Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சகோதரியே! - தொடர் - 11 31

அதிரைநிருபர் பதிப்பகம் | December 18, 2012 | , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    - (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தாங்கள் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!).

அத்தியாயம் 7 முதல் 10 வரை இஸ்லாமியத் திருமணம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பார்த்தோம். மேலும் திருமணம் சம்பந்தமாக இந்த அத்தியாயத்திலும் தொடர்ந்து பார்ப்போம்.

ஒரு சகோதரரிடம் (இவர் ஓர் ஆலிம் -  ஒரு கம்பெனியில் வேலை செய்து வருகிறார்) எளிமையான திருமணத்தைப் பற்றி தங்களின் கருத்து என்ன?” என்று கேட்டேன்.

எளிமை என்பது ஆளாளுக்கு மாறுபடும். 3ஆயிரம் சம்பளம் வாங்குபவர், 10ஆயிரம் சம்பளம் வாங்குபவர் என்ற வேறுபாட்டில் அவரவர் வசதிக்கு தக்கவாறு மாறும். இந்த எளிமை திருமணத்திற்கு மட்டும் அல்ல, எல்லா காரியங்களுக்கும் பொருந்தும் என்றார். 

மேலும் அவருக்கு சொந்தத்தில் திருமணம் நடைபெற்றபொழுது வலீமா விருந்து அவர்தான் கொடுத்துள்ளார். அவர், இத்தனைப் பேருக்குத்தான் வலீமா விருந்து தருவேன் என்று சொல்லியிருக்கிறார். பெண்ணின் தந்தையோ, தனக்கு நிறையப் பேர் இருக்கிறார்கள் என்று சொல்லி, மேற்கொண்டு வரும் நபர்களுக்கு ஆகும் செலவை தான் தந்து விடுவதாகச் சொன்னாராம். (இவரின் கருத்து, சபீரின் கருத்தோடு ஒத்து போகிறது).

பத்திரிகை என்பது திருமண நிகழ்ச்சியைத் தெரிந்து கொள்ளத்தான், இதற்கு அதிகமாக செலவழிப்பது வீண் விரயம்தான்.

ஈமான் என்பது (சபீர் சொன்னது போல்) ஏற்றம் இறக்கமாகத்தான் இருக்கும். எது எளிமை, எது ஆடம்பரம், எது வீண் விரயம் என்பதை நன்றாக ஆய்வு செய்து, நாம் செய்யும் காரியங்கள்  அனைத்திற்கும் 'தன்னந்தனியாக யாருடைய உதவியும் இல்லாமல்' வல்ல அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும். மேலும் ''எப்படி சம்பாதித்தாய் - எப்படி செலவழித்தாய்'' என்று 'வல்ல அல்லாஹ் கேட்கும் கேள்விக்கும்' நாம் பதில் சொல்லியாக வேண்டும். அதனால் வல்ல அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன் என்பதை மனதில் வைத்து செயல்படுவது, நம் அனைவருக்கும் நன்மை அளிக்கும்.

விருந்தை ஏற்றுக்கொள்வது:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''  உங்களில் ஒருவர் வலீமா (மண) விருந்துக்கு அழைக்கப்பட்டால் அதனை ஏற்றுச் செல்லட்டும்!  என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி) அனஸ்(ரலி)  (புகாரி : 5173).

நம்மை விருந்திற்கு அழைக்கிறார்கள். நாம் போவதா? வேண்டாமா? என்று சில நேரங்களில் குழப்பம் வரும். காரணம் நமது வீட்டில்  நடந்த நிகழ்ச்சிக்கு 'அவர்கள்' வரவில்லை, அதனால் நாமும் அவர்கள் அழைப்பை ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை என்று புறக்கணிக்கக் கூடாது.

விருந்துக்கு அழைத்து விட்டார்கள் உடன் போய்விடலாம் என்ற நினைப்பு வரும்பொழுது; மணமகன் தரும் விருந்தா? நபிவழிப்படி திருமணம் நடக்கிறதா? என்று யாரும் ஆய்வு செய்வதில்லை. என் உயிர் நண்பன் வீட்டுத் திருமணம், அண்ணன், தம்பி, அக்கா, தங்கை அல்லது உறவினர்கள் வீட்டுத் திருமணம், போகவில்லை என்றால் கோபித்துக் கொள்வார்களே!, நம்முடைய வீட்டுத் தேவைகளை புறக்கணித்து விடுவார்களே! என்ற பயத்தை, எண்ண ஓட்டங்களை மனதில் ஷைத்தான்  ஓட விடுவான். இந்த நேரத்தில் அல்லாஹ்வுக்கும் அவனுடையத் தூதருக்கும் ''நாம் கட்டுப்பட வேண்டுமா?'' இல்லை ''நம்மை வழிகெடுக்க வாய்ப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கும் ஷைத்தானுக்கு கட்டுப்பட வேண்டுமா?'' என்பதை நாம் அலசி ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

திருமணத்திற்கு உறவினர் வருகை:

ஒரு காலத்தில் திருமணத்திற்குச்  சில தினங்கள் முன்பாகவே வீடு கலகலப்பாக ஆகி விடும், உறவினர்களின் வருகையால். ஆனால் இப்பொழுது மண்டபங்களில் திருமணம் நடப்பதால், மண்டபத்திற்கு வந்துவிட்டு அங்கேயே கை கொடுத்து விட்டு, பிள்ளைகளின் படிப்பைக் காரணம் காட்டி உடன் சென்று விடுகிறார்கள்.

இப்பொழுது நம் சமுதாயத்தில் பண பலம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. ஆனால் 'ஆள் பலம்' என்பது குறைந்து கொண்டே வருகிறது. பெரிய வீடுகள், நிறைய அறைகள், ஆனால் வீட்டின் அறைகளின் எண்ணிக்கை அளவுக்குக் கூட மனிதர்கள் இல்லை. நாம் சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.

பணம் அதிகமாக இல்லாத இடங்களில் ஆள் பலம் அதிகமாக இருக்கிறது. நாம் பணத்தை சம்பாதிக்கும்  அதே நேரத்தில் நம்முடைய உறவினர்களையும், நல்ல நட்புகளையும்நம்மை விட்டுப் பிரியாமல் 'அவர்களின்' உறவைப் பேணி பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மனித பலம்தான் மிக முக்கியம்.

திருமணத்திற்கு அழைக்கும் முறை:

எங்கள் வீட்டுத் திருமணத்திற்கு குடும்பத்தோடு வாருங்கள் என்று சொன்ன 'காலம் ராக்கெட்டில் ஏறி செவ்வாய் கிரகத்திற்கு சென்று விட்டது'. இப்பொழுது பத்திரிக்கையில் சாப்பாடு டோக்கன் பின் குத்தி வருகிறது. பத்திரிக்கையோடு டோக்கன் வந்தால் சாப்பாடு, வெறும் பத்திரிக்கை வந்தால் சாப்பாடு நமக்குக் கிடையாது.

திருமண கூப்பாடு என்று வருகிறார்கள், என்ன சொல்கிறார்கள் பெண்களுக்கு மட்டும் சாப்பாடு என்று அழைக்கிறார்கள். இல்லையென்றால் ஆண்களுக்கு மட்டும் சாப்பாடு என்று அழைக்கிறார்கள். குடும்பத்தோடு சாப்பாடு தருகிறாயா? உன் வீட்டுத் திருமணத்திற்கு வருகிறேன் என்று இனி நாமும் சொல்ல வேண்டியதுதான். குடும்பத்தில் ஒருவர் போய் பிரியாணி சாப்பிட, மற்றவர் வீட்டில் சாப்பிடுவது என்பது சரிதானா? இது நல்ல பண்பாடா?

விருந்து உபசரிப்பு:

ஒரு நபிவழி திருமணத்திற்கு சென்றிருந்தேன். பந்தல் போட்டு, மேடை அமைத்து பேச்சாளர்களை  அறிமுகம் செய்து இரண்டு பேர் பயான் செய்தார்கள். நான் நண்பரோடு சென்றிருந்தேன். பந்தல் நுழை வாயிலில் வரவேற்க ஆளும் இல்லை. உச்சி வெயிலில் மண்டை காய, பந்தலுக்கு நுழைந்தால் ஒரு கிளாஸ் தண்ணீர் கூட தரவில்லை. பேச்சு முடிந்த  உடன் வெளியே வந்து சிறிது தூரம் சென்று கடையைத் தேடி பாக்கெட் தண்ணீர் வாங்கி குடித்து விட்டு, வீட்டில் போய் சாப்பிட்டோம். (சாப்பாட்டிற்காக போகவில்லை, வற்புறுத்தி அழைத்தார்களே என்று சென்று வந்தோம்). நபிவழி திருமணம் என்றால் எளிமையான திருமணம் என்று அர்த்தம்.  வந்தவர்களை வாங்க என்று கூட கூப்பிடாமல், ஒரு கிளாஸ் தண்ணீர் கூட தராமல் திருமணம் செய்வது கஞ்சத்தனம் என்று சொல்லலாம்.

வருகிறவர்களை நல்லபடியாக வரவேற்று, அவர்களுக்கு குளிர்பானம் கொடுக்கலாம். அதிகமான இடங்களில் ரோஸ் மில்க் கொடுக்கிறார்கள். காலம் அறிந்து எதையும் கொடுத்தால் நலமாக இருக்கும். குளிர் காலங்களிலும், மாலை நேரங்களில் நடக்கும் திருமணங்களிலும்  சூடான பானமும், வெயில் காலங்களில் குளிர்ந்த பானங்களும் கொடுக்கலாம். வந்தவர்களுக்கு என்ன வேண்டும் என்று விசாரித்தும் கொடுக்கலாம்.

திருமணம் நடத்துபவர்கள் பயான் நிகழ்ச்சி வைத்தாலும், ஆடம்பரமாக நடத்தினாலும் இதையெல்லாம் வருகின்றவர்கள் பொருட்படுத்தமாட்டார்கள்.

திருமணத்திற்கு வந்தவர்களை நல்லபடியாக வரவேற்று, உபசரித்து, நல்லமுறையில்  உணவும் (குறையில்லாமல்) அளித்து அனுப்பினால், 'மக்கள்' மனத்திருப்தி அடைவார்கள். ''வரவேற்பும், உணவும் சரியில்லை என்றால் ஏன் வந்தோம் என்ற மனக்குறையோடு செல்வார்கள்''. திருமணத்தில் வரவேற்பும், உணவும் மிக முக்கியம் என்பதை மறந்து விடாதீர்கள்.

நிகழ்ச்சிகளில் கவனத்தில் கொள்ளாதது:

திருமணம் மற்றும் எந்த நிகழ்ச்சியானாலும்:  எண்ணெய் கண்டு பல நாட்களான தலையுடனும், தண்ணீரைக் கண்டு பல நாட்களான உடையுடனும் ''பாவா, அய்யா, அம்மா, ராசா, எஜமான்'', என்ற ஈனக் குரலில் அழைத்துக் கொண்டு, ஏழைக் கூட்டங்கள் நிற்பார்கள்.

பிரியாணி வாசனை, இந்த ஏழைக் கூட்டங்களின் மூக்கைத் துளைக்க, பெரிய எதிர்பார்ப்புடனும்  நமக்கு உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனும் காத்துக் கொண்டு இருப்பார்கள்.

நிகழ்ச்சிகளை நடத்தும் பெரியவர்களின் வாய்களில் இருந்து வெளிவரும் அமுத மொழிகள்: போயா, போமா, போடா, போடீ உனக்கு என்ன அவசரம், விருந்திற்கு வந்தவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்தவுடன் உனக்குச் சோறு கிடைக்கும், போ... போ... அங்கே ஓரமாய்ப் போய் நில், இங்கு வாசலில் நிற்காதே என்று அடிக்காத குறையாக விரட்டுகிறார்கள்.

இவர்களை உள்ளே அழைத்து,  சாப்பாடு போடப் போவதில்லை. ஆனால் இவர்களுக்கு பார்சல் சாப்பாடு கொடுத்து அனுப்பலாம் அல்லவா? வந்தவர்கள் அனைவரும் சாப்பிட்டு செல்லும் வரை, இந்த ஏழைகளைப் பசியுடனும், சாப்பாடு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற குழப்பத்துடனும் வெளியில் நிற்க வைப்பது சிறந்த பண்பாகுமா?

விஷே நிகழ்ச்சிகள் நடத்தும் வீடுகளில் வேலைக்கு ஆட்கள் சேர்த்திருப்பார்கள். இவர்களின் விஷயத்திலும் கவனமற்றே இருக்கிறார்கள். வெளியில் நிற்கும் ஏழைகளுக்கும், வேலை செய்பவர்களுக்கும் கடைசியாக மீதப்பட்ட உணவைத்தான் தருகிறார்கள். விருந்து வைப்பதற்கு 2மணி நேரம் முன்னதாகவே உணவு தயாராகி விடும். அதனால் வேலை செய்பவர்களுக்கு, முன்னதாகவே உணவைக் கொடுத்து, 'உன் குடும்பத்தாருக்குப் போய் கொடுத்து விட்டு வந்து விடு' என்று சொன்னால் வேலை செய்பவரின் உள்ளம் எவ்வளவு மகிழ்ச்சி அடையும்.

வீடியோ:

திருமண வீட்டில் வீடியோ எடுக்கப்படுகிறது. நம் சொந்தங்கள் எவ்வளவு பேர்கள் இருக்கிறார்கள் என்பது மற்றவர்களுக்குத் தெரிய வேண்டாமா? பெண்ணுக்கு என்ன சீர் கொடுத்தோம் என்று தெரிய வேண்டாமா? மேலும் வெளிநாட்டில் உள்ள தந்தை, அண்ணன், மாமா, மச்சான் பார்க்க வேண்டாமா? அதனால் வீடியோ எடுக்கிறோம் என்று சொல்கிறார்கள்.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் : 24:31)

அந்நிய ஆண்களுக்கு முன்னால் இறைநம்பிக்கை கொண்ட பெண்கள்  எப்படி இருக்க வேண்டும், என்பதை வல்ல அல்லாஹ் குர்ஆனில் தெளிவாக விளக்குகிறான். ஆனால் வீடியோ எடுக்கும்பொழுது மேற்கண்ட வசனம் முற்றிலுமாக புறக்கணிக்கப்படுவதை நிறையத் திருமணங்களில் கண்டு வருகிறோம். வீடியோ எடுப்பவன் பிற மதத்தைச் சேர்ந்தவனாக இருக்கிறான் (வீடியோ எடுப்பவன் நம் சமுதாயத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் நம் குடும்பத்து பெண்களை ஹிஜாப் இல்லாமல் பார்ப்பதற்கு அனுமதி இல்லை). அவனுக்கு முன்னால் ஹிஜாப் இல்லாமல் அனைத்துவிதமான அலங்காரங்களோடு சேலையோடு நிற்கிறார்கள். முதலில் அவன்தான் பெண்களைப் பார்க்கிறான். வீடியோ எடுத்தப் பிறகு ''குடும்பத்துப் பெண்களை'' மணமகள் வீட்டு ஆண்களும்மணமகன் வீட்டு ஆண்களும், வெளிநாட்டில் உறவினர்களுக்கு திருமண கேஸட் அனுப்பி வைக்கும்படும்பொழுது அவர்களும், அவர்களின் நண்பர்களும் பார்க்கிறார்கள். ''குடும்பத்துப் பெண்கள் என்ன காட்சிப்பொருளா?'' அல்லது இது என்ன 'சினிமா கேஸட்டா' (சினிமா பார்ப்பதற்கு  மார்க்கத்தில் அனுமதி இல்லை),  எல்லா ஆண்களும் கண்டு ரசிப்பதற்கு.  (எவ்வளவுதான் உயிர் நண்பனாக இருந்தாலும் நம் குடும்பத்து ''பெண்களை'' ஹிஜாப் இல்லாமல் பார்ப்பதற்கு 'நண்பனுக்கு' அனுமதி இல்லை).

நவீன காலம், புதிய மாடல் என்று சொல்லி கொசுவலைகள்,   'சேலை' என்ற பெயரில் தயாரித்து விற்பனைக்கு வருகின்றன. இதைத்தான் பெண்கள் விரும்பி வாங்கி உடுத்திக் கொள்கிறார்கள். (பெண்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள் என்ற நபி மொழிக்கு இந்த சேலைகளே உதாரணமாக இருக்கிறது).

வீடியோவைப்  பற்றிய விழிப்புணர்வு கொஞ்சம் கூட இல்லாமல் இந்த அநாச்சாரத்தை, ஆண்கள் முதல் பெண்கள் வரை அனுமதித்து வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. வல்ல அல்லாஹ்வின் கட்டளைகள்  மீறப்படும் இந்த வீடியோ தேவைதானா? என்பதுப் பற்றி அனைவரும் சிந்திக்க வேண்டும்.

வாசகர்களுக்கு ஒரு கேள்வி:

திருமணத்தில் மார்க்க வரம்புகள் அனைத்தையும் மீறப்படும் வீடியோ தேவைதானா?

இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

31 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கல்யாணம் சம்பந்தப்பட்ட பல்வேறு நல் விளக்கங்களும் ஆலோசனைகளும்!
ஜஷாக்கல்லாஹ் ஹைர்.

உங்களின் கேள்வியிலேயே வீடியோ சம்பந்தப்பட்டதுக்கு பதில் இருக்கிறதே!
மார்க்க வரம்புகள் அனைத்தும் மீறப்பட்டால் அது தேவையில்லையே!

ஆனால் ஒரே ஒரு சூழ்நிலையில் மணமக்களின் தகப்பனார்கள் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அயல்நாட்டில் இருக்கும்போது மட்டும் பேணுதலுடன் வீடியோ எடுத்து அதை பார்ப்பவர்கள் விசயத்திலும் பேணுதலை கடைபிடித்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஓரளவு திருப்தியாவது கிடைக்கும்.

Ebrahim Ansari said...

கல்யாணம் சம்பந்தப்பட்ட பல்வேறு நல் விளக்கங்களும் ஆலோசனைகளும்!
ஜஷாக்கல்லாஹ் ஹைர்.

உங்களின் கேள்வியிலேயே வீடியோ சம்பந்தப்பட்டதுக்கு பதில் இருக்கிறதே!
மார்க்க வரம்புகள் அனைத்தும் மீறப்பட்டால் அது தேவையில்லையே!

ஆனால் ஒரே ஒரு சூழ்நிலையில் மணமக்களின் தகப்பனார்கள் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அயல்நாட்டில் இருக்கும்போது மட்டும் பேணுதலுடன் வீடியோ எடுத்து அதை பார்ப்பவர்கள் விசயத்திலும் பேணுதலை கடைபிடித்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஓரளவு திருப்தியாவது கிடைக்கும்.

Abdul Razik said...

உங்களின் கேள்வியிலேயே வீடியோ சம்பந்தப்பட்டதுக்கு பதில் இருக்கிறதே!
மார்க்க வரம்புகள் அனைத்தும் மீறப்பட்டால் அது தேவையில்லையே!

ஆனால் ஒரே ஒரு சூழ்நிலையில் மணமக்களின் தகப்பனார்கள் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அயல்நாட்டில் இருக்கும்போது மட்டும் பேணுதலுடன் வீடியோ எடுத்து அதை பார்ப்பவர்கள் விசயத்திலும் பேணுதலை கடைபிடித்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஓரளவு திருப்தியாவது கிடைக்கும்.

இந்த கருத்து தவறு , வீடியோ எடுப்பது முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும்

Abdul Razik
Dubai

sabeer.abushahruk said...

சிறப்பான, நடைமுறைச் சம்பவங்களின் மீதான, எதார்த்த வாழ்க்கையைப்பற்றிய அலசலோடான இந்தத் தொடர் ஓர் முழுமையான ஆய்வாகவே உருவெடுக்க்றது.

குறிப்பாக, கல்யாணத்தைப் பற்றி விளக்கமாகவே ஆராய்வது நல்லதுதான்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, அலாவுதீன்.

sabeer.abushahruk said...

நிகழ்வுகளைப் பதிவுசெய்து வைப்பது ஒன்றும் புதிய நடைமுறை அல்ல. 

பண்டு நடந்தவற்றைப் பதிவு செய்தே வரலாறு உருவானது. பண்டு உருவாக்கிய சூத்திரங்களைப் பதிவு செய்தே அதன் அடிப்படையில் புதியன கண்டுபிடிக்கப்பட்டன. இவ்வளவு ஏன்? 

நம் கண்மணி நபி (ஸல்) அவர்களுக்கு வந்த வஹியைப் பதிவு செய்தே குர் ஆன் கிடைத்தது, அவர்கள்தாம் சொன்னவைகளையும் நடந்தவைகளையும் பதிவு செய்தே ஹதீஸானது.

அக்காலத்தில் பதிவு செய்து வைக்க மனிதனுக்குக் கிடைத்த வசதி மையெழுத்துகளும் பிறகு அச்சுக்கோப்புகளும். அதே வரிசையில்தான் இப்போது இந்த விடியோப் பதிவு.

தற்போது, மார்க்கத்தின் வழிமுறைகளில் மாற்றுக்கருத்து இருந்தாலும் எல்லா அறிஞர்களும் தமது நிலைபாட்டை விடியோவில்தான் சொல்கிறார்கள், பதிவு செய்தும் வைக்கிறார்கள்.

எனவே, விடியோவில் பதிவது தவறு என்னும் ஒட்டுமொத்தமான கூற்றில் எனக்கு உடன்பாடு இல்லை.

விடியோ மட்டுமல்ல, ஹராம் என்று விலக்கப்படாத எதுவுமே வரம்பு மீராதவரை தவறில்லை.

வரம்பை தீர்மாணிப்பது அவரவர்களின் ஈமானின் நிலையைப் பொறுத்தது.

தீர்வாக, வரம்பு மீராமல், நல்லொழுக்கமான முறையில் கல்யாணம் மற்றும் இதர காரியங்களை விடியோவில் பதிவு செய்து மன அழுத்த நேரங்களில் பார்த்து மகிழ்வது ஏற்புடையதே என்பதே என் கருத்து.

Meerashah Rafia said...

மாஷா அல்லாஹ். கனமான செய்திகளை எளிமையாக விளக்கி சொன்னமைக்கு நன்றி.. பல நாள் நான் எழுதட நினைத்ததை சுருக்கமாக சொல்லி இருக்கின்றீர்கள்.

தங்கள் கேள்விக்கான பதில் :
1)திருமணம் போன்ற நிகழ்சிகளில் காணொளி எடுப்பதென்பதை முற்றிலும் தவிற்பதே சிறந்தது. அது பெண்களையாக இருந்தாலும் சரி,ஆண்களையாக இருந்தாலும் சரி. ஏன் ஆண்களையும் எடுக்கக்கூடாதென்று நினைக்கலாம். எமக்கு தெரிந்து பல மனைவிமார்கள் தங்கள் கணவன்மார்களின் தோழர்களின் திருமண காணொளிகளை,புகைப்படங்களை கண்டு "இந்த வெள்ளை சட்டை போட்டு டிப்-டாப்பா இருக்கிறாரே இவரு யாருங்க" என்று தன்னை அறியாமல் பல பெண்களும் ஆண்களை ரசிக்கின்றார்கள் என்பது உண்மை. குர்ஆனில் ஆண்களை பார்வைகளை தாழ்த்திக்கொள்ளஉம் சொல்லிருக்கின்ற்றது.

2)காட்சி வழித்தொடர்பியல், விளம்பரம்&மக்கள் தொடர்பு (Visual Communication, Advertising&PR ) படித்தமையால் புகைப்படம், காணொளி,வண்ணக்களை போன்ற பல ஊடகங்களை படித்து செய்முறைபடுத்த நேர்ந்தது. இதை வைத்து திருமணத்தில்/கல்லூரி நிகழ்ச்சிகளில் எடுக்கும் காணொளிகளை எப்படியெல்லாம் பார்த்து ரசித்து தொகுக்கப்படுகின்றதென்பதை(editing) கண்கூடாக பார்த்திருக்கின்றேன். மக்கள் பார்க்கும் இறுதி பதிவு வட்டு(CD) வேண்டுமானால் இரண்டு மணிநேரமாக இருக்கலாம், ஆனால் ஆறு மணிநேரம் எந்தந்த கோணங்களில் எடுத்தார்கள் என்பதை நீங்கள் அறிய இயலாது. காணொளியை விட மோசமானது புகைப்படம் ஆல்பம். தற்போது நான் இருக்கும் வலைகலை நிபுணர் வேலையைவிட மாஷா அல்லாஹ் ஒளிப்பதிவு,புகைப்படம் மற்றும் தொகுப்பு (cinematography,photography&editing) துறையில் கை தேர்ந்தவன்.. இவைகளெல்லாம் இசுலாத்திற்கு முற்றிலும் மாற்றமானது என்பதை அறிந்தே இந்த துறையை விட்டு முடிந்தவரை விளகி நின்றேன்/நிற்கின்றேன்..

3)கண்கள் விபச்சாரம் செய்யும் என்று இறைவன் சொல்லிருக்கின்றான்.. இத்தகைய வசனத்தின்படி பார்த்தால் அந்நிய ஆண்களை/பெண்களை வாடகைக்கு வைத்து காணொளி/புகைப்படம் எடுத்து தொகுப்பதும், பிறரை பார்த்து ரசிக்க செய்வதும் நம் தூண்டுதலின் பேரில் நடக்கும் ஒரு தவறான செயலே.. திருமண புகைப்படங்களாக இருக்கட்டும், வயசுக்கு வந்த புள்ளைக்கு பூ வச்சி அழகுபார்த்து எடுத்த புகைப்படமாக இருக்கட்டும் அதை எப்படி கையாள்கிறார்கள் என்று மணிக்கணக்கில், நாள் கணக்கில் ஸ்டுடியோவிலேயே காலம் கழித்து பார்த்ததுண்டு. உங்களுக்கு அழகுபடுத்தி கொடுத்த பிறகு கணினியிலிருந்து அழித்துவிடுவார்கள் என்று நினைத்தால் அது மூடத்தனம்.. நாளையே சமூக வலைத்தளங்களில் வந்தாலும் ஆச்சர்யபடுவதிற்கில்லை.

4) என் திருமணத்திற்கு நான் புகைப்படம் எடுக்கவி(ட)ல்லை. ஆனால் யாரோ என்னை எடுத்த புகைப்படம் அவர் சமூக வலைத்தளத்தில் நமக்கே தெரியாமல் ஏற்றப்பட்டு பின்புதான் எமக்கு தெரிய வந்தது. இக்காலத்தில் privacy என்பது இல்லாமல் போய்விட்டது. அதற்கு பெரும் பங்கு சமூக வலைதளங்களுக்கு உண்டு.

5)புகைப்படமோ/கானொலியோ, அவசியாமாக தேவைப்பட்டால் அந்நிய நபர் இடையூறு இல்லாமல் அந்தரங்கமாக வைத்திருப்பது சிறந்தது. தகப்பன்மார்கள் வெளிநாட்டில் இருந்தால், முதலில் தன் வீட்டு திருமண காணொளி எடுப்பதை பிறரிடம் முன்கூட்டிய சொல்லி விளம்பரப்படுத்துவதை நிறுத்தவும்.

இறுதியாக, சிலரோ/பலரோ நினைக்கலாம் "அட என்னப்பா இந்த அளவிற்கெல்லாம் புகைப்படத்தை/காணொளியை பார்பவர்கள்,எடுப்பவர்கள் எண்ணமாட்டார்கள்" என்று.. இதற்கு காரணம் வாலிப பருவத்தை கடந்து காலங்கள் கழிந்துவிட்டதால் அந்த சிலருக்கு இளசுகளின் மனசுகளையும், கள்ள மனசுகளையும் அறிந்துகொள்ளமுடியாத சூழ்நிலையே காரணம்..

Meerashah Rafia said...

மொத்தத்தில் கானொலியின் பொருள் முக்கியம்.. இசுலாத்தை எத்திவைக்கும் கானொலியொ, நற்செய்திகள், உபதேசங்கள் சொல்லும் கானொலிகலோ, தவறான என்னத்தை ஏற்படுத்தாத கானொலிகலோ எம்மைபோருத்தவரை தவறில்லை என்று எண்ணத்தோன்றுகின்றது..

எது public , எது private என்பதை புரிந்தால் எல்லாம் சிறப்பு.

Abdul Razik said...

காட்சி வழித்தொடர்பியல், விளம்பரம்&மக்கள் தொடர்பு (Visual Communication, Advertising&PR ) படித்தமையால் புகைப்படம், காணொளி,வண்ணக்களை போன்ற பல ஊடகங்களை படித்து செய்முறைபடுத்த நேர்ந்தது. இதை வைத்து திருமணத்தில்/கல்லூரி நிகழ்ச்சிகளில் எடுக்கும் காணொளிகளை எப்படியெல்லாம் பார்த்து ரசித்து தொகுக்கப்படுகின்றதென்பதை(editing) கண்கூடாக பார்த்திருக்கின்றேன். மக்கள் பார்க்கும் இறுதி பதிவு வட்டு(CD) வேண்டுமானால் இரண்டு மணிநேரமாக இருக்கலாம், ஆனால் ஆறு மணிநேரம் எந்தந்த கோணங்களில் எடுத்தார்கள் என்பதை நீங்கள் அறிய இயலாது.

மிகச்சரியான கருத்தை சகோதரர் மீராஷா அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். எந்த ஒரு சுன்னத்தான காரியத்தையும் குரான், ஹதீஸ் அடிப்படயில் செய்வது அவசியம்.

sabeer.abushahruk said...

என் மச்சினன், என் மச்சியின் மகளை மணந்த திருமண விழா மொத்தத்தையும் என் ஹேன்டி காம் கொண்டு நானே பதிவு செய்து எடிட் செய்து ஸிடியாக வைத்திருக்கிறோம்.

தம்பிகள் ராஸிக் & மீராஷா,

இது ஏற்புடையதல்லவா?

Abdul Razik said...

சபீர் காக்கா,

முதலில் தம்பி என்று அழைத்ததற்கு thanks

உங்கள் கருத்து தவறாகவே தோன்றுகிறது, முதலில் அதில் மணப்பென் இருக்ககூடாது. இந்த video/Cd வேறு யாருக்கும் கிடைக்க வாய்ப்பிள்ளை என்றால்.....ஒகே, இந்த Internet யுகத்தில் வீடியொ, Records பாது காத்து வைப்பது என்பது மிக அரிது.

Abdul Razik
Dubai

Meerashah Rafia said...

sabeer.abushahruk சொன்னது…
//என் மச்சினன், என் மச்சியின் மகளை மணந்த திருமண விழா மொத்தத்தையும் என் ஹேன்டி காம் கொண்டு நானே பதிவு செய்து எடிட் செய்து ஸிடியாக வைத்திருக்கிறோம்.
தம்பிகள் ராஸிக் & மீராஷா,
இது ஏற்புடையதல்லவா?//


அன்பின் சபீர் காக்கா,(என்னை தம்பி என்றதால் காக்க என்றேன்..இல்லாவிடில் மாமா என்றே அழைத்திருப்பேன்.தப்பிச்சிட்டீங்க) தாங்கள் வைத்திருக்கும் பதிவு வட்டு எதுவும் மஹர்ரம், மஹர்ரமற்ற, அந்நிய பெண்கள் அலங்காரம் போன்ற கோட்பாடுகளை பார்ப்வர்கள், வைத்திருப்பவர்கள் மீறாதவரை தவறில்லை..

ஆனால், திருமணத்தில் பிற ஊர்களில் கட்டுபாடற்று எடுப்பதுபோல் காணொளி எடுக்கும் பழக்கத்தை கைவிட நாமும் வழியுருத்தவேண்டும்.. உங்களைப்போல், எம்மைப்போல் சல்லி காசு செலவில்லாமல் எத்தனை பேருக்கு shooting and editing தெரியுமென்று தெரியவில்லை. ஆதலால் ஊக்குவிக்காமல் இருக்க தவிர்ப்பது நல்லது.உங்களை ஒரு உதாரணமாக எடுத்துக்கொண்டு செயல்பட்டாலும் சிறப்பே..

இந்த பாடத்தை என் திருமண பத்திரிக்கைமூலம் தெரிந்துக்கொண்டேன்.
என் நண்பன் ஒருவன் பெரிய அச்சு நிறுவனத்தில் இருப்பதால் நானும் என் இன்னொரு நண்பனும் பத்திரிக்கை வடிவமைக்க, அவன் அச்சு செய்து தர மூன்று நான்கு மடங்கு குறைந்த விலையில் கிடைத்தது. ஆனால், இப்பொழுது அதை பார்த்துவிட்டு என் நண்பர்கள் பலரும் என்னிடம் வடிவமைத்து கேட்கின்றனர். பல ஆயிரங்கள் கொடுத்து அச்சடிக்க தயாராகவும் இருக்கின்றனர். இதற்கு நாமும் ஒரு காரணமாக ஆகிட்டோமோ என்று சிலநேரம் என்ன தோன்றுகிறது. இருப்பினும் நான் அடித்த விதத்தை விளக்கி சொல்வதுண்டு.

ஆகையால் பத்திரிக்கை அடித்து அழைப்பு விடுப்பது தவறில்லை..ஆனால் பிரம்மாண்டம், வீண் வீரியம் இவை இரண்டையும் கொஞ்சம் தவிர்ப்பது சிறப்பு. அதுபோல்தான் காநொளியும்,புகைப்படங்களும்..

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

என்ன ராஜிக்! சலாம்.
நான் ஆமோதித்தது கூட தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தான்!

இதைதயும் தவறு என்று நீ சொன்னால் அடையாள அட்டைக்காக பல கோணங்களில் படம் எடுப்பதும் தவறாகவே கருத நேரிடும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

உண்மைச் சம்பவம் சொல்கிறேன்... MSM(mR)ன் ஆணித்தரமான கருத்தோடு ஒத்துப் போகும் (சொல்வது அனைத்தும் உண்மை என நிருப்பித்த திருமணச் சம்பவம்)....

இது நடந்தது நாகை மாவட்டத்தில் ஓர் ஊரில் 2006ம் ஆண்டு ஒரு நண்பரின் வீட்டுத் திருமணம் (இது நாள் வரை பொதுவில் பதியாமல் இருந்த விஷயம்)!

இரண்டு நாட்கள் தடபுடலாக வீடியோ படம் எடுத்திருக்கிறார்கள் நண்பரின் மைத்துனரின் நண்பர்தான் வீடியோ கடை உரிமையாளர் அதனால் அவர்களை மிக இலகுவாக வீட்டில் பழகவைத்திருக்கின்றனர்.

அவர்களும் காலை முதல் இரவு உறக்கம் வரையிலும், தலை வாசல் முதல் கொல்லை வாசல் வரையிலும் என்று வலைந்து வலைந்து எடுத்திருக்கிறார்கள்.

திருமணம் முடிந்து மூன்று நட்கள் கழித்து அவர்களிடம் வீடியோ டேப்பும் சீடியும் வீடியோ எடுத்தவர்களிடமிருந்து வந்தது அதனைப் போட்டுப் பார்த்தவர்கள் சிலாகித்தார்கள், அருமையாக எடுத்திருக்கிறார்கள் என்றும்.

அதே சீடி இங்கு இருக்கும் நண்பருக்கும் வந்தது அவரும் பார்த்து விட்டு பாராட்டினார், என்னுடைய பார்வைக்கும் தந்தார் நானும் பார்த்தேன் (அப்போது) அங்கொன்றும் இங்கொன்றும் வரம்பு மீறல்கள் இருந்ததால், ஒரு நாள் வீடியோ மாதிரி தெரியவில்லையே ஆடைகளின் மாற்றங்கள் தெரிகிறதே என்றேன்.

அவரும் 'ஆமாம் இது இரண்டு நாட்கள் எடுத்தது' என்றார், சரி வீட்டில் கேளுங்கள் மாஸ்டர் வீடியோவை வாங்கிவிட்டார்களா? என்று அவரும் ஆமாம் அவரும் கொடுத்து விட்டார் இரண்டு கேசட்டை என்றார்.

இரண்டு நாட்கள் எங்கேயும் போகாமலே வீட்டிலேயே தங்கியிருந்து எடுத்தவர்களிடம் இரண்டு கேஸட்டுதானா? என்றேன் !

அப்போதுதான் அவருக்கும் உரைத்தது... பின்னர் அவரது மைத்துனருக்கும் ஃபோன் செய்தார், அதன் பின் அதிரடியாக வீடியோ கடையில் அவர்கள் சென்று தேடி எடுத்ததி்ல் 6 கேஸட்டுகள் கிடைத்திருக்கிறது அதில் ஒன்று பெண்கள் இருந்த அறையில் நிரந்தரமாக பொருத்தப்பட்டிருந்த கேமராவில் எடுத்தது அதிலிருந்து எடுத்த ஒரே ஒரு கிளிப் மணமகள் அறையை விட்டு வெளியில் வருவது போன்ற ஒன்று மட்டுமே. மற்றவைகள் வீடியோ எடுத்தவர்கள் வசம்.

இது ஒரு சாம்பிள் மட்டுமே...

இந்த சம்பவத்திற்கு பின்னர் ஒரே வாரத்தில் தனது வேலையை துறந்து விட்டு ஊருக்குச் சென்றார் அத்தோடு அவருடைய பிரச்சினை தீர்ந்தது என்று இருந்தார்.

2012 மே மாதம் ஊருக்குச் சென்றபோது நண்பரைச் சந்திக்க நேர்ந்தது அவர் சொன்னது மற்றொமொரு அதிர்ச்சி... !

அந்த திருமண வைபவத்தில் எடுத்ததில் ஒரு கீற்றாக வீடியோ கிளிப் ஒன்று நண்பரின் பக்கத்து வீட்டு பள்ளி மாணவனின் மொபைலில் இருந்திருக்கிறது அவர் 50 ரூபாய் கொடுத்து மொபைலில் வீடியோவை காப்பி செய்திருக்கிறார் அதே ஊரில். !

இது நடந்த உண்மை எச்சரிக்கையாக இங்கே பதிந்து வைக்கிறேன்..

sabeer.abushahruk said...

எனக்கென்னவோ இதுபோன்ற குற்றத்திற்கான சாத்தியக்கூறுகளின் சதவிகிதம் குறைவாகவே, புறக்கணிக்கத்தக்க அளவு குறைவாகவே தோன்றுகிறது.

மேற்கொண்டு உரையாடி நான் சொல்வது சரியா தவறா என்று தீர்மாணிக்கும் முன்பதாக, சில விஷயங்களில் "நமது" நிலைபாட்டைப் பசாங்கு இல்லாமல் பகிரங்கமாக அறிவித்துக்கொள்ள வேண்டும். அவையாவன:

தம்பி மீராஷா சொல்வதுபோல் எல்லா இளைஞர்களும் குடும்பப் பெண்களைப் பாலுணர்வோடுதான் பார்க்கிறார்களா?

அப்படிப் பார்ப்பவர்களில் விடியோ கடை நடத்தும் அனைவரும் அந்தப் பெண்களை தொழில் தர்மமின்றி வலைதளங்களில் போடும் வக்கிரர்களா?

அதே வக்கிரத்தை மார்க்கெட்டிலோ மருத்துவமனைகளிலோ முகம் மட்டும் தெரிய புர்கா போட்ட பெண்களை மறைந்திருந்து எடுத்து மணிக்கணக்காக உற்றுப்பார்த்து எடிட் செய்து நெட்டில் போட முடியாதா?

கடவுச்சீட்டை உற்றுப்பார்க்கும் இமிகிரேஷன் இளைஞன் கண்களால் விபச்சாரம் செய்கிறானா?

ஸ்கைப்பி மற்றும் விடியோ ச்சாட்டிங்கில் மனைவியிடமோ இளம் உறவுக்கார பெண்ணிடமோ ஒரு சபுராளி உரையாடுவது பாதுகாப்பானதா?

நாம் நம் உரையாடலில் விடியோவரை மட்டும்தான் அலசுவோமா கிராஃபிக்ஸ் வரையுமா?

புகைப்படத்தைப் பார்த்து கண்களால் விபச்சாரம் செய்தால் அது செய்வவன்/ள் குற்றமா பிம்பத்தின் உடையக்காரரின் குற்றமா?

sabeer.abushahruk said...

அபு இபுறாகீம்,

மருமகனாருக்கு சப்போர்ட்டாக ஒரு சம்பவம் சொன்னதற்கு மகிழ்ச்சி! சொன்னவிதத்திலிருந்து அந்தத் தடபுடல் எல்லாமே வரம்பு மீரல்களே. நானும் எம் ஹெச் ஜேயும் சொல்வதில் வரம்பு துளியும் மீரப்படாத என்ற நிபந்தனை உண்டு.

விதிவிலக்குகள் எல்லா நடப்பிலும் உண்டு. வரம்பு மீராமல் விடியோ பதிவு செய்யலாமா என்பதே பேசுபொருள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//விதிவிலக்குகள் எல்லா நடப்பிலும் உண்டு. வரம்பு மீராமல் விடியோ பதிவு செய்யலாமா என்பதே பேசுபொருள்.//

நான் சொன்னது வீடியோ எடுக்கும் மூன்றாம் நபர்களின் செயல்களை (எடிட்டிங்கில் நடக்கும் 'முல்லு தில்லு' களை - மாற்றிப் போட்டேன்)

வரம்பு மிறல் இருக்காது என்ற உத்திரவாதம் நாம் எடுக்கலாம், நிர்பந்திக்கலாம்.... ஆனால், மூன்றாவது நபரை எல்லா நேரத்திலும் கண்கானிப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று ! -

ஆதலால், திருமண மற்றும் பெண்கள் கலந்து கொள்ளும் வைபவங்களில் கூடாது என்பதே என் கருத்து !

வீட்டுக்குள், கூட்டுக்குள் எடுப்பவைகள் எடுப்பவர்களின் கைங்கரியத்தைப் பொறுத்தது மானம் பாதுகாக்கப்பட வேண்டிய இடத்தில் இருக்கனும் என்பது !

எடிட்டிங்க் மேட்டரு சொன்னதும் சட்டென்று ஞாபகத்திற்கு வந்த சம்பவத்தை பதிந்தேன் காக்கா..

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எல்லாம் சரி, எளிமையான எழுத்தால் எங்களை இங்கே விவாதிக்க வைத்திருக்கும் அலாவுதீன் காக்கா அவர்களுக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர் !

எப்போ ரிட்டர்ன் !?

Meerashah Rafia said...

sabeer.abushahruk சொன்னது…
// வரம்பு மீராமல் விடியோ பதிவு செய்யலாமா என்பதே பேசுபொருள்..//


அன்பின் சகோ. சபீர் அவர்களே..
சகோ. அலாவுதீன் அவர்களால் வாசகர்களுக்கு கேட்கப்பட்ட கேள்வி:
திருமணத்தில் மார்க்க வரம்புகள் அனைத்தையும் மீறப்படும் வீடியோ தேவைதானா?

இதன்மூலம் வீடியோ கூடுமா கூடாதா என்ற விவாதத்திற்கும் இந்த கேள்விக்கு இடமில்லை..மாறாக வரம்பு மீறுதல் கூடுமா கூடாதா என்பதே கேள்வி..

சகோ.அலாவுதீன் அவர்கள் கேட்ட கேள்வியே உங்களாலும் கேட்கப்பட்டுள்ளது..
வரம்பு மீரப்படவில்லையெனில் கூடும் என்பதே அந்த கேள்வியின் மறைமுக அர்த்தம்.

ஆனால் எது வரம்பு மீறுதல் என்பதற்கு உதாரணம்தான் நானும், மாம்'ஸ் அபு இபுராஹிமும் சொன்னது..

Abdul Razik said...

என்ன ராஜிக்! சலாம். this is not an islamic way to introduce ourslef. please attempt to say Assalaamu Alaikkum fully. any way ...wa alaikkumussalaam. I hope you are doing well in London

அருமை Jafar , இங்கு நீ நான் என்கிற வாதம் வேண்டாம், மார்க்கம் சம்மந்தப்பட்ட விளக்கங்களுக்கு கண்மனி நாயகம் எதைச்சொன்னார்களோ அதை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். இறைவனுக்குறிய கடமையை நிறைவேற்ற , தாய், தந்தை, மனைவி மக்களுக்கு ஹலாலான உணவு சுன்னத்தான முறயில் உணவு அளிப்பதற்காக வெளி நாடு செல்வதற்காக அடையால அட்டையோ அல்லது பாஸ்போர்ட்டோ எடுக்கும்போது எடுக்கப்படும் படங்கள் தவிர்க்க முடியாதவைகள். வளர்ந்திருக்கின்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இஸ்லாம் கூறியுள்ள வரயறைக்கு மேல் செல்வதை யோசிக்க வேண்டும் என்பதற்காக அவ்வாரு பின்னூட்டம் இட்டேன்

Abdul Razik
Dubai

Yasir said...

சிறந்த,சிந்தனையை தூண்டும் ஆக்கம்...அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா காக்கா..தொடர்ந்து எழுதுங்கள்

Yasir said...

அவசியம் இல்லாவிட்டால் வீடியோ எடுப்பதை தவிர்ப்பதே நலம்...வாப்பா போன்ற நெருங்கிய உறவுகள் கல்யாணத்திற்க்கு வராத சூழ்நிலை இருக்குமேயானால் பெண்ணின் நெருங்கிய உறவினரே (மார்க்கம் அனுமதித்த) தன்னுடைய கேமராவில் வீடியோ எடுக்கலாம் என்பது என் கருத்து..

Shameed said...

திருமணம் மற்றும் விருந்து சம்பந்தமாக அழகிய விளக்கங்கள்

Shameed said...

//பெண்களுக்கு மட்டும் சாப்பாடு என்று அழைக்கிறார்கள். இல்லையென்றால் ஆண்களுக்கு மட்டும் சாப்பாடு என்று அழைக்கிறார்கள்.//

இது ஒரு முறையான அழைப்பல்ல இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்

Shameed said...

//திருமணத்தில் மார்க்க வரம்புகள் அனைத்தையும் மீறப்படும் வீடியோ தேவைதானா?//

வீட்டுக்கு வெளியோ இருக்க வேண்டிய கேமரா பெட் ரூம் வரை போவதை தடுக்க வேண்டும்

ஒரு சில திருமண வீட்டார் மணமகன் மணமகள் கையளித்து விடுவதை படம் எடுக்க சொல்லி பாடாய் படுத்தி விடுகிறார்கள்!

Shameed said...

சமீபத்தில் ஊர் சென்றிருந்த போது பெண்களுக்கு மட்டும் விருந்து என்ற அழைப்பின் பேரில் சென்ற வீட்டுப் பெண்கள் ஊரில் இருக்கும் ஆண்களுக்கு என்று தனியாக சாப்பாடு ஆக்கி வைத்து விட்டுச்
செல்வதை கவனிக்க முடிந்தது. இந்த சூழல் அவர்களுக்கு தர்மசங்கடத்தை கொடுப்பது போன்ற உணர்வே ஏற்பட்டது... இவ்வாறான நிகழ்வுகளை தவிர்க்கலாம் இனி வரும் காலங்களில்... இது நீண்ட நாட்களாக நடந்து வருகிறது இதைப் பற்றி சிந்திக்கவோ வருத்தப்படவோ இல்லை, இப்போவெல்லாம் அதிரைநிருபர் வாசிக்க ஆரம்பித்ததன் பலன் நிறைய புரியவருகிறது....

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நண்பன் ராஜிக்,
உன் மீது சாந்தியும் சமாதானமும் உண்ண்டாகட்டுமாக! ஆமீன். அல்ஹம்து லில்லாஹ்! நலம்.

வெறுமனே சலாம் என்று மட்டும் சொல்லக் கூடாதா?
பெரும்பாலான குஜராத் முஸ்லிம்கள் பயன்படுத்துவதை தான் நானும் சொன்னேன். தவறு என்றால் திருந்(த்)திக் கொள்கிறேன்.


ஹலாலான சம்பாத்தியத்துக்காக வெளிநாடு செல்ல படமெடுப்பது தவிர்க்க முடியாது என்று தாம் சொன்னது.

நான் சொன்னதோ அதே ஹலாலான சம்பாத்தியத்துக்காக சென்று பிள்ளையின் கல்யாணத்துக்கு கூட வர முடியாத தவிர்க்க முடியாத சூழ்நிலையில் (சபீர் காக்கா சொன்னது போல் வரம்பு மீராமல்) என்று தானே நான் சொன்னேன்.

ZAKIR HUSSAIN said...

//மூன்றாவது நபரை எல்லா நேரத்திலும் கண்கானிப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று ! -//

To Abu Ibrahim & ALL

This is 100 % TRUE

Iqbal M. Salih said...

தகவலுக்காக: 1989ல் சகோ.ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி தலைமை ஏற்க, சகோ.பீ.ஜெ.சிறப்புரையாற்ற ஒரு பெரிய மாநாடு போல எனக்கு நிகழ்ந்த நபிவழித் திருமணத்தில் வீடியோ எடுக்கப்படவில்லை! ஒரு ஃபோட்டோ கூட எடுக்கப் படவில்லை!

வந்திருந்த வீடியோகாரனை என் சகோதரர் ஜமீல் M. ஸாலிஹ் அவர்கள், 'தேவையில்லை' என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார்கள்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இங்கே விடியோ பதிவது கூடுமா கூடாதா என்பதல்ல வாதம், அது தேவைதானா ? என்பதே...

அதனால் விளையும் நன்மை தீமைகளைத்தான் அவரவர்களின் சூழலைச் சொல்லி கருத்தாடல்கள் செய்கிறோம்.

எனக்கும் புகைப்பட மற்றும் வீடியோகிரஃபியிலும் அதனைத் தொடரும் நெறியாளுமையிலும் அலாதியான ஆர்வம் மட்டுமல்ல இன்றளவும் ஈடுபாடு இருக்கிறது.

வீடியோ / ஃபோட்டோ கையாளுபவர்களின் ந(ன்ன)டத்தையைப் பொறுத்தே... நல்லதாகவும் தீயதாகவும் அமைந்து விடுகிறது...

சந்தர்ப்ப சூழலைப் பொறுத்து அவ்வாறு எடுப்பதே தவறு என்று சொல்வதை விட தவிர்ப்பதால் தொழில்நுட்பத்தின் பலன்களில் இழப்பதற்கு ஏதுமில்லை என்பதே மீண்டும் சொல்ல வரும் என் கருத்து !

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி!
ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

////m.nainathambi.அபூஇப்ராஹீம்சொன்னது…

எப்போ ரிட்டர்ன் !?///

இன்ஷாஅல்லாஹ்!
இம்மாதக் கடைசியில் ரிட்டர்ன்

y.m.ansari said...

சகோதரியே தொடர் 6 ல்
//''இது எப்படி வரதட்சணையில் சேரும்?'' வீடும், நகையும் அவர்கள் பெண்ணுக்குத்தானே தருகிறார்கள்?'' என்று பெண்களே! சொன்ன விளக்கம்.//

ஒரு குடும்பத்தின் கிட்டத்தட்ட முழு சொத்தாகிய வீட்டை மகளுக்கு கொடுத்து விட்டு மகனை உன் மனைவி வீட்டில் போய் வாழ் என்று சொல்வது அநீதி இல்லையா அல்லாஹ் குர்ஆனில் கட்டளை இட்ட சொத்து பங்கீட்டில் நமது மனோ இச்சையை பிபற்றினால் நம்மை நரகில் சேர்க்கத்தா. அல்லாஹ்வை பயந்து எப்போதுதான் நம் சமுதாயம் திருந்துமோ

எனதருமை சகோதர சகோதரிகளே கீழே உள்ள வீடியோவை பாருங்கள்

http://srilankamoors.com/Media-centre/Veedum-sheetham-ahumaa.html

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு