அண்மையில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலும் – அந்தத் தேர்தலில் பாரதீய ஜனதா அள்ளி விட்ட வாணவேடிக்கை வாக்குறுதிகளும் – அவற்றை நம்பி மக்கள் அந்தக் கட்சிக்கு அளித்துள்ள மகத்தான வெற்றியும் – அதைத் தொடர்ந்து ஏற்பட்ட புதிய ஆட்சி தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு வாரி வழங்கிக் கொண்டு இருக்கும் பட்டை நாமப் பரிசுகளின் பட்டாளத்தில் இப்போது பட்ஜெட்டும் சேர்ந்து இருக்கிறது.
கடந்த ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இதே போன்ற ஒரு பட்ஜெட்டின் விமர்சனக் கட்டுரையில் நான் குறிப்பிட்டதை மீண்டும் குறிப்பிடுகிறேன். பட்ஜெட் என்பது அறிஞர் அண்ணா சொன்னது போல் BUD GET என்ற இரண்டு சொற்களால் ஆனது. BUD என்றால் ஒரு மலரின் மொட்டு என்று பொருள். இதைத்தான் தொடர்பு படுத்தி தனது முதல் பட்ஜெட்டை சமர்ப்பித்த போது அண்ணா சொன்னார். இந்த மலரின் மொட்டு இப்போதுதான் கட்டவிழ்கிறது. இது மணம் வீசுமா என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டும் என்றார். அதே போல் பாரதீய ஜனதா ஆட்சிப் பொறுப் பெற்று அவைக்கு அளிக்கும் முதல் பட்ஜெட் இது . இந்த முதல் மலர் இன்று தனது மொட்டுக்களை விரித்திருக்கிறது. இது மணம் வீசுமா - குணம் தருமா அல்லது குழிபறிக்குமா என்பதைச் சொல்ல வேண்டுமானால் “ போகப் போகத் தெரியும் இந்தப் பூவின் வாசம் புரியும் “ என்று சொல்லி இந்த விமர்சனத்தைத் தொடங்கலாம்.
எடுத்த எடுப்பிலேயே சொல்வதானால் இந்த பூ பட்ஜெட் – தாமரைப் பூவின் பட்ஜெட் . பொதுவாக தாமரைப் பூ அழகாக இருக்கும் ஆனால் மணக்காது . எட்டாத உயரத்தில் இருக்கும் சூரியனைப் பார்த்து பல்லிளிக்கும்; இழுக்க முயற்சிக்கும் ஆனால் அருகில் இருக்கும் வண்டுகளை அவ்வளவாகக் கவராது. பூக்களின் புகுந்த வீட்டு சீதனமான தேன் துளிகள் தாமரைப் பூவில் வலைவீசிப் பார்த்தாலும் வாய்க்காது. நீர் நிறைய இருந்தால் மட்டுமே நிலைத்து நிற்கும் தாமரைப் பூ, நிலத்தில் பூத்துப் படரும் மல்லிகைக் கொடிக்கு இணையாகாது. இப்போது அருண்ஜெட்லி சமர்ப்பித்து இருக்கும் இந்த அருணோதய பட்ஜெட்டும் அப்படித்தான் இருக்கிறது. தாமரைப் பூவின் மருத்துவ குணங்களைப் பற்றி சொல்லும் சித்த வைத்தியர்கள் தாமரைப் பூ மூளை வளர்ச்சிக்கு நல்லது என்று கூறுகிறார்கள். இந்தப் பூவோடு அடிக்கடி புழங்குகிறவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் இதுவாகும் என்ற தொடக்கத்தை அடக்கத்தோடு சொல்லி அதன் அம்சங்களை அலசுவோம்.
ராஜாதி ராஜ ராஜ கம்பீர புலிப்பால் குடித்த பராக்கிரம நரேந்திர மோடி மகராஜ் பராக்! பராக்! பராக்! என்று பறையரிவித்து அவர் வந்தால் மண்ணைப் பொன்னாக்குவார் – பூனையை யானையாக்குவார் – கிளியை புளியாக்குவார் என்றெல்லாம் கூறினார்கள். பதவியேற்ற உடனே விலைவாசி குறைந்துவிடும் – இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்தும் மந்திரக் கோல் அவர் கைகளில் இருக்கிறது- அவர் ஆண்ட குஜராத் மாடலில் ஆட்சி நடக்கும்- நிதிப் பற்றாக்குறை நீங்கி கஜானா நிரம்பி வழியும்- வேலை வாய்ப்புகள் வீடுதேடி வந்து கதவுதட்டும்- அரசு நிர்வாகம் முன் எப்போது இல்லாத அளவில் விரைவான வேகத்தில் செயல்படும் – அதிகாரிகள் அலறுவர்- வரி ஏய்ப்போர் கதறுவர்- கருப்புப்பணம் காலடியில் வந்து மண்டியிடும்- என்றெல்லாம் மக்களால் எதிர்பார்க்கப்பட்ட ஒரு போர்காலகனவுலகப் பின்னணியில் நிதியமைச்சர் திரு. அருண் ஜெட்லி தனது முதல் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து இருக்கிறார்.

உண்மையில் , ஒரு அரசுமாற்றம் நிகழும்போது முந்தைய அரசு தாக்கல் செய்த இடைக்கால நிதிநிலை அறிக்கையின் தொடர் அடிப்படையில்தான் தனது முதலாவது நிதிநிலை அறிக்கையை அருண் ஜெட்லி தயாரித்தாக வேண்டிய நிலைப்பாடு கட்டாயமாக இருந்ததை எந்த அரசியல் அறிவியலாரும் மறுப்பதற்கு இடமில்லை. முன்னாள் நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்கள் தயாரித்த நிதிநிலை அறிக்கைக்கு பார்டர் கட்டி, பெயின்ட் அடித்து, சீரியல் செட் கட்டி, ஜிகினா காகிதங்களால் ஜோடித்துத் தந்திருப்பதுதான் அருண்ஜெட்லியின் இந்த பட்ஜெட் என்பது அரசியல் நோக்கர்களுக்கு அரை சதவீத சந்தேகம் கூட இல்லாமல் புரியும். அதுதான் நடைமுறையும் கூட.
ஒரு புதிய அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் அது சமர்ப்பிக்கும் முதலாவது நிதிநிலை அறிக்கையை பல்வேறு தரப்பினரும் ஆர்வமுடன் ஆய்ந்து பார்த்து விமர்சிப்பது தவிர்க்க இயலாதது. இதற்குக் காரணம் ஆட்சிக்கு வர முன்பு அவர்கள் அளித்த தேர்தல் அறிக்கையின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியக் கூறுகளின் வாடை வீசுகிறதா என்று பார்ப்பது இயல்பான ஒன்று.. அதே நேரம் முதல் நிதிநிலை அறிக்கையிலேயே தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டவைகள் நிழலாடுகிறதா என்று பார்க்க நினைப்பதும் பொருளாதார ரீதியில் நடைமுறையில் சாத்தியப்படாத ஒன்றுதான். ஆனால் மக்கள் அவற்றை எதிர்பார்ப்பதை தவறு என்று சொல்ல இயலாது.
பொதுவாக பொருளியல் வல்லுனர்கள் நிதிநிலை அறிக்கையில் நான்கு அம்சங்கள் இருக்கின்றனவா என்று பார்ப்பார்கள். அவை:-
- இருக்கும் பொருளாதார மூலவளங்களை கட்டுக்குள் வைத்தல்,
- இருக்கும் மூலவளங்களையும் இனி வளர்ந்து வருமென்று உத்தேசிப்பதையும் வைத்து வளர்ச்சிக்கான தொடர்ந்த தொலை நோக்குத் திட்டங்கள்,
- வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்வது,
- தொழில் மற்றும் விவசாயத்தின் மீது முதலீடு செய்பவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றச் செய்வது மற்றும் வளர்ப்பது.
ஆகியவைதான் அந்த நான்கு அம்சங்கள். அருண் ஜெட்லி சமர்ப்பித்துள்ள இந்த நிதிநிலை அறிக்கையில் இந்தக் கொள்கைகள் மேலோட்டமாகத் தென்படுகிறதே அன்றி உருப்படியான திட்டங்கள எதுவும் ஊடுருவவில்லை என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
வருமான வரியின் தனிநபர்களின் உச்சவரம்பு இரண்டரை இலட்சமாக உயர்த்தப் பட்டு இருக்கிறது. இதைப் பற்றி பெருமைப்பட ஒன்றுமில்லை. காரணம் கடந்த வாரம் தக்காளி ஒரு கிலோ பதினைந்து ரூபாய் இந்த வாரம் முப்பது ரூபாய். விலைவாசிகள் ஏறிக் கொண்டல்ல எகிறிக் கொண்டு இருக்கும்போது அரை இலட்சம் உயர்வு ஒன்றும் அதிகமல்ல என்றுதான் சொல்ல வேண்டும். இந்த உச்சவரம்பை இன்னும் அரை லட்சம் கூட்டி அறிவித்து இருந்தால் அரசு ஊழியர்களுக்கும் மென்பொருள் மற்றும் தகவல் தொழில் நுட்பப்பிரிவில் பணியாற்றுவோருக்கும் சிறு இளைப்பாறுதல் கிடைத்திருக்கும்.
கங்கை நதியை தூய்மைப்படுத்த ரூ.2,047 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. “மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம் ஆனால் கங்கையே சூதகமானால் எங்கு போய் முழுகுவது” என்பதுதான் புரியவில்லை. பிணங்களை கங்கையில் விடுவது இறந்தவர்களை மோட்சத்துக்கு கொண்டு சேர்க்கும் என்கிற நம்பிக்கை உள்ள இந்து சகோதரர்கள் நிரம்ப வாழும் நாட்டில் – காசியில் எரிறியும் பிணங்களைத் தின்னும் சாமியார்கள் சுற்றித் திரியும் சூழ்நிலையில் அவர்களை ஒரு பகுத்தறிவுப் பாதைக்கு மாற்ற அரசு முயற்சி எடுப்பதுதான் கங்கையை உண்மையிலேயே தூய்மைபடுத்துவதற்கு அச்சாரமாக இருக்க முடியும். பிணங்கள் கங்கையில் விடப்படும்போது அவற்றுடன் சேர்த்து பூமாலைகளும் இறந்தவர்கள் பயன்படுத்திய அல்லது அவர்களுக்கு விருப்பமான ஆடைகள் மற்றும் மெத்தை தலையணை வரை கங்கை நீரில் விடப்படும் நிலை உள்ள வரை கங்கை எப்படி தூய்மையாகுமென்று புரியவில்லை. இதற்கான நடவடிக்கைகளை எடுப்பதைவிட்டுவிட்டு கங்கையையே தூய்மைப் படுத்த என்று ஒரு பெரும் தொகையை எடுத்த எடுப்பிலேயே ஒதுக்கி இருப்பது வியப்பும் வேடிக்கையும் நிறைந்த செயலாகவே தோன்றுகிறது. அருளாதாரம் என்று நம்பும் விசயத்துக்கு பொருளாதாரத்தை பலியிடும் நிகழ்வு இது.
காலமெல்லாம் முழங்கி வந்த நதி நீர் இணைப்பைத் தொடங்குவதற்கு நூறு கோடி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை ஒரு தொடக்கமாகக் கருதி வரவேற்கலாம். மாநிலங்களுக்கிடையே நிலவும் நதிநீர் வழக்குகள் நீர்த்துப் போகவேண்டுமானால் நாட்டின் நீர்வளம் நாடு முழுதும் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். வாஜ்பாய் அவர்களின் காலத்திலேயே எடுத்துவைக்கபட்ட இதற்கான முதல் முயற்சியின் அடிகள், “வளர்ச்சியின் நாயகன் ” காலத்தில் தடைகளைக் கடந்து நிறைவேற்றப்பட்டால் வரலாறு அதனை வாழ்த்தும். வருங்கால பட்ஜெட்டில் இதற்கான முன்னெடுப்பு தீவிரமாக இருக்குமென்று நமது நம்பிக்கையை இப்போது பதிவு செய்வோம்.
நெடுஞ்சாலைகள் வளர்ச்சியை கனிவுடன் பார்ப்பது, நேரடி வரிகளை அதிகம் போட்டுத் தாக்காதது ஆகியவை இந்த நிதிநிலை அறிக்கையில் உண்மையிலேயே வரவேற்க வேண்டிய அம்சங்கள்தான். எல் இ டி டிவிக்களின் பிக்சர் ட்யூப் போன்ற சில உபரிப் பொருட்களுக்கான இறக்குமதி வரிகளைக் குறைத்திருப்பதும் பாராட்டத் தக்கதுதான். இதனால் உள்நாட்டு உற்பத்திகள் உயர வாய்ப்புண்டு.
சேமிப்புகளுக்கு ஊக்கம் தரும் விதத்தில் சில அறிவிப்புகள் வந்துள்ளன. உதாரணமாக, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில், முன்தேதியிட்டு வரிகள் விதிப்பதில்லை என்கிற முடிவை குறிப்பிடலாம். அத்துடன் அத்தகைய ஊக்கங்களின் நோக்கம் சேமிப்புகளை பங்குச் சந்தைகளை நோக்கி திருப்பி விடுவதாக இருக்கலாம் என்கிற தோற்றம் கிழக்கே சூரியன் உதிப்பது போல் உதித்திருப்பதாகத் தோன்றுகிறது. இதுவும் ஒரு நல்ல அம்சம்தான். இதனால் அடுக்குப் பானைகளில் தஞ்சம் புகுந்துள்ள சேமிப்புகள் கூட பங்குச் சந்தைகளுக்கு வர வாய்ப்பும் சேமிப்புகளுக்கு ஒரு புதிய பரிணாம வளர்ச்சியும் ஏற்பட வாய்ப்புண்டு.
எல்லா நகர கிராமங்களில் உள்ள வீடுகளுக்கும் தடையில்லாத மின்சாரம் தரப்படும் என்றும் இதற்கான கால அளவையும் 2019 ஆம் ஆண்டுக்குள் என்றும் சொல்லபட்டிருப்பது- இதை நாங்கள் செய்யபோகிறோம் ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் இதைக் கேட்காதீர்கள் ஐந்தாண்டுகாலம் அவகாசம் தாருங்கள் என்று கேட்டிருப்பது அடுத்த தேர்தலையும் மனதில் வைத்தே என்று எண்ணத் தோன்றினாலும் நோக்கம் நல்ல நோக்கம் என்று பாராட்டலாம். அத போல் வீட்டுக்கு வீடு கழிப்பறை வசதிகள் விசயத்திலும் அரசு மேற்கொண்டுள்ள நிலையையும் வரவேற்கலாம். ஆனால் இதற்கான செயல் திட்டங்கள் எதையும் குறிப்பிடாமல் விட்டிருப்பது நாம் ஏற்கனவே கூறியிருப்பதுபோல் ஜிகினா வேலையோ என்று சந்தேகிக்கவும் வைக்கிறது.
காங்கிரஸ் ஆட்சியில் அவர்கள் என்ன சாதனைகளைச் செய்தார்கள் என்று ஒரு கேள்வி எழுப்பபட்டால் அவர்கள் தரும் சாதனைப் பட்டியலில் முதலில் இருப்பது நூறுநாள் வேலை வாய்ப்பு என்பதுதான். ஆனால் நடை முறையில் இந்தத் திட்டம் அரசின் நிதிவளத்தை ஆக்கபூர்வமான விஷயத்துக்கு அல்லாமல் சும்மா அள்ளிவிட்ட கதையாகவே இருந்தது. செய்யப்பட்ட செலவுக்கும் அதனால் விளைந்த பயனுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. ஆனால் இப்போது திரு அருண் ஜெட்லி ஒரு உருப்படியான திட்டத்தை முன் வைத்து இருக்கிறார் . இதற்காக அவரைப் பாராட்டலாம்.
காரணம் இந்த வலை தளத்தில் விளை நிலங்களைப் பற்றிய ஒரு பதிவை நாம் எழுதிய போது நூறு நாள் வேலைத் திட்டத்தை விவசாய நிலங்களின் மேம்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டுமென்று கேட்டிருந்தோம். இப்போது அருண் ஜெட்லி இப்போது நூறுநாள் வேலைத்திட்டத்தை விவசாயத்துடன் இணைத்து இருக்கிறார். இது செயல்பாட்டுக்கு வந்தால் மிகுந்த பயனளிப்பதாக இருக்கும். இவ்வளவு நாள் நூறுநாள் வேலை என்று வருகிற கூலித் தொழிலாளர்கள் கூடையைக் கவிழ்த்துப் போட்டுவிட்டு காட்டுக் கருவைச் செடிகளின் நிழலில் அமர்ந்து வெற்றிலை பாக்கு போட்டுவிட்டுப் போய்க் கொண்டு இருந்தார்கள். இந்த மனித உழைப்பை விவசாயத்துடன் இணைத்திருப்பதற்கு மிகப் பெரிய பாராட்டை வழங்கலாம்.
காப்பீட்டுத்துறை, நாட்டின் பாதுகாப்புத்துறை ஆகியவற்றில் நேரடி அந்நிய முதலீடுகளை வரவேற்று அனுமதி அளித்திருப்பது அடிப்படையில் அரசியல்வாதிகளின் கருப்பை வெள்ளையாக்கும் நடவடிக்கையைச் சார்ந்திருக்கும் என்கிற சந்தேகத்தை கிளப்புகிறது. அவ்வாறு வரும் முதலீடுகளை அரசு எவ்வாறு கையாளப் போகிறது, கட்டுப்பாட்டில் வைத்திருக்கப் போகிறது முதலீடு செய்பவர்களின் வாரிச்சுருட்டும் இலாப நோக்கை எப்படி வகைப் படுத்தப் போகிறது ஆகிய அம்சங்களைப் பொறுத்தே இந்த சோதனை ஓட்டத்தின் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும்.
நேரடி அந்நிய முதலீடுகளுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் பொதுத்துறை நிறுவனங்களில் – நவரத்னா எனப்படும் வெற்றிப் பாதையில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்நாட்டின் தனியார் முதலீடுகளைப் பற்றி இந்த நிதிநிலை அறிக்கையில் ஒன்றுமே குறிப்பிடப்படவில்லை. அதே போல பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விலைவாசிக் குறைப்பு , டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பைக் கூட்டுவதற்கான திட்டங்கள், உற்பத்தி ஊக்குவிப்பு, ஏற்றுமதிகள் ஊக்குவிப்பு, இறக்குமதிக் குறைப்பு ஆகியவை பற்றியும் நிதியமைச்சர் தொட்டுச் சொல்கிறாரே தவிர எதிலும் பட்டுக் கொள்ளவில்லை.
அதே போல், கறுப்புப் பணப் பிரச்னை எவ்வாறு நாட்டி உலுக்குகிறதோ அதே போல் பெரிய நிறுவனங்கள் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து கடனாக வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாத வாராக்கடன் , வரிகளின் நிலுவைகள், ஆகியவைகளை வசூலிக்க இந்த அரசு என்ன செய்யபபோகிறது என்ற கேள்விக்கு இந்த பட்ஜெட்டிலும் விடையில்லை. இதற்கு முன்பு காங்கிரஸ் அரசு போட்ட பட்ஜெட்டுகளிலும் விடை இல்லை. கார்பரேட் கம்பெனிகளுக்கு வரிச் சலுகைகள், அவர்களின் வரிஎப்புகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பது போன்ற காரியங்களில் இவ்விரு கட்சிகளுக்கும் இடையே “ உள்ளடி வேலை” – எழுதப் படாத ஒப்பந்தம் இருப்பதை இந்த பட்ஜெட் இன்னும் உறுதி செய்கிறது. ஆட்சிகள் மாறினாலும் இது போன்ற காரியங்களை எந்த அரசையும் செய்ய விடாமல் தடுக்கும் சக்திகள் எவை என்பதை சாமான்ய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நமது முக்கியக் கவலை விவசாய உற்பத்தி- பொய்த்துப் போன பருவ மழை- ஆகிய பிரச்னைகளைக் கையாள இந்த அரசின் செய்லதிட்டம் எதுவும் அறிக்கையில் இல்லை. விவசாய மான்யங்களைக் குறைப்போம் என்கிற பேச்சு விவசாயிகளை அதிர்வடையச் செய்து இருக்கிறது. உரம் மற்றும் விவசாயம் சார்ந்த இடுபொருள்களுக்கான மானியங்களை உயர்த்திவழங்கி இருக்க வேண்டும். காரணம் பருவமழை காலை வாரிவிட்ட நிலையில் ஊக்கத்துடன் ஒரு விவசாயி தனது பணிகளை மேற்கொள்ள அரசாங்கம் அவனுக்கு ஆதரவளிக்க வேண்டும். இதற்கான அடையாளங்கள் பட்ஜெட்டில் இல்லை. ஆனால் எட்டு இலட்சம் கோடி விவசாயக் கடன் வழங்கவும் , கடன்களை ஒழுங்கான தவணையில் திருப்பிச் செலுத்துவோருக்கு மூன்று சதவீதம் ஊக்கத்தொகை தருவதும் நல்ல ஆரம்பம் என்றே சொல்ல வேண்டும்.
தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ்-க்கு (All India Institute of Medical Science) இணையான மருத்துவமனை அமைக்கப்படும், 15 இடங்களில் ஊரக சுகாதார ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. தூத்துக்குடி துறைமுகத்தில் அவுட்டர் துறைமுகம் அமைக்க வந்துள்ள அறிவிப்பை தமிழராக நாம் வரவேற்கவே வேண்டும். சூரிய மின்சக்தி உற்பத்திக்கு, தமிழகத்துக்கும் சேர்த்து ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதும் நம்மைப் புன்முறுவல் பூக்க வைக்கும். .
அரசின் வருவாயை அதிகரிக்க மாற்று வழிகள் ஆராயப்படும் என்பதும், 2015-16-ஆம் நிதியாண்டில், நிதிப் பற்றாக்குறையை 3.6 சதவிகிதமாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்படும் என்ற அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கது.
கிராமங்களில் அகன்ற வலை வரிசை இன்டர்நெட் அமைப்புகள், விவசாயிகளுக்காக தனியாக கிசான் டிவி ஆகியவையும் வரவேற்புக்குரியவை. டிவி அலைவரிசையை, ஆளும் கட்சி தனது அரசியல் நோக்கத்துக்காகப் பயன்படுத்தாமல் நவீன விவசாய யுக்திகளை விவசாயிகளுக்கு பயிற்றுவிற்பதற்காகப் பயன்படுத்தினால் உண்மையில் வெற்றியே. இதில் பயிற்று மொழி சர்ச்சை வரவும் வாய்ப்புண்டு. தமிழக விவசாயிகளிடம் சாவல் சாவல் என்றால் அவர்களுக்கு அது அரிசி என்று தெரியாது. கூவும் சேவலைத்தான் அவர்களுக்குத் தெரியும்.
மொத்தத்தில், ப.சிதம்பரம் பெற்றுப் போட்ட குறைப் பிரசவக் குழந்தைக்கு டெக்ஸ்ட்ரோஸ் ( DEXTROSE) டிரிப் ஏற்றி, பொட்டும் பூவும் வைத்து , பவுடர் பூசி பெற்றவளின் பெயர் மாற்றி பிறந்திருக்கிறது இந்த பட்ஜெட் குழந்தை. ஆகவே, இது ஒரு கலப்பு சித்தாந்தங்களின் பட்ஜெட். ஆனால் முதலாளிகளை மட்டும் காப்பாற்றும் விதத்தில் கவனமாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழந்தையைப் பெறுவதில் மன்மோகன் சிங் மற்று ப. சிதம்பரத்தின் ஆகியோரின் பங்களிப்பே அதிகம். இனி பிறக்கபோகும் குழந்தைகள்தான் நரேந்திரமோடிக்கும் அருண் ஜெட்லிக்கும் உண்மையாகப் பிறக்க இருக்கும் குழந்தைகள். அந்தக் குழந்தைகள் பிறந்து வளர்ந்து நடை போடுவதைப் பார்த்த பின்னர் வெளிவரும் விமர்சனங்களே வக்கனையாகவும் பொருத்தமாகவும் இருக்கும்.
இபுராஹீம் அன்சாரி