அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி
வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!
பிறரை நோவினை செய்தல் கூடாது!
அல்லாஹ் கூறுகிறான்:
நம்பிக்கை கொண்ட ஆண்களையும்,
பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும்,தெளிவான
பாவத்தையும் சுமந்து விட்டனர். (அல்குர்ஆன்
: 33:58)
''ஒருவரின் நாவால் அவரது
கையால் பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற்றால், அவரே முஸ்லிமாவார். அல்லாஹ்
தடுத்துள்ளவற்றை வெறுத்து ஒதுக்கியவரே ஹிஜ்ரத் செய்தவர் ஆவார்'' என்று நபி(ஸல்)
கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு
அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள்
(புகாரி,
முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1565
)
''தான் நரகத்திலிருந்து காப்பற்றப்படவும்,
சொர்க்கத்தில் சேர்க்கப்படவும் ஒருவர் விரும்பினால், அவர் அல்லாஹ்வையும், இறுதி
நாளையும் நம்பிய நிலையில் மரணம் அவரிடம் வரட்டும். மேலும் தன்னிடம் மக்கள்
அன்புடன் நடந்து கொள்வதை விரும்புவர், மக்களிடமும் அவ்வாறே நடந்து கொள்ளட்டும்''
என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு
அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள்
(முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1566)
ஒருவருக்கொருவர் பகமை
கொள்வது, உறவை முறிப்பது,
புறக்கணிப்பது கூடாது!
அல்லாஹ் கூறுகிறான்:
நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்)
சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்!
அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள். (அல்லகுர்ஆன் : 49:10)
''நீங்கள் ஒருவருக்கொருவர்
பகமை கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். புறக்கணிப்பு செய்து கொள்ளாதீர்கள்.
உறவுகளைத் துண்டித்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் அல்லாஹ்வின் அடிமைகளாக –
சகோதரர்களாக ஆகி விடுங்கள். ஒரு முஸ்லிம், தன் சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல்
வெறுத்திருப்பது கூடாது'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம் (ரியாளுஸ்ஸாலிஹீன்:1567 ).
''திங்கள் கிழமையும், வியாழக் கிழமையும்
சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படும். அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காத
அனைவருக்கும் மன்னிப்பு வழங்கப்படும். ஆனால் ஒருவருக்கும், அவரின் சகோதரருக்கும்
பகைமை இருக்கும் மனிதனைத் தவிர, ''இவ்விருவரும் (இணக்கமாக) ஆகும் வரை
பொறுத்திருங்கள். இந்த இருவரும் ஒற்றுமை ஆகும் வரை பொறுத்திருங்கள் என்று கூறப்படும்''
என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்
(முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1568 )
பொறாமை கொள்வது கூடாது!
அல்லாஹ் கூறுகிறான்:
அல்லாஹ் தனது அருளை இம்மக்களுக்கு
வழங்கியதற்காக அவர்கள் பொறாமை கொள்கிறார்களா? (அல்குர்ஆன் : 4:54)
''பொறாமை கொள்வது பற்றி
உங்களை எச்சரிக்கிறேன். நெருப்பை விறகு சாப்பிடுவது போல் (அல்லது காய்ந்த
வைக்கோலைத் தின்பது போல்) நன்மைகளை பொறாமை சாப்பிட்டு விடும்''என்று நபி(ஸல்)
கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1569 )
பிறர் குறையை தேடி அலைவது கூடாது:
அல்லாஹ்
கூறுகிறான்:
நம்பிக்கை
கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள்
பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றி புறம்
பேசாதீர்கள்! (அல்குர்ஆன் : 49:12)
நம்பிக்கை
கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர்
அவதூறையும், தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர்.
(அல்குர்ஆன்
: 33:58)
''நீங்கள்
சந்தேகம் கொள்வது பற்றி உங்களை எச்சரிக்கிறேன். சந்தேகம் எண்ணம் கொள்வது, பேச்சில்
மிகப்பெரும் பொய்யாகும். நீங்கள் ஒட்டுக் கேட்காதீர்கள். பிறர் குறையை
ஆராயாதீர்கள். ஒருவருக்கொருவர் பெருமை கொள்ளாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை
கொள்ளாதீர்கள். புறக்கணித்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு கட்டளையிட்டபடி நீங்கள்
அல்லாஹ்வின் அடிமைகளாக, சகோதரர்களாக ஆகி விடுங்கள். ஒரு முஸ்லிம், மற்றொரு
முஸ்லிமின் சகோதரன் ஆவான். இவனுக்கு அவன் அநீதம் செய்ய மாட்டான். இவனை அவன் ஏமாற்ற
மாட்டான். இவனை அவன் இழிவுபடுத்திடமாட்டான். இறையச்சம் இங்கே உள்ளது. இறையச்சம்
இங்கே உள்ளது என்று நபி(ஸல்) அவர்கள் கூறிக்கொண்டே தமது நெஞ்சை சுட்டிக்
காட்டினார்கள். மேலும் தொடர்ந்து, ''ஒருவன் தன் சகோதர முஸ்லிமை இழிவாக எண்ணுவது
தீமையாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஒரு முஸ்லிமின் ரத்தம், அவனது கண்ணியம், அவனது
சொத்து ஆகியவை (சீர்குலைக்க) தடை செய்யப்பட்டதாகும். நிச்சயமாக அல்லாஹ் உங்கள்
உடலையோ, உங்கள் தோற்றத்தையோ பார்க்கமாட்டான். எனினும் உங்களின் இதயம், உங்களின்
செயல்களின் பக்கமே பார்க்கிறான்'' என்றும் கூறினார்கள்.
மற்றொரு
அறிவிப்பில் (கீழ்கண்டவாறு)உள்ளது :
"நீங்கள்
பொறாமை கொள்ளாதீர்கள். நீங்கள் கோபம் கொள்ளாதீர்கள். நீங்கள் பிறர் குறையைத் தேடி
அலையாதீர்கள். நீங்கள் ஒட்டுக் கேட்காதீர்கள். பிறர் வியாபாரத்தில் தலையிட்டு
விலையை உயர்த்தாதீர்கள். அல்லாஹ்வின் அடிமைகளாக சகோதரர்களாக ஆகிவிடுங்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,
முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:
1570 )
''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு
வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
இன்ஷாஅல்லாஹ்
வளரும்...
அலாவுதீன் S.
1 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் காக்கா...
ஜஸாக்கல்லாஹ் ஹைரன்...!
Post a Comment