Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பேறு பெற்ற பெண்மணிகள் - ‘பணிக்கர்’ குடும்பத்திலிருந்து... 12

அதிரைநிருபர் பதிப்பகம் | November 19, 2012 | , , , , ,

தொடர் : 19

கேரளத்து ‏இந்து உயர் குலங்களுள் ஒன்றான ‘பணிக்கர்’ சாதியில் பிறந்து, பேறு பெற்ற பெண்மணிகளுள் ஒருவராக வாழ்ந்துவரும் சகோதரி ‘முனா’வைப் பற்றி நான் மிக நன்றாக அறிவே‎ன்.  ஏனெனில், அவர் தற்போது வாழ்ந்து வரும் சஊதி அரேபிய ‘கமீஸ் முஷைத்’ என்ற நகரில் நானும் சில ஆண்டுகள் பணி புரிந்துள்ளே‎ன்.  அங்குள்ள ‘தஅவா’ சென்டருட‎ன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததால், சகோதரி முனா எனக்கு நன்கு அறிமுகமானவர். ‏இந்தச் சகோதரியின் வாழ்வு, ஒரு சோகக் கதை!  என்றாலும், இஸ்லாமிய ‘தஅவா’க் களத்தில் இறங்கிவிட்டால், தனது சோகத்தையெல்லாம் மறந்து சுகம் பெற்றுவிடுவார்!

மலையாளம் மற்றும் ஆங்கில மொழிகளில் இஸ்லாமியப் பிரச்சாரக் கூட்டம் நடக்கிறதென்றால், அங்கே சகோதரி முனா கட்டாயம் மு‎ன்னணியில் நிற்பார்.  சில நேரங்களில் அவரே சொற்பொழிவாற்றுவார்; பலபோது, மற்றவர்களின் ஆங்கிலம் அல்லது அரபிச் சொற்பொழிவைத்தன் மலையாளச் சகோதரிகளுக்கு மொழி பெயர்த்துக் கூறுவார்.  வந்திருப்போரின் கேள்விகளைத் தொகுத்து, அவற்றிற்கான விளக்கத்தைச் சொற்பொழிவாளரிடமிருந்து பெற்று உரியவருக்கு அளிப்பார்.  இத்தகைய ‘தஅவா’ப் பணி, ஏறத் தாழ, எல்லா நாட்களிலும் அவருடையது!

இனி, சுகம் பெற்ற அவருடைய சோகக் கதையைக் கேட்போம்:

இறைவன் யார்?  உண்மையான அவனுடைய தன்மைகள் யாவை?  அவன் எங்கு இருக்கின்றான்?  இது போன்ற எண்ணங்கள் இளமையிலேயே எனது உள்ளத்தில் உதித்தெழுந்தன.  காரணம், என் தாயார் கடவுள் பக்தியுள்ளவர்.  நானும் அந்த வழியிலேயே வளர்க்கப்பட்டேன்.  வணக்க முறை எதுவாக இருந்தாலும், எனது இறைத் தேட்டம், மேற்கண்ட கேள்விகளிலேயே சுழ‎ன்று கொண்டிருந்ததால், என்னை நான் பிறப்பிலேயே ‘முஸ்லிம்’ ஆனவள் எ‎‎ன்றுதா‎ன் கருதுகி‎ன்றே‎ன்.  இதோ இந்த நபி மொழி இதற்குச் சா‎ன்று:   

“பிறக்கும் குழந்தைகளெல்லாம், ‘இஸ்லாம்’ எனும் இயற்கையிலேயே பிறக்கின்றன.  ஆனால், அதனதன் பெற்றோர்தாம் அதை யூதனாகவோ, கிருஸ்தவனாகவோ, நெருப்பு வணங்கியாகவோ மாற்றிவிடுகின்றனர்” என நபிகள் பெருமா‎ன் (ஸல்) அவர்கள் கூறுகி‎றார்கள்.

‏இவ்வடிப்படையில்தான், என்னைப் பிறப்பிலேயே முஸ்லிம் எனக் கூறினேன்.  இருப்பினும், மிகுந்த ஆசாரங்களில் மூழ்கிப் போயிருந்த எனது குடும்பச் சூழல், என்னையும் சிலைகளின் பக்கம் என் இளமைப் பருவத்தில் இட்டுச் சென்றதில் வியப்பில்லை..  எங்கள் வீட்டில், சிலைகளின் முன் வணங்கி நிற்பதும் அவற்றிற்காகப் படையல்களைச் செய்வதும் நோன்‎பிருப்பதும் தவறாமல் நடக்கும் காரியங்களாகும்.

நான் தரமான கிருஸ்தவப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டிருந்தேன்.  அதன் தலைமை ஆசிரியை எங்களைக் கிருஸ்தவக் கோயில்களுக்கும் இந்துக் கோயில்களுக்கும் அடிக்கடிக் கூட்டிச் செல்வார்.  அதன் மூலம், கிருஸ்தவக் கோயிலுக்குப் போகும் பழக்கமும் எனக்கு ஏற்பட்டது.  எனக்கு இந்துத் தோழிகளுட‎ன் கிருஸ்தவ-முஸ்லிம் தோழிகளும் ‏இருந்தனர்.  அந்தச் சிறுமிப் பருவத்தில், எனது வழிபாடுகளுக்கும் அவர்களின் வழிபாடுகளுக்கும் எந்த வேறுபாடும் எனக்குத் தெரியவில்லை.

ஒரு வழியாக, நான் எனது ‘நர்ஸ்’ பயிற்சியை முடித்துக் கல்லூரியிலிருந்து வெளிவந்தேன்.  ஓரிரு ஆண்டுகள் கேரளாவில் பணி புரிந்துவிட்டு, சஊதி அரேபியாவின் கமீஸ் முஷைத்துக்கு வந்து சேர்ந்தேன்.  அரபுகளையும் முஸ்லிம்களையும் பற்றி ‏இந்தியாவில் நான் கேள்விப்பட்டதற்கு மாற்றமாக, இங்குள்ள அரபு மக்களின் நடைமுறையும் அவர்களின் மார்க்கப் பற்றும் வெகுவாக என்னைக் கவர்ந்தன.  ஐவேளைத் தொழுகை அழைப்பு, ஒரு மாத நோன்பு, ஹஜ் வணக்கம் மற்றும் அதன் ‘தல்பியா’ இவையனைத்தும், என்னை இஸ்லாத்தின் மீது ஒரு விதமான பற்றுக் கொள்ள வைத்தன.  ஆனால், வெளிப்படையாக நான் ஒரு இந்துவாகவே ‏இருந்து வந்தேன்!

சஊதியிலிருந்து விடுப்பில் ‏இந்தியாவுக்கு வந்த எனக்குத் திருமணம் நடந்தது.  அந்த இ‏ல்வாழ்க்கையின் இன்பப் பரிசாக என் மகள் பிறந்தாள்.  அப்போது, எனக்கு ‏இன்பங்கள் அனைத்தும் கிடைத்துவிட்டதாக உணர்ந்தேன்.  ஆனாலும், ஏதோ ஒன்றுக்காக என் இதயம் ஏங்கிக் கொண்டிருந்ததையும் எ‎‎ன்னால் புரிந்துகொள்ள முடிந்தது.  அது எ‎ன்ன?

அது பற்றி என் கணவரிடம் கூறினேன்.  “நீ சாமியாராகப் போகிறாயா?  சாமி மடம் ஒன்றைத் தொடங்கு.  அல்லது, ஒரு ஸ்கூலைத் தொடங்கி, அந்தப் பக்கம் உ‎ன்‎ கவனத்தைத் திருப்பு” என்றார்.

ஓரிரு ஆண்டுகளைக் கழித்துவிட்டு, மீண்டும் சஊதிக்கு வந்து சேர்ந்தேன்.  அதே ஊர்; அதே வேலை; தோழிகளுள் சிலர் மட்டும் நாடுகளுக்குச் சென்றிருந்தார்கள்.  சஊதி மக்களுடன், குறிப்பாகப் பெண்களுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.  அவர்களின் பண்பாட்டை ஆழமாக அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டினேன்.  அவர்களுள் சிலர் எனது ஆர்வத்தைக் கண்டு, என்னுடன் நெருங்கிப் பழகத் தொடங்கினார்கள்.  அந்த நாட்களில் அவர்கள் என்னைத் தம்முடைய உற்ற சகோதரியாகப் பாவித்து, “எங்கள் மார்க்கத்திற்கு வந்துவிடுகிறாயா?” என்று கேட்டதும் உண்டு.  அப்போதெல்லாம், “ஊஹ¥ம்..” என்று மறுத்துவிடுவேன்.  ஆனாலும், சிலைகளிலும் சிலுவைகளிலும் எல்லாம் வல்ல இறைவனைத் தேடுவதில் பயனில்லை எ‎ன்ற எ‎ன் முடிவில் உறுதியாக இ‏ருந்தே‎ன் நான்!

அதற்குள் எனது அவ்வாண்டின் விடுப்பு வந்துவிட்டது.  இந்தியாவுக்குப் பயணமானேன். வீட்டுக்கு வந்து, உறவினருடன் சிறிது நேரம் மகிழ்ந்திருந்துவிட்டுத் தனிமையில் போய் ‘பகவத் கீதை’யை எடுத்துப் படிக்கத் தொடங்கினே‎ன்.

“உண்மைதானா?!  ‏இதைத்தான் அவர்கள் சொன்‎னார்களா?!”  எனக்குள் கூறிக்கொண்டேன்.  தமது மார்க்கத்தின் பக்கம் என்னை ஈர்ப்பதற்காக, எனது வேதத்திலிருந்தே அங்கிருந்த அழைப்பாளர்கள் எடுத்துரைத்த மேற்கோள் பகவத் கீதையில் சரியாகவே ‏இருந்தது!  அது நான்கு ‘பாயிண்ட்’களைக் கொண்டது: 

(1) ஒரே இறைவனை வணங்குவதையே கீதை வலியுறுத்துகிறது.
(2) நிலையான ஓரிறையை வணங்குவதால் மட்டுமே மோட்சம் கிடைக்கும். 
(3) குட்டி தெய்வங்களெல்லாம் நிலையான தெய்வத்தின் ஏவல்களை எடுத்து நடக்கும் வேலைக்காரர்களே ஆவர்.   
(4) என்றும் நிலைத்த ஏகனான இறைவ‎ன்‎ ஒருவன் உள்ளான் என்று உணரும் அறிவே உண்மையான அறிவாகும்.  இதைப் படித்த உடனே என் இதயத்தில் ஒரு விதமான ஆறுதல் ஏற்பட்டதை உணர்ந்தே‎ன்.

அதே நேரம், என்றென்றும் நிலைத்த இறைவனை வணங்கும் ‘கலப்பற்ற வணக்கம்’ (Purity of Prayer) என்ற ஒன்று உண்டு என்றறிந்து, அதனைப் பற்றி அறிய இந்து வேதங்கள் பிறவற்றை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன்.  நாராயணீயம், ராம தயாணீயம், பாகவதம், வேத உபனிஷத்துகள் ஆகியவற்றை எடுத்துப் படித்துத் தேடினேன்.  ஆனால், அவற்றில் வணக்க சுலோகங்கள் ‏அங்கொன்றும் ‏இங்கொன்றுமாக ‏இருந்தனவே தவிர,  நான் தேடிய அந்தக் ‘கலப்பற்ற வணக்க’த்தைக் காணவே முடியவில்லை!  குறிப்பிட்ட சில நாட்களின்‎ எனது விடுப்பில் இவற்றையெல்லாம் தேடிக்கொண்டிருக்க எனக்கு நேரமில்லை.

எனது விடுப்பு முடிவதற்குச் சில நாட்களின் முன், என் குடும்பத்துடன் அருகிலிருந்த கோயில் ஒன்றுக்குப் போனேன்.  ‘பிரதிஸ்டை’யைக் காண்பதற்காக பக்தர்களின் கூட்டம் முண்டியடித்துக்கொண்டு நின்றது.  நானும் அவர்களுள் ஒருத்தியாக நி‎ன்று கொண்டே‎ன்.  என் முறை வந்தபோது, அந்தக் கடவுள் சிலையைக் கண்டே‎ன்.  என் இதயம் அதனைக் கடவுளாக ஏற்க மறுத்தது!  வெம்பினேன்‎. வெதும்பினேன்.  அலைமோதிய கூட்டத்தின் ஓலத்திற்கிடையே, “இது கடவுளன்று!  இது ஒரு கற்சிலைதான்!  என் கடவுள் நிலையானவ‎ன்! முதலும் முடிவுமானவன்!” என்று கத்திவிட்டேன்!  யாருக்குத் தெரியும் என் தீனக் குரல்?  அடுத்து, என் உள்ளத்தில் உதித்த கடவுளிடம் மானசீகமாக மன்னிப்பைக் கேட்டுக்கொண்டு, அங்கேயே ‘சாஷ்டாங்கமாக’ வீழ்ந்தே‎ன் - சிலையை நோக்கியன்று; வேறு திசையில்!  அ‎ன்‎றோடு முடிந்தது, எ‎ன் சிலை வணக்கம்! 

கமீஸ் முஷைத்துக்கு வந்து சேர்ந்த என் உள்ளம் படாத பாடு பட்டது!  கடந்த கால வாழ்க்கையில் நான் கிருஸ்தவர்களின் பைபிளையும் படித்திருக்கிறேன்.  ‘நான் ஏன் முஸ்லிம்களின் வேதமான குர்ஆனைப் படிக்கக் கூடாது?’  பொறி தட்டிய உணர்வில், இயல்பாகவே என் கை ஆங்கிலத்தில் இருக்கும் அல்குர்ஆனின் ஒரு மொழிபெயர்ப்பைத் தேடி எடுத்தது.  அதன் வசனங்களை மேற்போக்காகப் படித்துச் சென்றபோது, கீழ்க்கண்ட வசனத்தில் என் பார்வை நிலை குத்தி நின்றது: 

“வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வைப் புகழ்ந்து துதிக்கின்றன. அவனே மிகைத்தோனும் பேரறிவுடையோனுமாவான். வானங்கள், பூமியின் ஆட்சியும் அவனுக்குரியதே. அவன் உயிர்ப்பிக்கின்றான்; மரிக்கும்படியும் செய்கின்றான்.  அனைத்தின் மீதும் அவன் ஆற்றல் உடையவன்.  ஆதியும் அவனே; அந்தமும் அவனே.  தோற்றுவதும் அவனே; மறைந்திருப்பதும் அவனே. அவன் அனைத்தையும் நன்கறிந்தவ‎ன்.” - (அல்-குர்ஆ‎ன்-57:1,2,3)

அடுத்தது என்ன?  தோழிகளும் அறிமுகமான மற்றவர்களும் புடைசூழ நான் ‘தஅவா’ செ‎ண்டருக்குச் சென்று, ‘ஷஹாதா’ மொழிந்து முஸ்லிமானே‎ன்!

அதற்கடுத்து என்ன?  முஸ்லிமல்லாத என் தோழிகளிடம் நான் முஸ்லிமானதைக் கூறியபோது, அதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.  போகட்டும்.  எனது சொந்த வாழ்க்கையின்‎ நிலை என்‎னவாயிற்று?

இன்பமான என் இல்லற வாழ்க்கையில் இ‏டி விழுந்தது!  என் கணவர் வெகுண்டார்!  என் அன்பு மகள் என்னுடன் பேசுவதை விட்டுத் தடுக்கப்பட்டாள்!  என் குடும்பம் அண்டை அயலாரின் தூற்றுதலுக்கு உள்ளானது!  என் உறவினர்கள் பகைவர்களானார்கள்!  என் கணவர் என்னைப்பற்றிப் பத்திரிகைகளில் விரும்பத் தகாத விளம்பரம் செய்து என்னைக் கேவலப் படுத்தியிருந்தார்!  என்னால் அழாமல் இருக்க முடியவில்லை.  எனினும், என் இதயத்தில் அமை‏தி குடிகொண்டிருந்தது! 

எனது அடுத்த விடுப்பு வந்தபோது, நான் என் தாயகம் செல்ல முடியாத நிலையில் தவிப்புக்குள்ளானேன்!  காரணம், நான் இந்தியாவுக்குச் சென்றடைந்த மறு நொடியிலேயே எ‎ன் தலை கொய்யப்பட்டிருக்கும்!  அந்த அளவுக்குப் பகைத் தீ கொழுந்து விட்டு எரிந்தது!  நான் அரபு நாட்டில் அகதியாகி முடங்கிப் போனேன்!  ஆனால், அல்லாஹ் என்னைக் கை விட்டுவிடவில்லை!  என் முஸ்லிம் நண்பர்களும் உடன் பணியாற்றும் உயர் அதிகாரிகளும் என் மீது அளவற்ற பாசத்தை அள்ளிப் பொழிந்தார்கள்.  அந்த நிலை, இ‏ன்றும் தொடர்கின்றது. இப்போது என் குடும்பம் மிகப் பெரியது; உலகளாவியது!   அல்ஹம்து லில்லாஹ்!

கட்டுரையாசிரியரின்‎பின் குறிப்பு:  நான் அந்த ஊரில் பணியாற்றியது வரை,  ஏறத் தாழப் பத்தாண்டுகளாகச் சகோதரி முனா இந்தியாவுக்குச் செல்ல முடியாதிருந்தார்!  ஆனால், அவரது இஸ்லாமிய வாழ்க்கை இனிதே கழிந்துகொண்டிருந்தது.  ஜமாஅத்தே இஸ்லாமியின் உறுப்பினரான கேரளச் சகோதரர் ஒருவர் சகோதரி முனாவுக்கு வாழ்வு கொடுக்க முன்வந்து, அவரைத் தம் இரண்டாம் மனைவியாக ஏற்றுக்கொண்டார்.  இருவரின் வாழ்க்கையும் இப்போது இன்பமாகக் கழிகின்றது.  அல்ஹம்து லில்லாஹ்!  
தொடரும் இன்ஷா அல்லாஹ்
அதிரை அஹ்மது

12 Responses So Far:

Ameena A. said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

அல்லாஹ் அக்பர் !

//“வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வைப் புகழ்ந்து துதிக்கின்றன. அவனே மிகைத்தோனும் பேரறிவுடையோனுமாவான். வானங்கள், பூமியின் ஆட்சியும் அவனுக்குரியதே. அவன் உயிர்ப்பிக்கின்றான்; மரிக்கும்படியும் செய்கின்றான். அனைத்தின் மீதும் அவன் ஆற்றல் உடையவன். ஆதியும் அவனே; அந்தமும் அவனே. தோற்றுவதும் அவனே; மறைந்திருப்பதும் அவனே. அவன் அனைத்தையும் நன்கறிந்தவ‎ன்.” - (அல்-குர்ஆ‎ன்-57:1,2,3)

அடுத்தது என்ன? தோழிகளும் அறிமுகமான மற்றவர்களும் புடைசூழ நான் ‘தஅவா’ செ‎ண்டருக்குச் சென்று, ‘ஷஹாதா’ மொழிந்து முஸ்லிமானே‎ன்!//

லாயிலாஹ இல்லல்லாஹ் முஹமம்துரஸூலுல்லாஹ் !

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

மாஷா அல்லாஹ்!!! நம்மூர் பாஷையில் சொல்வதானால் "எப்பேர்பட்ட பொம்புளையல்வோ".....

சாச்சா வ்ளோவ் நாளா எங்கெ ஒளிச்சி வச்சீந்திய இந்த மேட்ரெ......

Yasir said...

உணர்ச்சிகளால் உள்ளம் பொங்கி வழிகின்றது.....தொடர்ந்து எழுதுங்கள் கண்ணியதிற்க்குரிய அஹமது காக்கா அவர்களே

ZAKIR HUSSAIN said...
This comment has been removed by the author.
ZAKIR HUSSAIN said...

//என்றென்றும் நிலைத்த இறைவனை வணங்கும் ‘கலப்பற்ற வணக்கம்’ (Purity of Prayer) என்ற ஒன்று உண்டு என்றறிந்து, அதனைப் பற்றி அறிய இந்து வேதங்கள் பிறவற்றை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். நாராயணீயம், ராம தயாணீயம், பாகவதம், வேத உபனிஷத்துகள் ஆகியவற்றை எடுத்துப் படித்துத் தேடினேன். ஆனால், அவற்றில் வணக்க சுலோகங்கள் ‏அங்கொன்றும் ‏இங்கொன்றுமாக ‏இருந்தனவே தவிர, நான் தேடிய அந்தக் ‘கலப்பற்ற வணக்க’த்தைக் காணவே முடியவில்லை! //

>>>>>......................>>>>

இந்த ஒரு நிலையை அடையத்தான் பல முயற்சிகளும் அதற்காக சில சென்டர்கள் , சில குருமார்கள் என்று மற்ற மதத்தினர் முயற்சிக்கின்றனர். ஆனால் இவை அனைத்தும் இஸ்லாமிய வாழ்வியல் வழிமுறையிலும், வழிபாட்டிலும் மிக எளிதாக எல்லோருக்கும் கிடைக்க பெருமானார் நபி[ஸல்] அவர்களும் அவரை பின்பற்றியவர்களும் [சஹாபாக்கள்] உலகத்துக்கே கொடுத்து விட்டு சென்றிருக்கின்றனர்.

இஸ்லாம் இப்போது முஸ்லீமாக இருப்பவர்களுக்கு மட்டும் சொந்தமல்ல, முஸ்லீம் அல்லாதவர்களும் எடுத்துக்கொண்டாலும் குறையாத 'அட்சய பாத்திரம்"

Thanx to brother Adirai Ahamed for the wonderful sharing of the real life happening of a sister in islam.


KALAM SHAICK ABDUL KADER said...

//அரபுகளையும் முஸ்லிம்களையும் பற்றி ‏இந்தியாவில் நான் கேள்விப்பட்டதற்கு மாற்றமாக, இங்குள்ள அரபு மக்களின் நடைமுறையும் அவர்களின் மார்க்கப் பற்றும் வெகுவாக என்னைக் கவர்ந்தன. ஐவேளைத் தொழுகை அழைப்பு, ஒரு மாத நோன்பு, ஹஜ் வணக்கம் மற்றும் அதன் ‘தல்பியா’ இவையனைத்தும், என்னை இஸ்லாத்தின் மீது ஒரு விதமான பற்றுக் கொள்ள வைத்தன./


இதைத்தான் இன்று மாற்று மதத்தவர்கள் நம்மிடம் எதிர்பார்க்கின்றனர்.


இப்னு அப்துல் ரஜாக் said...

மாறுகின்ற உலகில்
என்றும் மாறா
வேதம் குரான்
இதையே நமக்கு
ஒவ்வொரு பேரு பெற்ற பெண்மணிகளின்
வாழ்வு சொல்கிறது

sabeer.abushahruk said...

சமகாலத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் பேறுபெற்ற சகோதரியின் இன்னல்கள் கண்ணீரை வரவழைக்கின்றன.

அல்லாஹ் இவரின் வாழ்க்கையை இம்மையில் சிறப்பாகவும் மறுமையில் சொர்க்கவாசியாகவும் ஆக்கி அருள்புரிவானாக.

பகிர்ந்துகொண்ட அஹ்மது காக்காவுக்கு நன்றியும் துஆவும்.

Iqbal M. Salih said...

சகோதரி முனா அவர்கட்கு, நம் வாழ்த்துக்களும்
துஆக்களும் உரித்தாகட்டும் இன்ஷா அல்லாஹ்.

அதிரை சித்திக் said...

சகோதரி முனா அவர்கட்கு, நம் வாழ்த்துக்களும்
துஆக்களும் உரித்தாகட்டும் இன்ஷா அல்லாஹ்.

அதிரை சித்திக் said...

உணர்ச்சிகளால் உள்ளம் பொங்கி வழிகின்றது.....தொடர்ந்து எழுதுங்கள் கண்ணியதிற்க்குரிய அஹமது காக்கா அவர்களே

Meerashah Rafia said...

இங்கு சவூதி அரேபியாவில் மாற்று மத சகோதர, சகோதரிகள் இசுலாத்தை பற்றி கற்றுக்கொள்ள பல உள்ளது. துரதிஷ்டமாக இக்காலத்து சவூதி சட்டங்களும்,மக்களும் இசுலாத்தை விட்டு கொஞ்சம் தள்ளி போவதாக அறியமுடிகின்றது..

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு