முன்குறிப்பு: இந்த பதிப்பால் நம் ஊரில் உள்ள கொசுக்கள் செத்து மடிந்து விடும் என்றோ, அல்லது பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறையும் என்றோ நான் நினைக்கவில்லை...எனவே நானே சொல்கிறேன் இந்த பதிப்பால் ஊருக்கு எந்த பயனும் இல்லை. [அப்பாடா... யாராவது இதனால் என்ன பயன் என்று கேட்கும் ஒரு பின்னூட்டம் மிச்சம் செய்ய நம்மால முடிந்தது]
கோபம் புருச லட்சனம்????
மனைவியிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு
வந்த நண்பர் [ஏறக்குறைய 400 கி.மீ பயணம் செய்து] " நம்ம அருமை தெரியனும்னா இப்படி செஞ்சாத்தான்
தெரியும்...என்ன சொல்றீங்க?'
'அது சரி நீங்க
என்ன செஞ்சீங்க.. அருமை தெரிய"நு சொல்லவே இல்லையே...'
“மொபைலெ ஸ்விச் ஆஃப் செஞ்சிட்டேன். நான் இங்கேதான் இருக்கேன்னு
யார்ட்டையும் சொல்லலே.... நான் இல்லாமெ கஷ்டப்படட்டும், மார்க்கெட்லெ கறி வாங்குறதைலேருந்து
சம்பாதிச்சு கொட்டுற வரைக்கும் நம்ம மாதிரி ஆம்பிள்ளைங்கதான்... ஆனால், வீட்டிலெ
இருந்து சீரியல் பார்த்துக்கிட்டு டெலிபோனில் ஊருக்கும், பக்கத்து வீட்டு பொம்பளைங்க கூட பிசாது பேசுர
பொம்பளைங்களுக்கு இவ்வளவு திமிர் இருக்கும்னா.. எனக்கு எவ்வளவு இருக்கும்?,
நண்பரை
ஆசுவாசப்படுத்த கூல்ட்ரிங் ஆர்டர் செய்து விட்டு நான் இளநீர் மட்டும்
குடித்தேன்...
' நீங்க ஏன் பெப்சி
/ கோக் குடிக்கலெ"- நண்பர்.
'முடிந்த அளவு
இயற்கையா இருந்து பழகிட்டேன்...' இப்போவெல்லாம்
இயற்கையான உணவுகள்தான் ரொம்ப காஸ்ட்லி ஆயிடுச்சி... இல்லே'
"ஆமா... அது
சரி நான் கோவிச்சிட்டு வந்ததெ பத்தி என்ன நினைக்கிறீங்க?."..
" உங்க குடும்பம்
கொஞ்ச நாளைக்கு நிம்மதியா இருக்கும்"
"என்ன இப்படி சொல்லிட்டீங்க"
'ஏன்னா நீங்க நினைக்கிறது என்னன்னா... நீங்க இல்லாமெ உங்க மனைவி பிள்ளைங்க ரொம்ப கஷ்டப்படுவாங்கன்னுதானே... எனக்கு என்னவோ அவங்க பகல் சாப்பாடு கூட ஒரு கறி/ரசத்தோடு சிம்பிளா வேலையில்லாமெ இருந்துட்டு சீரியல் பார்த்துட்டு... ராத்திரிக்கு பிஸ்ஸா/மெக்டோனால்ட் ஹோம் டெலிவரிக்கு ஆர்டர் கொடுத்திட்டு எல்லா சீரியலும் உங்களோட ' ரிமோட்டெ கண்ட எடத்துலெ போடாதீங்க.. பேனை போடு, கிச்சன் லைட் ஏன் தேவை இல்லாமெ எரியுது" போன்ற பிக்கல் பிடுங்கல் இல்லாமல் நிம்மதியாக இருப்பார்கள் என்பதெ என் கணிப்பு.
மனுசன் அடுத்த
நிமிடமே திரும்பிப்போக முடிவெடுத்தார். இது மாதிரி
ஆட்களுக்கு புத்தர் மாதிரி அறிவுரை எல்லாம் சொன்னால் திருந்த மாட்டாப்லெ.... உங்க
வீட்டிலெ எல்லாரும் சந்தோசமா இருக்காங்கன்னு சொன்னா பொறுத்துக்கொள்ள முடியாது...
நீதி: கோபிச்சுட்டு வீட்டை விட்டு போகுமுன் யோசிங்கப்பா...
பிரதர் என்ன நினைக்கிறார்னா?
இது நடந்து சில
வருடங்கள் இருக்கும். மலேசியாவின் east coast
பகுதியான Kota Bharuலிருந்து கஸ்டமரை 'கண்டுக்கிட்டு" திரும்பி வரும்போது எனக்கு
மிகவும் பிடித்த Kuantan என்ற ஊரில் நுழையும்போது
சரியாக லுஹர் தொழுகை நேரம் வரும். அங்குள்ள பெரிய பள்ளியில் தொழுதுவிட்டு
பக்கத்திலேயே ஸ்டாலில் சாப்பிட உட்கார்ந்தால் பல முகங்களை பார்க்கலாம். பார்க்கிங்
பிரச்சினையும் அதிகம் இருக்காது.
"பிரதர்,
ஒரு வெள்ளி இருக்குமா? நான் ஜி.ஹெச் போகனும் , காலுக்கு இன்னைக்கு ட்ரஸ்ஸிங்
அப்பாயின்ட்மென்ட்"...
'அப்படியா... உட்காருங்க... லன்ச் சாப்டாச்சா... உட்காருங்களேன் ஒன்னா சாப்பிடலாம்.. அவர் எதிர்பார்க்கவில்லை என நினைக்கிறேன். நன்றி கண்ணில் தெரிய..
"பிரதர் ...இதுவரை யாரும் என்னை சாப்ட்டியானு கேட்டமாதிரி தெரியலே.. என்னமோ தெரியலெ நீங்க கேட்ட உடனேயே சாப்ட உட்கார்ந்துட்டேன்... அதுக்காக என்னையெ தப்பா நினைக்க மாட்டீங்களே?"...
“தப்பா நினைக்க என்ன இருக்கு... அது சரி ஒரு வெள்ளி கேட்டீங்களே போதுமா?
"போதும்...பஸ்ஸுக்குத்தான்...ஜி.ஹெச் நாலே எல்லாம் ஃப்ரீதான்.
நான் கொஞ்சம் அதிகமாக பணம் கொடுத்து ' செலவுக்கு வச்சிக்கோங்க... தேவைப்படும்'
அதற்கு பிறகு அவர் சொன்னதுதான் க்ளைமாக்ஸ்..
"பிரதர்... உங்களை பார்த்தால் நல்ல மனுசனா தெரியுது.. உங்களுக்கு ஒன்னு சொல்ரேன்..... யாருக்கு இது மாதிரி உதவி செஞ்சாலும்.. இந்த முஸ்லீம்களுக்கு மட்டும் உதவி செஞ்சிடாதீங்க...கெட்டவைங்க அவனுக."
நான் சிரித்தேன்... வேண்டுமென்றே "ஏன் என்று
கேட்கவில்லை... பொங்கி... கொடுத்த காசை திருப்பி கொடுனு சின்ன புள்ளத்தனமாகவும்
நடக்கவில்லை.
பிறகு என் பெயர் என்ன என கேட்டார்... அங்குதான்
ட்விஸ்ட் கிளைமாக்ஸ்...' "என் பெயர் ஜாகிர்
ஹுசேன்".... அவர் முகத்தில் ஈ,
கொசு, மரவட்டை எதுவும் ஆடவில்லை..... [ஈ ஆடவில்லைனு
எழுதினால் ரொம்ப ரிப்பீட் சென்டன்ஸ்னு நானே எடிட் செஞ்சுடுவேன்னு பயம்தான்']
என் பெயர் கேட்ட பிறகு ஒரு ஜவுளிக்கடை அளவுக்கு
சாரி சொன்னார்...
'பரவாயில்லை... யாரோ ஒருவர் உங்களை மனம் நோக
வைத்திருக்க வேண்டும்... துரதிஸ்டவசமாக அவர் முஸ்லீமாக இருந்திருக்க வேண்டும்.. அதுதான்
முஸ்லீம்களின் மீது உங்களுக்கு இவ்வளவு கடுப்பு" மனிதர்கள் செய்யும் தவற்றுக்கு இஸ்லாம் என்ன
செய்யும்...
இது நாள் வரை நான் நடந்து கொண்டதும் பேசியதும்
சரி என்கிறேன்...
நான் கொஞ்சம் அவரிடம் கடுமையாக நடந்து இருந்தால் அவர் போய் இன்னொரு "பிரதரை" உருவாக்கிவிடுவார் என்பது
மட்டும் நிச்சயம்.
_______________________________________________________________________________
பட்ஜட் ஏர்லைனும் பாடாவதி கவனிப்பும்
பட்ஜட் ஏர்லைன் வந்த பிறகு நேராக திருச்சி போய்
இறங்கிடலாம்னு போன வருடம் ஊர் வந்த போது ஏற்பட்ட சில அனுபவங்கள் உண்மையில் மறக்க
முடியாதது. கோலாலம்பூர் ஏர்போர்ட்டில் ஏறக்குறைய ஞாயமான கிலோ மீட்டர் நடக்க
வைத்தார்கள். நேராக நடந்தால் 100 மீட்டரில் இருக்கும் விமானத்துக்கு பக்கவாட்டு குறுக்கு
வாட்டு என ஏறக்குறைய வை. கோ. போன நடைபயணத்தை விட அதிகமாக இருந்தது.
சின்ன வயதில் இருந்து அதிக வெயிட் தூக்கி அனுபவம் இல்லாததால் ' "கையிலெ எவ்வளவு வேனும்னாலும் வச்சிக்கலாம் , பேக் பெரிசா தெரியக்கூடாது" என ஏவியேசன் ரூல்ஸ் தெரிந்தமாதிரி பேசிய குடும்பத்தினரின் சொல்கேட்டது எவ்வளவு தவறு என்று அப்போது தெரிந்தது. இதில் என் மகன் வேறு' வாப்பா... நம்மலெ போர்ட்டரா யூஸ்பன்னிட்டாங்க" நு சொல்லும்போது ஒப்பாரி வச்சி அழனும்போல இருந்தது ஏனோ உண்மை.
இமிகிரேசன் எல்லாம் முடிந்து வெயிட்டிங்
லான்ச்சில் இருக்கும்போது ஒருவன் தன் மொபைலில் திருச்சிக்கு ஏர்போர்ட்டுக்கு ஆள்
அனுப்பிட்டீங்களானு கேட்டு காட்டு கத்து கத்தியது பேசாமல் போனை ஆஃப் செய்து விட்டு
கத்தியிருந்தால் கூட திருச்சியில் இருக்கும் ஆட்களுக்கு காதில் விழுந்திருக்கும்.
மலிவு விலை விமான டிக்கட் என்று மக்களையும்
மிகவும் மலிவாக நடத்துவதுதான் காலக்கொடுமை. திருச்சிக்கு இருக்கும் ஒரே டைரக்ட்
ஃபிளைட் என்பதை தவிற வேறு எதுவும் விசேசம் இல்லாமல் 'ஜன்னல் ஒர சீட்டுக்கு பணம் , சாப்பாட்டுக்கு பணம், 150 மிலி மினரல் வாட்டருக்கு 75 ரூபாய் என்று பிடிங்கி எடுத்ததை
நினைக்கும்போது... இந்த விமானம் நடத்தும் ஆப்பரேசன் சீஃப் நம் ஊரில் இருக்கும்
வரதட்சினை வாங்கும் மாப்பிள்ளை வீட்டார்களிடம் ட்ரைனிங் எடுத்திருக்க வேண்டும், என்று சூடம் அனைத்து சத்தியம் செய்யலாம். [
அ.நி அமீர் ! "சூடம்... ஒரு ஃப்லோவில் எழுதியது... சூடத்துக்கும் மார்க்கத்துக்கும்
சம்பந்தமில்லையே காக்கா என நெறிச்சுடாதீங்க ஸாரி எடிட் செஞ்சிடாதீங்க... அப்புறம் நாம் தடுமல் வந்தால் 'விக்ஸ்' கூட போட முடியாது... ஏன்னா சூடம் இருக்குலே..]
அப்புறம் விமானத்தில் "சொல்லு கேட்காத
பக்கி" யை ஒருவர் கூட்டிக்கொண்டு வந்து அவன்
போட்ட சத்தத்தில் விமான கேப்டனே, கேப்டன் விஜய்காந்த் மாதிரி துப்பாக்கியை
தூக்கிட்டு வந்திடுவாரோனு பயமா இருந்தது.]
திருச்சியில் விமானத்தை விட்டு இறங்கியதும் கொஞ்ச
தூரத்தில் நாம் காரில் ஏறிச்செல்லும் சூழல் மட்டும் மனதுக்கு சந்தோசமாக இருந்தது
ZAKIR HUSSAIN