நாம் பிடித்த புலிவால்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

பிறக்க ஓர் இடம்!                              
பிழைக்க ஓர் இடம்!
இதுதான் என் சமுதாய
மக்களின் வாழ்வாகிவிட்டது!     
நம் முன்னோர்களுக்கோ
பர்மா, ரங்கூன், மலேசியா!
எங்களுக்கோ வளைகுடா!
இனி ஓர் நாடு கண்டுபிடித்தால்
அங்கும் தொடருமா?
எங்கள் வாரிசுகள்?

வளைகுடா வசந்தம் என்றார்கள்!
முன்னால் கால் வைத்த
மூத்த குடி(அடிமை)மகன்கள் நாம்!
வைத்த காலை எடுக்க முடியவில்லை
ஸ்டெப் கட்டிங் தலையுடன் வந்த
க்கு இன்றோ நரையும், வழுக்கையும்!
சில்வர் ஜூப்ளி முடிந்து விட்டது
ம்முடைய பயணமோ
திக்குத்தெரியாமல்
வளைகுடாவை நோக்கியே!

ஊர் சென்றால் நம்
சுமைகளை சுமந்து செல்வதில்
அலாதி ஆனந்தம் நம்
கையெல்லாம் சிவக்க சுமப்போம்
அடுத்த தடவை சுதந்திரபறவைதான்
ஒரே சுமைதான்! நம் வைராக்கியம்
காற்றோடு போகும்! மீண்டும் சுமை!

மனைவி மக்களை பார்த்தால்
மன சந்தோஷம் ஆனால்
நம்முடைய கையிருப்பும்
எடுத்த விடுப்பும்
கரைய கரைய மனதில் பீதி!
வெளியிலோ புன்(பொய்)சிரிப்பு!

எத்தனை கொடுத்தாலும்
போதுமென்ற மனம் இல்லை
இதுதான் கொண்டு வந்தாயா?
நம் உள்ளமோ வேதனையில்
கொடுத்த பொருள் நன்றாக
இருந்தது என்று சொல்லி விட்டால்
தங்கப்பரிசு வாங்கிய சந்தோஷம்!
சொல்லத்தான் மனமில்லை!

கண்ணீரோடு குடும்பத்தை
பிரிந்த நாம் சொல்வது
இரண்டு வருடம்தான்!
முடித்து விட்டு போய்விடுவோம்
பல பிரச்சனைகளில்
மறந்தே விடுவோம்!
இதுதான் தொடர்கதையான
வளைகுடா வாழ்க்கை!


சகோதரிகள் திருமணம் முடித்து
வீட்டையும் கட்டி விட்டு
தொழிலுக்கு பணத்தோடு
ஊரில் தங்கிவிட வேண்டும்!
எல்லாம் முடிந்து
நாமும் குடும்பத்தலைவன்
ஆன பிறகு மீண்டும்
அதே பழைய இடம்
வீடு பிள்ளைகள் திருமணம்
ஊரில் நிரந்தரம் என்பதும்
கனவாய் போனதே!


வழி அனுப்ப வாகனத்தில்
வந்த பிள்ளைகள் முகத்தில் மகிழ்ச்சி!
விமான நிலையத்தில் நாம்
உள் நுழைவதை பார்த்தவுடன்
அவர்கள் முகத்திலோ ஒரு சோகம்!
இங்கு வந்தவுடன் தொலைபேசி அழைப்பு
ஏன் வாப்பா உள்ளே சென்ற தாங்கள்
திரும்பி வரவில்லை என்ற தேம்பல் அழுகை
என்ன சொல்லி சமாளிக்க!
நம் நெஞ்சோ சோகத்தால் கனக்க!
குடும்பத்தோடு சேர்ந்து வாழ வழி
இல்லையா என்று உள்ளம் கலங்க
என்ன செய்வோம் எத்தனை காலம்
இந்த அடிமை வாழ்க்கை!
நாம் பிடித்தது புலி வால் அல்லவா?

ஊருக்கு சென்று தொழில் வைக்கலாம்
எல்லோரும் சொல்லும் வார்த்தை!
சென்றவர்கள் சில காலம் கழித்து
மீண்டும் வளைகுடா வாழ்க்கையில்!
ஊரில் நிரந்தரமாகி விட வேண்டும்
என்ற உறுதி இவர்களைப் பார்த்தால்
குலைந்துவிட என்ன செய்ய
மீண்டும் மனப்போராட்டம்!

ஊரில் சிறு தொழில் வைக்காதே
பெரிதாக தொழில் தொடங்கு
ஆலோசனை இலவசம்!
பணத்தை எந்த மரத்தில் பறிக்க
காலம் இப்படியேதான் போகுமா?
குடும்பத்தோடு சேர்ந்து
வாழ்வது எப்பொழுது?


கல்வி இல்லாமல் வந்தவர்கள்
கஷ்டப்படும் நிலையை பார்த்து
கல்வியை கற்றுக்கொண்டு வா!
என்றார்கள், கல்வி கற்று வந்ததும்
நல்ல வேலை மனைவி மக்களுடன்
வாழ்க்கை சிலருக்கு!
கல்வி கற்ற பலர் தனிமரமாக!


ஊரில் கணக்கில்லா சொத்து
உள்ளவனை பார்த்து
ஏன் இங்கு வந்தாய் என்றால்
இங்கு உள்ள சுகாதாரம்
ஊரில் வருமா அதனால்தான் என்றான்?
இங்கு வந்து வாழும்
குடும்ப பெண்களிடம்
கேட்டால் ஊர் போல் வருமா
வளைகுடா என்றார்கள்!


நாம் இழந்தது என்ன?
தாய் தந்தை சேவையை!
குடும்பத்தின் சுக துக்கத்தை!
நம் உறவுகளின் அனுசரணையை!
தென்றல் வீசும் காற்றை!
மழலையின் வார்த்தையை!
மழையின் மண்வாசனையை!

பள்ளி விட்டு வந்ததும்
பள்ளியின் கதை சொல்ல
தந்தையை தேடும்
பிள்ளை செல்வங்களை!
தந்தையுடன் செல்லும்
பிள்ளைகளை பார்த்து
நம் தந்தை அருகில்
இல்லையே என்று வாடும்
நம் பிஞ்சுகள் இழக்கும் சந்தோஷத்தை!

வாகனத்தில் செல்லும்பொழுது
சாலைகளில் இருபுறமும்
பசுமை மரங்களோடு
சேர்ந்து வரும் தென்றலை!
இன்னும் நிறைய!
பணம் உண்டு இங்கு
நம் மனம் மட்டும் ஊரில்!
இயந்திரத்தனமாக தொடர்கிறது
புலிவாலை பிடித்த வாழ்க்கை!

-- அலாவுதீன். S

Post a Comment

45 Comments

Yasir said…
மனதை நெருடும் வரிகள், ஏதார்த்தம்,கோபம்,சந்தோசம்,வெறுப்பு,சிரிப்பு என அத்தனை சுவைகளையும் போட்டு...எங்கள் அனைவரின் மனதில் உள்ளதை அப்படியே எழுத்தில் கொண்டு வந்து இருக்கீறிர்கள்....அருமை காக்கா...வாலிபத்தை தொலைத்து விட்டு வாழ்க்கை முழுவதும் வருத்தப்பட்டு கொண்ட இருப்பது நம்மவர்களுக்கு பழகிவிட்டது
அலாவுதீன் காக்கா ! அற்புத(ம்) விளக்(கு)கம் ! அகம் ஆராய்ந்து ஆயிரம் அர்த்தங்கள் அள்ளித்தந்த ஆச்சர்யம் வியக்க வைக்கிறது வளைகுடா அதிரைப்பட்டினத்து மண்ணின் மைந்தனின் சாஸனமிது !
அலாவுதீன்,
மெளனமான அழுகையை மொழி பெயர்த்திருக்கிறாய்.

சுய பச்சாதாபமாக தப்பர்த்தம் கொள்வதிலிருந்து இந்த பாவப்பட்ட வாழ்க்கையைப் புரிய வைப்பது சற்று சிரமமே.

வளைகுடா வாழ்க்கையே கதி என்று ஆகிப்போன நம் போன்றோர் குளிர்காய்வது உன்போன்றோர் அப்பப்ப ஆறுதலாய் எழுதும் இதுபோன்ற அந்நியோநியமான கடிதங்களால்தான்.

இந்த வாழ்க்கை வசிப்பது கஷ்டம்தான் அனால் இதை வாசிப்பதோ இஷ்டமானது.

புறையோடிப் போனதால் நிவாரணம் இல்லை யெனினும் இந்த மருந்து நிச்சயம் ஒரு வலி நிவாரணி என்பதில் ஐயமில்லை.

நன்றி,
சகோதரர் அலாவுதீன்,

வெளிநாட்டு வாழ்க்கை ஒரு மாயை. பட்டது போது இனிவரும் நம் மக்கள் வாழும் நாட்டிலேயே கல்வி கற்று, வேலையையும் தேடி குடும்பத்துடன் வாழவேண்டும் என்ற தொலைக்கு பார்வையில் எழுதப்பட்ட விழிப்புணர்வாகவே இதை நாம் கருதவேண்டும்.

ஒரு நிமிடம் நாம் நம்மை சுய பரிசோதனை செய்து பார்க்கலாமே.

மேல் கல்வி, வேலை வாய்ப்பு விழிப்புணர்வு அதிரையில் நடத்துவதற்கான சிந்தனை நம்மில் பலருக்கு இருக்கும் இந்த நேரத்தில், நம்மை இன்னும் ஆழ்ந்து சிந்திக்க வைத்துள்ளது.

நம் நாட்டிலேயே கல்வி கற்று, நம் நாட்டிலேயே சம்பாத்திக்கும் மன பக்குவத்தை இன்றே நம் சிறு வயதினரிடம் உண்டாக்குவது காலத்தின் கட்டாயம். நமக்கு இருக்கும் உரிமையை நாம் பெற்று வழ முயல்வோம்.
crown said…
அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோ.அலாவுதீனின் கவிதை படித்த தாக்கம் நானும் அதுபோல் இயற்றிப்பார்த்தேன் உங்கள் அளவிற்கு இல்லாவிட்டாலும் என்னால் முடிந்தது.
***************

சபுராளிக்குயில் நாங்கள்
எங்கள் சோக ராகம். நாட்டில் வீட்டில் உள்ளோருக்கெல்லாம் ஆனந்த கீதம்.
நாங்கள் ஊமை கண்ட கணவு!
என்றாவது நாட்டிற்கும் வீட்டிற்கும் விஜயம் செய்யும் விருந்தாளிகள்.
நாட்டின் சுதந்திரத்திற்கு பாடுபட்டவர்கள் தியாகியென்றால் வீட்டினரின் சுதந்திரதிற்கும்,சுபிட்சத்திற்கும் பாடுபட்ட தியாகிகள்
நாங்கள் ,ஏமாளிகள்.
உங்களை சிரிக்க வைத்து உள்ளுக்குள் அழும் கோமாளிகள்.
crown said…
பிறக்க ஓர் இடம்!
பிழைக்க ஓர் இடம்!
இதுதான் என் சமுதாய
மக்களின் வாழ்வாகிவிட்டது!
---------------------------------------------------------------------
திருமணப்பெண்ணின் வாழ்கையும்,
வாழ்வாதர பயணிகளின் வாழ்கையும் ஒன்றே!
---------------------------------------------------------------------
நம் முன்னோர்களுக்கோ
பர்மா, ரங்கூன், மலேசியா!
எங்களுக்கோ வளைகுடா!
இனி ஓர் நாடு கண்டுபிடித்தால்
அங்கும் தொடருமா?
எங்கள் வாரிசுகள்?
---------------------------------------------------------------------
வளைகுடா! என்றேன்றும் எங்கள் மார்பில் பாய்ந்துகொண்டிருக்கும் கடா!
நம் வாரிசுகளுக்கு நாம் என்றோ நம் வாழ்வை பட்ட எழுதிவைத்துவிட்டோமே? நாமாவது அவர்களை விட்டோமா? அவர்களின் வாரிசுக்கு இந்த வாழ்கை வேண்டாமென்றாவது சொல்லிவைப்போம்.
புலியின் படத்தை நன்றாக கவனியுங்கள். புலியின்(வளைகுடா) வாலை நாம்தாம் பிடித்திருக்கிறோம். ஆனால் இங்கு புலி(வளைகுடா) தன்னை விட்டால் போதும் என்று நம்மிடமிருந்து தப்பிப்பது போல் தெரியவில்லையா!

அழகிய படங்களை வெளியிட்ட அதிரை நிருபருக்கு நன்றி! (புலி, குழந்தை, தனிமரம், பசுமை வெளி)
crown said…
வளைகுடா வசந்தம் என்றார்கள்!
முன்னால் கால் வைத்த
மூத்த குடி(அடிமை)மகன்கள் நாம்!
வைத்த காலை எடுக்க முடியவில்லை
ஸ்டெப் கட்டிங் தலையுடன் வந்த
எமக்கு இன்றோ நரையும், வழுக்கையும்!
சில்வர் ஜூப்ளி முடிந்து விட்டது
எம்முடைய பயணமோ
திக்குத்தெரியாமல்
வளைகுடாவை நோக்கியே!
---------------------------------------------------------------------
காலத்தின் பசிக்கு நம் இளமை உணவாகிவிட்டபின் ...
நம்மை சார்ந்தவர்களின் பசிக்கு,
நம் மொத்த வாழ்கையும் உணவாகிபோய்-
நமக்கென்றவாழ்வு கணவாகிவிட்டது.
தேவையேன்கிற திருடன் நம்மை மொத்தமாய் களவாடி போய்விடுகிறான் எஞ்சியது சிறிது மிஞ்கிய வாழ்கையே,
அதுவும் இறுதி ஊர்வலத்திற்காகவும்.....
இடுகாட்டிற்காகவும்.......
crown said…
ஊர் சென்றால் நம்
சுமைகளை சுமந்து செல்வதில்
அலாதி ஆனந்தம் நம்
கையெல்லாம் சிவக்க சுமப்போம்
அடுத்த தடவை சுதந்திரபறவைதான்
ஒரே சுமைதான்! நம் வைராக்கியம்
காற்றோடு போகும்! மீண்டும் சுமை!
--------------------------------------
தேவையின் பயணஙகள் முடிவதில்லை அதனால் நம் பயணம் தொடரும் வாழ்கைப் பயணம் முடியும் வரை!
தூத்துக்குடியை சேர்ந்த நண்பர் (அப்துல் காதர் ஜெய்லானி) சொன்ன கருத்து: இந்த கவிதை ஆக்கத்தை நாம் மட்டும் படித்தால் போதாது. வளைகுடா சகோதரர்கள் வீட்டிற்கும் (பெண்கள் அவசியம் படிக்க வேண்டும்) நோட்டீஸ் வடிவில் செல்ல வேண்டும் என்று சொன்னார். மேலும் இதற்கெல்லாம் தீர்வு என்ன என்பதை யோசித்தீர்களா? என்றார்.
crown said…
மனைவி மக்களை பார்த்தால்......
***************
கண்ணீரோடு குடும்பத்தை
பிரிந்த நாம் சொல்வது
இரண்டு வருடம்தான்!
முடித்து விட்டு போய்விடுவோம்
பல பிரச்சனைகளில்
மறந்தே விடுவோம்!
இதுதான் தொடர்கதையான
வளைகுடா வாழ்க்கை!
------------------------------------------------------------------
நிழலைப்பார்த்து (சினிமா, நாடகம்)அழும் சொந்தங்கள் ' நிசத்தினின்( நம் )கண்ணீரைப்பார்த்து அழுவதில்லை என்பதே நிசம்(சிலர் வாழ்வில் விதிவிலக்கு)எதார்த்தம்,சோகம்.
crown said…
சகோதரிகள் திருமணம் முடித்து........
********
சகோதரி! நம் வாழ்வில் பின்னி படர்ந்த நையப்பட்ட தரி! நம் வாழ்வில் கேள்விக்குறி!(பாவம் அவங்க என்ன செய்வாங்க) நம்மை அடிமை சங்கிலி போட காரணமான பொறி(வலை) நிற்காமல் ,சபுராளியாகி ஓடும் பரி நாம் அதில் அவளை வைத்து, நம்மிடம் பறி,பறி யென குறியாய் அலையும் கூட்டத்தின் துருப்புசீட்டு... நம் ரத்த பாசத்தின் பலவீனம்,மாமியார் வீட்டில் மாட்டிக்கொண்ட திருமணமூலம் கடத்தப்பட்ட பணைய கைதி(ஆயுள் கைதி நாம்)
சகோ. யாசிர்: அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) //// எங்கள் அனைவரின் மனதில் உள்ளதை அப்படியே எழுத்தில் கொண்டு வந்து இருக்கீறிர்கள்.... வாலிபத்தை தொலைத்து விட்டு வாழ்க்கை முழுவதும் வருத்தப்பட்டு கொண்டு இருப்பது நம்மவர்களுக்கு பழகிவிட்டது. ////
******************************************************************
வாழ்க்கை முழுவதும் வருத்தப்படுவது பழகி விட்டது என்றால் நாம் கடைசிப்பயணம் வரை வளைகுடாதானா? என்ன தீர்வு? நாம் என்ன முயற்சி செய்யப்போகிறோம் ஊரோடு வாழ்வதற்கு. சிந்தித்து செயல் ஆற்ற சகோதரர்கள் முயற்சி செய்ய வேண்டாமா? என்ன செய்ய வேண்டும் என்பதை கலந்துரையாடலாமே? அல்லாஹ்வின் அருளால் வழி கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்.
crown said…
நாம் இழந்தது என்ன?
தாய் தந்தை சேவையை!
குடும்பத்தின் சுக துக்கத்தை!
நம் உறவுகளின் அனுசரணையை!
தென்றல் வீசும் காற்றை!
மழலையின் வார்த்தையை!
மழையின் மண்வாசனையை!
--------------------------------------------------------------------
மொத்தத்தில் வாழ்வின் பெரும்....பகுதியை இழந்து விடுகிறோம்.அக்கரைக்கு இக்கரை பச்சை நம் சமுதாயத்துக்கு நம்மேல் அக்கரை இல்லாததால்.
crown said…
அஸ்ஸலாமு அலைக்கும் தீர்வுகள் பற்றி கருதிடச்சொன்ன சகோ.அலாவுதீனின் யோசனையை பரீசிலிக்களாமே
Shameed said…
நாம் வளைகுடா வந்து பொருளாதாரம் வேண்டுமானால் வளர்ந்து இருக்கலாம் நம் வாழ்க்கை பிணைப்புக்கள் வளைந்து போனது என்னோவோ மறுக்க முடியாத உண்மை,
சகோ. அபுஇபுறாஹிம்: அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

/////அலாவுதீன் காக்கா ! அற்புத(ம்) விளக்(கு)கம் ! அகம் ஆராய்ந்து ஆயிரம் அர்த்தங்கள் அள்ளித்தந்த ஆச்சர்யம் வியக்க வைக்கிறது வளைகுடா அதிரைப்பட்டினத்து மண்ணின் மைந்தனின் சாஸனமிது ! /////
தங்களின் கருத்திற்கு நன்றி! தங்களின் கருத்து முழுமை பெறவில்லை. தங்களுக்கு தெரிந்த கருத்தை நம்பிக்கையுடன் தீர்வாக வைத்தால் நன்றாக இருக்கும். நம் சகோதரர்கள் அனைவருக்கும் பலனளிக்கும் வகையில்.
சகோ. சபீர்: அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)/// புறையோடிப் போனதால் நிவாரணம் இல்லை யெனினும் இந்த மருந்து நிச்சயம் ஒரு வலி நிவாரணி என்பதில் ஐயமில்லை.////

தங்களின் கருத்திற்கு நன்றி! சிந்தனை அதிகம் உள்ளவர்கள் நிவாரணம் இல்லை என்று சொல்லி ஒதுங்கி விடக்கூடாது. எனக்கும் நம் சகோதரர்கள் அனைவருக்கும் பலனளிக்கும் வகையில் நல்ல தீர்வை கருத்தாக பதிய வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். உடனே நடக்காது என்றாலும் தாமதமாக பலனளிக்கலாம் இல்லையா. இன்ஷாஅல்லாஹ்.
சகோ. தாஜு தீன் : அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) ///பட்டது போதும் இனிவரும் நம் மக்கள் வாழும் நாட்டிலேயே கல்வி கற்று, வேலையையும் தேடி குடும்பத்துடன் வாழவேண்டும். ஒரு நிமிடம் நாம் நம்மை சுய பரிசோதனை செய்து பார்க்கலாமே. நம் நாட்டிலேயே கல்வி கற்று, நம் நாட்டிலேயே சம்பாத்திக்கும் மன பக்குவத்தை இன்றே நம் சிறு வயதினரிடம் உண்டாக்குவது காலத்தின் கட்டாயம். நமக்கு இருக்கும் உரிமையை நாம் பெற்று வழ முயல்வோம்.///

தங்களின் கருத்திற்கு நன்றி! நம் வாரிசுகளுக்காக மட்டும் சிந்திக்காமல் நமக்கும் சேர்த்து சிந்தித்து. தங்களின் கருத்தை தீர்வாக அனைவருக்கும் பலனளிக்கும் வகையில் பதியுமாறு கேட்டுக்கொள்கிறேன். தொலைநோக்கு பார்வைதான். வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும்.
சகோ. தஸ்தகீர் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) தங்களின் பதில் கருத்தை பல பதிவாக வெளியிட்டதிற்கு நன்றி!
//// தீர்வுகள் பற்றி கருத்திடச்சொன்ன சகோ.அலாவுதீனின் யோசனையை பரீசிலிக்களாமே ////

நம் சகோதரர்கள் அனைவரும் ஆதங்கத்தை வெளியிட்டார்கள் தீர்வு என்ன என்பதை தெரியப்படுத்தவில்லை. தங்களுக்கு தெரிந்த தீர்வை வெளியிடுங்கள்.
அனைத்து சகோதரர்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

தீர்வு என்ன என்று எல்லோரும் கேட்கிறார்கள். தீர்வை சரியாக சொல்ல முடியவில்லை (என்னையும் சேர்த்து) படித்தவர்கள், படிக்காதவர்கள் தொழில் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் பலதரப்பட்ட சகோதரர்கள் இருக்கிறார்கள். அனைவருக்கும் பலதரப்பட்ட பிரச்சனைகள், லட்சியங்கள் இருக்கிறது. ஆனால் எல்லோருக்கும் நிரந்தரமாக ஊரில் தங்கி விட வேண்டும் என்பதில் மட்டும் மாற்றுக் கருத்தில்லை.

இதற்கு என்ன வழி. நம் சகோதரர்களில் நிறைய சிந்தனைவாதிகள் இருப்பீர்கள் சிந்தியுங்கள். தீர்வையே சாதக பாதகங்களோடு ஆய்வு கட்டுரையாக வெளியிடலாம். இளைஞர்கள் இருக்கிறீர்கள், அறிவில் முதிர்ந்தவர்கள் இருக்கிறீர்கள்.

சிந்திக்காமல் இருப்பதை விட சிந்திப்பது மேல் அல்லவா? நாளையே சிந்தித்து நாளை மறுநாள் செயல்படும் திட்டம் இல்லை. திட்டங்கள் ஏன் 5ஆண்டு திட்டம் 10ஆண்டு திட்டங்கள் என்று வெளிவருகிறது.

பல ஆண்டுகளுக்கு முன் பிற மத சகோதரர் வளைகுடா வந்தார். அவர் சொன்னது எப்படி குடும்பத்தை பிரிந்து இருக்கிறீர்கள். நான் 2வருடத்திற்கு மேல் இருக்கமாட்டேன் என்று சொன்னார். சொன்னபடி தொழில் வைக்க முதலீடு சேர்த்துக்கொண்டு போய்விட்டார்.

(என்ன நம்மை போல் அவர்களுக்கு பிரமாண்டமான செலவுகள் திருமணம் வீடு இவையெல்லாம் அவர்களுக்கு இருக்காது).

எந்தக் கருத்தாக இருந்தாலும் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒரு பில்கேட்ஸ்தான் கம்யூட்டர் கண்டுபிடித்தார். அதுபோல் நம்மில் ஒரு ஜீனியஸ் சகோதரர் நல்ல தீர்வை தரலாம் அல்லாஹ்வின் அருளால்.இன்ஷாஅல்லாஹ்.
crown said…
அஸ்ஸலாமு அலைக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு,பல யோசனைகள் இருக்கும் அதை பகிர்ந்து கொண்டால் தீர்வுக்கான முடிச்சி தென்படும். எனக்குத்தெரிந்து நம் சகோதர்களோ,பிள்ளைகளே நன்கு படிக்க அவர்கள் விருப்பத்திற்கு விட்டுவிடவேண்டும் தினம் கலந்தாலோசிக்கவேண்டும்(இப்பவெல்லம் தோனும் நேரம் தொடர்புகொள்ள வசதிகள் வந்து விட்டது)படித்தபின் ஏதும் தொழில் முனைய விரும்பினால் நன்கு ஆலோசிது அவரிகளின்கருத்துக்கு பக்க பலமாக இருந்து அவர்கள் சொந்தத்தொழில் தொடங அவர்களுக்கு உதவவும் நம் வாழ்கைத்தான் இப்படியே கழிந்து விட்டது அவர்களாவது முயலட்டுமே என்று முதலில் பெருந்தன்மை வேண்டும் எந்த ஒரு ஹலாலான தொழிழுக்கும் உருதுனையாக இருந்து உதவினால் நல்ல மாற்றம் வர ஏதுவாகும்.சொந்தமா சிந்திக்க
அனுமதிக்கனும்,தூண்டனும்,உற்சாகப்படுத்தனும் எல்லாத்துலையும் மூக்கை நுழைக்கக்கூடாது.
சகோ. அபுஇபுறாஹிம்: அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)///அகம் ஆராய்ந்து ஆயிரம் அர்த்தங்கள் அள்ளித்தந்த ஆச்சர்யம் வியக்க வைக்கிறது வளைகுடா அதிரைப்பட்டினத்து மண்ணின் மைந்தனின் சாஸனமிது ! /////
தங்களின் கருத்திற்கு நன்றி! தங்களுக்கு தெரிந்த கருத்தை சகோதரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தொலைநோக்கு பார்வையில் நம்பிக்கையுடன் பதிந்தால் சகோதரர்களுக்கு பலனளிக்கும்.இன்ஷாஅல்லாஹ்.
வளைகுடா வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக சாபம் என்று சாடுவதில் எனக்கு உடன்பாடில்லை. எனவேதான் சுய பச்சாதாபம் வேண்டாம் என்பதை கோடிட்டுக் காடினேன்.

நேரம் கிடைத்தால் விளக்கமாக விவாதிக்கலாம். எனினும் கீழ்க்கண்ட குறிப்புகளை சற்று கவனிக்கவும்.

திரைகடலோடியும் திரவியம் தேடச்சொன்னது தவறா?

ஒன்றுக்கும் உதவாதவன் என முத்திரை குத்தப்பட்ட நம் சமுதாய இளைஞர்கள் பலர் வளைகுடாவில் உழைத்து உருப்படவில்லையா?

படிக்காதவன் எந்த ஊரிலும் ஒன்றும் பெரிதாக சாதித்துவிட முடியாது? (விதிவிலக்குகள் எதிலும் உண்டு.)

படிக்காமல் படம் பார்க்கப்போவது உழைக்காமல் ஊர் சுற்றுவது என்று இருந்துவிட்டு வீட்டில் வம்பு செய்து காசு பறித்து காலித்தனம் செய்வது, இங்கு வந்து வாழ்க்கை தண்டிக்கும்போது சுய பச்சாதாபம் கொள்வது என்ன நியாயம்?

கஞ்சியோ கூழோ ஊரிலேயே ஒண்ணா இருந்துடுவோம் என்ற வியாக்கியானம் வாழ்க்கையில் முன்னேற விடுமா?

எல்லா ஏற்றத்தாழ்வுகளும் ஏதோ ஒரு புள்ளியில் தமக்குத் தாமே சமன் செய்து கொள்வதாகவே நான் காண்கிறேன்.  படைத்தவனுக்குத் தெறியும் படைப்பின் நோக்கம்.தாகம் எனில் மழைக்கு காத்திராமல் நீர்நிலை நாடிசெல்வதே உசிதம்.
சகோ. சபீர் : /// வளைகுடா வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக சாபம் என்று சாடுவதில் எனக்கு உடன்பாடில்லை. எனவேதான் சுய பச்சாதாபம் வேண்டாம் என்பதை கோடிட்டுக் காடினேன்.///

வளைகுடா வாழ்க்கையை நாம் சாபம் என்று சாட முடியாது. காரணம் நம் முன்னோர்கள் அடைய முடியாத பொருளாதார தன்னிறைவை நிறைய பேருக்கு தர வளைகுடாவை செல்வம் கொழிக்கும் பூமியாக மாற்றியது வல்ல அல்லாஹ்தான். வல்ல அல்லாஹ்வின் மிகப்பெரும் கருணையால்தான் இந்த வளைகுடா மூலம் பல வளங்களை நம் யாவருக்கும் அல்லாஹ் தந்தான்.
*************************************************************************
/// திரைகடலோடியும் திரவியம் தேடச்சொன்னது தவறா? ///

திரைகடலோடியும் திரவியம் தேடச்சொன்னது தவறு கிடையாது. நாம் இந்தியாவில் இருந்து எந்த பொருள் தயாரித்தாலும் உலக நாட்டை மையப்படுத்திதான் தயாரிக்கவேண்டும. வெளிநாட்டு ஏற்றுமதி மூலம் தொழில் முனைவோர் லாபம் அடைந்து வருகிறார்கள். ஆனால் நம்முடைய இலக்குதான் இதில் வரையறுக்கப்படவில்லை.
*************************************************************************

/// ஒன்றுக்கும் உதவாதவன் என முத்திரை குத்தப்பட்ட நம் சமுதாய இளைஞர்கள் பலர் வளைகுடாவில் உழைத்து உருப்படவில்லையா? ///

நம் சமுதாய இளைஞர்கள் வளைகுடா சென்ற பிறகுதான் நல்ல அறிவை பெற்றார்கள். மார்க்கத்தை நன்கு அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. தொழுகையை கடைபிடிக்க நல்ல வாய்ப்புகள் கிடைத்தது. லட்சியங்களை மனதில் வைத்து உழைத்து தன் குடும்பங்களை முன்னேற்றி இருக்கிறார்கள். இதிலும் நாம் குறை காண முடியாது. வளைகுடா நமக்கு சாபமாக இல்லை பூரணமாக ஒப்புக்கொள்கிறேன்.
*************************************************************************

/// படிக்காதவன் எந்த ஊரிலும் ஒன்றும் பெரிதாக சாதித்துவிட முடியாது? (விதிவிலக்குகள் எதிலும் உண்டு.) ///

படிக்காதவன் எந்த ஊரிலும் ஒன்றும் பெரிதாக சாதிக்க முடியாது விதிவிலக்கு இருக்கலாம் என்பது உண்மைதான். நிறையபேருக்கு ஏழ்மையே தடையாக இருந்து படிக்க முடியாமல் போனதற்கு என்ன செய்ய. (வல்ல அல்லாஹ்வின் நாட்டத்தில் நன்மை இருக்கும்).

*************************************************************************
/// படிக்காமல் படம் பார்க்கப்போவது உழைக்காமல் ஊர் சுற்றுவது என்று இருந்துவிட்டு வீட்டில் வம்பு செய்து காசு பறித்து காலித்தனம் செய்வது, இங்கு வந்து வாழ்க்கை தண்டிக்கும்போது சுய பச்சாதாபம் கொள்வது என்ன நியாயம்? ///

எதிர்காலத்தை பற்றி எந்த திட்டமும் இல்லாமல் ஊரில் வெட்டியாக ஊர்சுற்றியவர்கள் சில பேர் கஷ்டப்படவும், சிலபேர் நன்றாக இருக்கவும் செய்கிறார்கள். ஆனால் பலபேர் இன்னும் ஊரில் இருந்தது போல் தங்களின் செயல்களை மாற்றிக்கொள்ளாமல் இருந்து வருகிறார்கள். ஊரில் வம்பு செய்தவர்கள் நிறையபேருக்கு வளைகுடா நல்ல பாடத்தை தந்து நல்லவர்களாக மாற்றிய வகையில் சாபம் இல்லை என்பது உண்மைதான்.
சகோ. சபீர் : /// வளைகுடா வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக சாபம் என்று சாடுவதில் எனக்கு உடன்பாடில்லை. எனவேதான் சுய பச்சாதாபம் வேண்டாம் என்பதை கோடிட்டுக் காடினேன்.///

வளைகுடா வாழ்க்கையை நாம் சாபம் என்று சாட முடியாது. காரணம் நம் முன்னோர்கள் அடைய முடியாத பொருளாதார தன்னிறைவை நிறைய பேருக்கு தர வளைகுடாவை செல்வம் கொழிக்கும் பூமியாக மாற்றியது வல்ல அல்லாஹ்தான். வல்ல அல்லாஹ்வின் மிகப்பெரும் கருணையால்தான் இந்த வளைகுடா மூலம் பல வளங்களை நம் யாவருக்கும் அல்லாஹ் தந்தான்.
*************************************************************************
/// திரைகடலோடியும் திரவியம் தேடச்சொன்னது தவறா? ///

திரைகடலோடியும் திரவியம் தேடச்சொன்னது தவறு கிடையாது. நாம் இந்தியாவில் இருந்து எந்த பொருள் தயாரித்தாலும் உலக நாட்டை மையப்படுத்திதான் தயாரிக்கவேண்டும. வெளிநாட்டு ஏற்றுமதி மூலம் தொழில் முனைவோர் லாபம் அடைந்து வருகிறார்கள். ஆனால் நம்முடைய இலக்குதான் இதில் வரையறுக்கப்படவில்லை.
*************************************************************************

/// ஒன்றுக்கும் உதவாதவன் என முத்திரை குத்தப்பட்ட நம் சமுதாய இளைஞர்கள் பலர் வளைகுடாவில் உழைத்து உருப்படவில்லையா? ///

நம் சமுதாய இளைஞர்கள் வளைகுடா சென்ற பிறகுதான் நல்ல அறிவை பெற்றார்கள். மார்க்கத்தை நன்கு அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. தொழுகையை கடைபிடிக்க நல்ல வாய்ப்புகள் கிடைத்தது. லட்சியங்களை மனதில் வைத்து உழைத்து தன் குடும்பங்களை முன்னேற்றி இருக்கிறார்கள். இதிலும் நாம் குறை காண முடியாது. வளைகுடா நமக்கு சாபமாக இல்லை பூரணமாக ஒப்புக்கொள்கிறேன்.
*************************************************************************

/// படிக்காதவன் எந்த ஊரிலும் ஒன்றும் பெரிதாக சாதித்துவிட முடியாது? (விதிவிலக்குகள் எதிலும் உண்டு.) ///

படிக்காதவன் எந்த ஊரிலும் ஒன்றும் பெரிதாக சாதிக்க முடியாது விதிவிலக்கு இருக்கலாம் என்பது உண்மைதான். நிறையபேருக்கு ஏழ்மையே தடையாக இருந்து படிக்க முடியாமல் போனதற்கு என்ன செய்ய. (வல்ல அல்லாஹ்வின் நாட்டத்தில் நன்மை இருக்கும்).

*************************************************************************
/// படிக்காமல் படம் பார்க்கப்போவது உழைக்காமல் ஊர் சுற்றுவது என்று இருந்துவிட்டு வீட்டில் வம்பு செய்து காசு பறித்து காலித்தனம் செய்வது, இங்கு வந்து வாழ்க்கை தண்டிக்கும்போது சுய பச்சாதாபம் கொள்வது என்ன நியாயம்? ///

எதிர்காலத்தை பற்றி எந்த திட்டமும் இல்லாமல் ஊரில் வெட்டியாக ஊர்சுற்றியவர்கள் சில பேர் கஷ்டப்படவும், சிலபேர் நன்றாக இருக்கவும் செய்கிறார்கள். ஆனால் பலபேர் இன்னும் ஊரில் இருந்தது போல் தங்களின் செயல்களை மாற்றிக்கொள்ளாமல் இருந்து வருகிறார்கள். ஊரில் வம்பு செய்தவர்கள் நிறையபேருக்கு வளைகுடா நல்ல பாடத்தை தந்து நல்லவர்களாக மாற்றிய வகையில் சாபம் இல்லை என்பது உண்மைதான்.
/// கஞ்சியோ கூழோ ஊரிலேயே ஒண்ணா இருந்துடுவோம் என்ற வியாக்கியானம் வாழ்க்கையில் முன்னேற விடுமா? ///

கஞ்சியோ கூழோ என்று வாழ்க்கையில் முன்னேற முயற்சி செய்யாமல் இருப்பது எப்படி முன்னேற்றம் ஏற்படும். இரண்டாந்தர குடிமக்களாக நாம் (இந்தியாவிலும், வளைகுடாவிலும்) இருந்து வருகிறோம். நம் முன்னேற்றம் எப்படி இருக்க வேண்டும் என்பதும் சிந்திக்கபட வேண்டியதுதான்.

*************************************************************************

/// எல்லா ஏற்றத்தாழ்வுகளும் ஏதோ ஒரு புள்ளியில் தமக்குத் தாமே சமன் செய்து கொள்வதாகவே நான் காண்கிறேன். படைத்தவனுக்குத் தெறியும் படைப்பின் நோக்கம்.தாகம் எனில் மழைக்கு காத்திராமல் நீர்நிலை நாடிசெல்வதே உசிதம். ///

வல்ல அல்லாஹ் ஏற்றத்தாழ்வுகளை படைத்திருப்பது நன்மைக்குத்தான். இந்த உலகில் ஏற்றத்தாழ்வு இருப்பதால்தான். சீராக இயங்கிக்கொண்டு இருக்கிறது. ஒருவரை ஒருவர் சார்ந்து ஏழை, பணக்காரன், வைத்தியன், வியாபாரி, வாங்குபவர், விற்பவர், முதலாளி, தொழிலாளி என்று பொருளாதாரத்தை வல்ல அல்லாஹ் எல்லோரிடமும் சுழல விட்டுக்கொண்டு இருக்கிறான். ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பதுதன் மூலம் உலகம் இயங்க போதுமானதாக வல்ல அல்லாஹ் படைத்திருக்கிறான்.

மழைக்கு காத்திராமல் நீர்நிலை நாடிச்செல்வது அறிவார்ந்த செயல்தான் தவறு ஒன்றும் இல்லை.

வளைகுடா மூலம் பல நன்மைகளை அடைந்திருக்கிறோம். நன்மைகளை பெற்றுக்கொள்ள நிறைய இழந்திருக்கிறோம். ஒன்றை இழந்தால்தான் ஒன்று கிடைக்கும் என்ற நியதிப்படி.
இதுதான் தியாகம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோம். சுயபச்சாதாபம் வேண்டாம் நாம் தியாகம் , சுயநலம் என்று எந்தப்பெயரிலும் சொல்லிக்கொள்ளலாம்.

ஆரம்ப காலம் நம் சமுதாயம் எல்லாவற்றிலும் தாழ்ந்து போய் கிடந்தது. வல்ல அல்லாஹ்வின் அருளால் தற்பொழுது எழுந்து நடமாடிக்கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் இப்படியேதான் வாழ்க்கை போய்க்கொண்டு இருக்க வேண்டுமா? மாற்றம் ஏற்பட வேண்டாமா? எல்லாவற்றிற்கும் தீர்வு என்ற ஒன்று இருக்கும். நல்ல தீர்வை நோக்கி திட்டமிட்டு செயல்படக்கூடாதா? என்பதே என்னுடைய ஆதங்கம்.
வளைகுடா அதிரைப்பட்டினத்து மண்ணின் மைந்தனின் சாஸனமிது ! என்று சொன்னதன் காரணம் அனுபவம் பேசியது என்று உங்களையோ என்னையோ கைகாட்டி விட்டுச் சொன்றுவிட முடியாது, ஏனென்றால் இங்கே ஒவ்வொருவரும் எதாவது ஒருவகையில் அங்கமாக இருக்கிறோம்.

சொன்னவைகள் சில ஆனால் சொல்லப்படாமல், சொல்லமுடியாமல் இருப்பவைகள் ஏராளம்.

வளைகுடாவிற்கு வந்ததற்கு காரண காரியங்கள் ஆயிரமிருப்பினும், பெரும்பாலோருக்கு அதிமுக்கியமாக பொருளாதாரத் தேவைகள், நிர்பந்தம், மனக்கசப்பு, தலைமறைவு, சுமைக்கான பொறுப்புனர்வு, பொறுப்பிலிரிந்து தப்பிக்க, தலையனையுனுடே கண்ட ஓவியத்திற்கு காவியம் படைக்க இன்னும் ஏராளமாகச் சொல்லலாம்.

வளைகுடாவில் எது எப்படியிருந்தாலும் காற்றுல்ல போதே தூற்றிக் கொள் என்பதற்கினங்க பயனடைந்தவர்களும் ஏராளம், பலனின்றி சின்னபின்னாமாகி பட்டுப் போனவர்களும் ஏராளம்.

இழந்தவைகள் எண்ணிடங்காது ! இருப்பினும் உழைப்பில் எடுத்த செல்வங்களை அதிரைப்பட்டினத்தின் கள்ளிலும் மண்ணிலும் முடங்கியதும் ஏராளம்.

ரொம்ப சிம்பிள் : கிடைத்ததை / இருப்பதைக் கொண்டு மானமுடன் வாழமுடியும் என்றும் வாழ்ந்து காட்டும் நம்மூரில் எத்தனையோ நல்லவர்களை இன்றும் கண்முன்னால் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம் அவர்கள்தான் வெற்றியாளர்கள் (அதிரைப்பட்டினத்தைப் பொறுத்தவரை).
புலி வாலை புடித்த வாழ்க்கை இதே நிலையிலேயே தொடரும் புலி செத்தாலும்...

அருமை சகோதரா
//தங்களின் கருத்திற்கு நன்றி! நம் வாரிசுகளுக்காக மட்டும் சிந்திக்காமல் நமக்கும் சேர்த்து சிந்தித்து. தங்களின் கருத்தை தீர்வாக அனைவருக்கும் பலனளிக்கும் வகையில் பதியுமாறு கேட்டுக்கொள்கிறேன். தொலைநோக்கு பார்வைதான்.//

சகோதரர் அலாவுதீன் அவர்கள் கேட்டுக்கொண்டதால் என்னுடைய கருத்தை இங்கு பதிகிறேன்.

நம் சமுதாயத்து மக்களுக்காக கல்வி, மேல் கல்வி, அரசு வேலை தனியார் வேலை, போன்றவைகளில் சரியான விழிப்புணர்வு, வழிகாட்டுதல் தமிழக அளவில் எடுத்துக்கொண்டு பார்த்தால்.... பதில்: இல்லை என்று தான் வரும்.

இன்னும் 'பழைய குருடி கதவை திறடி' கதையாகத் தான் போகிறது. 'பூனைக்கு யார் மணிக்கட்டுவது' என்று கேள்வி மட்டும் கேட்டுவிட்டு சிலர் ஆங்காங்கே பேச்சோடு தப்பித்து விடுகிறார்கள்.

கொடுமையிலும் கொடுமை நம் சமுதாயம் கல்வியிலும் மற்றும் அரசு, தனியார் வேலை வாய்ப்புகளிலும் முன்னேற்றமடையாமல் இருப்பதற்கு காரணம் கொள்கைகளால் பல இயக்கங்கள் கூறு போட்டு தாங்கள் தான் உண்மையாளர்கள் என்ற மிதப்பில் தனித் தனியாக செயல்படுவதும் என்பது என் கருத்து. இதில் இந்த இயக்கமும் விதிவிலக்கல்ல. (யார் சொர்க்கவாசிகள் என்பதை அல்லாஹ் மட்டும் தான் தீர்மானிப்பான்).

இட ஒதுக்கீடு என்று முஸ்லீம்களுக்கு சதவீதம் பெறுவதில் இருந்த வேகமும், விவேகமும் இயக்கங்களுக்கு நம் சமுதாயத்திற்கு தேவையான கல்வி,அரசு தனியார் வேலை வாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வு, வழிகாட்டுதல்கள் பெரிதாக அதிக அளவில் முஸ்லீம் ஊர்களில் நடத்தப்படுகிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அப்படியே நடந்தாலும் அது ஒரு புகழ்பாடி மற்றும் விளம்பர யுக்திக்கு பயண்படும் ஒரு நிகழ்ச்சியாகவே அநேகம் நடந்து முடிகிறது. ஊரூப்பட்ட இயக்கங்கள் இருப்பதற்கு வெளிநாட்டுவாசிகளும் சில வகையில் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

---------

இது போன்ற ஆக்கங்களை நம் ஊர் மக்களிடம் எடுத்துச்செல்ல வேண்டும், குறிப்பாக நம் பெண் மக்களிடம். நாம் முன்பு சொன்னது போல் நோட்டீஸ் வடிவில். இது அதிக அளவில் பெரிய மாற்றம் ஏற்படுத்தாவிட்டாலும், குறைந்த பட்ச மாற்றம் நிச்சயம் இருக்கும். (ஒரு காலத்தில் இது போன்ற பொதுவான நோட்டீஸ் விழிப்புணர்வுகள் நம்மூரில் இருந்தது என்பது உண்மை, ஆனால் இப்போது அதிகம் இல்லை. அப்படி ஏதாவது இயக்க பேனரில் வரும் நல்ல விழிப்புணர்வு நோட்டீஸாக இருந்தாலும் அதற்கு மரியாதை அந்த இயக்கத்தவரிடம் மட்டுமே உள்ளது. இது தான் வேதனை.)


மார்க்கத்தை முழுமையாக அதன் தூயவடிவில் அனைவரும் அறிந்துக்கொள்ள ஒரு காலத்தில் நடைப்பெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் (இக்கால இயக்கங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் அல்ல) அடிக்கடி நடைப்பெற வேண்டும். இது மிகப்பெரிய சவால் என்றாலும் கருத்துவேறுபாடுகளை கலைந்து, சுய நலன்களை தூக்கி எறிந்து ஒரு காலத்தில் ஒன்றாய் இருந்த இயக்கங்கள் ஒன்றினைந்து செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியம். சைத்தானின் சூழ்ச்சி பல ரூபங்களில் சுற்றித்திறியும் இந்த கேடுகெட்ட உலகத்தில் உண்மை மார்க்கம் நம் மக்களிடம் தெளிவாகிவிட்டால் இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கும் சமூக அவலங்கள் (வரதட்சனை, பெண்ணுக்கு வீடு, போட்டி பொறாமையால் ஏற்படும் அனாவசிய செலவுகள்) குறையும், இவைகளால் ஏற்படும் அளவுக்கு அதிகமான பெருளாதார எதிர்ப்பார்ப்பு அனைத்தும் நம் மக்களிடம் குறையும். நிச்சயம் வெளி நாட்டு மோகம் குறையும்.

ஒவ்வொரு முஸ்லீம்கள் ஊர்களிலும் ஆண்டுக்கு இரண்டு முறை கல்வி, மேல் கல்வி, தனியார் வேலை, அரசு வேலை போன்றவைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முறையாக சேவை நோக்கதில் நடத்தப்பட வேண்டும். தான் பிள்ளை படிக்கும் படிப்பு என்ன என்பதையும் அது நம் நாட்டிலும் நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை பெற்றோர்களுக்கு ஏற்படும், இவைகளால் நிச்சயம் வெளிநாட்டு மோகம் குறையும்.


- இஸ்லாத்தை முழுமையாக அறிந்துக்கொள்வதும்.
- முறையான வழிகாட்டுதலில் கற்கப்படும் கல்வியும். வேலை வாய்ப்பு வழிகாட்டுதல்கள்
- இறுதியாக எல்லாவற்றிர்க்கும் மேல் சமுதாய ஒற்றுமை.

வளைகுடா மோகம் குறைய மேல் சொன்னவைகள் பயன் தரும் என்பது என் தனிப்பட்ட கருத்து. இதில் மாற்றுக் கருத்து இருந்தால் பின்னூட்டமிடலாம்.

இன்றைய காலச்சூழ்நிலையில் மேல் சொன்னவைகள் சாத்தியமா? அல்லாஹ்விடம் துஆ செய்துவிட்டு நம்பிக்கையோடு நம்மால் நம் சமுதாய மக்களுக்கு கூட்டாக நன்மைகள் செய்ய முயற்சி செய்வோம். அல்லாஹ் துனையிருப்பான்.

அஸ்ஸலாமு அலைக்கும்
ZAKIR HUSSAIN said…
ஏது நீங்கள் இருவரும் கருத்து பரிமாறுவதில் எனக்கு ஆர்டிக்கிள் எழுத நிறைய விசயம் கிடைக்கிறதே....அலாவுதீன் சொன்ன தீர்வும், சபீர் சொன்ன ஞாயமும்..பொதுவாக இருக்கும் இடத்தில் வெறுப்புடன் இருந்தால் நமது செயல்பாடுகள் பாதிக்கப்படும். நாளடைவில் மொபைல் போன் அடித்தாலே உங்கள் ரத்த அழுத்த அளவுகள் வேறுபடும். பிறகு அன்பாக விசாரிக்கும் மனைவியும் ஆத்திரம் உண்டாக்கும் கருவியாகி, நம் பெயருக்குமுன்னால் இனிசியலுக்கு பதில் "ஜனாப் டென்ஷன்.....................' என்று பெயர் எழுதி கல்யாணப்பத்திரிக்கையையெ நமக்கு அனுப்பிவிடுவார்கள்.
// நாளடைவில் மொபைல் போன் அடித்தாலே உங்கள் ரத்த அழுத்த அளவுகள் வேறுபடும். பிறகு அன்பாக விசாரிக்கும் மனைவியும் ஆத்திரம் உண்டாக்கும் கருவியாகி, நம் பெயருக்குமுன்னால் இனிசியலுக்கு பதில் "ஜனாப் டென்ஷன்.....................' என்று பெயர் எழுதி கல்யாணப்பத்திரிக்கையையெ நமக்கு அனுப்பிவிடுவார்கள்.//

it's superb comment ! ஜாஹிர் காக்கா உங்களால் மட்டுமே இப்படி...
ZAKIR HUSSAIN said…
//ஊரில் கணக்கில்லா சொத்து
உள்ளவனை பார்த்து///

அலாவுதீன் நீங்கள்தான் சொல்ல வேண்டும்....எப்படி சொத்துக்கு கணக்கில்லாமல் போகும் ...ஒன்னு அவனுக்கு கணக்கு சுத்தமா வராது, இல்லேனா அந்த சொத்து அவனுடையது இல்லே..இல்லாங்காட்டி நல்லபடியா உடை உடுத்தி வெளியாட்கள் சந்தேகமே படாத ஒரு ஏர்வாடி / குணசீலம் பீஸ் அவன்.
சகோ. ஜாகிர் : அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) ஊரில் கணக்கில்லா சொத்து வைத்திருப்பது என்றால் ஒரு உதாரணத்திற்குத்தான்: உண்மையில் கணக்கு இருக்கும் அவரிடம். அவருக்கு வயல் தோட்டம், வீடுகள் என்று நிறைய இருக்கிறது. அவருடைய தந்தையை கவனிப்பதற்கு வேலைக்கு ஆள் வைத்திருக்கிறார். சொத்துக்களை கவனிப்பதற்கு தனியாக வேலைக்கு ஆள் போட்டு இருக்கிறார். அவருடைய பரம்பரை சொத்து,அவர் சம்பாரித்த சொத்து என்று நிறைய இருக்கிறது. ஊரில் வருமானமும் வருகிறது. நன்றாக படித்தவர் கணக்கராக , நல்ல கம்பெனியில் நல்ல வருமானத்தில் இருக்கிறார்.(இதைத்தான் கணக்கில்லா சொத்து என்று சொன்னேன்).

இவ்வளவு சொத்துக்கள் இருக்கும்பொழுது ஊரில் நிம்மதியாக வாழலாம். ஆனால் அவரோ குடும்பத்தோடு இங்கு இருக்கிறார். காரணம் ஊரில் சுகாதாரம் இல்லையாம். (அவரே சொன்னது).
crown said…
இவ்வளவு சொத்துக்கள் இருக்கும்பொழுது ஊரில் நிம்மதியாக வாழலாம். ஆனால் அவரோ குடும்பத்தோடு இங்கு இருக்கிறார். காரணம் ஊரில் சுகாதாரம் இல்லையாம். (அவரே சொன்னது).
----------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.இது பற்றி ஒரு தொடர்கதை எழுதுவது பற்றி முன்பே அதிரை நிருபர் நிர்வாகக்குழுவிடம் பேசினேன் பச்சை கொடி அசைத்துவிட்டனர்.கொஞ்சம் கால அவகாசத்தில் இன்சா அல்லாஹ் ரிட்டன் விசா என்கிற தொடர் கதை வரலாம் துஆசெய்ய வேண்டுகிறேன்.
jalal said…
அண்ணாத்த...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..,)
கட்டுரையை படித்தேன் தற்போது போய்கொன்டு இருக்கும் கருத்துரைகளையும் படித்தேன்.கட்டுரைப்படி (எல்லோரும் அப்படி நினைத்தால் ! அப்படி நடந்து கொண்டால்) நல்லதொரு முயற்ச்சி என்னத்திற்க்கு நன்றி. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.
முதலில் புலி வாலை விடுவதா ! அல்லது அறுத்து விடுவதா ? என்பதைப் ப்ற்றி தீர அணைவரும் அவரவர் சிந்திப்பது நலம்!?.

* இறை நம்பிக்கை கொண்டவர்களே ! வெள்ளிக்கிழைமையன்று தொழுகைக்காக அழைக்கப்படும்போது அல்லாஹ்வை நினைவுகூர்வதன் பக்கம் விரைந்து செல்லுங்கள். கொடுக்கல் - வாங்கலை விட்டுவிடுங்கள். இது உங்களுக்கு மிகச் சிறந்ததகும் - நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் ! பின்னர் தொழுகை நிறைவேற்றப்பட்டுவிட்டால் பூமியில் பரவிச்செல்லுங்கள் ; அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள் ! மேலும் அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூர்ந்த வண்ணம் இருங்கள். உங்களுக்கு வெற்றி கிடைக்க கூடும். (அல்குர் ஆன் : 62 - 9,10)

################################################
*அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுப்போர் (உங்களில்) யார் உளர் ? (அப்படிக் கடன் கொடுத்தால்) அல்லாஹ் அதனை பல மடங்குகளாக்கி அவர்களுக்கு திருப்பிக் கொடுப்பான். அல்லாஹ் தான் (செல்வத்தைக்)குறைக்கவும் பெருக்கவும் செய்கின்றான். நீங்கள் அவன் பக்கமே திரும்பக் கொண்டுவரப்ப்டுவீர்கள். (அல்கிர் ஆன் : 2 - 245)

அல்லாஹ் சுபஹானகு த ஆல அணைவர்களையும் பாதுகாப்பானக
சகோ. தஸ்தகீர் வஅலைக்கும் ஸலாம்(வரஹ்)

/// கொஞ்சம் கால அவகாசத்தில் இன்சா அல்லாஹ் ரிட்டன் விசா என்கிற தொடர் கதை வரலாம் துஆசெய்ய வேண்டுகிறேன். ///

தொடர் கட்டுரையா அல்லது தொடர்கதையா? கதை வேண்டாம். உண்மையில் நடந்த சம்பவங்களையும், தாங்கள் நேரில் பார்த்த அனுபவங்களையும், கட்டுரையாக வடித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். வல்ல அல்லாஹ் அருள் புரியட்டும்.
தம்பி. ஜலால் வஅலைக்கும் ஸலாம்(வரஹ்)

///முதலில் புலி வாலை விடுவதா ! அல்லது அறுத்து விடுவதா ? என்பதைப் பற்றி தீர அணைவரும் அவரவர் சிந்திப்பது நலம்!?. ///

இதைப்பற்றித்தான் தற்பொழுது சகோதரர்களிடம் விவாதம் நடக்கும் என்று நினைக்கிறேன். சிந்திக்கட்டும் இன்ஷாஅல்லாஹ் எதிர்காலம் நலமாக அமையும். உனது கருத்திற்கு நன்றி!

பிறகு மன ஊனமில்லா மணமகன் தேவை என்பதை படிக்கவும். மேலும் கடன் வாங்கலாம் வாங்க கட்டுரை 4 தொடர் எழுதி வெளிவந்துள்ளது. 5வது தொடர் இன்ஷாஅல்லாஹ் நாளை வெளிவர இருக்கிறது இதையும் படிக்கவும்.
Shameed said…
முதலில் இங்கு இருந்து (வெளிநாட்டில்)செல்வோர் வெற்று பந்தாக்களை குறைக்க வேண்டும் எனக்கு கீழ் 50 பேர் 100 பேர் வேலை செய்கிறார்கள் நான் சொல்வதுதான் சட்டம் எனும் வெற்று பந்தாகளை நிறுத்தி விட்டு இங்கு உள்ள கஷ்டங்களை அங்கு உள்ள இளைய தலை முறைகளுக்கு எடுத்து சொல்லவேண்டும் ,அத்துடன் நின்றுவிடாமல் அங்கு அரசு வேலை கிடைத்தால் கிடைக்கக் கூடிய சலுகைகளை எடுத்துரைக்க வேண்டும் உதாரணமாக ஒரு RDO பதவியில் இருந்தால் என்ன சலுகை தாசில்தாராக இருந்தால் என்ன சலுகை அரசு பணியில் இருப்போருக்கு என்ன வெல்லாம் சலுகைகள் கிடைகின்றன என்பதனை எடுத்துரைக்க வேண்டும் நம் சமுதாய மக்களுக்கு
crown said…
அலாவுதீன்.S. சொன்னது…

சகோ. தஸ்தகீர் வஅலைக்கும் ஸலாம்(வரஹ்)

/// கொஞ்சம் கால அவகாசத்தில் இன்சா அல்லாஹ் ரிட்டன் விசா என்கிற தொடர் கதை வரலாம் துஆசெய்ய வேண்டுகிறேன். ///

தொடர் கட்டுரையா அல்லது தொடர்கதையா? கதை வேண்டாம். உண்மையில் நடந்த சம்பவங்களையும், தாங்கள் நேரில் பார்த்த அனுபவங்களையும், கட்டுரையாக வடித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். வல்ல அல்லாஹ் அருள் புரியட்டும்.
--------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் .சகோ.அலாவுதீன் அவர்களுக்கு.கதை எழுதும் எண்ணதை மூட்டை கட்டி வச்சுட்டேன்.
ZAKIR HUSSAIN said…
Bro Crown,


கதை எழுதினால் என்ன? ஏன் அது தப்பான விசயமா? எழுதுங்கள் ...
Shameed said…
மூளையில் உள்ள மூட்டையை அவிழ்த்து முன் உதாரணமான படிப்பினையாக உங்கள் கதையை எழுதுங்கள்
சகோ. தஸ்தகீர் வஅலைக்கும் ஸலாம்(வரஹ்)ஆரம்பத்தில் கதை என்று ஆரம்பித்தவர்கள் தடம் மாறி மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்திலும்மார்க்கத்திற்கு முரணான விஷயங்களையும் சேர்த்து வெளியிட ஆரம்பித்து விடுகிறார்கள். படிப்பினைகளை கதை என்று சொல்ல மாட்டார்கள் அது வரலாறு ஆகும்.

கதை என்றால் கற்பனை குதிரையை தட்டி விட்டு எதையாவது எழுதலாம் என்று பிற மதத்தில் உள்ளவர்கள் குப்பைகளை எழுதி காசு பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு பிரச்சனையை நாம் பார்க்கிறோம் இது மார்க்கத்திற்கு முரணாக இருக்கிறது. இதை எந்த வடிவில் மக்களிடம் காரண காரியத்தோடு மார்க்கத்தின் தீர்வு என்ன என்பதை விளக்கி சொல்ல வேண்டும். நாம் பார்த்ததை, கேட்டதை, அனுபவித்ததை மையமாக வைத்து கற்பனை கலக்காத விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய ஆக்கங்கள் வெளிவரவேண்டும்.

நமக்கு கொடுக்கப்பட்ட வாழ்நாள் சிறிதளவு எந்த நேரம் உயிர் பிரியும் என்பதையும் அறியமாட்டோம். மக்களுக்கு பயன்தரும் ஆக்கங்களை வெளியிடுவதற்கு முயற்சி செய்து வெளியிட்டால் இதனால் பலன் அனைவருக்கும் கிடைக்கும். ஒருவருக்கு பலனளித்தாலும் நன்மைதான்.


சகோதரரே எழுதாமல் இருந்து விடாதீர்கள். நிறைய சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி இருக்கிறது. எந்த தலைப்பை எடுத்துக்கொண்டாலும் மார்க்கத்தின் எல்லைக்குள் நின்று எழுதி மார்க்கத்தின் மூலம் தீர்வையும் கூறி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இம்மையிலும் மறுமையிலும் பலன் அடைந்து கொள்ளுங்கள்.
crown said…
அலாவுதீன்.S. சொன்னது…
சகோ. தஸ்தகீர் வஅலைக்கும் ஸலாம்(வரஹ்)ஆரம்பத்தில் கதை என்று ஆரம்பித்தவர்கள் தடம் மாறி மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்திலும்மார்க்கத்திற்கு முரணான விஷயங்களையும் சேர்த்து வெளியிட ஆரம்பித்து விடுகிறார்கள். படிப்பினைகளை கதை என்று சொல்ல மாட்டார்கள் அது வரலாறு ஆகும்.........
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.அலாவுதீனுக்கு எல்லாப்புகழும் அல்லாஹுக்கே!தங்கள் ஆதாங்கம் சரியே!ஆனால் என்னைப்பற்றி நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள் நான் மிகச்சாதாரணமானவன் எந்த புகழுக்கும் ஆசைப்பாடாதவன் காரணம் எல்லாப்புகழும் அல்லாஹுக்கு மட்டுமே சொந்தம் என்று திடமாக ஈமான் கொண்டவன் ை.ஆகவே எந்தப்புகழும் என்னை சேராது என்பதால் அத்ற்கு ஆசைபடாதவன் நான் சாதாரணமானவன் அல்லாஹ்வின் கடைசினிலை அடிமை
சகோ. தஸ்தகீர்; வஅலைக்கும் ஸலாம்(வரஹ்) /// நான் மிகச்சாதாரணமானவன் எந்த புகழுக்கும் ஆசைப்பாடாதவன் காரணம் எல்லாப்புகழும் அல்லாஹுக்கு மட்டுமே சொந்தம் என்று திடமாக ஈமான் கொண்டவன்.///

சகோ. தஸ்தகீர்; தங்களின் உறுதியான ஈமானுக்கு வல்ல அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நல்லருள் புரியட்டும். தங்கள் காரியங்கள் அனைத்தையும் வல்ல அல்லாஹ் இலேசாக்கித்தரட்டும்.

அதிரைநிருபர் டிவிட்

அதிரைநிருபர் வலை காட்சி