எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே உரியது.
பதிவுக்குள் செல்லும் முன் : இந்தப் பதிவுக்கு பதிலளிக்க / மறுத்துரைக்க விரும்பினால் கருத்துப் பகுதியில் கருத்துக்களை கண்ணியமாக பதியலாம், பதிவுக்கென்று மறுப்புரை அல்லது விளக்கமளிக்க விரும்பினால் editor@adirainirubar.in என்ற மின்னஞ்சலுக்கு நேரடியாக அனுப்பித் தரும் பட்சத்தில் நெறியாடலுக்கு பின்னர் பதிவாக வெளியிடப்படும். அனைத்தும் அதிரைநிருபர் வலைத்தளத்தின் விதிமுறைக்குட்பட்டே அனுமதிக்கப்படும்.
அதிரைநிருபர் பதிப்பகம்
முகக் குறிப்பு: இந்தப் பதிவின் நோக்கம் யாரையும் தாக்கி எழுத வேண்டும், புண்படுத்தபட வேண்டும் என்ற எண்ணம் ஒரு துளியும் இல்லை. மாறாக இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இம்மை, மறுமையின் இழிவுகளிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும், நல்லது எதை நமக்காக விரும்புகிறோமோ அதையே அவர்களும் அடைய வேண்டும் என்ற எண்ணமே. இல்லையெனில் அவர்கள் எக்கேடு கெட்டுப் போகட்டும் என்று மவுனமாக விட்டிருக்கலாம். தலைப்பை தேர்ந்தெடுக்கும் போது கூட நிரம்ப யோசிக்க வேண்டியிருந்தது..
அதிரைநிருபர் பதிப்பகம்
o0o0o0o0o0o
மேலும் தெரிந்து கொள்ள பொறுமையாக முழுவதும் படியுங்கள்.
அல்லாஹ் ஸுப்ஹானஹு வதஆலா ஸுரா அல்பகராவில் மூன்று பிரிவினரைப் பற்றியும் அவர்களின் அடையாளங்கள், பண்புகள் பற்றியும் மிகத்தெளிவாக ஸூராவின் ஆரம்பத்திலேயே குறிப்பிடுகிறான்.
1. முஃமீன்களைப் பற்றி மூன்று ஆயத்துகளிலும் (ஆயத் என் 3,4,5).
2. காஃபிர்களைப் பற்றி இரண்டு ஆயத்துகளிலும் (ஆயத் என்: 6,7)
3. முனாஃபிக்குகள் எனும் நயவஞ்சகர்கள் பற்றி 13 (பதிமூன்று) ஆயத்துகளிலும் (ஆயத் என் 8 லிருந்து 20 வரை) குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏன் தெறியுமா? இந்த நோய் அதிபயங்கரமானது. அல்லாஹ் ஸுப்ஹானஹு வதஆலா இதைப்பற்றி குறிப்பிடும் போது சில சமயங்களில் "அவர்களின் இதயங்களில் நோய்" என்று குறிப்பிடுகிறான்.
இத்தகைய நோயாளிகளின் முதல் பண்பு பற்றி :-
அல்பகரா அத்தியாயம் (எண்: 2:8), இன்னும் மனிதர்களில் “நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்” என்று கூறுவோறும் இருக்கின்றனர்; ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்.
நாம் மிகவும் கவனமாக கவனிக்க வேண்டியது. “அவர்கள் ஈமான் கொள்கிறோம் (நாங்கள் முஸ்லிம்கள்)” என்று கூறுவதுதான் அவர்களின் உள்ள பண்புகளில் உள்ளது என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
இரண்டாவது பண்பு பற்றி :-
அல்பகரா அத்தியாயம் (எண் 2:9) . (இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்; ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்கிறார்களே தவிர வேறில்லை; எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை.
மூன்றாவது பண்பு பற்றி :-
அல்பகரா அத்தியாயம் (எண் 2:10). அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது; அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான்; மேலும் அவர்கள் பொய் சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனையும் உண்டு.
அல்பகரா அத்தியாயம் (எண் 2:11) . “பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் “நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்” என்று அவர்கள் சொல்கிறார்கள்.
அல்பகரா அத்தியாயம் (எண் 2:12). நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ; ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை.
இன்று நமது ஊரில் முக்கியமான ஒரு ஆலிமுக்கு எதிராக நடந்து வரும் அத்தனை விஷயங்களையும், சூழ்ச்சிகளையும் இந்த பதின்மூன்று ஆயத்துகளின் வெளிச்சத்தில் நாம் ஆராயக்கடமைப் பட்டிருக்கிறோம்.
கண்ணியமிக்க ஆலிம் அவர்களை வெளியேற்ற முயற்சி செய்தவர்கள் சொன்ன காரணம் "ஊரில் அமைதி மற்றும் சமாதானம் உண்டாக்க" மேலே குறிப்பிடப்பட்ட ஆயத் எண்கள் 11 மற்றும் 12ல் இவ்வாறுதான் மதீனத்து முனாஃபிக்குகளின் தலைவன் அப்துல்லாஹ் பின் உபை பின் அல்ஸலூல் கூறிக்கொண்டிருந்தான்.
இந்த ஆலிம் ஊரின் அமைதிக்கு எதிராக என்ன செய்தார்? அல்லாஹ்வின் மார்க்கத்தை உள்ளது உள்ளபடி மக்களுக்கு சொல்லி பலரும் திருந்துவதற்கு காரணமாக இருந்த சொற்பொழிவுகளை தடுத்து நிறுத்த துணிந்துவிட்ட இவர்கள் அல்லாஹ்வுக்கு எதிரான போர் பிரகடனம் செய்து இம்மை மறுமையின் அழிவுப்பாதையை நோக்கி தறிகெட்டு ஓடிக் கொண்டிருப்பதை இவர்கள் உணரவில்லையா?
திடீரென்று 10 நாட்கள் தக்வா பள்ளியின் பயான் நிறுத்தப்பட்ட விஷயம் அறிந்து அதன் காரணம் என்ன என்பதை அறிவதற்காக விசாரிக்கத் தொடங்கியது முதல் நாளிலிருந்து கடந்த சில தினங்கள் வரை எவ்விதமான தகவலையும் முறையாக சேகரிக்க முடியவில்லை. காரணம் இதில் சம்பத்தப்பட்டவர்கள் அவ்வளவு ரகசியமாக அல்லாஹ்வின் தீனுக்கு எதிரான சூழ்ச்சியை செய்து முடித்திருக்கிறார்கள்.
கடந்த வாரம் கண்ணியமிக்க ஆலிம் அவர்களை புதிதாக நியமிக்கப்பட்ட "தலைவரின்" வீட்டிற்கு அழைக்கப்பட்டதையும் அவர்கள் அங்கு சென்றதை பார்த்த சிலரின் மூலம் அறியப்பட்டதும், அங்கு சென்று வந்த ஆலிம் அவர்களிடம் இது பற்றி கேட்டதும். “மரியாதை நிமித்தமாக சென்று சந்தித்து வந்தேன்” என்று மட்டுமே பதில் வந்தது. அல்லாஹ்வுடைய உயர்ந்த வேலையை அல்லாஹ்வுக்காக செய்பவர்கள் தீனுக்கு பங்கம் வரும்போது அதன் உண்மை நிலையை மக்களுக்கு தெளிவாக சொல்ல வேண்டும். இந்த விஷயத்தில் அமைதி காப்பதும் நல்லதல்ல.
தீவிர முயற்சிகளுக்குப் பின்னர் சம்பந்தப்பட்டவர்களோடு தொடர்புடையவர்கள் வாயிலாகவும் அவர்களைச் சுற்றியிருப்பவர்களின் நண்பர்கள் மூலமாக மேலும் தகவல்களை அறிய முடிந்தது.
"தீனின் நெருப்புப்பந்தம் " என்று பெயர் வைத்ததினாலோ, "இரண்டவது கலீபாவின்" பெயர் வைத்ததினாலோ, அல்லது "முற்றிலும் அடிபணிந்தவன்" என்று பெயர் வைத்ததிருப்பதனாலோ நாம் அல்லாஹ்விடம் வெற்றியடைந்து விடுவோம் என்று யாரும் நப்பாசை கொள்ளக் கூடாது.
அடியானின் உள்ளத்தில் மறைந்துள்ள விஷயங்களை அல்லாஹ் வெளிக்கொண்டு வருவான் என்பதை இவர்கள் அறியவில்லையா?
இதில் சம்பந்தப்பட்டவர்களிடம் மிகவும் அன்பாக சொல்லிக்கொள்வது என்னவென்றால், உங்களின் உள்ளத்தில் “நம்மை யாரும் மதிப்பதில்லையே” என்ற எண்ணம் இருந்தால் ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்: மதீனத்து நயவஞ்சகத் தலைவன் அப்துல்லாஹ் பின் உபையும் இவ்வாறுதான் சிந்தித்தான். அதன் விளைவு என்ன?
சம்பந்தப்பட்டவர்கள் தங்களிடம், அல்லாஹ் நயவஞ்சகர்கள் பற்றி கூறும் எத்தனை பண்புகள் இருக்கிறது என்பதை குர்ஆன் மற்றும் ஹதீஸ்களுடன் உரசிப் பார்க்கட்டும்.
அல்பகரா அத்தியாயம் (எண் 2:13) : (மற்ற) மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், “மூடர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டது போல், நாங்களும் ஈமான் (நம்பிக்கை) கொள்ள வேண்டுமா?“ என்று கூறுகிறார்கள் (அப்படியல்ல;) நிச்சயமாக இ(ப்படிக் கூறுப)வர்களே மூடர்கள். ஆயினும் (தம் மடமையை) இவர்கள் அறிவதில்லை.
அல்பகரா அத்தியாயம் (எண் 2:14). இன்னும் (இந்தப் போலி விசுவாசிகள்) ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது, “நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம்” என்று கூறுகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, “நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்; நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம்” எனக் கூறுகிறார்கள்.
மேலே குறிப்பிட்ட திருக்குர்ஆன் வசன்ங்களை மிக கவனமாக சிந்தித்து பாருங்கள். இந்த முனாஃபிக்குகள் முஃமின்களுடன் இருக்கும்போது நாங்கள் ஈமான் கொண்டவர்கள் என்று கூறுவார்கள். ஆனால் மனித மற்றும் ஜின் ஷைத்தான்களுடன் இருக்கும்போது மேலே கூறியதற்கு நேர் மாறாக "நாங்கள் நிராகரிப்பாளர்கள்" என்றோ "நாங்கள் ஈமான் கொள்ளவில்லை" என்றோ சொல்ல மாட்டார்கள். மாறாக " நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்" என்று கூறுவார்கள்.
நமது ஊர் விஷயம் சம்பந்தப்பட்டவர்களின் கூற்றும் அல்லாஹ் நயவஞ்சகர்கள் பற்றி கூற்றும் கருத்தை ஒற்றியே உள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம்.
இவ்வாறு வெளிப்படையாக கூறுபவர்கள் திரைமறைவில் அல்லாஹ்வின் தீனுக்கு எதிராக சூழ்ச்சிகள் செய்வதை அல்லாஹ்வும் அவன் தூதர்(ஸல்) அவர்களும் தெளிவாக நமக்கு அறிவித்து தந்திருகிறார்கள்.
சமீபத்தில் உள்ளூர் விவகாரங்களில் நீதியின் பக்கமும் அநீதியின் பக்கமும் ஒத்துழைப்பையும் தாராளமாக வழங்கிவிட்டு, "என்ன செய்வது அவர்களும் நம்மவர்கள்தானே எனவே இதனை செய்துவிட்டேன், நீங்களும் உங்களின் செயல்களில் உறுதியாக இருங்கள் " என்று சொல்பவர்கள் அல்லாஹ் மேற்கூறும் ஆயத்தில் இவர்களைப் போன்று உள்ளவர்களின் நிலை பற்றி கூறுவதை சற்று கவனத்துடன் சிந்தித்து பார்த்து உடனடியாக அல்லாஹ்விடம் தவ்பாச் செய்து கொள்வதே நன்மை பயக்கும். அல்லாஹ்வுக்கு எதிரான தரப்பாருக்கு வழங்கிய ஆதரவை உடனடியாக திரும்பப் பெறவேண்டும். உடனடியாக அந்த ஆவணங்களை செல்லாது என்று பொதுவில் அறிவிப்பதுடன் அதனை அரசு அலுவலகங்களிலும் முறைப்படி அறிவிக்க வேண்டும்.
58 வது (ஸூரத்துல் முஜாதலா )அத்தியாயத்தில் அல்லாஹ் கூறுகிறான்: -
58:22. (நபியே!) எந்த மக்கள் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் (மெய்யாகவே) நம்பிக்கை கொண்டிருக்கின்றார்களோ அவர்கள், எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்பவர்களாக இருக்கின்றார்களோ (அவர்களை நேசிக்க மாட்டார்கள்.) அவர்கள், தங்களுடைய பெற்றோர்களாக இருந்த போதிலும், அல்லது தங்களுடைய சந்ததிகளாக இருந்தபோதிலும், அல்லது தங்களுடைய சகோதரர்களாக இருந்தபோதிலும், அல்லது தங்களுடைய நெருங்கிய உறவினர்களாக இருந்தபோதிலும், அவர்களுடன் நேசம் கொண்டு உறவாடுவதை நீங்கள் காண மாட்டீர்கள். இவர்களுடைய உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையை பதிய வைத்துத் தன்னுடைய அருளைக் கொண்டும் இவர்களைப் பலப்படுத்தி வைத்திருக்கின்றான். தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளிலும் இவர்களைப் புகுத்தி விடுவான். அதில் என்றென்றும் இவர்கள் தங்கிவிடுவார்கள். இவர்களைப் பற்றி அல்லாஹ் திருப்தியடைவான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றித் திருப்தியடைவார்கள். இவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர். நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர்தாம் வெற்றி அடைந்தவர்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.
அல்லாஹ்வின் எச்சரிக்கைகளை புறக்கனித்து நாங்கள் இந்த அற்ப உலகத்தின் அற்ப மரியாதைக்காகவும் எங்களின் பெருமையை நிலை நாட்ட நாங்கள் இப்படிதான் அல்லாஹ்வுக்கு எதிரான போரை செய்வோம் என்று சொல்வோரின், இவ்வாறான பண்புள்ளவர்களின் முடிவுதான் என்ன?
அல்லாஹ் கூறுகிறான்:-
அல் பகரா அத்தியாயம் (எண் 2 :16) . இவர்கள் தாம் நேர்வழிக்கு பதிலாகத் தவறான வழியைக் கொள்முதல் செய்து கொண்டவர்கள்; இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் தராது; மேலும் இவர்கள் நேர்வழி பெறுபவர்களும் அல்லர்.
வியாபாரம் மூன்று வகையானது.
1. விற்பவருக்கு இலாபம் தருவது.
2. சில சமயங்களில் இலாபமும் இல்லை நஷ்டமும் இல்லை
3. நஷ்டமாகிப் போவதுடன் வியாபார முதலையும் இழப்பது.
இவர்களின் ஃபித்ராவில் (இயற்கையில்) இருந்த நேர்வழி எனும் முதலையும் சேர்த்து இழந்து விட்ட மாபெரும் நஷ்டவாளிகள் இவர்கள் என்பதை அல்லாஹ் பின்வரும் அதே தொடரில் உள்ள ஆயத்தில் விளக்குகிறான்.
அல்பகரா அத்தியாயம் (எண் :2:16). இவர்கள் தாம் நேர்வழிக்கு பதிலாகத் தவறான வழியைக் கொள்முதல் செய்து கொண்டவர்கள்; இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் தராது; மேலும் இவர்கள் நேர்வழி பெறுபவர்களும் அல்லர்.
மதீனாவில் முனாஃபிக்குகளின் தலைவன் அல்லாஹ்வின் தூதருக்கு(ஸல்) எதிராக மறைமுகமாக பனிப்போர் நடத்தியதற்கு காரணம், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மதீனா வரும்முன் அப்துல்லாஹ் பின் உபைக்கு மதீனத்து மக்கள் ராஜ கிரீடம் அணிவிப்பதற்காக ஆயத்தம் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த வாய்ப்பு கை நழுவிப் போனதன் காரணமாகவே இந்த பனிப்போரை அவன் நடத்திக் கொண்டிருந்தான். அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும்(ஸல்) அடிபணிந்து நடந்திருந்தால் இவ்வுலகில் வெறும் மதீனாவின் ஆட்சி கிடைக்காமல் போனாலும் மறு உலகில் இந்த முழு உலகத்தைக்காட்டிலும் உயர்ந்த ஆட்சியை அல்லாஹ் அவனுக்கு வழங்கி இருப்பான். ஆனால் அவனுடைய இதயத்தில் அல்லாஹ் மீதும் அவன் தூதர்(ஸல்) மீதும் இருந்த சந்தேகத்தின் காரணமாக, அந்த நோயின் காரணமாக அவன் ஈருலகிலும் நஷ்டமாகிப் போனான்.
சம்பந்தப்பட்டவர்கள் உடணடியாக சொந்த கவுரவம் எனப்படும் (ஈகோ) ஷைத்தானால் தோற்றுவிக்கப்படுகிறது என்பதை உணர்ந்து அல்லாஹ்விடம் தவ்பாச் செய்து, பாவத்திற்கு பரிகாரம் தேடுங்கள்.
இவர்கள் செய்து கொண்டிருக்கும் அட்டூழியங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் மேலும் பாதிப்பையே ஏற்படுத்துகிறதே என்ற மகிழ்ச்சியில் அல்லாஹ்வை மறந்து விடாதீர்கள். இவர்களை விடவும் மாபெரும் அட்டூழியக்காரர்களான ஃபிர்அவ்ன் போன்றவர்களின் நிலை என்ன ஆனது என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்.
ஃபிர்அவ்ன் மேலும் மூசா (அலை) அவர்களின் கூட்டத்தினரின் குழந்தைகளை எல்லாம் கொலை செய்வோம் என்று கொக்கரித்து அதனை செய்து கொண்டிருக்கும்போது, மூஸா (அலை) அவர்களின் கூட்டத்தினர் பரிதாபமான முறையில் இவ்வாறாக முறையிட்டனர்.
ஸூரத்துல் அஃராஃப் அத்தியாயம் (எண் 7:129):. (அதற்கு மூஸாவுடைய மக்கள் அவரை நோக்கி) நீங்கள் நம்மிடம் வருவதற்கு முன்னரும் நாங்கள் துன்புறுத்தப்பட்டோம்; நீங்கள் வந்ததன் பின்னரும் (துன்புறுத்தப்பட்டே வருகின்றோம். நீங்கள் வந்ததால் எங்களுக்கு ஒன்றும் பயனேற்படவில்லை) என்று கூறினார்கள். (அதற்கு மூஸா) "உங்களுடைய இறைவன் உங்களுடைய எதிரிகளை அழித்து (அவர்களுடைய) பூமிக்கு உங்களை அதிபதியாக்கி வைக்கக்கூடும். உங்களுடைய நடத்தை எவ்வாறு இருக்கின்றது என்பதை அவன் கவனித்துக் கொண்டு இருக்கின்றான்" என்று கூறினார்.
மூஸா (அலை) அவர்கள் பின்வருமாறு கூறியதையும், பலம்மிக்க ஃபிரவ்னின் கூட்டத்தார் எவ்வாறு அழித்து ஒழிக்கப் பட்டார்கள் என்பதையும் அல்லாஹ் கூறுகிறான்.
ஸூரத்துல் அஃராஃப் அத்தியாயம் எண் 7:128 . (அதற்கு) மூஸா தன் இனத்தாரை நோக்கி "நீங்கள் அல்லாஹ்விடம் உதவி தேடி (ஃபிர்அவ்னால் உங்களுக்கு ஏற்படும் துன்பங்களை) பொறுமையுடன் சகித்திருங்கள். நிச்சயமாக இந்த பூமி அல்லாஹ்வுக்குரியதே! அதனை அவன் தன் அடியார்களில் தான் விரும்பியவர்களுக்குச் சொந்தமாக்கி விடுவான். (அல்லாஹ்வுக்கு) பயப்படுகிறவர்களே முடிவில் வெற்றி பெறுவார்கள்" என்று கூறினார்.
நாம் அதிபயங்கர நோய் என்று தலைப்பிட்டிருந்தோம். எல்லா நோய்களும் இவ்வுலகத்திலேயே முடிந்து விடும்.
ஆனால் நயவஞ்சகம் எனும் இந்த கொடிய நோய் மரணித்த பின்னரும் தொடரும்.
இத்தகையவர்கள் காஃபிர்களை விடவும் கீழ்த்தரமான மிகக் கெட்ட நரகத்தில் இருப்பார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
ஸூரத்து அன் நிஸா அத்தியாயம் எண் 4:145 . நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்திலும் கீழ்ப்பாகத்தில் தான் இருப்பார்கள். (அங்கு) அவர்களுக்கு உதவி செய்யும் எவரையும் நீங்கள் காணமாட்டீர்கள்.
ஏன் தெரியுமா? நயவஞ்சகத்தனம் நிராகரிப்பு எனும் குஃப்ரை விடவும் கொடியது.
அல்லாஹ்வின் உண்மை விசுவாசிகளே உங்களுக்கு வரும் சோதனைகளைக் கண்டு கலங்காதீர்கள். அல்லாஹ் கூறுகிறான்.
ஸூரத்துல் ஹதீத் அத்தியாயம் எண் 57:12 . (நபியே!) நம்பிக்கை கொண்ட இத்தகைய ஆண்களையும் பெண்களையும் நீங்கள் காணும் அந்நாளில், அவர்களுடைய ஒளியின் பிரகாசம் அவர்களுக்கு முன்னும், வலப்பக்கத்திலும் சென்று கொண்டிருக்கும். (உண்மையான அவர்களின் நம்பிக்கையின் காரணமாக, அவர்களை நோக்கி மலக்குகள்:) "இன்றைய தினம் உங்களுக்கு நற்செய்தி (என்றும்) தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதியில் நுழைந்து விடுவீர்கள். என்றென்றும் அதில் தங்கியும் விடுவீர்கள்" என்றும் கூறுவார்கள். இதுதான் மகத்தான ஒரு வெற்றியாகும்.
அட்டூழியம் புரிபவர்கள் தவ்பாச் செய்து இப்பொழுதே மீண்டு விட்டால் அவர்களும் இதே பாக்கியம் கிடைக்கப் பெறுவார்கள்.
அதற்கு மாற்றமாக ஷைத்தானின் வழியையும், தங்களின் மனோ இச்சைகளையும் பின்பற்றி நயவஞ்சகத்தனத்தில் மரணம் அடைபவர்கள் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:-
ஸூரத்துல் ஹதீத் அத்தியாயம் (எண் 57:13). அந்நாளில், நயவஞ்சக ஆண்களும் பெண்களும் நம்பிக்கை கொண்டவர்களை நோக்கி "நீங்கள் (முன் செல்லாது) எங்களுக்காகச் சிறிது தாமதியுங்கள். உங்களுடைய பிரகாசத்தைக் கொண்டு நாங்கள் பயனடைவோம்" என்று கூறுவார்கள். (அதற்கு அவர்களை நோக்கி "எங்கள் முன் நிற்காதீர்கள்.) நீங்கள் உங்கள் பின்புறம் சென்று (அங்குப்) பிரகாசத்தைத் தேடிக்கொள்ளுங்கள்" என்று கூறப்படும். அந்நேரத்தில், இவர்களுக்கும் அவர்களுக்கும் மத்தியில் ஒரு சுவர் எழுப்பப்பட்டுவிடும். அதற்கு வாசலும் இருக்கும். (நம்பிக்கை யாளர்கள் இருக்கக்கூடிய) அதன் உட்புறத்தில் (இறைவனின்) அருளும், அதன் வெளிப்புறத்தில் (பாவிகள் அனுபவிக்கக்கூடிய) அவனுடைய வேதனையுமிருக்கும்.
இன்று மிக அதிகம் பொறுப்பு மிக்க, மறுமையின் அதிகமான கேள்விகளுக்கு உட்படுத்தக்கூடிய பதவிகளுக்கு, தகுதியற்ற அற்பர்கள் போட்டி போட்டுக்கொண்டு வருவதை நமக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னேயே பல ஹதீஸ்களில் எச்சரிக்கை செய்திருப்பதை நினைவில் கொண்டு சம்பத்தப்பட்டவர்களும், ஊர்மக்களும் விவேகத்துடன் செயல் பட வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஹதீதில் கியாமத் நாளின் அடையாளம் பற்றி கூறும்போது, " அற்பரின் மகன், அற்பர்கள் சமுதாயத்தின் நிர்வாகப் பொறுப்புகளில் வருவார்கள்" என்று ஒரு ஹதீதிலும் மற்றொரு ஹதீதில் "தகுதியற்றவர்கள் சமுதாயப் பொறுப்புகளில் வந்தால்..." என்னும் தொடரில் முன்னறிவிப்பு செய்துள்ளதையும் நாம் நன்கு சிந்திக்க கடமைப் பற்றிருக்கிறோம்.
மீண்டும் ஒரு முறை இங்கே நினைவு படுத்துகிறோம் இந்த பதிவில் யாரையும் ஏளனம் செய்ய வேண்டும் என்ற துளிகூட எண்ணமில்லை. சம்பத்தப்பட்டவர்கள் தாங்கள் இப்பொறுப்புக்கு தகுதி இல்லாதவர்கள் என்பதையும், இந்த பொறுப்பில் தொடர்வது இம்மை மறுமையின் இழிவையும், இழிவு தரும் வேதனையையும் தரும் என்பதை அஞ்சி அதிலிருந்து தங்களை காத்துக்கொள்ள வேண்டும் என்ற நல்லென்னத்தினாலுமே இதனை இங்கே குறிப்பிடுகிறோம்.
தப்லீக் சகோதரர்களும், சம்பந்தப்பட்ட கண்ணியமிக்க ஆலிம் அவர்களும் தீனுக்கு வரும் ஆபத்துகளை மக்களுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை செய்யாமல் அமைதி காத்து வருவது பெரும் ஆபத்தை கொண்டு வரும் என்பதை நினைவூட்டுகிறோம்.
கடைசியாக கிடைக்கப்பெற்ற தகவலின்படி, சம்பந்தப்பட்டவர்கள் கண்ணியம்மிக்க ஆலிம் அவர்களிடம் "நீங்களாகவே கண்ணியமாக விலகிக் கொள்ளுங்கள், இல்லையேல் நாங்கள் விளக்க நேரிட்டு அதன் காரணமாக உங்கள் கண்ணியம் கெடும்" என்று கூரியிருக்கிறார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்:-
ஸூரத்துல் முனாஃபிஃகூன் அத்தியாயம் (எண் 63:8). அன்றி, "நாங்கள் மதீனாவிற்குத் திரும்ப வந்தால், கண்ணியமுள்ள நாங்கள் (நம்பிக்கைக் கொண்ட இந்த) இழிவானவர்களை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்றி விடுவோம்" என்றும் கூறுகின்றனர். (நபியே! நீங்கள் கூறுங்கள்:) கண்ணிய மெல்லாம், அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் சொந்தமானது. எனினும், இந்த நயவஞ்சகர்கள் (அதனை) அறிந்து கொள்ளவில்லை.
இங்கே இதனை எழுதுவதற்கு முக்கிய காரணம் இதில் சம்பத்தப்பட்ட பலரும் நம் உறவினர்கள் என்பதும் அநியாயக்கார முனாஃபிக்குகளுக்கு நேர்ந்த இழிவான முடிவை அவர்கள் அடையக்கூடாது எனும் உயர்ந்த எண்ணம்தான்.
யா அல்லாஹ் எங்கள் சமுதாயத்தினருக்கு நேர்வழியையும், மார்க்கத்தின் தெளிவான விளக்கத்தையும் கொடுப்பாயாக. எங்களின் அறியாமையின் காரணமாக வழிகெட்டவர்கள் அடைந்த கேட்டில் எங்களையும் ஆக்கிவிடாதே.
அபூ முஸ்அப்


