தனக்கு மகன் பிறந்திருக்கும் செய்தி கேட்டு ஒரு தாய் அடையும் மகிழ்ச்சியைவிட கற்றவர் சபையினில் தனது மகனை சான்றோன் என்று சொல்லப்படும்போது அடையும் மகிழ்ச்சியானது அதிகம் என்பதாக திருக்குறளின் மக்கட்பேறு அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுகிறார். உண்மையில் இதற்கு நிகரான மகிழ்ச்சியை இமாம் ஷாஃபி பள்ளியில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் என் மகள் இரு முதல் பரிசுகள் பெற்ற செய்திகேட்டு நாங்கள் மகிழ்ந்தோம். அல்ஹம்துலில்லாஹ்! (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!)
தன்னடக்கம் கருதி சிலவிசயங்களை வெளிப்படுத்தாமலிருக்க விரும்பினாலும் சிலநேரங்களில் யாரிடமாவது பகிர்ந்து கொண்டாக வேண்டும் என்பதான சந்தர்ப்பங்கள் தவிர்க்க முடியாதவை. அதிரை நிருபர் வலைப்பூவில் வந்துள்ள இன்னொரு பதிவில் "காதிர் முகைதீன் பள்ளி- பேசும் படம்" பள்ளியின் நுழைவாயிலில் வரவேற்கும் அறிவிப்புப் பலகை, மீண்டும் என்னை கடந்த காலத்திற்கே அழைத்துச் சென்றது என்றால் மிகையில்லை. ஆம்! அதில், 1990-91 ஆம் கல்வியாண்டில் நடந்த +2 தேர்வில் அடியேன் பள்ளியிலேயே முதல் மாணவனாகத் தேர்வு பெற்றதற்கான அங்கீகாரம்! மாஷா அல்லாஹ்!
இன்னொரு பெயரும் அப்பலகையில் இடம்பெற்றிருக்கிறது. SSLC மற்றும் +2 தேர்வுகளில் முதலிடம் பெற்றவர் பெயர் அது! ஆம்! பேச்சாளர், கவிஞர் என்று நா(ம்)னறிந்து வைத்துள்ள தம்பி A.ஷஃபாத் அஹமது! வாழ்த்துகள் தம்பி! இதுபோல், யாமறியா பலரது பெயர்களும் இடம்பெற்றுள்ளன.அவர்களையும் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்துவோம்!
முன்னாள் ஜனாதிபதி A.P.J.அப்துல்கலாம் அவர்கள் மாணவர்களைக் கனவு காணச்சொன்னது குறித்து, பலரும் கேலி செய்வதுண்டு. சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தையே கனவு என்று சொன்னார். சமீபத்தில் நடந்த ஓர் நிகழ்ச்சியில் "நான் சொன்ன கனவு தூக்கத்தில் வரும் கனவல்ல; தூங்கவிடாமல் செய்யும் கனவு" என்று அழகிய விளக்கம் கொடுத்தார்.
நடுத்தெரு ஊ.ஒ.தொடக்கப்பள்ளியில் நான்காம்/ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது என நினைக்கிறேன். காதிர் முஹைதீன் பள்ளி ஆண்டு விழா முடிவில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் தலைகேட்டான் தம்பி அல்லது திப்பு சுல்தான் நாடகங்கள் வெகுபிரபலம் (நாடக ஆசிரியர். மதிப்பிற்குரிய S.K.M.ஹாஜா முஹைதீன் அவர்கள்), அவ்வருடம் திப்பு சுல்தான்
அதில், பத்தாம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றதற்கு A.K. முஹம்மது ஷாஃபீ (ஆஸ்பத்திரிதெரு /தற்போதைய AYDA தலைவர் நண்பன் ஷம்சுதீனின் காக்கா!) என்ற பெயரை திரும்ப திரும்ப அழைத்து பரிசுகள் கொடுத்தார்கள். அப்போது இரண்டு பரிசு பெற்றாலே பெரும்பேராகக் கருதப்படும் காலம் அது! தொடர்ச்சியாக ஷாஃபீ காக்கா 4-5 பரிசுகள் பெற்றபோது, பரிசளித்துக்கொண்டிருந்த சிறப்பு விருந்தினர் "என்ன சார்! எல்லா பரிசுகளையும் இவருக்கே கொடுத்துவிடலாமா?" என்று செல்லமாகக் கேலி செய்தது மைக்கில் ஒலித்தது. அப்போது மனதுக்குள் நாமும் இதுபோல் நிறைய பரிசுகளைப் பெறவேண்டும் என்ற மனதுக்குள் எண்ணியதையும் நினைவுகூற விரும்புகிறேன். சுப்ஹானல்லாஹ்!
கல்கண்டு வார இதழில் என்று நினைக்கிறேன். பல தன்னம்பிக்கை கட்டுரைகளைத் தொகுத்து "எண்ணம்போல் வாழ்வு" என்று நூலொன்றை ஒருவர் எழுதியிருந்தார். (நூலாசிரியர் அப்துல் ரஹீம் என்று நினைவு). எண்ணங்களே நம்மை பட்டை தீட்டுகின்றன என்பதாக விளக்கம் கட்டுரைகளின் தொகுப்பு. இதைத்தான் இஸ்லாமும் 'இன்னமல் அஃமால் பிநிய்யத்" - நிச்சயமாக செயல்கள் அனைத்தும் எண்ணங்களின் அடிப்படையில் அளவிடப்படுகின்றன" என்று சொல்கிறதோ?
ஆதலினால், மாணவர்களே! தூய எண்ணங்களுடன் சாதிக்கும் கனவுகளை கண்டு,ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் பாக்கியத்தை நீங்களும் உங்கள் பெற்றோருக்கு வழங்குங்கள்!
-N.ஜமாலுதீன் (அதிரைக்காரன்)