Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label ஏடு-இட்டோர்-இயல். Show all posts
Showing posts with label ஏடு-இட்டோர்-இயல். Show all posts

அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா ? 2

அதிரைநிருபர் பதிப்பகம் | July 17, 2016 | ,

யார் ரமலானில் நோன்பு நோற்று பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வால் நோன்பு நோற்கின்றாரோ அவர் (ஆண்டு) காலம் முழுவதும் நோன்பு நோற்றவரைப் போலாவர். (அறிவிப்பவர்: அபூ அய்யூப் அல் அன்சாரி (ரலி) நூல்: முஸ்லிம்)

ஒரு மாத நோன்பு பத்து மாத நோன்புக்குச் சமமானது, அதன் பின்னர் ஆறு நோன்பு இரண்டு மாதங்களுக்குச் சமமானது என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஃப்வான்(ரலி) நூல்: தாரிமி: 1690)

இந்த ஹதீஸில் ரமளானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வாலில் நோன்பு நோற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து என்ற வார்த்தையிலிருந்து பெருநாளைக்குப் பிறகுள்ள ஆறு நாட்கள் தொடர்ந்து பிடிக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இது தவறான வாதமாகும். ஏனெனில் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று ஷவ்வாலிலும் ஆறு நாட்கள் நோன்பைத் தொடர வேண்டும் என்ற கருத்தில்தான் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளதே தவிர, ஆறு நாட்கள் தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்று கூறப்படவில்லை. தொடர்வது என்பதற்கு அத்பஅஹு என்ற அரபுச் சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது. தொடர்ச்சி என்பதற்கு முததாபிஐன் என்ற சொல் பயன்படுத்தப் பட வேண்டும். உதாரணமாக திருக்குர்ஆனில், மனைவியைத் தாய்க்கு ஒப்பிட்டு விடுபவர் அதற்குப் பகரமாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிக் கூறப்படுகின்றது.

சமீபத்தில், அதிரையில் நிகழ்ந்த திருமணங்களில் சவ்வால் பிறை பிறந்த முதல் ஆறு நாட்களுக்குள் மட்டும் 19 லிருந்து 23க்கு மேற்பட்ட திருமணங்கள் நடந்திருப்பதை நாம் அறிவோம் இவைகள் இன்று அதில் கலந்து கொண்ட / கல்ந்து கொள்ளாதவர்களின் விமர்சனத்திற்கும் ஆளாகியிருப்பதை அறிய முடிகிறது !

நோக்கம், சாடுவதல்ல... ஏன் இப்படி என்ற வினா எழுப்பிக் கேட்டு கொள்ளவும்... இன்னும் அதிரையில் பெருமை பட்டு கொள்ளும் அளவுக்கு இளம் ஹாபிழ்கள், ஆலிம்களின் எண்ணிக்கை அதிகமிருந்தும், இதுநாள்வரை கடைபிடித்து வந்த ஆறுநோன்பு என்றொரு சுன்னத்தான நோன்பின் மான்பை நாமே புறக்கனித்து விட்டோமோ என்ற ஐயமே எழுகிறது !

ஏனிந்த அவசரம், ? 

வற்புறுத்தி அழைக்கப்பட திருமண நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களின் அனுபவம், விருந்தோம்பலுக்கும், திருமண வரவேற்புக்கும் அழைத்து விட்டு டீயோ / ஜூஸோ கொடுக்கும் முன்னர் நீங்க நோன்பா என்று விபரம் தெரிந்தவர்கள் கேட்கும்போதே அவர்களின் சங்கடங்களும் அறிய முடிந்ததை தெரிவித்தனர்.

ஞாயிறு அல்லது பள்ளி விடுமுறை நாட்கள் அல்லது அரசு விடுமுறை நாட்கள் என்று முன்னுரிமை அளிக்கும் அளவுக்கு கூட இந்த ஆறு நோன்பின் சிறப்பும் மான்பும் அறிந்த மார்க்க அறிஞர்கள் தங்களின் இல்லத் திருமணங்களையும் நடாத்தி இருப்பது விமர்சனத்திற்குள்ளானது.

மார்க்கம் அறிந்த இவர்களே இவற்றில் பிடிப்பு இன்றி இருக்கும்போது பிறரிடம் எப்படி எடுத்துரைத்து ஷவ்வால் நோன்பின் சிறப்பினை சொல்லி சிறப்பிக்க முடியும் ?

நமதூர் பராம்பரியமிக்க சங்கமும் முஹல்லாவில் திருமணங்கள் நிச்சயிக்கப்படும்போது சங்கத்தின் பங்கு முக்கியமானதாக இருப்பதை உணர்ந்து இருப்பவர்கள்தான், மறுப்பதற்கில்லை இனிவரும் காலங்களிலாவது சுதாகரித்துக் கொள்ள வேண்டும்.

இன்னும், திருமண செலவுகளையும் அல்லது கால நேரத்தையும் ஒருங்கிணைத்து ஒவ்வொரு திருமணத்துக்கும் ஒரு வக்து என்று ஒதுக்கி கொடுப்பதற்கு பதிலாக அன்றைய நாள் நடக்க இருக்கும் திருமணங்களை ஒரே குத்பாவில் நடத்தி சிறப்பிக்கலாம்.

சங்கம் சமுதாயத்தின் அங்கமாக இருப்பதை மறந்திருப்பதும் / மறைக்கபட்டிப்பதும் வருத்தத்திற்குரிய விஷயமே !

அதிரைநிருபர் பதிப்பகம்

ஈத் மிலனும் இனி வரும் காலமும் !
காணொளி இணைக்கப்பட்டுள்ளது
4

அதிரைநிருபர் பதிப்பகம் | October 16, 2014 | , , , ,

அதிரையில் கடந்த 12ம் தேதி அன்று மிகச் சிறப்பாக நடந்து முடிந்த இரண்டாம் ஆண்டு "பெருநாள் சந்திப்பு 2014" என்ற நிகழ்வில் அதிரைக்கு மட்டுமல்ல சுற்று வட்டாரத்தில் இருக்கும் ஊர்களுக்கும் பலவிடயங்கள் இருக்கிறது. அருமையான இந்த நிகழ்வின் துவக்கத்தில் ஈத் மிலன் "பெருநாள் சந்திப்பு" அதன் தூய்மையான நோக்கம் என்னவென்று வரவேற்புரையில் அருமையாக எடுத்துரைக்கப்பட்டது அதோடு எப்படி நாம் அதனை மேலும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தொடர்ந்து தலைமையுரையிலும், சிறப்பு பேச்சாளரின் உரையிலும் சிறப்பாக அறிவுறுத்தப்பட்டது.

அதிரைப்பட்டினம் போன்ற இஸ்லாமியர்கள் நிறைந்த ஊர்களில், எந்தவொரு இஸ்லாமியரும் சகோதர சமயத்தைச் சார்ந்தவர்களை ஓரங்கட்டிப் பார்ப்பதில்லை, தங்களது அன்றாட வாழ்வியலில், வணிகத்தில், வீட்டு வேலைகளில், ஏன் சொந்த காரியங்களில் பிற சமய சகோதரர்களை அரவனைத்துக் கொண்டேதான் இருக்கின்றனர். 

அப்படியிருக்க ! ஏன் அதிரைக்கு இப்படியொரு நிகழ்வு அவசியமா என்று வினா எழுப்புபவர்களும் உண்டு. 

தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அனைத்து சமய நல்லிணக்க கூட்டங்கள் ஒன்று கூடல் நிகழ்வுகள் நடந்து கொண்டு இருந்தாலும், அதிரையைப் பொருத்த மட்டில் நமக்கு நாமே நன்னெறி மார்க்கத்தை சொல்லிக் கொண்டு இருந்தோம். ஆனால், காலத்தின் கட்டாயம் இன்றைய ஊடக வளர்ச்சியும், இணைய பயன்பாடும் அனைத்து மக்களாலும் அலசி ஆராயும் ஆர்வம் கூடியிருக்கிறது. அதோடு தான்-தோன்றித்தனமாக கற்பனைகளையும் கதைகளை செய்திகளாகவும் வரலாறாகவும் பதிக்கப்பட்டு அது வேறுவிதமான விவாதத்திற்கும் இஸ்லாமியர்களுக்கு மட்டும் என்றல்லாமல் மனித இனத்திற்கு எதிரானதாக உருவகம் கொடுத்து பாஸிச சிந்தனையைத் தூண்டி ஒரு மதம் இன்னொரு மார்க்கத்திற்கு எதிராக சதிகளை செய்து கொண்டு இருக்கிறது.

ஆக ! இனிமேலும் தாமதிக்காமல் நமது தூய எண்ணங்களை பிற சமய சகோதரர்களோடு பகிர்ந்து கொள்ளும் ஆக்கப் பணிகளில் அவசியம் ஈடுபட்டே ஆக வேண்டும், புரிந்துணர்வுகள் மேலிட்டால் அங்கே காழ்புணர்ச்சிகள் காணாமல் போய்விடும்.

அதற்கு நமது அன்றாட வாழ்வியல் முறையிலும், அடுத்தவர்களோடு கலந்தாயும்போது மார்க்கம் கற்றுத் தந்த மனித நேயத்தையும், நேர்மையையும் அடுத்தவர்களுக்கு முண்ணுதாரனமாகக் கொண்டு செயல்படுத்திக் காட்ட வேண்டும். நமது செயல்களும் நல்லதை நாடும் எண்ணங்களும் சுற்றியிருக்கும் மக்களோடு கலந்தே இருக்க வேண்டும், அது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் மாறாக நம் நற்செயல்கள் அனைத்தும் தாக்கத்தை ஏற்படுத்தும் படி அமைத்துக் கொள்ள வேண்டும்.

இதுபோன்ற கலந்துரையாடல்கள் இனியும் தொடரனும், ஒன்று கூடல் விழாவாக இல்லாவிடினும் தான் சார்ந்து இருக்கும் பகுதியில் அல்லது தெருக்களில் அடிக்கடி கலந்து பேசிக் கொண்டால் அவ்வப்போது எழும் ஐயங்களுக்கும், அதோடு தொடர்பில் இருக்கும் சூழல் இருந்து கொண்டே இருக்கும். நல்லதையும் கெட்டதையும் ஆராய்ந்து கொள்ள பேருதவியாக இருக்கும்.

மீண்டும் ! மிகச் சிறப்பாக ஈத் மிலன் "பெருநாள் சந்திப்பு 2014"ஐ ஆக்கபூர்வமாக நடத்தி முடித்த 'அதிரை ஈத் மிலன் கமிட்டி'க்கு துஆவும், வாழ்த்துக்களும்.

அதிரைநிருபர் பதிப்பகம்

அதிரை ஈத் மிலன் 'பெருநாள் சந்திப்பு - 2014'  காணொளி







அதிரையில் பெருநாள் - மறுநாள் மந்தி எனும் வீண் விரயம் ! 25

அதிரைநிருபர் | July 30, 2014 | , , , , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… 

அருட்கொடையாளன் அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால், இந்த வருட ரமளான் மாதம் மிகச் சிறப்பாக அமைந்ததற்காக நம்மை எல்லாம் படைத்த ரப்புல் ஆலமீன் அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். அல்ஹம்துலில்லாஹ்.

அல்லாஹ்வின் உதவியால் வெளிநாடு மற்றும் வெளியூர்களில் உள்ள நம் அதிரைச் சகோதர சகோதரிகள் தங்களின் நண்பர்கள், மற்றும் சொந்தங்களுடனும், அவர்களோடு தங்கியிருக்கும் சக முஸ்லிம் சகோதரர்களோடும் பெருநாளை சந்தோசமாக கொண்டாடி மகிழ்ந்திருப்பார்கள். இதற்கு மேல் ஊரில் உள்ள நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகள், குடும்ப சொந்தங்கள், நண்பர்கள் அனைவருடன் அன்பும் நட்பும் பாராட்டி வழக்கம் போல் ஈகைத் திருநாளை கொண்டாடி மகிழ்ந்திருப்பார்கள் அல்ஹம்துலில்லாஹ்!

'ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'இஸ்லாத்தில் சிறந்தது எது' எனக் கேட்டதற்கு, '(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்' என்றார்கள்" என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.  புகாரி 12.  Volume :1 Book :2

அதிரையில் நம்மோடு நெருங்கிப் பழகும் சகோதரர்களின் நட்பு பாராட்டும் ஏற்பாட்டால், பெருநாள் விருந்து என்று 400க்கு மேற்பட்டவர்களுக்கு விருந்து பரிமாறி தங்களின் உணவு உண்ணும் நிகழ்வை நடத்தி ஈகை திருநாளின் புனித நோக்கத்திற்கு மாற்றாக அமையப் பெற்றதை ஒட்டு மொத்த அதிரை முஸ்லீம்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த ‘மந்தி’ விருந்தோம்பலில் கலந்து கொண்ட 90% சதவீதத்திற்கு மேற்பட்ட சகோதரர்கள் தங்களின் அன்றைய உணவுக்கு திண்டாடுபவர்களல்ல. 

பெருநாள் தினத்தன்று அதனைத் தொடரும் விடுமுறை நாட்களில் தாய் தந்தை, மனைவி, குழந்தைகள், உடன்பிறந்த சகோதர சகோதரிகள் என்று ஒன்று கூடி சந்தோசமாக கொண்டாடப்பட வேண்டிய நாட்கள், இந்த மந்தி விருந்திற்கு அழைக்கப்பட்டவர்களுக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் தங்களுக்கென்று வீடு குடும்பம் இல்லாமல் இருப்பவர்களுமல்ல !

குடும்பங்கள் ஒன்று கூடும் வீட்டில் தாய், தந்தை, சகோதர சகோதரிகள், மனைவி, குழந்தைகளை விட்டு விட்டு இவ்வாறான விருந்தோம்பல் அவசியம் தானா ?

ஒன்று கூடல் பெருமைக்கும் பகட்டுக்காகவும் இவ்வகை விருந்து வீண் விரையங்கள் நடைபெறுகிறதே, இதனை எடுத்துக் கூறி நல்வழியில் செலவிடச் சொல்ல ஊரில் எந்த ஒரு இயக்கத்திற்கும் அல்லது மார்க்க அறிஞர்களுக்கும் தோன்றவில்லையா?

அனாச்சாரங்களை தட்டிக்கேட்க வேண்டியவர்களே பம்மிக் கொண்டு நமக்கொரு அழைப்பில்லையே என்று ஏங்கிக் கொண்டிருகிறார்களா? என்னவோ ! அவர்களெல்லாம் எங்கே ? பொதுக் காரியங்களில் ஈடுபடும் சகோதரர்கள் இவ்வாறான பகட்டுக்காக புகைப்படமெடுத்து விளம்பரப்படுத்தப்படும் விருந்துகளில் கலந்து கொள்வது அவர்களின் பொதுநலச் சேவைகளை கேள்விக் குறியாக்காதா?

பெருநாள் பகல் தினத்திலோ அல்லது பெருநாள் முடிந்த அடுத்தடுத்த நாட்களிலோ ஏழைக் குடும்பங்களின் திருமணத்தை நடத்தி வலிமா என்ற பெயரிலா இவ்வாறான மந்தி விருந்து கொடுக்கப்பட்டுள்ளதா?

கடந்த சில வருடங்களாக தங்களின் பொருளாதாரத்தை அர்த்தமற்ற இது போன்ற பொழுதுபோக்கு மற்றும் பகட்டுக்கான விருந்துகளுக்கு பண உதவி செய்பவர்கள் அதற்கு உடந்தையாக செல்பவர்கள் பின்வரும் இறைவசனத்தை கொஞ்சம் நிதானமாக வாசித்துப் பாருங்கள்.

மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. குர் ஆன் 4:36. 

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. குர் ஆன் 7:31

(ஒருவேளை உணவுக்கு அண்ணல் நபி(ஸல்) அவர்களும், அவர்களின் குடும்பமும், சத்திய சஹாபாக்களும் எவ்வளவு கஷ்டப்பட்டிருபார்கள்? அந்த கஷ்டத்தில் ஒரு துளி உணவின்றி நாம் கஷ்டப்பட்டிருப்போமா? நம் கண்களின் கண்ணீர் வர வைக்கும் அந்த சம்பவங்களை  சிறிதளவேனும் அறிந்து கொள்ள இங்கே சுட்டிப் பாருங்கள் http://adirainirubar.blogspot.in/2013/05/8.html)

இது போன்ற அனாச்சார விருந்துக்கு செலவு செய்யும் பணத்தில், ஊரில் எத்தனையோ பேர் வட்டி என்ற கொடுமையால் அறிந்தோ அறியாமலோ விழுந்து கஷ்டப்படுகிறார்கள், அவர்களில் வருடத்திற்கு ஒருவரையாவது மீட்டெடுக்க முன் வரக்கூடாதா?

ஊரில் எத்தனையோ எழை கன்னிப் பெண்கள் தங்களது திருமணச் செலவு செய்ய நாதியற்று இருக்கிறார்களே, இது போன்ற பெருநாள் தினத்தில் மந்திக்காக ஒன்று கூடுபவர்கள் அந்த ஏழைகளுக்கு பெருநாள் தினத்தில் திருமணம் நடத்தி வலிமா விருந்தை அல்லாஹ்வுக்காக ஒன்றுகூடி மந்தி சமைத்து அந்த ஏழை குடும்பங்களிடம் மகிழ்ச்சியை வரவழைக்க  முன்வரக் கூடாதா?

அனாதை பிள்ளைகள் உள்ள நமதூர் எத்தீம்கானா மதர்ஸாவுக்காகவது அன்றைய தினம் இது போன்ற மந்தி சமைத்துக் கொடுத்து அந்த அனாதைகளின் முகத்தில் மகிழ்ச்சியை மிளிரவிட்டு நன்மையை அள்ள முந்தக் கூடாதா?

பல வருடங்களாக இஸ்லாமியர்கள் ஏற்றம் பெறவும் முஸ்லீம் ஏழைகளுக்கு உதவுவதற்காகவே இயங்கி வரும் அதிரை பைத்துல்மாலை அணுகி நாங்கள் 400 ஏழைகளுக்கு உணவளிக்க இருக்கிறோம் என்று சொல்லி அவர்களின் ஆலோசனையின் பேரில் ஏழைக் குடும்பங்களுக்கு பெருநாள் தினத்திலோ அல்லது அடுத்த நாளோ மந்தி சமைத்து உணவளிக்க முன்வரக் கூடாதா?

ஊரில் பெருளாதார ஏற்றத்தாழ்வுகளாலும், குலப்பெருமையாலும் பிரிந்து கிடக்கும் பிறதெரு சொந்தங்களை அழைத்து ஒற்றுமையின் அவசியத்தை வழியுறுத்தி உறுக்கமான, கவலையான மார்க்க உபதேசங்கள் செய்து சந்தோசமாக ஒருவருக்கு ஒருவர் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்த மந்தி சமைத்து ஊர் ஒற்றுமையை நிலை நாட்ட முயற்சிகள் செய்யக் கூடாதா?

முஸ்லீம்கள் என்றால் பிரியானி, ஆட்டுக்கறி தின்பவர்கள் என்று சொல்லும் பிற மதத்தவரை அழைத்து, பெருநாள் விருந்து என்று நம்முடையை அழகிய விருந்து உபசரிப்பை காட்டி, அவர்களுக்கு நாங்கள் இஸ்லாத்தில் இருப்பதால் எவ்வளவு சந்தோசமாக உள்ளோம் என்பதை சொல்லி தூய இறை மார்க்கத்தை எத்தி வைக்க ஓர் வாய்ப்பாக மந்தி சமைத்து முந்திக் கொண்டு நன்மையின் பக்கம் அழைக்கக் கூடாதா?

உணவுப் பழக்கமோ அல்லது சுகாதரச் சூழலோ எதன் விளைவோ அல்லது வேறு எதனாலோ ஊரில் நிறைய பேர் உயிர்கொல்லி நோயான கேன்சரில் பாதிக்கப்பட்டுள்ளார்களே, அவர்களை கண்டறிந்து அவர்களின் நோய்கான செலவுகளுக்கு இதுபோன்ற அனாச்சார செலவுகளுக்கு கிடைத்த தொகையை கொடுத்து உதவ முன்வரக் கூடாதா?

வசதி வாய்பின்றி கல்வி பயில கஷ்டப்பட்டு வெளியில் சொல்ல முடியாத எத்தனையோ இஸ்லாமிய சொந்தங்கள் உள்ளார்கள், ஏன் சில தினங்களுக்கு முன் கல்வி உதவி கேட்டு வலைப்பூக்களில் நிதியுதவி வேண்டி கோரிக்கை வைத்துள்ளார்கள், இது போன்றவர்களின் கல்வி செலவுக்கு மந்திக்கு ஆகும் செலவை கொடுத்து நன்மையை அள்ளிக் கொள்ளக்கூடாதா?

ஊரில் எத்தனையோ மனநோயாளிகள் சரியான பராமரிப்பின்றி அன்றாடம் சிரமத்துக்கு உள்ளாகிறார்களே, குறைந்த பட்சம் பெருநாள் தினத்திலாவது நல்ல உடையுடுத்தி, நல்ல உணவு கொடுத்து கவுரவித்து சந்தோசப்படக் கூடாதா?

எத்தனையோ நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் பல சிரமத்துக்கு மத்தியில் உள்ளார்கள், இது போன்ற பெருநாள் தினத்தில் அவர்களை சந்தித்து நலம் விசாரித்து, அவர்களுக்கு உணவோ அல்லது உதவியோ செய்து, இஸலாமியர்கள் இவ்வளவு கருணையாளர்கள் என்று அவர்களின் சிந்தனையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி தூய இஸ்லாத்தை நாடி அவர்கள் நம் வழி நாடி வர ஒரு தூண்டுகோலை ஏற்படுத்தக்கூடாதா? 

என்னதான் நடக்கிறது ஊரில்? 

ஒவ்வொரு பெருநாள் காலங்களில் என்ன ஆனது நமதூர் ஊர் செக்கடிமேடு நண்பர்களுக்கும், இளைஞர்களுக்கும் எத்தனை நாட்களுக்கு இப்படியே சாப்பாட்டையும் அரட்டையையும் முன்னிருத்தி பெருமையடிப்பார்கள்? இன்னுமா திருந்தவில்லை? ஏன் இந்த அவசியமற்ற பெருமை? நாளை நமது பிள்ளைகள் இவ்வாறே தொடர்ந்தால் அதன் விளைவாய் ஏற்படும் அந்த வலியை சொல்லிக்காட்ட ஆள் இருக்காது கிள்ளிப் போடத்தான் சுற்றியிருக்கும் கூட்டம்.

தேர்தல் நேரத்தில் கட்சிகளுக்காக ஓட்டு கேட்கவும் கூட்டுகளை உடைக்கவும் பல கூட்டணிகளில் பங்கெடுக்கும் நம் சகோதரர்கள், மந்தியென்றதும் முந்திக் கொண்டு இந்த சாப்பாட்டுக் கூட்டணி ஏன்? [ஒற்றுமையின் அவசியம் அறிந்துதான் செயல்படுகிறோம் என்றால் இதில் மட்டுமல்ல இன்னும் ஏனைய காரியங்களிலும் முன்னிருத்தி காட்டுவதுதான் சிறந்தது].
காஸாவில் முஸ்லீம்களுக்குஎதிராக இஸ்ரேல் நடத்தி வரும் பயங்கரவாதத்தில் நாளுக்கு நாள் மக்கள் கொல்லப்படும் இந்த சூழலில் செக்கடிமேடு சார்ந்த சில  சகோதரர்கள் இப்தார் நிகழ்ச்சிகளை ரத்து செய்தார்கள். ஆனால் அதே சகோதரர்கள் இந்த மந்தி விருந்தை அங்கீகரித்திருப்பது எவ்வகையான நிலைபாடு என்பது புரியவில்லை.

வீண் பெருமை, வீண் விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை என்று தனது திருமறையில் தெள்ளத் தெளிவாக அறிவித்து விட்டானே, வீண் பெருமைக்காக, தேவையின்றி வீண் விரயமாக செய்யப்படும் இவ்வாறான செயல்களால் அல்லாஹ்வின் நேசம் நெருங்குமா என்பதை நம் சகோதரர்கள் அனைவரின் சிந்தனைக்கே விட்டு விடுகிறோம்.

மேற்கண்ட கேள்விகள் உங்களின் சிந்தனையை சிதைக்கவல்ல, சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயே எடுத்து வைக்கப்பட்டுள்ளது.

அன்பான எங்கள் நண்பர்களே, சகோதரர்களே மேலே சொன்னவை எந்த ஒரு தனி நபர்கள் மேல் வெறுப்பு கொண்டு எடுத்து வைக்கப்பட்டது அல்ல. மாறாக நாம் எங்கே செல்கிறோம்? நம்முடைய வருங்கால சமுதாயத்திற்கு எவ்வகை அனாச்சார செயலை நற்செயலாக முன்னுதாரனமாக காட்டுகிறோம்? நாளை நமது பிள்ளை இதே வழியை நாடினால் பெருமைப்பட்டுக் கொள்ளும் நிலையில் இருப்போமா? அல்லது அவர்களின் நேர்வழி வேண்டி இறைஞ்சுவதில் இருப்போமா? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

நோன்பு காலத்தில் நீங்கள் கேட்ட மார்க்க சொற்பொழிவுகளில் நபி(ஸல்) அவர்களும், சத்திய சஹாபாக்களும் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை ஒரு கணம் சிந்தித்து பாருங்கள். பர்மா, சிரியா, பாலஸ்தீன், ஈராக் போன்ற நாடுகளில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டு நாளுக்கு நாள் உண்ண உணவிற்கு எண்ணிலா துயரங்களை சந்திக்கிறார்களே என்று எண்ணி, அல்லாஹ் நம்மை இந்த அளவுக்கு வைத்திருக்கிறானே என்று அவனுக்கு அதிகமதிகம் நன்றி செலுத்துங்கள்.

இது போன்ற வீண் விரய விருந்துகளை புறக்கணியுங்கள், நீங்கள் அறிந்தோ அறியாமலோ இதற்கு ஆதரவு கொடுத்திருந்தால் அதற்காக, அல்லாஹ்விடம் தவ்பா செய்யுங்கள். இந்த வீண் விரய உணவு உபசரிப்பில் கலந்து கொண்டிருந்தால் அதற்காக பரிகாரம் தேடுங்கள். இந்த வீண் விரய விருந்தை முதன் முதல் ஆரம்பித்து வைத்த சகோதர்களுக்கு இதன் தொடர் பாவங்கள் அவர்கள் கணக்கில் சேர்ந்து வருகிறது என்பதை உணர்ந்து அவர்களும் அல்லாஹ்விடம் பரிகாரம் தேடட்டும்.

அல்லாஹ் நம் எல்லோரையும் இது போன்ற வீண் விரையங்களை ஏற்படுத்தும் விருந்து உபசரிப்புகளிருந்து தடுத்து அனைவரையும் பாதுகப்பானாக. ஆமீன் !

அதிரையின் செய்தி ஊடகங்களில் பங்கெடுக்கும் சகோதர்களுக்கு மீண்டும் அன்பான வேண்டுகோள், நீங்கள் ஊரின் அன்றாட நிகழ்வுகளை சுடச் சுட செய்திகளாக பல இன்னல்களுக்கு மத்தியில் வெளியிட்டு வருகிறீர்கள் மாஷா அல்லாஹ்!, இதனை மிகப்பெரும் நற்பணியாக செய்து வருகிறீர்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால்  இது போன்ற வீண் விரய அனாச்சார நிகழ்வுகளை வெறும் செய்தியாக மட்டும் போடாமல், அந்த அனாச்சாரங்களை திட மனத்திடத்துடன் கண்டித்தும் வெளியிடுங்கள். இதுதான் இஸ்லாமிய ஊடகக்காரர்கள் செய்ய வேண்டிய துணிச்சலான செயலாக இருக்க முடியும். சமுதாய பெறுப்புணர்வுடன், எதிர்கால சந்ததிகளுக்கு நாம் எதை பதிந்து வைக்கிறோம் அவர்களுக்கு வரலாற்றில் ஏடாக எதைக் கொடுக்கப் போகிறோம் என்ற கவலையுடன் செய்திகளை வெளியிடுங்கள். கேடுகெட்ட தினசரிகளைப் போன்று இஸ்லாமியர்கள் பங்கெடுக்கும் ஊடகங்களும் அதன் பின்னால் செல்ல வேண்டாம் என்பதை வேண்டுகிறோம்.

இது போன்ற விரயங்களை தற்பெருமையாக இணையத்தில் வெளியிட்டு இதனை படிப்பவர்கள் சந்தோசமடைவார்கள் என்று தவறான நோக்கத்துடன் இருக்கிறார்கள் மந்தி விருந்து ஏற்பாட்டாளர்கள். இதற்கு விதிவிலக்காக அதிரையில் மார்ர்கத்திற்கு புறம்பான வீண் விரயங்களை சுட்டிக்காட்டி அதிலிருந்து நம்மக்களை தவிர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படும் இன்ஷா அல்லாஹ். இதனை பிற வலைப்பூக்கள் செய்யத் தவறினாலும் நாம் அதிலிருந்து பிறழாமல் எவருக்கும் அஞ்சாமல் செயல்படுவோம், மவுனமாக இருக்க மாட்டோம் என்பதற்கு இந்த பதிவும் முந்தைய பதிவுகளும் சாட்சி பகரும்.

இதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் மிக நெருக்கமானவர்களே அவர்கள் ஒவ்வொருவரையும் நேரிலோ அல்லது அலைபேசி வாயிலாகவோ அழைத்து எடுத்துச் சொல்வது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதால் இதனை ஒரு கண்டன பதிவாகவே பொதுவில் உங்கள் அனைவரின் முன் வைக்கிறோம். 

இஸ்லாமிய சமுதாய, நம்மக்களுக்கு ஒவ்வாத, புறம்பான செயல்கள் எதுவாயின் அதனை விமர்சிக்கவும், அவற்றிலிருந்து நம்மக்களை தவிர்த்திட வைக்கவும் அதிரைநிருபர் தளம் தயவு தாட்சனைகளின்றி செயல்படும் இன்ஷா அல்லாஹ் !

அதிரைநிருபர் பதிப்பகம்
editor@adirainirubar.in

பதினாறாவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை. 21

அதிரைநிருபர் பதிப்பகம் | May 17, 2014 | , , , , , ,

கடந்த இரண்டு மாதங்களாக நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்த பாராளுமன்றத் தேர்தல் திருவிழாக் காட்சிகள், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதுடன் ஒரு முடிவுக்கு வந்துள்ளன. தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பு பல்வேறு விதமான கருத்துக்கள் வெளியிடப்பட்டன. பல்வேறு ஊடகங்களிலும் பிஜேபி அணியே வெல்லும் என்று கருத்துக் கணிப்புகள் சொல்லி இருந்தாலும் அது பற்றி பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஆயினும் பரவலாக எதிர் பார்க்கப்பட்ட அல்லது அரசியல் வல்லுனர்களால் சொல்லப்பட்டது என்னவென்றால் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை அமையாது ; இழுபறியாக இருக்கும்; மாநிலக் கட்சிகள் பெரும் வெற்றி பெற்று புதிய ஆட்சி அமைப்பதில் பெரும் பங்கு வகிக்கும்; பிஜேபி அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் மற்ற கட்சிகளின் ஆதரவு தேவைப்படும் ; மூன்றாவது அணி அமையும்; என்றெல்லாம் பல்வேறுவகையான கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன; வெளியாயின.


ஆனால் அனைவரின் கணிப்பையும் தோல்வி அடையச் செய்து பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, 330 க்கு மேலும் பிஜேபி மட்டும் தனித்து அறுதிப் பெரும்பான்மை எண்ணாகிய 272 இடங்களையும் தாண்டி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் பத்தாண்டு காலமாக நாட்டை ஆண்ட காங்கிரஸ் அரசு பதவி விலகி பிஜேபி அரசு அமைய இருக்கிறது. முதலாவதாக வெற்றி பெற்ற கட்சிகளுக்கு நமது நல வாழ்த்துக்களையும் நல்ல எண்ணங்களையும் சிறந்த ஆட்சிக்கான எதிர்பார்ப்புக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

இந்தத் தேர்தல் முடிவுகள் இவ்விதம் அமைந்ததைப் பற்றி நாம் ஒரு கருத்து சொல்லப் போனால் 2014 தேர்தல் முடிவுகள்! இருபது ஆண்டுகால காங்கிரசின் கையாலாகாத்தனம்! சங் பரிவாரங்களின் நூறாண்டுகால சாதுரியம் ! என்றே சொல்வோம். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே இப்படி ஒரு பலத்துடன் ஆட்சிக் கட்டிலில் ஏறிவிட வேண்டு மென்றும் தனது சித்தாந்தங்களை செயல் படுத்திட வேண்டுமென்றும் ஆர் எஸ் எஸ் மற்றும் அதைச் சார்ந்த அமைப்புகள் செய்த பகீரத பிரயத்தனம் இன்று ஊடகங்களின் ஒட்டு மொத்த உதவியால் - காங்கிரஸ் கட்சியின் மோசமான தேர்தல் நிலைப் பாடுகளால் இன்று பிஜேபியால் வென்று எடுக்கபப்ட்டு இருக்கிறது. 

வெளிப்படையாகப் பார்க்கும் போது பாரதீய ஜனதா கட்சி முன்னிறுத்திய மதவெறிக் கொள்கைகள் வென்றது போலத் தோன்றினாலும், பத்தாண்டுகள் ஆண்டுவிட்ட ஒரு கட்சியை மாற்றிப் பார்க்க மக்களின் மனம் இயல்பாகவே விரும்பி இருப்பதும் ஒரு காரணம் என்பதை தள்ளிவிட முடியாது. ஒரு வகையில் பிஜேபியின் வெற்றிக்கு காங்கிரசின் மோசமான ஆட்சியையும் முழுமையான காரணம் என்பதை நடுநிலையாளர்கள் ஏற்கவே செய்வார்கள். காங்கிரஸ் செய்த தவறுகளின் விளைச்சலையே அரசியல் ரீதியில் பிஜேபி அறுவடை செய்து இருக்கிறது. “ In fact, the election results are the expression of anger of people against Congress and their disastrous policies “ என்றார் இடதுசாரி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி. ராஜா. 

தேர்தல் பரப்புரை காலங்களில் இன்று பிஜேபியால் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட நரேந்திர மோடி மீது பல புகார்கள் கூறப்பட்டன. பல எச்சரிக்கைகள் விடப்பட்டன. ஐயோ! இவரா! வேண்டாம் என்று பலரும் மக்களை நோக்கி வேண்டுகோள்கள் விடுத்தனர். ஆனால் அவை அனைத்தையும் மீறி இன்று நரேந்திர மோடியின் தலைமையில் புதிய அரசு அமைய இருக்கிறது. ஆனால் இப்படி நரேந்திர மோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காரணத்தாலேயே அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அவர் ஆண்ட குஜராத்தில் சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், அடக்குமுறைகள், படுகொலைகள், சொத்துச் சூறையாடல்கள் ஆகிய குற்றச்சாட்டுகள் மறைந்துவிட்டதாகக் கருதிவிட முடியாது. அந்தக் குற்றச்சாட்டுகள் அப்படியேதான் இருக்கின்றன. ஒருவேளை இப்போது நரேந்திர மோடி இப்போது ஏற்க இருக்கும் புதிய பிரதமர் பொறுப்பின் மூலம் அந்தக் கலங்கங்களைக் களையும் விதத்தில் செயலாற்றினால் அவர் மீது நம்பிக்கை ஏற்பட ஒரு வாய்ப்புள்ளது. தரப்பட்டுள்ள பொறுப்பான பதவிக்கு ஏற்ப அவர் நடந்து கொள்ளவேண்டுமென்று விரும்புவோம். 

இந்த தேர்தல் முடிவுகள் சொல்லும் இன்னொரு விஷயம் என்னவென்றால் 1984 தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் ஆட்சியமைத்த கட்சிகள் தனிப்பெரும் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கவில்லை. பல மாநில உதிரிக் கட்சிகளின் ஆதரவிலும் அமைச்சரவையின் உள்ளிருந்தும் வெளியிலில் இருந்தும் ஆதரவு பெற்றே தந்து ஆட்சியை நடத்தி வந்தது. இதன் மூலம் ஆளும் கட்சி , தான் நினைப்பதை செயல்படுத்த இயலாத நிலைகள் பலமுறை ஏற்பட்டன. அதுமட்டுமல்லாமல் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் மிரட்டல்களுக்கும் ஆளாகி, அமைச்சரவையில் அவர்கள் கேட்கும் துறைகளையும் கொடுத்தே தீர வேண்டிய நிலைமைகளும் ஏற்பட்டன. அது மட்டுமல்லாமல் கூட்டணியில் இருந்த கட்சிகள் ஊழல் முதலிய தவறுகளைச் செய்யும் பொது அவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்க முடியாமலும் கூட்டணி தர்மங்கள் அரசின் கைகளைக் கட்டிப் போட்டன. 

ஆனால், இந்த முறை பிஜேபிக்கு மக்கள் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் வலுவைக் கொடுத்து இருக்கிறார்கள். தங்களது கூட்டணியில் இருக்கும் எவரையும் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டுதான் ஆளவேண்டுமென்ற அவசியமில்லாமல் சுதந்திரமான அரசை அமைக்க மக்கள் பிஜேபிக்கு உத்தரவிட்டு இருக்கிறார்கள் என்பது ஒரு ஆரோக்கியமான நிலை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். எந்த நல்ல காரியத்தையும் செய்ய விடாமல் கூட்டணிக் கட்சிகள் முட்டுக் கட்டை போட்டன என்று பிஜேபியும் காரணம் சொல்லி தப்பித்துக் கொள்ள முடியாது. 

இந்த முறையும் ஆட்சியமைக்கப் பற்றாக்குறையான பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் பிஜெபிக்குக் கிடைக்குமென்றும் , அந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி பலவித பேரங்களை பேசி சொந்த நலனுக்காகவும் தங்கள் மீது இருக்கும் வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் வகை ஏற்படுத்திக் கொள்ள தமிழகம் உட்பட்ட பல மாநிலங்களில் இருந்தும் அரசியல் வாதிகள் நினைத்து இருந்தனர். ஆனால் யாரிடமும் மண்டியிட வேண்டிய அவசியம் இல்லாமல் பிஜேபி மெஜாரிட்டி பெற்று இருக்கிறது. இவ்விதம் ஒரு பெரும்பான்மையை பிஜேபி பெறாவிட்டால் செல்வி ஜெயலலிதா போன்றோரின் பேரங்களுக்குப் பணிய வேண்டி இருக்கும்; டாக்டர் அன்புமணியை அமைச்சரவையில் சேர்க்க வேண்டி இருக்கும். இப்போது இந்த நிர்ப்பந்தங்கள்- நெருக்கடிகள் - மிரட்டல்கள் எதுவும் தேவை இல்லை என்பது பிஜேபிக்கு ஒரு பெரிய நிம்மதிப் பெருமூச்சாகும் இல்லாவிட்டால் வாஜ்பாய் காலம் போல அவதிப் பட்டு இருக்க நேரிட்டு இருக்கும். இப்படிப்பட்ட நிலைமைகளிலிருந்து நரேந்திர மோடி காப்பாற்றப்பட்டு இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

தேர்தல் கணிப்புகளைச் செய்த பல்வேறு வகையினர் கர்நாடகாவில் பிஜேபிக்கு பெரும் அளவுக்கு இடங்கள் கிடைக்காது என்று வாதிட்டனர். காரணம் அண்மையில்தான் அங்கு சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆகவே இப்போதும் காங்கிரசே அதிகம் வெல்லும் என்று ஆரூடம் கணிக்கப்பட்டது. ஆனால் அந்த ஆரூடம் பொய்யானது. அங்கு பிஜேபி பதினேழு இடங்களில் வென்றது பிஜேபிக்கு இன்ப அதிர்ச்சியாகும். 

அதே போல் பிஜேபி உடைய பெரும்பான்மை பலத்தை உ. பி மற்றும் பீகாரில் அது பெறப்போகும் இடங்களின் எண்ணிக்கைகளின் அளவு உருவாக்கும் என்ற கணிப்பின்படி இவ்விரு மாநிலங்களிலும் மிகப்பெரும் வெற்றியை பிஜேபி வென்றெடுத்துள்ளது. பீகாரைப் பொறுத்தவரை ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாக் கட்சிக்கே அதிக இடங்கள் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டே இடங்களைத்தவிர பாக்கியை பாரதீய ஜனதா அள்ளிச் சென்றது. இந்த இரு மாநிலங்களில் மட்டுமே பிஜேபிக்கு கிட்டத்தட்ட நூறு இடங்கள் கிடைத்துள்ளன. 

அதே போல் உ பி போன்ற பெரிய மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் சமாஜ்வாடியும் தனது இடங்களை பிஜேபியிடம் இழந்தது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. உ பி யில் எண்பது இடங்களில் காங்கிரஸ் பெற்றது இரண்டே இடங்கள் மட்டுமே . அவையும் சோனியாவும் ராகுல் காந்தியும் பெற்ற இடங்கள் மட்டுமே. 

தலை நகர் டில்லியில் அண்மையில் ஒரு பெரும் எழுச்சி நடத்தியதாக அறியப்பட்டு நாற்பத்தி ஐந்து நாட்கள் மாநிலத்தை ஆட்சியையும் செய்த ஆம் ஆத்மிக் கட்சி , நாடெங்கும் 400 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியது. டில்லியில் சட்டமன்றத்தில் வென்ற ஆம் ஆத்மிக் கட்சியால் ஒரு பாராளுமன்ற இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை. ஒட்டு மொத்த இந்தியாவில் இவர்கள் முன்னணி வகிப்பது நான்கே இடங்கள்தான்.

நாடெங்கும் இப்படி பிஜேபி அலையோ அல்லது மோடி அலையோ வீசி இருந்தாலும் கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பிஜேபி குறிப்பிட்ட வெற்றியை ஈட்ட இயலவில்லை. அங்கெல்லாம் அலைகளின் ஒலி கேட்கவில்லை. அந்த அலை எங்கே போனது என்றும் தெரியவில்லை. 

அதேபோல் இடதுசாரிகளும் தங்களின் வழக்கமான தளம் உள்ள மாநிலங்களில் போதுமான அளவு வெற்றி பெற இயலவில்லை. இதற்குக் காரணம் , இடது சாரிகளைப் பொறுத்தவரை காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆகிய இரண்டு பெரிய கட்சிகளையுமே எதிர்த்தார்கள். இரண்டு பெரிய கட்சிகளையும் எதிர்க்கும் அளவுக்கு இடதுசாரிகளுக்கு பலம் இருக்கிறதா என்றால் இல்லை. இதை உணராமல் இரண்டு மலைகளுடன் மோதி தங்களின் வாக்குகளைப் பிரித்து, பிஜேபி வெற்றி பெற உதவினார்கள் என்றே சொல்ல வேண்டும். அத்துடன் இந்த தேர்தலில் மக்கள் எந்த சித்தாந்தங்களையும் விவாதித்து முன்னிலைபடுத்தி வாகளைக்கவில்லை. இதுவும் ஊடகங்கள் ஏற்படுத்திய ஆட்டைக் கழுதையாக்கிய விந்தை. 

தமிழகத்தைப் பொறுத்தவரை முன்பு சட்டமன்றத் தேர்தலில் செய்த அதே தவறை திமுக மீண்டும் செய்து ஒரு இடம் கூட வெற்றி பெற இயலாத நிலைக்குத் தன்னைத்தானே தள்ளிக் கொண்டது. கடைசி நேரத்தில் காங்கிரசை கழற்றி விட்டதற்கான விலையை திமுக கொடுத்து இருக்கிறது என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அது மட்டுமல்லாமல் மயிலாடுதுறை போன்ற தொகுதிகளில் கூட்டணியில் இருந்தாலும் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளருக்கு மனப்பூர்வமாக திமுகவினர் வேலை செய்யவில்லை ; வாக்களிக்கவில்லை என்கிற செய்திகளையும் கேட்கிறபோது அவர்களுக்கு இந்த தண்டனை தேவையானதே என்றே கருத வேண்டி இருக்கிறது. 

அதே நேரம் திமுகவின் இந்த தோல்வி, அதன் சூரியனின் அஸ்தமனமல்ல. இது போல பல வெற்றி தோல்விகளை சந்தித்தக் கட்சி; பெரும் தொண்டர் பலம் உள்ள கட்சி; மீண்டும் எழுந்து நின்று உதிக்கும் வல்லமையும் வாய்ப்பும் உள்ள கட்சி. சரியாக நடந்து கொண்டால் வரும் சட்டமன்றத்தில் பிரகாசிக்கும் வாய்ப்புள்ள கட்சிதான் திமுக. 

நன்கு ஆய்ந்து பார்த்தோமானால் அதிமுகவின் வாக்கு வங்கி அப்படியே உதவி இருக்கிறது. அதிமுகவுக்கு எதிரான வாக்குகள் பலவாறு சிதறி அதிமுகவை வரலாறு காணாத மாபெரும் வெற்றியைப் பெற வழிவகுத்து இருக்கிறது. அத்துடன் தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்தால் போடப்பட்ட 144 தடை உத்தரவும் அதைப் பயன்படுத்தி, பெருமளவில் பணப்பட்டுவாடா நடந்ததையும் வெட்கமின்றி தலைமை தேர்தல் ஆணையரே ஒப்புக் கொண்டார். நாமும் கண்ணால் பார்த்தோம். இந்த வெற்றியின் பின்னால் பணபலம் இருந்ததை மனசாட்சியுள்ளோரால் மறுக்க இயலாது. 

அத்துடன் பிஜேபி தலைமையில் தேமுதிக போன்ற அதிமுக எதிர்ப்புக் கட்சிகள் தமிழருவி மணியன் போன்ற அரசியல் முகவர்கள் மூலம் பேரம் பேசப்பட்டு தனி அணியாக உருவாக்கப்பட்டு, அதில் அடிப்படையில் வெட்டுப் பழி குத்துப்பழியாக அதுவரை அரசியல் நடத்திக் கொண்டிருந்த பாமகவும் இணைக்கப்பட்டது. இவர்களுடன் வைகோவுடைய மதிமுகவும் இணைந்து நின்றது. இந்த அணி அமைக்கப்பட்டதன் நோக்கமே அதிமுக மற்றும் பிஜேபியின் இரகசிய உடன்பாட்டின் ஒரு அங்கம் என்று ஒரு கருத்தும் நிலவுகிறது. இப்படி ஒரு அணியை அணையாக அமைத்து அதிமுகவுக்கு எதிரான ஓட்டுக்கள் திமுகவுக்கு விழாமல் தடுப்பதற்காகவே என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இதை நம்பவும் இடமிருக்கிறது.

இருந்தாலும், தமிழக அரசியலில் சில தேவையற்ற தொங்கு சதைகள் வெட்டி வீழ்த்தப்பட்டு இருக்கின்றன. அடிப்படை எதுவுமில்லாமல் அரசியல் கட்சி தொடங்கி, குறிக்கோளே இல்லாமல் கட்சி நடத்தி, கூத்து அடித்துக் கொண்டிருந்த நடிகர் விஜயகாந்தின் கட்சி, வேரடி மண்ணோடு வீழ்த்தப் பட்டு இருப்பது தமிழக அரசியலில் ஒரு மகிழத் தக்க விஷயம். அதே போல் ஒரு திராவிடக்கட்சியாக பரிணமித்து ஒரு இந்துத்வா கட்சியுடன் கூட்டணிவைத்த மதிமுகவும் அடையாளம் தெரியாமல் வீழ்த்தப்பட்டு இருப்பதும் ஒரு நல்ல விஷயமாகவே தோன்றுகிறது. இப்படிப் பட்டியலில் உள்ள தேவையற்ற அரசியல் கட்சிகளை அடையாளம் இல்லாமல் ஆக்கிய தமிழக வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இன்னும் இருக்கும் சிலரையும் வரும் தேர்தல்களில் புறக்கணித்து புறமுதுகிட்டு ஓட வைக்க வேண்டும்.

எப்படியானாலும் ஜனநாயக முறைப்படி வெற்றி பெற்றவர்களின் வெர்றியை அங்கீகரிக்கும் மரபுக்கு ஏற்ப நாமும் அவற்றை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். மக்கள் பெரும் நம்பிக்கையுடன் நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டுமென்ற ஆவலில் ஒரு மாற்றத்தை வேண்டி இவர்களுக்கு வாக்களித்து இருக்கிறார்கள். வெறும் மத நம்பிக்கைகளை மட்டும் வைத்து மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அமைதியைக் குலைக்கும் முயற்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளில் புதிய அரசு ஈடுபடவேண்டும். அதற்கு மாநிலத்தில் வெற்றி பெற்றுள்ள அதிமுக அரசு உறுதுணையாக இருக்க வேண்டும். வெற்றி பெற்ற இருவரும் ஒத்துழைத்து இந்த மாநிலத்துக்கான மின்சாரம், நீர்-ஆதாரம், மீனவர்கள் பிரச்னைகள், இலங்கை தமிழர், கச்சதீவு உட்பட்ட பிரச்னைகளில் ஒன்றுபட்டு மக்கள் நலமுடன் வாழ எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். 

வளர்ச்சியின் நாயகன் என்று வடிவமைக்கப்பட்டுத்தான் பா.ஜ.க.பிரதம வேட்பாளரை முன்னிறுத்தினார்கள். இந்த வளர்ச்சியின் நாயகனின் முன் அவரது புதிய அரசுக்கு பல சவால்கள் காத்து இருக்கின்றன. புதிய அரசு எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் யாவை என்று தனிப்பதிவாக எழுதுவோம். இப்போது இந்திய தேர்தல் நடைமுறை அங்கீகரித்த வெற்றியை நாமும் ஏற்போம். அன்பும் அமைதியும் நிலவும் இந்த நாட்டில் தொடர்ந்து அமைதியும் சகிப்புத்தன்மையும் சகோதரத்துவமும் வேற்றுமையில் ஒற்றுமையும் நிலவச் செய்ய இறைவனை வேண்டுகிறோம்.

அதிரைநிருபர் பதிப்பகம்

தேர்தல் கருத்துக் கணிப்புகள்- ஒரு பார்வை.. 9

அதிரைநிருபர் பதிப்பகம் | May 14, 2014 | , ,

“பறவைகள் பலவிதம் ! ஒவ்வொன்றும் ஒரு விதம் “  என்று ஒரு பழைய பாடல் நமது காதுகளில் ஒலித்த காலங்கள் உண்டு. இப்போது வெளிவந்து கொண்டிருக்கும் தேர்தல் கருத்துக் கணிப்புகளின் வகை வகையான - தினுசு தினுசான-  மாறுபட்ட கருத்துக்களைக் காணும்போது அந்தப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

கடந்த 12/ 05/ 2014  ஆம் தேதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் இறுதிக் கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்பு இதுவரை கருத்துக் கணிப்புகளுக்குத தடை விதித்திருந்த தேர்தல் ஆணையம்,  தனது தடையை விலக்கிக் கொண்டது.  இதை முன்னிட்டு Flood Gate  opened  என்று சொல்லப்படுவதுபோல்,  இந்தியாவின் ஒவ்வொரு ஊடகங்களும் ‘காய்ந்த மாடு கம்பில் விழுவது போல்’  கருத்துக் கணிப்புக்களை வெளியிட்டன.

ஒவ்வொரு ஊடகங்களும் அவைகளைப்  பற்றி தங்களது வாதப் பிரதிவாதங்களை வெளியிட்டன; ஒளிபரப்பின ; இன்னும் பரப்பிக் கொண்டு இருக்கின்றன. பொதுவாக சொல்லப்போனால் தேர்தலின் உண்மை முடிவுகள் வருவதற்கு இன்னும் அதிக நாட்கள் இல்லை என்கிற நிலையிலும் மக்களின் உண்மையான தீர்ப்பு என்ன என்று தெரியவரப் போகிறது என்கிற நிலைமையிலும் இந்த ஊடகங்களும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் போடும் வாய்ச்சண்டைகள் நமது காதுகளைக் கிழிக்கின்றன.

உதாரணமாக  கீழே காணப்படும் பல்வேறு வகையான கருத்துக் கணிப்புகளின் பட்டியல் நமக்கு ஒரு விஷயத்தை ஒட்டு மொத்தமாக உணர்த்துகிறது. அனைத்து கணிப்புகளும் பாரதீய ஜனதா ஆட்சியமைக்கும் என்கிற அடையாளத்தைச் சொல்கின்றன. அல்லது சொல்லத் துடிக்கின்றன.

Survey
NDA
UPA
AAP
OTHERS
TIMES NOW- ORG INDIA
249
148
O
146
AB NEWS
281
97
4
161
CNN
270- 282
92- 102
0
120
CHANAKYA
340
70
0
133
INDIA TV- CVOTER
289
101
5
148
INDIA TO-DAY CICERO
261- 283
110- 120
0
150- 162

ஆக மொத்தத்தில் ஒரே பார்வையாகப் பார்க்கும் போது இந்தக் கருத்துக் கணிப்புகள் மோடிக்கு முடி சூட்டிப் பார்க்க ஆசைப்படுவதாகத் தெரிகிறது என்பது உண்மைதான்.

ஆனால் கடந்த காலத்தில் இப்படி நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளின் வரலாற்றைப் பார்க்கும் போது மிக அதிகமாக இத்தகைய கருத்துக் கணிப்புகள் தொடர்ந்து  பொய்த்துப் போனதைத்தான் நமக்குச் சொல்லிக் கொண்டு இருக்கின்றன. இதே போல்தான் கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் இந்தியா ஒளிர்கிறது என்கிற கோஷத்தை முன்வைத்து பிஜேபி பெரும் ஊடகப் பிரச்சாரங்களை செய்தது. நாடெங்கும் இரத யாத்திரைகள் நடத்தப்பட்டன. அத்வானிதான் அடுத்த பிரதமர் என்று நாடே நம்பத்தொடங்கியது. ஆனால் நடந்ததோ அத்வானிக்கு பட்டை நாமம். காங்கிரஸ் தனது கூட்டணிக் கட்சிகளின் ஆதவுடன் மீண்டும் அரியணை ஏறியது.

கடந்த 2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்திக்கும் என அனைத்து கருத்துக் கணிப்பு தகவல்களும் தெரிவித்தன. ஆனால் அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

அதேபோல் 2009ஆம் ஆண்டு தேர்தலிலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் என கருத்துக் கணிப்பு தகவல்களில் தெரிவிக்கப்பட்டன. ஆனால் அந்த தேர்தலில், முந்தைய தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளை விட 2 மடங்கு அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதுபோல்தான் இந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெறாது என கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவதாக இத்தகைய கருத்துக் கணிப்புகள் அறிவியல் ரீதியாக நடத்தப்படுகிறதா என்பது மிகப்பெரும் சந்தேகத்துக்குரியது. இப்படிப்பட்ட கருத்துக் கணிப்புகளுக்கென்று சில அறிவியல் ரீதியான முறைகள் இருக்கத்தான் செய்கின்றன என்பதை மறுக்க முடியாது. அதே நேரம் அத்தகைய முறைகளை இந்த ஊடகங்கள் பயன்படுத்தி இத்தகைய முடிவுகளைத் தருகின்றனவா என்பது கேள்விக்குரியது. இந்தக் கேள்வியை நாம் எழுப்பக் காரணம்  கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பே ஊடகங்கள் இதுபற்றிய கருத்துத் திணிப்புகளை சிறுக சிறுக செலுத்தத் தொடங்கிவிட்டன. இதற்கு முக்கியக் காரணம் ஊடகங்கள் பலவும் கார்ப்பரேட் கம்பெனிகள் பலவற்றின் பங்குத்தொகைகளால் நடத்தபபடுகின்றன. தங்களின் எண்ணங்களை மக்கள் மீது திணித்து இலாபத்தை அறுவடை செய்ய நினைப்பது கார்பரேட் கம்பெனிகளின் வர்த்தக இயல்பு ; நடைமுறை.

இரண்டாவதாக, இத்தகைய கணிப்புகள் இந்திய சூழலை அடிப்படையாக வைத்து நடத்தப்படுகின்றனவா என்பதும் கேள்விக்குறி. அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் வடிவமைத்துக் கொடுக்கிற மாதிரிகளில் ( Samples) இவர்கள் நடத்தும்  கருத்துக் கணிப்புகள்
  • இந்தியாவின் பரவலான படிப்பறிவற்ற , கிராமங்களில் வசிக்கும் , யார் எதை சொன்னாலும் நம்பும் மனப்பான்மையுடைய,
  • கடவுளின் பெயரால் சத்தியம் செய்துகொடுத்தால் அறிவு சொன்னால் கூட கேட்கக் கூடாது என்று எண்ணும் மக்களைக் கொண்ட,
  • நடு இரவில் பணம் கொடுத்தால்   மனம் மாறி வாக்களிக்கிற மக்களைக் கொண்ட ,
  • அண்ணன் சொன்னால் கேட்கவேண்டும் – அடுத்தவீட்டுக்காரன் சொன்னால் கேட்க வேண்டும் என்று சுய புத்தி இல்லாமல் வாழும் மக்கள் உடைய நாட்டில் ,

அவற்றை எல்லாம் கவனத்தில் எடுத்து இந்தக் கருத்துக் கணிப்புகள் நடத்தபப்ட்டு இருக்குமா என்பதும சந்தேகத்துக்குரியது.

மூன்றாவதாக, கடந்த இரு தேர்தல்களிலும் கருத்துக் கணிப்பை ஊரெங்கும் தம்பட்டம் அடித்து வெளியிட்ட ஊடகங்கள், அத்தைகைய தங்களின் கணிப்புகள் பொய்த்துப் போனதும், தங்களின் கருத்துக் கணிப்புகள் பொய்த்துப் போனதற்கான காரணங்களை  வெளியிட்டுத் தங்களின் பத்தினித் தன்மையை கடந்தகாலங்களில் எப்போதாவது நிருபித்தனவா? இன்று வெளியிடப்பட்டு இருக்கும் இவ்வளவு கருத்துக் கணிப்புகளும் ஒருவேளை, மக்களால் தூள்தூளாக நொறுக்கப்பட்டால் தவறான கருத்துக் கணிப்புகளை வெளியிட்டதற்காக இந்த ஊடகங்கள் மக்கள் முன்பு மன்னிப்புக் கோரும் குறைந்த பட்ட நாகரிகம் படைத்தவையாக இருக்குமா?

கருத்துக் கணிப்பு மூலம் ஒரு விஷயத்தை மக்கலின் மனதில் புராஜக்ட் பண்ண முடியுமென்று அண்மைக்கால ஊடக நடப்புகள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு உற்பத்தி செய்யப்பட்ட பொருளை விற்பனை செய்வதற்காக விளம்பரக் கம்பெனிகள் எவ்வாறான யுக்திகளை எல்லாம் கையாளுமோ அத்தகைய முயற்சிகள் அனைத்தும் பல கோடிக்கணக்கான ரூபாய் செலவில் – ஆர் எஸ் எஸ்  ஆதரவில் – கார்பரேட் கம்பெனிகளின் நிதி ஆதாரங்களுடன் நடத்தப்பட்டு மோடியை முன்னிறுத்தவும் மக்களின் மனதில் இடம்பெற வைக்கவும்  மேற்கொள்ளப்பட்டன. கோல்கேட் பற்பசையின் ஜெர்ம் அழிப்பைவிட    பெப்சொடேன்ட் பற்பசையின் ஜெர்ம் அழிக்கும் சக்தி அதிகம் என்று நிறுவ முயற்சிக்கும் விளம்பர யுக்திக்கும் மோடி முன்னிலைப் படுத்த பட்டதற்கான முயற்சிக்கும் பெரும் வித்தியாசம் இருப்பதாக நாம் நினைக்கவில்லை. ஆகவே கருத்துக் கணிப்புகள் விளம்பர யுக்திகளின் ஒரு வகையே என்பதாய் நாம் குறிப்பிட விரும்புகிறோம்.

ஆனால் அதையும் தாண்டி கடந்த பத்து ஆண்டுகளால காங்கிரஸ் ஆட்சியில் இருந்து விட்டதால் , ஆட்சியில் இருந்த கட்சியின் மீது மக்களுக்கு இயல்பாகவே ஒருவித வெறுப்பு வருவது இயல்பு என்கிற உணமையையும் நாம் மறுக்க இயலாது. இதனால் மட்டுமல்லாமல்  இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியில் இருந்தகட்சி தோல்வியைத் தழுவி மாற்று அரசு ஏற்பட்டு இருக்கிறது என்கிற கடந்தகால  நிகழ்வுகளையும் நாம் ஒதுக்கிட இயலாது. மாற்றங்கள்  வேண்டும் மாற்றித்தான் பார்ப்போமே என்று மக்கள் மனம் மாறுவதும் தவிர்க்க இயலாத தன்மை என்பது மட்டுமல்ல- ஜனநாயகத்தின் முக்கிய அம்சமும் அதுவேதான். ஆகவே மாற்றம் ஏற்பாடவே ஏற்படாது என்று தள்ளவும் இயலாது.

தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக 26 இடங்களைக் கைப்பற்றும் என்று சி- ஓட்டர் நிறுவனத்தின் கருத்துக் கணிப்பு காட்டுகிறது. திமுகவுக்கு 6 இடங்களே கிடைக்குமென்று அது மேலும் தெரிவிக்கிறது. பரிதாபத்துக்குரிய கூட்டணி என்று பொதுவாகப் பார்க்கப்பட்ட பாரதீய ஜனதா கூட்டணி  5 இடங்களில் வெற்றி பெற்று அவற்றில் பாஜக 2 தேமுதிக 1 பாமக 1 மதிமுக 1 ஆகியவை வெற்றி பெறும் என்றும மூக்கில் விரலை வைக்கும்படி காங்கிரஸ் கட்சியும் ஒரு இடத்தில் வெற்றி பெறுமென்று இந்தக் கணிப்பு கூறுகிறது.

சி என் என்- ஐ பி என் டிவி வெளியிட்ட கருத்துக் கணிப்பில் அதிமுகவுக்கு 22 – 28இடங்களும் திமுகவுக்கு  7-11 இடங்களும் பிஜேபிக்கு  4- 6  இடங்களும் கிடைக்குமென்று கூறுகிறது.

ஹெட்லைன்ஸ் டுடே டிவி வெளியிட்ட கருத்துக் கணிப்பில் அதிமுகவுக்கு 20 – 24 இடங்களும் திமுகவுக்கு  10 -14 இடங்களும் பிஜேபிக்கு  5 இடங்களும் காங்கிரசுக்கு  1 இடமும் கிடைக்குமென்று கூறுகிறது.

டைம்ஸ்- நவ் டிவி வெளியிட்ட கருத்துக் கணிப்பில் அதிமுகவுக்கு 31 இடங்களும் திமுகவுக்கு 7 இடங்களும்  காங்கிரசுக்கு 1 இடமும் வழங்கப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது இந்திய அளவில் மோடியும் தமிழக அளவில் மோடியின் சகோதரியும் பெரும் வெற்றி பெறுவார்கள் என்பதுதான் இந்த கருத்துக் கணிப்புகளின் பரவலான பொதுவான அம்சம்.

நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை),  நாட்டில் என்ன நடந்திருக்கிறது என்று தெரிந்துவிடும். அதற்கு முன் இரண்டு மூன்று நாட்களாக இந்தக் கருத்துக் கணிப்புகளால் என்ன நன்மை என்றால் கனவுகள் ! கனவுகள்!  கனவுகள்! தான்.

ஒருவேளை இந்த கணிப்புகள் உண்மையாக மாறும் விதத்தில் மக்களின் தீர்ப்பு இருக்குமானால் இந்திய அளவில் முஸ்லிம் உட்பட்ட சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப் பட்ட மக்களிடையே ஒரு வித பதட்டமும் அச்சமும் ஏற்படும் என்பது உண்மை. ஏற்கனவே  சமுதாயத்தில் இந்தப் பிரிவு மக்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. இவர்களை இன்னும் ஒடுக்க வேண்டுமென்ற மனநிலை படைத்தவர்கள் ஆட்சிக்கு வரும் பட்சத்தில்  இந்தக் கணிப்புகள் ஒருவேளை உண்மையாகி விட்டால் எதிர்கால சந்ததிகளின் வாழ்வும் நாட்டின் அமைதியும் என்ன ஆகுமோ என்று அச்சபடுவோர் அநேகர்.

ஆனால் இந்தியாவின் மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்கள் உட்பட்ட அனைவரும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வரம்புகளால் பாதுகாக்கபப்ட்டவர்களே. அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றும் அளவுக்கு யாருக்கும் துணிவும் வராது; அது இயலவும் செய்யாது என்று நம்புவோம்.

இதற்கு முன் பிஜே பி ஆட்சி செய்தபோது கூட அடிப்படையான சில பழமை வாதங்கள் பேசப்பட்டனவே தவிர, நடைமுறைபடுத்த ஆட்சி செய்தோருக்கு துணிவு வரவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை பல்வேறு கலாச்சார மொழிவாரி உணர்வுகளைப் புரிந்து நடத்தப்படும் ஆட்சியால் மட்டுமே நாட்டில் அமைதியான நிலையை ஏற்படுத்த முடியும். அமைதி குலையும் வகையில் அரசின் நடவடிக்கைகள் அமையுமானால் நாடு , பொருளாதாரச் சீரழிவு உட்பட்ட பல சீரழிவுகளை சந்திக்க நேரிடும். இதை அரசியல் களங்கள் உணர்த்தா விட்டாலும் ஆட்சிக் கட்டில் உணர்த்தவே செய்யும். பொறுப்பற்றுப் பேசிக் கொண்டு பொடுபோக்காகத் திரிந்து கொண்டிருக்கும் ஒருவனிடம் பொறுப்புக் கொடுக்கப்பட்டால் அவன் திருந்தி வாழ்ந்த வாழ்வின் உண்மைகளும் உள்ளன.

ஆகவே நாம் நினைப்பது நல்லதையே நினைப்போம்; நம்புவோம்.  அதைவிட முக்கியமாக , நாட்டில் நல்லாட்சி ஏற்படவும் அமைதியான சூழ்நிலையில் அனைத்து மக்களும் வாழவும் வகை ஏற்படுத்தும் படி எல்லாம் வல்ல இறைவனிடம் இரு கரம் ஏந்தி துஆச் செய்வோம்.

அதிரைநிருபர் பதிப்பகம்

நத்தை போல் நகர்ந்த சொத்து வழக்கு, சொத்தை வழக்கா? 11

அதிரைநிருபர் பதிப்பகம் | April 04, 2014 | , , ,

"மக்கள் தொண்டே மகேசன் தொண்டு"

"என் கடன் பணி செய்து கிடப்பதே"

"உங்களுக்காக உழைக்க எங்களுக்கு உத்தரவிடுங்கள்"

தேர்தல் நேரத்தில் ஒலிபெருக்கிகள் மூலம் நமது காதில் விழும் கோஷங்களும் கண்ணில் படும் சுவரொட்டி வாசகங்களும்தான் அவை. இந்த கோஷங்களைத் தொடர்ந்து கோடிகள் கொட்டப்படுகின்றன. இப்படிக் கொட்டப்படும் கோடிகள் கோஷங்களை எழுப்பும் கொள்கைச் சிங்கங்களின் முதலீடுகள்தான். பல நூறு கோடி முதலீடு, பல்லாயிரம் கோடிகளாகத் திரும்பக் கிடைக்கும் இலாபகரமான வணிகம், அரசியல்- ஆட்சி- அதிகாரம் ஆகியவைதான். இதன் ஒரு சிறு காட்சிதான் நமது கண்முன்னே கடந்த ஐந்து வருடத்துக்குமுன் இத்துப் போன செருப்பு அறுந்து போனால், அதை எடுத்து தினமலர் பேப்பரில் வைத்து சுற்றி கம்புக்கட்டில் வைத்துக் கொண்டு சென்றவர்கள் எல்லாம் இன்று ஏ/சி இணைத்த இன்னோவா காரில் போவதுதான். சிங்கிள் டீக்காக பிடரியை சொரிந்து கொண்டு முச்சந்தியில் நின்றோர், இன்று தங்கத் தாம்பாளத்தில் தயிர் சோறு சாப்பிடும் நிலைகள்தான். அரசியல் அதிகாரம் என்பது ஒரு கற்பகத்தருவாக இன்று கனி தருகிறது. 

சாதாரண வார்டு கவுன்சிலர் முதல் அமைச்சர் நிலைவரை மட்டுமல்ல எதிர்க் கட்சி எம் எல் ஏ க்களாக இருந்தாலும் கூட பொருளாதார ரீதியில் தங்களின் நிலைகளை உயர்த்திக் கொள்ளும் மந்திரக் கயிறும் அலாவுதீன் விளக்கும் அலிபாபா குகையும்தான் அரசியல் அதிகாரம் என்று ஆகிவிட்டது. ஒரு தேசியக் கட்சியின் மாநிலத்தலைவராக மூன்று ஆண்டுகள் பணியாற்றியவர், பதவியை விட்டுப் போகும்போது அவருக்கு சொந்தமாக ஒரு தொலைக் காட்சி சேனல் , ஒரு பொறியியல் கல்லூரி, ஒரு கலைக் கல்லூரி, நிறைய நிலபுலங்கள் ஆகியவை சொந்தமாகிப் போகின்றன. வேலை இல்லாமல் வேட்டியாகத் திரிந்து கொண்டிருந்த ஒருவர் ஒரு கட்சியும் அதற்கு ஒரு கொடியும் வைத்துக் கொண்டு,ஒரு லெட்டர் பேடையும் பத்து வெத்து வேட்டுக்களையும் கூட வைத்துக் கொண்டு வருகின்ற தேர்தலில் எங்கள் ஆதரவு இன்னாருக்கே என்று அறிவிக்கிறார். முதலமைச்சரைக் கூட சந்தித்து மாலை போட்டு ஆதரவு தெரிவிக்கிறார். அப்போது எடுத்த போட்டோவை பழனி சித்த வைத்தியர்கள் போல் பலபேர்களிடமும் காட்டி தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாக பிலிம் காட்டி பணம் பண்ணுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அரசியல்வாதி என்று அழைக்கப்படுவது ஒரு ஐ ஏ எஸ் படித்த அதிகாரிக்கு இருக்கும் மதிப்பைவிட அதிகம். அரசியலில் இருப்பது இப்படி ஒரு அளவிடமுடியாத வருமானத்தைத தரும் தொழிலாக மாறிப் போய்விட்டது. 

அண்மையில் பத்திரிகையில் வந்த தலைப்புச் செய்திகளில் ஒன்று மத்திய அமைச்சர் கபில் சிபிலி ன் சொத்து மதிப்பு, கடந்த முறை அவர் கொடுத்திருந்த மதிப்பில் இருந்து மூன்று மடங்கு அதிகமாகிவிட்டதாகச் சொன்னது. பாராளுமன்றத்தின் சபாநாயகராக இருந்த (இருக்கும்) திருமதி மீரா குமார் அவர்களின் சொத்து மதிப்பு சிலபல கோடிகள் அண்மையில் அதிகமாகிவிட்டன என்றும் பத்திரிகைகள் படம் போட்டுக் காட்டின. இவர்கள் இருவரும் வெறும் உதாரணங்களே. ஆனாலும் இவர்கள் பதவிக்கு வரும் முன்பே பணக்காரர்கள்தான். அத்துடன் தாங்கள் வகிக்கும் பதவிக்குரிய முழுச் சம்பளம் மற்றும் சலுகைகளை பெற்றுக் கொண்டவர்கள். மேலும் உயர்ந்து கொண்டே வரும் நிலம் முதலிய அசையாச் சொத்துக்களின் மதிப்புக் கூடுதல் இவர்களின் சொத்துக்களின் மதிப்பையும் கூட்டிக் காண்பிக்க சாத்தியக் கூறுகள் உள்ளன. 

ஆனால் , பதவிக்கு வரும் முன்பு தான் பணக கஷ்டத்தில் இருப்பதாக பத்திரிகைகளில் பேட்டி கொடுத்த – பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகொயோர் வசூல் செய்து கொடுத்த சுமார் ஒன்றரைக் கோடி ரூபாயில்தான் செலவுகளை சமாளித்து வந்ததாகவும் சொல்லி, தேர்தலை எதிர் கொண்டு வெற்றி பெற்றதும் அரசின் சலுகைகள் எதுவும் தனக்கு வேண்டாமென்றும் அடையாளமாக ஒரே ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெற்றுக் கொண்டு முதலமைச்சர் பணியை மக்களுக்கானத் தொண்டாக செய்வதாக அறிவித்த இன்றைய தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் தனது வருமானத்துக்கும் அதிகமாக அளப்பரிய அளவு சொத்துக்களை வாங்கிக் குவித்துப் போட்டு இருப்பதாக நீண்ட காலமாக ஒரு வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த கஜினி முகமது காலத்து வழக்கின் வரலாறு பெரும்பாலும் அனைவரும் அறிந்ததுதான்.

இதே போல் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்குகள் திமுக அமைச்சர்களாக இருந்த பொன்முடி, பொங்கலூர் பழனிச்சாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தென்னரசு ஆகியோர் மீதும் நடைபெற்று வருகின்றன. ஆனால் அந்த வழக்குகளின் சட்டபூர்வமான ஆட்சேபத்துக்குரிய சொத்துக்களின் மதிப்பு பெரிய மதிப்பு வாய்ந்தவை அல்ல. நெற்றிக் கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்கிற அடிப்படையில் சிறிய அளவு குற்றமானாலும் குற்றம் குற்றமே . அவை ஒரு நீதிமன்றத்தில் அதனதன் நியமங்களுக்கு உட்பட்டு நடைபெற்று வருகின்றன. 

ஆனால் செல்வி ஜெயலலிதா அவர்கள் மீதான வழக்கு பல பரிணாமங்களைக் கொண்டது; பதினேழு ஆண்டுகள் வயது நிரம்பிய வழக்கு அது. பலமுறை இழுத்தடிக்க்கப் பட்டு தா! தா! வாய்தா என்று இந்த வழக்கே ஒரு தாத்தா ஆகும் நிலைக்கு வந்துவிட்டது. அந்த வரலாற்றை சுருக்கமாகப் பார்க்கலாம். 

நவீனகால நாரதரான, டாக்டர் சுப்பிரமணிய சுவாமி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 1996 ஜூன் 14ம் தேதி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் 1.7.1991 முதல் 30.4.1996 வரை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும் அதுபற்றி விசாரிக்க உத்தரவிடவேண்டுமேன்ரும் கேட்டுக் கொண்டு இருந்தார். அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் விசாரணை நடத்தும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதை அப்போது தலைமை போலீஸ் அதிகாரியாக இருந்த லத்திகா சரண், புகார் மீது விசாரணை நடத்தும்படி போலீஸ் அதிகாரி வி.சி. பெருமாளுக்கு 26.6.1996 அன்று உத்தரவிட்டார். அவர் விசாரணை அறிக்கை கொடுத்தபின், இவ்வழக்கு தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி 1997 ஜூன் 4ம் தேதி சென்னை தனி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

மறுநாள், வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன்,இளவரசி ஆகியோருக்கு சம்மன்கள் அனுப்பப்பட்டன. 1997 அக்டோபர் 21ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 259 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். அதில், 39 சாட்சிகளைத்தவிர மற்றவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் 2001 மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த செல்வி ஜெயலலிதா, தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். அப்போது சென்னையில் நடந்து வந்த விசாரணையில் ஏற்கனவே சாட்சியம் அளித்த 76 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்து, 2002 நவம்பர் முதல் 2003 பிப்ரவரி 21ம் தேதி வரை விசாரணை நடந்தது. அதைத்தொடர்ந்து குற்றவியல் நடைமுறைச் சட்டம் 313 விதியின்படி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகாமல், நீதிமன்ற உத்தரவின்படி நேரில் சென்று கேள்வி கேட்டு வாக்குமூலம் பெறப்பட்டது.

இதனிடையே குற்றம் சாட்டப்பட்டவரின் கீழே உள்ள நீதி நிர்வாகத்தில் இந்த வழக்கை நடத்தினால் உரிய நீதி கிடைக்காமலிருக்க வாய்ப்புக்கள் உள்ளன என்பதை சுட்டிக்காட்டி, இவ்வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றம் செய்யக்கோரி திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதையேற்று சென்னை தனி நீதிமன்றத்தில் நடந்து வந்த விசாரணைக்கு 2003 பிப்ரவரி 28ம் தேதி இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இம்மனுவை விசாரணை நடத்திய நீதிமன்றம், இவ்வழக்கை பெங்களூருக்கு மாற்றம் செய்து 2003 நவம்பர் 18ம் தேதி உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று சென்னை தனி நீதிமன்றம், வழக்கை பெங்களூருக்கு மாற்றம் செய்வதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை 2004 செப்டம்பர் 10ம் தேதி பிறப்பித்தது. அதைத்தொடர்ந்து கர்நாடக அரசின் சார்பில் தனி நீதிமன்றம், தனி நீதிபதி, தனி அரசு வழக்கறிஞர் என நியமனம் செய்யப்பட்டு 2005 பிப்ரவரி முதல் விசாரணை நடந்து வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் உள்ளன. அவை பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 

சொத்துக்குவிப்பு வழக்கு 1.7.1991க்கு முன் இருந்த சொத்துக்கள் 1.7.1991 முதல் 30.4.1996 வரை சேர்த்த சொத்துக்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளன.

வழக்கு காலத்திற்கு முன் ரூபாய் 2 கோடியே ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 953 மதிப்புள்ள சொத்து இருந்ததும், வழக்கு காலத்திற்கு பின் சொத்து மதிப்பு ரூபாய் 64 கோடியே 42 லட்சத்து 89 ஆயிரத்து 616 சேர்த்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

வழக்கில், குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளவர்களில் முதல் குற்றவாளியாக காட்டப்பட்டுள்ள செல்வி ஜெயலலிதா தவிர சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ரத்த சம்பந்தமான உறவினர்கள் ஆவார்கள். (நன்றி: தினகரன், முரசொலி, முன்னாள் தினத்தந்தி, மாலைமுரசு, நக்கீரன் )

இந்த வழக்கின் அடிப்படை, முதல் குற்றவாளியும் இரண்டாவது குற்றவாளியும் குற்றம் இழைக்கப்பட்டகாலத்தில் ஒரே வீட்டில் குடியிருந்தார்கள் என்பதாகும். இதை மெய்ப்பிப்பதற்காக 9 ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், 1 முதல் 4 வரையிலான குற்றவாளிகள் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்கள் என்பதற்கான பல கம்பெனிகளின் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. அதன் மூலம் நான்கு குற்றவாளிகளும் கூட்டுச்சதி செய்து, முதல் குற்றவாளி முதலமைச்சராக இருந்தபோது, அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவருக்காகவும், அவரைச்சார்ந்த மற்ற 3 குற்றவாளிகளூக்காகவும் சேர்த்து தங்களது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்திருக்கிறார்கள் என்பதுதான் இந்த வழக்கின் நோக்கமும் அடிப்படையுமாகும். 

இந்த வழக்கில் பல தடைகளுக்குப் பிறகு அரசு வழக்கறிஞர் பவானிசிங் கடந்த வாரம் ஆஜராகி, ஏற்கனவே அளிக்கப்பட்ட சாட்சியங்களின் விவரத்தை எடுத்துரைத்தார். அப்போது, ஜெயலலிதாவிற்குச் சொந்தமான கொடநாட்டில் 800 ஏக்கர் நிலமும், ஊத்துக்கோட்டையில் 200 ஏக்கர் நிலமும், 25 ஏக்கர் பங்களா நிலமும், உள்ளதற்கான சாட்சியங்களை நீதிமன்றத்தில் அவர் படித்துக்காண்பித்தார்.

‘’அந்த நிலங்களை, அப்போது அரசுப்பணியில் இருந்த வேளாண்மைத்துறை அதிகாரி ராதாகிருஷ்ணன் என்பவரை முறைகேடாக சொந்தத்தேவைகளுக்குப் பயன்படுத்தி, நிலங்களை அவர் ஆய்வு செய்த பிறகு வாங்கப்பட்டுள்ளன’’ என்றும் பவானிசிங் குறிப்பிட்டார். மேலும், வாகனங்கள் வாங்கிக்கொடுத்தவர்கள் அளித்த சாட்சியங்களின் விவரத்தையும் பவானிசிங், நீதிபதியிடம் எடுத்துரைத்தார்.

அப்போது அவர், ‘’வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப் பட்டுள்ளவர்களின் பொருளாதார நிலைக்கும், அவர்கள் வாங்கிக்குவித்துள்ள நிலங்களுக்கும் துளியும் சம்பந்தமில்லை. இவை அனைத்தும் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதன் மூலம் வாங்கப்பட்ட நிலங்கள் என்பது சாட்சியங்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது’’ என்று வாதிட்டார்.

‘’1991 ம் ஆண்டு ஜூலைத்திங்கள் முதல் 1996 ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் வரையிலான அந்த ஐந்தாண்டுகளில் ஜெயலலிதா உள்ளிட்ட குற்றவாளிகள், சேர்த்த சொத்துக்களின் அன்றைய மதிப்பு பல லட்சங்கள். இன்று அதன் மதிப்பு 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பெருகி உள்ளது’’ என்றும் பவானிசிங் தனது வாதத்தின் போது சுட்டிக்காட்டினார்.

வழக்கின் பிராதானமான அம்சம், ஒரு பிரம்மாண்டமான ஆடம்பரத் திருமணம் ஆகும். ஒரு மங்களகரமான திருமணம் இவ்வளவு சட்டச்சிக்கலை ஏற்படுத்துமென்று நீதி நியாயங்களை மீறி உற்சாகமாக இந்தத்திருமணத்தை முன்னின்று நடத்திய யாரும் சிந்தித்துப் பார்க்கவில்லை. ஓட்டு மொத்த அதிகார வட்டம் ஒருங்கிணைந்து இந்தத் திருமணத்தை நடத்தியது. மூன்றாவது குற்றாவளியாகச் சேர்க்கப்பட்டுள்ள வி.என்.சுதாகரனை முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள செல்வி ஜெயலலிதா, தனது வளர்ப்பு மகனாக ஏற்றுக் கொண்டு பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து வைத்தார். இந்தத் திருமணத்திற்காக பல கோடி ரூபாய்கள் செலவழிக்கப்பட்டன. இந்த வழக்கில் இந்த திருமணத்துக்கான செலவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. 

அரசு வழக்குரைஞரான பவானி சிங் உடைய உதவியாளர் வழக்கறிஞர்முருகேஷ் மரடி, பல ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட சாட்சிகளின் விபரங்களை நீதிபதி முன்பு படித்துக் காண்பித்தார். அதில், குற்றாளிகள் பல நிறுவனங்களை வாங்கியதற்கான ஆவணங்கள் குறித்தும் , அந்த நிறுவனங்களின் பெயரிலேயே பல அசையாச்சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ள விவரங்களையும் அவர் குறிப்பிட்டார். 

குறிப்பாக இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு சொந்தமான சென்னையை அடுத்த சிறுதாவூரில் 22 ஏக்கர் நிலத்தை சுதாகரன் மிரட்டி வாங்கியது குறித்து அளிக்கப்பட்ட சாட்சியத்தினை நீதிமன்றத்தில் படித்துக் காண்பித்தார்.

அடுத்து, சசிகலாவும், இளவரசனும் சென்று நீலாங்கரையில் உள்ள ஒரு பங்களாவை சுற்றிப்பார்த்து அதை வாங்கியது சம்பந்தமாக அந்த இடத்தின் உரிமையாளர் வழங்கியிருந்த சாட்சியத்தை படித்துக் காண்பித்தார்.

அதே போன்று நீலாங்கரையில் நீச்சல் குளம் உள்ளிட்ட ஒரு பங்களா அமைந்த இடத்தினை சுதாகரன் வாங்கியது சம்பந்தமாக அந்த இடத்தின் உரிமையாளர் அளித்திருந்த சாட்சியத்தையும் நீதிமன்றத்தில் பவானிசிங் படித்தார்.

மேலும், ஜெயலலிதா கொடநாட்டில் வாங்கிய 800 ஏக்கர் நிலத்தினை சீரமைக்க வேளாண்மைத்துறை அதிகாரி ராதாகிருஷ்ணனை அழைத்தது பற்றி அந்த அதிகாரியே சாட்சியம் அளித்துள்ளதைப் படித்து காண்பித்தார்.

ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி செல்வி ஜெயலலிதாவும் மற்றும் குற்றம் சாட்டப் பட்டுள்ள சசிகலா உட்பட மற்றவர்களும் வாங்கி குவித்ததாக அரசு வழக்கறிஞர் பவானி சிங் பட்டியலிட்ட சொத்துக்களில் சில. இதய வியாதி உள்ளவர்கள் தயவு செய்து படிக்க வேண்டாம். 
  • போயஸ் தோட்டத்தில் உள்ள வீடு 7.30 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது. 
  • வாலாஜா பாத்தில் 600 ஏக்கர்
  • சிறுதாவூரில் 25 ஏக்கர் அளவில் ஒரு பங்களா 5 .40 கோடி.
  • நீலாங்கரையில் 2 ஏக்கர்.
  • நமது எம்ஜியார் பத்திரிகையின் சொத்து மதிப்பு 2. 13 கோடி.
  • கொடநாட்டில் 800 ஏக்கர் மற்றும் பங்களாக்கள் ( இங்கு ஒரு ஏக்கர் ரூபாய். -5 -கோடி மதிப்பு இருக்கும் . இது மட்டுமே 4 ஆயிரம் கோடியைத் தாண்டும். இது கூட ஒரு உத்தேசமான மதிப்பே.
  • காஞ்சிபுரத்தில் 200 ஏக்கர்.
  • கன்னியாகுமரியில் மீனங்குளம், சிவரங்குளம், வெள்ளாங்குளம் பகுதியில் 1190 ஏக்கர்.
  • தூத்துக்குடிமாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 200 ஏக்கர்.
  • ரேவரே அக்ரோ பாரம் என்ற பெயரில் 100 ஏக்கர்.
  • 30 வகையான மற்றும் வண்ணங்களில் விதவிதமான கார்கள், வாகனங்கள்.
  • ஹைதராபாத்தில் திராட்சைத் தோட்டம்.
  • வழக்கில் குற்றம் சாட்டபப்ட்டுள்ளவர்களுக்கு சொந்தமான கம்பெனிகளின் முதலீட்டு மதிப்பு 3.05 கோடி.
தமிழக அரசால் நியமனம் செய்யப்பட ஜெயபால் என்கிற மதிப்பீட்டாளர் கொடுத்துள்ள கணக்குப்படி , ஈக்காட்டுத் தாஙளில் 20.43 லட்சம், சோழிங்க நல்லூரில் 29.59 லட்சம் மயிலாப்பூரில் 53.11 லட்சம் , நந்தனம் பட்டம்மாள் தெருவில் 80.37 லட்சம் , கிண்டி திரு. வி. க. தொழில் பேட்டையில் சொத்து மதிப்பு 77 லட்சம் என்றெல்லாம் கூட கணக்கிடப்பட்டு இருக்கின்றன. 

இரண்டு வருடங்களில் முதலமைச்சர் மாதம் ஒரு ரூபாய் சம்பளம் பெற்றதன் மூலம் அவரது மொத்த வருமானம் இருபத்தி நாலு ரூபாய் மட்டுமே. ஆனால் அந்த இருபத்திநாலு ரூபாயில் அவர் வாங்கிவைத்திருந்த தங்க நகைகளின் மதிப்பு இருபத்தி மூன்று கிலோ. அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட உயர்ந்த ரக வெளிநாட்டுக் கடிகாரங்களின் எண்ணிக்கை ஏழு. அவற்றில் தங்க முலாம் பூசப்பட்டு இருந்தது. ஒன்றின் விலை ஐந்து இலட்சம் மற்றொன்றின் விலை மூன்று இலட்சம். இதை ஐ. எம் நமாசி என்கிற மதிப்பீட்டாளர் சாட்சியமாகப் பகிர்ந்து இருக்கிறார். இது போக 91 கடிகாரங்களும் கைப்பற்றப்பட்டன. இவற்றின் மதிப்பு ஒன்பது இலட்சமாம். 

அரசின் வேளாண்மைத்துறை அதிகாரி ராதாகிருஷ்ணன், சுதாகரனால் முறைகேடாக சொந்த தேவைகளுக்காக அனுப்பப்பட்டு, அவர் திருநெல்வேலியில் 1190 ஏக்கர் நிலத்தினை ஆய்வு செய்த பிறகு, வாங்கியது குறித்த ஆதாரத்தையும் சாட்சியத்தையும் பவானி சிங் நீதிமன்றத்தில் படித்துக் காண்பித்தார்.

சென்னை அருகே உள்ள வாலாஜாபாத்தில் 100 ஏக்கர் நிலத்தினை அந்த இடத்தின் உரிமையாளர்களை அணுகி, வாங்கிக்கொடுத்த நிலத்தரகர் ராஜாராம் வழங்கியிருந்த சாட்சியத்தையும் படித்துக்காண்பித்தார்.

இவ்வாறு ஜெயலலிதா உள்ளிட்ட குற்றவாளிகளால் வாங்கப்பட்ட பல சொத்துக்கள் தொடர்பான விவரங்களையும், அது தொடர்பான சாட்சியங்களையும் நீதிமன்றத்தில் படித்துக் காண்பித்தார் அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானிசிங் . 

தமிழக அரசின் பொதுப் பணித்துறையில் முதன்மைப் பொறியாளராக இருந்த மாரியப்பன் என்பவரும் இந்த சொத்துக்களை அடையாளம் காட்டி சாட்சியம் அளித்துள்ளார் என்று அரசு வக்கீல் படித்துக் காட்டினார். 

"சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான 5 ஆண்டுகளில் பல லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டசொத்துக்கள் இன்றைக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் பெறுமானமுள்ள வையாக விளங்குகின்றன’’ என்று நாடே அதிரும் வண்ணம் குறிப்பிட்டார்.

பீகாரின் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ் மீது கால்நடை தீவன ஊழல் வழக்கு நடத்தப் பட்டு லாலு பிரசாத் யாதவ் சிறைக்கு அனுப்பப்பட்டார். இதனால் அவரது எம் பி பதவியும் பறிக்கப்பட்டது. சுக்ராம் என்கிற தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஒருவர் வீட்டில் கட்டுக் கட்டாகப் பணம் கைப்பற்றப்பட்டு சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது. ஹிதேன் தேசாய் என்கிற மத்திய சுகாதாரத்துறையின் தலைமைப் பொறுப்பில் இருந்த ஒரு அதிகாரி மருத்துவக்கல்லூரிகளுக்காக விதிகளை மீறி அனுமதிகள் வழங்கிய வழக்கில் அவரது வீடு சோதனையிடப்பட்டபோது பல லட்சக்கணக்கான ரூபாய் கரன்சி நோட்டுகளும் சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. கர்நாடகாவில் எடியூரப்பா, மராட்டியத்தில் ஆதர்ஷ் வீட்டு ஊழல் , கர்நாடகத்தில் ரெட்டி சகோதரர்கள் என்று இப்படி அதிகாரத்தை பயன்படுத்தி சொத்து செர்த்தவர்களின் பட்டியல் மிக நீண்டது. ஆனாலும் செல்வி ஜெயலலிதா வின் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு எல்லோருக்கும், “ பெப்பே” காட்டுகிறது. 

நாமாக எதையும் எழுத விரும்பவில்லை. இவை யாவும் நமது கற்பனையல்ல. இங்கே தொகுக்கப்பட்டவை யாவும் நீதிமன்றத்தின் முன் எடுத்து வைக்கப்பட்டவையே. தீர்ப்பு நீதிமன்றத்தில் வர இருக்கிறது. இவைகள் உண்மையா அல்லது ஜோடிக்கப்பட்டவையா என்பது தீர்ப்பில் தெரிந்துவிடும். 

இதே போல் இன்னொரு மயக்கம் தரும் சொத்துப் பட்டியலை, இதே வலைதளத்தில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அவர் குடும்பத்தினர் வைத்திருந்ததையும் ஒரு முறை வெளியிட்டு இருக்கிறோம். 

சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் குறிப்பிட்ட ஒன்றைச் சொல்லி நிறைவு செய்கிறோம்.

"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்."

   அதிரைநிருபர் பதிப்பகம்   

அனாதைகளாக்கப்பட்டுள்ள தமிழக முஸ்லீம்கள் - தேர்தல் களம் - 2014 31

அதிரைநிருபர் பதிப்பகம் | March 09, 2014 | , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

2014 பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெற இருக்கும் சூழலில் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. வழமையாக முஸ்லீம் இயக்கங்களும் கட்சிகளும் தமிழகத்தின் இருவேறு அணியாக இருக்கும் அதிமுக திமுகவுக்கு தங்களின் ஆதரவை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இச்சூழலில் நாம் எவ்வாறான நிலைபாடுகளை எடுக்க வேண்டும் என்ற சிந்தனையை பதியலாம். இதில் சிலருக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம், ஆனால் அந்தரத்தில் தொங்கவிடப்பட்ட சமுதாயமான இஸ்லாமிய சமுதாயம் சரியான நிலைபாட்டை முன்னெடுத்தால் நம்முடைய ஓட்டு பலம் என்ன என்பதை தமிழக அரசியல் களத்தில் நிரூபிக்கலாம்.

இந்த வருட பாராளுமன்ற தேர்தலில் அகில இந்தியா அளவில் பேசப்படும் பேச்சு ‘மோடி’ எனும் திட்டமிட்டு திணிக்கப்படும் மீடியா அரசியல் அலை! ஒரு போலியான தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல் தமிழகத்தில் முதலமைச்சர் ‘அம்மையார்’ அவர்களை பிரதமராக்குவோம் என்று அதிமுக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. தேசிய அளவில் நம்முடைய அடுத்த நிலைபாடு என்ன? யாரை ஆதரிப்பது? என்ற குழப்பதில் உள்ளது திமுக. தமிழகத்தில் அட்ரஸ் தேடி அலையும் காங்கிரஸ், தள்ளாடும் தேமுதிக, காவிகளின் கூடாரம் பாஜக, மனக்குழப்பத்தில் வைக்கோ, சாதிக் கூத்தில் பாமக. இவைகளுக்கு மத்தியில் தமிழக முஸ்லீம் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் அரசியல் ஆட்டங்கள்.

சுப்ஹானல்லாஹ்…! அல்லாஹு அக்பர்!. என்ன நடக்குது என்று எவருக்கும் புரியவில்லை. எங்கள் பின்னால் வாருங்கள் என்று நம் சமுதாயத்தை எங்கு இவர்கள் இழுத்துச் செல்கிறார்கள் என்பது புரியவில்லை. காயிதே மில்லத் போன்ற வலுவான முஸ்லீம் அரசியல் தலைவர் தமிழகத்தில் ஒருவர்கூட இல்லையே என்ற ஏக்கம் மீண்டும் எழுந்துள்ளது.

மமக: தங்கள் பிரதான கோரிக்கைகளான இட ஒதுக்கீடு அதிகரிப்பு, திருமண பதிவு சட்ட திருத்தம், கோவை சிறைவாசிகள் விடுதலை போன்றவைகளை நிறைவேற்ற எவ்வித முயற்சியும் செய்யாத ஆளும் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி சிறுபான்மை காவலர்(!?) திமுகவுடன் கூட்டனி சேர்ந்து அற்பம் ஒரே ஒரு பாராளுமன்றத் தொகுதியை பெற்று இதுவே போதும் என்று மேலும் போராடிப் பெற திராணியற்று அங்கே ஒதுங்கியுள்ளது.

முஸ்லீம் லீக்: திமுகவின் தலைவர் இதயத்தில் மட்டும் இடஒதுக்கீடு பெற்றுள்ளவர்கள், தொடர்ந்து கலைஞருக்கு ஜால்ரா அடித்து வரும் முஸ்லீம் லீக் வழக்கம்போல் கோரிக்கை ஒன்றுமில்லாமல், ஒரே ஒரு பாராளுமன்ற சீட்டை வாங்கிக் கொண்டு, இந்த முறை இது கிடைத்ததே என்ற திருப்தியுடன் உள்ளது.

ததஜ: இடஒதுக்கீட்டை இந்த தேர்தலின் முக்கிய கோரிக்கையாக முன்னிருத்தி சிறை நிரப்பு போராட்டம் நடத்தியது, இதை வைத்து, அதிமுக அரசிடம் மாநிலத்தில் 7 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும், ஆட்சியில் உள்ள இவர்கள் தரவில்லை என்றால் இவர்களுக்கு எதிரான நிலைபாட்டை எடுப்போம் என்று எச்சரித்தார்கள். போராட்டம் முடிந்த பின்னர் 7 சதவீத கோரிக்கை என்பது காணாமல் போய், இட ஒதுக்கீட்டை அதிகரித்துத் தந்தால் அதிமுகவுக்கு ஓட்டு, இல்லையென்றால் அவர்களுக்கு எதிராக எங்கள் ஓட்டு என்ற பேச்சுக்களை ஆரம்பித்தார்கள்.

பின்னர் அவசர பொதுக்குழு, அதன் பின்னர் அவசர செயற்குழு கடந்த மார்ச் 2ம் தேதி சென்னையில் கூடி தேர்தல் நிலைபாடு என்ன என்பதை அறிவிப்போம் என்றார்கள். ஆனால் செயற்குழுவுக்கு பின்னர் கடந்த ஒருவாரமாக ததஜவிடமிருந்து எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை. என்ன சூழலோ அவர்களுக்கு அல்லாஹ் மட்டுமே அறிவான்.

அந்த இயக்கத்திலிருப்பவர்களில் பலர் இனி வரும் காலங்களில் வெளியேறப் போகிறவர்கள், கடந்த ஒரு வாரமாக உண்மையில் நடந்தது இதுதான் என்பதை நிச்சயம் பொதுவில் விளக்குவார்கள் என்று எதிர் பார்க்கலாம். கடந்த 8ம் தேதி அதிமுகாவுக்கு ததஜ ஆதரவு காரணம், அம்மா ஆணையம் அமைத்து பரிந்துரை கேட்டுள்ளார்களாம். அதனால் எதிர்கால விளைவுகளை கருத்தில் கொண்டு அதிமுகவுக்கு ஆதரவு என்ற பேட்டியை கொடுத்து விட்டார்கள். அவர்கள் எடுத்து வைத்த ஜீவாதார கோரிக்கையான 7 சதவீத இட ஒதுக்கீடு கேரிக்கை என்ன ஆச்சு? தராவிட்டால் அவர்களுக்கு எதிரான நிலைபாடு என்ற வேகம் எங்கே போய்விட்டது? அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

இந்த பாராளுமன்ற தேர்தலின் முக்கிய கேரிக்கையாக பேசப்பட்ட இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையை ஒதுக்கீடு செய்து விட்டு, புலி வாலை பிடித்தவர்கள் போன்று அவரவர் இயக்கங்களை இருபெரும் அரசியல் கட்சிகளின் வெறுப்பிலிருந்து தங்கள் இயக்கங்களை பாதுக்காக்காத்துக் கொள்ள, அனைத்து முஸ்லீம் இயக்கங்கள் ஒட்டு மொத்த தமிழக முஸ்லீம்களின் ஜீவாதராமாக கையில் எடுத்து களம் கண்டவர்கள் இன்று அவர்களை நட்டாற்றில் விட்டு விட்டார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

ஒரு சீட்டில் மயங்கி விட்ட கட்சி மமக..... ஒரு சீட்டுக்காக கலைஞரின் இதயக்கூட்டில் இருக்கும் கட்சி முஸ்லீம் லீக். இட ஒதுக்கீடு தொடர்பாக சிறுபான்மையினர் ஆணையத்து கடிதத்தில் மயங்கி ஆளும் வர்க்கத்துக்கு பனிந்துள்ள இயக்கம் ததஜ. அடுத்து என்ன கோரிக்கை வைக்கலாம் என்று அரியாமல், உதிரி இயக்கங்களும் போய் சந்திக்கிறார்கள் நாமும் போவோம் என்று அதிமுகவுடன் கண்ணை மூடிக் கொண்டு இன்னும் சரணடைந்த பிற முஸ்லீம் இயக்கங்கள் (இதஜ, இதேலீக், etc...).

அனைத்து முஸ்லிம் கட்சிகளும், இயக்கங்களும்  தமிழக முஸ்லீம்களை கொத்து பரோட்டா போடுவது போல் தூள்தூளாக்கி சிதறடித்து ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். பாமர சமுதாயத்தை வஞ்சித்து விட்டார்கள். இயக்க மயக்கத்தை தூண்டும் அனைத்து இயக்கத் தலைவர்களின் வீரதீரப் பேச்சுக்கள் எல்லாம் வெறும் வெத்து நாடகமே. 

திமுக அதிமுக இவர்களின் எவர் வந்தாலும் மோடிக்கு ஆதரவளிப்பார்கள் அல்லது எதிராக இருக்கமாட்டார்கள் என்பது அறிந்த ஒன்றே. முஸ்லீம்கள் போட்டியிடும் தொகுதிகளில் உள்ள நல்ல முஸ்லீமை அடையாளம் கண்டு அவர்களுக்கு மட்டுமே எங்கள் ஓட்டு என்று அறிவித்து விட்டு... பிற தொகுதிகளில் நான் யாருக்கும் வாக்களிக்கவில்லை என்ற NOTA buttonக்கே நம் வாக்கை அளித்து நம்முடைய வெறுப்புணர்வை பொறுப்புணர்வுடன் இந்த அரசியல் கட்சிகளுக்கு உணர்த்தலாமே. இதுதான் நியாயமான முறையாக இருக்கும். இந்த சிந்தனைகளின் நிலைபாடு சரியானதா ? அல்லது மாற்று கருத்துகள் இருப்பினும் தெரிவிக்கலாம்.

ஒட்டு மொத்த இயக்கங்களும் சினிமாக்கூத்தாடி அரசியல்வாதிகளின் அரசியல் சூழ்ச்சியில் விழுந்து அவர்கள் சார்ந்த தமிழக முஸ்லீம் சமுதாயத்தை அடகு வைத்து விட்டார்களே. உள்ளக் குமுறல் உண்மையில் சமுதாய அக்கறையுள்ள ஒவ்வொரு முஸ்லீம்களிடம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. இனி எவரையும் நம்ப முடியாது என்ற எண்ணம் ஏற்படுவதையும் ஒதுக்க முடியவில்லை. இதுபோன்ற அரசியல் நிலைபாடு, அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து தேர்தல் நேரத்து சமரசம் என்பதும் தமிழகத்தின் தவ்ஹீத் எழுச்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படவுள்ளதோ என்ற சந்தேகம் நம்மில் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

அல்லாஹ் யார் யாரை எந்த நேரத்தில் உயர்த்துவான் அல்லது கேவலடுத்துவான் என்பது அவன் மட்டுமே அறிவான். இன்ஷா அல்லாஹ் யார் யார் எல்லாம் சமுதாய துரோகிகள் என்பது விரைவில் தமிழக முஸ்லீம்களுக்கு உணர்த்தப்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை. 

அல்லாஹ் மட்டுமே நம் சமுதாயத்தை பாதுகாக்க போதுமானவன்...

அதிரைநிருபர் பதிப்பகம்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு