ஒரு சிலிர்க்கும் சுவாரசியம் கூடிய தகவலை நான் இங்கே பகிர்ந்துகொள்ள விழைகிறேன் அதுவும் சின்னதாய் செல்ல கவிதைவரிகளுடன்!.
நகைச்சுவையாக சொல்ல நினைத்தேன், நேற்று 22-ஜூலை-2012 எனது மூன்றாவது மகளும், என் மூத்த காக்காவின் மூன்றாவது மகளும் (இருவரும் ஒரே வயது 6) நோன்பு இருக்க ஆசைப்பட்டு நோன்பு(ம்) பிடித்தார்கள்.
நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம், அவர்களை கட்டாயப்படுத்தாமல் அவர்களின் போக்கில் முழுதாக நிறைவு செய்தால் நல்லது, இல்லையென்றால் பரவாயில்லை என்கிற முடிவில் நிறைவில் அல்லாஹ்வின் கிருபையினால் நல்ல முறையில் நிறைவு செய்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்!!.
இதற்குள், அவர்களை சோர்வு தாக்காதிருக்க எனது மனைவியும், என் காக்காவின் துணைவியார் (மச்சியும்) மற்றும் சகோதரர்கள் எங்கள் இருவரின் குழந்தைகளும் எப்படியெல்லாம் எங்கள் சின்னஞ்சிறு மொட்டுக்களை கவனித்து கொண்டார்கள் என்பது சுவாரசியமகவும். சிலிர்ப்பாகவும் நடந்தேறியது அன்றைய பொழுது.
நேற்று எங்கள் பகுதியில் வெயில் உக்கிரமாக இருந்தது 107டிகிரி. ஆனாலும் இரு பிள்ளைகளும் செய்த சேட்டைகள் யாவும் குளிர்ச்சியாக அமைந்தது. எல்லாம் நல்ல படியாக முடிந்ததும் பின்னர் எனது மகள் "வாப்பா! இன்னைக்கும் நான் நோன்பு பிடிப்பேன் சஹருக்கு எழுப்புங்க" என்று சொன்னதும்.
எனக்குள் எழுந்தது இந்த சின்ன சுவாரசிய கவிதை!!?
செல்லமே!
கேட்பதெல்லாம் சரிதான்
கேட்பதும் நல் முறைதான்!
அல்லாஹ் சொன்ன கடமையை
இத்துணைச் சிறு வயதில்
கடைபிடித்த சிறுமி என் செல்லம்தான்!
கட்டாயம் உனக்கு இது
கடமை இல்லை செல்லமே!
நீ கேட்ட ஒருமுறை
நாமும்தான் சம்மதித்தோம்!
மறுபடியும் நோன்பிருக்க
மரிக்கொழுந்தே கேட்கின்றாய்!
இனி ஒருமுறை
நீ(ங்கள்) நோன்பிருக்க
உங்களுக்குத் தெம்பிருக்கும்
வீட்டில் உள்ள
எங்கள் உடல் தாங்காது!
இப்படி நகைச்சுவையாய்???? முடித்தேன் காரணம் இந்த இரு வாண்டும் நோன்பிருக்க அடித்த லூட்டி, அலுச்சாட்டியம். அவர்கள் கேட்டு வைத்த ப(பா)ல நூறு கேள்விகள் அப்பப்பா!!! மறுபடியும் எங்க உடம்பு தாங்காது!!!!!
CROWN