பேராவூரணி பலாப்பழம்!
பேராவூரணியும் சரி பலாப்பழமும் சரி மேடை போட்டுக் கூட்டம் கூட்டி பேசப்படும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததா என்கிற கேள்வி, சந்தேகம், ஆர்வம் உங்களிடையே எழலாம். இதை ஒரே மூச்சில் உங்களுக்குச் சொல்லி முடிக்க வேண்டியது என் கடமை, தார்மீக உரிமை, தயவு தாட்சண்யம் பார்க்காத பொறுப்பு!
எந்த ஒரு சாதாரண நிகழ்வும் சற்று மாறுபட்டு நடந்தால் அதில் சுவாரஸ்யம் கூடிப்போகும் அல்லவா? அதைப்போல் ஒரு நிகழ்வுதான் இதுவும்.
அது அந்த இடத்தில் இருக்கத் துவங்கி இரண்டு நாட்களாகிவிட்டிருந்தது. ஒவ்வொரு முறை வீட்டின் கதவைக் திறக்கும்போதும் முதலில் கண்ணில் படுவது அதுதான். மனைவி மக்கள் வேறு விடுப்பில் ஊருக்குப் போயிருந்ததால் விளக்கை அனைத்த பின்பும் மெல்லிய இருளில் அது போர்த்திக்கொண்டிருப்பதுபோல் அமர்ந்திருக்கும். குர்பானி கொடுப்பதற்காக வாங்கிய ஆடு தனது காத்திருப்பு தினங்களில் உட்கார்ந்து அசை போட்டுக்கொண்டிருக்குமே அதைப்போல இருந்தது அது. தலை,வால், கைகள், கால்கள் என்றெல்லாம் அமையப்பெறாமல் வயிறு மட்டுமே அமையப்பெற்ற மிருகம் படுத்துக் கிடப்பதுபோல் இருந்தது அது. வழவழவென்ற தோலுமில்லாமல் முள்ளம் பன்றியின் கூரான முட்களுமில்லாமல் சொறசொறத்த தோலுடன் படுத்திருந்தது அது.
என்ன செய்வதென்று குழம்பிப்போன நான் இரண்டு மூன்று பாகிஸ்தானியரிடம் விசாரித்தேன். அவர்களுக்கு அதைப்பற்றி ஒன்றும் புரியவில்லை. “அப்னா முலூக்மே அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது” என்று சொல்லிவிட்டார்கள். நான் படம் வரைந்து பாகங்களைக் குறித்தும் உஸ்கோ சமஜ்மே நஹீ ஆயா. ஒருநாள் காலை என் அலுவலக உதவியாளனிடம் விளக்கிச் சொன்னதும் அவன் சட்டென்று, “ஓ ச்சக்கபழம், அல்லே?” என்று கேட்டான். நான் கூகுளில் தேடி படம் காட்டினேன். “அதே, இது ச்சக்கபழம்தன்னே. ஞான் இங்கென முறிக்காம்” என்று சொடுக்குப் போட்டுக் காட்டினான். அவன் ச்சக்கப்பழம் என்று சொன்னது நம்மூர் பலாபழத்தைத்தான். பலாப்பழம் வெட்டி சுளை எடுப்பதில் மலையாளிகள் கில்லாடிகள். மட்டுமல்லாது சுளை, கொட்டை, சக்கை (ச்சிப்ஸ்) என்று அத்தனையும் சாப்பிடுவர்.
அந்தப் பலாப்பழம் என்னைப் பாடாய்ப் படுத்தியதின் பின்னணி நம்ம “சகோதரியே” அலாவுதீனிடம் இருந்து துவங்குகிறது.
“நான் ஒரு ஐந்து நாட்களுக்கு ஊருக்குப் போகிறேன். வரும்போது லக்கேஜ் ஏதும் இல்லாமல் சும்மாதான் வருவேன். வீட்டில் சொல்லி ஏதும் சாமான் இருந்தால் தயார் பண்ணி வைக்கச்சொல் வரும்போது கொண்டு வருகிறேன்” என்று சொல்லும்போது அவனுக்குத் தெரியாது ‘சொந்த செலவில் சூனியம் வைக்கிறோம்’ என்று.
என் வீட்டார் என்மேல் பாசத்தை மழையாகப் பொழிவதில்லை. மாறாக, இடி மின்னலோடு அடைமழையாகவோ சுனாமி தரத்திலோதான் பொழிவார்கள் என்பது நிறைய பேருக்குத் தெரியாது. “அலாவுதீன் வருகிறான். அவனிடம் கொஞ்சம் பலாப்பழமும், பப்பாளிப்பழமும், முடிந்தால் வீட்டில் வளரும் சப்போட்டாவிலிருந்து கொஞ்சமும் அனுப்பி வையுங்கள்” என்று சொன்னேன். காலகாலமாக பினாங்குக் காரவுகளுக்கும் வளைகுடாவாசிகளுக்கும் உம்மாக்களும் மனைவியரும் அனுப்பும் பாரம்பரியப் பொருட்களான பனியான், நாநக்கத்தான், நார்த்தங்கா ஊருகாய், சீனிச்சேவு மற்றும் தம்ரூட் ஆகியவற்றை கட்டாயம் அனுப்ப வேண்டாம் என்று கண்டிப்போடு சொல்லி வைத்தேன்.
நான் கேட்ட நேரம், பலாப்பழ சீஸன் இல்லாத நேரம் என்பதை எந்த ச்சேனலும் கொசுறுச் செய்திகள் ஓடுமே அதில்கூட சொல்லவில்லை. உம்மாவோ, தன் பேத்தியை அப்பதான் மணந்த புதுமாப்பிள்ளையிடம், "உன் மாமாவுக்குப் பலாப்பழம் வேண்டுமாம். போய் வாங்கி வந்துவிடு" என்று அனுப்ப அவரும் காரை எடுத்துக்கொண்டு புலி வேட்டையைப்போல் பலா வேட்டையில் ரொம்ப சிரத்தை எடுத்துத் தேடியும் எங்கும் கிடைக்காததால் கடைசியில் பேராவூரணியில் இருப்பதாகக் கேள்விப்பட்டு அங்கு போய் வாங்கியிருக்கிறார்.
பத்து ரூபா கொடுத்தால் ஒரு உதாவக்கரை செய்தி அடங்கிய தினசரியின் கால்பக்கத்தில் இருபது சுளைகளை மடித்துத் தருவார்களே அப்படித்தான் எனக்கும் அனுப்பியிருப்பார்கள் என்று நீங்கள் கணித்தால் உங்களுக்கு நிச்சயம் ஃபெயில் மார்க்தான்.
விமான நிலையத்தில் அலாவுதீனை வரவேற்கச் சென்ற எனக்கு இருபது கிலோவுக்குமேலே எடைகொண்ட ஒரு பெட்டியை பாலித்தின் சட்டையெல்லாம் போட்டு, "இந்தா உன் வீட்டில் கொடுத்த சாமான்" என்று கொடுத்தபோது எனக்குச் சரியான குழப்பம். அந்தப் பெட்டி கனசெவ்வகமாகவோ கனசதுரமாகவோ இல்லாமல் இரண்டு பக்கங்களிலும் கர்ப்பவதிபோல் வயிறு பெருத்து இருந்தது.
"அப்டி என்னடா இருக்கு உள்ளே" என்று கேட்ட எனக்கு, "நீதானே பலாப்பழம் கேட்டியாம். திருச்சி ஏர்போர்ட்டில் அட்டைப்பெட்டியின் வடிவம் பார்த்து மிரண்டு க்ளிங் ராப் (cling wrap)பண்ணச் சொல்லி 300 ரூபாய் பிடுங்கிக்கொண்டான்" என்றான்.
"பலாச்சுளை ஒரு கிலோ அனுப்பினா போதாதா" என்று முனுமுனுத்துக்கொண்டே வீட்டுக்கு வந்து பெட்டியைப் பிரித்துப் பாசத்தை வெளியே எடுத்த எனக்கு வெட்டுவது எப்படி என்று தெரியாததால் மேடைபோட்டு உங்கள்முன்னால் பேசும் அளவுக்கான மேற்கண்ட நிகழ்ச்சிகள் நடந்தேறின.
கத்தி கப்படாவோடு மலையாளி வீட்டுக்கு வந்து பலாப்பழத்தை வெட்டி சுளைகளைத் தந்தாலும், சீஸன் இல்லாத நேரத்து பழமாதலால் சுளைகளைவிட சக்கைத்தான் அதிகமாக இருந்தது.
இதில் உச்சகட்டச் செய்தி என்னவெனில், பலாப்பழம் வெட்டித்தந்த நாள் முதல் வீட்டில் நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ரோபோ(ROBOT) போல தூக்கித்தூக்கித்தான் வைக்கப்பட வேண்டியிருந்தது. தரை முழுதும் அவ்வளவு பிசுபிசுப்பு. வெட்டிக்குளத்துச் சேற்றில் நடந்த அனுபவம் இருந்ததால் தப்பித்தோம் பிழைத்தோம் என்று வீட்டுக்குள் தாம் தூமென்று நடமாட முடிந்தது.
பாசத்துக்கு அளவில்லை என்பார்கள். ஆனா, பலாப்பழ சைஸ்ல பாசம் எல்லாம் ரொம்ப ட்டூமச்!
அப்பாடா... சோடா ப்ளீஸ்!
Sabeer AbuShahruk

