உலகின் முதல் மனிதர் ஆதம் நபி (அலை) அவர்கள் பேசிய மொழி தமிழா? - (3)
முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் இறக்கப்பட்ட இடம் இந்தியா என்பதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் கூறும் சான்றுகள்.
حَدَّثَنَا الحسن بن يحيى ، قال : أخبرنا عبد الرزاق ، قال : أخبرنا معمر ، عن قتادة ، قال : " أهبط الله عز وجل آدم إلى الأرض ، وكان مهبطه بأرض الهند "
ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் பூமிக்கு இறக்கினான். அவர்கள் இறங்கிய இடம் இந்தியாவாக இருந்தது என்று கதாதா அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: மஃமர்

பூமியில் நறுமணம் மிகுந்த இடம் இந்தியா, அங்குதான் ஆதம் (அலை) அவர்கள் இறக்கப்பெற்றார்கள். அங்கிருக்கும் மரங்கள் சுவனத்தின் நறுமணத்தைப் பெற்றுள்ளன என்று அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் – யூஸுஃப் இப்னு மிஹ்ரான்
(حديث موقوف) حَدَّثَنَا أَبُو هَمَّامٍ ، قَالَ : حَدَّثَنِي أَبِي ، قَالَ : حَدَّثَنِي زِيَادُ بْنُ خَيْثَمَةَ ، عَنْ أَبِي يَحْيَى . بَائِعِ الْقَتِّ قَالَ : قَالَ لِي مُجَاهِدٌ : لَقَدْ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ ، " أَنَّ آدَمَ عَلَيْهِ السَّلامُ نَزَلَ حِينَ نَزَلَ بِالْهِنْدِ ، وَلَقَدْ حَجَّ مِنْهَا أَرْبَعِينَ حِجَّةً عَلَى رِجْلَيْهِ
ஆதம் (அலை) அவர்கள் இறங்கிய பொழுது இந்தியாவில் இறங்கினார்கள். இன்னும் அவர்கள் அங்கிருந்து கால்நடையாக 40 ஹஜ்ஜுகள் செய்துள்ளார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முஜாஹிது
حَدَّثَنَا ابن حميد ، قال : حَدَّثَنَا سلمة ، عن ابن إسحاق ، قال : وأما أهل التوراة فإنهم ، قالوا : " أهبط آدم بالهند على جبل ، يقال له : واسم عند واد يقال له : بهيل بين الدهنج والمندل ، بلدين بأرض الهند ، قالوا : وأهبطت حواء بجدة من أرض مكة ، وقال آخرون : بل أهبط آدم بسرنديب على جبل يدعى بوذ
தவ்ராத் வேதத்தை உடையவர்கள் ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவில் தஞ்ச், மன்தல் எனப்படும் இடங்களுக்கிடையே உள்ள ஒரு பள்ளத்தாக்கில் உள்ள ஒரு மலையின் மீது இறக்கப் பெற்றார்கள். இன்னும் ஹவ்வா (அலை) அவர்கள் மக்காவின் நிலப்பரப்பைச் சேர்ந்த ஜித்தாவில் இறக்கப் பெற்றார்கள், என்று கூறுகின்றார்கள். இன்னும் சிலர், ஆதம் (அலை) அவர்கள் ஸரந்தீப் (இலங்கையின் பழைய அரபிப் பெயர்) என்ற இடத்தில் உள்ள பூத் எனும் மலையின் மீது இறக்கப் பெற்றார்கள் என்றும் கூறுகின்றனர். அறிவிப்பவர் – அபூ இஸ்ஹாக்
وأخرج ابن جرير وابن أبي حاتم والحاكم وصححه عن ابن عباس قال أول ما أهبط الله آدم إلى أرض الهند وفي لفظ بدجنى أرض الهند
ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் முதலில் இந்தியப் பூமியில்தான் இறக்கினான் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். இன்னொரு அறிவிப்பில் இந்தியப் பூமியில் தஜ்னா என்ற இடத்தில் இறக்கினான் என்று கூறியதாகவும் வருகின்றது. அறிவிப்போர்: இப்னு ஜரீர், இப்னு அபீ ஹாத்திம், ஹாகிம்
(حديث موقوف) حَدَّثَنِي الْحَارِثُ ، قَالَ : حَدَّثَنَا ابْنُ سَعْدٍ ، قَالَ : حَدَّثَنَا هِشَامُ بْنُ مُحَمَّدٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : " أُهْبِطَ آدَمُ بِالْهِنْدِ وَحَوَّاءُ بِجِدَّةَ , فَجَاءَ فِي طَلَبِهَا حَتَّى اجْتَمَعَا , فَازْدَلَفَتْ إِلَيْهِ حَوَّاءُ فَلِذَلِكَ سُمِّيَتِ الْمُزْدَلِفَةَ ، وَتَعَارَفَا بِعَرَفَاتٍ فَلِذَلِكَ سُمِّيَتْ عَرَفَاتٍ ، وَاجْتَمَعَا بِجَمْعٍ فَلِذَلِكَ سُمِّيَتْ جَمْعًا ، قَالَ : وَأُهْبِطَ آدَمُ عَلَى جَبَلٍ بِالْهِنْدِ ، يُقَالُ لَهُ : بُوذُ " .
ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவில் இறக்கப் பெற்றார்கள். ஹவ்வா (அலை) அவர்கள் ஜித்தாவில் இறக்கப் பெற்றார்கள். ஆதம் (அலை) அவர்கள் ஹவ்வா (அலை) அவர்களைத் தேடி வந்துகொண்டிருந்தபொழுது ஹவ்வா (அலை) அவர்களும் அவர்களை நெருங்கினார்கள். அவர்கள் இருவரும் நெருங்கி வந்த இடம் முஸ்தலிஃபா என்று அழைக்கப் பெற்றது. பின்னர், அவர்கள் இருவரும் அரஃபாத் என்ற இடத்தில் ஒருவரை ஒருவர் அறிந்துகொண்டனர். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்துகொண்டதால், அந்த இடம் அரஃபா என்று பெயர் பெற்றது. இன்னும் அவர்கள் இருவரும் ஜம்உ எனும் இடத்தில் ஒன்றிணைந்தனர். அதனால், அவ்விடம் ஜம்உ என்று பெயர் பெற்றது. இன்னும், ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவில் பூத் என்று அழைக்கப் பெறும் மலையின் மீது இறக்கப் பெற்றார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஸாலிஹ்
இந்த அறிவிப்புகள் அனைத்தும் இமாம் தபரீ அவர்கள் தொகுத்த தாரீஃகுத் தபரீ என்ற உலக வரலாற்று நூலில் வருகின்றன.
மேற்கண்ட அறிவிப்புகளில், இந்தியாவில் தஞ்ச், மன்தல் எனப்படும் இடங்களுக்கிடையே உள்ள ஒரு பள்ளத்தாக்கில் உள்ள ஒரு மலையின் மீது இறக்கப் பெற்றார்கள் என்று வரும் அறிவிப்பில் வரும் தஞ்ச் என்ற வார்த்தை தெங்கணம், (தென்+கணம்) என்ற வார்த்தையை ஒத்திருக்கின்றது. இன்னும், அவ்வறிவிப்பில் வரும் மன்தல் எனும் வார்த்தை (மண்டல், கோரமண்டல்) போன்ற இந்தியாவின் தென் பகுதிகளின் பெயர்களுடன் ஒத்துப் போகின்றது.
தஞ்ச் எனப் பெயர் கொண்ட அல்லது அப்பெயருடன் தொடர்புள்ள நிலப்பகுதி ஏதும் தமிழ்நாட்டின் பகுதியாக இருந்ததா என்ற கேள்வியுடன், இணையத்தில் தேடும் பொழுது கீழ்க்கண்ட தகவல்கள் கிடைத்தன.
கடல் கொள்வதற்கு முன் இருந்த குமரிக் கண்டத்தில் தெங்க நாடு இருந்தது என்று அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் கூறியுள்ளார். தெங்கணம் என்ற பழைய குமரிக் கண்ட நகரத்தின் பெயராக இருக்க வேண்டும்.
பண்டைய தமிழகத்தின் பாண்டிய நாட்டின் பகுதிகளாக 49 நாடுகள் இருந்தன வென்றும் அவற்றில் தெங்க நாடு என ஒன்று இருந்தது என்ற தகவல் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் கீழ்வரும் தொடர்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குணகரை குன்றங் குறும்பனை யோடு
மணமிகு தெங்க மதுரைமுன் பாலை
இணருபின் பாலையோ டேழ்தலை மேய
உணவமல் நாற்பதோ டொன்பது நாடே.
(ஏழ்தலைமேய - ஏழ்என்னும் எண்ணை முதலிலுடைய ஏழ்குணகரைநாடு, ஏழ்குன்றநாடு,
ஏழ்குறும்பனை நாடு, ஏழ்தெங்கநாடு, ஏழ்மதுரைநாடு, ஏழ்முன்பாலை நாடு, ஏழ்பின்பாலை
நாடு எனக் கொள்க.)
மாறிமாறி வந்த கடற்கோள்களினால் பாண்டி நாட்டைச் சேர்ந்த 49 நாடுகளாகிய ஏழ் தெங்க நாடு, ஏழ் குன்ற நாடு, ஏழ் முன்பாலை நாடு, ஏழ் பின்பாலை நாடு, ஏழ் மதுரை நாடு, ஏழ் குணக்கரை நாடு, ஏழ் குறும்பனை நாடு ஆகியன மறைந்தன என ஆய்வாளர் கூறுவர். பார்க்க: http://www.tamilvu.org/courses/degree/a031/a0311/html/a0311332.htm
“ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் இந்தியப் பூமியில்தான் இறக்கினான் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள், இன்னொரு அறிவிப்பில் இந்தியப் பூமியில் தஜ்னா என்ற இடத்தில் இறக்கினான் என்று கூறியதாகவும் வருகின்றது” – இப்னு ஜரீர், இப்னு அபீ ஹாத்திம், ஹாகிம் ஆகியோர் அறிவிக்கும் இந்த அறிவிப்பில் வரும் ‘தஜ்னா’ என்ற வார்த்தையில் வரும் ஜீம் என்ற அரபி எழுத்தினை geem என்றும் கூறுவர். அதன்படிப் படித்தால் ‘தக்னா’ என்றும் அவ்வார்த்தையைப் படிக்கலாம். அந்த உச்சரிப்பு ‘தக்கன்’, ‘தக்காணம்’ போன்ற வார்த்தைகளின் உச்சரிப்புடன் ஒத்திருக்கின்றது.
“ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவில் ‘பூத்’ என்று அழைக்கப் பெறும் மலையின் மீது இறக்கப் பெற்றார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்”- என்ற அறிவிப்பில் வரும் ‘பூத்’ வார்த்தையினை ‘புத்’ என்றும் வாசிக்க இயலும். அது ஏனெனில், அரபி அல்லாத வார்த்தைகளை அரபியில் எழுதும் பொழுது உகரத்தைக் குறிக்க அரபி மொழியின் எழுத்தான் ‘வாவ்’ என்ற எழுத்தைப் பயன்படுத்துவது அரபிகளின் வழக்கம். அவ்வகையில், புத் என்று அழைக்கப் பெறுவதாக இவ்வறிவிப்பில் குறிப்பிடப் பெறும் அம்மலை, இலங்கையில் உள்ள ‘புத்தர் பாதம்’ என்று அழைக்கப் பெறும் மலையாக இருக்கலாம்.
இவற்றின் அடிப்படையில் பார்க்கும் பொழுது ஆதம் (அலை) அவர்கள் நூஹ் (அலை) அவர்களது காலத்தில் ஏற்பட்ட பிரளயத்திற்கு முன் இலங்கையுடன் ஒன்றாக இருந்த இந்தியாவின் தென் பகுதியில் உள்ள மலை ஒன்றின் மீது இறக்கப் பெற்றார்கள் என்று கருத அதிகம் வாய்ப்பிருக்கின்றது.
- இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்..
- அஃப்ளலுல் உலமா- அஹ்மது ஆரிஃப், எம்.காம்., எம்.ஃபில்.
- இயக்குநர், அரபிக் இன்ஸ்டிட்யூட் ஆஃப் காமர்ஸ், சென்னை-600092.