அல்லாஹ்வின் திருப்பெயரால்..
2014 பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெற இருக்கும் சூழலில் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. வழமையாக முஸ்லீம் இயக்கங்களும் கட்சிகளும் தமிழகத்தின் இருவேறு அணியாக இருக்கும் அதிமுக திமுகவுக்கு தங்களின் ஆதரவை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இச்சூழலில் நாம் எவ்வாறான நிலைபாடுகளை எடுக்க வேண்டும் என்ற சிந்தனையை பதியலாம். இதில் சிலருக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம், ஆனால் அந்தரத்தில் தொங்கவிடப்பட்ட சமுதாயமான இஸ்லாமிய சமுதாயம் சரியான நிலைபாட்டை முன்னெடுத்தால் நம்முடைய ஓட்டு பலம் என்ன என்பதை தமிழக அரசியல் களத்தில் நிரூபிக்கலாம்.
இந்த வருட பாராளுமன்ற தேர்தலில் அகில இந்தியா அளவில் பேசப்படும் பேச்சு ‘மோடி’ எனும் திட்டமிட்டு திணிக்கப்படும் மீடியா அரசியல் அலை! ஒரு போலியான தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல் தமிழகத்தில் முதலமைச்சர் ‘அம்மையார்’ அவர்களை பிரதமராக்குவோம் என்று அதிமுக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. தேசிய அளவில் நம்முடைய அடுத்த நிலைபாடு என்ன? யாரை ஆதரிப்பது? என்ற குழப்பதில் உள்ளது திமுக. தமிழகத்தில் அட்ரஸ் தேடி அலையும் காங்கிரஸ், தள்ளாடும் தேமுதிக, காவிகளின் கூடாரம் பாஜக, மனக்குழப்பத்தில் வைக்கோ, சாதிக் கூத்தில் பாமக. இவைகளுக்கு மத்தியில் தமிழக முஸ்லீம் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் அரசியல் ஆட்டங்கள்.
சுப்ஹானல்லாஹ்…! அல்லாஹு அக்பர்!. என்ன நடக்குது என்று எவருக்கும் புரியவில்லை. எங்கள் பின்னால் வாருங்கள் என்று நம் சமுதாயத்தை எங்கு இவர்கள் இழுத்துச் செல்கிறார்கள் என்பது புரியவில்லை. காயிதே மில்லத் போன்ற வலுவான முஸ்லீம் அரசியல் தலைவர் தமிழகத்தில் ஒருவர்கூட இல்லையே என்ற ஏக்கம் மீண்டும் எழுந்துள்ளது.
மமக: தங்கள் பிரதான கோரிக்கைகளான இட ஒதுக்கீடு அதிகரிப்பு, திருமண பதிவு சட்ட திருத்தம், கோவை சிறைவாசிகள் விடுதலை போன்றவைகளை நிறைவேற்ற எவ்வித முயற்சியும் செய்யாத ஆளும் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி சிறுபான்மை காவலர்(!?) திமுகவுடன் கூட்டனி சேர்ந்து அற்பம் ஒரே ஒரு பாராளுமன்றத் தொகுதியை பெற்று இதுவே போதும் என்று மேலும் போராடிப் பெற திராணியற்று அங்கே ஒதுங்கியுள்ளது.
முஸ்லீம் லீக்: திமுகவின் தலைவர் இதயத்தில் மட்டும் இடஒதுக்கீடு பெற்றுள்ளவர்கள், தொடர்ந்து கலைஞருக்கு ஜால்ரா அடித்து வரும் முஸ்லீம் லீக் வழக்கம்போல் கோரிக்கை ஒன்றுமில்லாமல், ஒரே ஒரு பாராளுமன்ற சீட்டை வாங்கிக் கொண்டு, இந்த முறை இது கிடைத்ததே என்ற திருப்தியுடன் உள்ளது.
ததஜ: இடஒதுக்கீட்டை இந்த தேர்தலின் முக்கிய கோரிக்கையாக முன்னிருத்தி சிறை நிரப்பு போராட்டம் நடத்தியது, இதை வைத்து, அதிமுக அரசிடம் மாநிலத்தில் 7 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும், ஆட்சியில் உள்ள இவர்கள் தரவில்லை என்றால் இவர்களுக்கு எதிரான நிலைபாட்டை எடுப்போம் என்று எச்சரித்தார்கள். போராட்டம் முடிந்த பின்னர் 7 சதவீத கோரிக்கை என்பது காணாமல் போய், இட ஒதுக்கீட்டை அதிகரித்துத் தந்தால் அதிமுகவுக்கு ஓட்டு, இல்லையென்றால் அவர்களுக்கு எதிராக எங்கள் ஓட்டு என்ற பேச்சுக்களை ஆரம்பித்தார்கள்.
பின்னர் அவசர பொதுக்குழு, அதன் பின்னர் அவசர செயற்குழு கடந்த மார்ச் 2ம் தேதி சென்னையில் கூடி தேர்தல் நிலைபாடு என்ன என்பதை அறிவிப்போம் என்றார்கள். ஆனால் செயற்குழுவுக்கு பின்னர் கடந்த ஒருவாரமாக ததஜவிடமிருந்து எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை. என்ன சூழலோ அவர்களுக்கு அல்லாஹ் மட்டுமே அறிவான்.
அந்த இயக்கத்திலிருப்பவர்களில் பலர் இனி வரும் காலங்களில் வெளியேறப் போகிறவர்கள், கடந்த ஒரு வாரமாக உண்மையில் நடந்தது இதுதான் என்பதை நிச்சயம் பொதுவில் விளக்குவார்கள் என்று எதிர் பார்க்கலாம். கடந்த 8ம் தேதி அதிமுகாவுக்கு ததஜ ஆதரவு காரணம், அம்மா ஆணையம் அமைத்து பரிந்துரை கேட்டுள்ளார்களாம். அதனால் எதிர்கால விளைவுகளை கருத்தில் கொண்டு அதிமுகவுக்கு ஆதரவு என்ற பேட்டியை கொடுத்து விட்டார்கள். அவர்கள் எடுத்து வைத்த ஜீவாதார கோரிக்கையான 7 சதவீத இட ஒதுக்கீடு கேரிக்கை என்ன ஆச்சு? தராவிட்டால் அவர்களுக்கு எதிரான நிலைபாடு என்ற வேகம் எங்கே போய்விட்டது? அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
இந்த பாராளுமன்ற தேர்தலின் முக்கிய கேரிக்கையாக பேசப்பட்ட இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையை ஒதுக்கீடு செய்து விட்டு, புலி வாலை பிடித்தவர்கள் போன்று அவரவர் இயக்கங்களை இருபெரும் அரசியல் கட்சிகளின் வெறுப்பிலிருந்து தங்கள் இயக்கங்களை பாதுக்காக்காத்துக் கொள்ள, அனைத்து முஸ்லீம் இயக்கங்கள் ஒட்டு மொத்த தமிழக முஸ்லீம்களின் ஜீவாதராமாக கையில் எடுத்து களம் கண்டவர்கள் இன்று அவர்களை நட்டாற்றில் விட்டு விட்டார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
ஒரு சீட்டில் மயங்கி விட்ட கட்சி மமக..... ஒரு சீட்டுக்காக கலைஞரின் இதயக்கூட்டில் இருக்கும் கட்சி முஸ்லீம் லீக். இட ஒதுக்கீடு தொடர்பாக சிறுபான்மையினர் ஆணையத்து கடிதத்தில் மயங்கி ஆளும் வர்க்கத்துக்கு பனிந்துள்ள இயக்கம் ததஜ. அடுத்து என்ன கோரிக்கை வைக்கலாம் என்று அரியாமல், உதிரி இயக்கங்களும் போய் சந்திக்கிறார்கள் நாமும் போவோம் என்று அதிமுகவுடன் கண்ணை மூடிக் கொண்டு இன்னும் சரணடைந்த பிற முஸ்லீம் இயக்கங்கள் (இதஜ, இதேலீக், etc...).
அனைத்து முஸ்லிம் கட்சிகளும், இயக்கங்களும் தமிழக முஸ்லீம்களை கொத்து பரோட்டா போடுவது போல் தூள்தூளாக்கி சிதறடித்து ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். பாமர சமுதாயத்தை வஞ்சித்து விட்டார்கள். இயக்க மயக்கத்தை தூண்டும் அனைத்து இயக்கத் தலைவர்களின் வீரதீரப் பேச்சுக்கள் எல்லாம் வெறும் வெத்து நாடகமே.
திமுக அதிமுக இவர்களின் எவர் வந்தாலும் மோடிக்கு ஆதரவளிப்பார்கள் அல்லது எதிராக இருக்கமாட்டார்கள் என்பது அறிந்த ஒன்றே. முஸ்லீம்கள் போட்டியிடும் தொகுதிகளில் உள்ள நல்ல முஸ்லீமை அடையாளம் கண்டு அவர்களுக்கு மட்டுமே எங்கள் ஓட்டு என்று அறிவித்து விட்டு... பிற தொகுதிகளில் நான் யாருக்கும் வாக்களிக்கவில்லை என்ற NOTA buttonக்கே நம் வாக்கை அளித்து நம்முடைய வெறுப்புணர்வை பொறுப்புணர்வுடன் இந்த அரசியல் கட்சிகளுக்கு உணர்த்தலாமே. இதுதான் நியாயமான முறையாக இருக்கும். இந்த சிந்தனைகளின் நிலைபாடு சரியானதா ? அல்லது மாற்று கருத்துகள் இருப்பினும் தெரிவிக்கலாம்.
ஒட்டு மொத்த இயக்கங்களும் சினிமாக்கூத்தாடி அரசியல்வாதிகளின் அரசியல் சூழ்ச்சியில் விழுந்து அவர்கள் சார்ந்த தமிழக முஸ்லீம் சமுதாயத்தை அடகு வைத்து விட்டார்களே. உள்ளக் குமுறல் உண்மையில் சமுதாய அக்கறையுள்ள ஒவ்வொரு முஸ்லீம்களிடம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. இனி எவரையும் நம்ப முடியாது என்ற எண்ணம் ஏற்படுவதையும் ஒதுக்க முடியவில்லை. இதுபோன்ற அரசியல் நிலைபாடு, அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து தேர்தல் நேரத்து சமரசம் என்பதும் தமிழகத்தின் தவ்ஹீத் எழுச்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படவுள்ளதோ என்ற சந்தேகம் நம்மில் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
அல்லாஹ் யார் யாரை எந்த நேரத்தில் உயர்த்துவான் அல்லது கேவலடுத்துவான் என்பது அவன் மட்டுமே அறிவான். இன்ஷா அல்லாஹ் யார் யார் எல்லாம் சமுதாய துரோகிகள் என்பது விரைவில் தமிழக முஸ்லீம்களுக்கு உணர்த்தப்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
அல்லாஹ் மட்டுமே நம் சமுதாயத்தை பாதுகாக்க போதுமானவன்...
அதிரைநிருபர் பதிப்பகம்


