Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label நாட்டு நடப்பு. Show all posts
Showing posts with label நாட்டு நடப்பு. Show all posts

நாட்டு நடப்பை அலசும் நம்மூர் ஆனாவும், சேனாவும்.... 6

அதிரைநிருபர் பதிப்பகம் | August 16, 2011 | ,

ஆனா : அஸ்ஸலாமு அலைக்கும் என்னா சேனா பாத்து ரொம்ப நாளாச்சே இவ்ளோ நாளா எங்கே போயிருந்தா?

சேனா : வலைக்கும்முஸ்ஸலாம் ஆனா. இல்லப்பா ஒரு வியாபார விசயமா மதராஸுக்கு போயி இருந்தேன். மூனு வாரம் அங்கேயே தங்க வேண்டியதாப்போச்சு அதான் பாக்க முடியலெ.

ஆனா : ஒரு வழியா சமச்சீரு கல்வி பெரச்சினை சூப்ரீம் கோர்ட் மூலமா முடிஞ்சி இப்பொ தான் புள்ளையெலுவொலுக்கு புக் கொடுக்க ஆரம்பிச்சி இருக்காங்க. அப்பொ இவ்ளோ நாளு சும்மா பிள்ளைகளின் பள்ளிப்படிப்பை வேஸ்ட் பண்ணுணதுக்கு யாரு பொறுப்பு ஏக்குறது? தண்டணை கொடுக்குறது? சொல்லு...

சேனா : இப்புடித்தானே நம் நாட்டில் பல இடங்களில் தீவிரவாதிகளுடன் தொடர்பு, குண்டு வெடிப்பில் தொடர்புண்டு நம் சமுதாய அப்பாவி இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்து சிறையில் அடைத்து சித்ரவதை செய்து பிறகு பல வருடங்கள் கழிந்து கோர்ட் மூலம் இவர்கள் நிரபராதி, நடந்த சம்பவத்திற்கும் இவர்களுக்கும் தொடர்பில்லை என்று அறிவித்து வெளியிட்ட சம்பவங்களை நாம் பார்த்திருக்கிறோமே.. அப்பொ இவ்ளோ நாளு சிறையில் இருந்து காலத்தை வீணடித்து சித்ரவதைக்குள்ளாகி அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு போனதற்கு யார் பொறுப்பு ஏற்பது? தவறான அவர்களின் நடவடிக்கைக்கு யார் தண்டணை வாங்கி கொடுப்பது? சொல்லு...

ஆனா : சரியான கேள்வி இப்புடி கேட்டு வாயடைக்க வச்சுட்டியே? சம்மந்தப்பட்டவங்க தான் இதுக்கு பதில் சொல்லனும்.

சேனா : அது சரி மூனு வருசமா எந்த தடையுமின்றி நடத்தப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆ ஃ ப் இந்தியாவின் சுதந்திர தின அணிவகுப்பு நெல்லை மேலப்பாளையத்தில் இந்த மாதம் 15ம் தேதி நடக்க இருந்ததே? அதற்கு திடீரென காவல்துறை அனுமதி மறுத்திருக்கிறதே? என்ன காரணம்? சட்டம் ஒழுங்கு சீர்கெடும் அளவுக்கு அவர்களின் கடந்த கால நிகழ்வுகள் எதுவும் நடைபெறவில்லையே? பிறகு ஏன் தடை செய்தது அரசு? உனக்கு ஏதேனும் காரணம் தெரியுமா? 

ஆனா : எனக்கு தெரிந்த வரை காவி (பாஸிச) சிந்தனை உள்ள எவரேனும் இந்த அணிவகுப்பு பற்றி தவறான ஒரு கருத்தைச்சொல்லி நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு எதுவும் வாங்கி இருக்கலாம். இவ்வளவு தூரம் நாட்டின் தேசப்பற்றுள்ள இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சி கொடுத்து சீருடைகளெல்லாம் சிறப்பாக சொந்த செலவில் தைத்து கொடுத்து நாட்டின் உண்மையான தேச பற்றை பறைசாற்ற அவர்கள் இந்த புனித ரமளானில் எடுத்துக்கொண்ட முயற்சிகள் காவல்துறையால் நிறுத்தப்பட்டு வீணடிக்கப்பட்டதை நினைத்தால் மனதுக்கு வேதனையாக இருக்குது சேனா...

சேனா : என்ன செய்யிறது? நம்ம உண்மையான தேசப்பற்றையும் நம் முன்னோர்களின் உண்மையான தியாகத்தையும் இப்பொழுதுள்ள அரசும், அதன் அதிகாரிகளும் புரிந்து கொள்ள மாட்டிக்கிறாங்கெ...நம்மை ஒரு வேண்டா வெறுப்பாக என்றும் மூன்றாம் தரக்குடிமகனாகவே அவர்கள் பார்க்க விரும்புகிறார்களோ? என்னவோ தெரியவில்லை?

ஆனா : நாமெ எப்பொழுதும் இறைவனிடம் கையேந்தி நம் குறைகளை சொல்லி பொறுமையாக இருப்போம். இந்த உலக வாழ்க்கை என்னா நிரந்தரமா? சும்மா போலி வாழ்க்கை. ஒரு நீண்ட பயணத்தில் வழியில் களைப்பாற சிறிது நேரம் ஓய்வெடுக்க தங்கும் ஒரு மரத்தின் நிழல் போல் தான் இந்த வாழ்க்கையை நெனச்சிக்கிடனும். நாம் இங்கு நிரந்தரமாக தங்கப்போவதில்லை என்று நினைத்து மீதி உள்ள காலத்தை அமைதியாக ஓட்டி விட்டு போய்ச்சேர வேண்டியது தான் சேனா...

சேனா : இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் கர்னல் என்ற இடத்தில் 1961ல் பிறந்து ஆரம்பக்கல்வி அங்கேயே படித்து பிறகு மேல் படிப்பிற்காக (எம்.எஸ்) 1982ல் அமெரிக்கா சென்று அங்கேயே படித்து பிறகு ஆராய்ச்சி பட்டமும் பெற்று அதன் பின் அந்த நாட்டு பிரஜையாகி ஒரு அமெரிக்கரை மணந்து நாசாவில் சேர்ந்து அந்த நாட்டு பிரஜையாக அந்த நாட்டு கொடியை ஏந்தி மற்றும் அதை தன் உடையில் அணிந்து 2003 பிப்ரவரி 1ம்தேதி நாசாவிலிருந்து கொலம்பியா ஓடத்தில் விண்ணில் பறந்த சில நிமிடங்களில் அது விண்ணில் வெடித்துச்சிதறி பலியான கல்பனா சாவ்லாவுடன் அவருடன் பயணித்த மொத்தம் ஏழு விஞ்ஞானிகளும் பலியான விசயம் உலகறியும். அப்படி இந்தியாவில் பிறந்து இறுதியில் அமெரிக்காவில் செட்டிலாகி அந்த நாட்டுக்காரரை மணந்து அந்நாட்டின் பிரஜையாகி இறுதியில் விண்வெளி விபத்தில் பலியான கல்பனா சாவ்லாவை நம் நாடு இன்றும் நம் நாட்டு பிரஜையாக எண்ணி உள்ளம் உருகி அவர் மறைந்து பின்னரும் போற்றிப்புகழ்கின்றது.

அவர் பெயரில் பல அறக்கட்டளைகளும், கல்லூரி, நிறுவனங்களும் நம் நாட்டில் உருவாகி அதையும் தாண்டி 'கல்பனா சாவ்லா விருது' என்று உருவாக்கி நாட்டில் வீர,தீர செயலில் துணிச்சலுடன் ஈடுபட்டவர்களுக்கு சுதந்திர மற்றும் குடியரசு தினங்களில் மத்திய, மாநில அரசுகள் வழங்கி அவர்களுடன் கல்பனா சாவ்லாவையும் மறக்காமல் கவுரவித்து மகிழ்கிறது. இதை நாம் குறை சொல்ல வில்லை.

ஆனால் நம் நாட்டில் பிறந்து, வளர்ந்து, அதனுடன் பின்னிப்பிணைந்து வாழ்ந்து வரும் நம் சமுதாய துடிப்புள்ள இளைஞர்கள் பலரின் கூட்டு முயற்சியில் நம் நாட்டுப்பற்றை பறைச்சாட்டும் வகையிலும் நம் முன்னோர்களின் தியாகங்களை நினைவுகூறும் வகையில் அவர்கள் நடத்த இருந்த இந்த சுதந்திரதின அணிவகுப்புக்கு தடை விதித்திருப்பது நம் தேசப்பற்றை கொச்சைப்படுத்துவதாகவே கருதுகிறேன். அவர்களுக்கு சுதந்திர தின கொடியேற்றத்தில் விருதுகள் கொடுத்து கவரவிக்க வேண்டியதில்லை அதை அவர்கள் எதிர்பார்க்கவும் இல்லை. குறைந்தது அவர்களின் அணிவகுப்பிற்கு அனுமதி அளித்திருக்கலாம் அல்லவா? 

ஆனா : என்னப்பா இப்படி உன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்திட்டியெ? நீ சொல்றது ஞாயம் தான்.. நாமெ சும்மா இருந்தால் இவர்களுக்கு இந்த நாட்டின் மேல் பற்றில்லை, நம்பிக்கை இல்லை தும்பிக்கை இல்லை என்று எதேதோ வாய்க்கு வந்தபடி குற்றம் குறைகள் பல சொல்லி நம் உண்மை வரலாறு அறியாமல் இவர்கள் இந்தியாவிற்கு குடிபெயர்ந்த வந்தேறிகள் என்று சொல்லி இவர்கள் நாட்டை விட்டு வெளியேறி பாக்கிஸ்தானில் குடியேற வேண்டும் என்று சொல்வதை அரசும் நாமும் பல இடங்களில் பல முறை கனத்த இதயங்களுடன் கேட்டும், பார்த்தும் வருகிறோம். எல்லாவற்றிற்கும் படைத்த இறைவன் போதுமானவன். அவனிடமே முறையிட்டு நிராயுதபாணியாய் இன்று நின்று கொண்டிருக்கிறோம்.

சேனா : ஆனா, நோன்புக்கு பள்ளிகளுக்கு அரிசி தருவதில் கூட எத்தனை அரசியலும், அலட்சியமும் காட்டுகிறார்கள் பாத்தியா?

ஆனா : ஆமா சேனா, அரசவையில் அலங்கரிக்க வேண்டிய நாம் இன்று அரிசிக்கு அல்லல்பட வைத்து விட்டார்கள் இல்லையா?

சேனா : இவர்கள் வரும் காலத்திற்கு பதில் சொல்கிறார்களோ இல்லையோ? இறைவனுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும்.

ஆனா : நாம் இந்த புனித ரமளானில் எதற்கும் சபுர் செய்து பொறுமையுடன் இருப்போம். எதற்கும் பொறுமை இழக்கக்கூடாது. நமக்கு அல்லாஹ் துணை நிற்பான். சரி வரட்டா நோன்பு தொறக்க நேரமாஹிகிட்டு இருக்குது அப்புறம் வாடா வித்து போயிடும் வாட் சம்சாவும் கெடெக்காது...

இன்ஷா அல்லாஹ் அப்புறம் பாப்போம்....

- மு.செ.மு. நெய்னா முஹம்மது.

என்னங்க அநியாயம் இது ? 16

அதிரைநிருபர் பதிப்பகம் | July 24, 2011 | , , ,

ஊரு, உலகத்துலெ எவ்ளோ பெரச்சனையலுவோ தலெவிரிச்சி ஆடுது. வெலெவாசி ஒயர்வு, பெட்ரோல், டீசல் வெலெ ஒயர்வு, பள்ளி, கல்லூரிக் கட்டணம் ஒயர்வு, மின்கட்டண ஒயர்வு, மின் தடை, போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும், எங்கு பாத்தாலும் ஊழல், லஞ்சம், நில அபகரிப்பு, உணவுப்பொருட்களின் வெலெவாசி ஒயர்வு மற்றும் பதுக்கல், கடத்தல், சில மாநிலங்களில் பசி, பட்டினி, பஞ்சம், வேலெயில்லாத் திண்டாட்டத்துனாலெ அன்றாடம் சர்வசாதாரனமாக்கப்பட்ட கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஒரு புறம் தீவிரவாத தாக்குதல்கள் (காவித்தீவிரவாதமா? இல்லை கபோதி தீவிரவாதமா?தெரியவில்லை பட்டிமன்றத்தில் தலைப்பிட்டு விவாதிக்கப்பட வேண்டியவை) குழந்தைகள் கடத்தல், போலி சாமியார்களின் காம அட்டூழியங்கள், கருப்பு பண பதுக்கல், கள்ளச்சந்தை என்று நாட்டில் ஏகப்பட்ட பிரச்சினைகள் பெருச்சாலி போன்று ஆங்காங்கே மேய்ந்து/ஊர்ந்து சென்று கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில்.

"நிமிசத்திற்கு எத்தனையோ லட்சங்கள் வருவாய் ஈட்டக்கூடிய, சிறுவயதிலிருந்து இந்திய அணியில் பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு, சர்வதேச போட்டிகளில் விளையாண்டு பல கோடான கோடிகளையும், விலையுயர்ந்த பரிசுப்பொருட்களையும் சிறுவயதிலேயே சம்பாதித்து இன்று இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரன் என்றும் கிரிக்கெட்டின் கடவுள்(??)  என்றும் ஊராலும், உலகத்தாலும் புகழப்பட்டு நாட்டின் மொத்த ஊடகத்தின் கவனத்தையே தன் பக்கம் திருப்பி வைத்துள்ள "சச்சின் டெண்டுல்கர்" க்கு இந்தியாவின் உயரிய விருதான "பாரத் ரத்னா" விருது வழங்க வேண்டுமென மஹாராஷ்ட்ர மாநில முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் கச்சல் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி, நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சகமும் வரிந்து கட்டிக்கொண்டு அதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சிபாரிசு கடிதம் எழுதி அதை அப்படியே முன்மொழிந்து மத்திய உள்துறை அமைச்சகமும் இந்த விளையாட்டுத் துறையை பாரத ரத்னா விருது வழங்கும் பட்டியலில் உடனே சேர்க்கச்சொல்லி வலியுறுத்தி பாரத பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கின்றதன் அவசியம் தான் என்ன? அவசரம் தான் என்ன?

அவர் கிரிக்கெட் விளையாட்டில் அர்ப்பணிப்புடன் சிறப்பாக விளையாண்டு நாட்டிற்கு நல்ல பெயரையும், புகழையும், பெருமையும் தேடித் தந்துள்ளார் என்பதில் மாற்றுக்கருத்து யாருக்கும் இல்லை தான். அவர் என்ன நாட்டுக்காக சும்மாவா விளையாண்டார்? ஒவ்வொரு போட்டிக்கும் பல கோடிகளை சம்பளமாக பெற்றும் அதற்கு மேல் விளம்பரத்தில் பல நூறுகோடிகளையும் சம்பாதித்தும் அல்லவா? அரங்கில் சிறப்பாக விளையாண்டார். நமக்கெல்லாம் விளையாட்டு அரங்கில் நுழைய இலவச டிக்கெட்டா கொடுத்தார்கள்? இல்லை தொலைக்காட்சியில் காண இலவச மின்சாரம் (!!!) தந்தார்களா ?

நாட்டை செழிப்பாகவும், வறுமைக்கோட்டிற்கு கீழே அன்றாடம் செத்து, செத்து வாழ்ந்து கொண்டிருக்கும் தாய் மண்ணின் கோடான கோடிமக்களை கைப்பிடித்து மேலே கொண்டு வர முயற்சித்தாரா? அறிவியல் மற்றும் மருத்துவத்துறையில் சிறப்பான ஆராய்ச்சி செய்து அதை நாட்டிற்காக அர்ப்பணித்தாரா? தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மூலம் விவசாய வளர்ச்சிக்கு வித்திட்டாரா? இல்லை நாட்டின் கடும்குளிரும் குண்டு மழையும் பொழியும் எல்லையில் நின்று அந்நிய நாட்டு படையுடன் சண்டையிட்டாரா? அல்லது நாட்டிற்கு பெருமை மட்டும் சேர்த்து விட்டு ரோட்டோர குடிசையில் வாழ்ந்து வருபவரா? நல்லா வெளையாண்டார் என்பதற்காக அவருக்குத்தான் தக்க சன்மானங்களும், வெகுமானங்களும், பரிசுப்பொருட்களும், பண முடிச்சுகளும் ஊராலும், உலகத்தாலும் உடனுக்குடன் கொடுக்கப்பட்டு விட்டதே? அவருக்கு எப்படியாவது பாரத ரத்னா விருதை வாங்கி கொடுத்து விட வேண்டும் என்று இராப்பகலாய் உறங்காமல் துடியாய் துடித்து வரும் மஹாராஷ்டிர முதல்வரும், நாட்டின் விளையாட்டு மற்றும் உள்துறை அமைச்சர்களும், பாரத பிரதமரும் அவர்கள் தங்கள் சொத்தில் ஒரு பங்கை அவருக்கு கொடுத்து அதை ஒரு பெரு விழாவாக எடுத்து மகிழ வேண்டியது தானே? யார் தடுத்தார்கள்? இல்லை வேண்டாம் என்றார்கள்? போட்டியில் நன்றாக விளையாண்டால் தலையில் தூக்கி வச்சி கொண்டாடுவார்கள். சரிவர விளையாட வில்லை எனில் தூக்கி எறிந்து கும்மியடிச்சி கேவலப்படுத்தி அட்ரஸில்லாமல் ஆக்கி விடுவார்கள்.

தமிழகத்தின் ஒரு கிராமத்தில் சொந்த வீடு கூட இல்லாத ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்து பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 1200க்கு 1171 மார்க்குகள் வாங்கி மாநிலத்திலேயே மூன்றாம் இடம் பிடித்து மருத்துவராக வேண்டும் என்ற தன் உயரிய கனவுடன் மருத்துவக்கல்லூரியில் இடமும் கிடைத்து மேற்கொண்டு அங்குள்ள கட்டணம் செலுத்த இயலாமல் அதை அப்படியே விட்டு விட்டு மேற்படிப்பெல்லாம் வீட்டின் பொருளாதார சூழ்நிலையால் தனக்கு ஒத்துவராது என்றெண்ணியவனாக தன் தந்தையுடன் ஒத்தாசையாக மண்வெட்டியுடன் வரப்பு வெட்ட கிளம்பி விட்டான் அந்த ஒரு இளைஞன். இவன் போல் எத்தனை லட்சம் இளைஞர்கள் நம் நாட்டில் உள்ளனர். இந்த வாலிபனுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க பரிந்துரைக்கப்பட்டால் பாரத ரத்னாவிற்குத்தான் பெருமையாக இருக்குமே ஒழிய இந்த மாணாவனுக்கல்ல....(இப்படியாக மாணவனுக்குஎல்லாம் நம்மை கொடுக்கிறார்களே என்று அந்த பாரத் ரத்னா விருது பெருமைப்படும்).

சச்சின் டெண்டுல்கரின் மேல் நமக்கு எவ்வித பொறாமையும், காழ்ப்புணர்ச்சியும் இல்லை. அவர் ஒரு மிகச் சிறந்த மட்டையடி வீரர் இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. நாட்டில் பல பிரச்சினைகள் பூதமாக உருவெடுத்து தாண்டவமாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இதெல்லாம் தேவைதானா? என்பதே கேள்வி. சுவிஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நாட்டின் கருப்பு பணத்தை வெளியில் கொண்டு வந்து அதை வைத்து ஊரறிய, உலகறிய ஒரு பெரு விழாவில் சச்சின் போன்ற ஏழைகளுக்கு வேண்டிய விருது கொடுத்து மகிழ்ந்தார்கள் என்றால் பரவாயில்லை.

அரசியல், புகழ், ஆட்சி, அதிகாரம் என்று கையில் வந்து விட்டால் உலக பொருளாதார மாமேதைகளும், புள்ளியல் மற்றும் கணித மேதைகளும், உலக வங்கியின் செயலாளராக பரிந்துரைக்கப்பட்ட நாட்டின் திட்டக்குழு வல்லுநர்களும் கூட கடைசியில் மழுங்கினிகளாகவும், மந்தாண்டைகளாகவும், சாதாரன மனிதர்கள் போல் ஆகி விடுவார்கள் போலும்......

இறைவா! நாம் பல்லக்கில் செல்ல விரும்பவில்லை; மாறாக நாலு பேர் எம்மை பார்த்து கேவலமாக எதற்கும் பல்லிளிக்க வைத்து விடாதே....

ஆதங்கத்தில் சாதாரன இந்திய மண்ணின் மைந்தனாக....

- மு.செ.மு. நெய்னா முஹம்மது.


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு