
இதே வரிசையில்தான்
நானும் நின்று கொண்டிருக்கிறேன்
இலக்கை நோக்கிய
இந்த நகர்வு
இடர்பாடுகளின்றித் தொடர்கிறது
இடையிடையே
குறுக்கே புகுந்தும்
சறுக்கி விழுந்தும்
இலக்கை அடைபவர்கள்
ஏராளம் வந்தாலும்
என் நகர்தலில் பாதிப்பில்லை
இந்த வரிசையில்
நிற்கத் துவங்கியது
எப்பொழுது என்று
நினைவிலில்லை என்றாலும்
இந்த அனிச்சை நகர்வு
ஓர் அசாதாரணத் தருணத்தில்
நின்றே தீரும்
என்பதைக் குறித்து
எதிர்வாதம் ஏதுமில்லை
என் முறைக்கானக் காத்திருப்பின்போது
ஞாபகங்கள் சூழ்ந்து கொள்கின்றன
வரிசையில் நகர்தலினூடேதான்
வாழ்வை நுகர்தலும் தொடர்ந்திருக்கிறது
பிறப்பென்றத் துவக்குமும்
வளர்ப்பென்றத் தொடர்தலும்
கற்றல் விதிகளும்
காதல் களிகளும்
பரஸ்பரம்
ஆடையாய் அமைய வாய்த்தவளோடான
சுக துக்கங்களும்
குளிரூட்டப்பட்ட அறையிருப்புகளும்
உயிரூட்டப்பட்ட வாரிசுகளும்
இனம் பெருக்கியதும்
இடம் பெயர்ந்ததுவும்
சினேகிதர்களுடனான
மாறுபட்ட காலகட்டங்களும்
தேடல் சுவாரஸ்யங்களும்
தெளிவில்லா அனுமானங்களும்
எதிர்ப்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்
காத்திருப்புகளும் கைவிடுதல்களும்
மெய்வருத்தி வாங்கிய கூலியும்
மேம்படுத்திச் சேர்த்தச் செல்வமும்
என
எல்லாம்
எடுத்துச் செல்லவியலாத
சுமைகளாகப்
பின் தங்கிவிட...
என்
எண்ணங்களும் செயல்களும் மட்டுமே
என்னுடன் மீளும்
தவிர்க்க முடியாத
அத் தருணம் மட்டுமே
முற்றுப் புள்ளியில் துவங்கும்!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்