Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நபிமணியும் நகைச்சுவையும்...! 20

அதிரைநிருபர் பதிப்பகம் | November 01, 2012 | , , ,

தொடர் - 8
கருமையும் வெண்மையும் :

து ஒரு ரமலான் மாதத்தின் பின்னிரவு நேரம்!

மதீனா நகரமே இரவுத் தொழுகைக்குப் பின்னர் அமைதியான உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது! அந்த ஒரே ஒருவருக்கு மட்டும் இருப்புக் கொள்ளவில்லை. பரபரப்பாக ஏதோ செய்து கொண்டிருந்த அவரை யார் பார்த்தாலும்,  'இந்த இரவில் இவர் தூங்கப் போவதில்லை' என்று முடிவுக்கு நிச்சயமாக வந்துவிடுவர்.

படுக்கையில் படுப்பதும் சில நிமிடங்களில் எழுந்து தலையணைக்கடியில் கையை விட்டு எதையோ துழாவி எடுப்பதும் அதை மேலும் கீழும் உற்றுப் பார்த்துவிட்டு, தனக்குள் ஏதோ 'இல்லை இல்லை' என்று தலையசைத்து விட்டு மறுபடி படுப்பதுமாக மாறிமாறி செய்து கொண்டிருந்தார். சஹர் உணவின் நேரமும் வேக வேகமாக நழுவிக் கொண்டிருந்தது. ஆனால், அதிலெல்லாம் அவருக்குக் கவனமில்லை!

மறுபடியும் தலையணைக்கடியில் கைவிட்டு எடுத்துப் பார்க்கத் தொடங்கிவிட்டார். இப்படியே தொடர்ந்ததில் பொழுது புலரும் நேரமும் நெருங்கி விட்டது.

இந்தப் பரபரப்புக்குத் தகுந்த காரணமும் இருந்தது! அந்த இரவில்தான் அந்தப் புனித மாதத்திற்கென்று எதிர்பார்க்கப்பட்ட முக்கியமான வஹீ ஒன்றை அல்லாஹ் அருளி இருந்தான்!(*) அந்த வஹீயைப் பற்றித் தெரியுமுன்பு, நமக்கு இந்த சஹாபியின் அறிமுகம் சற்று அவசியமாகிறது!

அவர் ஒன்றும் சாதாரணமான ஆளல்ல! அந்தக் காலத்தில் மிகப் பெரும் பாரம்பரியத்துக்குச் சொந்தக்காரர்தான் அவர்! அரபுலகின் பிரபலமான தாயீ கோத்திரத்தின் தலைவனும்  அம்மக்களின் அரசனும் மிகப்பெரும் புகழ்பெற்ற கொடை வள்ளலுமாகிய ஹாதிம் அத்தாயீ உடைய செல்வப் புதல்வர்தான் நமது இந்த இளவரசர்! பெயர் அதீய் பின் ஹாதிம் அத்தாயீ. தந்தைக்குப் பிறகு, தன் மக்களின் மன்னனாகவும் முடிசூட்டப்பட்டார். 'உல்லாச உலகம் உனக்கே சொந்தம், அதை முடிந்தவரை அனுபவி ராஜா' என்று ராஜபோக சொகுசு வாழ்க்கையின் அனைத்து சுகங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தார்.

அதெல்லாம் ஒரு காலம்!

இருளும் இழிவும் நிறைந்த வழியை விட்டும் நீங்கி, அருளும் அறமும் நிறைந்த இயற்கை மார்க்கமாம் இஸ்லாத்தைத் தழுவியபின், ராஜபோகத்தில் திளைத்த அந்த மன்னரா  இவர்? என்று மூக்கில் மட்டுமல்ல, முகம் முழுக்க விரல் வைத்துப் பார்க்கும் அளவுக்கு ஆச்சர்யமாய் மாறிப்போனார் அதீய்(ரலி)!

ஆம்! அவரை மட்டுமல்ல! அந்த ஆறாம் அறிவைத் தட்டியெழுப்பி, ஆயிரம் பாடங்கள் பயிற்றுவித்த  அண்ணல் நபியவர்கள் கொண்டு வந்த அற்புத வேதம், அனைத்துத் தோழர்களின் வாழ்வையும் அடியோடு புரட்டிப் போட்டது. பழைய அத்தியாயங்களில் எந்த அளவுக்குப் படுமோசமாக இருந்தார்களோ, அதே சத்திய சஹாபாக்கள் சங்கை மிகும் நபியைச் சந்தித்த பிறகு, இந்த மானுட சமூகத்திலேயே தலை சிறந்தவர்களாக, உள்ளத்தால் உயர்ந்தவர்களாக, அறிவால் ஆழமானவர்களாக, சடங்கு சம்பிரதாயங்களைத் தூக்கி எறிந்தவர்களாக, நேர்வழியில் நிலைத்தவர்களாக, சுயநலத்தை எடுத்துச் சுழற்றி வீசிவிட்டவர்களாக, வாழும் சூழலின் வகை தெரிந்தவர்களாக, எளிமையில் இனிமை கண்டவர்களாக, தாங்கள் பெற்ற மார்க்கத்தைத் தாங்கிப்பிடிக்கும் தூண்களாக, மொத்தத்தில் தங்கள் தலைவரின் நிழல்களாகவே மாறிப்போனார்கள். அப்படித்தான் அல்லாஹ் (ஜல்) அருளிய வேதம் அவர்களைப் பக்குவப் படுத்தியிருந்தது. (**)

சற்றே பின்னால் சென்று வருவோம்:

அதீய் பின் ஹாத்திம், கிறிஸ்தவ மக்களின் அரசனாக இருந்தபோது, மக்களின் வருவாயில் 4ல் 1 பங்கு அவருக்குக் கப்பம் கட்ட வேண்டும் என்று சட்டமிருந்தது. அதை சன்மார்க்கம் இஸ்லாம் ஒருக்காலும் ஏற்றுக் கொள்ளாது என்பது அவருக்கு நன்றாகத் தெரியுமாதலால், இந்த உலகத்தில் வேறு எவரையும்விட அதிகமாகப் பெருமானார் (ஸல்) அவர்களை அவர் வெறுத்தார்! எனினும், அவர் பயந்தது போலவே, அல்லாஹ்வின் கட்டளைப்படி அவர் தேசமும் சத்திய இஸ்லாமிய ஆட்சியின் நிழலில் வந்த அன்று, தப்பித்தோம் பிழைத்தோம் என்று கையில் கிடைத்த செல்வங்களை எல்லாம் அள்ளி 100 ஒட்டகைகளில் கட்டிக்கொண்டு சிரியாவுக்கு ஓடினார்!

உயிருக்கு பயந்து ஓடிய வேகத்தில் உடன்பிறந்த தங்கையை அரண்மனையிலேயே தவறவிட்டு ஓடிவிட்டார்!

போர்க்கைதியாக பிடிபட்ட சகோதரி ஸஃப்பானாஹ், கனவிலும் நினையாத அளவுக்கு காருண்ய நபியால் கண்ணியமாகவும் கருணையாகவும் நடத்தப்பட்டதால், அண்ணனைக் கண்டு அழைத்துவர நினைத்து, அல்லாஹ்வின் தூதரிடம் அனுமதி பெற்றாள்.

முத்திரைத்தூதர் முஹம்மது நபியைப் பற்றித் தங்கையானவள் விவரிப்பாகச் சொல்லச் சொல்ல புருவங்கள் எல்லாம் உயர்ந்து நெற்றிக்கு மேலே போய், அரசர் அதீயின்  முகம் முழுவதையும் ஆச்சர்யக்குறி அடைத்துக் கொண்டது!

ஸஃப்பானாஹ் சொல்வதுபோல், அவர் ஒரு நபியாக இருந்தால் அவருடன் இணைவதை நாம் முந்திக் கொண்டால் நமக்குத்தான் சிறப்பு! ஒருவேளை, அவர் மதீனாவின் மன்னராக மட்டும் இருந்தாலுங்கூட, இன்னோர் அரசனை அப்படிப்பட்ட மேன்மையாளர் அவமானப்படுத்த மாட்டார் என்று தனக்குள் சொல்லிக்கொண்டு அண்ணலாரைக் காண ஆவலுடன் கிளம்பிவிட்டார்.

மதீனா நகர் சென்று மனிதருள் புனிதர் மாநபி(ஸல்) அவர்களின் கரம் தொட்டு ஸலாம் சொன்னதும் அவர் மனமெங்கும் மகிழ்ச்சியால் பிரளயமானது!

சமத்துவ மார்க்கம் தந்த சத்தியத்தூதர் (ஸல்), அங்கு வயோதிக மாது ஒருவருக்குத் தம் அவையில்  கொடுத்த சங்கைமிகு மரியாதையைக் கண்முன்னே கண்டார். இனிய நபியவர்கள் தம் எளிய வீட்டுக்கு அழைத்துச் சென்று, அண்ணல் நபி தம் விரிப்பில் அதீய்(ரலி)யை அமர வைத்து, அந்த மாந்தரில் மாணிக்கம், மாமனிதர் நாயகம் (ஸல்) வெறுந்தரையில் அமர்ந்ததைக் கண்டார். அவர் நபியேதான் என்று அத்தாட்சிகள் அவர் நெஞ்சில் அடித்துக்கூறின!

'அடச்சே! என்ன மனிதன் நான்! என்ன மன்னன் நான்! என்ன ஒரு பெரும் வள்ளலின் மகன் நான்!' என்றெல்லாம் மனதுக்குள் அவர் மாய்ந்து போனார்!

அத்தோடு கண்கண்ட ஆதாரங்களால், அவர் மனத்தோடு வைத்திருந்த தவறான எண்ணங்கள் எல்லாம் தவிடுபொடியாயின! அடியோடு மாறிப்போனார் அதீய் பின் ஹாத்திம் அத்தாயீ (ரலி)! தமக்கு எதிரே அமர்ந்திருப்பவர் சாதாரண மனிதரல்லர் என்பதை அதீய்(ரலி) அவர்களுக்கு இன்னும் உறுதிப்படுத்தும் விதமாக  எதிர்கால அத்தாட்சிகள் சிலவற்றை அப்போதே அவரிடம் எத்திவைத்தார்கள் ஏந்தல் நபியவர்கள்!

அதீயே! அறிந்து கொள்:

(1) வறுமையில் வாடும் இம்மக்களைப் பார்! ஒருகாலம் விரைவில் வரும். இவர்கள் மத்தியில் செல்வம் பெருகும். கொடுப்போர் இருப்பர்! ஆனால், பெற்றுக்கொள்ள ஆள் இல்லை என்ற நிலைக்கு செல்வம் பெருகும்.

(2) இந்த சத்திய மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள் குறைவாகவும் இந்த சன்மார்க்கத்தை எதிர்ப்பவர்கள் அதிகமாகவும் இருப்பது உனக்கு ஆச்சர்யம் தருகின்றதா? அல்லாஹ்வின் மார்க்கம் அதிவிரைவில் பரவி, காதிஸ்ஸிய்யாவிலிருந்து ஒரு முஸ்லிம்  பெண் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கும் அஞ்சாமல் தனியாகப் புறப்பட்டு வந்து கஃபாவைத் தவாப் செய்துவிட்டுச் செல்லும் அச்சமற்ற சூழ்நிலை உண்டாகும்.

(3) அதீயே! உன்னைபோன்ற மன்னர்களும் சுல்தான்களும் முஸ்லிம்களுள் இல்லையே! ஆட்சியதிகாரம் இறை மறுப்பாளர்களான மடையர்கள் கையில்தானே இருக்கிறது என ஆதங்கப்படுகிறாயா? மிக விரைவில்  பாபிலோனில் உள்ள ஈராக்கின் அரசமாளிகைகளையும் ரோமாபுரிச் சக்கரவர்த்தியின் கருவூலங்களையும் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் அருளால் கைப்பற்றுவார்கள்!பாபிலோனின் கோட்டை மீது இஸ்லாமியக் கொடி ஆரோகணித்துப் பறக்கும். இவை அனைத்தையும் காண நீ உயிருடனே இருப்பாய்!!!

என்றறிவித்தார்கள், அல்லாஹ்வை மட்டுமே ஆசிரியனாகப் பெற்ற எழுதப் படிக்கத் தெரியாத ஏந்தல் நபியவர்கள்! (***) ஆற்றல் மிகும் சொல்லழகர் அண்ணல் நபியவர்கள் தீர்க்கமாகச் சொன்ன அனைத்தும் அச்சரம் பிசகாமல் அதீய் பின் ஹாத்திம் (ரலி)  வாழ்நாளிலேயே நிகழ்ந்தன! எஞ்சிய வாழ்நாளில் எல்லாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அன்று சொன்னது என்னவோ இன்றும் செவிகளில் கேட்பதுபோலவே அவர் தம் 120 வது வயதில் இறக்கும்வரை அவருக்கு ஒலித்துகொண்டே இருந்தது!

அது சரி? இரவெல்லாம் தூங்காமல் எடுப்பதும் வைப்பதுமாக என்னவோ செய்துகொண்டிருந்தாரே? அது என்னவென்றுதான் பார்ப்போமா?

அது வேறொன்றுமில்லை! ஒரு வெள்ளை நூலையும் ஒரு கருப்பு நூலையும் தலையணைக்கடியில் வைத்துக்கொண்டு, அவை இரண்டையும் பொழுது விடியும் நேரம்வரை வெள்ளை நூலும் கருப்பு நூலும் அவர் கண்களுக்கு தனித்தனியாக, தெளிவாகத் தெரிகின்றதா என்பதைத்தான் ஸஹாபி அதீய்(ரலி)  அடிக்கடி உற்றுப் பார்த்துகொடிருந்தார். அப்பொழுதும் அவருக்கு சரியாக விளங்கவில்லை! காரணம்? எந்த நேரம்வரை சஹர் உணவை சாப்பிடலாம், அதை எப்போது நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற இறைவசனம் அந்த இரவில் இறங்கியதை, நம் உள்ளத்தை ஆளவந்த உத்தம நபியிடமிருந்து அவசர அவசரமாக அப்படியே அவர் எடுத்துகொண்டதுதான் தவிர வேறில்லை!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

 وَكُلُوا وَاشْرَبُوا حَتَّىٰ يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ۖ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ

இன்னும் ஃபஜ்ரு நேரம் என்ற வெள்ளை நூல், கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும்வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும்வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; (அல் பகரா 187.).

சுபுஹுடைய நேரம். அதீய்(ரலி) முதல்வேலையாகப் பெருமானார் (ஸல்) அவர்களைக் காணச் சென்றார். அன்றிரவில் அவர் செய்த ஆராய்ச்சியும் சொன்னார். அவருடைய   செய்கையும் அவர் விவரித்த தோரணையும் அடக்கமுடியாத சிரிப்பை அண்ணலாருக்கு அளித்தது. வேந்தர் நபியின் சிரிப்பைக் கண்டு விண்ணகத்து தாரகையும் வெட்கம் கொண்டு மறைந்ததால், நபிகள் நாயகத்தின் நகைமுகத்தைக் காண அதிகாலை சூரியன் அவசரமாய் எழுந்தது!

அதீயே, அல்லாஹ் சொல்லும் வெள்ளையும் கருப்பும் என்பதன் பொருள் நீ நினைத்துக்கொண்டபடி மட்டும் இருந்திருந்தால், உன் தலையணையும் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு நீளமாகவல்லவா இருக்க வேண்டும்?  ஏனென்றால், கருப்பு நூல் என்பதன் அர்த்தம் இரவும் வெள்ளை நூல் என்பதன் பொருள் பகலும் ஆகும்" என்று இன்னும் சிரித்துக்கொண்டே ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் அவருக்கு விளக்கினார்கள். விளக்கம் பெற்றவராக அதீய்(ரலி) அவர்களும் இறைத் தூதரின் சிரிப்போடு இணைந்து சிரித்தார். நேர்வழி காட்டியவர் (ஸல்) அதீய் (ரலி)யின் நெஞ்சிலே நிறைந்து நின்றார்!.

ராவி: அதீய்பின் ஹாத்திம் (ரலி);  நூல்: அபூதாவூது எண் 2002 மற்றும் புகாரி 1916.

(*) புஹாரி 1915
(**) காண்க: இமாம் குர்துபி
(***) புஹாரி 3595
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
இக்பால் M.ஸாலிஹ்

20 Responses So Far:

Ameena A. said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

அன்புச் சகோதரர் அவர்களே,

மாஷா அல்லாஹ் ! என்னே எழுத்தழகு, எடுத்த விஷயத்தை தொடராக அற்புதமாக விவரிக்கும் திறன்.

****
சுபுஹுடைய நேரம். அதீய்(ரலி) முதல்வேலையாகப் பெருமானார் (ஸல்) அவர்களைக் காணச் சென்றார். அன்றிரவில் அவர் செய்த ஆராய்ச்சியும் சொன்னார். அவருடைய செய்கையும் அவர் விவரித்த தோரணையும் அடக்கமுடியாத சிரிப்பை அண்ணலாருக்கு அளித்தது. வேந்தர் நபியின் சிரிப்பைக் கண்டு விண்ணகத்து தாரகையும் வெட்கம் கொண்டு மறைந்ததால், நபிகள் நாயகத்தின் நகைமுகத்தைக் காண அதிகாலை சூரியன் அவசரமாய் எழுந்தது!
*****

வர்ணனை அழகோ அழகு !

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

மாஷா அல்லாஹ் !
ஆரம்பம் முதல் கடைசி வரை
உலகத்தின் அருட் கொடையான
கண்மனி நபி(ஸல்) அவர்களைப் பற்றிய
வர்ணணை மனதிற்கு மகிழ்வைத் தருகிறது!
அழகிய எழுத்து நடை!
சோர்வைடையாமல் படிக்க வைக்கிறது!
வாழ்த்துக்கள் சகோ. இக்பால்!

Abu Easa said...

மாஷா அல்லாஹ்...

உத்தமத் தூதரின் உயரிய பன்பும், சத்தியத் தோழர்களின் சன்மார்க்கப் பற்றும், இறைதூதர் மீது கொன்ட அன்பும் சற்றும் தொய்வின்றி அருமையாகத் தொகுத்தளிக்கப்பட்டிருக்கிறது சகோதரரே! அல்லாஹ் தாங்கள் செலைப் பொருந்திக்கொள்வானாக!

தொடர்ந்து படிக்க
கண்கள் நணைந்தன கண்ணீரில்!

இப்னு அப்துல் ரஜாக் said...

மாஷா அல்லாஹ் நம் ஈருலகத் தலைவர் அவர்களைப் பற்றிய வர்ணனை அருமை

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இத்துனை அற்புதமான ஏந்தல் நபி(ஸல்) நேரில் காணும் பாக்கியம் வாய்க்கப்பெறாமல் போனது பெரிய கைசேதமே.

இந்தத் தொடரைத் துவங்குவதற்கு முன்பதான நமது கலந்துரையாடல்களில், நீ எழுதப்போவதாகச் சொன்னாய். ஆனல், துவக்கத்திலிருந்தே ஏதோ ஒரு சக்தி உன்னை வைத்துத் தன்னை எழுதிச்செல்வதுபோலவேத் தோன்றுகிறது.

சாண்டில்யன், கல்கி, மு வரதராசனார் வாசித்திருக்கிறாயா? 

ஒரே மூச்சில் வாசிக்கத் தூண்டுவதே எழுத்தாளனின் வெற்றி. நான் இதை அப்படித்தான் வாசித்தேன்.

ரசூலுல்லாஹ்வைப்பற்றிய வர்ணனைகளில் உருக வைக்கிறாய்.

நீ, எம் ஏ லிட்டரேச்சரில் தமிழுமாப் படித்தாய்?

(உன்னை வைத்து மெள்லாய சள்ளிவஸல்லிக்கு பதிலாக வரம்பு மீராத மெளலது ஏற்பாடு செய்தால் சண்டை வம்பில்லாமல் பார்ட்டிகளைத் திசை திருப்பிவிடலாம்.)

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா -டா, நண்பா!

Yasir said...

மாஷா அல்லாஹ் குறைவில்லா மாணிக்க நபியைப்(ஸல்) பற்றி நிறைவான தொடர்....என்னவொரு அடிப்படை மீறாத வர்ணனை !!!...கண்களை பனிக்க வைக்கின்றன கண்ணிய நபி(ஸல்) வாழ்வில் நடந்த ஒவ்வொரு சம்பங்களும் அதனை தேன் தமிழைக்கொண்டு நீங்கள் விவரிக்கும் விதமும்...அல்லாஹ் உங்களுக்கு வாழ்வில் எல்லா பரக்கத்துக்களையும் தந்தருள்வானாக ஆமீன்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

படிக்கும்போதே பரவசம் படர்கிறது உடல்முழுவதும் !

அற்புதமான எழுத்தோடையில் ஒரே மூச்சில் நீந்திய சுகம் !

எல்லைக்குள் வர்ணனை எல்லையில்லா புகழுக்குரிய அல்லாஹ்வின் திருத்தூரைப் பற்றி - மாஷா அல்லாஹ் !

Ebrahim Ansari said...

அன்புத்தம்பி! அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்று பகல் பனிரெண்டு மணிக்கே மின்சாரம் வரும். நான் காத்திருந்து மின்சாரம் வந்ததும் தங்களின் தொடரைத் திறந்து படித்து மகிழ்ந்தேன். நல்ல செய்திகள் நல்ல மொழியில் - நல்ல நடையில் எழுதப் படும்போது படிப்போர் பெரும் மகிழ்வுக்கு அளவில்லை. அந்த மகிழ்வை முழுக்க முழுக்க இந்த தொடரில் தருகிறீர்கள்.

Unknown said...

மாஷா அல்லாஹ்
நபிமணியும் நகைசுவையும் தொடர் தொடக்கம் முதலே எளிமையான நடையில் புரிகின்ற விதத்தில் உள்ளது . அழகு மிக்க வர்ணிப்புகளில் வார்த்தைகள் உள்ளது. மாசற்ற மாணிக்கம் பெருமானாரின் பண்புகளை இலக்கியமிக்க இத்தொடரில் வாசிப்பது அல்லாஹ் வழங்கிய பெரும் பாக்கியம்

Unknown said...

மாஷா அல்லாஹ்
நபிமணியும் நகைசுவையும் தொடர் தொடக்கம் முதலே எளிமையான நடையில் புரிகின்ற விதத்தில் உள்ளது . அழகு மிக்க வர்ணிப்புகளில் வார்த்தைகள் உள்ளது. மாசற்ற மாணிக்கம் பெருமானாரின் பண்புகளை இலக்கியமிக்க இத்தொடரில் வாசிப்பது அல்லாஹ் வழங்கிய பெரும் பாக்கியம்

Shameed said...

அஸ்ஸலாமு அலைக்கும்
உங்களின் நடை உடை பேச்சு இவை அனைத்தையும் கிட்டே இருந்து பார்த்துள்ளேன் உங்களின் அழகிய எழுத்து நடையை தற்போது அதிரை நிருபர் மூலாம் காண்கின்றேன் மாஷா அல்லாஹ் தொடரட்டும் உங்கள் பணி

KALAM SHAICK ABDUL KADER said...

எத்துணை அழகான நடை! எத்துணை அற்புதமான விடை!!
ஆழமான அறிவென்னும் நூலெடுத்துக் கோத்துள்ள இவ்வாக்கம் நூலுருவில் இன்ஷா அல்லாஹ் வர வேண்டும் என்பது என் அவாவும்; துஆவும். சத்யமார்க்கம் இணையதளத்திற்கு “தோழர்கள்” போல, அதிரை நிருபர் வலைத்தளத்திற்கு ”நபிமணியும் நகைச்சுவையும்” என்பது என் கணிப்பு;இன்ஷா அல்லாஹ் இந்நூல் வெளியாகும் நாளில் கவிவேந்தரின் வாழ்த்துக் கவிதையும் வாசிக்கப்பட வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு.

ZAKIR HUSSAIN said...

கருப்பு/வெள்ளை ...கடைசியில் விவரித்ததில் உள்ளம் கொள்ளை!!

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

மாஷா அல்லாஹ்! வர்ணிக்க வார்த்தைகளைத்தேடுகிறேன். நல்ல எழுத்து நடை உலகம் போற்றும் இஸ்லாம் பற்றியும் அதன் உன்னத திருத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கால நிகழ்வுகள் பற்றியும்.

சகோ. இக்பால் எம். சாலிஹ் அவர்களெல்லாம் நம்மூர்க்காரர் என்று என்னும் பொழுது உள்ளம் பெருமிதம் அடைகிறது. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்களின் இனிய தொடர்.

மாஷா அல்லாஹ்! ஒரு சாதாரன கடல்கரை கிராமம் அதனுள் எத்தனை நேர்த்தியான அறிஞர்களையும், கவிஞர்களையும், படைப்பாளிகளையும், மாமேதைகளையும், மார்க்க அறிஞர்களையும், வல்லுநர்களையும் மறைத்து வைத்துக்கொண்டு மவுனமாய் இருந்து வருகிறது.....

மக்களின் உள்ளம் எல்லாம் அகண்டே இருக்கிறது அந்த அகண்ட ரயில் பாதையைத்தவிர.

N.A.Shahul Hameed said...

Assalamu Alaikkum!!!
My dear brother Iqbal.
Alhamdhu lillah. I enjoyed reading your posting, but at the same time I cannot control my tears rolling down while reading the narration of our Holy Prophet (SAW). As our brother S.Hameed has rightly pointed out, we all know your style of living, speaking and analysing the realism of life in the light of Islamic Principles, but it is amazing to read your lucid style of writing. Wonderful!!! I expect still more stuff from you.
Sabeer, you know one thing? In my humble opinion all the articles and comments in AN are all excellent. The forum is able to motivate and bring into light the latent talents of our brothers, each and every individual has his own skill and that is the real success of AN.
Jazakkallah Khairan.
Wassalam.
N.A.Shahul Hameed

sabeer.abushahruk said...

//Sabeer, you know one thing? In my humble opinion all the articles and comments in AN are all excellent. The forum is able to motivate and bring into light the latent talents of our brothers, each and every individual has his own skill and that is the real success of AN.//

yes Sir, the respected.

This blog is run by such executives who are MENTALLY WELL MATURED, know not only the importance of giving literally best articles but also find and encourage good writers.

We really feel blessed when Masters like you analyze the postings and appreciate and it is not merely appreciation but we guys take it as an award for our Maturity.

Thanks once again, sir.

N.A.Shahul Hameed said...

My dear brothers,
Assalamu alaikkum!!!
I wrote those words to reflect my feeling. My real intention was NOT to flatter or to exaggerate anything. I am a visitor of so many blogs of all areas. Of all, the one I used to visit first when I log in my computer is AN. It has become a habit to me and I am addicted to it. Although I reserve my comments most of the time, I will express my feeling when I feel it is worth appreciating.
Hope this will encourage my dearest brothers and motivate them to know their responsibility that they are contributing to one of the best social media. I wish our contributors to increase their creativity and enhance their skills to make the noble mission of the bloggers.
I pray Allah to shower His blessings upon all those noble hearts who render their share in bringing out AN a successful one.
Wassalam
N.A.Shahul Hameed

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//I pray Allah to shower His blessings upon all those noble hearts who render their share in bringing out AN a successful one. //

Thank you NAS Sir !

Iqbal M. Salih said...

மதிப்பிற்கும் பாசத்திற்கும் உரிய சகோதரி அவர்கட்கும்,

அன்பான சகோதரர்கள் அலாவுதீன், அபு ஈஸா, அப்துல்லத்தீஃப், அபுஇப்றாஹீம், டாக்டர் இ.அன்சாரி காக்கா,இம்ரான் கரீம், ஜஃபர் ஸாதிக், ஆகியோருக்கும் சகோ.யாஸிர் அவர்களுடைய துஆவுக்கும் மிக்க நன்றி!

கவியன்பன்: தளபதி அவர்களின் துஆவுக்கும் மிகவும் கடமைப்பட்டிருக்கின்றேன். ஜஸாகுமுல்லாஹு ஹைரன்.

ஆமா! கவி வேந்தர் யார்? அது நீங்கள்தானே?

சபீர்: why should I only have to toil for the roof and crown of things?என்று அடிக்கடி கேட்கும் நம்ம நிஜாம்தான் M.A. Eng.Literature படித்தான்! நான் வெறும் இளங்கலை ஆங்கில இலக்கியம்தான் சபீர்.

ஜாகிர்: வெள்ளை/கொள்ளை என்று இவனும் எதுகை மோனையில் எழுதிவிட்டான். மகிழ்ச்சி!

சாவண்ணா: நீ பாலகனாய் இருந்ததிலிருந்து உன் ஒவ்வொரு வளர்ச்சியையும் பக்கத்துவீட்டிலிருந்து பார்த்தவன் நான். மாஷா அல்லாஹ். இன்னும் நிறைய எழுது.

நெய்னா முஹம்மது: தங்களின் மன்வாசணை மிகுந்த எழுத்தைப் படிக்கும்போது, சிறுவனாய் எங்கள் தெரு சந்துபொந்துகளில் புகுந்து ஓடித்திரியும்போது காதில் விழுமே! அதுபோல் எனக்கு ஒரு மகிழ்ச்சி.

அபுஇப்றாஹீம்: தங்களின் பாராட்டுக்கு நன்றி.
எனினும், சமீபத்தில் எனக்கு மிகவும் பிடித்துப்போன வர்ணனை. அது நீங்கள் எழுதியதுதான்! "எல்லையில்லா புகழுக்குரிய அல்லாஹ்வின் திருத்தூதர்!"

N.A.S: Since 35 years நண்பர்களாக அல்லாமல் அதே அண்ணனாகவும் அதே தம்பியாகவுமே இருந்து வருகிறோம். இறுதி வரை அவ்வாறே ஆக்கி வைக்க அல்லாஹ் போதுமானவன்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு