Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஏர் இந்தியா எனும் வெங்காய லாரி ! 4

அதிரைநிருபர் பதிப்பகம் | July 11, 2017 | , , , , , ,

மீள் பதிவு

அந்த மறக்கமுடியாத அனுபவம் நடந்த வருடம்  யுவ வருடம் [ஆங்கிலம் 1995]. வருடங்கள் 'மல்லாக்க" படுத்து ஒடி விட்டாலும் இன்னும் ஞாபகத்தில் அந்த சம்பவங்கள் இன்னும் புல் முளைத்திருக்கிறது. [பசுமையாக இருக்கிறது என்பது ஒல்ட் ஸ்டைல்]  எங்கள் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் செய்த மடத்தனமான முடிவால் 500 பேரை சென்னைக்கு செமினாருக்கு அழைத்து செல்ல ஏர் இந்தியாவை திரைவு செய்தார்கள்.

எனக்கு கிடைத்த டிக்கட் நான் ஒரு போட்டியில் வென்றதால் நான் ரொம்ப பேசாமல் பின்தொடர வேண்டியிருந்தது. நானும் 7 வருடம் ஊர்போகாமல் இங்கு வெட்டிகிழித்ததால் ஆசையில் ஊர்போக நினைத்தேன்.

அப்போது இங்கு [ கோலாலம்பூரில் ] பழைய ஏர்போர்ட் இருந்தது. இப்போது உள்ள புதிய ஏர்போர்ட் அப்போது இல்லை.

அப்போதைக்கு எங்கள் வீட்டில் இருந்து ஏர்போர்ட் போக 15 நிமிடம் போதும் [இப்போது உள்ள ஏர்போர்ட் போகும்போது 'கட்டுச்சோறுடன் இரால் மொச்சைக்கொட்டை ஆனமும் " இருந்தால் தேவலாம் என்கிற மாதிரி அவ்வளவு தூரம்.]

Subang Airport- [OLD AIRPORT]   இப்போது இந்த ஏர்போர்ட் தரைமட்டமாக  உடைத்துவிட்டார்கள்

இரவு 9 மணிக்கு விமானம் என்பதாலும் குரூப் செக்-இன் என்பதாலும் 5 மணிக்கே ஏர்போர்ட் வந்துவிடவும் என ட்ராவல் ஏஜன்சி ஆள் சொன்னபோது ஏதோ ரைட் பிரதர்ஸ் இப்போதுதான் இந்த விமானத்தை கண்டு பிடித்திருக்கிறார்கள் இதை விட்டால் வேறு விமானமே உலகத்தில் இல்லை என்ற மாதிரி இருந்தது. செக்-இன் முடிந்து காத்திருக்கும் இடத்தில் நாங்கள் எல்லோரும் காத்திருந்தோம். 9 மணிக்கு வர வேண்டிய விமானம் கொஞ்சம் லேட், ஆஸ்திரேலியாவிலிருந்து வரும்போது லேட், சிங்கப்பூரிலிரிந்து இன்னும் புறப்படவில்லை என்று ஏர் -இந்தியா ஆட்கள் காரணங்களை அடுக்கிகொண்டே போனார்கள். இரவு 12 மணி வரை வராததால் 'சரி வீட்டுக்கு போகிறோம் விமானம் வந்த பிறகு சொல்லுங்கள்' என்றதற்கும், ‘இமிகிரேசன் உங்கள் பாஸ்போர்ட்டில் ஸ்டாம்ப் செய்து விட்டதால் நீங்கள் வெளியேர முடியாது என்று கதை அளந்தார்கள். நாங்கள் என்ன கேனயனா?..எங்கள் இமிகிரேசனில் நாங்களே பேசிக்கொள்கிறோம் என்று என்னுடன் வந்தவர்கள் கொதித்து விட்டார்கள். ஏர்-இந்தியாவை சேர்ந்தவர்கள் என்னிடம் ' சார் கொஞ்சம் எடுத்து சொல்லுங்களேன்' என்றவுடன் "ஏன் ...இமிகிரேசன் ஸ்டாம்ப் என்ன வெங்களத்திலும் பித்தளையிலும் உருக்கியா பாஸ்போர்ட்டில் ஸ்டாம்ப் செய்திருக்கிறார்கள். இல்லை இது என்ன ஆயுள் தண்டனையா என கேட்டவுடன் , அப்போது காணாமல் போன ஏர்-இந்தியா ஆட்களை இந்த 17 வருடமாக இன்னும் பார்க்கவில்லை.

எல்லோரும் பசி , பசி என்று கதறியதால் ட்ராவல் ஏஜன்சி காரனின் கருணையில் ஆளுக்கு ஒரு டோக்கன் மாதிரி கொடுத்து சாப்பிட சொன்னார்கள். போய் பார்த்தால் அகதிகளை பார்க்கிற மாதிரி நம்மை பார்த்து டோக்கனை வாங்கி கொண்டு  1 டோனட் , ஒரு காப்பி , ஒரு வர பிஸ்கட் போட்டார்கள் [கொடுத்தார்கள் என்பது அதீத மரியாதை ]

அதை வாங்கி வைத்து கொண்டு ஒருத்தன் ரொம்ப நேரம் உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தவுடன் எதை முதலில் சாப்பிடுவது என கேட்டவுடன் எனக்கு தோன்றியது இது என்ன சரஸ்வதி சபதமா 'கல்வியா செல்வமா வீரமா" நு "சாய்ஸ் பாட்டுப்பாட"....இந்த மூன்றையும் சாப்பிட்டால்தான் உனக்கு பசி அடங்கும் ஏனெனில் இப்போது இரவு மணி 1:00 என்றவுடன், அவன் பிறந்ததிலிருந்து சாப்பிட்ட அத்தனை நல்ல உணவுகளையும் சொல்லி சாவு ஒப்பாரி மாதிரி பாடி அழுதுவிட்டான். அவனைப் பார்த்தால் கார்ட்டூன் படத்தில் சண்டை வந்தாலும் கண்ணை மூடிக்கொள்ளும் பயந்த சுபாவம் உள்ளவன் மாதிரி தெரிந்தது.

எல்லோரும் பல கதைகளை பேசி பிறகு எங்கள் கண் முன்னாலேயே சூரியனும் உதித்து நேற்று இரவு வர வேண்டிய விமானம் அடுத்த நாள் காலை 9:30 க்கு கோலாலம்பூர் வந்தது. பிறகு நாங்கள் புறப்பட்டு சென்னை சென்றோம்
_______________________________________________________________________.

இடைவேளை

என்னோடு வந்தவர்களில் 90 % சென்னைக்கு முதன்முதலாக வருபவர்கள். எனவே யாரோ ஒரு நாதாரி நான் சென்னையில் படித்தேன் என்ற உண்மையை சொல்ல நான் தங்கியிருந்த சிந்தூரி ஹோட்டலுக்கு [க்ரீம்ஸ் ரோடு- அப்போலோ பக்கத்தில்] எனக்கு டெலிபோன் போட்டு எக்சேஞ் ரேட் கேட்பதிலிருந்து எந்த பாத்ரூமில் ஒன்னுக்கு போகலாம் என்பது வரை அத்தனை பேரும் எனக்கு டெலிபோன் போட்டே சாகடித்து விட்டார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால் சிலருக்கு ப்ரசிடன்ட் ஹோட்டல் , சிலருக்கு இன்னொரு ஹோட்டல்  என்று பிரிந்திருக்க ஞாயமான அளவுக்கான ஆட்கள் நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு தங்களை மாற்றி கொடுக்க சொல்ல ட்ராவல் ஏஜன்சிக்காரன் 'நிறுத்த சொல்லுங்க... எல்லோரையும் நிறுத்த சொல்லுங்க" என்று மணிரத்னம் மாதிரி என்னிடம் கெஞ்ச ஆரம்பித்து விட்டான்.

இதெல்லாம் ஜூஜுபி மேட்டரானாலும், க்ளைமாக்ஸ்தான் ஒரு திரைப்படத்தின் க்ளைமாக்ஸை விட பெரியது. நாங்கள் மலேசியாவுக்கு செல்லும் ஏர்-இந்தியா விமானம் சரியான நேரத்தில் புறப்பட்டது. இது ஏர்-இந்தியா தானா என்ற சந்தேகம் இருந்தது. இருப்பினும் விமானம் பறக்கும்போது வெளியே போர்டு போட்டிருக்கிறதா என்று பார்க்க இது என்ன பாய்ன்ட் டு பாய்ன்ட் பஸ்ஸா என்று எந்த முயற்சியும் எடுக்க வில்லை. விமான பணிப்பெண்கள் எல்லாம் ஹிந்தி சீரியலில் அம்மா வேடத்தில் நடிக்கும் ஆட்கள் மாதிரி இருந்ததால் காதோரத்தில் நரைத்த ஆண்கள் கூட  ஆன்டி... ஆன்டி என்றழைத்தார்கள். ஏர்-இந்தியா விமானப் பணிப்பெண்களை வேலைக்கு சேர்க்கும் பழக்கத்தை வெகு நாட்களுக்கு முன் கைவிட்ட மாதிரி தெரிந்தது.

சரியாக 1 1/2 மணிநேரம் பயணித்த விமானத்தில் உள் விளக்குகள் லேசாக மங்கத்தொடங்கியது. பிறகு மொத்தமாக இருட்டானது. மழைகாலத்து சேற்றில் டைனமோ வைத்த சைக்கிள் ஒட்டும்போது விட்டு விட்டு வரும் வெளிச்சம் மாதிரி "அப்பப்ப" வெளிச்சம் வந்து போனபோது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற மாதிரி. ஒருபக்க எஞ்சினில் உள்ள ஜென்ரேட்டர் வேலை செய்ய வில்லை என்பதை ஏதோ பொண்ணு பார்க்க போன இடத்தில் கேசரிக்கு முந்திரிபருப்பு சரியாக வறுக்கவில்லை என்பது மாதிரி   கேப்டன் சொன்னவுடன் ஆழ்ந்த சயனத்தில் இருந்த பயணிகள் விழித்து என்னிடம் கேட்டனர். [வந்த கடுப்பில் ஏன்டா நானா ஜென்ரேட்டரை பிடித்து ஆஃப் செய்தேன்னு கேட்கலாம் போல் இருந்தது] இதில் சிலர் ஏரோநாட்டிகள் எஞ்ஜினியர் கேள்வியெல்லாம் கேட்டனர்.  

அவையாவன: "இந்த விமானம் என்ன ரகம்? எந்தனை எஞ்சினில் இயங்குகிறது? எத்தனை பவர் சப்ளை சோர்ஸ் ?"

நல்ல வேலையாக தற்போது விமானம் ஸ்டேன்ட்பை பவர் சோர்சில் இயங்குகிறது இதுவும் அப்பீட் ஆகிவிட்டால் நாம் கடலில் லேன்ட் ஆக 45 நிமிடம்தான் என்று சொன்னால் நிறைய பேருக்கு "சங்கேமுழங்கு" பாட்டு ரீ-ரிக்கார்டிங்கில் ஒலிக்கும் என்பதால் நான் மெளன விரதம் இருந்துவிட்டேன்.

விமானம் திரும்பவும் 1 1/2 மணி நேரம் பறந்து சென்னையில் [புறப்பட்ட இடத்துக்கு] வந்து சேர்ந்தது. விமானத்தில் எலக்ட்ரிக் வேலை செய்ய வில்லை எனவே ஏர்கண்டிசனும் படுத்து விட்டது இந்த லட்சனத்தில் 3 மணி நேரத்து மேலாக பயணிகளை கீழே இறங்க விடாமல் ரிப்பேர் பார்க்கிறேன் என்று தொடர்ந்தாற்போல் ஏதோ மட்டையடித்தார்கள். இந்நேரத்துக்கு சண்டி மாட்டுக்கு மூக்கில் மூக்குப்பொடி போட்டாவது குடியானவன் மாட்டை கிளப்பி இருப்பான். ஏர் இந்தியா எஞ்ஜினை மாட்டுடன் ஒப்பிட்டால் மாடு கோவிச்சுக்கும்.

வெயிட்டிங் ஏரியாவில் உட்காருங்கள் என்று இன்னும் 4 மணி நேரம் காக்க வைத்து கடைசியாக பம்பாயிலிருந்து வேறு விமானம் நாளைக்கு வரும் அதில் அனுப்புகிறோம் என்று ஹோட்டல் தருகிறோம் என்று சொன்னார்கள். பிறகு ஒரு வேனில் மூட்டை அடைப்பதுபோல் அடைத்து ஹோட்டலுக்கு அனுப்பினார்கள்.
 
2 பேர் தங்கும் ஹோட்டலில் 6 பேர் தங்கினோம். நான் தரையில் படுத்து தூங்கினேன் [ஒரு தலையனை விரிப்பு கூட கிடையாது] அடுத்த நாள் வழக்கம்போல் காலை 9 மணிக்கு ஏர்போர்ட் வர  சொன்னவர்கள் மாலை 3 மணிக்கு வேன் அனுப்பி இரவு 8 மணிக்கு புறப்பட்டு மலேசியா  வந்து சேர இரவு 2.00 ஆனது.

இதில் கொடுமை என்னவென்றால் எல்லோரும் இந்தியாவை விட்டு வெளியாவதால் முன்னாடியே இந்திய ரூபாயை செலவளித்து விட்டார்கள். ஏர்-இந்தியாவும் சாப்பாட்டுக்கு என்று எதுவும் செய்யவில்லை.

விமானம் கோலாலம்பூரில் தரையிறங்கியதும் ஒருவர் சொன்னது...' விமானம் நிற்கும் முன் கதவை திறந்து குதிக்க வேண்டும் போல் உள்ளது.

ZAKIR HUSSAIN
…………………………………………………………………………………………………………
N.B:  என்னதான் இருந்தாலும் ஏர்-இந்தியாவை இப்படி குறை சொல்லக்கூடாது என்று எழுத நினைக்கும் "தேசபக்தர்களுக்கு" . நான் எழுதிய நிகழ்வு 1995 ல் நடந்தது. 

இந்த லின்க்கை படித்து பாருங்கள் http://tamil.oneindia.in/news/2012/08/13/tamilnadu-air-india-passengers-stranded-at-chennai-airport-159529.html

இது 3 நாளைக்கு முன் நடந்தது . உண்மையில் இந்த ஆக்கம் பாதியில் எழுதிமுடித்த நிலையில் வந்த செய்தி . பொதுவாக நம்மடவர்கள் சொல்வது நம் நாட்டு மக்கள் தொகை அதிகம் , மற்ற நாடுடன் ஒப்பிட முடியாது... பிறகு ஏன் "நாசாவில் அதிகம் இந்தியர்கள்- மைக்ரோசாஃப்டில் இந்தியர்கள்- வான சாஸ்திரத்தில் முன்னேடி இந்தியர்கள் "என்று இ-மெயில் அனுப்பிக் கொண்டிருக்கிறோம்.?....

நாம் எப்போது திருந்துவோம்???? !!!!


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு