அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே இந்த கட்டுரையின் தலைப்பே தவறை உணரச்செய்யும் என்று எண்ணுகிறேன். குறிப்பாக இந்த தலைப்பு நமதூர் இளைய உள்ளங்களில் இன்ஷா அல்லாஹ் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதோடு என்னுடைய வாழ்வில் முதலும் முழுமையுமாக நடைமுறையில் வரவேண்டும் என்று பேராதரவு பெற்றவனாக எழுதுகிறேன்.
இன்று குறிப்பாக நமதூர் மக்களிடம் தாய்நாடு கடந்து சென்று (பொருளீட்டுகிறானோ இல்லையோ) விட்டால் தனி பாசமும் நேசமும் பாரபட்சமின்றி அவனின் மீது படர தொடங்குகிறது. இது குடும்பமும் சுற்றியிருப்பவர்களும் தருவது. இன்னொரு பக்கம் பொருளீட்டு முறையில் சற்று முன்னேறிச் சென்றால் "அவனுக்குத் தெரியாதா, ஹராம் ஹலால் பாராது மது கடையிலும், வட்டிகடையிலும் நோன்பு தொழுகை இல்லாமல் சம்பாதிக்கிறான்" என்று இழிவும் பொய் பட்டமும் சூட்டப்படுகிறான்.
குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருப்பவர்களுக்கு இந்த பெயர் வருவதில்லை என்பது எதார்த்த உண்மை. ஆனால் இதை நான் முழுமையாக எனது அனுபவபூர்வமாக ஆட்சேபிப்பதோடு அனுபவத்தோடு ஆனித்தரமாக எழுதுகிறேன்.
எனது வெளிநாட்டு வாழ்வில் இஸ்லாத்திற்கு இடையூறாக இருந்த நாடுகளில் இஸ்லாமிய நாடே முதன்மை பெறுகிறது என்பது வருந்ததக்க விஷயம், ஏனெனில் முதன் முதலாக குவைத்திற்கு வற்புறுத்தலின் பேரில் அனுப்பப்பட்டேன், அங்கு சென்று ஷரீ-அத்திற்கு நூற்றுக்கு நூறு விழுக்காடு முழுக்கும் முற்றுப்புள்ளியே. ஒருமுறை ஜும்ஆ தொழுதுவிட்டு வெள்ளையில் கோடுபோட்ட (செக்டு) வேஷ்டியோடு ஊருக்கு தொலைபேசியில் மனைவி மக்களோடு பேசலாமென்று அருகிலிருந்த அஞ்சல் அலுவலகத்திற்க்குள் நுழைந்தேன் பரிசோதனையாளர் உள்ளே செல்ல அனுமதி மறுத்தார். காரணம் கேட்டேன் ஆடையை மாற்றிவர சொன்னார் நம் மன்னுக்கே சொந்தமான முறையில் இந்த நாட்டு ஆண்கள் பெண்களை போன்று காலாடை, அரையாடையோடு வரவில்லையே முழு ஆடையோடு முழுமையாக தானே வந்துள்ளேன் என்றேன் கோபமாக உனது ஐடியை கொடு என்றார், எடுத்தேன் ஓட்டம் திரும்பி பார்க்காது தங்குமிடம் சென்றேன். (இஸ்லாமிய பெண்கள்) தன் உடம்பை 25% மட்டுமே மறைத்திருப்பதையும் அந்நிய ஆண்களோடு பழகுவதையும் பார்த்து வெறுன்டோட பார்த்தேன், கடன் பட்டு வந்துல்லோமே என்ற இக்கட்டான நிலமை இருக்கச் செய்தது இருந்துவிட்டேன் 3, 1/2 ஆண்டுகள்.
பிறகு ஜப்பான் சென்றேன் அல்ஹம்துலில்லாஹ் இன்றும் பசுமை நினைவுகள் உள்ளம் குளிரச் செய்கிறது. மறுபடியும் அந்த அனுபவத்தை அடைய துடிக்கிறது இன்று சவூதி அரேபியாவில் குடும்பத்தோடு வாழும் நம் தமிழகத்து இஸ்லாமியர்களை வாழ்வாதாரங்களை பார்த்தபோது. அல்லாஹ் மன்னிக்க வேண்டும்!
தனக்கு பொருளீட்டுவதே குறிக்கோள் என்பதால் ஷரீ-அத் பிரகாரம் வாழ எவ்வித முயற்சியும் எடுக்காமல் இஸ்லாத்தை குறை கூறுவது பெருங்குற்றமாகும். ஏனெனில் இது எனது அனுபவம் சந்தேகமிருந்தால் என்னோடு ஜப்பானில் இருந்த நமதூர் நண்பர்களிடம் கேட்டுப்பாருங்கள் உண்மை விளங்கும். ஜப்பானில் தொழ முடியாது தொழ சென்றால் வேலை பரிபோகும், கடனை அடைக்க முடியாது என்பதெல்லாம் 100க்கு 100 பொய். அல்ஹம்து லில்லாஹ் 1.5 ஆண்டுகள் ஜப்பானில் இருந்தேன் 1ஆண்டு வேலை செய்தேன் இரண்டு ஜும்ஆ தொழுகைகள் தொழமுடியாமல் விடுபட்டது / கிடைக்கவில்லை. ஒன்று குன்மாக்கனில் இருந்து டோகியோ பிரயானம் செய்தபோது. மற்றொன்று இமிகிரேசனில் பிடிபட்டு உள்ளிருந்தபோது, மற்ற தொழுகைகள் தொழ முடிந்தது ஷரீஅத்தின் சலுகையை பயன்படுத்தி லுஹர் தொழுதேன். இன்னும் பெருமையோடு சொல்லப்போனால் வாரந்தோறும் குத்பாபேருரை ஆற்றும் வாய்ப்பும் கிடைத்தது அல்ஹம்து லில்லாஹ்.
இந்த 1.5 ஆண்டில் 4 தொழிற்ச்சாலைகளில் வேலை பார்த்தேன் எங்கேயும் எனக்கும் என்னோடு வேலை பார்த்த இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேச இஸ்லாமிய சகோதரர்களுக்கு அலட்சியமும் இடையூறும் இல்லை.
இந்த நேரத்தில் உடம்பை சிலிர்க்க வைக்கும் ஒரு உண்மை சம்பவத்தை எண்ணும்போது மீண்டும் நான் அங்கு செல்வதே சிறந்ததாக தெரிகிறது. நோன்பு காலங்களில் எனது (சச்சோ) முதலாளி எனக்கு நோன்பு திறக்க எனக்கு பிடித்தமான உணவையே இஸ்லாத்தில் கூடும் என்று அனுமதி பெற்றே வாங்கி தருவார். இன்று ஈரானிய முதலாளியிடம் மாட்டிக்கொண்டு நோன்பு தொழுகை என்று பாராமல் வேலை வாங்குவதோடு முஸ்லிம் என்று இடையிடையே சொல்லி கேவலப்படுதிறார்.
இன்னொரு முறை புதன்கிழமை அன்று புதிதாக வேலைக்கு சேர்ந்தேன் வியாழன் அன்று ஜும்ஆ தொழுகைக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக அனுமதி கேட்க போறேன் என்றதும் சுற்றி இருந்தவர்கள் சொன்னார்கள் நேற்று வேலையில் சேர்ந்து விட்டு இன்று அனுமதி கேட்டால் வேலை போய்விடும் என்றார்கள் என்மீது பொருளாதார அக்கறை கொண்டவர்கள் நான் பனிவோடு சொன்னேன் முறையிடுகிறேன் ஏனெனில் அல்லாஹ் என் உள்ளத்தை பார்க்கிறான் கொடுப்பதும் பறிப்பதும் அவனிடமே இருக்கிறது என்றேன்.
நான் இப்படி என் சச்சோவிடம் நாளை பகல் உணவு நேரத்தை 30 நிமிடங்கள் கூட்டித்தருமாறு ஜப்பானியர்களின் பானியிலே கேட்டேன் அப்போது அவர் எனக்கு அனுமதி தட்டும் தரவில்லை ருகூஉ, சுஜூது இரண்டையும் முறையே செய்து காட்டி இதற்காகவா செல்கிறாய் என்றார் நானும் பயந்து கொண்டே ஆம் என்றேன் பிறகு சந்தோஷமாக அந்நாட்டு முறைப்படி குனிந்து ஒரு மணிநேரம் முழுமையாக தந்து அனுப்பிவைத்தார். இதற்கு முன்பு நமதூரை சேர்ந்த அமீன் என்பவர் அங்கு வேலை செய்ததாகவும் பகல் நேரத்தில் இருமுறை அவர் இப்படி தொழுவார் என்றும் பெருமையோடு சுட்டிக்காட்டினார். வரட்டுப் பிடிவாதம் பிடிப்பவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் இதற்கு? அதே முதலாளி ஹஜ்ஜூப் பெருநாள் அன்று நான் இரவு வேளையில் இருந்தேன் இரவு 8 முதல் அதிகாலை 8 வரை எனது வேலை பெருநாள் தொழுகைக்காக ஸுபுஹுக்கு எல்லாம் பள்ளியில் இருக்கவேண்டும் என்றவுடன் அனுமதி தந்து அந்நேரத்தில் எப்படி அங்கு செல்வாய் என்று கேட்டதோடு என்றில்லாமல் அவரே முன்வந்து நானே அந்த நேரத்தில் உன்னை அழைத்து செல்கிறேன் என்று செய்தும் காட்டினார் என்ன அல்லாஹ் அவருக்கு ஹிதாயத் கொடுக்கவில்லை. இஸ்லாம் லேசானது என்று கூறி நாம் தான் நம்மையே ஏமாற்றிக் கொள்கிறோம்- அல்லாஹ் மன்னிக்க வேண்டும்.
இந்த இடத்தில் உணவு விசயத்தில் சிரமும் குழப்பமும் இருந்தது ஆனால் நம் தாய் நட்டில் இந்த குழப்பமோ சிரமமோ இல்லை இவைகளுக்காகவும் தாய்நாடே சிறந்தது என்கிறேன்.
இன்று அல்லாஹ்வின் கிருபையால் இஸ்லாத்தின் முதன்மையிடமாக இருக்கும் சவூதியில் பொருளீட்ட வந்துள்ளேன். இங்கும் தவறுகளை தாமாகவே இழைத்து எமாற்றிக் கொள்கிறோம். என்னமோ குடும்பத்தோடு வெளிநாடு வந்துவிட்டால் சுதந்த்திரமாக சுற்றித்திரிய ஷரீ-அத்தையே சிலர் அறிந்தும் தாரை வார்கின்றனர். உலகில் சீர்கேட்டை உருவாக்குவதில் பெண்களே அதிக பங்கு பெறுகின்றனர். இங்கு ஒவ்வொரு இஸ்லாமியரும் அறிய வேண்டிய ஒன்றும் என்னவெனில் ஷரீ-அத்தில் பெண்கள் தனது உடலில் அன்னியரின் பார்வைக்கு திறந்துவைக்க அனுமதி கொடுக்கப்பட்ட இடங்கள் இரு கண் விழிகள் மட்டுமே. உம்ரா, ஹஜ் செய்தவர்களுக்கு தெரியும் தவாபு செய்துவிட்டு திரும்பும் ஆன்களின் இஹ்ராம் ஆடை தோல்புஜம் திரந்திருப்பதையும்,பென்களின் முகம் திறந்திருப்பதையும் அங்குள்ள உலமாக்கள் தடுப்பது. இதுதான் இஸ்லாத்தின் சட்டம். இப்படித்தான் நாம் இருக்கவேண்டும்.
ஒருமுறை நம் சமுதாய சகோதரரால் விருந்துன்ன நான் அழைக்கப்பட்டிருந்தேன். அங்கு மாற்று மத சகோதரரும் அவருடை சகாக்களோடு வந்திருந்தார் உணவு உண்டு விடை கொடுக்கும்போது மாற்றுமத சகோதரர் முதலில் அவர் போய்வருகிறேன் என்று புறப்பட (இதுவரை அந்த வீட்டில் எத்தனை பெண்கள் உள்ளனர் என்பதறியாது இருந்தேன்) விருந்துக்கு அழைத்த சகோதரர் தனது துனைவியாரை பெயர் சொல்லி அழைத்தார் அவரும் வந்து தான் உடுத்தி இருந்த ஆடைகளோடு சிரித்துக்கொன்டே போய் வாருங்கள் என்றார், எனக்கு வந்தது கோபம் மற்றுமத சகோதரர் இருப்பதால் பொருமையை கையான்டேன். ஒன்றும் பேச முடியாமல் நானும் வெளியேறிவிட்டேன். பிறகொரு முறை விருந்து கொடுத்தவரின் உறவினரிடம் இது பற்றி வருத்தத்தோடு எடுத்து சொன்னேன் அப்போது அவர் சொன்னார் இது அந்த பெண்ணின் தவறல்ல ஏனெனில் நமது சகோதரர்கள் தான் அவர்களை கட்டாயப்படுத்துகின்றனர் என்றார்.
தாய் நாட்டை விட்டு தவழ்ந்து விட்டால் தான் தோன்றி தனமாக நடக்கலாம் கேட்பாறில்லை என்ற எண்ணம் தானாகவே வந்து விடுகிறது, தாய் நாட்டிலிருந்தால் பெற்றோர் சொந்தம் பந்தமிருப்பதோடு கூடவே இறைவனும் இருக்கின்றான் என்று பயப்படுபவர்கள் எங்கு சென்றாலும் அல்லாஹ் கூடவே இருக்கின்றான் என்பதை மறக்கச் செய்வது ஏனோ? இப்படி செய்வது தவறு என்று சுட்டிக் காட்டினால் இதையெல்லாம் பார்த்தால் இங்கு குடும்பத்தோடு வாழ இயலாது, எனக்கு என் மனைவிமேல் பஹ்ட்தினி என்ற மேலெண்ணம் மிகைப்பாகவே இருக்கிறது என்று வாதத்தை தொடுத்து வாயடைக்கச் செய்கின்றனர். அல்லாஹ் விளங்க செய்ய வேண்டும்!
இதை வைத்துப் பார்க்கும்போது தாரத்தோடு வாழ நினைப்பவர்களுக்கு தவழ்ந்த நாட்டை விட தாய் நாடே சிறந்தது என்பது என் கருத்து.
எங்கே வாசகர்களே உங்களின் மேலான சிந்தனையை சிற்பமிடுங்களேன்.
என்றும் அனைவரின் மேலான துஆவை ஆதரவு வைக்கும்,
அப்துர் ரஷீது ரஹ்மானி.
தமாம்.

