Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label umar history. Show all posts
Showing posts with label umar history. Show all posts

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 14 7

அதிரைநிருபர் | October 12, 2011 | , , ,


சமுதாய அரசியலா, $UM ஆதாய அரசியலா?
ஒரு கணிஞனின் கணிப்புடன், ஒரு கலைஞனின் கருத்துரை!


உமர் பல இயல்களைக் கற்றிருக்கிறார். ஒவ்வொன்றிற்கும் துவக்க ஆசிரியன் நான்தான்! சில காலம் என்னிடம் கற்ற பிறகு, அவர் எனக்கு ஆசிரியராக மாறிவிடுவார். இயல்களிலேயே ஒரு ஒழுங்கு முறை இல்லாத இயல் அரசியல்தான்! மனிதன் படைக்கப்பட்டபோதே ஷைத்தானுக்கும் மனிதனுக்கும் இடையில் அரசியல் துவங்கிவிட்டது! உலகம் தோன்றியதிலிருந்து இன்று வரை அது நீடித்துக் கொண்டிருக்கிறது! ஆன்மீகவாத அரசியல்வாதிகள் அவனைத் துரத்தி, அடித்து, விரட்டிக் கொண்டிருந்தார்கள்! இந்தியாவில் காந்திஜி வரை அரசியல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது! காந்திஜியின் சீடர்களான லால் பகதூர் சாஸ்திரியும் கக்கன்ஜீயும் அரசியல் கற்பைக் காப்பாற்றினார்கள். சாஸ்திரி அரியலூர் இரயில் விபத்தின்போது தன் அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தார்! மந்திரி ஆன பின்பும் கக்கன்ஜீ இரயிலில் மூன்றாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார்! கண்ணியத்தின் சின்னமான இஸ்மாயில் சாகிப் தன் ஓட்டு வீட்டுக்குத் தாமே ஒட்டடை அடித்துக் கொண்டிருந்தார். கர்மவீரர் காமராஜர் தன் அமைச்சரவையில் எட்டு அமைச்சர்களை வைத்துக்கொண்டு தமிழகத்தை தன் முஷ்டியில் அடக்கினார்.


இந்தியாவின் விடுதலைக்காக காங்கிரசும், முஸ்லிம் லீகும் பாடுபட்டன. இரு கட்சிகளின் தேசியப் பற்றில் எந்தக் குறையும் சொல்ல முடியாது. காந்திஜி 1940-களில் காங்கிரசையும், முகம்மது அலி ஜின்னா முஸ்லிம் லீகையும் வழி நடத்திச் சென்றனர். முஸ்லிம் லீகில் மற்ற மதத்தவர்கள் இல்லாவிட்டாலும் காங்கிரசில் முஸ்லிம்கள் கணிசமான அளவில் இருந்தார்கள். உதாரணம் மவுலான அபுல் கலாம் ஆசாத்! காங்கிரசை எங்கள் மாமா, மற்றும் S.K.M.H. அவர்களின் தந்தை ஆகியோரும், முஸ்லிம் லீகை என் தந்தை போன்றோரும் தீவிரமாக ஆதரித்தார்கள். ஆனால் இரு சாராரிடமும் வெள்ளையனை வெளியேற்ற வேண்டும் என்ற பொதுவான கொள்கை இருந்தது. தமிழ் நாட்டில் பெரியார், இராஜாஜி போன்றவர்கள் காங்கிரசில் இருந்தனர். இஸ்மாயில் சாகிப் போன்றவர்கள் முஸ்லிம் லீகில் இருந்தார்கள். ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியால் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் வடக்கே பிரிவினைகள் ஏற்பட்டன. தென்னாட்டில் அப்படிப்பட்ட நிலை இல்லை!


1947-ல் இந்தியா விடுதலை பெற்ற பிறகு, காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விடும்படி காந்திஜி சொன்னார்! காந்திஜிக்கு அப்போதே தெரிந்துவிட்டது, அரசியல் வாதிகள் சுதந்திரத்தைத் தவறாகப் பயன் படுத்தி இந்தியாவை கடித்துக் குதறிவிடுவார்கள் என்று! காங்கிரசிலிருந்து முக்கிய தலைவர்கள் விலகினர். பெரியார், இராஜாஜி போன்றவர்கள் தனிக்கட்சி துவங்கினர். பெரியார் திராவிடக் கட்சியும் இராஜாஜி சுதந்திரா கட்சியும் ஆரம்பித்தனர். காயிதே மில்லத் முஸ்லிம் லீகின் தலைவரானார். இராமமூர்த்தி மற்றும் கல்யாண சுந்தரம் தலைமையில் கம்யூனிஸ்டு வலது இடது கட்சிகளும் தோன்றின. ஒவ்வொரு கட்சியும் உடைந்து, உடைந்து சிறு சிறு கட்சிகளாகப் பிரிந்து, பல்கிப் பெருகிவிட்டன! அண்ணாதுரை, திராவிடக் கட்சியிலிருந்தும், ஈ.வி.கே. சம்பத், அண்ணா தலைமையிலிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்தும், எம்.ஜி.ஆர்., கருணாநிதி தலைமையிலிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்தும் பிரிந்து, தனிக் கட்சிகள் ஆரம்பித்தனர்! அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் குட்டிகள் போட்டன. திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியது. இதைத் தொடந்து ஜாதிக் கட்சிகளும் தோன்றின! தோன்றிக் கொண்டிருக்கின்றன! குப்பையை அள்ளி சாக்கடையில் போட்ட மாதிரி, சினிமாக்காரர்கள் அரசியலில் குதித்தார்கள். இதுவல்ல அதிசயம்! சினிமா நடிகர்கள் தங்கள் ஜாதிகளையும் இணைத்துக் கொண்டு அரசியலில் குதித்தார்கள்! இது பிளாஸ்டிக் பைகளையும் குப்பைகள் நிறைந்த சாக்கடையில் அள்ளிப் போட்ட மாதிரி! போதாததற்கு திராவிட பேனருடன் தேசிய திராவிட முன்னேற்றக் கழகம் வேறு தோன்றியது! விடுதலை தந்த காந்தியைப் பின் பற்றப் போவதாக அரசியலில் குதித்தவர்கள், விஜய சாந்தியைப் பின் பற்றும் அரசியல் வாதிகளாக மாறினார்கள்!


இந்த மாதிரியான அருவருக்கத்தக்க காரணங்களால் உமர் அரசியலை மேலும் வெறுத்தார். அரசியலை வெறுக்கும் பண்பு உமரிடம் எப்படி வந்தது? நான் உமருக்கு பெர்னார்ட்ஷா பற்றி சொல்லி இருக்கிறேன். அவரும் படித்திருக்கிறார். இங்கிலாந்து பாராளுமன்றம், பாராளுமன்றங்களின் தாய் என்று அழைக்கப்படுகிறது. அதன் உறுப்பினர்கள் உலகத்திலேயே தரம் வாய்ந்த அரசியல் வாதிகள்! நம் நாட்டின் சுதேசி மன்னர்களை ஏமாற்றி ,பிரிட்டிஷ் சமராஜியத்தை பெருக்கிக்கொண்டே போன வாரன் ஹேஸ்டிங்ஸ் போன்ற வைஸ்ராய் அல்லது கவர்னர் ஜெனரல்களுக்கு பாராளுமன்றத்தில் தண்டனை வாங்கிக் கொடுத்தவர்கள் அவர்கள்!அவர்களைப் போன்றவர்களைப் பார்த்து இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே பெர்னார்ட்ஷா சொன்னார் “அரசியல் அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்” என்று! நம் அரசியல்வாதிகளைப் பற்றி என்ன சொல்வார்?

எங்கள் மாமா மர்ஹூம் S.M. அபூபக்கர் அவர்கள் முற்போக்கு சிந்தனைவாதி! சுதேச மித்திரன், ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், மஞ்சரி போன்ற தரமான பத்திரிகைகளைப் படிப்பார்கள். நாங்கள் கல்கண்டு பத்திரிகையை படிப்போம்! உமர் 4, 5 வகுப்புகளில் படிக்கும்போதே கல்கண்டைப் படிக்கத் துவங்கிவிட்டார்! கல்கண்டின் ஆசிரியர், புரட்சி எழுத்தாளர் தமிழ்வாணன் அவர்கள், வாசகர் கேள்விகளுக்குத் திறமையாகவும் நகைச் சுவையாடும் பதில் சொல்வார்! வட நாட்டு பாபுராவ் படேலுக்கு இணையாக கேள்விகளுக்குப் பதில் சொல்வார். அதில் வரும் அரசியல் கருத்துக்களை உமர் விரும்பிப் படிப்பார். சில நாட்களுக்குப் பிறகு கல்கண்டில் அரசியல் விமர்சனக் கட்டுரைகள் வந்தன. தயவு தாட்சண்யமின்றி எல்லாரையும் விளாசுவார். அவருடைய விமரிசனத்துக்கு ஆளாகாதவர்கள் யாரும் இல்லை! அந்த வகைக் கட்டுரைகள் உமரை மிகவும் கவர்ந்தன.

இதே கொள்கையைத் தாங்கிக் கொண்டு துக்ளக் வெளி வந்தது. அவற்றில் ஆழ்ந்த கருத்துக்களோடு, வாய் விட்டுச் சிரிக்கக் கூடிய நகைச் சுவைகளும் வரும். மற்ற பத்திரிகைகள் தங்கள் அரசியல் தலையங்கத்தோடும், கார்ட்டூன்களோடும் நிறுத்திக் கொள்வார்கள். ஆனால் துக்ளக் முழுதும் அரசியல்தான், ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. துணிச்சலான அரசியல் விமர்சனங்களுக்காகவும் நகைச் சுவைகளுக்காகவும் உமர் துக்ளக்கை விரும்பிப்படிப்பார்.


இதே துணிச்சலோடும் நேர்மையோடும் ‘உணர்வு’ என்ற இஸ்லாமிய வாரப் பத்திரிகை வெளி வந்தது. இது தமிழ்நாடு முஸ்லிம் முன்னற்றக் கழகத்தின் பத்திரிகை. வாரம் தவறாமல் உணர்வை உமர் வாங்குவார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தங்கள் சமுதாயத்தார்க்கு இழைக்கப்படும் தீமைகளைப் பற்றியும், வழங்கப்பட வேண்டிய சலுகைகளைப் பற்றியும் மட்டுமே பேசுகின்ற அரசியல் சாரா இயக்கம்! அதனால் உமர் அதன் பத்திரிகைகளையும் ஆதரித்தார். உணர்வைத் தொடந்து வந்த ஒற்றுமை மாதமிரு முறை பத்திரிகையையும் உமர் வாங்கத் துவங்கினார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தொடர்பான ஆடியோ வீடியோ கேசட்டுகளை வாங்கி வந்து போட்டுக் கேட்பார். “இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்?” என்ற ஒரு நிலை இருந்தது! எப்பொழுது அவர்கள் அரசியலில் குதித்தார்களோ, அப்பொழுதே உமர் அந்தக் கழகத்தைக் கை கழுவிவிட்டார்!


அரசியலில் சேராவிட்டால் என்ன நன்மை? நல்ல வேட்பாளர் கண்களுக்குத் தெரிவார்! மாற்றி யோசிக்கலாம்! ஆட்சி மாற்றம் கொண்டு வரலாம்! எங்களைப் போன்றவர்கள் ஓட்டுப் போட்டுத்தான் மொரார்ஜி தலைமையில் 64 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் 18 மாத கால ‘பொற்கால ஆட்சி’யைக் கொண்டு வந்தோம்! கடவுச் சீட்டு விரைவாக விநியோகிக்கப்பட்டது! ஹஜ் கோட்டா அதிகரிக்கப்பட்டது! உதவித் தொகை உயர்த்தப் பட்டது! விலைவாசி என்றுமில்லாத அளவுக்கு மிகக் குறைந்தது! இதைப் போன்ற நல்ல ஆட்சியைப் பெற, பல நல்ல காரியங்களைப் பெற முஸ்லிம் இயக்கங்கள் மக்களுக்கு வழி காட்டவேண்டும். த.மு.மு.க. அப்படி செய்ய இறங்கித்தான் சேற்றில் காலை விட்டுக் கொண்டது! அல்லாஹ்வின் ஒற்றுமைக் கயிற்றை விட்டு விட்டு அரசியல் களத்தில் குதித்தார்கள். ஒன்றாகக் கலந்திருந்தபோது பதநீராக இனித்தவர்கள், பிரிந்த பிறகு வெறும் பனை நீராகவும், சுண்ணாம்பாகவும் ஆகிவிட்டார்கள்!

சென்ற தேர்தலில் தி.மு.க. வுக்காக இவர்கள் பிடித்த கொடிகள், தி.மு.க. வின் கொடிகளைவிட உயரப் பறந்ததோடு, எண்ணிக்கையில் அவற்றைவிட அதிகம் இருந்தன! அந்தக் காட்சியைப் பார்த்து நகைத்தார் உமர்!. ‘ஒற்றுமையைக் காற்றில் பறக்க விட்டு விட்டு, ஓட்டுக்காக யாசிக்கும் வேட்டைக்காரர்கள் ஆகிவிட்டார்களே’ என்று நொந்தார். புகழ் பெற்ற ஜூலை 4 மாநாட்டை நடத்தி இன்றைய முதல்வருக்கு மேடை தந்து, அவரின் இரண்டாவது அரசியல் வாழ்வுக்கு துவக்கம் தந்தது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். நன்றி மறத்தலை, மறக்காமல் செய்தார் ஜெ! மீண்டும் மு.க.! முகத்தில் கரி! மீண்டும் ஜெ! ச்சே! இப்போது கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள்! இந்தியாவில் முஸ்லிம் இயக்கங்கள் பிற இயக்கங்களைச் சார்ந்து வாழும் (PARASITES) இயக்கங்களாகத்தான் இருக்கின்றன். இப்படிப்பட்ட போக்கு உமருக்குப் பிடிக்காது. இப்போது பேரூராட்சி தேர்தலில் எல்லாக் கட்சிகளும் போட்டியிடுகின்றன. கூட்டணி தர்மம் குப்பையோடு குப்பையாகப் போய்விட்டது!

வேட்பாளர்கள், தாங்கள் தேர்தலில் நிற்பதற்காகக் கட்சித் தலைமைக்குக் கப்பம் கட்டியிருப்பதாகப் பரவலாகப் பேசப்படுகிறது! முன்பே மக்கள் பணத்தை விழுங்கி ஏப்பம் விட்டவர்களுக்குக் கப்பம் எதற்கு? அந்தப் பணத்தை எல்லாம் சேர்த்து ஊருக்கு ஒரு நல்ல காரியம் செய்திருக்கலாம் அல்லவா? அதைச் சொல்லி மக்களிடம் வாக்குச் சேகரித்திருக்கலாம் அல்லவா? சமுதாய நலனுக்காக விட்டுக் கொடுத்துப் போகலாம் அல்லவா?


சரி எல்லாம் நடந்துவிட்டது. இனி வெற்றி பெற்று வருபவர்கள், செலவு செய்த பணத்தை எடுக்கும் முயற்சியில் அவசர அவசரமாக இறங்காமல், செலவில்லாத சிறு சிறு பணிகளிலாவது இறங்கலாம். நானும் உமரும் நடைப் பயிற்சி செய்யும்போது காணும் காட்சிகள் அவரைக் குமுற வைக்கும். அவை: 1)தெருவுக்கு தெரு கறிக்கடை, 2) பிளாஸ்டிக் பைகளை சாலையில் கொளுத்துதல், 3)பொருத்தமில்லாத ஒலி எழுப்பிகளை வாகனங்களில் பொருத்திக்கொண்டு பொருத்தமில்லாத இடங்களில் அர்த்தமில்லாமல் ஒலி எழுப்புவது, 4)பெண்களும் குழந்தைகளும் நடமாடும் இடங்களில் இரு சக்கர வாகனங்களின் கண் மூடித்தனமான விரைவு 5) வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் உள்ள இடங்களில் இரு சக்கர வாகனங்களின் கண் மூடித்தனமான விரைவு 6) எல்லா நேரங்களிலும் சாலைகளின் சந்திப்பில் ஏற்படும் குழப்பங்கள்.

மேற்கண்டவற்றில் இரண்டை மட்டும் அடிக்கோடிட்டுக் குறிப்பிடுகிறேன். அவை பிளாஸ்டிக் கரியும் ஆட்டுக் கறியும் தொடர்பானவை. பிளாஸ்டிக் பைகளை சாலையில் கொளுத்துவதை உடனே நிறுத்தவேண்டும். அதனால் நுரையீரல் புற்று நோய் வரும் என்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவேண்டும். ஹஜ்ஜில் செய்வது மாதிரித் தெருவில் ஆடுகளை அறுத்து இரத்தத்தை ஓட விடுவது ஹஜ்ஜை நினைவூட்டுகிறது. இதனால்தான் அதிரையை ‘சின்ன மக்கா’ என்கிறார்களோ என்னவோ! இன்னும் நாம் பெரிய 'மக்காக' இருக்காமல், இவர்களின் அனுமதியை ரத்து செய்யவேண்டும். கடைத் தெருவில் கடை வைக்கச் செய்யவேண்டும். மேற்கண்ட காரியங்களை வெற்றி பெற்றவர் செய்தால் உமரின் எண்ணங்கள் போற்றப்பட்டவையாக இருக்கும்!

வெற்றி பெறுபவர் ஐந்து ஆண்டுகளில், புதிராய் விளங்கும் அதிரா அதிரையை சிரிக்கும் சிங்காரச் சிங்கையாக விரைவில் மாற்ற முடியுமா? முடியும்! அக்பரின் முன்னோடி என்றும், நவீன நாணய முறையின் தந்தை என்றும், நிர்வாகச் சிற்பி என்றும், நீதியின் ஊற்று என்றும் பேசப்படுகிற செர்ஷா, ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்து, வரலாற்று ஆசிரியர்களின் இதயாசனத்தில் வீற்றிருக்கவில்லையா?

தொடரும்...

- வாவன்னா, M.A.,B.Ed.(வரலாறு)

  (உமர்தம்பிஅண்ணன்)

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 4 14

அதிரைநிருபர் பதிப்பகம் | July 23, 2011 | , , ,



உமர் தன் நண்பர் அன்சாரியின் வழிகாட்டலில் பம்பாய் வந்து நேர்முகத் தேர்வில் தேறி, விசா பெற்றார். அவருக்கு விசா வழங்கியவர் ஒரு சிந்தி; பகுதி 3-ல் சொல்லப்பட்டவர்தான். பாடியா பிரிவைச் சேர்ந்தவர். துபையில் முதலில் குடியேறிய இந்தியர்களுள் இவர்களும் குஜராத்திகளும் சேருவர். துபை வளர்வதற்கு இவர்களும் காரணமாவர் என்று கூறக் கேட்டதுண்டு. பாடியாவுக்கு தேரா துபையிலும் கராமாவிலும் தொழில் கூடங்கள் இருந்தன. இது தவிர உதிரி பாகங்கள் கடையும் இருந்தது. இவரிடம் பம்பாய்க்காரர்கள், பாகிஸ்தானியர், மலையாளிகள், தமிழர்கள் என பல பிரிவினர் பணி புரிந்திருக்கின்றனர். உமர்தம்பி கராமா மின்னணு சாதனங்கள் செப்பனிடும் தொழிற் கூடத்தின் பொறுப்பாளராகப் பணி ஏற்றார்.

சத்வாவில் பணிபுரிந்த நான் பணிமுடித்து டாக்சியில் வந்து கராமாவில் இறங்கிவிடுவேன். உமர்தம்பி பணி முடித்த பிறகு இருவரும் மீண்டும் டாக்சியில் புறப்பட்டு பர்துபை வருவோம் அங்கிருந்து அப்ரா (படகு) மூலமாக தேரா வருவோம். இது கொஞ்ச நாட்கள் நீடித்தது.

உமர் பணி புரிந்த தொழிற்கூடத்தில் எல்லா வகையான மின்னணு சாதனங்களையும் செப்பனிடுவதுண்டு. ஒரு நாள் ஒரு வாடிக்கையாளர் வெகு அவசரமாக ஒரு தொலைக்காட்சிப் பெட்டியைக் கொண்டுவந்து “இதை உடனே செப்பனிட வேண்டும்” என்றார். அவர் ஓர் அராபியர். பொதுவாகப் பணியைத் தொடங்குவதற்கு முன்னதாக சிலர் செலவு எவ்வளவு ஆகும் என்ற மதிப்பீட்டைக் கோருவார்கள். அவர் தனக்கு அப்படியெல்லாம் ஒன்றும் வேண்டாம் என்றும் எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை பணி முடிந்து வரும்போது தனக்கு தொலைக்காட்சி பெட்டி வேண்டும் என்றார். எல்லாம் பேசி முடித்து ஒத்துக் கொண்டபின் அவர் போய் விட்டார். அந்த தொலைக்காட்சிப் பெட்டியில் LOT(line output transformer) என்ற சாதனம் பழுதாகி இருந்தது. அது அவர்களிடம் இல்லாதததால் வெளியிலிருந்து வாங்கிவர நேரிட்டது. சற்று விலை கூடுதலான உதிரிப் பாகமும் கூட.

உமரின் பணியகம் மதியம் 1-லிருந்து 4 மணிவரை உணவருந்துவதற்காகச் சாத்தப் பட்டிருக்கும். உமர் மதிய உணவிற்குச் சென்றுவிட்டார். சில பணியாளர்கள் பணிமனையிலேயே உணவருந்திவிட்டு சற்று ஓய்வெடுத்துக் கொள்வார்கள்.


உமர் வழக்கம்போல் மதிய இடைவேளைக்குப் பின் அலுவலகம் திரும்பினார். அலுவலக கட்டிடத்தை நெருங்கும்போது சாலையில் தொலைக்காட்சி பெட்டியொன்று நொறுங்கிய நிலையில் கிடந்தது. ஒரு சிலர் ஆங்காங்கே நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். சற்று உற்றுப் பார்த்தபோதுதான் 'அவசரமாக வேண்டும்' என்று கொடுத்துவிட்டுப் போன அதே தொலைக் காட்சிப் பெட்டி என்று தெரிந்தது. உமருக்கு ஒன்றும் புரியவில்லை. அலுவலகத்தினுள் சென்றவுடன் அந்த தொலைக் காட்சிப் பெட்டியைச் செப்பனிட்ட நபர் தலை கலைந்தவராக வியர்க்க விறுவிறுக்க நின்றிருந்தார். என்னவென்று வினவியபோது கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

சுமார் இரண்டரை மணியளவில் அந்த தொலைக் காட்சிப் பெட்டியைக் கொடுத்த அந்த நபர் வந்திருக்கிறார். வெளிக் கதவு சாத்தப் பட்டிருக்கவே அதைத் திறக்கும்படிக் கூறி, தன்னுடைய தொலைக் காட்சிப் பெட்டியைப் பெற்றுச் செல்வதற்காக வந்திருப்பதாகக் கூறியிருக்கிறார். தொலைக்காட்சிப் பெட்டிய செப்பனிட்ட ஊழியர், அது செப்பனிடப் பட்டுவிட்டதாகவும் நான்கு மணிக்கு மீண்டும் பணியகம் திறக்கும்போது வந்து பெற்றுக்கொள்ளும்படியும் கூறியிருக்கிறார். தொலைக் காட்சிப் பெட்டியைக் கொடுத்த அந்த நபர் தாம் வீட்டிற்குப் போகும் வழியில் தொலைக் காட்சிப் பெட்டியைப் பெற்றுச் செல்ல வந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.


அதற்கு அந்த ஊழியர் அது 'மதிய உணவு இடைவேளை' என்றும் மேலும் பொறுப்பாளர் 4 மணிக்குத் திரும்புவார் என்றும் அந்த தொலைக்காட்சிப் பெட்டிக்கு எவ்வளவு செலவாகியிருக்கிறதென்ற விபரம் தனக்குத் தெரியாததால் 4 மணிக்கு வரும்படியும் கூறியிருக்கிறார். அதற்கு அந்த நபர் தான் இல்லம் போய்த் திரும்ப நேரம் பிடிக்கும் என்றும் தன்னிடம் தற்போது பணம் இல்லாததையும், வீட்டிலிருந்துதான் எடுத்துவர வேண்டும் என்றும் தொலைக் காட்சிப் பெட்டியைத் தரும்படியும் கூறியிருக்கிறார். ஊழியர் மறுக்கவே வாய்ச் சண்டை முற்றி, இறுதியில் அந்த நபர் ஊழியரின் கழுத்தைப் பிடித்திருக்கிறார். அத்தோடு நிற்காமல் அந்த தொலைக் காட்சிப் பெட்டியை வெளியே எடுத்து வந்து சாலையில் எறிந்து விட்டார்.

தொலைக் காட்சிப் பெட்டியை செப்பனிட்ட அந்த ஊழியர் பம்பாய்காரர். நேரே 'பர்துபை' காவல் நிலையம் சென்று அங்கிருந்த மேலதிகாரியிடம் புகார் கொடுத்திருக்கிறார். விபரங்களைக் கூறி, தன் கழுத்தில் ஏற்பட்ட நகக் காயங்களையும் காட்டியிருக்கிறார். அந்த நபரை விசாரிப்பதாக் கூறி ஊழியரை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார் அந்த அதிகாரி. மருத்துவ மனையிலிருந்து அந்த ஊழியர் திரும்பி வந்திருந்தபோதுதான் உமர் அலுவலகம் திரும்பியிருக்கிறார். (பெரிய காயங்கள் ஏதுமில்லை என்று மருத்துவர் சான்றிதழ் கொடுத்திருக்கிறார்)

சுமார் ஐந்து மணியிருக்கும். ஒரு போலீஸ்காரர் அலுவலகத்தினுள் நுழைவதைக் கண்ட உமருக்கு வயிற்றில் புளி கரைக்க ஆரம்பித்துவிட்டது. அப்பொழுதுதான் அந்த வாடிக்கையாளர் போலீஸ்காரர் என்று உமருக்கு தெரிய வந்தது. 'போலீஸ்காரர் சமாச்சாரம்தான் நமக்குத் தெரியுமே. அவர்களுடைய பொல்லாப்பு சங்லிப் பின்னல் மாதிரி போகுமே. ஏன் இந்த ஊழியர் இந்தச் வம்பை வாங்கிக் கட்டிக்கொண்டாரோ? பேசாமல் தொலைக் காட்சிப் பெட்டியை அவரிடம் தந்திருக்கலாமே' என்று உமர் எண்ணினார்.

அவர் உமரை நெருங்கி "அஸ்ஸலாமு அலைக்கும்" என்றார். உமரும் பதிலளித்தார். உமரிடம் அந்த தொலைக் காட்சிப் பெட்டிக்கு எவ்வளவு செலவாயிற்று என்றார். 350 திர்ஹம் என்றார். பணப் பையைத் திறந்து பணத்தைத் தந்துவிட்டு, "என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான் ஏதோ ஒரு மன நிலையில் அப்படி நடந்து கொண்டேன். என் குழந்தைகள் கார்ட்டூன் பார்க்க மாலையில் டி.வி. வேண்டும் என்று அடம் பிடித்ததால் அப்படி நான் நடந்து கொள்ள வேண்டியதாயிற்று." என்று சொல்லிவிட்டு அந்தப் பணியாளரிடம் மன்னிப்பும் கேடுக் கொண்டார். உமர், "சார் உங்கள் டி. வி.?" என்று வினவியபோது "கல்லி வல்லி (விட்டுத் தொலை)" என்று சொல்லிவிட்டு நடையைக் கட்ட ஆரம்பித்துவிட்டார்.

பின்னர் உமர் அறிய வந்த செய்திகள் உமரை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தின. அந்த ஊழியர் மேலதிகாரியிடம் புகார் செய்த பின்னர் பணியிலிருந்து திரும்பிய அந்த போலீஸ்காரரை அந்த அதிகாரி மீண்டும் வரவழைத்து அவரைக் கடிந்துகொண்டு உடனே தொலைக் காட்சிப் பெட்டியைச் செப்பனிட ஆகும் தொகையை செலுத்திவிடுமாறு கூறியிருக்கிறார். இவைகளை கேள்வியுற்ற உமர் ஆச்சரியத்தில் உறைந்து போய்விட்டார். நம் நாட்டில் போலீஸ்காரர்களை வேறு விதமாகவே பர்த்துப் பழகிய உமருக்கு ஒரு புது அனுபவமாகவே இருந்தது.

முதலாளி விசுவாசத்தோடும், துணிச்சலோடும் நடந்துகொண்ட அந்த இந்தியரையும், மேலதிகாரிக்குக் கட்டுப் பட்டு பெருந்தன்மையோடு நடந்து கொண்ட அந்தப் போலீஸ்காரரையும் நாம் மனமாரப் பாராட்டத்தான் வேண்டும். மனிதம் மாய்ந்துவிடவில்லை!.

தொடரும்....
- உமர்தம்பி அண்ணன்


பகுதி 3                                                                                                                   பகுதி - 5

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 3 7

அதிரைநிருபர் பதிப்பகம் | July 16, 2011 | , , ,


சிறு வயதில் உமர்தம்பி நோயால் நோவினை அடைந்தார். அவர் ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது டெட்டனஸ்’ என்ற வாய்ப்பூட்டு நோய் ஏற்பட்டது. இதில் பிழைப்பவர்கள் சிலரே! சிறுவர்கள் உள்ளங் காலில் புண் ஏற்பட்டால் அதைக் கவனிக்காமல்,மாடுகுதிரை இவற்றின் சாணம் போன்றவற்றை மிதித்து நடந்தால் ஏற்படும் நோய். உடல் விறைத்துவிடும்வாய் திறக்க முடியாதுசிறு ஒலியைக் கேட்டால் கூட தாங்கிக்கொள்ள முடியாது!


இந்த நோயால் பாதிக்கப்பட்டு 16நாட்கள் தஞ்சை மிராசுதார் மருத்துவ மனையில் மருத்துவம் பார்க்கப்பட்டது. விலை உயர்ந்த ஊசி போடப்பட்டது. இதற்குப் பிறகு எங்களின் முழு கவனமும் உமர்மீது திரும்பியது. இந்நோயால் படிப்பு பாதிக்கப்பட்டது. அன்னையார் செல்லம் கொடுக்கத் துவங்கினார்கள்.
உமர் படிக்கும் காலத்திலேயே வேளா வேளைக்குச் சாப்பிட மாட்டார். நண்பர்களோடு ஆராய்ச்சிப் பேச்சுக்கள் பேசிக் கொண்டிருப்பார். ஏதாவது கருவிகளோடு போராடிக் கொண்டிருப்பார். அம்மாவின் கூப்பாடும் சாப்பாடும் பெரிதாகத் தெரியாது. நேரத்திற்குச் சாப்பிடாததால் வயிற்றுப் புண் ஏற்பட்டது. பள்ளியில் படிக்கும் காலங்களில் வயிற்றுப் புண்ணால் மிகவும் அவதிப்பட்டார். வயிற்றில் புண்ணையும் கருவிகளில் கண்ணையும் வைத்திருந்ததால் எண்ணும் எழுத்தும் எட்டி நின்றன.
ஒரு முறை துபாயில் அவருக்கு அம்மை நோய் கண்டது. 15 நாட்கள் வேலைக்குச் செல்லாமல் அறையிலேயே தனியாக இருந்தார்ஆள் துணையின்றி மிகவும் துன்பப்பட்டார். பொறுமையாக இருந்தார். பொறுமைக்குப் பரிசும் காத்திருந்தது! இந்த கால கட்டத்தில் அவர் ஒரு இந்தியரிடம் வேலை செய்தார். அவர் ஒரு சிந்தி. கடைந்த மோரில் வெண்ணெய் ஒன்ஸ்மோர்’ கிடைக்குமா என்று பார்ப்பார். கஞ்ச நெஞ்சன். எதையும் சிந்தார்எதையும் சிந்தியார்.
உதிரி பாகம் போடாமலே பழுது நீக்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குஉதிரி பாகம் போட்டதாகச் சொல்லி பணம் வாங்கும்படிச் சொல்வார். உமரின் மனதுக்கு இது பெரும் உறுத்தலாக இருந்தது. இந்த இடத்தை விட்டு எப்படியும் வெளியேறிவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.
இந்த நேரத்தில் உமர் பணியாற்றிக் கொண்டிருந்த சிந்தியின் கடைக்கு ஒமான் நேஷனல் கம்பெனியிலிருந்து நேஷனல் தொலைக் காட்சிப் பெட்டிகள் பழுது நீக்குவதற்காக வந்தன. இதன் பொருட்டு அந்தக் கம்பெனிக்கு போய் வரும் வாய்ப்புக் கிட்டியது. மேலாளரைச் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. மேலாளர் தன் நிறுவனத்திற்கு வந்துவிடும்படி உமரைக் கேட்டுக்கொண்டார்.
அம்மை நோயால் வீட்டில் இருந்த இந்த விடுமுறை நேரம் உமருக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. ஒமான் நேஷனல் மேலாளருடன் அடிக்கடி தொடர்புகொள்ள முடிந்தது. நேர்முகத் தேர்வு போன்முகத் தேர்வாக அமைந்தது. உமர் நேஷனலுக்குத் தேர்ந்தெடுக்கபட்டார். பணி ஆணை கிடைத்தது. விசாவுக்கும் ஏற்பாடு செய்தனர். துபை ஒமான் நேஷனல் நிறுவனத்தில் விசா பெற்ற உமர்தம்பிக்குநேஷனல் தொலைக் காட்சிப் பெட்டிக்கு சர்வீஸ் செய்பவராக பணி செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. டிவி மட்டுமல்லாமல்நேஷனல்பானாசோனிக் நிறுவனங்களின் தயாரிப்புகள் எல்லாவற்றிலும் உமர் மன்னனாகத் திகழ்ந்தார்!
உமருக்கு குடும்ப விசா கிடைத்தது. புதுப்பிப்பதற்காக அனுப்பட்ட மனைவிமக்கள் பாஸ்போர்ட் அப்போதிருந்த நெருக்கடி நிலை காரணமாக ஓராண்டுக்குப் பிறகுதான் கிடைத்தது. விசாவை பல முறை புதுப்பித்தோம். அதற்கு முன் உமரை அபுதாபிக்கு மாற்றிவிட்டார்கள். பாஸ்போர்ட் முன்னரே கிடைத்திருந்தால் மாற்றலாகி இருக்கமாட்டார். உமர் குடும்பத்தோடு அபுதாபியில் வசித்தார். கொடுக்கப்பட்ட வீடு தமிழர்கள்,மலையாளிகள் அதிகம் இல்லாத பகுதி. அவர் வீடு இருந்த கட்டிடத்தில் அரபி பேசும் மக்கள் மட்டுமே இருந்தார்கள். இது அவரது மனைவிக்கும் மகன்களுக்கும் மிகுத்த தனிமையை ஏற்படுத்தியது. உமர் பணிகளுக் கிடையே வந்து பார்த்துப் போவார். இருப்பினும் மகழ்ச்சி இல்லை. பையன்களை மகிழ்விப்பதற்காக ஒவ்வொரு வியாழனும் அபுதாபி சென்று விடுவேன். சனிக்கிழமை அப்படியே துபை வந்து என் பணிக்குச் சென்றுவிடுவேன்.
உமர் தன்னை துபாய்க்கு மாற்றித் தரும்படி கேட்டிருந்தார். அந்தக்கோரிக்கை ஏற்கப்பட்டது. துபாய்க்கு (தலைமையகம்) உமர் தேவை என்பதால் அவரை துபாய்க்கு மாற்றினார்கள். இப்போது உமர் குடும்பம் காகலகலப்புக்கு மீண்டது. எனக்கும் இரட்டிப்பு ஆதாயமாக ஆனது. உமர் அபுதாபியிலேயே இருந்திருந்தால் மேலாளர் பதவியை உடனே பெற்றிருந்திருப்பார். கூழுக்கும் மீசைக்கும் ஒரே நேரத்தில்ஆசைப்படக்கூடாது அல்லவா?
தொடரும் ...                                                                                                              


-- உமர்தம்பி அண்ணன்

பகுதி -2                                                                                                                     பகுதி-4

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 2 10

அதிரைநிருபர் பதிப்பகம் | July 13, 2011 | , , , ,





இதற்கிடையில், உமருக்கு மீண்டும் கல்லூரியில் சேர்ந்து படிக்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது! இயற்கையிலேயே உமருக்கு இயற்பியல் பாடத்தில் ஆர்வம் அதிகம். நம் கல்லூரியில் இளங்கலையில் இயற்பியல் பாடம் இல்லை. வேறு வழியின்றி உயிரியல் (Zoology) பாடத்தை எடுத்துப் படித்தார்!

பறவைகள், மிருகங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் அலாதியான ஆர்வம்! உலகிலேயே பறவை ஆராய்ச்சியில் மிகப் பிரபலம் அடைந்திருந்த சலீம் அலி பற்றி என்னிடம் நிறையச் சொல்வார்! இவ்வளவு ஆர்வம் இருந்தும், நன்கு படித்து முதல் வகுப்பில் தேர்வு பெறவேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது! நன்கு படித்து, நல்ல வேலையில் சேரவேண்டும் என்பதெல்லாம் அவருக்குப் பிடிக்காது.ஆராய்ச்சிக்குத் தடை போட்டுவிட்டு,வருவாயைத் தேட முற்படுவதா?’ என்பார். தன்னிடமிருந்து அப்படியெல்லாம் எதையும் எதிர்பார்க்க வேண்டாம் என்பார்.
கடை நடந்த காலங்களில் பட்டுக்கோட்டைக் கண்ணப்பாவுக்கு உதிரி பாகங்கள்(spare parts) வாங்குவதற்காக அடிக்கடிச் செல்வார். இவருடைய திறமையை அறிந்த கண்ணப்பா முதலாளி, தன் கடையில் வந்து பணி செய்யும்படிக் கேட்டிருந்தார் காலச் சூழ்நிலை, பணி செய்யும்படி அவரை விரட்டியது. முன்பு ஏற்பட்ட பழக்கம் காரணமாக, கண்ணப்பாவில் பழுது நீக்கும் பணியில் அமர்ந்தார். 'பிலிப்ஸ்' ரேடியோவின் பழுது நீக்கும் பணி புரிந்தார். அப்போது தொலைக் காட்சி அறிமுகமான காலம்! பட்டுக்கோட்டை வட்டாரத்தில் தொலைக்காட்சிப் பெட்டியை உமர் இயக்கிக் காட்டினார்!

மருத்துவப் படிப்பு படிக்கவேண்டும் என்ற அவா இருந்தது. பொருளாதாரச் சூழ்நிலையையும் மீறிய ஆசை இது! அதைத் தவறு என்று சொல்ல முடியாது. எங்கள் வீட்டில் உள்ளவர்களின் மாத்திரைகளைப் படித்துப் பார்த்து, அதில் உள்ள மருத்துவக் குணங்களைச் சொல்வார்! இணைய தளம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, அதில் போய் மருந்துமாத்திரைகளைப் பற்றியும், நோய்களைப் பற்றியும் அறியும் ஆர்வம் அதிகமாக இருந்தது உமருக்கு!


தனக்கு வந்திருந்த சர்க்கரை நோயைப் பற்றி நிறையப் படித்தார்.ஆராய்ச்சி செய்தார்.

தொடரும்.....                                                                                           
-- உமர்தம்பி அண்ணன் (வாவன்னா)


 பகுதி - 1                                                                                                                          பகுதி -3

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 1 15

அதிரைநிருபர் பதிப்பகம் | July 11, 2011 | , , , ,





உலகப் புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரர் முகம்மது அலி கிளே, தனக்கு வயது எட்டு மாதம் ஆனபோதே நடக்கத் துவங்கி விட்டாராம்! நம் உமர் தம்பியும் தனக்கு வயது எட்டு மாதம் ஆகும்போதே நடந்துவிட்டார்!
ஏன் இந்த ஒப்பீடு? செயற்கரிய செயல்களைப் பிற்காலத்தில் செய்ய இருப்பவர்களின் தொடக்க வாழ்வு, பெரும்பாலும் இப்படித்தான் இருந்துள்ளது என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகத்தான்.

இரண்டு, மூன்று வயதில் தன் மழலை வாயால் திருக்குறள்களை ஒப்புவிப்பார்! அந்த வயதிலேயே டார்ச் விளக்கு மூடியைத் திறந்து, பேட்டரி செல்களை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு விளையாடுவார்! அவர் பள்ளியில் சேருவதற்கு முன்பே எடிசன், மார்க்கோனி, ஸ்டீவன்சன், ஜேம்ஸ் வாட் இவர்களைப் பற்றிக் கதையாகச் சொல்வேன். அவரை விஞ்ஞானி ஆக்கவேண்டும் என்பது என்னுடைய அன்றைய ஆர்வம்! பேராசைதான். தன் உடன்பிறப்பை உயர்ந்தவனாக ஆக்கிப் பார்க்க மூத்த சகோதரனுக்கு ஆசை எழுவதில் வியப்பில்லைதானே?
சிறுவயதிலேயே அறிவியலில் ஆர்வம் மிக உண்டு! நமதூர் காதர் முகைதீன் உயர்நிலைப் பள்ளி முன்பு கீற்றுக் கொட்டகையில் நடந்தது. உமர் தம்பி ஆறாம் வகுப்பு ஆங்கில வகுப்பில் அமர்ந்துகொண்டு, அடுத்திருந்த ஏழாம் வகுப்பில் திரு. ரெங்கராஜன் சார் நடத்தும் அறிவியல் பாடத்தை உன்னிப்பாகக் கவனிப்பார்! அதை என்னிடம் வந்து சொல்வார்! திரு ரங்கராஜன் சார் வகுப்பு என்றால் நிரம்பப் பிடிக்கும் உமர் தம்பிக்கு.





மார்க்கோனியைப் போல வானொலிப் பெட்டி செய்யவேண்டும் என்று சிறு வயதிலேயே ஆசை! எங்கள் வீட்டு வாசலில் எப்போதும் சாக்பீஸ் பெட்டியால் செய்யப்பட ரேடியோ,அவரால் தொகுக்கப்பட்டது, பாடிக்கொண்டே இருக்கும்! பின்னாளில் உமர் தம்பி கும்பகோணத்தில் நடந்த கண்காட்சியில் ரேடியோ நிலையம் ஒன்றை அமைத்து, பாட்டுகளையும் செய்திகளையும் கண்காட்சிக் கூடம் முழுவதும் ஒலி பரப்பினார். நம் காதிர் முகைதீன் உயர்நிலைப் பள்ளியைத் தஞ்சை மாவட்டமே பாராட்டியது!

எங்கள் மாமா, ABC பிரிண்டர்ஸ் ஜனாப் S.M. அபூபக்கர் அவர்கள் உமர் தம்பிக்குத்தன் பொறுப்பில் ‘ABC ரேடியோ சர்வீஸ்என்ற பழுது நீக்கும் கடையைத் துவங்கித் தந்தார்கள். முறைப்படி 'லைசென்ஸ்' பெற்றுக் கடை நடந்துவந்தது.
இதற்கிடையில், மருக்கு மீண்டும் கல்லூரியில் சேர்ந்த படிக்கவேண்டும் என்றஆர்வம் ஏற்பட்டது!
-- உமர்தம்பி அண்ணன்                                                                                         பகுதி -2       
                                           


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு