அதிரையின் பிரதான கடைத்தெரு (மார்க்கெட்) பாரம்பரியமிக்க தக்வாப் பள்ளி நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இங்கு அமைந்துள்ள ஒரு சில கடைகள் சுகாதாரமற்று காணப்படுவதை பலர் குறைபட்டுக் கூறினாலும், நீண்ட காலமாக முறையான பராமரிப்பின்றி காணப்படும் கடைகளின் சில பகுதிகள் இடிந்து விழும் நிலையிலேயே இருந்து வந்தன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றுக் கொண்ட தக்வாப் பள்ளியின் புதிய நிர்வாகிகள் பழமை வாய்ந்த மீன்-மார்க்கெட் பகுதியை புதுப்பித்து விரிவாக்கம் செய்யும் பணிகளில் ஈடுபடப் போவதாக கூறி வந்தனர். அதன் தொடர்ச்சியே மீன் மார்க்கெட்டை விரிவாக்கம் செய்து அங்கே புதிய கட்டடம் ஒன்றை கட்டி எழுப்புவதாகவும் அறிவித்திருந்தனர். இதற்காக பிரமாண்டமாய் ரூபாய் 85 இலட்சம் பொருட்செலவில் 120 கடைகளைக் கொண்ட வளாகம் கட்டுவதற்காக 17-06-2013 அன்று காலை 7 மணியளவில் அடிக்கல்(!!) நாட்டப்பட்டது. இதுதான் கடந்த வாரம் அதிரைச் செய்திகளை அளித்து வரும் வலைத்தளங்களில் வெளிவந்த செய்தி. ஆனால் அன்று இஸ்லாமிய மார்க்கத்திற்கு விரோதமான நிகழ்வுகள் நடந்ததை கண்டிக்காமல் மறைக்கப்பட்டுள்ளது என்பதை தீர விசாரித்த பின்னரே அறிய முடிந்தது. அதுதான் உண்மை.
தக்வா பள்ளி பிரதான மார்கெட் அடிக்கல் நாட்டு விழா.
பிற மதத்தவர்கள் செய்யும் பூமி பூஜையில் இடம் பெரும் சடங்குககள்.
பிற சமூகத்தவர் புனிதம் என்று கருதுவதை நாம் அதற்கு இணையாக செய்வது சரியா நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
நபி(ஸல்) அவர்களும் தங்களின் காலத்தில் வீடுகள், பள்ளிவாசல்கள் கட்டினார்கள், ஏதாவது ஒரு சந்தர்பத்தில் இவ்வாறான அடிக்கல் நட்டு கட்டினார்கள் என்று ஹதீஸ்களில் இருந்து காட்ட முடியுமா?
அடிக்கல் நாட்டு விழா என்ற இந்த சடங்கு இஸ்லாமிய மார்க்கத்தில்தான் உள்ளதா?
ஒரு குறிப்பிட்ட மனிதன் அந்தச் செயலை செய்தால்தான் அச்செயலில் பரக்கத்து (அபிவிருத்தி) உள்ளது என்பதற்கு குர்ஆன் ஹதீஸ் படிப்பினையில் என்ன ஆதாரம் உள்ளது?
எந்த ஒரு செயலை செய்தாலும் பிஸ்மில்லாஹ் என்று சொல்லிச் செய்ய வேண்டும் என்ற அறிவு எல்லோருக்கும் இருந்தும், கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் விழா என்று ஒரு நிகழ்வை நடத்தி பாஃத்திஹா ஓதி ஆமீன் சொல்லி அடிக்கல் நாட்ட குர்ஆன் சுன்னா அடிப்படையில்தான் ஆதாரம் உள்ளதா?
ஏன் ஷாஃபி மத்ஹப் வழிபோற்றுகிறோம் என்று சொல்லுபவர்கள் தான் இந்த அடிக்கல் நாட்டு விழாவை நடத்தியுள்ளார்கள். கண்ணியத்திற்குறிய இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் இவ்வாறு செய்வதற்கு அங்கீகரித்த அல்லது அனுமதித்த ஒரு ஃபாத்வாவையாவது ஆதாரமாவது காட்ட முடியுமா?
இது போன்ற மார்க்க விரோத நிகழ்ச்சிகளில் முன்னின்று ஃபாத்திஹா ஓதுபவர்களில் பெரும்பாலானவர்கள் கூலி வாங்காமல் அச்செயலை செய்வதில்லை என்பது மறைக்கப்பட்ட உண்மை.
அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் உள்ளோம் என்று, அல்லாஹ்வின் பெயரை சொல்லி அடிக்கல் நாட்டு விழாக்களில் கலந்து கொள்ளும் ஜின் வைத்தியம், தாயத்து, தட்டு இன்னும் பிற குறி சொல்லி வைத்தியம் செய்யும் பேர்வழிகள் சிலர் அல்லாஹ்வின் புரோகிதர்கள் என்ற பிரம்மையை உண்டாக்கிக் கொண்டவர்களான இவர்கள் என்ன இலவசமாகவா தங்களுடைய சேவையை செய்கிறார்கள்?
இதெல்லாம் 100% வியாபாரம் ஒவ்வொரு மார்க்க விரோத போக்குக்கு பின்னாலும் பல்லாயிரம் ரூபாய் அல்லவா வீணடிக்கப்படுகிறது.
பிறமத கலாச்சாரத்தை பின்பற்றுபவர்கள் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எச்சரிக்கை இதோ..
நபி(ஸல்)கூறினார்கள் யார் பிற சமயக் கலாச்சாரத்தை பின்பற்றி நடக்கின்றாரோ அவரும் அவர்களைச் சேர்ந்தவர் என கூறினார்கள். நூல்: அபூதாவூத் 3512.
அடிக்கல் நாட்டு விழா என்னும் பெயரில் பூமி பூஜை என்ற அனாச்சாரமான பிறமத கலாச்சாரத்தை அப்படியே செய்து வருகின்றனர் என்பதை மேல் குறிப்பிட்ட தக்வாபள்ளி மார்கெட் அடிக்கல் நாட்டு விழாவில் நடைபெற்றதையும், பிறமதத்தை சேர்ந்தவர்கள் செய்த பூமி பூஜையில் நடைபெறதையும் உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறோம்.
மார்க்க அறிஞர்கள் நிறைந்த ஊர் என்று அதிரையை பல வருடங்களாக சொல்லி வருகிறோம். மார்க்க அறிஞர்கள் குறைவாக உள்ள பிற ஊர்களில் இல்லாத மார்க்க விரோத போக்கு அளவுக்கதிகமாகிக் கொண்டே போவதற்கு யார் பொறுப்பு? என்பதை சிந்திக்க வேண்டும்.
ஏன் ஷிர்க் பித் அத்துக்களை எதிர்த்து பேச உள்ளூரில் மார்க்க அறிஞர்கள்தான் இல்லையா?
வெள்ளி மேடையில் ஷிர்க் பித்அத் அனாச்சாரங்களை எதிர்த்து துணிந்து பிரச்சாரம் செய்யும் அதிரை இளம் ஆலிம்களும், பெரிய ஜும்மா பள்ளியில் பிரச்சாரம் செய்துவரும் ஆலிம் அவர்களும் தாங்கள் தொடர்ந்து செய்துவரும் தக்வா பள்ளி பயானிலும், பெண்கள் பயான்களிலும் இது போன்ற பூமிபுஜை அனாச்சாரங்களை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் அடியோடு இந்தக் கலாச்சாரம் விட்டொழிய பாடுபடவேண்டும்.
அதிரையில் உள்ள பழைமைவாய்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அரபி மதர்ஸாக்கள் என்றைக்கு மத்ஹப் பாடத் திட்டத்திலிருந்து விலகி தூய்மையான குர்ஆன் ஹதீஸ் அடிப்பையிலான மார்க்க கல்வி திட்டத்திற்கு வருகிறதோ அன்று தான் நமதூருக்கு இவ்வாறான மார்க்க புரோகிதர்களிடமிருந்து விடிவுகாலம் பிறக்கும் என்பது மட்டும் தெளிவு.
அல்லாஹ் நம் எல்லோரையும் நேர்வழி படுத்துவானாக. மார்க்கத்தில் இல்லாத புதினங்களிலிருந்து நம் எல்லோரையும் பாதுகாப்பானாக.
புரோகிதர்களின் சூழ்ச்சிக்கு எதிரான எச்சரிக்கை தொடரும். இன்ஷா அல்லாஹ்.
அதிரைநிருபர் பதிப்பகம்