இது
எங்கள் கூடாரம்
இது
உழைத்துக் களைத்தோர்
சற்று
இளைப்பாரும் இடம்
இங்கு
நாங்கள்
இங்கிதத்தோடு
இலக்கியம் படைக்கின்றோம்
புதுப்பிக்கப்பட்ட சிந்தனைகளைப்
பதிப்பிக்கின்றோம்
புத்தக வடிவில்
புத்திக்கு நல்ல
வித்திடுகிறோம்
அச்சமூட்டி எச்சரிக்கப்பட்டவற்றை
அச்சடித்துத் தருகிறோம்
மூட்டை மூட்டையானப்
பொருட் குற்றங்களோடு
பெருங்கூட்டம் கூட்டும்
எண்ணமில்லை எமக்கு
சிற்சில
சொற் குற்றங்களோடும்
ஓரிரு
ஒற்றுப் பிழைகளோடும்
இலக்கை நோக்கியே
இயங்கிக் கொண்டிருக்கிறோம்
ஆங்காங்கே சிலபல
இலக்கணக் கட்டுகளை
நெகிழ்த்திவிட்டு துள்ளிக்குதிக்கும்
இளங்கன்று நாங்கள்
செல்லரித்தச் சித்தாந்தங்களில்
சிந்தையைச் செலுத்தி
முந்தைய சகோதரர்களின்
முன்பின் முரண்களை
முழங்கி
அவர்தம்
பலவீனங்களைப்
பகிரங்கப் படுத்தும்
பாணி எமதல்ல
வீண் கிளர்ச்சியில்
வீழாமல்
சாண் வளர்ச்சியிலேனும்
சாதிக்கப் புறப்பட்ட
சிநேகிதர்கள் நாங்கள்
ஆர்ப்பாட்டங்கள்
ஆரவாரங்கள் போன்ற
அன்றாடச் செய்திகளுக்கு
நாங்களில்லை
அது
எமது நோக்கமல்ல
ஆங்கிலேயர்களை விரட்டிய
அகிம்சையைப்போல -எங்கள்
அமைதியின் ஆளுமை
ஆணவத்தை அடக்கி -வரலாற்று
ஆவணத்தில் நிலைக்கும்
அதிரை நிருபர்
செய்தித் தாள் அல்ல
சிந்தனை வாள்;
அடிமைத் தளமன்று
ஆளுமையின் வளம்
மார்க்கம் சொல்லவோ
மனிதம் வளர்க்கவோ
புன்னகை பரப்பவோ
பூமியைத் திருத்தவோ
சிறப்பாக ஏதும்
சிந்திப்பவரா நீங்கள்?
அவற்றை
அறிவித்துத் தர
அதிரை நிருபர்
ஆவலோடு காத்திருக்கிறது!
மனித குலத்திற்கு
தனிநீதி
கேட்ட மூத்த சகோதரர்
இபுறாகீம் அன்சாரி
அவர்களின் நூலைத் தொடர்ந்து
நபிமணியின்
நகைச்சுவை சொல்லும்
சகோதரர்
இக்பால் சாலிஹ்வின்
நூல் வெளியிடுகிறோம்
இனி
இப்றாஹீம் அன்சாரி அவர்களின்
இந்திய வரலாற்றில் இஸ்லாமியர் பங்கு
சகோதரர் அலாவுதீனின்
கடன் வாங்கலாம் வாங்க
ஜாஹிர் ஹுஸேனின் படிக்கட்டுகள்
அதிரை அஹ்மது அவர்களின் கவிதை ஓர் இஸ்லாமியப் பார்வை
ஆகிய நூல்களும் பிரசுரிக்கப்பட உங்களனைவரின் துஆவும் கேட்டுக்கொண்டு விடை பெறுகிறோம்
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்


