Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label பாபர் மஸ்ஜித். Show all posts
Showing posts with label பாபர் மஸ்ஜித். Show all posts

இடிப்பும்! நடிப்பும்! படிப்பும்! - டிசம்பர் 6 9

அதிரைநிருபர் | December 06, 2011 | , ,

பாபர் மசூதி இடிப்பு:

பாபர் மசூதியை இடித்த மதவெறியர்கள் இந்தியாவின் இறையாண்மையையும் சேர்த்தே அன்று இடித்தார்கள். ஆனால் இழப்பு ஏற்பட்டது என்னவோ முஸ்லிம்களுக்கு மட்டுமே!. இந்தியாவின் இறையாண்மைக்கு எந்த ஒரு எழவும் ஏற்படவில்லை!!. காரணம் முஸ்லிம்களின் அமைதி!. முஸ்லிம்களும் பதிலுக்கு நாங்களும் கரசேவை செய்வோம் என்று கூறி இந்தியாவில் உள்ள எந்த கோயிலையும் கரசேவை செய்ய செல்லவில்லை. செல்லவும் மாட்டார்கள். ஏனெனில் மத வழிபாட்டு தளங்களை கண்ணியபடுத்த வேண்டும் என்பது இஸ்லாமிய கட்டளை.

பாபர் மசூதி வழக்கு தொடர்பான தீர்ப்பின் மூலம், ஏதோ இந்தியாவே ரணகலமாக ஆகப்போவதாக கூறி ஒரு மாயை ஏற்படுத்தி ராணுவத்தை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தினர். ஆனால் மூன்று காமெடியர்கள் வழங்கிய தீர்ப்பு, முஸ்லிம்களுக்கு பாதகமாக வந்தாலும் அதே அமைதியை மீண்டும் முஸ்லிம்கள் காட்டி, தங்களுக்கு தீவிரவாதத்தில் சிறிதும் நம்பிக்கை இல்லை என்று பறைசாட்டினர். அன்றே உள்துறை அமைச்சர் முஸ்லிம்களின் அமைதியை பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது. 

 
அநீதியான தீர்ப்பு வெளியான பின்பும், மீண்டும் இந்திய நாட்டு சட்டதிட்டத்தின் மேல் நம்பிக்கை கொண்டு, மேல்முறையீடு செய்து மீண்டும் இந்த சமூகம் காத்து இருக்கின்றது. இந்திய சுப்ரீம்கோர்ட், அஹமதாபாத் நீதிமன்றத்தில் என்ன நடக்கின்றது?. குரங்குகள் அப்பத்தை பங்கு போட்டது போல பாபர் மசூதியை பங்குபோட யார் சொன்னது?. என்று கேட்ட சாட்டையடி கேள்விகள், இன்னும் இந்த நாட்டில் நீதி சாகவில்லை, மாறாக அவசர சிகிச்சை பிரிவில் தான் இருக்கின்றது என்று விழி மேல் விழிவைத்து முஸ்லிம் சமூகம் காத்துக்கொண்டிருகின்றது.

அரசியல்வாதிகளின் நடிப்பு:
மசூதி இடிக்கப்பட்டதை தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும், அதை ஓட்டு பொறுக்கும் அரசியல் நோக்கோடு பார்க்கின்றார்களே தவிர, அநீதி இழைக்கப்பட்ட சமூகத்திற்கு உடனே தீர்வை ஏற்படுத்தி தர எவரும் முன்வருவதில்லை. காரணம் கேட்டால் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்று கூறுவார்கள். அட அரசியல்அநியாக்க்காரர்களே, வழக்குமன்றத்தில் உள்ள மசூதி வழக்கை காட்டி ஓட்டு பொறுக்க முடிந்த உங்களால், ஆட்சிக்கு வந்ததும் அதை தீர்க்க முடியவில்லையா?. மசூதி இடிக்கப்பட்டதும் ஓடி ஒழிந்த நரசிம்மராவ் முதல், முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய சோனியா வரை இன்னும் துரோகம் தொடரவே செய்கின்றது. 

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6 வரும்!. வழக்கம் போல அரசியல் வா(வியா)திகள் பாராளுமன்றத்தில் கோஷம் போடுவார்கள்!!. பின் பாராளுமன்றம் பிற்பகல்வரை ஒத்திவைக்கப்படும். பின் இந்த சம்பிரதாயம் அடுத்த வருடத்திற்கும் ஒத்தி வைக்கப்படும். இந்த வருடமும் அதேதான் நடக்கப்போகின்றது. இதுதான் அரசியல் வியாதிகளும், ஆளும் வர்க்கமும் நமக்கு காட்டும் பாடம். அதில் எந்த வித மாற்றமும் இருக்கப்போவதில்லை!.

முஸ்லிம்கள் பெறவேண்டிய படிப்பு:
முஸ்லிம்கள் இந்தியாவில் பாபர் மசூதி விவகாரத்தில் மட்டும்தான் பாதிக்கப்பட்டுள்ளனரா என்றால் இல்லை. இடஒதுக்கீடு, அரசியல் அறியாமை, கல்வியறிவு இல்லாமை, பொய் வழக்குகள், பொருளாதாரத்தில் முன்னேற்றமின்மை, குஜராத் போன்ற மாநிலங்களில் வாழ்வுரிமையும் பாதுகாப்பின்மையும் என இந்த பட்டியல் நீளும். இந்த சமூகம் எல்லாவகையிலும் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறுவதைவிட வஞ்சிக்கப்பட்டுள்ளது என்றே கூறவேண்டும். சுதந்திரத்திற்கு பாடுபட்ட இனம் இன்று அடிமைப்பட்டு கிடக்கின்றது. இதற்கெல்லாம் தீர்வுதான் என்ன?. முஸ்லிம்கள் தங்களை தாங்களே முதலில் உணரவேண்டும். 

வெள்ளையனிடம் அடிமைபட்டு கிடந்த இந்தியாவிற்கும், சுதந்திர இந்தியாவிற்கும் இடையில் முஸ்லிம்களின் வாழ்வில் என்ன ஏற்பட்டது என்று உணரவேண்டும். எங்கே நம் உரிமையை இழக்க ஆரம்பித்தோம் என்று அறியவேண்டும்.

அரசியல், மதவாத சூழ்ச்சியில், மீடியாக்களின் பொய்யில் சிக்குன்டதை உணரவேண்டும். நாம் வந்தேறிகள் இல்லை. இந்த தேசத்தின் உண்மையான குடிமக்கள். மற்ற இனத்திற்கு கிடைக்கும் அதே உரிமையும் அதிகாரமும் நமக்கும் நம் குழந்தைகளுக்கும் இனி கிடைக்க வேண்டும். இவ்வாறு உணரும் நாள் வரும்வரை நாம் அடிமைப்பட்டும், அதிகாரம் இழந்தும் கிடக்கவேண்டியே வரும்.

பாபர் மசூதி போராட்டத்தில் கூட ஆளுக்கொரு திசையில் போராட்டம் நடத்தி நம்மை நாமே பலவீனப்படுத்திக்கொண்டே உள்ளோம். ஒரு ஊரில், ஒரு மாவட்டத்தில் நான்கு இயக்கங்களின் தனி தனி போராட்டங்கள். ஒரு மாநிலத்தில் ஒரு இயக்கம் கூட்டம் நடத்தினால் அடுத்த மாநிலத்தில் வேறு கொடியுடன் வேறு இயக்கத்தின்போராட்டம். ஒவ்வொரு கூட்டத்திற்கும் பத்து நூறு பேர்கள். இவ்வாறு சென்றால் பின் நம் வலிமையை எங்கே எப்படி காட்டமுடியும்?.

ஆகையால் முதலில் முஸ்லிம்கள் மாநில அளவில் ஒன்றுபட்டு பின் தேசிய அளவில் ஒரே அணியின் தலைமையின் கீழ் ஒன்றுபட வேண்டும். இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை சாதாரணமானது அல்ல. உலக அளவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடுகளில் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்!. பின் உங்கள் உரிமைகளை அரசியலிலும், ஆட்சி அதிகாரத்திலும் வெல்லுங்கள்!!.

பாபர் மசூதியை பொறுத்தவரையில் நம் சக்திக்கு உட்பட்டு நாம் போராட்டம், சட்ட நடவடிக்கை என்று சென்றாலும், நமக்கு தீர்வு இறைவனிடம் இருந்தே கிடைக்க வேண்டும். அவன் அருள் இல்லையென்றால் நிச்சயம் நம்மால் வெற்றிபெற முடியாது. எனவே ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்விடம் முறையிட்டு யா அல்லாஹ், இது உன்னுடைய இல்லம். உன்னை வழிபாடு செய்த இல்லம். இன்று நாசகார நாய்களினால் அது பாழ்பட்டு கிடக்கின்றது. மீண்டும் நாங்கள் அதே இடத்தில் உன்னை வழிபடவும், அதற்கான வெற்றியையும் நீயே எங்களுக்கு ஏற்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கையை வையுங்கள். இறைவனின் நீதிமன்றத்தை விட உலகத்தில் வேறு எங்குமே சிறந்த நீதியும் நீதிமன்றங்களும் இல்லை.

-- அதிரை முஜீப்

டிசம்பர் ஆறும்! இஸ்லாமியர்களின் கண்களில் குளமும்!!. 12

அதிரைநிருபர் | December 06, 2010 | ,

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6 வந்தால் முஸ்லிம்கள் இடிக்கப்பட்ட பாபரி பள்ளியின் நினைவாக போராட்டம் நடத்துவதும், கோரிக்கைகளை முன் வைப்பதும் வாடிக்கையான ஒன்றாகிப்போனது!. அன்றைய தினம் பாராளுமன்றம் நடந்தால் வேஷம் போட்ட இந்த அரசியல் வாதிகள் பாராளுமன்றத்தில் கோஷம் போட்டு தங்களின் அரிப்பை தீர்த்துக் கொள்ளுவார்கள். ஆனால் இந்தப் பாவப்பட்ட முஸ்லிம்கள் மட்டும் இன்று நமக்கு நல்ல தீர்ப்பு வரும், நாளை நமக்கு தீர்ப்பு வரும் என்று நீதிமன்றங்களை நம்பி, நீதியின் மேல் தங்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தி வந்தனர். ஆனால் இந்த அலகாபாத் நீதிமன்ற தீதுபதிகள், அயோக்கியர்கள் சங்க்பரிவார்களை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு, அந்த பொறுப்பினை இவர்கள் தங்களிடம் எடுத்துக்கொண்டு விட்டனர். சங்க் பரிவார்கள் முஸ்லிம்களுக்கு கடப்பாரை மூலம்தான் கரசேவை நடத்திக்காட்டினார்கள் என்றால் இந்த கட்டப்பஞ்சாயத்து நாட்டாமைகள், தங்களின் பேனா மூலமாகவே முஸ்லிம்களின் இதயத்தில் வேறொரு கரசேவையை நடத்தி, அட அறிவு கெட்ட முஸ்லிம்களே! இன்னுமா நீங்கள் எங்களை நம்பி இருக்கின்றீர்கள் (?) என்று நமக்கு ஒரு பாடத்தினை கற்று தந்துள்ளனர். இந்த தீர்ப்பினை கேட்டதும் முஸ்லிம்களின் இதயத்தில் ஈட்டி பாய்ந்து “கண்கள் குளமானதம்மா பாபர் பள்ளியை நினைக்கையிலே” என்ற வரிகள் தான் நம் நினைவுக்கு வந்தது!.

இதனிடையே உச்ச நீதிமன்றம் முஸ்லிம்களின் கண்களில் வடியும் அந்த நீரை துடைப்பதைப் போல், அலகாபாத் நீதிபதிகள் மீது சரமாரி புகார்களை தெரிவித்து கண்டனம் தெரிவித்ததையும் நாம் நன்றியோடும் நம்பிக்கையோடும் பார்க்கின்றோம்!. என் இஸ்லாமிய சகோதரர்களே! இயக்கங்களே!!. இனியும் இந்த அரசியல் அயோக்கியர்களை நம்பி பாபரி பள்ளி விசயத்தில் அவர்களின் பின்னால் நாம் செல்வது முறைதானா? என்றொரு கேள்வியை நமக்கு நாமே கேட்கும் நாள் வந்துவிட்டதாகவே நமக்கு படுகின்றது!. அதுமட்டுமில்லாமல் வருகின்ற தேர்தல்களில் ஓட்டு என்ற அந்த ஆயுதம் மூலம் நாமும் ஒரு கரசேவையை நடத்திக்காட்டி இந்த காங்கிரஸ் அரசை ஆட்சியிலிருந்து விரட்டி அடிக்க நேரம் வந்துவிட்டது!. உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு கடைசியாய் நாம் காத்திருப்போம். அங்கும் நமக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் “யா அல்லாஹ் இது உன்னுடைய இல்லம். எங்களை காட்டிலும் உனக்கே அதில் முக்கியத்துவம் உண்டு!. எங்களால் முடிந்தவரை நாவால் போராடினோம்!. ஆனால் கரத்தால் போராட சக்தியற்றவர்களாக இருக்கின்றோம்!. அதனால் நீ எங்களை குற்றம்பிடித்து விடாதே!. எங்களின் சகோதர இயக்கங்களும் ஆளுக்கொரு திசையில் எங்களை வழிநடத்தி எங்களுக்குள்ளே மேலும் மேலும் ஒற்றுமையை குழைத்துக் கொண்டிருக்கின்றனர்!. எனவே முதலில் அவர்களுக்குள் ஒற்றுமையைக் கொடு!. நீ அபாபில் பறவையை வைத்து சுட்ட சிறு கல்லினால் யானைப்படைக்கே கரசேவை நடத்தியவன், விளையாட்டு காட்டியவன்!!. அதேபோல் இந்த பாபர் பள்ளிக்கும் நீ அருள்புரிவாயாக என்று மனமுறுகி துவா செய்தவனாக!

அதிரை முஜீப்.

பாவ‌ப்ப‌ட்ட‌ ஜென்ம‌ங்க‌ள்.. 6

அதிரைநிருபர் | October 12, 2010 | ,

சென்ற செப்டம்பர் 30ம் தேதி உத்திர பிரதேச அலகாபாத் நீதி மன்றம் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அளித்த தீர்ப்பு உரிய ஆவணங்களை பரிசீலித்து கொடுக்கப்பட்ட தீர்ப்பாக தெரியவில்லை. பெரும்பாண்மையான மக்களின் ஐதீகத்தை (நம்பிக்கையை) வைத்து கொடுக்கப்பட்ட தீர்ப்பாக‌ உள்ள‌து.

இதற்கு நாடு முழுவதும் ஏன் இத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், பாதுகாப்புகளும் கொடுக்கப்பட்டன என்று தெரியவில்லை.

இதற்கு ஏன் இத்தனை நீதிபதிகள் பத்தி, பத்தியாக பல நாட்கள் தீர்ப்பை எழுதி முடித்தார்கள் என்பது தெரியவில்லை.

இத‌ற்கு ஏன் எல்லாத்த‌லைவ‌ர்க‌ளும் நாட்டு ம‌க்க‌ளை அமைதி காக்கும்ப‌டி கேட்டுக் கொண்டார்க‌ள் என்ப‌து தெரிய‌வில்லை.

ப‌ள்ளி வாச‌ல் தோறும் காவ‌ல‌ர்க‌ள் பாதுகாப்பிற்கு நிறுத்த‌ப்ப‌ட்டார்க‌ள் என்ப‌து தெரிய‌வில்லை.

அன்று ந‌ம் நாடே அமைதி காத்த‌த‌ன் அர்த்த‌ம் ஒன்றும் புரிய‌வில்லை.

மத்திய அரசு எதிர் பார்க்க‌ வைத்து ஏமாற்றிய‌த‌ன் கார‌ண‌ம் ஒன்றும் விள‌ங்க‌வில்லை.

ந‌ம் நாடு ம‌த‌ச்சார்ப‌ற்ற‌ நாடு என்று இறையாண்மை கூறி கிருஸ்துவ‌ ச‌மூக‌த்திற்கும் அதில் ஒரு ப‌ங்கை கொடுக்காம‌ல் விட்ட‌து ஏனோ?

இங்கு தோற்ற‌து பாப‌ரோ இல்லை ராம‌ரோ அல்ல‌. இந்தியாவின் இறையாண்மை தான் என்ப‌தில் ஐய‌ம் இல்லை.

ப‌ள்ளியை இடிக்க‌ ம‌த்திய‌ ராணுவ‌த்தை இற‌க்கி பாதுகாப்பு கொடுத்த‌ அர‌சு. நீதி ம‌ன்ற‌ தீர்ப்பு மூல‌ம் ந‌ம‌க்கு நிலத்தை மீட்டு திரும்பிக்கொடுத்துவிடும் என்ப‌து எத்த‌னை அறியாமை? என்ப‌தை நன்கு அறிந்து கொண்டோம் அறியாமையைத் தாண்டி. என்றும் அமைதி காப்போம். பொறுமை இழ‌க்க‌மாட்டோம்.

மனித‌ர்க‌ள் மட்டும் தான் த‌வ‌றிழைப்பார்க‌ளா என்ன‌? நாங்களும் ம‌னித‌ர்க‌ள் தானே? என்று நீதிப‌திக‌ள் நினைத்துக்கொண்டார்க‌ள் போலும்.

நாட்டில் எவ்வ‌ள‌வோ இட‌மிருந்திருக்க‌ கோவிலை இடித்து அத‌ன் மேல் ப‌ள்ளி க‌ட்ட‌ பாப‌ருக்கு அவ‌சிய‌ம் வ‌ந்த‌தேனோ?

உரிய‌ ஆவ‌ண‌ங்க‌ளை ந‌ம்பாம‌ல் வெறும் ஐதீக‌த்தை ந‌ம்பும் நீதி ம‌ன்ற‌ம் கைதேர்ந்த‌ ஜோதிட‌ர்க‌ளை வ‌ருங்கால‌த்தில் ப‌ணிக்கு நிய‌மிக்குமோ? என்ன‌வோ? ஒன்றும் புரிய‌வில்லை. கேட்க‌ நாதியில்லை.

அன்று பள்ளியை இடித்த‌து த‌வறென்று கூறிய‌ அர‌சு. இன்று ப‌ள்ளி நில‌த்தை யாருக்கோ ப‌ங்கிட்டு கொடுப்ப‌தில் பெருமித‌ம் கொள்கிற‌து.

இறுதியில் பாவ‌ப்ப‌ட்ட‌ ஜென்ம‌மாகிப்போன‌து பாப‌ரோ இல்லை ராம‌ரோ அல்ல‌. இந்திய‌ இறையாண்மை எத்த‌னை தான் இடித்தாலும் உதைத்தாலும் அதை இன்முக‌த்துட‌ன் ஏற்றுக்கொள்ளும் சிறுபாண்மை இஸ்லாமிய‌ர் தான்.

அல‌காபாத் நீதி ம‌ன்ற‌ தீர்ப்பு எங்க‌ளுக்கு இறுதி தீர்ப்ப‌ல்ல‌. கியாம‌த் நாளே (இஸ்லாம் கூறும் யுக முடிவு நாள்) எங்க‌ளுக்கு இறுதி தீர்ப்பு நாள்.
எது எப்ப‌டியோ "வாழ்க‌ பார‌த‌ம்" ம‌ற்றும் ச‌ந்திசிரிக்காத‌ ச‌மூக‌ நீதி...

வ‌ருந்திய‌ ம‌ன‌துட‌ன்.....

--- மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

பாபர் மசூதியும் (கட்ட) பஞ்சாயத்துத் தீர்ப்பும்! 19

அதிரைநிருபர் | October 03, 2010 | ,

தமுமுக தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களின் கருத்து



விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் அறிக்கை

சென்னை,அக்.3:அயோத்தி வழக்கில் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்காமல், 60 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்சும், அத்வானியும், மோடியும், சோவும் என்ன சொல்லி வந்தார்களோ அதையே ஒரு வரி விடாமல் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பாக கூறியிருக்கிறார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்னும் வகையில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஒருதலைப்பட்சமானது, அநீதியானது. இத்தகைய தீர்ப்புகளால் நாட்டில் நல்லிணக்கமும் சகோதரத்துவமும் சீர்குலைந்து அமைதியின்மை ஏற்படவே அதிகம் வாய்ப்பிருக்கிறது.

பாபர் மசூதி இடம் முஸ்லிம்களுக்குச் சொந்தமானதா இல்லையா என்பதுதான் பிரச்சனையின் அடிப்படை. அந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் பெரிய பொறுப்பிலுள்ள நீதிமன்றம், அதைச் சொத்து ஆதாரங்களின் அடிப்படையிலும் அனுபவப் பாத்தியதையின் அடிப்படையிலும் அணுகாமல், ஒரு சொத்து யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்கச் சட்டம் கூறுகிற வழிமுறைகளைப் புறந்தள்ளிவிட்டு, தீர்ப்பு வழங்கியிருப்பது கண்டனத்துக்குரியது.

450 ஆண்டுகாலமாக அயோத்தியில் பாபர் மசூதி இருந்ததும், அங்கே முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்ததும், 1949ல் அங்கே வலுக்கட்டாயமாக ராமர் சிலைகளை உள்ளே நிறுவி, அதைக் காரணம் காட்டி மசூதியை இழுத்து மூடியதும், 1992ல் இந்துத்துவச் சக்திகள் பாபர் மசூதியை இடித்துத் தகர்த்ததும் நம் கண்முன்னே நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகள். ஆனால், ராமர் அயோத்தியில்தான் பிறந்தார் என்பதற்கான வரலாற்று ஆதாரமோ ஆவணமோ எதுவும் இல்லை என்பதும் ராமர் ஒரு புராண நாயகன்தான் என்பதும் ஒரு சாதாரண பாமரனுக்குக்கூடப் புரியும். இது இரண்டு நீதிபதிகளுக்குப் புரியாமல் போனது வியப்பளிக்கிறது.

மேற்படி உண்மைகளை மூன்றாவது நீதிபதி தனது தீர்ப்பில் சொல்லியும், பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு என்கிற அடிப்படையில் அது மூடி மறைக்கப்படுகிறது.

அயோத்தி நில வழக்கை ஆதாரங்களின் அடிப்படையில் அணுகி தீர்ப்பு வழங்காமல், 60 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்சும், அத்வானியும், மோடியும், சோவும் என்ன சொல்லி வந்தார்களோ அதையே ஒரு வரி விடாமல் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாகவே கருதவேண்டியுள்ளது.

பாபர் மசூதியை இடித்துத் தகர்த்த அத்வானி உள்ளிட்ட இந்துத்துவச் சக்திகளின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களைச் சுதந்திரமாக உலவவிட்டுள்ள நீதிமன்றமும் சட்டமும், இப்போது மசூதியையும் கபளீகரம் செய்து இந்துத்துவச் சக்திகளிடம் ஒப்படைக்கத் துணிந்திருப்பது மிகப் பெரும் மோசடியாகும். ஏற்கனவே நம்பிக்கை இழந்து விரக்தியில் வாழும் இஸ்லாமிய மக்களுக்கு இது மேலும் ஆத்திரமூட்டும் செயலாகும்.

இத்தகைய ஒரு நெருக்கடியான சூழலில், அநீதி இழைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் பக்கம் நின்று அவர்களின் உரிமையை மீட்கப் போராடுவது ஜனநாயகச் சக்திகளின் கடமை என விடுதலைச் சிறுத்தைகள் கருதுகிறது.

பாபர் மசூதி இருந்த இடத்தில் திரும்பவும் மசூதியைக் கட்டித் தருவோம் என்று காங்கிரஸ் அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வரை போராடுவோம் என்று மதச்சார்பற்ற ஜனநாயகச் சக்திகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் அறைகூவல் விடுக்கிறது." இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்

தகவல்: சின்னகாக்கா


பாபர் மசூதியும் பஞ்சாயத்துத் தீர்ப்பும்!


பாபர் மசூதி இடப் பிரச்சனை குறித்து அலகாபாத் உயர்நீதி மன்ற லக்னெள கிளை 30-09-2010 அன்று வழங்கிய தீர்ப்பு பல்வேறு கருத்துகளை உருவாக்கியிருக்கிறது. நீதிபதிகள் சிபகதுல்லாஹ் கான், சுதிர் குமார் அகர்வால், தர்ம் வீர் சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச்அளித்துள்ள தீர்ப்பு இந்து மகா சபை, நிர்மோஹி அகாரா மற்றும் முஸ்லிம்களுக்கும்ஆக மூன்று கூறுகளாக நிலத்தைப் பங்கு போட்டிருக்கிறது.

நீதிமன்றம் என்பது ஆவணங்கள், ஆதாரங்கள், சாட்சியங்கள், நிரூபிக்கப் பெற்ற நடப்புகள் இவற்றைக் கொண்டு தெள்ளத் தெளிவான தீர்ப்பினை அளிக்கவேண்டுமென்பதே நடைமுறைச் செயல்பாடாகும்.உதாரணமாக ஒரு குழந்தைக்கு உரிமையும் சொந்தமும்கொண்டாடித் தான்தான் தாய் என இருவர் நீதிமன்றத்தை அணுகுவார்களேயானால் உரிய வகையில் விசாரித்துப் பெற்றது, வளர்த்தது, பேணிப்பாதுகாப்பது, போஷிப்பது, இருப்பது எனப் பல்வேறு கூறுகளைத் தகுந்த ஆவணம், சாட்சியம், பரிசோதனை முதலிய தன்மைகளைக் கொண்டு ஆய்ந்து இன்னாருக்குரியது இக் குழந்தை என நீதிமன்றம் தீர்ப்பளிப்பதே முறைமையுடையதாகக் கருதப்படக்கூடும். அதை விடுத்து இருவருக்குமே இக் குழந்தை உரியதெனத் தீர்ப்பு அமைந்தால் குழப்பமே மிஞ்சும்.

அதேபோன்று ஒரு நிலம் யாருக்குச் சொந்தம் எனஇருவருக்கிடையே வழக்கு வரும்போது தீர விசாரித்து இன்னாருக்குத்தான் இது உரியது எனத் தீர்ப்பளிப்பதே நீதிமன்றச் செயல்பாடாகக் கருதப்படுகிறது. அவ்வாறின்றி இருவருக்கும் பங்கு போட்டுத் தருவது எங்களுக்குப் பங்குபோட்டுத் தாருங்களெனெ வாதியும் பிரதிவாதியும் கேட்டுக் கொள்ளாத நிலையில் நீதி மன்ற நடவடிக்கையாக அமையவியலாதெனச் சட்டவியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

பிரச்சனைக்குரிய மொத்த வளாகமும் யாருக்குரியதென்பதே வழக்கின் அடிப்படையான அம்சமாகும். மூன்று தரப்பினர் தங்களுக்கே முழுமையாகச்  சொந்தமென வழக்கு தொடுத்தனர்.

இன்று நேற்றல்ல 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் வழக்கு இது. மேலும் இதுசம்பந்தமாக ஒரு வழக்கல்ல இரு வழக்கல்ல ஏறக்குறைய 88 வழக்குகள் போடப்பட்டன.

இது உணர்வுப்பூர்வமானதும் மத சம்பந்தப்பட்டதுமானதெனக் கூறித் தங்கள் அரசியல்வாழ்வுக்கும் மேன்மைக்கும் உரிய தீனியாக அரசியல்வாதிகள் இப் பிரச்சனையை உலகளவில் பெரிதுபடுத்தி இந்திய அளவில் ஒன்றுபட்டிருந்த மக்கள் மனதில் விஷத்தை விதைத்தார்கள். பிரச்சனைக்குரிய இடத்தில்கூட ஒருவருக்கொருவர் நேசத்துடனும் பாசத்துடனும் அதுவரை வாழ்ந்துவந்த இரு சமுதாயத்தினரின் நிலையை மோசப்படுத்தினார்கள். இந்தியத் திருநாட்டில் கோலோச்சி இருந்த சகோதரத்துவத்திற்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் சேதம் விளையச் செய்தார்கள்.

பிற நாடுகளில் குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் கிறிஸ்துவத் தேவாலயங்கள் சில இப்போது பள்ளிவாசல்களாக மாறியுள்ளன. உதாரணமாக, இலண்டனின் புறப்பகுதியில் க்ரே ஃபோர்ட் எனும் இடத்தில் இப்போது பள்ளிவாசல் அமைந்துள்ள கட்டடம் கிறிஸ்தவ சர்ச் ஆக இருந்த இடமாகும். இந்த இடத்தைக் கிறிஸ்தவர்களால் பராமரிக்கப்பட முடியாமல் போய்விட்டது. அவ்ர்களால் அந்த ஆலயத்தைத் தொடர்ந்து நடத்தமுடியவில்லை. அந்த கட்டடத்தை முஸ்லிம்கள் வாங்கிப் பள்ளிவாசலாக்கியுள்ளனர். ஈத் பெருநாள்,ஜூம் ஆ தொழுகைகள் உள்பட அனைத்துத் தொழுகைகளும், மாலை மதரஸாவும் நடைபெற்று வருகின்றன.

இதைப் போல பக்கிங் ஹாம் உள்ளிட்ட பல்வேறிடங்களிலும் சர்ச் இருந்த இடங்களில் பள்ளிவாசல்கள் அமைந்துள்ளன. இதனால் அங்கு எந்தவொரு பிரச்சனையும் எழவில்லை. அங்குள்ள அரசியல்வாதிகள் இதுவிஷயத்தில் தலையிடுவதுமில்லை. அதனால் அமைதி குறைவதுமில்லை.

தொல்லியல் ஆய்வுத்துறையினரின் கூற்றுப்படி- அவர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையின்படி- பல ஆண்டுகளாகக் கேட்பாரற்றுக்கிடந்த இடிந்துபோன கட்டடம் சிதைந்திருந்த இடத்தில் பாபரி மசூதி கட்டப்பட்டதெனத் தெளிவாகிறது. கோயில் ஒன்று இடிக்கப்பட்டு அதன் மீது மசூதி கட்டப்படவில்லை, மாறாக இடிபாடுகளாகக் கிடந்த ஓரிடத்தின்மீதுதான் மசூதி கட்டப்பட்டதென்பதை நீதிபதி சிபகதுல்லாஹ் கான் தனது தீர்ப்பில் உறுதிப்படுத்தியுள்ளார்.

450 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாபர் மசூதியாக விளங்கிய இடத்தில் 23-12-1949 அன்று வலுக்கட்டாயமாகச் சிலைகள் கொண்டுவந்து வைக்கப்பட்டுப் பிரச்சனைகள் உருவாக்கப்பட்டன. பி.ஜே.பி. தனது அரசியல் இலாப நோக்கில் இப்பிரச்சனையைக் கையில் எடுத்து அதன் விளைவாக 1992 டிசம்பர் 6 ல் மசூதி சூறையாடப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டது. இது வரலாற்றுப்பூர்வமான ஆதாரமாகும்.இதனை அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

450 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாபர் மசூதி இருந்துவந்ததும் பல நூறாண்டுகள் தொழுகை நடந்துவந்ததுமான வரலாற்றுப்பூர்வமான வலுமிக்க ஆதாரத்தைப் புறந்தள்ளிவிட்டுப் புராண நாயகரான இராமர் அங்கு தான் பிறந்தாரென்ற வரலாற்றுப்பூர்வமில்லாத ஒரு சாராரின் நம்பிக்கையை மட்டும் ஏற்று வலுக்கட்டாயமாகச் சிலை வைக்கப்பட்ட இடத்தை இந்துத்துவ வாதிகளுக்கு ஒதுக்கியிருப்பது ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பாக இருக்கலாகுமோ எனச் சட்டவியல் அறிஞர்கள் தங்கள் புருவத்தை உயர்த்துகின்றனர்.

கிராமங்களில் உள்ளூர்ப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பஞ்சாயத்துச் சபை வைத்திருப்பார்கள். இருவருக்கிடையே பிரச்சனை என்றால் இருவருக்குமிடையே மத்தியஸ்தம் பேசி சமரசம் செய்வார்கள்.

நகர்ப் புறங்களில் கட்டைப் பஞ்சாயத்து செய்வதுமுண்டு. நிலப்பிரச்சனையில்  ஆளுக்குக் கொஞ்சம் என்று பங்கு  போட்டுத் தருவது பஞ்சாயத்து வேலையே தவிர நீதி மன்றப் பணியாகாது. எனவேதான் ராஜீவ் தவான், பி.பி.ராவ் போன்ற சட்ட வல்லுநர்கள் அலஹாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பினை “ஒரு கட்டைப் பஞ்சாயத்தின் தீர்ப்பு இது” எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.தினமணி நாளிதழும் இதுபோன்றே தலையங்கம் தீட்டியுள்ளது.

இது போன்ற பஞ்சாயத்திற்காக முஸ்லிம் அமைப்பினர் நீதிமன்றத்தை அணுகவில்லை. வரலாற்றுப் பொக்கிஷமாகப் பாதுக்காக்கப்படவேண்டிய, தங்களுக்கு மட்டுமே உரித்தான இடம் பிறரால் பறிக்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டமைக்கு நீதி கேட்டும் மீண்டும் அந்த இடத்தை மீட்டுக் கேட்டும்தான் முஸ்லிம் அமைப்பினர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். உச்சநீதிமன்றத்தை அணுகும் பணிகளைத் தொடங்க அவர்கள் ஆயத்தம் செய்துவருகின்றனர்.இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் 143(2) பிரிவின்படி இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தான் விசாரிக்கப்படவேண்டும்.  உச்சநீதிமன்றத்தில் முடிவெடுக்கப்பட வேண்டிய ஒன்றை சாலையோரத்தில் முடிவெடுக்க எவரும் முயலுதல் ஆகாது. அரசியல்வாதிகளால் முடியுமென்றால் இப் பிரச்சனை எப்போதோ முடிந்து போயிருக்கும்.நிச்சயமாக அவர்களால் முடியாது; முடிக்கவும் விரும்பமாட்டார்கள்.

இந்தியத் திருநாட்டின் உச்சநீதி மன்றத் தீர்ப்புக்காகக் காத்திருப்பது ஒன்றே இப்போது செய்யப்படவேண்டியதாகும். ஆனால் எத்தனைக் காலம் காத்திருக்க வேண்டிவருமோ, அந்தத் தீர்ப்பும் எப்படி அமையுமோ என்பதெல்லாம் எல்லாம் வல்ல இறைவனுக்கு மட்டுமே தெரிந்தவிஷயமாகும்.

ஒன்று மட்டும் உறுதியாக்கப்பட்டுள்ளது- இந்தியத் திருநாட்டில் இதுவரை நிகழ்ந்துவந்துள்ள மதக் கலவரங்களுக்கும் - பல குண்டு வெடிப்புகளுக்கும் -  முஸ்லிம்களுக்கும் எந்தவோர் அடிப்படை சம்பந்தமுமில்லை; அவர்கள் மீது வேண்டுமென்றே சுமத்தப்பட்ட அல்லது திணிக்கப்பட்ட பழிச் செயல்கள் அவை என்பது நிரூபணமாகியுள்ளது. இவ்வளவு பாதகமான தீர்ப்பிற்குப் பிறகும் முஸ்லிம்கள் பேணிவரும் பென்னம்பெரிய அமைதியும் பொறுமையுமே அதற்கு மிகப் பெரிய சான்றுகளாகும்.

“மேலும் எத்தனையோ நபிமார்கள்- அவர்களுடன் அல்லாஹ்வின் நல்லடியார்கள் பெருமளவில் சேர்ந்து போர் செய்தனர். எனினும் அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட (துன்பத்) திற்காக அவர்கள் தைரியம் இழந்துவிடவில்லை; பலவீனம் அடைந்துவிடவுமில்லை; (எதிரிகளுக்குப்) பணிந்துவிடவுமில்லை;அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே நேசிக்கிறான்”  (இறைமறை- 3:146) என்ற அல்லாஹ்வின் வார்த்தைகளில் ஆழமான அழுத்தமான நம்பிக்கை உடையவர்கள் அல்லவா நாம்!

---பேராசிரியர்.டாக்டர் சே.மு.மு. முகமதலி
     பொதுச் செயலாளர், தமிழ் நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்.


பாபர் மசூதி தீர்ப்பு தரும் 1/3 படிப்பினைகள்!

பாபர் மஸ்ஜித் பிரச்சினை உருவான விதம்

அதிரைநிருபர் | September 24, 2010 | ,


பாபர் மஸ்ஜித் தீர்ப்பு வரவிருக்கும் இந்த சூழ்நிலையில், நீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும்  மக்கள் அனைவரும் பொருமையாக இருந்து அமைதி காக்க வேண்டும் என்று பல அறிக்கைகள் நம் சமுதாய இயக்கங்கங்களிடமிருந்து  வந்தவண்ணமுள்ளது. பாபர் மஸ்ஜித் பிரச்சினை உருவான விதம் என்ற தலைப்பில் TNTJ இணையதளத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான இந்த உண்மை அறியும் செய்தியை உங்கள் அனைவரிடம் பகிர்ந்துக்கொள்கிறோம்.  நாம் அனைவரும் அறிந்துக்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தகவல்.

--அதிரைநிருபர் குழு




5

1949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸ்லிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக் காக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமனர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று ஒரு கும்பல் கலாட்டாவில் இறங்கியது.

வன்முறைக் கும்பல் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலை களை வைத்ததாக பைஸாபாத் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசுகள் தொழுகைக்குத் தடை விதித்ததிலிருந்து பாபர் மசூதி பிரச்சினை நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக நீடித்து வருகிறது.

‘இராமர் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதே பாபர் மஸ்ஜித்’ என்ற புளுகு மூட்டையை சூதுவாது அறியாத இந்துக்கள் மனதில் அவிழ்த்துவிட்டு அவர்களில் பலர் அந்தப் பொய்யை நம்புகின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.
‘இராமருக்காகக் கட்டப்பட்ட கோவில் ஒன்று அயோத்தியில் இருந்து அதை இடித்து விட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது’ என்ற சங்பரிவாரத்தின் வாதம் உண்மையாக இருந்தால் பாபர் மசூதிக்காக எந்த முஸ்லிமும் போராடமாட்டார். பிறருக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிர மிப்புச் செய்து அதில் பள்ளிவாசல் கட்டுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

பாபர் மசூதி பற்றி சங்பரிவாரத்தினரின் வாதங்கள் முற்றிலும் பொய்யாக இருப்பதால் தான் பாபர் மசூதிக்காக முஸலிம்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இராமர் என்று ஒருவர் வாழ்ந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சட்டர்ஜி, ஏ.கே. மஜும்தார், நேரு உள்ளிட்ட பல தலைவர்கள் கூறியுள்ளதன் அடிப்படையில் இராமர் கற்பனைப் பாத்திரம் என்று கூறி பிரச்சினையை நாம் திசை திருப்ப மாட்டோம்.

ஏனெனில் அந்த இடத்தில் இராமர் கோவில் இருந்ததா? அது பாபரால் இடிக் கப்பட்டதா? அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டப்பட்டதா என்பதுதான் பிரச்சினையே தவிர இராமர் கற்பனைப் பாத்திரமா வரலாற்றுப் பாத்திரமா என்பது அல்ல.

இராமர் கற்பனைப் பாத்திரமாகவே இருந்தாலும் அவருக்காகக் கட்டப்பட்ட கோவிலை பாபர் இடித்திருந்தால் அது தவறு என்பதை எந்த முஸலிமும் மறுக்க மாட்டார்.

அயோத்தியில் ராமர் பிறந்தாரா?

அயோத்தியில், அதுவும் பாபர் மசூதி கட்டப்பட்டிருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்ற வாதம் எந்த அளவுக்குச் சரியானது என்பதைக் காண்போம்.

இராமரைப் பற்றி இந்துக்கள் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் சங்பரிவா ரத்தினரின் கூற்றுக்களின் அடிப்படையில் எடுக்கக் கூடாது. இந்து மதப் புராணங்களை மேற்கோள் காட்டியே முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் மனம் போக்கில் யாரேனும் இராமரைப் பற்றி முடிவு செய்தால் அது அவரது முடிவாகத்தான் இருக்குமே தவிர இந்து மதத்தின் முடிவாக இருக்க முடியாது.

இராமரைப் பற்றி முதன் முதலில் வால்மீகி என்பவர் சமஸ்கிருத மொழியில் இராமாயணத்தை எழுதினார். இராமரைப் பற்றி அதில் கூறப்பட்ட விஷயங்கள் தான் இராமரைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாகும்.

வால்மீகி இராமாயணத்தில் இராமர் பிறந்ததைப் பற்றிக் கூறும்போது, ‘அவர் திரேதா யுகத்தில் பிறந்தார் என்று கூறப் பட்டுள்ளது.

இந்துக்களின் கால அளவை முறையில் யுகம் என்பது காலத்தை அளக்கும் பெரிய அலகுகளில் ஒன்று. யுகங்கள் நான்கு. அவை:

கிருத யுகம் 17,28,000 (பதினேழு இலட் சத்து இருபத்து எட்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது.

திரேதா யுகம் 12,96,000 (பன்னிரெண்டு இலட்சத்து தொண்ணூற்று ஆறாயிரம்) ஆண்டுகள் கொண்டது.

துவாபர யுகம் 8,64,000 (எட்டு இலட்சத்து அறுபத்து நான்காயிரம்) ஆண் டுகள் கொண்டது.

கலியுகம் 4,32,000 (நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது) என்பனவாகும்.

அதாவது கிருத யுகத்தில் பாதி அளவு கொண்டது திரேதா யுகம். திரேதா யுகத்தில் பாதி அளவு கொண்டது துவாபர யுகம். துவாபர யுகத்தில் பாதி அளவு கொண்டது கலியுகம்.

இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் கலியுகம். கலியுகம் கிறிஸ்து பிறப்பதற்கு 3102 வருடங்களுக்கு முன் துவங்குகிறது. இயேசுவுக்குப் பின் 2008 ஆண்டுகள் ஆகின்றன. இதன்படி கலியுகம் துவங்கி 5110 ஆண்டுகள் நடக்கிறது. இந்த யுகத்தில் இராமர் பிறக்கவில்லை.

கலியுகத்துக்கு முந்திய யுகம் தூவாபர யுகம். இந்த யுகத்திலும் இராமர் பிறக்க வில்லை.

இந்த யுகத்துக்கும் முந்திய யுகம்தான் திரேதா யுகம். இந்த யுகத்தின் கடைசி வருடத்தில் இராமர் பிறந்திருந்தார் என்று வைத்துக் கொண்டால் கூட 8,64,000 + 5,110 = 8,69,110 எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் இராமர் பிறந்தார் என்பது வால்மீகி இராமாயணத்தின் தீர்ப்பு.

இராமர் பிறந்த காலம் பற்றி வால்மீகி இராமாயணம் கூறுவது போலவே அவர் பிறந்த ஊர் பற்றி கூறும்போது, ‘இராமர் அயோத்தி என்னும் பட்டணத்தில் பிறந் தார்’ எனக் கூறுகிறது.

அப்படியானால் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அயோத்திப் பட்டணம் இருந்திருக்க வேண்டும். ஆனால் உ.பி.யில் உள்ள அயோத்தி எப்போது தோன்றியது என்று பல விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், மத்திய அரசாங்கத்தின் தொல் பொருள்துறை சார்பில் அயோத்தியை ஆய்வு செய்து 1976, 77ல் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் 52, 53 ஆகிய பக்கங்களில் ‘அயோத்தி என்ற ஊர் உண்டானதும், அதில் மக்கள் வசிக்கத் தொடங்கியதும் கி.மு. 700ல்தான் இருக்க முடியும்’ எனக் குறிப்பிடுகின்றார்.

அதாவது 2708 ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்திருக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று அவர்களின் அறிக்கை கூறுகிறது.

இதன் பின்னர், சி.பி.லால், கே.என். தீட்சித் ஆகிய வரலாற்று வல்லுனர்கள் 1979, 80ல் இதை மறு ஆய்வு செய்தனர். தொல்பொருள் துறையினரின் மேற்கொண்ட முடிவு சரியானதே என்று அவர்கள் கண்டுபிடித்தனர்.
அயோத்தியில் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் இராமர் பிறந்தார் என்று வால்மீகி கூறுகிறார். ஆனால் ராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் அந்தக் காலத்தில் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்த தில்லை என்பது தெளிவாகிறது.

இராமாயணத்தையும் மறுக்காமல், தொல்பொருள் அறிஞர்களின் கண்டுபிடிப் புகளையும் மறுக்காமல் ஒரு முடிவுக்கு வருவதாக இருந்தால் என்ன முடிவுக்கு இந்துக்கள் வர வேண்டும்?

இந்த அயோத்தியின் வயது 2708 ஆண்டுகளாக இருக்கலாம். ஆனால் ராமாயணத்தில் கூறப்பட்ட அயோத்தி இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அந்த அயோத்தி இருந்திருக்கலாம். ஒரு பெயரில் பல ஊர்கள் இருப்பது சாதாரண மானதுதான் என்ற முடிவுக்குத்தான் அவர்கள் வரவேண்டும். அப்போதுதான் நடைமுறை உண்மைக்கு முரணில்லாமலும், இராமாயணத்தை மறுக்காமலும் முடிவு எடுத்ததாக அமையும்.

‘இராமர் பிறந்தது இந்த அயோத்தி அல்ல; வேறு அயோத்திதான்’ என்பதற்கு இராமாயணத்திலேயே இன்னும் பல சான்றுகள் உள்ளன.

அயோத்தியைப் பற்றி பேசும் வால்மீகி இராமாயணம் சரயூ நதியைப் பற்றியும் கூறுகிறது. சரயூ நதி அயோத்தியில் இருந்து ஒன்றரை யோஜன் தூரத்தில் உள்ளது என்று கூறுகிறது. ஒன்றரை யோஜன் என்பது இன்றைய கணக்குப்படி 23 கிலோ மீட்டர் ஆகும்.

ஆனால் இப்போது நாம் அயோத்தி சென்று பார்த்தால் சரயூ என்ற பெயரில் ஒரு நதி அங்கே ஓடினாலும், அது அயோத்திலேயே ஓடுகிறது. அயோத்தியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் அது இல்லை.

அப்படியானால் இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தியும் சரயூ நதியும் இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அயோத்தி என்ற பெயரில் ஒரு ஊரும், அதிலிருந்து 23 கி.மீ தொலைவில் சரயூ என்ற பெயரில் ஒரு நதியும் இருந்திருக்க வேண்டும் என்று நம்பினால்தான் இராமா யணம் கூறுவது மெய்யாகும்.

”இந்த அயோத்திதான் அந்த அயோத்தி” என்று கூறுவது இராமாயணத்தை மறுத்து இந்து மதத்தையே மறுப்பதாக ஆகிவிடும்.

அதுபோல் சரயூநதி கங்கை எனும் பெருநதியில் சங்கமம் ஆகிறது என்று வால்மீகி இராமாயணம் குறிப்பிடுகிறது. ஆனால் உ.பி.யில் உள்ள சரயூ நதி கங்கையில் சங்கமம் ஆகவில்லை. மாறாக ராப்தி எனும் நதியில் சங்கமமாகிறது. இதிலிருந்து தெரிய வருவது என்ன? இராமாயணம் குறிப்பிடுவது இந்த அயோத்தியையோ, இந்த சரயூ நதியையோ அல்ல என்பதுதான். மேலும் சரயூ நதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்வதாக வால்மீகி ராமாயணம் வர்ணிக்கிறது. ஆனால் உ.பி. யில் உள்ள சரயூ நதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கிறது. அதை ஆய்வு செய்த ஷேர்சிங் என்ற ஆய்வாளர் ஒரு உண்மையைக் கண்ட றிந்து வெளிப்படுத்தியுள்ளார்.

நேபாளத்தில் ஒரு அயோத்தி உள்ளது. அதிலிருந்து 20 கி.மீ தொலைவில் ஒரு நதி ஓடுகிறது. அது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்கிறது. மேலும் அது கங்கையில் சங்கமம் ஆகிறது என்று அவர் கண்டுபிடித்துள்ளார்.

எனவே இராமர் பிறந்த அயோத்தி உ.பி.யில் உள்ள அயோத்தி என்று யாராவது நம்பினால் அவர்கள் இராமாயணத்தை மறுத்தவர்களாகின்றனர்.
இராமாயணத்தில் கூறப்படும் அடையாளங்களும், தன்மைகளும் எந்த அயோத்திக்குப் பொருந்துகிறதோ அந்த அயோத்திதான் இராமர் பிறந்த அயோத்தி என்று முடிவு செய்வதுதான் இந்துமதத்தின் ஆதாரத்தால் நிரூபிக்கப்பட்ட தாகும்.

அயோத்தியில் இராமர் கோவில் இருந்ததா?

‘பாபர் மசூதி 1528ல் கட்டப்பட்டது. மீர்பாகி என்ற பாபரின் தளபதி அங்கிருந்த ராமர் கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் கோவிலைக் கட்டினார்! என்ற வாதத்திலாவது உண்மை உள்ளதா என்றால் அதிலும் உண்மை இல்லை.

இந்த இராமர் கோவிலை விக்கிரமா தித்த மன்னர் கட்டினார் என்று சங்பரிவா ரத்தினர் கூறுகின்றனர். விக்கிரமாதித்தன் என்பது சோழன், பாண்டியன் போன்ற பொதுப் பெயராகும். சந்திர குப்தர், சமுத்திர குப்தர் உள்ளிட்ட குப்த மன்னர்கள் தான் விக்கிரமாதித்தன் என்ற பெயரால் குறிப்பிடப்படுகின்றனர்.

அவர்களில் இராமர் கோவிலைக் கட்டிய மன்னர் யார் என்பதைப் பற்றி பலவறாக முரண்பட்டுக் கூறுகிறார்கள். கோவிலைக் கட்டிய விக்கிரமாதித்தன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களின் கூற்று பொய் என்பதில் ஐயம் இல்லை.

குப்த மன்னர்கள் உ.பி.யில் சில பகுதி களை ஆட்சி செய்த காலம் கி.பி. 300 முதல் கி.பி. 1100 வரையாகும். இந்த எண்ணூறு ஆண்டுகளில் ஆட்சி செய்த குப்த மன்னர்களே விக்கிரமாதித்தன் எனப்படு கின்றனர்.

கி.பி. 300 முதல் 1100 வரை அயோத்தி என்று கூறப்படும் நகரில் மனித சஞ்சாரமே இருந்ததில்லை. இந்திய தொல் பொருள் இலாகாவின் தலைவர்
பி.பி. லால், 1975ல் சமர்ப்பித்த ஆய்வ றிக்கை ‘தி வீக்’ (25.02.90) எனும் ஆங்கில ஏட்டிலும் ‘சன்டே டைம்ஸ்’ (20.11.87) ஏட் டிலும் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் பலவிதமான ஆதாரங்களை எடுத்துக் காட்டி அயோத்தி எனப்படும் அந்தப் பகுதியில் குப்தர்கள் ஆட்சி செய்த 300 லி 1100 வரையிலான கால கட்டத்தில் எந்த மனிதனோ, கட்டடமோ, கோவிலோ, வேறு எதுவுமோ இருந்த தில்லை” என்று அடித்துக் கூறுகிறார்.

‘மனிதர்கள் வாழாத இடத்தில் குப்தர்கள் கோவில் கட்டினார்கள்’ என்று கூறுவது பொய் என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது. இல்லாத கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்பதை இந்து நண்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?

இராமர் கடவுளாகக் கருதப்பட்டது எப்போது?

இராமருக்குக் கோவில் கட்டுவது என்றால் அவரை இந்துக்கள் கடவுளாகக் கருதத் தொடங்கிய பிறகுதான் கட்டுவார்கள். இராமரைக் கடவுள் என்று இப்போது இந்துக்கள் நம்பினாலும் ஆரம்பத்தில் இந்துக்கள் அவ்வாறு நம்பவில்லை. குறிப்பாக, கோவில் கட்டப்பட்டதாக சங்பரிவாரர் கூறும் 300, 1100 குப்தர் காலத்தில் இராமர் கடவுள்களில் ஒருவராகக் கருதப் படவில்லை.

கி.பி. ஆறாம் நூற்றாண்டில் அமர சிம்ஹ என்பவர் ‘அமர கோஷா’ என்ற பெயரில் சமஸ்திருத கலைக் களைஞ்சியத்தை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் கடவுளாகக் கருதப்பட்டவர்கள் என்ற பட்டியல் உள்ளது. அந்தப் பட்டியலில் இராமர் இல்லை. அந்தக் காலகட்டத்தில் இந்துக்கள் இராமரைக் கடவுளின் அவதாரமாகக் கருதவில்லை என்பதற்கு இது ஆதாரமாகவுள்ளது.

லட்சுமிதர் என்பவர் புனித யாத்திரைத் தலங்கள் என்ற பெயரில் 11 ஆம் நூற்றாண்டுவரை, அதாவது குப்தர்களின் கடைசிக் காலம்வரை இந்தியாவில் இருந்த புனிதத் தலங்களைப் பட்டியல் போட்டுள்ளார். அந்தப் பட்டியலில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.

குப்தர் ஆட்சியில் இராமர் கோவில் கட்டப்பட்டது உண்மை என்றால் அந்த ஆலயம் ஏன் புனித யாத்திரைத் தலங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை?

அதுபோல் எஸ்.எஸ். ஐயர் என்ற ஆய்வாளர், ‘இந்தியக் கோவில்கள், கட்ட டக்கலை, சரித்திரக் குறிப்புக்கள்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் பற்றி அவர் கூறவில்லை. விக்கிரமாதித்தன் கட்டிய கோவில்கள் என்ற தலைப்பில் ஐந்து கோவில்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.

ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராமச்சந்திர கத்ரி என்பவர் 1989 நவம்பர் 12 தேதியிட்ட ‘ரேடியன்ஸ்’ பத்திரிகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். என்சைக்ளோ பீடியா பிரிட்டானிகா உள்ளிட்ட பல ஆதாரங்களைக் காட்டி, கி.பி. 1100க்குப் பிறகுதான் இராமரைக் கடவுள் என்று கருதி வழிபடும் நிலை உருவானது எனக் கூறுகிறார்.

அதாவது கடைசி விக்ரமாதித்த மன்னர் காலம் வரை ராமர் என்பவர் இந்துக்களின் கடவுள்களின் அவதாரங்களில் ஒருவராக வணங்கப்படவில்லை.

கடவுளாகக் கருதப்படாதவருக்கு குப்தர்கள் கோவில் கட்டினார்கள் என்று மனசாட்சி உள்ள இந்துக்கள் நம்ப முடியுமா?

இன்னும் தெளிவாகச் சொல்வதானால், வால்மீகி எழுதிய இராமாயணம் சமஸ் கிருத மொழியில்தான் இருந்தது. சமஸ்கி ருதம் மக்களின் பேச்சு மொழியாக இருக்கவில்லை. பிராமனப் பண்டிதர்கள் மட்டுமே அறிந்த மொழியாகத்தான் இருந்தது. எனவேதான் இராமர், மக்களால் கடவுளாகக் கருதப்படவில்லை.

மக்கள் பேசுகின்ற இந்தி மொழியில் துளசிதாசர் என்பவர் இராமாயணத்தை மொழி பெயர்த்து வெளியிட்டார். இதன் பின்னர்தான் இராமாயணம் மக்கள் அறியும் காப்பியமாக ஆனது. துளசி தாசர் இந்தியில் ராமாயணம் வெளியிட்ட பின்பு தான் இராமர் கடவுள் அவதாரம் என்று மக்களால் கருதப்பட்டார்.

துளசி தாசர் காலம் என்ன?

 எந்தக் காலத்தில் இராமர் கோவில் இடிக்கப்பட்ட தாகக் கூறுகிறார்களோ, எந்தக் காலத்தில் பாபர் ஆட்சி புரிந்தாரோ, அதே காலத்தில் தான் துளசி தாசரும் வாழ்கிறார். அதுவும் அயோத்தியில் வாழ்கிறார். 1500 களில்தான் பாபர் ஆட்சி புரிகிறார். அந்த ஆட்சியின் கீழ்தான் துளசி தாசரும் வாழ்கிறார்.

இராமாயணம் இந்தி மொழியில் ஆக்கப்பட்டதே பாபர் காலத்தில்தான் என்பதும், பாபர் காலத்தில் இராமர் கடவுளாகக் கருதப்படவுமில்லை. இந்து மக்கள் அவரைப் பற்றி அறிந்திருக்கவும் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

இராமாயணமே இந்தியில் மக்கள் மத்தியில் பரவாத காலத்தில் இராமர் எப்படி கடவுளாகக் கருதப்பட்டிருப்பார்? எப்படி அவருக்குக் கோவில் கட்டபட்டிருக்கும் என்பதை நியாயவுணர்வுள்ள இந்துக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் முதல் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர் டாக்டர். ராதா கிருஷ்ணன். இவரது மகன் சர்வபள்ளி கோபால் இந்து பக்திமானும் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளருமாவார்.

இவர் ராமர் ஆலயம் பற்றிய ஆய்வுக் கட்டுரையில் ”கி.பி. 1750க்கு முன்பு வரை இந்தியாவில் இராமருக்காக எந்தக் கோவி லும் எந்தப் பகுதியிலும் இருந்ததில்லை. ராமர் கோவில்கள் அனைத்தும் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளே” எனத் திட்டவட்டமாக அறிவிக்கிறார்.

200 ஆண்டுகளுக்கு முன்னால் இராமர் கோவில்களே இந்தியாவில் இருக்கவில்லை என்றால் 1528ல் இல்லாத இராமர்கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்று நடுநிலையாளர்கள் சிந்திக்கக் கோருகிறோம்.

உண்மை என்னவென்றால் பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டியவர் இப்ரா ஹிம் லோடியாவார். இவர் 1524ல் பள்ளி வாசலுக்கான அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவர் அப்பணியைத் தொடர வில்லை. இப்ராஹிம் லோடியைக் கொன்றுவிட்டு அப்பகுதியைக் கைப்பற் றிய பாபர், 1528ல் அந்த அடித்தளத்தின் மீது பாபர் பள்ளியைக் கட்டினார். எனவே பாபர் கோவிலை இடித்தார் என்று கூறு வது முழுப் பொய் என்பது இதன் மூல மும் தெளிவாகிறது.

பாபர் கோவிலை இடிப்பவரா?

இதுவரை நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் மட்டுமே அறிவுடைய மக்களுக்குப் போதுமானதாகும். ஆயினும், ஒரு வாதத்துக்காக அங்கே கோவில் இருந்தாலும் பாபர் அதை இடித்திருக்க மாட்டார்.
ஏனெனில், இதே அயோத்தியில் ஹனுமான்கிரி, ஜென்மஸ்தான் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு செப்புப் பட்டயத் தில் எழுதி பாபர் மானியம் வழங்கியுள் ளார். அந்தக் கோவில்களின் நிர்வாகம் அதை நன்றியுடன் பாதுகாத்து வருகின்றன என்று ராம்ரக்ஷா திரிபாதி என்பவர் தக்க சான்றுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளார்.

கோவில்களுக்கு மானியம் வழங்கிய ஒருவர் எப்படி கோவிலை இடிப்பார் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்?

மேலும் பாபர் ஆட்சி புரிந்தபோது முஸலிம்களின் சதவிகிதம் இப்போதுள்ள தைவிட பன்மடங்கு குறைவாகவே இருந்திருக்கும். பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பு இல்லாமல் இருந்தால்தான் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். பெரும்பான்மை மக்களின் வழி பாட்டுத் தலத்தை பாபர் இடித்திருந்தால் அப்போதே மாபெரும் மக்கள் புரட்சி ஏற்பட்டு பாபர் விரட்டியடிக்கப்பட்டிருப்பார். பதவியைத் தக்க வைத்துக்கொள்ளும் நிலையில் உள்ள எந்த மனிதனும் இதுபோன்ற காரியங்களைச் செய்யவே மாட்டார்.

பாபர், அவரது மகன் ஹிமாயூன், அவரது மகன் அக்பர் என்று வாழையடி வாழையாக எவ்விதப் புரட்சியும் வெடிக்காமல் ஆட்சி நீடித்தது என்றால் இந்துக்கள் வெறுப்படையும்படி அவரது ஆட்சி அமையவில்லை என்பது தெளிவாகவில்லையா?

பாபர் தமது கடைசிக் காலத்தில் தனது மகன் ஹிமாயூனுக்கு பாரசீக மொழியில் ஓர் உயில் எழுதினார். அந்த உயில் மத்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் டெலலியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அந்த உயிலில், ”மகனே! இந்துக்கள் பெரும்பான்மை யாகவுள்ள ஒரு நாட்டை நீ ஆளப் போகிறாய். இந்துக்கள் பசுவைத் தெய்வமாக மதிக்கின்றனர். எனவே எக்காரணம் கொண்டும் பசுவின் மாமிசத்தை உண்ணாதே! அதனால் இந்துக்கள் உன்னை வெறுத்து விடுவார்கள்” என்று மகனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

இந்துக்கள் வெறுத்து விடக்கூடாது என்பதற்காக பசுவின் மாமிசத்தையே தவிர்த்துக் கொள்ளச் சொன்ன பாபர், கோவிலை இடித்திருக்க முடியும் என்று சிந்தனையுள்ள யாராவது நம்ப முடியுமா?

பாபர் காலத்தில் அவரது முதல் எதிரியாக இருந்தவர் குருநானக். இவர்தான் சீக்கிய மதத்தின் நிறுவனர். இவர் பாபரை கடுமையாக எதிர்த்து வந்தார். குறிப்பாக பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் போன்றவற்றைத்தான் அவர் குறிப்பிடுகிறார். பாபர் கோவிலை இடித்திருந்தால் அதை குருநானக் கட்டாயம் குறிப்பிடாமல் இருக்க மாட்டார். அது மட்டுமின்றி குருநானக் அயோத்திக்கு வந்து பாபர் மசூதியைப் பார்வையிட்டு ரசித்திருக்கிறார் என்று அவரது வரலாறு கூறுகிறது.

கோவிலை இடித்து பாபர் பள்ளிவாசல் கட்டியிருந்தால் அந்தக் காலத்தில் வாழ்ந்த அவருக்குத்தான் அது நன்றாகத் தெரியும். கோவிலை இடித்துக் கட்டிய பள்ளிவாசலை அவர் ஒருக்காலும் ரசித்திருக்க மாட்டார்.
பாபர் கொடுங்கோலர் என்பதால் பயந்து கொண்டு விமர்சனம் செய்யாமல் மக்கள் இருந்திருக்கலாம் என்று பொய்யாகக் கற்பனை செய்து சிலர் கூறுகின்றனர்.

பாபர் கொடுங்கோலராகவோ, இந்துக்களால் வெறுக்கப்பட்டவராக இருக்கவில்லை என்பதே உண்மை. ஒரு வாதத்துக்காக பாபர் கொடுங்கோலர் என்று வைத்துக் கொண்டாலும் இவர்களின் வாதம் சரியானது அல்ல.

பாபருக்குப் பின் அவரது மகன் ஹீமாயூன் ஆட்சி செய்கிறார். பாபர் இறந்து 25 ஆண்டுகளில் அவரது பேரன் அக்பர் ஆட்சிக்கு வருகிறார். இவர் இஸ்லாத்தை விட்டு விலகி, தீனே இலாஹி என்ற புதிய மதத்தை உருவாக்கினார். சங்பரிவாரத்தினர் பாராட்டும் அளவுக்கு இந்துச் சார்புடைய மன்னராக இருந்தார் அக்பர்.

கோவிலை பாபர் இடித்திருந்தால் அதை நேரில் பார்த்த பலரும் அக்பர் காலத்தில் வாழ்ந்திருப்பார்கள். அக்பருக்கு அவர்கள் அஞ்சத் தேவையில்லை. ”உங்கள் தாத்தா இடித்த கோவிலைக் கட்டித் தாருங்கள்” என்று ஒரு வார்த்தை சொன்னால் அப்போதே அக்பர் அதைச் செய்திருப்பார். இடித்திருந்தால்தானே கேட்டிருப்பர்கள்? அப்படி எந்தச் சம்பவமும் நடக்கவில்லையே.

அதுதான் போகட்டும்! முஸலிம்களின் ஆட்சி முடிவுக்கு வந்து வெள்ளையர்கள் ஆட்சி நடத்தினார்களே! அந்தக் காலம் முதல் நாடு விடுதலை அடைந்த 1948 வரை இதுபற்றி எந்த வழக்கோ, பிரச்சினையோ இருந்ததா என்றால் அறவே இல்லை.

வெள்ளையர்களின் 200 ஆண்டு கால ஆட்சியிலும்

”கோவிலை இடித்துவிட்டார்கள்; அதை எங்களிடம் தாருங்கள்” என்று வழக்கு ஏதும் பதிவாகவில்லை. ஒர் காலகட்டத்தில் இந்து முஸலிம் பகைமை மிகவும் உச்சத்தில் இருந்தது. அந்தக் காலத்தில்கூட இதுபோன்ற பிரச்சினை எதுவுமில்லை.

1949 டிசம்பர் 23ல் சிலைகளைப் பள்ளி வாசலில் வைத்து பிரச்சினையை முதன் முதலாகத் துவங்கும்வரை இராமர் கோவில் என்ற எந்த விவகாரமும் இருக் கவில்லை.

இன்னும் சொல்வதாக இருந்தால் அயோத்தியில் இராமர் பிறந்த இடம் என்ற பெயரில் 30 கோவில்கள் இன்றளவும் உள்ளன. இராமர் பிறந்த இடம் என்று பல இடங்களைக் குறிப்பிட்ட இந்துக்கள் பாபர் மசூதியையும் அதில் ஒன்றாகக் குறிப்பிடவில்லை.

1949ல் சங்பரிவாரம் புளுகு முட்டையை அவிழ்த்து விடும்வரை இதுதான் நிலைமை. எனவே மக்களின் வெறியைக் கிளறி விட்டு அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று திட்டமிட்டுத்தான் இந்தப் பொய்யைப் பரப்பினார்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வெள்ளை மனம் படைத்த இந்து மக்களை ஏமாற்றி வளர்ந்து ஆட்சியையும் பிடித்தார்கள்.

இந்துச் சமுதாய மக்களே! இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க இணைந்து பாடுபடுவோம். பொய்களைப் பரப்பி நமக்கிடையே பகையை விதைப்பவர்களைப் புறக்கணிப்போம்.


இந்த உண்மை வரலாறு கட்டுரையை நம் அதிரைநிருபருக்கு இமெயிலில் அனுப்பி வைத்த அன்பு சகோதரர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு