Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இரு கல்வியாளர்கள், ஒரு கலைக்களஞ்சியம், ஒரு கட்டுரையாளர் - கலந்துரையாடல் ! - 6 தொடர்கிறது 11

அதிரைநிருபர் பதிப்பகம் | November 24, 2012 | , , ,

பகுதி - று

தம்பி  நூர் முகமது அவர்கள் சுட்டிக்காட்ட விரும்பிய ‘அப்பாசியா’ ஆட்சிக் காலத்து இஸ்லாமிய இலக்கியங்களைப் பற்றி அறிந்து கொள்ளும் முன்பு அந்த வரலாற்று நிகழ்வுகள் சிலவற்றையும் அது பற்றி அறிஞர்களின் கருத்துக்களையும் வரலாற்றின் பக்கங்களில் இருந்து படித்து அவற்றை எடுத்து  இங்கே இந்த ஆக்கத்தைப் படிப்பவர்கள், அறிமுகமாக  விளங்கிக்கொள்வதற்காகக் குறிப்பிட விரும்புகிறேன். இவை படிக்கவும் அறியவும்  பிரமிப்பாக இருந்தன. அதன் பின்னர் இவை தொடர்பாக நூர் முகமது அவர்கள் சொல்லிய  செய்தியை தொடர்ந்து  கேட்க இந்தக் குறிப்புகள் உதவியாக இருக்கும். அவர் சொல்லியவை  சொல்லொண்ணாத வேதனையாக இருந்தவை. நம்மைக்  கதற வைப்பவை.      

வரலாற்றின் பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளின் சாராம்சம் என்னவென்றால்   பல நாடுகளை வெற்றி கொண்ட முஸ்லிம்கள் இறைவேதம் மற்றும் நபி போதம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்சியை நிறுவி அந்த அடிப்படையில் ஆட்சி அதிகாரங்களில் மற்றும் நல்லாட்சி செலுத்துவதில் மட்டும் முன்னணி வகித்து வரவில்லை. அன்றைய உலகின் அத்துனை துறைகளிலும் வல்லுனர்களாகத் திகழ்ந்தவர்கள் முஸ்லிம்கள்தான். கி.பி 1600 வரை ஐரோப்பா என்பது அறிவொளியற்ற ஓர் இருண்ட கண்டமாகவே காட்சியளித்தது. பூமி உருண்டை வடிவமானது என்ற நாம்  கூறிய  உண்மையை ஏற்று அன்றைய விஞ்ஞானிகள் சொன்னதற்காக பூமி தட்டை என்ற பைபிளின் கூற்றுக்கு அது மாறுபடுகிறது என்று கூறி அவர்களை தூக்கிலிடச்சொன்னது அன்றைய கிருத்தவத் திருச்சபை. அந்த அளவிற்கு ஐரோப்பாவும் கிருத்துவ திருச்சபைகளும் புத்தம் புது கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்ளாத மனப்பான்மையில் அறியாமை இருளின் படுபாதாளத்தில் மூழ்கியே கிடந்தன. ஆனால் முஸ்லிம்களோ அறிவில் சிறந்து விளங்கி வரலாறுகளில் பொற்காலம் (Golden age) என்று  குறிப்புகள்  வர்ணிக்கும் அளவிற்கு வாழ்ந்து கொண்டிருந்தனர்.

கி.பி 700ன் இறுதியில் ஹாருன்-அல்-ரஷித் அவர்களின் தலைமையில் வீற்றிருந்த அப்பாஸியர்களின் ஆட்சியில் வானவியல், கணிதம், மருத்துவம், வேதியல், உடற்கூறுகள், நிர்வாகம், ஆட்சி முறைகள், வரிவிதிப்புக்  கொள்கைகள், இலக்கியங்கள் பற்றிய ஆய்வு போன்றவைகளில் வல்லுனர்களாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும் கண்டு பிடிப்பாளர்களாகவும் சிறந்து விளங்கியவர்கள் முஸ்லிம்கள்தான். அந்நாளில் முஸ்லிம்கள் அனைத்துத் துறைகளிலும் ஒரு கரையைக் கடந்து விட்டார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை. அந்த அளவிற்கு உலகின் எத்துறையில் யார் ஆய்வுகளை மேற்கொண்டாலும் முஸ்லிம்கள் எழுதிய அரபிமொழியில் அமைந்த ஆய்வுக்கட்டுரைகளையும், ஆராய்ச்சி நூல்களையும் புரட்டியே ஆகவேண்டும் என்ற நிலைதான் இருந்தது. இவ்வாறு கல்வி அறிவு, நிர்வாகத்திறன் போன்றவற்றில் முஸ்லிம்கள் பேரெழுச்சி பெற்றிருந்தனர்.

பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் தனது ‘உலக சரித்திரம்- ஒரு பார்வை ’       (Glimpses of World History) என்னும் நூலில், “ஸ்பெயினின் எழுநூறு வருட முஸ்லிம்களின் ஆட்சி ஆச்சரியத்தை பயப்பதாக இருக்கிறது. அதைவிட பெரிய ஆச்சரியம் அரேபியரின் உயர்ந்த நாகரிகமும் கலைப் பண்புமேயாகும். ஐரோப்பா முழுவதும் அறியாமையிலும் போரிலும் மூழ்கிக்கிடந்த போது மேற்கு உலகிற்கே அறிவு, நாகரிகத்தின் ஒளியை பரப்பியது அரேபியரின் ஆட்சிக்குட்பட்ட ஸ்பெயின் தான்” என்று கூறுகிறார்.  அந்த அளவிற்கு அரேபிய ஸ்பெயினுடைய ஆட்சி சிறந்து விளங்கியிருந்து இருக்கின்றது.

மேலும் ராபர்ட் பாரிபால்ட் என்னும் ஆங்கிலேய வரலாற்று ஆய்வாளர் தனது ‘மேகிங் ஆப் ஹுயுமாநிட்டி’  (Making of Humanity) என்னும் நூலில் கூறுகிறார், “அரேபியர்களின் வானவியல் ஒரு கோபர் நிக்கொசையோ அல்லது நியூட்டனையோ உருவாக்கவில்லை என்றாலும் அரேபியர்களின் பங்களிப்பு இல்லாமல் ஒரு கோபர் நிக்கொசோ, நியூட்டனோ உருவாகியிருக்க முடியாது” என்று. அந்த அளவிற்கு விஞ்ஞானத் துறையில் அரேபியர்களுடைய பங்களிப்பு இருந்திருக்கின்றது. இந்தச்செய்தி நமக்கு பிரம்மிப்பூட்டும். ஆனால் யூத கிருத்துவ வரலாற்றுப் பொய்யர்களும் சூழ்ச்சியாளர்களும் இவைகளை மறைத்தே பதிவு செய்தனர்.

இப்போது கடந்த அத்தியாயத்தில் நான் நிறைவு செய்த கீழ்க்கண்ட வரிகளை நினைவு படுத்திக் கொண்டால் தொடர்ந்து படிக்க உதவியாக இருக்கும்.

“இஸ்லாமிய வரலாற்றில் ஹிஜ்ரீ இரண்டாம் நூற்றாண்டு, ‘அப்பாசியா’ ஆட்சிக்காலம். முஸ்லிம்கள் கல்விப்பணியில் உச்சநிலை அடைந்திருந்த பொற்காலமாகும். ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களும் அவர்களைச் சூழ்ந்திருந்தவர்களும் பேரறிஞர்களாகத் திகழ்ந்த நல்ல காலமாகும். இப்படிப்பட்ட அறிஞர்களால் வடித்தெடுக்கப்பட்ட இஸ்லாமிய இலக்கியச் செல்வங்களின் குவியல்கள்  இன்று எங்கே?

இதனைப் பற்றி, ஜனாப் நூர் முகமது அவர்கள் சொன்ன தகவல்கள்  பிரம்மிப்பும், அதே நேரம் மிகுந்த வேதனையும் தருவதாகவும் அமைந்தது.”  என்று கடந்த அத்தியாயம் நிறைவுற்று இருந்தது.

அப்பாசியா ஆட்சிக்காலத்தில் திரண்டிருந்த இஸ்லாமிய அறிவுக் கருவூலங்கள், ஆராய்ச்சி நூல்களின் குவியல்கள்  இன்று எங்கே? 

இப்போது நூர் முகமது அவர்கள் பதில் கூறி விளக்குவதைக் கேட்கலாம்.

“அக்காலத்தில் உருவாக்கப்பட்ட ஏராளமான அறிவுக் கருவூலங்கள், பிற்காலத்தில் ஏற்பட்ட அரசியல் சோதனைச் சூறாவளியில் சிக்கி அழிக்கப்பட்டுவிட்ட கொடுமை பெரும் வேதனையைத் தருவதாகும். தாத்தாரியர்கள் வெற்றி வெறியில், பூராத் நதியின் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு வருவதற்காக, முஸ்லிம்கள் நூலகங்களில் பாதுகாத்து வைத்திருந்த அறிவுக் கருவூலங்களைப் பயன்படுத்தி ஆற்றுப் பாலம் அமைத்தார்களாம். கழுதைக்குத் தெரியுமா   கற்பூர வாசனை? ஒரே நேரத்தில், குதிரைகள் ஏழு வரிசைகளில் சாரி சாரியாக நடந்து செல்லும் வகையில் அப்பாலம் அமைக்கப்பட்டதாம். புராத் நதியின் நீர், ஒன்பது மாதங்களுக்கு மேலாக அந்த அந்நூல்களிலுள்ள மையுடன்  கலந்து வண்ணமாக ஓடிக் கொண்டிருந்ததாம். 

பின்னர் ஸ்பெயின் நாட்டை சூழ்ச்சியினால் கைப்பற்றிவிட்ட மேலை நாட்டு வெள்ளையர், முஸ்லிம்களின் கலைக்களஞ்சியங்களை அழிப்பதற்கென்றே தனி அரசு இலாகாவை அமைத்திருந்தார்கள். அறிவுக் களஞ்சியங்கள்  அவ்வாறு அழித்தொழிக்கப் பட்ட வேளையில், பொதுமக்களின் வீடுகளில் இருந்து  சோதனையிடப்பட்டு சேர்த்தெடுத்த நூல்கள் மட்டும் 20 இலட்சம் இருந்தனவாம்; திறந்த வெளியில் இவற்றைச் சுட்டு சாம்பலாக்கிய போது எழுந்த நெருப்பு, 28 நாட்கள் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்ததாம். இவையெல்லாம் நம்புவதற்கு வியப்பான வேதனையான உண்மைகள்.  

குர்த்துபா, சமர்கண்ட், புகாரா, நைசாப்பூர், கஜ்னி, மெர்வ், பல்கு, தூஸ் , ஷீராஸ் போன்ற நகரங்களில் ஆயிரக்கணக்கான நூலகங்களும், இலட்சக் கணக்கான நூல்களும் இருந்துள்ளன. ஹிஜ்ரீ ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இமாம் ஜமாலுத்தீன் ஸுயுத்தி அவர்கள்,  பாக்தாத் நிஜாமியா பல்கலைக் கழகத்தில் 800 தொகுதிகளைக் கொண்ட தப்ஸீர் ஒன்றும், எகிப்தின் ஜாமியுள் அள்கர் பல்கலைக்கழகத்தில்  900 தொகுதிகளைக் கொண்ட தப்ஸீர் ஒன்றும் இருந்ததைப் பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார்கள். இவ்வாறு அறிவுத்துறையில் முத்திரை பதித்த முஸ்லிம்களுக்குக் கற்பனை செய்ய இயலாத பேரிழப்பு ஏற்பட்டது. “  

மேற்கண்ட வேதனையான வரலாற்று நிகழ்வை நூர் முகமது அவர்கள் சொல்லிக்காட்டியதும் அனைவருக்கும் சோகம் தொற்றிக்கொண்டது. உடனே நான் நூர் முகமது அவர்களிடம் இப்போது நீங்கள் சொன்ன செய்திகளுக்கு எதை ஆதாரமாகக் காட்டவேண்டுமென்று கேட்டேன். அதற்கு அவர்கள் பேராசியர் மர்ஹூம் கா. அப்துல் கபூர் அவர்கள் எழுதிய மிக்க மேலானவன் என்ற தலைப்பிட்ட நூலுக்கு பாராட்டுரை வழங்கியுள்ள மெளலானா மெளவி அல்ஹாஜ் ஏ. எம். ஷப்பீர் அலி ஹளரத் பாசில் பாகவி அவர்கள் இந்த சம்பவங்களை குறிப்பிட்டுள்ளார்கள் என்று கூறினார்கள். 

அதனைத்தொடர்ந்து, இவ்வளவு அறிவுக்கருவூலங்கள் எதிரிகளால் அழிக்கப்பட்டு இருக்காவிட்டால் இன்றைக்கும் அரபு நாடுகள் பொருளாதாரத்தில் மட்டுமல்ல அறிவாக்கங்களிலும் தலைமை ஏற்று இருக்குமே என்ற ஆதங்கம் அனைவரிடமும் காணப்பட்டது; நம்மை பதை பதைக்க வைத்தது. 

அழிந்துவிட்ட இலக்கியங்கள் , அறிவுநூல்கள் போல் மீண்டும் உருவாகிட முடியாதா என்ற கேள்வியை நான் வைத்தேன். உடனே சொல்லி வைத்தாற்போல் பேராசிரியர் அவர்களும், நூர் முகமது அவர்களும் கட கடவென்று மாறி மாறி திருக் குரானின் சில வசனங்களை ஓத ஆரம்பித்தார்கள். நானும் ஹாஜா முகைதீன் சார் அவர்களும் இவர்கள் இருவரின் மார்க்க மற்றும் மேம்பட்ட மனப்பாட ஆற்றலைக் கண்டு வியந்தோம். அவர்கள் ஓதிய திருமறையின் ஆயத்துக்களின் தமிழாக்கம் :

பூமியிலுள்ள மரங்கள் (செடிகள்) யாவும் எழுதுகொல்கலாகவும், கடல் நீரை மையாகவும் வைத்து பின்னர் அது தீர்ந்து மீண்டும் ஏழு கடல்கள் மையாக உபயோகித்து எழுத உதவினாலும், அல்லாஹ்வுடைய வசன்கள் நிச்சயமாக எழுதி முடிவு பெறாதவையாகும். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தோனும், ஞனமுடையவனுமாக இருக்கிறான். ( 31:27)        

மேலும் 

நபியே நீர் கூறும்: கடலிலுள்ள நீர் யாவும் மையாக இருந்து என் இறைவனின் வாக்கியங்களை எழுத ஆரம்பித்தால் , என் இறைவனின் வாக்கியங்கள் முடிவதற்கு முன்னதாகவே இந்தக் கடல் யாவும் வற்றிவிடும்; ( செலவாகிவிடும்) அதேபோல் இன்னொரு பங்கு கடலைச் சேர்த்துக் கொண்டாலும் கூட  (18 :109)  

பல்லாயிரக் கணக்கான நூல்கள் உலகில் தோன்றி மறைந்தோ அல்லது மறைக்கப்பட்டோ இருந்தாலும் அருள் மறையும் அதன் விளக்கங்களும் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. எனவே ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ; ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை. ஆகவே இறைவனின் அருள் இருந்தால் , எதிரிகளால்  அழிக்கப்பட்ட அறிவுக்களஞ்சியங்கள் போல் இன்னும் பல ஆயிரங்கள் புத்துயிர் எடுத்துப் பூக்கும் .    அனைவரும் துஆச் செய்வோம். 

நூர் முகமது அவர்கள் தந்த வரலாற்றுக் குறிப்புகள் மற்றும் பிரம்மிப்பும் வேதனையுமான செய்திகள் தந்த வியப்பின் அதிர்ச்சியில் நாங்கள் மூழ்கி இருந்த போது, இமாம் ஷாபி பள்ளியில் முன்னர் படித்து முடித்து வெளியேறிய  ஒரு மாணவரின் தகப்பனார் பள்ளியின் இயக்குனரான பேராசிரியர் அவர்களைக் காணவேண்டுமென்று ஸலாம் சொல்லிய வண்ணம் அலுவலகத்தினுள் நுழைந்தார். 

அவருடைய ஸலாத்துக்கு பதில் சொல்லி வரவேற்ற பேராசிரியர் அவர்கள் என்ன விஷயம்  என்று கேட்டார்கள். 

“என்  மகநோட பெருலே ஒரு பிரச்னை ஈக்கிது . அவனுக்கு பாஸ்போர்ட் எடுக்க முடியலே. அதுனாலே  அவன்ற முழுப் பேருலே ஒரு பகுதியை நீக்கி  புதுசா ஒரு டி சி நீங்க தந்தா உதவியா ஈக்கிம் “ (தம்பி  நெய்னா மன்னிக்க!)  என்றார். 

“ அப்படியா உங்கள் மகன் பெயர் என்ன?” இது பேராசிரியர். 

“ முகமது சேக்காதியார்”- இது வந்தவர்.

“ அது என்ன சேக்கதியார் ? ஷேக் ஹாதி என்பது தானே சரி இதில் யார் என்கிற வார்த்தை  எங்கிருந்து வந்தது? அது சரி யார் என்பதை நீக்க வேண்டுமா?” – என்று பேராசிரியர் கேட்டார்.

இதற்கு அந்தப் பையனின் தந்த சொன்ன பதில் எங்கள் எல்லோரையும் அதிர வைத்தது. அவர் சொன்னார், 

“ இல்லே காக்கா! முகமது ன்கிற பெயரை நீக்கிவிட்டு வெறும் சேக்கதியார் னு போட்டு வேணும்” .

“ என்ன முகமது என்கிற பெயரை நீக்க வேண்டுமா? உலகிலேயே அதிகம் பெயர் சூடிக்கொண்டிருக்கும் பெயர் முகமது – உலகிலேயே அதிகம் பெயரால் ஒரு நாளில் உச்சரிக்கப்படும் பெயர் முகமது – ரசூளுல்லாவின் பெயர் முகமது - அல்லாஹுத்தாலாவுக்கு விருப்பமான பெயர் முகமது அந்தப் பெயரை நீக்க வேண்டுமா? “ என்று கூறிய பேராசிரியருக்கு பெருங்கோபமே வந்து விட்டது போல் முகம் மாறிவிட்டது. 

அதன்பின் அவர்கள் சொன்ன ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின் நடந்த வரலாற்றுச் சம்பவம் அடுத்த வாரம். 

இன்ஷா அல்லாஹ் தொடரும்
இபுராஹீம் அன்சாரி

11 Responses So Far:

sabeer.abushahruk said...

எனக்கு வரலாறு என்றாலே அலர்ஜி. பேந்தப்பேந்த முழிப்பேன். லேசா பயமாயிருக்கும். நிறைய தூக்கம் வரும். மாஞ்சி மாஞ்சி எழுதினாலும் மார்க் வராது.

ஆனால், இந்தக் கட்டுரைபோல சுவாரஸ்யமாகச் சொல்லியிருந்தால் எனக்கும் பிடித்திருக்கும்.

இஸ்லாமிய இலக்கியக் கருவூலங்கள் அழிக்கப்பட்டதன் வரலாறு மறைக்கப்பட்டாலும் நூர் காக்கா போன்ற ஆயிரக் கணக்கானோரின் மூளையில் பத்திரம் செய்யபட்டிருக்கலாம்.

யாராவது டாக்டர் பட்டத்திற்காக ஆராய்ந்தால் பொக்கிஷமாக கிடைக்கலாம்.

Unknown said...

அஸ்ஸலமு அலைகும்

அப்பசியாகளின் வீழ்சியும் தாத்தாரியாகளின் வெற்றியயும் பற்றிய நாம் படித்த வறலாற்று பாட சிலபசில் இது போன்ற தகவல்கள் சொல்லபட்டாமல் மறைக்கப்பட்டன.
நீங்கள் மறைதால் என்ன இன்று எங்கள் மூத்த அறிவுபெட்டகதின் மூலம் தெரிந்து கொன்டோமே
முஸ்லீம்களின் பங்களிப்பு இல்லாமல் உலகில் எந்த துறையின் வரலாரும் இல்லை என்பதே தின்னம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஆய்வுக்கு தேவையான அத்தனையும் இங்கே அலசப்படுகிறது... அசத்தும் பெட்டகச் சுரங்கமே அருகில் இருக்கிறது, தேவையுடைய மாணாக்கர் அள்ளிக் கொள்ள வேண்டியதுதான் கடமை !

மாஷா அல்லாஹ் ! பிரமிக்க வைக்கும் அலசல் !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அற்புதமான தகவல்கள்!

உங்கள்களின் அலசலும் நூ. அவர்களின் உள்ளமும் நல்ல அறிவுப் பெட்டகமே!

Iqbal M. Salih said...

இதைப்பற்றி பேராசிரியர் ஹிட்டி கூறும்போது,

"ஹாரூன் அல்ரஷீதும் அல்மாமூனும் கிரேக்க, பாரசீக தத்துவ ஞானங்களில் மூழ்கித் திளைத்துக்கொண்டிருந்தபோது, சார்லிமேனும் அவருடைய பிரதானிகளும் தங்கள் பெயர்களை எவ்வாறு எழுதுவது என்று தெரியாமல் எழுத்துக் கூட்டித் திணறிக்கொண்டிருந்தார்கள்" என்று குறிப்பிடுகின்றார்.

Shameed said...

நல்ல ஒரு வரலாற்று அலசல்.

ஊருக்கு ஊர் தீ அணைப்பு வண்டியும் ஆம்புலன்சும் போலீஸ் ஸ்டேஷனும் இருப்பதுபோல் நம்ம ஊரில் ஒரு பாஸ்போர்ட் ஆபிஸ் வைத்தால் மத்திய அரசுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்

இப்னு அப்துல் ரஜாக் said...

ஆய்வுக்கு தேவையான அத்தனையும் இங்கே அலசப்படுகிறது... அசத்தும் பெட்டகச் சுரங்கமே அருகில் இருக்கிறது, தேவையுடைய மாணாக்கர் அள்ளிக் கொள்ள வேண்டியதுதான் கடமை !

மாஷா அல்லாஹ் ! பிரமிக்க வைக்கும் அலசல் !

KALAM SHAICK ABDUL KADER said...

அதிரைக் கலைக்களஞ்சியம் , ஓர் அரிய வரலாற்றுப் பெட்டகம் என்பதை மீண்டும் நிருபித்துள்ளார்கள். நாவலர் நூர்முஹம்மத் அவர்களின் பேச்சாற்றலுக்கு உற்றத் துணையாய் இருப்பது,இப்படிப்பட்ட ஆய்வுக்குரிய விடயங்களை நினைவு நாடாக்களில் பதிவு செய்து வைத்திருக்கும் ஆற்றல் தான் என்பது தெளிவாகப் புரிந்து விட்டது. சில முறை அவர்களுடன் பேச்சுப்போட்டியில் அடியேனும் கலந்து கொண்டு பின்னடைவு ஏற்பட்டிருப்பதற்கு இன்று எனக்கு விடையும் கிடைத்து விட்டது. அன்றும் இன்றும் என்றும் நினைவாற்றலும், ஆழமான வாசித்தலும் அவர்களின் புகழுக்குத் துணையாக இருக்கின்றன. இன்ஷா அல்லாஹ் நாவலர் நூர் முஹம்மத் அவர்களின் சொற்பொழிவை ஏற்பாடு செய்தீர்களேயானால், மீண்டும் எங்கட்குப் பள்ளிப்பருவ நாட்கள் நினைவில் ஆடும்.

அதிரை சித்திக் said...

அறிஞர்கள் கூடி அலசும்
அற்புதமான ஆக்கம் ....
வாய்ப்பு கிடைத்தால் மீண்டும்
கூடி கலந்துரையாட வேண்டும்
நன்றி காக்கா

Yasir said...

வரலாற்று பொக்கிஷத்தகவல்கள் நீங்கள் கூறி இருப்பது...இன்னும் நிறைய வரவேண்டும் ...

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு