Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label நினைவுகள். Show all posts
Showing posts with label நினைவுகள். Show all posts

நம்மூர்ல நோன்பு (மலரும் நினைவுகளிலிருந்து சில.....) 15

அதிரைநிருபர் பதிப்பகம் | June 02, 2016 | , , , , ,

கடந்த கால புனித ரமழான் மாதத்தில் நம்மூரில் மக்களால் புழங்கப்பட்ட சில சொற்கள் நம்மூர் வட்டார மொழியிலிருந்து...

பொறையப்பாத்தாச்சாம்முள்ள.... ஆம்மா பள்ளியாசல்லேர்ந்து நகரா அடிக்கிற சத்தமும் கேக்குது.... அப்பொ இன்னக்கி த்ராவியா தொழுஹப் போகனும்....

ஊட்ல ஒட்ரெ அடிக்கனும் ஆள அனுப்பி உடு நாளக்கி...

இன்னக்கி ஊட்ல வாடா சுடனும் கடெத்தெருவுக்கு போயி கொஞ்சம் ராலு வாங்கிக்கிட்டு வர்ரிரியா?

நோன்புக் கஞ்சி காய்ச்சிறத்துக்கு எறெச்சிக்கடையில ஆட்டுத்தலையும், கொஞ்சம் நெஞ்செலும்பும் வாங்கிக்கிட்டு வர்ரியா?

அதுக்குள்ள சவுரு பக்கிர்சா வந்துட்டாரு சீக்கனம் எழும்புங்கல்வ்வோ...சஹருக்கு சோறு ஆக்கனும்.

இந்தம்மா அசரு தொழுவிட்டு பள்ளியாசல்லுக்கு டிப்பன் பாசு எடுத்துக்குட்டு போயி கொஞ்சம் கஞ்சி வாங்கிக்கிட்டு வந்துர்ரியாம்மா?

சஹருக்கு தயிரு ஒரக்கனும் அவ்வூட்ல கொஞ்சம் ஒர மோரு வாங்கிக்கிட்டு வந்திர்ரியா?

பேரிச்சம் பழம் முடிஞ்சி போயிரிச்சி....கிரானிக்கடையில வாங்கிக்கிட்டு வந்திர்ரிய்யா?

மாப்ளே, அசரு தொழுவிட்டு (செக்கடி, செடியன், வெட்டி) கொளத்துல குளிக்கப்போவோம் என்னா?

செத்த வாடாக்கார ஊட்டுக்கு போயி சம்சாவும், வாடாவும் வாங்கிக்கிட்டு வந்திர்ரிய்யாம்மா?

சர்வத்து கலக்கனும் இவ்வூட்லேர்ந்து கொஞ்சம் ஐஸ் கட்டி வாங்கிக்கிட்டு வாம்மா....

பரு மாவு முடிஞ்சி போச்சி நாளெக்கி அந்த மாவு இடிக்கிற பொம்புளைய ஊட்டுக்கு அனுப்புரியளா?

தையக்கடையில துணி தக்க குடுத்து எவ்ளோவ் நாளாச்சி? இப்புடி இன்னக்கி, நாளக்கிண்டு இழுத்தடிக்கிறாம்மா?

இன்னக்கி புள்ள தல நோன்பு புடிச்சிக்கிது....கலச்சி போயி என்னன்டோ போயிட்டாம்மா? கழுத்துல நெக்லஸெ போட்டு உடுவுளே....சாங்காலம் வாப்ச்சா ஊட்டுக்கு பத்தரமா கூட்டிக்கிட்டு போயிட்டு வாங்க...

கடப்பாசிய தட்டையில ஊத்தி ஆற வைய்யி நோன்புத்தொறக்க நேரமாச்சி.....

நாளக்கி சஹருக்கு உண்டக்கலியா செஞ்சிற வேண்டியது தான்....

பதுரு படைக்கி அரிசி மாவு ரொட்டியும், தேங்காயும் எடுத்து வைய்யிவுளே.....

த்ராவியா தொழிவிட்டு ஊட்டுக்கு வந்து பசியாறிட்டு வெளையாட போவலாம்.....

ஒரு நாளக்கி ரெண்டு ஜுசு ஓதுனாலே நோன்புக்குள்ள ரெண்டு குர்வான் முடிக்கலாம்..

சக்காத்து குடுக்க பேங்ல கொஞ்சம் சில்ரெ மாத்திக்கிட்டு வாம்மா..

நூர் லாட்ஜ்ல வாட் சம்சா (கறி சம்சா) இருவது ரூவாக்கி வாங்கிக்கிட்டு வாங்கங்க....

அப்புடியே மறந்துராமெ ரோஸ் மில்க் சர்வத்துக்கு ஜம்ஜா வெதெ கொஞ்சம் வாங்கிக்கிட்டு வாங்க...

நோன்பு நேரத்துல இப்புடி நொன்கு கடுக்காயா வாங்கிக்கிட்டு வந்திருக்கிர்ரியளே??? வயித்தெ கடுக்காது???

அவ்வொளுக்கு நோன்பு தொறந்ததும் தேத்தண்ணி குடிக்கனும்....நல்லா சுக்கு தட்டி போட்டு தேத்தண்ணி போட்டு சூட்டுக்கிளாஸ்ல ஊத்தி வைய்யி...

நோன்பு கடைசியில ஒரு மூணு நாளக்காச்சும் நம்ம முஹல்லா பள்ளியாசல்ல இஹ்திகாஃப்பு இரிக்கனும்ண்டு ஹாஜத்தா இரிக்கிது.

இன்னக்கி நம்ம பள்ளியில தம்மாம் உட்ராங்க....யார் ஊட்டு நார்சா? என்னா நார்சா?

மாப்ளே வர்ரியா அங்க போயி போர்வீட்டா, ஹார்லிக்ஸ், கல்கண்டு பாலு எதாச்சும் குடிச்சிட்டு வந்துர்லாம்மா???

நோன்பு நேரத்துல ராத்திரியில வெளியில சும்மா சுத்தாதிய ஆஹாது....

அந்த அஞ்சறெ பெட்டியெ எடு கஞ்சிக்கு கொஞ்சம் நச்சிரமிஞ்சிரம் அரச்சி போடனும்.

சின்னப்புள்ளயல்வொல்லாம் அங்கிட்டு போயி ஓரமா நிண்டு தொழுவுங்க.... பள்ளியாசல்ல ஓ ஓண்டு சத்தம் போடக்கூடாது.

மொம்க்ரபாஜியாரு (பரக்கத் ஸ்டோர்ஸ்) கடையில ரெண்டு குத்ரெ மார்க்கு வெள்ளெ வேட்டி எடுத்திக்கிட்டு வாங்க....

இன்னக்கி கவாபு சரியா வேவலெ....

வாசல்ல சாபரு நிக்கிறாஹ சில்லரெ காசு எடுத்துப்போடுவுளே....

நோன்புல காலையில ஒரு ஒஹமான வெயிலு அடிக்கிதும்மா...

அடுப்பு சரியா எரியல...பொகையா வருது...அப்புறம் கஞ்சியில பொகச்சுத்தி வாடெ வரப்போவுது....நல்லா அடுப்பெ எரிச்சி உடுங்க.....

எல்லாரும் சஹருக்கு எழும்பாமெ தூங்கிட்டாஹ..அதுனாலெ இன்னக்கி எங்கூட்ல எல்லாரும் பட்னெ நோம்பு.

இன்னக்கி தண்ணி கொஞ்சம் தான் உட்டானுவோ...

நகரா அடிக்கிற கம்பெ சாபு ஒளிச்சி வச்சிட்டாரு..எங்கெங்க ஒளிச்சி வச்சியெ??

கரெக்டா பாங்கு சொல்ற நேரத்துல கெரண்டே வேணும்டே அமத்திப்புட்டானுவோ.....இருட்டுக்கசமா இரிக்கிதும்மா....அந்த முட்டவெளக்கெ ஏத்துவுளே....நெருப்பட்டியெ காணோம்.....

பாங்கு சொல்லப்போறாஹ சீக்கினம் தண்ணிய குடிச்சிட்டு நிய்யத்து வச்சிக்கிடுங்க....

இப்படி ஏராளம் சொல்லிக்கொண்டே போகலாம்.

சென்ற நோன்பில் நம்முடன் இருந்தவர்கள் இந்த நோன்பில் இல்லை. இந்த நோன்பில் இருக்கப்போகுபவர்கள் அடுத்த நோன்பில் இருப்பார்களா? நிச்சயமில்லை. எப்படியும் ஒரு நாள் அவனிடமே மீள வேண்டியுள்ளது. 

யா அல்லாஹ்! காலஞ்சென்ற நம்மவர்களையும், மிச்சம் மீதியாய் எஞ்சியிருக்கும் எல்லோரையும் வர இருக்கின்ற புனித ரமழானின் பொருட்டு காத்தருள்வாயாக! பாவங்கள் யாவற்றையும் மன்னித்தருள்வாயாக! எஞ்சியிருக்கும் எங்கள் வாழ்க்கையை சிறப்பாக்கி, எல்லாம் சலாமத்தாக்கி வைப்பாயாக!

கப்ராளிகளின் எல்லாப்பாவங்களையும் இந்த சங்கை மிகுந்த ரமழானின் பொருட்டால் மன்னித்து பிழைபொறுத்தருள்வாயாக...சுவனபதியில் அவர்கள் அனைவரையும் சந்தோசமாய் சேர்த்தருள்வாயாக....ஆமீன். யாரப்பல் ஆலமீன்.

நல் நினைவுகளுடன்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது

திரும்பிப் பார்க்கிறேன் ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | April 14, 2016 | , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும்...

குறிகிய கால விடுமுறையில் ஊர் சென்று வந்த பின் உள்ளத்தில் உதித்த சில மலரும் நினைவுகளை இங்கு ஒரு சிறு கட்டுரையாக உங்களின் பார்வைக்கு விருந்தாக வழங்கிட விரும்புகிறேன்.

வல்ல இறைவன் நாட்டத்தில் சுழலும் வாழ்க்கைச்சக்கர சுழலில் சுழற்றப்பட்டு நாம் இன்று எங்கோ சிகரத்தின் உச்சிக்கோ அல்லது பள்ளத்தாக்கின் பாதாளத்திற்கோ வீசப்பட்டிருந்தாலும் நாம் கடந்து வந்த அப்பாதையை சற்று திரும்பிப்பார்க்க (சிந்திக்க)கடமைப்பட்டுள்ளோம். அது கரடுமுரடான முட்கள் நிறைந்த பாதையாக இருந்தாலும் சரி அல்லது மிருதுவான வெண்கம்பளம் விரிக்கப்பட்டு சாமரம் வீச அதன் மேல் நடந்து வந்த பாதையாக இருந்தாலும் சரியே.

நமதூர்க்குளங்கள் தண்ணீர் ததும்பி இருந்தும் குளித்து கும்மாளமிட ஆட்கள் இன்றி ஆதரவின்றி ஏங்கி நிற்கும் இக்காலத்தில் கடும் கோடைகாலங்களில் நீர் வற்றிக்குறைந்திருந்தும் அதில் குளித்து கும்மாளமிட்டு குதூகளித்த அந்த காலத்தை திரும்பி பார்க்கிறேன்.

கொள்கைக்கொரு தலைவனாய், கூட்டமாய் பல கட்சிகளுக்கு கொடி பிடிக்கும் நம் சமுதாயத்தின் இன்றைய அவல நிலையில் ஓரிரு கட்சிக்கு மட்டுமே கொடிபிடித்து நாரேத்தக்பீர் முழங்கி வந்த அந்த காலத்தை திரும்பி பார்க்கிறேன்.
அரவணைக்க கம்பன் ரயிலின்றி அன்றாடம் அதன் ஓலமின்றி அமைதியாய் விதவையாகிப்போன இன்றைய நமதூர் ரயில் நிலையம் அன்று குதூகலமாய் ஓடி வந்த அந்தக்கம்பன் எக்ஸ்பிரஸும் அதன் முன் வரும் ஓசையையும் நம்மை வழியனுப்ப வந்த உறவினர்களையும் நினைவால் திரும்பி பார்க்கிறேன்.

அன்று ஊரின் எங்கோ ஒரு மூலையில் ஆக்கிரமிப்பு செய்து வந்தாவரத்தானாய் குடிவந்த சர்க்கரை நோயும், புற்று நோயும் இன்று பரவலாக எல்லாத்தெருக்களிலும் அழையா விருந்தாளியாய் ஊடுருவி அப்பாவிக்குடும்பங்களுக்கு வேட்டு வைத்து வேடிக்கைப்பார்ப்பதை எண்ணி வருந்தி ஆரோக்கியமாய் நம்மக்கள் வாழ்ந்து வந்த அந்த காலத்தை ஆசையுடன் திரும்பி பார்க்கிறேன்.

இன்று மாடிவீடுகளில் பல கோடிப்பிரச்சினையில் சிக்கி மனவேதனையுடன் வாழ்ந்து வரும் நம்மக்கள் ஓட்டு வீட்டில் வாழ்ந்து வந்து ஒய்யாரமாய் சந்தோசத்துடன் காலம் கழித்த அந்த காலத்தை திரும்பி பார்க்கிறேன்.

பல கோடிகளைக்காண தென்னந்தோப்புகளெல்லாம் மனைகளாகி தெருக்களாகிப்போன இக்காலத்தில் தென்னந்தோப்பின் தென்றல் காற்றும் அதன் மோட்டார் பம்புசெட் சப்தமும் தென்னந்தோகையில் வந்தமர்ந்த சாய்ங்கால கொக்கு, மடையானையும், சிறகடித்து சந்தோசமாய் பறந்து செல்லும் வண்ணத்துப்பூச்சியையும், திரைமறைவில் தானே பாடி மகிழும் குயிலின் அக்கால பாட்டின் இனிமையையும் திரும்பி பார்க்கிறேன்.

இன்று நம் வாழ்வாதாரத்தேவைக்காக தொலைதூரப்பயணங்கள் பரந்து விரிந்து உள்ளங்கள் ஏனோ சுருங்கிச்சுண்ணாம்பாகியதாய் உணர்கிறேன்.

ஊர், குடும்பப்பெரியவர்களின்றி வெறிச்சோடிக்கிடக்கும் இன்றைய நம் வீடுகளும், தெருக்களும் ஒரு காலத்தில் அவர்களின் ஆட்சியும், அதிகாரமும், அறிவுரையும் நம்மேல் செங்கோலாற்றி நம்மை செம்மைப்படுத்திய அந்த நாட்களை திரும்பி பார்க்கிறேன்.

மாலை நேர விளையாட்டுக்களை தான் விரும்பிய திடலில் நண்பர்களுடன் விளையாடி மகிழ திடல்களெல்லாம் வீட்டு மனைகளாகிப்போய் ஏங்கித்தவிக்கும் இளைஞர்கள் அதிகம் இருக்கும் இன்றைய சூழ்நிலையில் ஒரு காலம் நினைத்த இடத்தில் விளையாடி மகிழ திடல்கள் ஆங்காங்கே நம்மூரில் பரந்து கிடந்து அதை பயன்படுத்திய அந்த நாட்களை திரும்பி பார்க்கிறேன்.

கடைத்தெருவுக்கு ஐந்நூறு ரூபாய் கொண்டு சென்றாலும் விரும்பியதை வாங்கி வர முடியாத இக்கால சூழ்நிலையில் வெறும் ஐம்பது ரூபாயில் பை நிறைய வேண்டியதை வாங்கி கையில் மிச்சக்காசுடன் வீடு வந்து சேர்ந்த அந்த நாட்களை திரும்பி பார்க்கிறேன்.

புதிய, புதிய நோய்நொடிகளும் அதைக்கண்டு பிடிக்க பல மருத்துவமனைகளும் அதன் தொழில்நுட்ப உபகரணங்களும் நாள் தோறும் ஆங்காங்கே உருவாகி வரும் இக்கால சூழ்நிலையில் வெறும் காய்ச்சல், தலைவலி, பல்வலி, வயிற்றுவலி மட்டுமே நம் பெரும் வியாதிகளாக இருந்து வந்த அந்த காலத்தை திரும்பி பார்க்கிறேன்.

பொருளாதார தேவைக்காக பெயர் தெரியாத மேற்கத்திய நாடுகள் நம் மக்கள் சென்று வரும் இக்கால சூழ்நிலையில் சவுதி, துபாய் மட்டுமே நம் தொலைதூர நாடாக இருந்து வந்த அந்த காலத்தை திரும்பி பார்க்கிறேன்.

நம் சமுதாயத்தின் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் பல அரசியல் கட்சிகளில் சேர்ந்து அந்தந்த தலைவர்களை சந்தோசப்படுத்த (வென்றதும் பிறகு அவர்கள் நமக்கு ஆப்படித்து அல்வா கொடுப்பது வேறு விசயம்) என்னென்னெமோ செய்து வரும் சொல்லி வரும் இக்காலத்தில் ஓரளவு பரவாயில்லை என்று சொல்லுமளவுக்கு நம் சமுதாயத்திற்கு ஆதரவளித்த அந்த கட்சிக்கொடியை வண்ணப்பட்டங்களாய் செய்து வானில் உயர பறக்க விட்டு உள்ளத்திற்குள் யாருக்கும் தெரியாமல் மகிழ்ந்த அந்த காலத்தை திரும்பி பார்க்கிறேன்.

கடைத்தெரு மீன் விலைகளெல்லாம் விண்ணைத்தொடும் இக்காலத்தில் கொட்டும் மழை நீரால் குளம் உடைந்து தெருக்களில் வீதி உலாவரும் சிறு மீன்களை பிடித்து மகிழ்ந்த அந்த நாட்களை திரும்பி பார்க்கிறேன்.

நமதூரில் ஏசிகள் பொருத்தப்படாத வீடுகளே இல்லை அது இல்லாமல் வெயில் காலத்தை கடத்த இயலாது என்று சொல்லி அது ஒரு அத்தியாவசிய சாதனமாக ஆகிப்போன இக்காலத்தில் தன் வீட்டு கொல்லை மரங்களே இயற்கை ஏசியாய் அன்றாடம் குளிர்காற்றை இலவசமாய் மின் தேவையின்றி, துண்டிப்பின்றி நமக்கு அள்ளித்தந்த அந்த நாட்களையும், புகை போடப்பட்ட மண் பானையில் இயற்கையின் குளிரூட்டப்பட்ட தாகம் தீர்க்கும் தண்ணீரின் இனிமையையும் இன்று திரும்பி பார்க்கிறேன்.

சின்ன, சின்ன பிரச்சினைகளுக்கெல்லாம் இரு மனம் இணைந்த அத்திருமண வாழ்வை விவாகரத்து மூலம் நிறந்தரமாய் பிரித்து முடிவுக்கு கொண்டு வருவது பரவலாக அதிகரித்து இருக்கும் இன்றைய சூழ்நிலையில் எத்தனையோ குடும்பங்களில் பல பெரும் பிரச்சினைகள் பூதாகரமாக வந்து சபை முன் நின்றாலும் அதையும் பெரியவர்கள் தன் சமயோசித முடிவால் இரு குடும்பங்களுக்கும் சுமூக உறவை ஏற்படுத்தி இல்லற வாழ்வை இனிதே தொடர அவர்கள் வழிவகுத்த அந்த நாட்களையும் முடிவுக்கு வந்த தலாக் என்ற செய்தி எங்கோ, எப்பொழுதோ கேட்டதாக இருந்த அந்த நாட்களையும் திரும்பி பார்க்கிறேன்.

எதிர்பாராமல் வரும் பெரிய நோய்நொடிகளுக்கு நம் மக்கள் எங்கெங்கோ சென்று உயர் சிகிச்சையும், பண செலவும், நேர விரயமும் செய்து வரும் இக்காலத்தில் எந்த நோய் வந்தாலும் தன் வீட்டு பெரியவர்களின் கைப்பக்குவத்திலும், செந்தூரம் கொண்டு சிகிச்சையளித்து இறைவன் நாட்டத்தில் சுகமடைந்து வாழ்ந்து வந்த அந்த காலத்தை திரும்பி பார்க்கிறேன்.

வண்ண,வண்ண கார்களும், வகை,வகையான இரு சக்கர வாகனங்களும் நம் தெருக்களில் பவனி வரும் இன்றைய சூழ்நிலையில் மாட்டு வண்டியும், குதிரை வண்டியும் தன் சலங்கை ஒலி எழுப்பி சந்தோசமாய் தெருவில் ஓடி திரிந்த அந்த நாட்களை திரும்பி பார்க்கிறேன்.

கோடைகால கடும் வெயிலின் வெப்பத்தில் உள்ளத்தாகம் தீர்க்கும் அந்தக்கார்கால மழையின் இதமான சில்லென்ற அந்தச்சாரல் காற்றை தர்பூசணியின் சிகப்பு நிறத்தில் கம்பளம் செய்து அந்த நினைவுகளை வரவேற்று திரும்பி பார்க்கிறேன்.

மனிதர்கள் மரணித்திருக்கலாம் ஆனால் அவர்கள் வாழ்ந்த காலத்தின் நல்ல பல நினைவுகள் இன்னும் மரணிக்கவில்லை.

இன்னும் நம் வாழ்வில் திரும்பி பார்க்கப்படவேண்டிய, சிந்தித்து செயல் பட வேண்டிய எத்தனையோ காரியங்கள் நடந்தேறி இருக்கலாம். ஊர் சென்று வந்ததால் என்னால் ஞாபகத்துக்கு வந்ததை இங்கு வழங்கி இருக்கின்றேன். இதுபோல் உங்கள் வாழ்விலும் பல திரும்பி பார்க்கப்படவேண்டியவைகள் இருக்கலாம். அதை நீங்கள் உங்களின் பின்னூட்டம் மூலம் தொடரலாமே.... (வாப்ச்சாவிடம் பெருநாள் காசு வாங்கிய அந்த நாட்களை திரும்பி பார்க்கிறேன் என்று யாராலும் ஆரம்பித்தாலும் ஆரம்பிக்கலாம்..)

இன்ஷா அல்லாஹ் மற்றொரு கட்டுரையில் சந்திப்போம்...

மு.செ.மு. நெய்னா முஹம்மது

புகைப்படங்கள்: சகோதரர் ஜாஹிர் ஹுசைன் மற்றும் அதிரைநிருபர் குழு

"எண்பது, தொன்னூறுகளில் என் ஊர்" 2

அதிரைநிருபர் பதிப்பகம் | October 27, 2015 | , , , , , , ,



பழசை தனிமையில் நினைத்துப் பார்த்து நெஞ்சுக்குள் நமக்கு நாமே அவ்வப்பொழுது சிலாகித்துக் கொள்வதை அப்படியே இல்லா விட்டாலும் கொஞ்சமேனும் எழுத்துருவாய் இங்கு கொண்டு வந்து கிறிக்கிக் காண்பிப்பது என்பது சிரமம் தான். இருப்பினும் முயற்சித்துப் பார்ப்போம் என்ற எண்ணத்தில் அவை இங்கே கொஞ்சம் கிறுக்கி காண்பிக்கப்பட்டுள்ளன.

காலை வேளை சுபுஹுத் தொழுகைக்கு பின் ஊரில் நட்சத்திரங்கள் தன் இரவு டூட்டி முடிந்து மெல்ல,மெல்ல வானில் விடை பெற்று மறைந்து போகும். அந்த நீல வானமும் கொஞ்சம்,கொஞ்சமாய் சிவந்து, வெளுத்து விடிய ஆரம்பிக்கும். அதற்கு மரங்களில் அடைக்கலம் புகுந்திருக்கும் காக்கை, மைனா, சிட்டுக்குருவிகள் சுறுசுறுப்பாய் காச்மூச் என்று கத்தி அன்றைய பொழுதை அதற்கேயுரிய பிரத்யேக குரலில் விடியும்முன் வரவேற்கும்.

இவ்வளவு என வரையறுத்து இன்று கேட்டு வாங்கப்படும் பள்ளிக்கூட டியூசன் ஃபீஸ் போல் அல்லாமல் அன்று தானாகவே காலை குர்'ஆன் பள்ளி ஒஸ்தாருக்கு அன்பளிப்பாய் வாரமொருமுறை கொடுக்கப்படும் கம்சுகாசு (கமீஸ் வியாழன்).

நாளை கம்பனில் அயல்நாடுகளிலிருந்து வரும் உறவுகளை இறக்க இன்றே குதிரை வண்டிகள் முன்பதிவு செய்து வைக்கப்படும். மாமா கொண்டு வரும் அந்த கைக்கடிகாரம், மிட்டாய் சாமான்களுக்காக உற்சாகத்தில் அன்றைய இரவே உள்ளம் உறங்க மறுக்கும்.

காலை நாயக்கர் கடை இட்லி,வடை,சட்னி,சாம்பாருக்காக அணியணியாய் பெரியவர் முதல் சிறியவர் வரை அக்கடை நோக்கி நடக்க ஆரம்பிப்பர். குளத்தில் அல்லது தோப்பு போரில் சென்று நன்கு குளித்து வந்த பின் வீட்டில் வேறு காலை பசியாற தயாராக இருக்கும். அருணா பார் சோப்பு, அண்ணா பார் சோப்பும், குருவி சோப்பும் ஒன்றுக்கொன்று சந்தையில் போட்டி போடும்.

பத்திரிக்கைகளை நன்கு படித்து நாட்டு நடப்பு தெரிந்து கொள்வதற்கும் அதனுடைய இலவச வாராந்திர இணைப்புகளை முதல் நபராக பெறுவதற்கும் அப்படியே கடைத்தெருவுக்கும், மையின் ரோட்டிற்கும் கால்கள் அதுவே அழைத்துச்செல்லும்.


பால்காரன் மணியோசையுடன், புதினமாய் வந்திறங்கிய பாக்கெட் பாலும் வீடு வீடாய் கலியாண பத்திரிக்கை போல் போடப்படும் காலம்.

வீட்டுக்கிணற்றில் தனியே குளிர்ந்த நீரில் குளிக்க விருப்பமில்லாமல், நண்பர்களுடன் வேட்டி,டவலு,சோப்பு எடுத்துக்கொண்டு அதை நன்கு ஆலுபரோட்டா போல் மடித்து தெருக்குளக்கரை சென்று அதன் குருவிக்கூடு போன்ற குழிக்குள் திணித்து நண்பர்களுடன் படிக்கரையில் இறங்கி தண்ணீரை மெல்ல,மெல்ல உடல் சிலிர்க்க விளையாட்டாய் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு தற்காலிக அந்த குளிருக்கு தீர்வு காண தொபுக்கடீர் என குளத்திற்குள் குதிக்கும் அந்த உள்ளம் உற்சாகமடைந்து அதற்கு சான்றாக ஆழத்திற்கு சென்று மண் அள்ளி வந்து நண்பர்களிடம் காட்டி மகிழும்.

ஆசையாய் கலர்,கலர் கோழிக்குஞ்சுகளை கடைத்தெருவிலிருந்து வீட்டிற்கு வாங்கி வந்து இசட் பிரிவு பாதுகாப்பு போல் அதை தொட்டு,தொட்டு பாதுகாப்பாய் என்னதான் வளர்த்து வந்தாலும் செத்த நேரம் கண் அசரும் சமயம் அந்த காக்கச்சி கோழிக்குஞ்சை கீச்,கீச் சப்தத்துடன் கவ்விக்கொண்டு போகும் சமயம் அதைக் காணும் எம் கண்களில் கண்ணீர் தானாகவே வந்து அந்தக்காக்கச்சியை கண்டபடி வீடே திட்டித்தீர்க்கும்.

வேட்டிக்குள் அரிசியை வீட்டினருக்கு தெரியாமல் எடுத்து வந்து தெரு ஆச்சிக்கு கொடுத்து வேண்டியதை வயிறு நிரம்ப உண்டும்,திண்டும் மகிழும் பழக்க,வழக்கம் சரியானதாக இல்லாவிட்டாலும் அதை நினைக்கும் இன்று அது என்னவோ ஒரு சாதனையாகவே தெரிகிறது.

தெருவிலும், வீடுகள் இருக்கும் சந்துகளிலும் வீட்டின் அன்றாட சமையலுக்கு அடுப்பெரிக்க வாடியிலிருந்து வந்திறங்கிய தேங்காய் மட்டைகளும், பூக்கமளைகளும், வீடு கட்ட வந்திறங்கி இருக்கும் ஆற்று மணலும் குவியலாய் ஆங்காங்கே கிடக்கும். அந்த ஆற்று மணலே இரவில் சாகவசமாய் உட்கார்ந்து நண்பர்களுடன் அரட்டை அடிக்க பேருதவி செய்யும். அதில் மணல் வீடுகள் கட்டி, களிமண்ணும் எடுத்து விளையாடச்சொல்லும். அப்படியே இரவு அம்புலிமாவை பார்த்து யாரோ சொன்ன "அவ்வையார் அங்கு உரல் இடிக்கும் கதை" நினைவுக்கு வரும். அப்படியே வர இருக்கும் வாழ்க்கைத்துணை பற்றி வெட்கமாய் உள்ளத்தின் ஒரு ஓரத்தில் சிற்றோடை போல் ஓசையின்றி அந்த ஆசையும் அதுவாய் ஓடும்.

அன்றைய சைக்கிள் கடைகளெல்லாம் இன்று எப்படி எமக்கு கண்கொள்ளாக்காட்சி தரும் வண்ண,வண்ண பி.எம்.டபுள்யூ, ஆடி, மெர்சிடஸ் கார்களின் ஷோரூம்கள் போல் ஆசையாய் காட்சி தரும். அதில் வயது, உயரத்திற்கேற்ற கால், அரை, முக்கால், முழு வண்டிகள் வரிசையில் நிறுத்தப்பட்டிருக்கும். மணி வாடகை, நாள் வாடகைகள் தேவைக்கும் வசதிக்கும் தகுந்தார்போல் பெயரும், நேரமும் குறிப்பிட்டு எடுத்து உபயோகிக்கப்படும் அதற்கேற்ற வாடகையும் வசூலிக்கப்படும்.

இன்று வாட்ஸ்'அப் போல் அன்று வால்டீப்பு பஞ்சர் பற்றி அதிகம் பேசப்படும். காரணம் பெரும்பாலும் எல்லோர் வீடுகளிலும் சைக்கிள் பயன்படுத்தப்பட்டது.

மாமா கொண்டு வந்து தந்த சீக்கோ, கேசியோ வட்ட, சதுர கைக்கடிகாரங்களின் கண்ணாடிகளில் கீரல் விழுந்து பழசாகி விடாமல் இருக்க கடைத்தெரு வாட்ச் கடைகளில் விற்கும் கலர்,கலர் ஸ்டிக்கரை வாங்கி ஒட்டி மகிழும் காலம் அது.

வரும் பெரிய நோய்நொடிகளுக்கெல்லாம் ஒரு ஆட்டோ வாங்கும் செலவை வைக்கும் இன்றைய ஸ்கேன், ரத்த பரிசோதனைகளின்றி மீராசா, ஹனீபு, இபுறாகிம், ராஜ் டாக்டர்கள் போடும் ஒரே ஊசியில் அல்லாட காவலில் எல்லாம் ஓடிப்போகும்.

அடிக்கடி மின் தடை வருவதாலும், அரை கெரண்டு பிரச்சினைகளாலும் அயல்நாட்டு பெட்டி பிரிப்பில் அந்த சிகப்பு, பச்சை எமர்ஜென்சி லைட்டு அவசியம் இடம் பெறும்.

யாரோ வாங்கி ஓட்டி வந்த டி.வி.எஸ் மோட்டார் சைக்கிளை தட்டுத்தடுமாறி ஓட்டி பின் அதை ஒரு பெரும் சாதனை போல் மனதிற்குள்ளும், வெளியிலும் உள்ளம் சிலாகித்துக் கொள்ளும் காலம் அது.

கம்பூண்டும் வீட்டு, தெரு அப்பாக்களின் அதட்டல்களில் 144 தடை உத்தரவு போட்டது போல் சில சைத்தானிய சேட்டைகள் தன் வாலை பயந்து சுருட்டிக்கொள்ளும்.

ஒரு வகுப்பில் முன்னேறிய சீனியர் மாணவர்களிடம் பாதி விலைக்கு புத்தகங்களும், கோனார் உரையும் வாங்கி படிக்கும். அதன் மூலம் காசு பணம் கொஞ்சம் மிச்சம் செய்யும்.

பள்ளிக்கூடத்தில் ஏதோ தவறுக்காக பெற்றோரை கூட்டி வரச்சொன்ன ஆசிரியருக்கு தெரியாது என எண்ணி தெருவில் சென்ற தெரிஞ்ச ஆளைக்கூட்டி வந்து சிலவேளை தப்பித்தும் சிலவேளை மாட்டிக்கொண்டும் சங்கடப்படும்.

முட்டலாம்பு வைக்கும் வீட்டு மாடாக்குழிகளெல்லாம் இன்று புது வீடுகளாய் ஐஃபோன் சார்ஜ் பண்ணும் அலமாரிகளாக மாறிவிட்டன.

அன்று எட்டணா (50 காசு) காசுகளெல்லாம் நமக்கு இன்றைய எட்டு கிராம் தங்க காசுகள் போல் ஜொலிக்கும். அதை வைத்து வேண்டியதை கடையில் வாங்கி திண்டு மகிழும்.

ஒரு கிலோ ஆட்டுக்கறி எம்பது ரூபாய் என்ற கறிக்கடைகாரரிடம் அந்த கடையில் எழுபது ரூபாய் தானே என வாக்கு வாதம் செய்து பேரம் பேசும்.

கடைத்தெருவில் வாங்கும் முப்பது ரூபாய்க்கு மீனும், பத்து ரூபாய்க்கு காய்கறிகளும் வீட்டின் பகல், இரவு உணவுக்கு போதுமானதாக இருக்கும். (இன்று கருவாப்பிள்ளையும், பச்சமிளகாயுமே பத்து ரூபாய்க்கு தர மறுக்கின்றனர் காய்கறிகடைக்காரர்கள்).

குழல் பணியானும், நானா ஹத்தமும், அரியதரமும், வெங்காயப்பணியானும், பூவடையும், முட்டாசும், மைசூர் பாக்கும், சாதா, பீட்ரூட் ஹல்வாவும் சம்மந்திப்புறங்களை சமாதானப்படுத்த அதிகம் புழங்கும் அக்கால திண்பண்டங்கள். அதில் குறை வந்தால் சம்மந்தமே மாறிப்போகும் கொடுமை.

பாஸ்போர்ட் கிடைத்து விட்டால் அதுவே ஒரு நல்ல அரபு நாட்டு நிறுவனத்தில் சம்பளம், சகல வசதிகளுடன் வேலைவாய்ப்பு கிடைத்து விட்டது போல் சந்தோசப்பெருமூச்சு விடும். பாஸ்போர்ட் காப்பிகள் எடுக்கப்பட்டு அங்குமிங்கும் அயல்நாட்டு சொந்தபந்தங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.அதற்கு அக்கால தோனா.கானாவின் நடமாடும் தபால்துறையே பேருதவி புரியும்.

கருத்த நெகடிவ் ஃபோட்டோக்கள் வீட்டு பத்திரம் போல் பாதுகாக்கப்படும். அதிலிருந்து தேவைக்கு கழுவி காப்பிகள் போட்டப்படும்.

அப்பொழுது குளோபல் வார்மிங் (புவி வெப்பமாகுதல்), நீர் மேலாண்மை பற்றியெல்லாம் அதிகம் பேசப்படவில்லை. காரணம் உலகம் அதன் உண்மை வடிவில் இருப்பதாகவே நம்பப்பட்டது. அதற்கான அதிக கவலைகள் வெளிப்படுத்தப்படவில்லை.

ஆகாச வானி, செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண சுவாமியின் குரல் எல்லோருக்கும் பரிச்சயப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்தது. மாநிலச்செய்திகள் சரியான நேரத்தில் கேட்டு ஊர், உலக நடப்புகள் அறியப்பட்டன. புயல்களுக்கு தான் விரும்பிய பெயரூட்டி மகிழாத காலம் அது. காற்றின் வேகத்தின் அளவும், அது கடந்து செல்லும் ஊருமே அன்று வானிலை ஆய்வு மையத்தால் ரேடியோ மூலம் எச்சரிக்கப்பட்டு அறிவிக்கப்படும். பழுதடைந்த ரேடியோக்களும், எமர்ஜென்சி லைட்டுகளும் உடனே சரி செய்ய கொடுக்கப்பட்டன. அது பற்றி அடிக்கடி விசாரிப்புகளும் இருந்து வந்தன.

அந்த கறுத்த விரல் விட்டு எண்ணை சுற்றி வேண்டியவரை அழைக்கும் தொலைபேசி கொஞ்சம் நாகரிகமாற்றத்தில் புதுப்பொலிவு பெற்று வெள்ளை நிறத்திற்கு மாறி சந்தைக்கு வந்தது. டிரங்கால் புக் பண்ணுவது கொஞ்சம் முன்னேறி எஸ்.டி.டி, ஐ.எஸ்.டி என பரிணாமம் பெற்று தொலைத்தொடர்பு வளர்ந்தது.

டி.வி.எஸ். 50 மோட்டார் சைக்கிள் இருந்தாலே அந்த வீடு நிச்சயம் ஓரளவுக்கு வசதியான வீடாகவே கருதப்பட்டு வந்தது.

ஹஜ்ஜுக்கு போய் வந்த சொந்த,பந்த உறவுகள் ஆசையாய் தந்த ஜம்ஜம் தண்ணீரும், பேரிச்சம்பழமும், கண்ணுக்கு சுருமா, தசுமணி, மக்கத்து மோதிரம், தொப்பி, அத்தரு போன்றவை அக்காலத்தின் பெரும் பொக்கிஷங்களே. அதை அணிந்து மகிழ்வதால் ஆனந்தமே.

மாவில் சல்லடை, இடியப்ப உரல், பொரிச்ச முறுக்கு, ஐஸ் பம்பாய் (மூங்கிலில் தலையாட்டி பொம்மையுடன் சுற்றி சிறுவர்களின் கையில் ரயில், தேள், என செய்து விற்கப்படும் மிட்டாய்), ஷிஃபா மருத்துவமனையின் முக்கிய அறிவிப்பு பிரபல இருதய மருத்துவ நிபுணர், உள்ளாங்குருவி, கொக்கு,மடையான், பழைய இரும்பு, பிளாஸ்டிக் வாங்குறது, அருவா, கத்தி சாணெ புடிக்கிறது....பாத்திரம் அடைக்கிறது..குடை ரிப்பேர் பண்றது..பழைய கட்டில், அலிமாலு, பத்தாயம் வாங்குறது..நிலக்கடலை வண்டியின் சப்தம்..பழைய செண்டு பாட்டுலு வாங்குறது...ராலு, மீனு.... போன்ற வியாபார, வர்த்தக தனி நபர், வாகனங்களின் சப்தங்கள் மாறி, மாறி கேட்டுக்கொண்டே இருக்கும் ஊர் முச்சூடும்..... இன்று கண்ட, கண்ட சாமான் சட்டிகளுக்காகவும், கெட்டுப்போக இருக்கும் பழங்களுக்காகவும் உறங்கும் நேரத்தில் கூட ஊருக்குள் வந்து சப்தமாய் ஒலி பெருக்கியில் கூச்சலிட்டு செல்கின்றனர். எல்லோரையும் எரிச்சலடைய வைக்கின்றனர்.

அன்றைய ஆண்,பெண், சிறுவர்,சிறுமியர் தெருவில் விளையாடிய விளையாட்டுக்களை பட்டியலிட்டால் அதுவே ஒரு பெரும் கட்டுரையாக உருவெடுக்கும். அதை படித்த பின் உள்ளமோ இங்கு வந்து "உச்சி உருட்டு" விளையாடும்.

இன்று எங்கு பார்த்தாலும் மனித நேயத்தை குழிதோண்டி புதைக்கும் மத துவேசமும், கேன்சர் போன்ற ஆட்கொல்லி நோய்களும் ஒன்றோடொன்று ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள் போல் வெகுவாக மிருக பலத்துடன் வளர்ந்தும் தன் விளையாட்டை சந்துபொந்துகளிலும் அரங்கேற்றி வருகின்றன. பலிகடாக்களாய் அப்பாவி பொது ஜனங்கள். சிறுவர்களைக்கூட ஈவு இரக்கமின்றி ரத்த வெள்ளத்தில் தன் அகோர ஆயுதத்தால் சாய்த்து விடுகின்றன. (சமீபத்திய முத்துப்பேட்டை சிறுவன் மீதான தாக்குதல் சம்பவமே சான்று).

இது போல் இன்னும் ஏராளமாய் எப்படியோ இருந்து வந்த என் ஊர் இன்று எப்படியோ மாறிப்போய் விட்டது. அதைக்கண்ட, அனுபவித்த எத்தனையோ என் மக்களும் அவரவர் போய்ச்சேர வேண்டிய இடமும் போய்ச்சேர்ந்து விட்டனர் நமக்கு முன்னரே.

இங்கு விடுபட்ட பழசுகளை உங்கள் பின்னூட்டம் மூலம் தொடரலாம் நீங்கள்.....

மு.செ.மு. நெய்னா முஹம்மது
படங்கள் : பாரிவள்ளல் [நன்றி]

"நாளக்கி பெருநா, நம்மளுக்கு ஜோக்கு" (ஹஜ்ஜுப் பெருநாள் கால மலரும் நினைவுகளிலிருந்து) 8

அதிரைநிருபர் பதிப்பகம் | September 19, 2015 | , , , , ,


நானெல்லாம் சிறுவனாக இருந்து பள்ளி, பள்ளிக்கூட (வெள்ளி, சனி) விடுமுறை காலங்களில் சைக்கிள் டயரும், அதை விரட்ட கையில் ஒரு கம்பும் வைத்துக் கொண்டு தெருவைச் சுற்றி நண்பர்களுடன் விளையாடி வந்த காலம் அது. அப்பொழுதெல்லாம் ஊரிலிருந்து பறாக்கப்பலில் (விமானத்தில்) ஹஜ் செல்வது ரொம்ப, ரொம்ப அரிது. எங்கோ, யாரோ அதில் ஏறி பயணிப்பதாக கேள்விப்படுவதுண்டு. அக்காலத்தில் ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவது கப்பல் பயணம் தான். ஹஜ்ஜை இனிதே முடித்து அவர்கள் வீடு திரும்ப குறைந்தது மூன்று, நான்கு மாதங்கள் ஆகும். இன்று போல் நொடிப்பொழுதில் கையில் தவளும் நவீன அலைபேசி சாதனங்களும், உலகச் செய்திகளெல்லாம் கனவில் கூட தவளாத, விஞ்ஞான முன்னேற்றங்கள் அத்துனை சாத்தியப்படாத காலம் அது.

மூன்று, நான்கு மாத கால ஹஜ்ஜுப் பயணத்திற்காக சாமான், சட்டிகளுடன் மூட்டை,முடிச்சுகளுடன்,மருந்து மாத்திரைகளுடனும் சென்னை வரை அல்லது மும்பை வரை ரயிலில் பயணம் மேற்கொள்வர் நம் முன்னோர்கள்.அவர்கள் திரும்பி வரும் வரை அவர்களுக்கு ஏதேனும், எங்கேனும் சம்பவித்தாலும் அல்லது வீட்டிலுள்ளவர்களுக்கு ஏதேனும்  நடந்தேறி விட்டாலும் அவரவர் நேருக்கு நேர் முகத்தை பார்க்கும் வரை ஒன்றுமே தெரிய வாய்ப்புகள் இல்லாத காலம் அது. திரும்பும் பயணமா? அது ஒரு திரும்பா பயணமா? என்பதை யார்தான் துல்லியமாக கூறிவிட முடியும் படைத்தவனைத்தவிர? அதனால் அவர்களை சீரும், சிறப்புடன் வாழ்த்தி கண்களின் ஓரம் கண்ணீர் ததும்ப வழியனுப்பி வைக்க நமதூர் ரயில் நிலையம் வரை அவர்களை பைத்து சொல்லி அழைத்துச் சென்று கழுத்தில் மல்லிகைப் பூமாலையெல்லாம் அணிவித்து (பைத்தும், பூமாலையும் இங்கு ஒரு விவாதப்பொருளாக மாறி விட வேண்டாம். நடந்தவைகளை நினைவு படுத்துவதே இப்பதிவின் நோக்கமேயன்றி இங்கு கருத்துமோதலை ஏற்படுத்துவது நோக்கமல்ல) சங்கை செய்து, கூச்சிக்கு,சிக்கு,சிக்கென்று ஊரின் எல்லையிலிருந்து உற்சாக சங்கூதி ஒய்யாரமாய் கரும்புகையை கக்கிக்கொண்டு நமதூர் வழியே சென்னை எழும்பூர் வரை செல்லும் கம்பன் ரயிலில் அவர்களுக்காக து'ஆச்செய்து, அவர்களையும் து'ஆச்செய்யச் சொல்லி அனுப்பி வைக்கும் காலம் அது. குதிரை வண்டி, மாட்டு வண்டி, பால்காரன் என சலங்கை,மணி ஒலி அங்குமிங்கும் ஊரில் கேட்டுக் கொண்டிருந்த காலம் அது.

பிறகு காலம் கொஞ்சம், கொஞ்சமாக முன்னேறி விமானப் பயணங்கள் மூலம் ஹஜ்ஜுக் கடமைகள் நிறைவேற துவங்கி ஹஜ்ஜுக்குக்கு செல்பவர்கள் நமதூர் புஹாரி ஷரீஃப் (ஜாவியா) முடிவதற்கு முன்னரே ஹஜ்ஜை முடித்து காலை ஊர் திரும்பி செல்லும் வழியில் நமதூர் ஜாவியாவில் வீடு சேரும் முன் அவர்களை பரக்கத்திற்காக, ஊர், ஈருலக நலன்களுக்காக து'ஆச்செய்யச்சொல்லி சிறப்பு படுத்தும் நமதூர். (ஜாவியா மேட்டரும் இன்று நமதூர் வலைதளங்களில் விவாதப்பொருளாக மாற்றப்பட்டுள்ளதை காண முடிகிறது. இது கூடுமா? கூடாதா? பித்'அத்தா? இல்லையா? என்றெல்லாம் விவாத மேடைகளில் இதுபற்றி இன்று அனல் பறந்தாலும் ஊரில் பல ஏழைக் குடும்பங்களின் காலை வேளை உணவு அந்த 40 நாட்கள் முழுவதுமோ அல்லது ஓரளவுக்கேனுமோ பூர்த்தியாகிறது என்பது மட்டும் உண்மை என்பதை உணர முடிகிறது). சரி நம் நினைவுகளுக்குள் பயணிப்போம்.

எங்கோ பிறந்து வளர்ந்த செம்மறியாடுகள் தன் குடும்பம், பிள்ளை குட்டிகள் சகிதம் ஊர்த்தெருக்களில் கீதாரிகள் மூலம் பெரும் பேரணி போல் செல்லும். சில ஆடுகளின் மேல் விலாசங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அது ஆட்டின் விலாசமா? அல்லது அதை வாங்கியவரின் விலாசமா? அந்த கீதாரிக்கே விளங்கும்.

துணிக்கடைகள் இந்த ஹஜ் மாதத்தில் மட்டும் துணிக்கடலாக உருமாறும். அதற்கான விளம்பர வாகனங்களின் சப்தமும் காதை பிளக்கும். நோட்டீஸும் ஆங்காங்கே கலியாண பத்திரிக்கை போல் வீடு வீடாக கொடுத்து செல்லப்படும். 

முடிவெட்டும் கடைகளும் கூட்டமாய், குதூகலமாய் தான் இருக்கும். ஹிப்பி, கிராப்பு, என்று அக்கால ஸ்டைலில் சிகை அலங்காரம் செய்து அந்நேர இளமை மகிழும்.

டைலர் கடைகளில் கூட்டம் அலைமோதும். இளைஞர்களின் மத்தியில் தெரு டைலரிடம் தைக்க கொடுப்பதா? எக்ஸ்போ டைலரிடம் கொடுப்பதா? எக்ஸ்பர்ட் டைலரிடம் கொடுப்பதா? அஹ்லன் டைலரிடம் கொடுப்பதா? பட்டுக்கோட்டை ரஹ்மான் டைலரிடம் கொண்டுபோய் தைக்க கொடுப்பதா? அல்லது சென்னையிலிருந்து கிரேஸி ஹார்ஸிலிருந்து ரெடிமேடாக வாங்கி வரச்சொல்வதா? அல்லது மாமா தந்த மார்டின் சட்டையை வைத்து வரும் ஹஜ்ஜுப் பெருநாளை சமாளிப்பதா? என்பதில் அதிகம் கன்ஃபூஸ் இருக்கும்.

தலையில் தொப்பியின்றி யாரும் காணப்பட மாட்டார். அதனால் கடைத்தெரு இலியாஸ், அன்சார் கேப்மார்ட்களில் வகை,வகையான, கலர்,கலரான தொப்பிகள் குவிந்து கிடக்கும். தலைக்கேற்ற தொப்பிகளை போட்டு பார்த்து வாங்கி மகிழ்வோம். மாப்ள தொப்பி, வெள்ளை தொப்பி, பின்னல் தொப்பி, ஓமன் தொப்பி, பங்களாதேஷ் தொப்பி என பலவகைகளில் விற்கப்படும். கடைசியில் இன்று அந்த கப்பல் போன்ற ஊதா தொப்பியே தலைமையிடத்தை மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஒரு காலத்தில் அந்த பெரிய கப்பல் போன்ற ஊதா தொப்பியின் இருபக்க இடுக்கில் அப்பாமார்கள் ஏதாவது எழுதி வைத்த கடுதாசியும், காசு, பணமும் செருகி வைத்திருப்பர். பேரப்பிள்ளைகளுக்கு உடனே கொடுக்க அக்காலத்தின் ஏ.டி.எம். மெஷின் போல் அது அவர்களுக்கு பயன்பட்டது.

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பெருநாளைக்கு எல்லாமே புதுசா இரிக்கணும்ண்டுதான் எல்லோரும் அன்று நினைப்போம். தெருவில் நடக்கும் பொழுது சரட், சரட் சப்தம் தந்து பிறரின் கவனத்தை சட்டென ஈர்க்கும் சிகப்பு பூ வைத்த அந்த சோலப்புரி செருப்பும் நம் கம்பீரத்தை கொஞ்சம் கூட்டியே காண்பிக்கும் காலம் அது. அப்பொழுதெல்லாம் சிக்ஸ்பேக் கலாச்சாரமும், அதன் மோகமும் இளைஞர் பட்டாளத்திடம் இருந்ததில்லை. மொத்தியா இருந்தாலும், ஒல்லிக்குச்சி போல் இருந்தாலும் கொஞ்சம் செவந்த தோலுக்கு மதிப்பு அதிகம் தான் அன்று. தோல் செக்கச்செவேண்டு இருந்தாலும், கன்னங்கரேண்டு இருந்தாலும் புத்திக்கூர்மையும், இறைவன் தந்த நல்அறிவும், ஆற்றலும், நேரான வழியில் கடின முயற்சியும் இருந்தால் எவருக்கும் ஏமாற்றமில்லா ஏற்றமே இருக்கும் இறைவனின் நாட்டத்தில்.

அப்பொழுதெல்லாம் அரஃபா ஒன்பதாம் நாள் சிறுவர்களாய் இருந்த நமக்கு அன்று நோன்பு வைக்க வேண்டும் என்ற மார்க்க விழிப்புணர்வு அத்துனை இருந்ததில்லை. அதனால் கண்டதையும் திண்டு திரிந்து வந்தோம். 

பெருநாள் இரவு ஆடவர், பெண்டிர் என ஊரே ஒரு விழாக்கோலம் பூண்டிருக்கும். சென்னையிலிருந்து பள்ளி, கம்பெனி விடுமுறையில் நிறைய பேர் குடும்பத்துடன் ஊர் வந்திருப்பர். அவர்களுக்கு என்னதான் சிங்கார சென்னையில் மெரீனா கடற்கரையும், நுனி நாக்கு இங்லீஸும் பரவசம் தரும் பழக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் நம்மூர் கலாச்சாரம் ரொம்பவே அவர்களுக்கு பிடித்திருக்கும். எங்கு சென்றாலும் வேட்டி உடுத்திக்கொண்டு காற்றோட்டமாய், மரங்கள் சூழ்ந்த இடம், புளியமரங்கள் இருபக்கமும் அரண் போல் நின்று நிழல் தரும் சாலைகள்,சப்தமில்லாமல் சிற்றோடை போல் ஓடிக்கொண்டிருக்கும் ராஜாமட பாலம், செல்லும் வழியில் பசுமை போர்த்திய வயல்வெளிகளும், அதில் கூட்டமாய் வந்தமரும் வெண்கொக்கு, மடையான்களும், தென்னந் தோப்புகள், அதில் ஓடும் மோட்டர் பம்பு செட்டுகள், அதன் தொட்டியில் இறங்கி குளித்து கும்மாளமிடும் சுகம், இருபுறமும் கருவேல மரங்கள் வரவேற்கும் ரயில் ரோடு தாண்டிய குண்டும், குழியுமாய் உப்புக்காற்று வீசும் நமதூர் கடற்கரை சாலை, தெரு ஆச்சிகளின் பொட்டிக்குள் மறைந்திருக்கும் நா ஊறும் விலை/விளை பொருட்கள், கடைத்தெரு நொறுக்குத் தீணிகள், மெயின் ரோடு சூப்பு கடைகள், நீர் நிறம்பி குளிர்காற்றை கொஞ்சம், கொஞ்சமாய் தவணை முறையில் தந்து மகிழும் தெரு குளங்கள், இராக்கால நிலவு கார் மேகப்போர்வைக்குள் புகுந்து,புகுந்து உலகோடு கண்டு விளையாட்டு விளையாடுவதும், அதை அப்படியே தெருக்குளங்கள் தன் மேனியில் அழகுற படம் பிடித்து ஊருக்கு காட்டி மகிழ்வதும், அதை குளக்கரையில் நின்று நண்பர்களுடன் ரசிப்பதும் என இன்னும் தொலைந்து போன எத்தனையோ இன்பங்களை இலவசமாய் அனுபவிக்க எவருக்குத்தான் பிடிக்காது......

ஹஜ்ஜுப் பெருநாள் வரும் முன்னரே சொந்த, பந்தங்களின் சிறுவர், சிறுமியர்களுக்காக பெருநாள் காசு என்று சொல்லி குடும்பங்களில் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் சலவை/புது நோட்டுகள் சந்தோசமாய் கொடுத்து மகிழ்ந்து கொள்வர். அதை வைத்து வீட்டின் சிறுவர்களாய் இருந்த நாம் பாதி பணத்தை வீட்டில் கொடுத்தும் மீதி பணத்தில் நமக்கு விருப்பப்பட்ட விளையாட்டு சாமான்களையும், திண்பண்டங்களையும் வாங்கி மகிழ்வோம்.

பெருநாள் இரவு இறைச்சிக்கடை பெட்ரமாஸ் லைட்டு மேன்டிலின் வெளிச்சம் அதை காணும் நம் உள்ளத்திற்குள் ஊடுவி உற்சாக ஒளியேற்றி ஒரு பரபரப்பான பரவசத்தை நமக்கெல்லாம் தந்து மகிழும்.

ஹஜ்ஜுப் பெருநாளுக்கு ஒளிஹாவுக்காக ஊரெங்கும் ஆடுகளும், மதரஸா, பைத்துல்மால் போன்ற தொண்டு நிறுவனங்களில் அறுக்கப்பட்டு பகிரப்படும் மாட்டு கறிகளும் பரவலாக எல்லோர் வீடுகளிலும் குவிந்து குளிர்சாதனப் பெட்டி வசதியில்லா பெரும்பான்மையான வீடுகளில் அதை உடனே சுத்தம் செய்து கெட்டுப்போகாமல் இருக்க மசாலா தடவி உடனே சனலில் சாக்கு தைக்கும் ஊசி மூலம் ஒவ்வொன்றாக கோர்த்து மாலை போல் ஆக்கி அதை வெயிலில் துணிக் காயப்போடுவது போல் போட்டு வைப்பர். நன்கு காய்ந்ததும் அதை அப்படியே அடுப்பில் சுட்டோ, அம்மியில் தட்டியோ அல்லது எண்ணெய் ஊற்றி பொறித்தோ அதில் கூடுதலாக வெங்காயம், கேரட், மல்லி இலை, எலுமிச்சை போன்றவற்றை வேட்டிப்போட்டு கூடுதல் ருசியுடன் உண்டு மகிழ்வோம். அன்றெல்லாம் 80, 90 வயது அப்பாக்களை எல்லாத் தெருக்களிலும், வீடுகளிலும் பார்க்க முடிந்தது. கொலஸ்ட்ரால் பிரச்சினையில்லை, நடக்க முடியா முடக்கு வாதம் அதிகமில்லை, குழிக்குள் கொண்டு போய் சேர்க்கும் கேன்சரும் இல்லை, ஊரை பவனி வரும் லேன்சரும் இல்லை. ஆனால் இன்றோ நவீனங்கள் ஊரை நாலாப்புறமும் சூழ்ந்திருந்தாலும் 30 வயதை தாண்டியதும் உடல் கோளாறுகளும் மருத்துவ அறிவுரைகளும், மருந்து மாத்திரைகளும் நினைத்த எதையும் கவலையின்றி உண்டு மகிழ முடியாமல் ஸ்பீட் ப்ரேக் போட்டு ஏகத்துக்கும் வாயின் முன்புறம் செல்லும் முன் வேகத்தடை விதிக்கிறது.

நோன்பு பெருநாள் போல் ஹஜ்ஜுப்பெருநாளுக்காக பெருநாள் இரவு தெருப்பள்ளிகளில் நகரா அடிக்க மாட்டார்கள். குர்பானி கிடா அறுக்கும் முன்னர் பெருநாள் காலை பசியாற தேவையான கறிகளை வாங்க கறிக்கடை முன் கச்சல்கட்டியோ, கட்டாமலோ காத்துக்கிடப்பர்.

வெள்ளிக்கிழமை கூட கறி வாங்கி உண்டு மகிழ முடியா எத்தனையோ பல ஏழை,எளிய குடும்பங்களின் வீடுகளில் ஆடு,மாடு குர்பானி கறிகள் போதும், போதும் என்று சொல்லுமளவுக்கு பல வீடுகளிலிருந்து வந்து குமியும். அவர்கள் மனமும் குளிரும். வயிறும் நிறையும்.

அக்காலத்தில் கவாபுக்கும், நம் கல்புக்கும் நல்ல தொடர்பு இருந்து வந்தது. நாமும் வீடுகளில் சக வயது சிறுவர்களுடன் சேர்ந்து நான்கு செங்கல்லை எடுத்து சதுரமாய் அடுக்கி அதன் நடுவில் அடுப்புக்கரியை கொஞ்சம் போட்டு நெருப்பூட்டி அதன் நடுவில் குடைக்கம்பியில் மசாலா தடவிய கறியை வைத்து விசிறியில் வீசி அதை நன்கு வேகும் வரை சூடு காட்டி பிறகு தட்டையில் சூட்டோடு திண்டு மகிழ்வோம்.

கறிக்கடைகளிலும், டைலர் கடைகளிலும், இன்ன பிற பெருநாள் இரவு வேலைவெட்டிகளிலும் இரவின் பெரும் பகுதி கழிந்திருப்பதால் அசதியில் மீதி இரவில் நன்கு உறங்கி பெருநாள் காலை சுபுஹ் தொழுகை பள்ளியில் இமாம் ஜமாத்தோடு தொழுது விட்டால் அது ஒரு பெரும் சாதனை தான் அன்று. வீட்டில் எல்லோரும் ஒரே நேரத்தில் குளிக்க வேண்டி இருப்பதால் சுபுஹ் தொழுகை முடிந்ததிலிருந்து ஒவ்வொருவராய் குளிக்க ஆரம்பித்து ஒரு வழியாய் மெல்ல, மெல்ல எல்லோரும் பெருநாள் தொழுகைக்கு தயாராகி விடுவர். அதே சமயம் அடுப்பில் பசியாறவும் ரெடியாகிக் கொண்டிருக்கும்.

பள்ளியில் முன்னரே வந்தமரும் பெரியவர்களும், சிறியவர்களும் மைக்கில் தக்பீர் சொல்லிக்கொண்டிருப்பர். நாமும் இறைவனைப் புகழ்ந்தவர்களாய் மெல்ல, மெல்ல தக்பீரை முணு, முணுப்போம். சந்தோசம் ஊரெங்கும் காற்றில் கரைந்து கொண்டும், அந்த தியாகத்திருநாள் பெரும் ஆர்ப்பாட்டமும், ஆர்ப்பரிப்பும் இல்லாமல் அமைதியாய் எல்லோரிடமும் குடிகொண்டிருக்கும் அந்த அல்லாஹ்வே அவற்றை பின்னாலிருந்து இயக்கிக் கொண்டிருப்பான்....

பசியாற காரியங்களும், குடும்ப, நட்பு நல விசாரிப்புகளும் என பெருநாள் தினமும் நம்மை விட்டு அந்த நாள் சூரியன் போல் மெல்ல, மெல்ல மறைந்து கொண்டிருக்கும். தக்பீர் முழக்கம் மட்டும் மார்க்கம் கூறும் நல்வழியில் நம் பள்ளிகளில் இன்னும் இரண்டு நாட்களுக்கு தொடரும்.

ஹஜ்ஜுக்கு சென்று வந்தவர்கள் வீடுகளில் களரி என்னும் பசியாற,விருந்து உபசரிப்புகள் நடந்தேறும். "ஹஜ்ஜுக்கு போய்ட்டு வந்தவ்வோ" வீட்டுக்கு சென்று அவர்களை முசாபஹா செய்து வரும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஜம்ஜம் தண்ணீர், பேரிச்சம் பழமும், கொஞ்சம் நெருங்கியவர்களுக்கு அத்தரு, தொப்பி, தசுமணி, மக்கத்து மோதிரம் எல்லாம் கொடுத்துபசரிக்கப்படும். இந்த விஞ்ஞான முன்னேற்றம் அம்மி,குழவி,கொடக்கல்லை மட்டுமல்ல தசுமணியையும் விட்டு வைக்கவில்லை. காணாக்கி தொலைத்து விட்டது. எல்லாம் டிஜிட்டல் மயம். இப்படியே பலவிசயங்களை இங்கு எழுதிக் கொண்டிருப்பதால் கணிப்பொறியின் மை கறைகிறதோ? இல்லையோ? ஆனால் நம் காலம் கறைந்து கொண்டே இருக்கிறது.

காலமும், நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. இவ்வுலகில் அவன் நாட்டத்தில் அந்த,அந்த நேரத்தில் வர வேண்டியது வந்து கொண்டும் போக வேண்டியது போய்க்கொண்டும் தான் இருக்கின்றன......

இந்த வருடம் பல சிரமங்கள்,உடல் நலக்குறைவுகள்,பிரச்சினைகள் என எல்லாவற்றையும் தாண்டி புனித ஹஜ் கடமையாற்ற மக்கமாநகரம், மதீனமாநகரம் வந்தடைந்துள்ள லட்சோப லட்ச ஹாஜிமார்களின் எல்லாப்பாவங்களையும் மன்னித்து அவர்களின் ஹஜ்ஜை மப்ரூரான ஹஜ்ஜாக்கி அவர்களின் ஹாஜ்ஜத்துக்களுடன் அகில உலக முஸ்லீம்களின் ஹாஜத்துக்களும், ஈருலக நலவுகளும் இனிதே நிறைவேறி அகிலமெங்கும் அமைதி நிலவ து'ஆச்செய்வோம்....

இந்த நல் நினைவுகளுடன் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் என் இனிய தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும் இனிதாய், கனிவாய்  சென்றடையட்டுமாக.....

மு.செ.மு. நெய்னா முஹம்மது

நம் முன்னோர்களின் புத்திக்கூர்மை (சிரிக்க மட்டும் அல்ல; சிந்திக்கவும்) 1

அதிரைநிருபர் பதிப்பகம் | June 15, 2015 | , , ,

(இது ஒரு மீள் பதிவு. நான்கு வருடங்களுக்கு முன் நான் எழுதி மற்றொரு இணையத்தில் வெளியான கட்டுரை மலரும் நினைவுகளிலிருந்து)

அது ஒரு வறட்சியான கோடைகாலத்தில் வந்தஅழகிய ரமளான் மாதம். நம் ஊர் குளங்கள் எல்லாம் நீர் இன்றி வற்றி இருந்த சமயம் அது. நமதூர் செக்கடிப் பள்ளி வெளி வராண்டாவில் தராவீஹ் தொழுகை நடந்து கொண்டு இருந்தது. அச்சமயம் தொழ வரும் பெரியவர்களில் சிலர் தராவீஹ் முழுவதும் தொழுத பின்னரோ அல்லது இடையிலோ சற்று களைப்பாற பள்ளி வராண்டாவிற்கு கீழே உள்ள படிக்கட்டு திண்ணையில் அமர்ந்து காற்று வாங்கிச்செல்வது வழக்கம்.


அதுபோல் ஒரு நாள் (தராவீஹ் தொழுகை முடியும் தருணம்) அத்திண்ணையில் சஹீத் அப்பாஸ் ஹாஜியார் அவர்களும், நம்மில் பலர் அன்பாக மாமா என்றழைக்கப்பட்ட மர்ஹூம் உவைஸ் (ஹாஜி சாகுல் ஹமீது மற்றும் யூசுஃப் அவர்களின் தகப்பனார்) அவர்களும் அமர்ந்திருந்தனர்.

தொழுகை நடந்து கொண்டிருந்த அச்சமயம் பள்ளிக்கு வந்த சிறுவர்களில் யாரோ ஒருவன் விளையாட்டாய் பள்ளி ஹவுதிலிருந்து ஒரு குவளையில் தண்ணீர் எடுத்து வந்து பள்ளியின் மேல் மூலையிலிருந்து கீழே அமர்ந்திருந்த அவ்விரு பெரியவர்களின் மீது ஊற்றி விட்டான். பிறகு யாரும் அறியாத படி விரைந்து சென்று தொழுகையின் வரிசையில் (நுழைந்து) சேர்ந்து கொண்டான்.

அச்சமயம் அவ்விரு பெரியவர்களும் தங்களின் சட்டையெல்லாம் நனைந்து கடும் சினங்கொண்டவர்களாக பள்ளிக்கு மேலே வந்து விட்டனர் தங்களின் மேல் தண்ணீர் ஊற்றியவனைப் பிடிப்பதற்காக/ண்டிப்பற்காக‌.

உடனே மேலே வந்த அப்பெரியவர்களில் ஒருவரான மர்ஹூம் உவைஸ் மாமா அங்கிருந்தவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள் "முதலில் இங்குள்ள எல்லாச் சிறுவர்களையும் பிடியுங்கள். பிறகு அவர்கள் ஒவ்வொருவரின் நெஞ்சையும் தொட்டுப் பாருங்கள் அதில் யாருக்கு அதிகம் திக்கு,திக்கென்று அடிக்கிறதோ கண்டிப்பாக அவன் தான் நம்மேல் தண்ணீர் ஊற்றி இருக்க வேண்டும்" என்று யாருமே யோசிக்காத, கோர்ட், கேஸ், வாய்தா இல்லாதஒரு உடனடி தீர்ப்பையும் சொன்னார்கள்.

இங்கு நாம் எல்லோரும் சிந்திக்க வேண்டிய விசயம் என்னவெனில் நம் முன்னோர்கள் உலகில் பெரும் குற்றங்களை கண்டுபிடிக்க பிரசித்திப் பெற்றதாக கூறப்படும் CIA, FBI, INTERPOL & SCOTLAND YARD போன்ற அமைப்புகளில் பணியாற்றியவர்கள் அல்லர். இருப்பினும் அவர்களின் புத்திக் கூர்மையாலும், மதி நுட்பத்தாலும், சாதுரியத்தாலும் தான் இன்னும் நம் மனதில் அவர்களுக்கென்ற தனி அந்தஸ்துடன் நீங்கா இடம் பெற்றுள்ளனர். அவர்களைப்போல் நம்மூரில் பல தெருக்களில் வாழ்ந்து மறைந்த எத்தனையோ மதிநுட்பத்தில் தலைசிறந்து விளங்கியஆண்களும் மற்றும் பெண் உத்தமர்களும் இருக்கத்தான் செய்தார்கள். அவர்கள் யாவரின் கப்ருகளும் வர இருக்கும் புனித ரமளானின் பொருட்டு சொர்க்கத்தின் பூஞ்சோலையாக ஆகட்டுமாக! ஆமீன்...

கடைசியில் தான் தெரிந்து கொண்டேன் இப்படித்தான் உலகின் பல குற்றங்களுக்கு சம்மந்தப்பட்டவர்கள் மேல் உண்மை கண்டறியும் சோதனைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படுகிறார்கள் என்று.

இறுதியில் தண்ணீர் ஊற்றிய அச்சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டு நியாயமான அடிகள் கொடுக்கப்பட்டு தண்டிக்கப்பட்டானா? அல்லது "நம்மூட்டு புள்ளை" என்று மன்னித்து விடுவிக்கப்பட்டானா? என்று தெரியவில்லை. மேலதிக விவரங்களுக்கு சகோ. தஸ்தகீர் அவர்களைத் தொடர்பு கொண்டால் தெரியும் என நினைக்கிறேன்.

இது போல் ஊரில் நீங்கள் கண்ட‌‌ சுவராஸ்யமானம்பங்களை ட்டுரை மூலம் ண் முன்னே கொண்டு முயற்சிக்கலாமே?

என்றும் இனிக்கும் மலரும் நினைவுகளுடன்,

மு.செ.மு. நெய்னா முகம்மது


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு