மாற்றம் ஒன்றே மாறாதிருப்பது என்று கூறுவார்கள். விதைகள் தளிர்களாவதும், தளிர்கள் தழைத்து செடிகளாவதும், கொடிகளாவதும், பூப்பதும், காய்ப்பதும், கனிவதும் மாற்றங்களே. மனிதவள மேம்பாட்டுதுறையில் மாற்றம் என்பது பணி இடமாற்றம், பதவி மாற்றம், பணி மாற்றம் என்று பலவகைப்படும். சில மாற்றங்களை அவரவரின் தகுதி, திறமை, பொறுப்புகளை நிறைவேற்றும் தன்மைகள் ஆகியவற்றை அளவிட்டு நிறுவனங்களே செய்யும். சில மாற்றங்களை நாமே செய்து கொள்ளலாம். அப்படி நாமே செய்து கொள்ளும் மாற்றம்தான் ஒரு பணியிலிருந்தோ, ஒரு நிறுவனத்திலிருந்தோ விலகி நாம் தேடும் அதிக நன்மைகளுக்காக வேறொரு நிறுவனத்தில் வேலை தேடிக்கொள்வது ஆகும்.
பல நேரங்களில் இருப்பதைவிட்டு பறப்பதற்கு ஆசைப்படுபவர்கள் உண்டு. சில நேரங்களில் நல்ல தகுதி திறமைகள் இருந்தும் சரியான வாய்ப்புக் கிடைக்காதவர்களும் உண்டு. ஒரு நிறுவனத்தில் பல ஆண்டுகள் வேலைபார்த்துவிட்டு ஏதாவது காரணத்துக்காக அல்லது ஒரு மாற்றத்தைத்தேடி இடம் பெயர நினைப்பவர்கள் உண்டு. “ அது இருந்தால் இது இல்லே- இது இருந்தால் அது இல்லே- அதுவும் இதுவும் சேர்ந்திருந்தா அவனுக்கு இங்கே இடமில்லே” என்பதுதான் பல சமயங்களில் நடக்கும் சம்பவங்களாகும். இங்கே நாம் விவாதிக்க இருப்பது எல்லாம் நன்றாக அமைந்து ஒரு நிறுவனத்தில் இருந்து பதவி விலகி- அடுத்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்வோர் கடைப்பிடிக்க வேண்டியவை பற்றிய சில அனுபவ குறிப்புகள்.
பொதுவாக சொல்லப்போனால் ஒரு நிறுவனத்திலிருந்து மறு நிறுவனத்துக்கு வேலைக்குப்போகும் நமது மனநிலை கிட்டத்தட்ட ஒரு புதுப்பெண்ணின் மன நிலையாகத்தான் இருக்கும். பல சமயங்களில் பெரும் சவாலாகவும் அச்சமூட்டும் வகையிலும் அமைந்து இருக்கும். மணப்பெண்ணுக்கு சலங்கை கொலுசு போட்ட கால்கள் தடுமாறும்- நமக்கு சாக்சும் ஷூவும் போட்ட கால்கள் தடுமாறும். மணமகனை மணமேடையில் பார்த்த அனுபவத்தின் அளவுதான் நேர்காணலில் முதலாளியையோ , மேலாளரையோ பார்த்ததும் இருக்கும். மணம் முடிந்து மாமியார் வீட்டில் அடிஎடுத்துவைக்கும் போது இருக்கும் அச்சம், நாணம, மடம், பயிர்ப்பு அனைத்தும் புதிய அலுவலகத்தில் அடி எடுத்து வைக்கும்போதும் இருக்கும். ஒரு புதிய பொறுப்புக்கும், ,சூழ்நிலைக்கும் தயாராவதுடன் புதிய நண்பர்களை மட்டுமல்ல புதிய மேலாளரையும் சந்திக்கவும் அவர்களுடன் இணைந்து பணியாற்றவும் தயாராகவேண்டும். நாம் முதலில் வேலை பார்த்த நிறுவனத்தை முதல் கணவனுக்கோ மனைவிக்கோ ஒப்பிட்டால் அடுத்து நாம் போக இருக்கும் நிறுவனத்தை இரண்டாவது கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ ஒப்பிடலாம். முதல் கணவன் கோபப்படும்போது முகத்தில் பச்சைத்தண்ணிர் குவளையை வீசி இருக்கலாம். அதைவைத்து அடுத்தவன் சுடு நீர் குவளையை விட்டு எறிவான் என்று எண்ணி பயப்படக்கூடாது. பூக்களையும் வீசலாம் திராவகத்தையும் வீசலாம். எதுவும் நடக்கலாம்.
புதிய நிறுவனத்தில் நேர்காணலின்போது உங்களுக்கு அந்த நிறுவனத்தின் கொள்கைகள், வேலைச்சூழ்நிலைகள் ( POLICIES, CORPORATE CULTURE, WORK ENVIRONMENTS) ஆகியன பற்றி ஒரு மேலோட்டமான அறிமுகமே தந்து இருப்பார்கள். இவைகள் அந்த நிறுவனத்தின் முழு தகவல்களையும் பெற்றுக்கொள்ள முழுதுமாக உதவாது. நீங்கள் அங்கு பணியில் சேர்ந்து நடைமுறையில் அவற்றோடு இணைந்து பணியாற்றும்போதுதான் உங்களால் அந்த நிறுவனம் பற்றி முழுமையாக புரிந்து கொள்ள முடியும். சாம்பார் வைப்பது எப்படி என்று டி வி யில் சொல்லித்தருவதை கேட்டு கவனிப்பதற்கும் நாமே அடுப்பங்கரையில் குக்கரைப் பற்றவைத்து பருப்பை வேகவைப்பதில் ஆரம்பிப்பதற்கும் உள்ள வித்தியாசம்.
புதிய நிறுவனத்தின் முதல் நாள் உங்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கும். உங்களைப் பற்றிய ஒரு தோற்ற, பழக்க முறைகளைப்பற்றிய ஒரு முதல் கணிப்பையும் தீர்ப்பையும் உங்கள் மேலாளரிடத்திலும், உடன் பணியாற்றுவர்களிடத்திலும் உருவாக்ககூடியதாக இருக்கும். இந்த முதல் கணிப்பு உங்களின் பணிக்காலம் முழுதும் கை கொடுக்கக்கூடியதாக அமையும். ( THE FIRST IMPRESSION IS THE BEST IMPRESSION ) .
வேலைக்கு சென்று சேருவதற்கு முதல்நாள் இரவு விரைவிலேயே படுக்கச் சென்று நன்றாக தூங்கி விடுங்கள். சிலர் விடிய விடிய உட்கார்ந்து ஐ பி எல் மேட்சையோ , ஆஸ்திரேலியாவில் நடு இரவில் நடக்கும் ஒருநாள் மேட்சையோ பார்த்துவிட்டு காலையில் அழுது வழிந்து கொண்டிருக்கும் முகத்துடன் புதிய அலுவலகம் வராதீர்கள். இது தவிர்க்கப்படவேண்டும். அத்துடன் புதிய நிறுவனத்தின் வேலை தொடங்கும் நேரத்தை அறிந்துவைத்துக்கொண்டு தாமதமில்லாமல் வந்து சேர்ந்து கொள்ளுங்கள். வேலை நேரம் தவறி தாமதமாக வருவது முதல்நாளே ஒரு கரும்புள்ளியை உங்களின் உச்சந்தலையில் குத்திவிடும். அத்துடன் நேரத்தில் வருவது உங்களை ஒரு நேரம் தவறாதவரென்றும், நல்ல விதமாக பயின்றவர் என்றும் ஒரு நல்ல தோற்றத்தை ஏற்படுத்தும். ( WELL ORGANIZED AND PUNCTUAL ) .அதுமட்டுமலாமல் நல்ல எடுப்பான தோற்றம் தரும் ஆடைகளை அணிந்து வருவதும் இன்றியமையாதது. நீங்கள் எவ்வளவுதான் அனுபவமும், அறிவும், தகுதியும் பெற்றவராக இருந்தாலும் உங்களின் தோற்றமும் அதற்கேற்றபடி இல்லாவிட்டால் உங்களின் அத்தனை தகுதி, அனுபவம், திறமைகளும் வேஸ்ட்தான் என்பதை உணரவேண்டும். தகுதி, திறமைகள் வெளிப்பட நாளாகும். ஆனால் நீங்கள் அணிந்து வந்திருக்கும் ஆடைகளைப்பற்றிய விமர்சனம் உடனே அலுவலகத்தில் பிளாஷ் நியூஸ் ஆகும்.
அடுத்து உங்களுக்கு சொல்ல விரும்புவது , தரப்பட்ட வேலையில் கவனம் செலுத்துவது,உங்களுடைய இருப்பிடங்க்களை வசதியாக அமைத்துக்கொள்வது, உங்களுடன் பணியாற்றும் மற்றவர்கள் நீங்கள் பணி செய்வதை நோக்கும்போது உங்களுடைய வெளிப்பாடுகள் நீங்கள் ஒரு சிறந்த தேர்வுதான் என்பதை காட்டுவதாக இருக்க வேண்டும். ‘போயும் போயும் ஒரு பொழப்பத்தவனை’கொண்டு வந்திருப்பதாக மற்றவர்கள் நினைத்துவிடக்கூடாது. உங்களை ஒரு நல்ல அனுபசாலி என்றும், பொறுப்பானவர் என்றும் மதிக்கும் விதத்தில் காட்டிக்கொள்ளவேண்டும். பழைய நிறுவனத்தில் நீங்கள் செய்த வீரப்பிரதாபங்களை அளந்து விடாமல் இருப்பது நல்லது. ரீல் சுற்றுவதாக மற்றவர்கள் நினத்துவிடாமல் அடக்கி வாசிப்பதே நல்லது. சில நேரங்களில் உங்களுக்கு சில விபரம் தெரியாது என்று நினைத்து சிலர் தாமாகவே உதவ முன்வருவார்கள். அவர்களிடம் பக்குவமாக உங்களுக்கு தெரியும் என்பதை தெரிவிக்கலாம் அல்லது தெரியாததுபோல் கேட்டும் கொள்ளலாம். மிக்க முக்கியமாக உங்களுக்கு எதுவும் தெரியவில்லை என்றால் கேள்விகள் கேட்டு தெரிந்து கொள்வதில் தவறு இல்லை. இதற்காக யாரும் பிரம்பை எடுத்து , கையை நீட்ட சொல்லி அடிக்க மாட்டார்கள். . ஆர்வமுடன் உங்களுக்கு விபரங்கள் சொல்லித்தரவே முனைவார்கள் என்பதே அனுபவம். அப்படி சொல்லித்தருவதன் மூலம் ஏற்கனவே வேலை செய்து வருபவர்களும் அவர்களின் மேதா விலாசத்தை உங்களிடம் காட்டிக்கொள்ள முனைவார்கள் என்பதும் ஒரு காரணம்.
ஒவ்வொரு தனிப்பட்ட நிறுவனங்களும் தங்களின் ஊழியர்களுக்கிடையில் உறவுப்பாலம் வளர்ப்பதை வேறுபாடுகளாகவும் வித்தியாசமான முறைகளிலும் வைத்திருப்பார்கள். சில இடங்களில் கட்டுப்பாடுகள் அதிகம் இருக்காது. சில இடங்களில் ஒருவருக்குள் ஒருவர் உரையாடுவதைக்கூட விரும்பாமல் கட்டுப்பாடுகள் வைத்திருப்பார்கள். ஸி.டி. வி வைத்து கண்காணிக்கக்கூடிய நிறுவனங்களும் உண்டு. தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகள் இருவழியிலும் அலுவலக நேரங்களில் வருவதை கட்டுப்படுத்தும் நிறுவனங்களும் உள்ளன. ஊழியர்களுக்கு தேநீர் வழங்குவதில் கூட முறைப்படுத்தும் நிறுவனங்கள் உள்ளன. அதேபோல் மேலாளர்களுடன் தகவல் பரிமாற்றத்திலும் சில முறைகள் மாறுபடும். சில மேலாளர்களுடன் நேராக சென்று உரையாடலாம். வேறு சிலருடன் அவருடைய செயலாளர் மூலம்தான் உரையாட முடியும். ஆகவே நீங்கள் புதிதாக சென்று சேரும் நிறுவனத்தின் முறைகளை பொறுமையுடன் முதலில் கவனியுங்கள். அதன்பின் பின்பற்றுங்கள். நீங்கள் உங்களை இயக்குவதற்கு எது அந்த நிறுவனத்தின் நடைமுறை என்பதை அறிந்து அதன்படி பின்பற்றுங்கள். இப்படி செய்வதன் மூலம் பழைய நடைமுறைகளையே பின்பற்றுபவராகவும் , அத்துமீறாதவராகவும் உங்களை நீங்கள் காட்டிக்கொள்ள முடியும்.
வேலைக்குப்போய் சேர்ந்த உடனே நீங்கள் கொண்டுபோன பழைய சட்டிகளைப்போட்டு உடைக்கத் தொடங்கிவிடாதீர்கள். மேலும் நீங்கள் கால ஊன்ற முன்பே நீங்கள் விரும்புகிற அல்லது முன் நிறுவனத்தில் புழக்கத்தில் இருந்த நடைமுறைகளை புதிய இடத்தில் திணிக்க முயலாதீர்கள். உங்களை புதிய நிறுவனம் ஏற்றுக்கொள்வதற்கு என்று ஒரு காலக்கட்டம் இருக்கிறது. உங்களை அங்கீகரிப்பதற்கும் ஒரு காலகட்டம் நிச்சயம் இருக்கிறது. அவைகளை நீங்கள் அடைந்துவிட்டோம் என்ற உறுதி வரும்வரை சீர்திருத்த செம்மலாகிவிடாதீர்கள். நதியின் ஓட்டத்தோடு வளைந்து போகும் நாணல் பயிர் மட்டுமே எத்தனை வெள்ளம வந்தாலும் நின்று தழைத்து வளரும்.
அடுத்து நண்பர்களை தேடிக்கொள்ளுங்கள். இந்த காரியம் சிலருக்கு வெகு சுலபம் சிலருக்கு மிகக் கடினம். சிரித்தமுகம், பக்குவமான அணுகுமுறைகள் நண்பர்களை தேடித்தரும். உம்மணா மூஞ்சிகளுக்கு நண்பர்கள் கிடைப்பது கஷத்திலும் கஷ்டமே. அதேபோல் கூச்ச சுபாவம் உள்ளவர்களுக்கும் நண்பர்கள் சந்தையில் டிமாண்ட் மிகக்குறைவே. பல சமயங்களில் நண்பர்கள் அமைவது, நாடு, மொழி , இனம் ஆகியவைகளைப் பொருத்தும் அமையும். நண்பர்களை தேடிக்கொள்ள மதிய உணவு வேலைகளும் – மதிய உணவுக்கூடங்களும் மிகவும் உதவும். உங்களை அறியாத மனிதர்களானாலும் அவர்களைப்பார்த்து நீங்கள் பூக்கும் ஒரு புன்முறுவல் நண்பர்களைப்பெற்றுத்தரும் தூண்டிலாகும். அத்துடன் நடைமுறையில் உள்ள உலகச்செய்திகளைப்பற்றி உணவு இடைவேளைகளில் பழைய ஊழியர்கள் உரையாடும்போது நல்ல பொருத்தமான கருத்துக்களைக்கூறி அவர்களுடன் இணைந்து கொள்வதும் நண்பர்களை தேடிக்கொள்ள உதவும். ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக யானைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் என்றெல்லாம் உளறி வைக்காதீர்கள். கொஞ்ச காலத்துக்காவது அரசியல் கருத்துக்களைக் கூறாமல் ஒதுங்கி இருப்பது உங்களின் (GAME) கேமை பாதுகாப்புடன் தற்காப்புடன் விளையாட உதவும். கூடியவரை ஆரம்ப மவுனம், அடக்கி வாசித்தல் உங்களுக்கு எதிர்காலத்தில் நண்பர்களை தானாக தேடிவரவழைக்கும். கரும்பு கட்டோடு கிடந்தால் எறும்பு தானாக வரும் என்று கூறுவார்கள்.
இவற்றுடன் புதிய நிறுவனத்தின் நிர்வாக அமைப்புகளைத் ( ORGANAIZATION CHART) கேட்டு வாங்கி படித்துத் தெரிந்துகொள்வதும் முக்கியம். பொதுவாக ஒரு புதிய நபர அலுவலகம் வரும்போது அவரை எல்லா துறைகளுக்கும் அழைத்துச்சென்று அனைவருக்கும் அறிமுகப்படுத்துவது மனிதவளத்துறை அதிகாரியின் முக்கிய பொறுப்பாகும். இத்தகைய ஆரம்ப அறிமுகம் ஒரு சடங்குதான். முக்கிய பொறுப்பில் உள்ளவர்களைத்தேடிச்சென்று உங்களின் நிறுவனத்தின் செயல்பாடுகளைப்ப்ற்றி ஒரு சிறு விளக்கங்கள் கேட்டுத்தெரிந்து கொள்வதும் உங்களின் தன்னார்வத்தை வெளிப்படுத்தும்.
சில சமயங்களில் உங்களுக்கு முன் உங்களின் இடத்தில் பணியாற்றியவர் பதவி உயர்வு பெற்று அதே அலுவலகத்திலோ அல்லது வேறு ஒரு கிளையிலோ தொடர்ந்து இருக்கலாம். அவரைத் தேடிச்சென்றோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பொறுப்புகளைப்ப்ற்றி ஒரு சிறிய முன்னோட்டமும் தேவைப்பட்டால் அவரை தொடர்ந்து தொடர்பு கொண்டு ஆலோசனைகள் அறிவுரைகள் கேட்டுக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தால் அவரும் மகிழ்வதுடன் நிர்வாகத்தினரிடமும் ஒரு வார்த்தை நல்லபடியாக சொல்லி வைப்பார். யார் கண்டது இந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு என்று அந்த சீனியர் நினைக்கலாம். நல்லதுதானே.
ஆகவே
1. PREPARE YOURSELF FOR YOUR FIRST DAY,
2. CONCENTRATE ON YOUR WORK
3. LISTEN AND OBSERVE
4. MAKE FRIENDS
5. HUNTING FOR A CORPORATE KNOWLEDGE
6. CONSULTING WITH PREDECESSOR
ஆகியவை அடிப்படையான டிப்ஸ்களாகும்.
கூடியவரை மிகக்குறைந்த பொருளாதார நன்மைகளுக்காக- அந்த சிறு பொருளாதார நன்மையை இந்திய பேங்க் ரேட்டில் பெருக்கிப் பார்த்துவிட்டு பல ஆண்டுகளாக வேலைபார்த்த நிறுவனத்தை – நண்பர்களை- சூழ்நிலைகளை விட்டு விலகி புதிய இடத்தில் சேர்வது பலருக்கு அக்னிப் பரிட்சைதான். புதிய பூதத்தைவிட பழைய பேயே தேவலை என்கிற நிலைமை பலருக்கு ஏற்பட்டு இருக்கிறது. தூரத்துப்பச்சைகள் கண்ணுக்கு அழகாய்த் தோன்றிடும். ஆகவே மாற்றங்களை தேடிப் போகும்போது அந்த மாற்றங்கள் நமக்கு ஏற்றங்களைத்தருமா என்று சிந்தித்து செயல்படவேண்டும் மாற்றங்கள் ஏமாற்றங்களாகப் போவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
-இப்ராஹீம் அன்சாரி.


