நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கடன் வாங்கலாம் வாங்க - 12 10

Unknown | புதன், ஜனவரி 19, 2011 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...


அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! தொடர் 11ல் 3 கேள்விகளை கேட்டு இருந்தேன். பதில்கள் வரும்... என்று எதிர்பார்த்தேன். பின்னூட்டத்தில் சகோ.சபீர், சகோ.யாசிர், மெயிலில் சகோ.தாஜுதீன், சகோ.சாகுல் ஹமீது மொத்தம் நால்வரிடமிருந்து பதில் வந்ததது. அவர்களின் பதிலை முதலில் பதிவு செய்து விட்டு தொடரை தொடர்கிறேன்.


சபீரின் பதில்கள்:

1) கடன் வாங்காமல் வாழ முடியாது
வாழ்க்கையில் பொருளாதார ஏற்றத்தாழ்வும், தத்தமது தகுதியறியாமல் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் கூட்டிக்கொள்ளும் மனப்போக்கும் உள்ளவரை, கடன் வாங்காமல் வாழ முடியாது.

2) நியாயப்படி நீ இத்தொடரில் சொல்லித்தந்த தேவைகளுக்கு மட்டும்தான் கடன் வாங்கனும், எனினும் அன்றாட வாழ்க்கையில் நம்பிக்கையின் அடிப்படையில் அடுத்த வாரம் கிடைக்கப்போகும் என் பணத்தை எதிர்பார்த்து இன்றையத் தேவைக்கு நான் ஏன் கடன் வாங்கக்கூடாது?  நீ ஏற்கனவே சொன்னபடி எதிர்பார்த்த பணம் வராத பட்சத்தில் கடனாளியாவதை நான் எப்படி தவிர்த்துக்கொள்ளமுடியும்? (தேவைகளின் முக்கியத்துவம் அவரவருக்கு வேறுபடும். அனுமதிக்கப்பட்ட ஆசைகளை அடைய விரும்புவது முன்னேற்றம் நோக்கி நம்மை நகர்த்தும் என்பது என் அனுபவம்).

(
கஞ்சியோ கூழோ கதையெல்லாம் மனிதனை முடக்கும். அனுமதிக்கப்பட்ட அத்தனைக்கும் ஆசைப்படுவதே-உயர்த்தும்.)
3) ஹராமான ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள மட்டும் கடன் வாங்கவேக் கூடாது. மற்றபடி, ஆடம்பரத்தின் அளவுகோல் அவரவர் வாழ்க்கைமுறை, தொழில், தேவை சம்மந்தப்பட மாறும். (உ.: கார் ஏழைக்கு ஆடம்பரம்; பனக்காரனுக்கு? 100 சகன் சாப்பாடு தருவது (சுன்னத்தான சூழலில்) அன்றாடம் காய்ச்சிக்கு ஆடம்பரம்; ஆயிரக்கணக்கானவர்களின் தொழில் மற்றும் நட்புமுறை தொடர்பில் உள்ளவனுக்கு?)

யாசிரின் பதில்கள்:

1) கடன் வாங்காமல் இருக்க முடியும் -அத்தியவாசிய தேவைகளை குறைத்து அவசிய தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து வாழ்ந்தால்,உடல் உழைப்பை எங்கும் எப்படியும் ஹாலான நேரான வழியில் பயன்படுத்தினால்/பயன்படுத்த வேண்டும் என்ற உறுதி இருந்தால் நமக்கு தேவையானதை நாம் பெற்று இருப்பதை வைத்து சந்தோசமாக வாழலாம்.
2) கடன் வாங்கலாம்….ஒரு சில அவசிய தேவைகளுக்குஇஸ்லாம் அனுமதித்த வகை திருமணங்களுக்கு,பெண் மக்கள் இருந்து அதற்க்கு பாதுகாப்பான இருப்பிடம் ஏற்பாடு செய்வதற்க்கு.,தெரிந்த தொழில் தொடங்குவதற்க்கு அதன் மூலம் அல்லாஹ்வின் உதவியாலும் நம் உழைப்பாலும் லாபம் ஈட்டலாம் என்று தெரிந்தால் ..ஆனால் எல்லா கடன்களுக்கும் அதை திருப்பி கொடுக்கும் திட்டத்தை முன்பே தயாரித்து கொள்ள வேண்டும்.
3) கடன் எதற்கெல்லாம் வாங்கக்கூடாது?
அவசிய மற்ற / அனாச்சார ( கந்தூரி வசூலுக்கு கடன் வாங்கி கொடுத்தவர்கள் நமதூரில் உண்டு ),இஸ்லாம் அனுமதிக்காத செயல்களுக்கு.

தாஜுதீன் பதில்கள்:

கடன் வாங்காமல் வாழ முடியும்:
 சரியான திட்டமிடல் இருக்க வேண்டும், நீண்ட மற்றும் குறுகிய கால செயல்திட்டங்கள் தீட்ட வேண்டும். ஒவ்வொரு மாதமும் அச்செயல் திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். செயல் திட்டங்கள் நம் சக்திக்கு உட்பட்டு இருக்க வேண்டும். எல்லாவற்றையும் விட இஸ்லாமிய முறையில் தன் அன்றாட வாழ்க்கை முறையில் கடைப்பிடித்து வாழ்ந்தால் நிச்சயம் முடியும்.

கடன் வாங்கும் சந்தர்பங்கள்:
 மருத்துவத்துக்காக, கல்விக்காக, தொழில் நஷ்டம் ஏற்பட்டால், எதிர்ப்பாராத இயற்கை சீற்றங்கள், எதிர்ப்பாராத பயணங்கள்.

கடன் வாங்கக்கூடாத சந்தர்பங்கள்:
 வட்டிக்கடன் அடைப்பதற்கு, பொழுதுப்போக்கு சுற்றுலாவுக்காக,  தன் செயல்களை அடுத்தவருக்கு காட்டுவதற்காக, வரதட்சனைக்காக, இணைவைக்கும் செயல்களுக்காக, அடுத்தவரை துன்புறுத்துவதற்காக, போட்டி பொறாமைக்காக மற்றும் பல. இஸ்லாமிய அடிப்படைக்கு எதிரான அனைத்து செயல்களுக்காக.


சாகுல்ஹமீதின் பதில்:

ஹலாலான காரியம் செய்வதற்கு பணம் போதவில்லை என்றால் நாம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தி விட சக்தி இருந்தால் கடன் தரும் நபர் நேர்மையானவராக இருந்தால்  கடன் வாங்கலாம்.

3 விதமான பதில்கள் வந்துள்ளது. எது சரி? எல்லாமே சரியா? வாசக நெஞ்சங்களின் சிந்தனைக்கு விட்டு விட்டு தொடர்கிறேன்.

11வது தொடரில் கடனை திரும்ப அடைப்பதில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று முடித்திருந்தேன். கடனிலிருந்து பாதுகாப்புத்தேடுவது பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறுவதை பார்ப்போம்.

கடனிலிருந்து பாதுகாப்புத் தேடுதல்:

கடன் வாங்கிய வசதியற்றவர்கள் என்ன செய்யவேண்டும்:  நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்திக்கும்போது, இறைவா! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே! தாங்கள் கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்புத் தேடுவதற்குக் காரணம் என்ன? என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான். வாக்குறுதி தந்து(அதற்கு) மாறு செய்கிறான் என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி), நூல்: புகாரி, எண்:2397).

இந்த ஹதீஸிலிருந்து என்ன புரிகிறது நாம் கடன் வாங்கிய பிறகு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திரும்ப அடைக்காவிட்டால் பொய்யர்களாகவும் பிற தவறுகளை செய்பவர்களாகவும் மாறிவிடும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் நாமும் இதுபோல் தொடர்ந்து துஆச் செய்து கடனிலிருந்து மீள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.


கடன் வாங்கியவர்களின் திருப்பிச் செலுத்தும் எண்ணமும் ஏமாற்றும் எண்ணமும்:

எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை(ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி), நூல்: புகாரி, எண்: 2387)

இந்த ஹதீஸிலிருந்து நாம் என்ன விளங்கி கொள்ள முடிகிறது. நாம் சர்வ சாதரணமாக எல்லோரிடமும் கடன் வாங்கி விடுகிறோம். அவசியத்திற்கு கடன் வாங்குபவர்கள் சில பேர், அவசியமில்லாமல் ஆடம்பரத்திற்கு கடன் வாங்குபவர்கள் சில பேர், கடன் கேட்டால் கிடைக்கும் என்று எதற்கெடுத்தாலும் கடன் வாங்குபவர்கள் சில பேர், மற்றவர்கள் நம்மிடம் கேட்க கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக கடன் வாங்குபவர்கள் சில பேர் இப்படி பலதரப்பட்ட எண்ணங்கள் உடைய அனைவரும் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால் நாம் அவசியத்திற்கு கடன் வாங்கி உண்மையிலேயே திருப்பிச்செலுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் வல்ல அல்லாஹ் இதற்கான உதவியை நமக்குத் தருவான். அவ்வாறு இல்லாமல் ஆடம்பரத்திற்காகவும், ஏமாற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்திலும் கடன் வாங்கினால் நம்மீது வல்ல அல்லாஹ்வின் தண்டனை கடுமையாக இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். சகோதர, சகோதரிகளே வல்ல அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்.

கடன் கொடுத்தவருக்குக் கடுமையாக பேச உரிமையுண்டு:

நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, தான் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டார். அப்போது, அவர் சற்று கடுமையான வார்த்தைகளைப் பேசினார். இதைக் கண்ட நபித்தோழர்கள் வருத்தப்பட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அவரை விட்டுவிடுங்கள் பொருளுக்குரியவர் பேசுவதற்கு உரிமையுண்டு என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹூரைரா(ரலி), நூல்: புகாரி, எண் : 2401).

இந்த ஹதீஸ் மூலம் நாம் என்ன படிப்பினை பெற வேண்டும். கடன் வாங்குகிறோம் திருப்பிக்கொடுக்கும் காலக்கெடுவும் முடிந்து விடுகிறது. நமக்கு கடன் கொடுத்தவர் நம்மிடம் அன்பாக கேட்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். கடுமையாக கேட்டால் நீ நாலுபேர் மத்தியில் வைத்து கடனை திருப்பி கேட்டு விட்டாய் அதனால் நீ என்னிடம் கொடுத்த கடனை திருப்பி வாங்கி விடுவாயா? அல்லது உன்னிடம் எப்பொழுது வாங்கினேன் என்று கடன் வாங்கி விட்டு கடுமையாக நடந்து கொள்கிறோம்.

இங்கு நபி(ஸல்) அவர்கள் கடன் கொடுத்தவருக்கு கடுமையாக பேச உரிமை உள்ளது என்று சொல்கிறார்கள். நாம் திருப்பி கொடுக்கத்தவறினால் கொடுத்தவர் கடுமையாகத்தான் கேட்பார். நாம் பொறுமையாகத்தான் இருக்க வேண்டும். இப்படி எல்லாம் நடக்கும் என்பதை கடன் வாங்குவதற்கு முன் பலமுறை யோசித்து கடன்களை வாங்க வேண்டும். அல்லது வாங்காமல் இருக்க நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும்.

ஆனால் அதே சமயம் கடன் வாங்கியவரிடம் கடுமையாகத்தான் கட்டாயம் நடக்க வேண்டும் என்று நினைத்து சண்டைக்கு செல்வதை தவிர்த்து, அவகாசம் தந்தால் நமக்கு வல்ல அல்லாஹ் தர்மம் செய்த கூலியை தருவான், பாவங்களையும் மன்னிப்பான் என்று கடன் கொடுத்தவர் பொறுமையை மேற்கொள்வது சிறந்த நன்மையை பெற்றுத்தரும்.

நாம் வல்ல அல்லாஹ்விடம் கடனற்ற வாழ்க்கையை வாழ்வதற்கு தொடர்ந்து துஆச் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

இன்ஷாஅல்லாஹ் வளரும்...

- அலாவுதீன். S.


10 Responses So Far:

Unknown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு சகோதர சகோதரிகளே,

அதிரை கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைப்பெற்று வந்ததாலும் கல்வி தொடர்பான பதிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்பியதாலும் கடன் வாங்கலாம் வாங்க தொடர் கடந்த 2 வாரங்கலாக பதியப்படவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

புத்துணர்வுடன் மீண்டும் கடன் வாங்கலாம் வாங்க ஆக்கத்தை நம் அதிரைநிருபரில் பகிர்ந்துக்கொள்வதில் பெருமையடைகிறோம்.

சகோதரர் அலாவுதீன் அவர்களின் இந்த விழிப்புணர்வு முயற்சிக்கு அல்லாஹ் நல்லருல் புரிவானாக..

தொடர்ந்து இத்தொடரை படியுங்கள், படித்து பயனைடையுங்கள், அடுத்தவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு சகோதரர் அலாவுதீன் காக்கா,

கடன் தொடர்பான விழிப்புணர்வு தொடர் ஆக்கத்தை தொடர்ந்து எங்களுக்கு தந்து நற்சிந்தனைகளை தூண்டிவரும் தங்களுக்கும் முதலில் மிக்க நன்றி.

நில நடுக்கம் எப்படி இருக்கும் என்பதை நேற்று தான் உணரமுடிந்தது, அல்லாஹ்வின் எச்சரிக்கை என்பதையே இது உணர்த்துகிறது. கடன் இல்லாத வாழ்வை அல்லாஹ் நம் எல்லோருக்கும் தந்தருள்வானாக.

இந்த தொடரில் என் கருத்தையும் சேர்த்ததுக்காக தங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..

உங்களுடன் நாம் எல்லோரும் சேர்ந்து அல்லாஹ், ரசூல் காட்டித்தந்த வழியில் பாதுகாப்பு தேடுவோமாக.

அல்லாஹ் போதுமானவன்

Shameed சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும்

தங்களின் கட்டுரை அருமை.

கடன் சம்பந்தமாக பின் பற்ற வேண்டிய விசயங்களை ஹதிஸ் எடுத்துக்காட்டுக்களுடன் அழகிய முறையில் விளக்கி உள்ளீர்கள்.
தங்களின் இந்த விழிப்புணர்வு முயற்சிக்கு அல்லாஹ் நல்லருல் புரிவானாக ஆமீன்.

Shameed சொன்னது…

//கடன் கொடுத்தவருக்குக் கடுமையாக பேச உரிமையுண்டு//

அஸ்ஸலாமு அழைக்கும்

இப்போதெல்லாம் கொடுத்த கடனை திருப்பி கேட்பதற்க்கே பயப்படவேண்டி உள்ளது.

அகமது அஸ்லம் சொன்னது…

நமதூரைப்பற்றி ஆச்சர்யப்படும் படியானத் தகவல்

http://deviyar-illam.blogspot.com/2011/01/blog-post_17.html?showComment=1295383167970#c1096452410783793645

Yasir சொன்னது…

பயனளிக்கும் ஆக்கம்...உங்களுக்காக துவா செய்ய கடமை பட்டு இருக்கிறோம் காக்கா...வீட்டின் கீழே உள்ள குரோசரியில் சாமன் வாங்கும் போது..சில்லறை இல்லை நாளை தருகிறேன் என்று சொல்ல வந்தாக்ககூட “ இல்லாள் “...சில்லறை இல்லை யென்றால் அந்த பொருளை குறுகிய காலக் கடனுக்கூட வாங்க வேண்டாம்..அலாவுதீன் காக்காவின் கட்டுரை ஞாபகம் இருக்கட்டும் என்று ஞாபகபடுத்துகிறார்..அந்த அளவிற்க்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது உங்கள் ஆக்கம்...

Yasir சொன்னது…

பரிசை எப்பொழுது அறிவிக்க போகிறீர்கள்.....நாங்கள் 4 பேரும் ஷேர் செய்து கொள்கிறோம்

sabeer.abushahruk சொன்னது…

ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்திய ஒருசில ஆக்கங்களில் உன் இந்த தொடரும் ஒன்று. வாழ்க உன் தொண்டு.

அலாவுதீன்.S. சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) கருத்திட்ட சகோதரர்கள்: தாஜுதீன், சாகுல் ஹமீது, யாசிர், சபீர் யாவருக்கும் நன்றி!

அலாவுதீன்.S. சொன்னது…

/// பரிசை எப்பொழுது அறிவிக்க போகிறீர்கள்.....நாங்கள் 4 பேரும் ஷேர் செய்து கொள்கிறோம் ///
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) --- 3பதில்களுக்கு -- இன்ஷாஅல்லாஹ் பரிசு உண்டு.

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு