாலும்கூட அவர்களிடத்தில் இல்லை என்று சொல்லாமல் “ மாப்” செய்யுங்கள் அதாவது “ மன்னித்து விடுங்கள்” என்ற சொல்லாடலை நம் பகுதியில் பயன்படுத்தியும் வருகிறோம்.
இவ்வாறாக ரமளான் மற்றும் ஏனைய மாதங்களிலும் மக்கள் தான தர்மம் செய்து வருவதைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு ஒரு சதிகாரக் கூட்டம் உழைக்காமல், கையேந்திப் பிழைப்பதன் மூலம் பிச்சை எடுப்பதையே தங்களின் தொழிலாக ஆக்கிக்கொன்டு பிச்சைக்காரர்கள்!(?) என்று ஒரு பெரும் சமூகமாக உருவாகியிருக்கிறது. குளிக்காமல், ஆடைகளை சுத்தம் செய்யாமல், மக்களின் அனுதாபங்களை பெற வேண்டும் என்பதற்காக தங்களின் ஊனங்களை வெளிப்படுத்தியவர்களாக மக்களுக்கு மத்தியிலே இவர்கள் வளம் வருவதைப் பார்க்கிறோம்.
ஒராண்டுக்கு முன்னால் வலைத்தளத்தில் "இந்தியாவினுடைய பெரும் நகரங்களில் ஒரு பிச்சைக்காரன் ஒரு மென்பொருள் பொறியாளரை (software engineer)யை விட அதிகமாக சம்பளம் பெருகிறான்! அவனுடைய தோற்றம் எந்த அளவுக்கு அகோரமாக, அனுதாபத்திற்குறியதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அவனுக்கு சம்பளம் கொடுத்து பிச்சை எடுப்பதற்காக அவன் பனியமர்த்தப் படுகிறான்! இதை சில மோசடிக் கும்பல்கள் தொழிலாகவே செய்கிறது என்ற செய்தி வெளியிடப்பட்டிருந்தது. வழிப்பாட்டு தலன்களிலே, கடை வீதிகளிளே யாசிப்பவருக்கு நாம் மனிதாபிமான அடிப்படையில் காசு போடுவது மேற் குறிப்பிட்ட பிச்சைத் தொழில் நடத்தும் மோசடிக் கும்பல் உருவாகுவதற்கு ஒரு காரணம் என்றால் அது மிகையாகாது என்றே கருதுகிறேன். அப்படி என்றால் தான தர்மங்கள் செய்வது தவறா என்ற கேள்வியும் இங்கே தொற்றி நிற்கிறது.
ஒரு விசயத்தை நாம் இங்கே தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் – நிச்சயமாக இஸ்லாம் என்பது ஓர் இறை மார்க்கம்- வானங்களையும், பூமியையும், அவற்றிற்கு இடையிலுள்ள எல்லாவற்றையும் படைத்து பாதுகாத்து உணவளிக்கூடியவனான அல்லாஹ் அங்கீகரித்த மார்க்கம் எனபதாலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒரே இறைவனான அல்லாஹ்வின் தூதரும் அடியாருமாக இருக்கிறார்கள் என்பதனாலும் - இஸ்லாத்தின் எந்த வழிகாட்டுதலும் எந்த போதனைகளும், அவைகளின் அடிப்படையில் செய்யப்படுகிற ஆர்வ மூட்டுதலும் மனித சமுதாயத்திற்கு நன்மையான விளைவுகளை மட்டுமே கொண்டுவரும் என்பதனையும். ஒரு போதும் அது தீமைக்கும், அநீதிக்கும், சமூக அச்சுருத்தலுக்கும் வழி வகுக்காது என்பதையும் அல்லாஹ்வின் மீதும், நியாயத் தீர்ப்பு நாளின் மீதும் நம்பிக்கை கொண்ட எவரும் மறுக்க முடியாது.
அப்படியிருக்க தான தர்மம் செய்வதை இஸ்லாமிய மார்க்கம் அதிகமாக தூண்டி இருக்கிறது “அண்டை வீட்டார் பசித்திருக்க வயிறாற உண்பவன் முஸ்லீம் இல்லை” என்று கடுமையாக சொல்லாடல்! “ ஒரு பேரீச்சம் பழத்தின் கீற்றை தானம் செய்தாவது உங்களை நர நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்ற உபதேசம்! எல்லாம் இருக்க நாம் செய்கின்ற தான தர்மங்கள் மட்டும் எப்படி சமூக விரோதிகளை, சோம்பேரிகளை உருவாக்க காரணமாயிற்று என்று கேட்டாள் எதோ! நம்முடைய செயல்பாட்டு முறையில் தான் எங்கேயோ பிழை இருக்கிறது என்பதை மாத்திரம் நாம் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.
தினந்தோறும் வழிபாட்டுத் தளங்களில், வீதிகளில் வாசல் தேடி வருபவர்களிடத்தில் நாம் அன்றாடம் கொடுகும் தர்மம் ஆட்கடத்தல் போன்ற சமூக வீரோத செயல்களுக்கு வழி வகுத்திருக்கிறது. பச்சிளம் குழந்தைகள் வாடகைக்கு எடுக்கப்படுவதும், களவாடப்படுவதும், வீதிகளிலே விளையாடிக்கொண்டிருக் கூடிய குழந்தைகள் கடத்தப்படுவதும், பின் அவர்கள் கை, கால்கள் முடமாக்கப்பட்டு, கண் குருடாக்கப்பட்டு பிச்சைத் தொழில் செய்யும் கடத்தல் கும்பளால் மக்கள் புழக்கம் அதிகமாக இருக்கும் வழிபாட்டுத் தலங்கள் கடைவீதிகள் போன்ற இடங்களில் அமர்த்தப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் காசுகளை கொண்டு வயிறு வளர்த்துக் கொண்டிருப்பதும் இன்று நாட்டில் நடந்து வரும் நிகழ்வுகளாவிட்டது.
தன்னுடைய பெண் பிள்ளைகளுக்கு பர்தா அணிவித்து என் மகளுக்கு 30 வயதாகிவிட்டது இன்னும் திருமணமாகவில்லை! குமர் காரியத்துக்காக உதவி செய்யுங்கள் என்று வீடு வீடாக வருவதும், பள்ளி வாசல்களிலே அப்பெண் பிள்ளைகளை நிறுத்தி வைத்து வசூல் வேட்டையாடுவதன் மூலம் நம்முடைய இரக்க குணம்! தர்ம சிந்தனையை! மோசடிக் கும்பலால் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்பதையும் நாம் உணரவேண்டும்.
பிச்சை கேட்டு வருபவர்களில் வயது வித்தியாசமில்லாமல் எல்லா வயதினரும் இருக்கின்றனர். இதில் பருவ வயது பெண்களும் அடக்கம். இது போன்ற பருவ வயதுப் பெண்கள் ரமளான் மாத்தில் அதிகமாக வருவார்கள் அவர்கள் காசுக்காக விபச்சாரத்தில் ஈடுபடும் சம்பவங்களும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
இது போன்ற ஏராளமான குற்றங்கள் சமூக விரோத செயல்களும் பிச்சைக்காரர்களால் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு ரமளான் மாதம் என்று நினைக்கிறேன் அதிரையில் ஒரு பிச்சைக்காரர் பெண், ஒரு பெண்ணுடைய காதனியை அப்படியே பரித்துக்கொண்டு ஓடியதில் அப்பெண்ணின் காது அறுக்கப்பட்ட சம்பவத்தை அதிரைவாசிகள் மறந்திருக்கமாட்டீர்கள். இந்த பிச்சைக்கார வேசம் திருடர்கள் வீடுகளை வேவு பார்ப்பதற்கும் பயன்படுகிறது என்பதையும் யாரும் மறுக்க முடியாது.
இது போன்ற சமூக அச்சுறுத்தல் நம் பகுதியிலோ, நம் ஊரிலோ நடக்கக்கூடாது என்றால், அந்நியப் பிரவேசம் தடுக்கப்படவேண்டும்! அந்நியப் பிரவேசம் தடுக்கப்பட வேண்டும் என்றால் பிச்சைக்கார்கள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும்!! பிச்சைக்கார்ர்கள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும் என்றால் நாம் பிச்சைப்போடுவதை நிறுத்த வேண்டும்!!! ஆம், பிச்சைக்காரர்களுக்கு காசு போடுவதை நாம் உடனடியாக நிறுத்த வேண்டும்.
இந்த இடத்தில் நாம் சற்று நிதானமாக சிந்திக்க வேண்டும்! நான் இங்கு தர்மம் செய்வதை நிறுத்தவேண்டும் என்று சொல்லவில்லை மாறாக பிச்சை எடுப்பதை தொழிலாக ஆக்கிக்கொண்டு பல்வேறு காரணங்களைக் கூறி வியிறு வளர்க்கும் சோம்பேறிகளுக்கும், மோசடிப் பேர்வழிகளுக்கும் பணம் கொடுத்து பிச்சைத் தொழிலை ஊக்குவிப்பதை நிறுத்த வேண்டும்! என்றே சொல்லுகிறேன்.
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொன்ன வறியவர்கள் இவர்களாக இருக்க வாய்ப்பில்லை. யாசிப்பதை வழமையாக்கிக் கொண்டு தினம்தோரும் கையேந்தும் ஒரு சமூகம் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் வாழ்ந்ததாகத் தெரியவில்லை. அன்றைய காலத்தில் உதவி வேண்டி வந்தவர்கள் அந்த நேரத்தினுடைய தேவையைக் கேட்டு வந்தார்களே தவிர தொடர் படையெடுப்புகளை அவர்கள் நடத்தவில்லை.
ஒரு வீட்டில் உணவு அருந்தி, அடுத்த வீடுகளில் கிடைக்கும் உணவை பொட்டலம் கட்டிக்கொண்டு போகின்ற வழியில் அதை விற்றுவிட்டு, கிடைத்த வசூலை அனாச்சாரமான வழிகளிலே செலவுசெய்துவிட்டு பின் அடுத்த நாளும் தொடரும் அதே பயனம்!? இப்படிப்பட்டவர்களுக்கு உணவு அளிக்கவில்லை என்றால் அல்லாஹ் நான் உன்னிடத்தில் உணவு கேட்டு வந்தேன், நீ எனக்கு உணவளிக்க மறுத்துவிட்டாய் என்றெல்லாம் கேட்க மாட்டான்.
சிகப்பு ஒட்டகத்தில் வந்தாலும் அவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்று அல்லாஹ்வுடை தூதர் சொன்னது மனிதாபிமானம் பேனப்பட வேண்டும் என்பதற்காகத்தான் என்றே நினைக்கின்றேன். தற்காலிக சூழ்நிலையில் அவர் உதவி தேவைப்படுபவராக இருப்பார் அவருடைய தோற்றத்தை பார்த்து நாம் மறுத்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இருக்கவேன்டும். ஆனால் அவர் தினந்தோரும் நம்மிடம் வருவார் நாம் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதல்ல.
அல்லாஹ்வின் தூதரிடத்திலே வந்த விருந்தாயை நபித் தோழர் ஒருவர் நான் அழைத்து செல்கிறேன் என்று கூறி தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று “ஒரு விருந்தாளியை அழைத்து வந்திருக்கிறேன் ஏதேனும் உணவு இருக்கிறதா? என்று தன் துனைவியிடம் கேட்க, “உங்களுக்கும் எனக்கும் உணவில்லை ஆனால் குழந்தைகளுக்கு மட்டும் கொஞ்சம் உணவிருக்கிறது” என்று பதில் வந்தது. பின் அத்தோழர் “அல்லாஹ்வின் தூதருடை விருந்தாளி அவரை நாம் கன்னியப்படுத்த வேண்ண்டும்! என்று சொல்ல இருவரும் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினார்கள். திட்டப்படி முதலில் உணவு கொடுக்காமல் குழந்தைகளை தூங்க வைக்க வேண்டும், இரண்டாவது இருக்கும் உணவு ஒருவருக்கு மாத்திரமே போதுமானதாக இருந்ததால் உணவு அருந்துவதற்கு இருவரும் அமரும் சமையத்தில் தவறுதலாக விளக்கை அனைப்பதுபோல் அனைத்துவிட்டு இருக்கிற உணவை வியிறாற விருந்தாளியையே உண்ண செய்வது, அதே வேலையில் இருவரும் உணவு அருந்துவது போல் பாவனை செய்து விருந்தாளிக்கு மன நிறைவோடு விருந்தளிப்பது" என்று ஒரு திட்டம் தீட்டப்பட்டு அங்கு அது செயல்படுத்தப்பட்டது. அவ்விருந்தாளியும் வியிறாற உணவருந்திவிட்டு மனநிறைவோடு விடை பெற்றார்.
அல்லாஹ்வுடைய தூதருக்கு அச்செய்தி இறைத் தூது மூலம் அறிவிக்கப்பட்டது. மறு நாள் ஃபஜர் தொழுக்காக வந்த தோழரைப் பார்த்து அல்லாஹ்வின் தூதர் கேட்டார்கள் “ என்ன செய்தீர்கள் தோழரே! உங்களுடைய செயலைப் பார்த்து அல்லாஹ் சிரித்துவிட்டான்” என்று அத்தம்பதிகளுடைய தியாத்தை சிலாகித்துச் சொன்னார்கள்.
இது போன்ற சுவாரஸ்யமான பல நிகழ்வுகள் இருகின்றன. சதக்கா சம்மந்தமான பல விஷயங்களையும் பார்க்கும்போது சதக்கா தற்காலிக தேவைக்கான தீர்வு! தேவையுடையோருக்கான ஒரு தற்காலிக உதவி என்றும் ஜகாத் வருமை ஒழிப்புத் திட்டம் என்றும் உணரமுடிகிறது.
ஒருவர் ஒரு தற்காலிக தேவைக்காக நம்மிடத்திலே உதவி கோறுவார் என்றால் இயன்றவர்கள் அவருடைய தேவையை முழுமையாக பூர்த்தி செய்வதைப் போன்றுதான் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் நடந்த சம்பவங்கள் அமைந்திருந்திக்கின்றன.
ஒரு முறை அல்லாஹ்வின் தூதருடைய சபைக்கு ஒருவர் உதவி தேடியவராக வந்தார் அவருக்கு தேவையானதை தனி ஒருவரால் கொடுக்க முடியவில்லை, பின் ஒரு தோழர் எழுந்து ஒரு துண்டை எடுத்து முதலில் தன் பங்கை அதில் போட்டு பின் ஏனைய தோழர்களிடத்திலும் இருந்ததை சேகரித்து அவருக்கு கொடுக்கப்பட்டது.
இது போன்ற வரலாற்றுச் சம்பவங்களைப் பார்க்கும் போது எவரும் தொடர்ந்து உதவி தேடியதாகத் தெரியவில்லை.
சமீபத்தில் ஈரானில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கே பதிவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். GULFNEWS என்ற செய்தி இணையத்தளத்தில் சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு பிரசுரிக்கப்பட்ட செய்தி. ஈரானில் பட்டனத்திலிருந்து நகரம் நோக்கி தினமும் காரில் சென்று பின் உடைகளை மாற்றிக்கொண்டு பிச்சை எடுத்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்ததில் அவர் ஒரு தொழில் அதிபராக இருப்பது தெரியவந்தது. இது போன்று தனக்கு தேவையானது தன்னிடம் இருந்தும் பிச்சை எடுப்பது நவீன பிச்சைக்காரர்களின் வழக்கமாகிவிட்டது.
யார் தனக்கு சக்தி இருந்தும் யாசிக்கிறாரோ அவர் மறுமையில் முகத்தில் சதை இல்லாமல் எழுப்பப்படுவார் என்று அல்லாஹ்வின் தூதரர் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். இதைப் பற்றியெல்லாம் இப்பிச்சைக்காரர்கள் அஞ்சுவதாக இல்லை. எனவே தான் இவர்களுக்கு கொடுப்பதை உடனே நிருத்த வேண்டும் என்று சொல்கிறேன்.
அப்படி என்றால் எப்படித்தான் தான தர்மம் செய்வது? எப்படி அதனுடைய பலன்களை இம்மையிலும் மறுமையிலும் அடைந்து கொள்வது போன்ற ஏராளமான கேள்விகள் நம் சிந்தனையில் விடை வேண்டி நிற்கிறதா?
அல்லாஹ் தன் அருள் மறையாம் குர்ஆனில் “ (விசுவாசங் கொண்டோரே!) தங்கள் பொருட்களை (தர்மத்திற்காக) இரவிலும், பகலிலும், இரகசியமாகவும், வெளிப்படையாகவும் செலவு செய்கிறார்களோ அத்தகையோர் – அவர்களுக்கு அவர்களுடையை கூலி அவர்களுடை இரட்சகனிட்த்தில் உண்டு. அவர்களுக்கு (மறுமையில்) யாதொரு பயமுமில்லை. ( இம்மையில் விட்டுச் சென்றதைப் பற்றி) அவர்கள் கவலையும் அடைய மாட்டார்கள் ( 2:274)
அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) கூறினார்கள் “ ஒவ்வொரு நாளும் வானத்திலிருந்து இரண்டு வானவர்கள் பூமிக்கு இறங்குவார்கள், அதில் ஒருவர் எவரேனும் அன்றைய தினம் அல்லாஹ்வின் பதையில் எதையேனும் செலவளித்தால், யா அல்லாஹ் இந்த அடியான் நீ வழங்கியவற்றிலிருந்து உன்னுடைய வழியில் செலவளிக்கிறான், எனவே அவனுக்கு பரகத் செய்வாயாக , அவன் உன்னுடைய வழியில் தாராளமாக செலவு செய்ததன் காரணத்தால் அவனிடத்தில் நீயும் தாராளமாக நடந்துக்கொள்வாயாக! என்று அல்லாஹ்விடம் பிராத்திப்பார். மற்றொருவர் எவரேனும் அன்றைய தினம் அல்லாஹ்வின் பதையில் எதையேனும் செலவளிக்கவில்லை என்றால், யா அல்லாஹ் இந்த அடியான் கஞ்சனாக இருக்கிறான் எனவே இவனுடைய காரியத்தில் நீயும் கஞ்சத்தனம் காட்டுவாயாக! என்று அல்லாஹ்விடம் பிராத்திப்பார்.
மேற் கூறப்பட்ட குர்ஆன் ஹதீஸ் ஒளியில் நாம் பார்க்கும் போது தினந்தோரும் காலையிலும், மாலையிலும் அல்லாஹ்வின் திருப்பொருதத்தை நாடி அவனுடைய வழியில் செலவு செய்பவர்களாக நாம் உருவாக வேண்டும். அதுவும் பயனுள்ள வழியிலே அமைய வேண்டும். பிச்சை எடுப்பதை தங்களின் தொழிலாக அமைத்துக் கொண்டும், பல்வேறு மேசடி செயல்களில் ஈடுபட்டுக்கொண்டும் திரிகின்றவர்களுக்கு கொடுக்காமல், வேறு ஆரோக்கியமான வழியில் அல்லாஹ்வின் பொருதத்தை மட்டும் நாடி செலவிடத் திட்டமிடலாம்.
என் சிந்தையில் எட்டிய சில கருத்துக்களை நான் இங்கே பதிகிறேன், அல்லாஹ் நாடினால் நீங்களும் உங்களுடைய மேலான ஆலோசனைகளைப் பரிமாறிக் கொள்வதோடு அதை தங்களால் இயன்றவரை செயலாற்றி ஒரு சமூக சீர்த்திருத்தம் ஏற்பட பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஆலோசனைகள்:
- விருந்தோம்பல் என்கிற அற்புதமான பண்பு நம்மிடம் மிகவும் பலவீனமாக உள்ளது. இதை மேம்படுத்தும் முகமாக வழிப்போக்கர்களாக நம் பகுதிகளில் வருபவர்களுக்கு உணவளித்து உபசரிக்கவேண்டும் (சாப்பாட்டு டோக்கன் கொடுப்பதல்ல). பள்ளிவாசல்களில் புதிய முகங்களை காணும் போது நமக்கே தெரியும் அவர் வெளியூர்காரர் என்று. ஏதாவது வேலை நிமித்தமாக வந்திருக்கலாம், உணவகத்தில் காசு கொடுத்து உணவருந்த சக்தியுடைவராகவும் இருக்கலாம், அவரை வீட்டிற்கு அழைத்து உணவு கொடுத்து உபசரிப்பது, அவரின் தேவை அறிந்து உதவி செய்வது போன்ற காரியங்களால் சமூக உறவு வலுப்படும்..
- வீடுகளில் உண்டியலை ஏற்படுத்தி நம் சக்திக்கு உட்பட்டு நம்மால் இயன்ற ஒரு தொகையை அதில் போட்டு வரவேண்டும்! அது கால் ருபாயாக இருந்தாலும் சரியே. எப்போது அல்லாஹ்வின் பொருத்தத்தை மட்டும் நாடி செலவு செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம் அந்த உண்டியலில் காசு, பணத்தை போட்டுக் கொண்டே இருங்கள். நள்ளிரவு நேரமானாலும், ஏதேனும் நோய் வாய்ப்பாட்டலும், தீங்கு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டாலும், பிரயாணம் மேற்க்கொண்டாலும், நம்முடைய ஸதக்காவை அந்த உண்டியலில் போட்டு வந்தோம் என்று சொன்னால் அதில் ஒரு தொகை சேர்ந்துவிடும். அதை ஏழைகளுக்கு முறையாக உதவி செய்யும் பொதுத் தொண்டு அமைப்புகளுக்கு (பைத்துல்மால் போன்றவைகளுக்கு) கொடுக்கலாம், இல்லாவிட்டால் வெளியில் கஷ்டத்தை சொல்லாதா கண்ணியமான குடும்பங்களை நாமாக கண்டறிந்து அவர்களுக்கு உதவி செய்து, நம் மன பொருத்ததுடன். அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற முயற்சி செய்யலாம்.
- ஒரு சிறு கணக்கிற்காக, அதாவது அதிராம்பட்டினத்தில் ஒரு நாளைக்கு சுமார் 50 பிச்சைக்கார்ர்கள் வந்து தலா 100 ருபாய் சேகரிக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால் ஓர் ஆன்டிற்கு சுமார் 18 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டு, அது அனாச்சாரமான, பயனற்ற வழியிலே பாழ்படுத்தப்படுகிறது என்றால் அது மிகையாகாது. நாம் நம் வீடுகளிலும் கடைகளிலும், ஸதக்க நியத்தில் உண்டியல் வைத்து சேர்த்த பணத்தை எதீம்கானா நிறுவனத்துடைய முழுச் செலவையும் கூட்டாக செய்து நன்மை அதிகம் பெறலாம். எதீம்கானவில் பொது நோக்கத்திற்காக முழு வேலை செய்து வரும் சகோதரர்களின் கஷ்டங்களை நீக்கி அல்லாஹ்வின் பொருத்தத்தை அடைந்துக்கொள்ளலாம்.
- ஊரில் இருக்கு ஆதரவற்ற, யாசகம் கேட்க வெட்கப்படும் குடும்பங்களை கண்டறிந்து நாமாகவே மாத ஊதியமாக அவர்களின் குடும்பம் முன்னேற்றமடையும்வரை செய்யலாம்.
- அடுத்து ஏதேனும் ஒரு நோக்கம் நிறைவேற அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்வதை இஸ்லாம் அனுமதிக்கறது. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) சொன்னர்கள் நேர்ச்சை செய்வதை விரும்பவில்லை, மாறாக நேர்ச்சை கெஞ்சனின் பணத்தை செலவளிக்கும் வழி என்று சொன்னார்கள். மேலும் நேர்ச்சை செய்து நிறைவேற்றாமல் இருப்பது குற்றமாகவும். நோக்கம் நிறைவேறியதற்கு பகரமாக கொடுக்கப்படுவதால் அதன் மூலம் நிறைவேற்றியவர்க்கு எந்த நன்மையும் கிடைக்காமலும் போய்விடுகிறது. ஆனால் நாம் இங்கே சுட்டிக்காட்டியிருக்கின்ற முறையில் தர்மம் முன்கூட்டியே செய்யபடுவதால் தர்மத்திற்கான முழு பலனையும் நாம் அடைந்துக் கொள்வதோடு தர்மம் கேட்ட விதியை மாற்றும் என்றை அடிப்படையில் அல்லாஹ் நாடினால் நமக்கு தீங்கிலிருந்து பாதுகாப்பும், நல்ல காரியங்களிலிருந்து வெற்றியும் கிடைத்துவிடும். இன்ஷா அல்லாஹ்.
இப்படி நிறைய யோசனைகள் சொல்லிக்கொண்டே போகலாம். இதை படிப்பவர்கள் இதைப் போன்று நல்ல யோசனைகள் இருந்தால் இங்கு பின்னூட்டமிடலாம்.
தீர்க்கமான அறிவும் ஞானமும் நம்மை படைத்த அல்லாஹ்வுக்கே சொந்தம்.
யா அல்லாஹ் சத்தியத்தை சத்தியமாக விளங்கி, அசத்தியத்தை அசத்தியமாக விளங்கி, குர்ஆன் சுன்னா ஒளியில் எங்களுடைய வாழ்க்கை அமைத்துக்கொண்டு ஈருலக் பலன்களையும், வெற்றியை பெற்றுக்கொள்வதற்கு எங்கள் அனைவருக்கும் அருள்புரிவாயாக.
உன்னுடைய அருளையும் அன்பையும் கருனையும் மன்னிப்பையும் எங்கள் மீது பரிபூரனமாக இறக்கி வைப்பாயாக.
எங்கள் இறைவா நீயே மன்னிப்பவன், மன்னிப்பை விரும்புகிறவன், எங்கள் பிழைகளைப் பொருத்து எங்களை மன்னித்து அருள்வாயாக.
எங்கள் மனோ இச்சையின் காரணமாக எங்களுக்கு நாங்களே அதிகமாக அநீதி இழைத்துக்கொண்டோம், எங்களுடைய தவறுகளைக்காக எங்களை சபித்துவிடாதே யா அல்லாஹ்! உன்னுடைய கோபத்தை எங்கள் மீது இறக்கிவிடாதே யா அல்லாஹ்! எங்களை தண்டித்துவிடாதே எங்களுடைய இறைவனே!
குறிப்பு:
அன்பு சகோதர, சகோதரிகளே இங்கு சொல்லப்பட்ட விசயங்கள் உங்களால் ஒத்துக்கொள்ளப்பட்டால் தயவு செய்து அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடியவர்களாக அதை செயல்படுத்த நீங்கள் முன் வர வேண்டும். மேலும் பல்வேறு தளங்களில் இதை பதிந்தும் பிறருக்கு இதை எடுத்துச் சொல்லியும் ஒரு முழுமையான சமூக சீர்த்திருத்தம் ஏற்பட உங்களால் இயன்ற முயற்சி செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ம அஸ்ஸலாம்.
-- அபு ஈசா
email - ibnusmo@gmail.com
8 Responses So Far:
WOW.
Very good article
Recently when I spoke to my family they mentioned the same issue with street beggars torture. I heard living in Pudumani street, poor persons wants only Rs 100s and not Rs10 or 20. Moreover they bang the door in such a way sometimes you feel like its going to break the door.
I like all the suggestion mentioned above, here in our masjid (in Dallas, Texas USA), Masjid Shura doesn't allow anyone to beg or collect money outside or inside the masjid, instead they ask the worshippers to donate the sadaqa and Zakath to Masjid and the poor persons should register in the masjid and after investigation they donate the money to the required people.
நீங்கள் எடுத்துக்கொண்ட விசயம் மிகவும் பயனுள்ளது.
உங்கள் ஆலோசனைகளில்
//"அவரை வீட்டிற்கு அழைத்து உணவு கொடுத்து உபசரிப்பது, அவரின் தேவை அறிந்து உதவி செய்வது போன்ற காரியங்களால் சமூக உறவு வலுப்படும்."//
இது நடைமுறையில் பல பிரச்சினைகளை கொண்டுவரும்.
இது போன்று எனக்கு தெரிந்த ஒருவர் பள்ளிவாசலுக்கு வந்து போனால் "நல்லவன்" என்று நினைத்து பல பேர்களை வீட்டுக்கு அழைத்துவந்து சாப்பாடு கொடுத்து கவனித்து அனுப்புவார். இதை வீட்டில் உள்ளவர்கள் எதிர்த்து பிறகு ஒயாமல் சண்டைதான். முதுமையில் அந்த நல்ல மனிதர் தனது குடும்பத்தினரால் இந்த மாதிரி விசயங்களுக்காகவே மிகவும் விமர்சிக்கபட்டார். பிறகு உதாசீணப்படுத்தப்பட்டார்.
கட்டுரையின் நீளம் தவிர்த்து இருக்களாம். மற்றபடி சமூக அவலத்தை துடைக்க வந்த கட்டுரை.
Keep up your Good Work
சிந்திப்போம் (கட்டுரையின் நீளம் சுருக்கப் பட்டிருக்கலாம்) ஆனால் கண்டிப்பாக இன்றைய காலகட்டத்தின் கட்டாயம், நல்ல ஆக்கம் சமுதாய நலன் கருதும் நற்சிந்தனை !
மிக அற்புதமான கட்டுரை, நண்பர் அபு ஈஸா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பிச்சைக்காரர்கள் என்று வேசம் போட்டு இருப்பவர்களை உள்ளடக்கிய ஒரு அவல சமுதாயம் உருவாகுவதற்கு ஒரு வகையில் மறைமுகமாக நாமும் காரணமாகிவிட்டோம், இனி இந்த போக்கை மாற்ற வேண்டும் என்று நல்ல எச்சரிக்கை செய்கிறது இக்கட்டுரை.
//ZAKIR HUSSAIN says
Sunday, September 05, 2010 4:03:00 AM கட்டுரையின் நீளம் தவிர்த்து இருக்களாம்//
உண்மை தான் சகோதரர் ஜாஹிர்.
இது முக்கியமான விசயம் என்பதால் கட்டுரையாளர் விரிவாக எழுதும்படியாகிவிட்டது என்று நம்மிடம் கூறினார்.
இந்த பெரிய கட்டுரையை நிதானமாக படித்து, பின்னூட்டமிட்டு வரும் சகோதரர்கள் அனைவருக்கும் சகோதரர் அபு ஈஸா அவர்களின் சார்பாக நன்றியை தெரிவிக்கிறோம்.
உங்களின் அனைவரின் பின்னூட்டங்கள், நம் சகோதரர் அபு ஈஸா அவர்களை இன்னும் இது போல் நல்ல கருத்துள்ள கட்டுரைகளை (சுருக்கமாக) எழுத தூண்டும். இன்ஷா அல்லாஹ்.
சகோதரர் அபு ஈசா அவர்களின் பதில்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ஒரு கருத்தை சுருக்கமாக கூறுவதும் ஒரு கலை தான். நான் அதிகம் கற்றவனல்ல. மேலும், எந்த ஓர் ஆய்வும் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அமைய வேண்டும், உலக நடைமுறைகளும் கருத்தில்கொள்ளப்பட வேண்டும் என்பதனாலும் கட்டுரையின் நீளம் அவசியமாகிவிடது.
மேலும் கட்டுரையின் கருத்தில் உடன்பட்டால் இன்ஷா அல்லாஹ் நாங்களும் இதை நடைமுறைப்படுத்துகிறோம் என்ற ஒப்புதலையும், குறையிருப்பின் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலான வழிகாட்டுதலையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
இது மாத்திரமே என்னிடம் இருக்கின்ற அறிவு - முழுமையான அறிவும், தீர்க்கமான ஞானமும் படைத்த இறைவனுக்கே சொந்தம் - என்று என் முழுமையான பலகீனத்தையும் ஒப்புக்கொன்டவனாக...
ம அஸ்ஸலாம்
அபு ஈசா
அஸ்ஸலாமு அலைகும், மிகச்சிறப்பான ஓர் உபதேசம்! என்னிடத்தில் யாசிப்போருக்கு இருக்கும் சில்லரைகளை முழுதாகவே கொடுத்திடும் வழக்கம் இருந்து வந்தது. பெருநாள் தொழுகைக்காக ஈத்கா நோக்கி செல்கின்ற வழியில் நிற்பவர்(பலஸ்தீனியர்)களுக்காகவே ஆலோசனையில் குறிப்பிட்டது போலவே சில்லரைகளை சேமித்து வைத்து கண்ணீர் வடியும் கண்களோடு வழங்கியதுண்டு. பின்பு|தற்போது இத்தகைய உதவிகளெல்லாம் தெருக்களில் யாசிப்போரை அதிகரிக்கவே செய்கிறது மட்டுமல்லாமல் நாம் செலவிடுவது மிகவும் சொற்பம் என்பதையுணர்ந்து என்னுடைய ஸதகா|ஜகாத் களை அறிந்தவர்களுக்கும் நேரடியாகவும், அறியாதவர்களுக்கு ஒரு சில அமைப்புகளின் மூலமாகவே நான் செலுத்திவருகிறேன்.
இது மட்டுமின்றி, ஏழ்மை உட்பட மொத்தம் 8 விஷயங்களுக்காக நம்முடைய தானதர்மங்களை ஆக்கிக்கொள்ளும்படி அல்லாஹ் பணிக்கிறான். அந்த 8 விஷயங்களுக்கும் முறையாக சென்றடைய தாமங்கள் வசூல் செய்யப்பட்டு பின்பு முறையாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இதை உணர்ந்து நாம் நம்முடைய சொந்த செலவீனங்களை சுருக்கி அல்லாஹ்வுக்காக அதிகமாக வழங்கும் மனநிலையை|ஆர்வத்தை உருவாக்கிக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும். அந்த 8 விஷயங்களை சூரா தவ்பா, 60 வசனத்தை பார்வையிடவும்.
Post a Comment