சென்ற 14,15 ஜனவரி 2011 தேதிகளில் அதிராம்பட்டினத்தில் ‘கல்வி விழிப்புணர்வு மாநாடு’ ஒன்றை நடத்தினோம். அதன் இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக ‘கல்விக் கருத்தரங்கு’ ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தோம். அதற்குத் தலைமை வகிக்கக் கல்வியாளராகவும் உள்ளூர்வாசியாகவும் இருக்கும் ஒருவர் அழைக்கப்பட வேண்டும் என்ற எனது கருத்தைச் சகோதரர்களிடம் பதிவு செய்தேன்.
அதற்குப் பொருத்தமான ஒருவரைத் தெரிந்தெடுக்கும் பொறுப்பை அவர்கள் என்னிடமே விட்டார்கள். நான் ஒருவரைப் பரிந்துரைத்தேன். அந்த அமர்வில் இருந்த எவருக்கும் அறிமுகமில்லாதவர் அவர்! யாருக்கும் தெரியாதவர்; எனக்கு மட்டும் அறிமுகமானவர் என்பதால், என்னையே பொறுப்புச் சாட்டி, ‘ரிஸ்க்’ எடுக்கச் சொன்னார்கள். நான் ஆர்வத்தோடும் பெரு நம்பிக்கையோடும் களத்தில் இறங்கினேன்.
‘சலாம்’ எனும் முகமனோடு தொடங்கிய எனது அழைப்புக்குப் பின்னர், “அதிரை அஹ்மது பேசுகிறேன்” என்றேன். நலம் விசாரித்த பின்னர், அடுத்த முனையிலிருந்து அழகிய மறுமொழி, அழகிய தமிழில் நலம் விசாரிப்பு, ஊர் நடப்புகள் பற்றியெல்லாம் கேட்டுவிட்டு, “எப்போது?” என்றார் சென்னையில் வசித்த அந்த ‘அதிரை அறிஞர்’, ‘தமிழ்மாமணி’, புலவர், அல்ஹாஜ் அஹ்மது பஷீர் அவர்கள்.
நான் தேதிகளைச் சொன்னவுடன், “சரி, முதல் நாளே நானும் மகனும் வந்துவிடுகிறோம்” என்ற தேன்மொழியைத் தந்தார்கள். எப்படியும் வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு; ஆனால், மற்ற சகோதரர்களோ, ‘வருவாரா? பேசுவாரா? என்ன பேசுவார்?’ என்றெல்லாம் புதிரில் ஆழ்ந்திருந்தார்கள்.
வாக்களித்தபடி, முதல் நாளே வந்து சேர்ந்து முகமலர்ச்சியைத் தந்தார்கள்! மெலிந்த உருவம், முதிர்ந்த வயது, தோளில் ஒரு துண்டு, தலையில் தொப்பி, கையில் ஒரு பை சகிதம் அரங்கினுள் நுழைந்து அகம் குளிரச் செய்தார்கள் அந்த ‘அதிரை அறிஞர்’.
முதல் நாள் நிகழ்ச்சி ஒரு பயிலரங்கு. ‘உனக்குள் உன்னைத் தேடு’ எனும் தலைப்பிலும், ‘அறிமுகமில்லாத அறிய படிப்புகள்’ என்ற தலைப்பிலும் பேராசிரியர் முனைவர் ஆபிதீன் அவர்கள் நிகழ்த்திக் காட்டிய பயிலரங்கை நம் ‘தமிழ்மாமணி’யவர்கள் தம் மகனாருடன் கண்டு மகிழ்ந்தார்கள்.
முதல் நாள் நிகழ்ச்சி மாணவர்களுக்கு மட்டும் என்றிருந்தது. அடுத்த நாள் தொடங்கிய ‘கல்விச் சிந்தனைக் கருத்தரங்கு’ எல்லாருக்கும் பொதுவானதாக அமைந்ததால், ‘சாரா அரங்கு’ கலை கட்டி நின்றது. எனது அறிவிப்பழைப்பைத் தொடர்ந்து, ‘அதிரை அறிஞர்’ அவர்கள் கம்பீரமாக வந்து மேடையில் அமர்ந்தார்கள். அதுவரை, ‘இவர் என்ன பேசுவாரோ?’ என்று எண்ணிக்கொண்டிருந்த சகோதரர்களுக்கு, ஒரு நம்பிக்கை.
புலவர் பஷீர் ஹாஜியாரின் செந்தமிழ்ப் பேச்சு சிந்தையைக் கவரும் ஆய்வுரையாக அமைந்ததை உணர்ந்த அவையினர், ‘இப்படியும் ஒருவரா இந்த அதிரையில்!’ என அயர்ந்து போயினர். ‘சரியான தலைமை’ என்று சகோதரர்கள் பாராட்டியபோது, நான் பூரிப்படைந்தேன். ‘அடுத்தடுத்தும் இவர்களை அழைத்துப் பேச வைக்க வேண்டும்’ என்று அவர்களைக் கூற வைத்தது அந்தத் தலைமையுரை.
எமது அந்த மாநாட்டின் வெற்றிக்குக் கட்டியம் கூறுவதாக அமைந்தது அவ்வறிஞரின் பேச்சு. அதைவிட, புலவர் அவர்கள் காட்டிய ஆர்வம் மாநாட்டு அமைப்பாளர்களை அகமகிழச் செய்தது.
மாநாட்டைத் தொடர்ந்து, உள்ளூரில் இயங்கும் தனியார் தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழாவிலும் சில மாதங்களுக்குப் பின்னர் சென்னையிலிருந்து வந்து கலந்துகொண்டு, சிறார்களை வாழ்த்திப் பேசினார்கள் அந்தக் கல்வியாளர். கல்வியாளரும் கவிஞரும் சிறுவர் இலக்கியச் செம்மலுமான அந்த ‘அதிரை அறிஞர்’, தாய்மார்களே அதிகமாகக் கலந்துகொண்ட அக்கூட்டத்தில் பெண்மணிகளை மூக்கில் விரல் வைக்கச் செய்தார்கள். அன்று அவர்களிடத்தில் பரவியிருந்த ஆர்வத்தையும் அறிவாற்றலையும் கண்கூடாகக் கண்டேன் நான்.
அடுத்த கல்வி விழிப்புணர்வு மாநாடு நெருங்குகின்றது. ஆனால், அவ்வறிஞரை அல்லாஹ் தன் பக்கம் அழைத்துக்கொண்டான்! சென்ற செப்டம்பர் 26 ஆம் தேதியன்று பிற்பகல் மூன்றரை மணியளவில் அன்னாரின் புதல்வர் பேராசிரியர், அஃப்சலுல் உலமா, அஹ்மது ஆரிப் M.Com., M.Phil அவர்களிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு என்னை அதிர வைத்தது!
தமிழ்மாமணிவர்கள் கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் ஆற்றிய தலைமையுரைக் காணொளியைக் கண்ட வெளிநாடுவாழ் அதிரைச் சகோதரர்கள் எங்களூர் வலைத்தளங்களில் அவர்களைப் பாராட்டிப் போற்றியதும், நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறியதும் இன்றும் பசுமையாக நிற்கின்றன.
தமிழ்மாமணி, புலவர் பஷீர் அவர்கள் அதிராம்பட்டினத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், தமது கல்வி முன்னேற்றத்தின் பின்னர், சென்னையில் பள்ளித் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கி, அங்கேயே ‘செட்டில்’ ஆனவர். அதனால், ஊரிலிருக்கும் பெரும்பாலாருக்கு அவர்களைத் தெரியாது. எங்கள் முதலாவது கல்வி விழிப்புணர்வு மாநாட்டின் மூலம் பலரும் அறிந்துகொண்ட பண்பாளராகிவிட்டார்கள்.
இஸ்லாமியத் தமிழிலக்கியத்திற்கும் மார்க்கத்திற்கும் அவர்கள் படைத்தளித்த நூல்கள்:
* சிரி குழந்தாய் சிரி! (கவிதைகள்)
* முன்னேறு முன்னேறு மேலே மேலே (கவிதைகள்)
* மறுவாழ்வு (சிறுவர் நாடகங்கள்)
* குழந்தை இலக்கியம் (திறனாய்வு)
* இஸ்லாமியக் குழந்தை இலக்கியம் (திறனாய்வு)
* உமறுப் புலவர் கவித் திறன்
* முத்துக் குவியல் (சிறுவர் பாடல்கள்)
* கருணை நபி (ஸல்)
* புது மலர்கள் (ஒன்பது தொகுதிகள் கொண்ட சிறார் பாட நூல்)
* பெற்றோரே!
* படி... படி... படி... (வழிகாட்டி நூல்)
* சிரிக்கும் பூக்கள் (சிறுவர் பாடல்கள்)
நூல்கள் கிடைக்குமிடம்:
சிங்கைப் பதிப்பகம் (போன் : 0091 44 23772742)
270, கங்கை தெரு , சேக் அப்துல்லா நகர்
ஆழ்வார்த் திருநகர், சென்னை 600 087
- அதிரை அஹ்மது