Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label இப்ராஹிம் அன்சாரி. Show all posts
Showing posts with label இப்ராஹிம் அன்சாரி. Show all posts

மரம் வளர்ப்பது ஒரு அறம் 9

அதிரைநிருபர் பதிப்பகம் | June 27, 2016 | ,

"ஏம்பா மரம் மாதிரி நிற்கிறே?" என்ற வார்த்தைகள் நாம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள்தான். ஒன்றும் செயல்படாமல் இருக்கும் மனிதர்களைப் பார்த்துத்தான் இந்த வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் உண்மையில் அந்த வார்த்தைகளில் பொருள் இருக்கிறதா? மரம் என்றால் அது செயல்படாததா? ஒன்றுக்கும் பயனற்றதா? இப்படி மரத்தைக் கேவலமாக ’எடுத்தெறிந்து‘ பேசுவது சரியான அணுகுமுறைதானா? உண்மையில் மரம் பயனற்றதா? மரம் என்றால் அது வெறும் மரம் மட்டும்தானா?

இந்தக் கேள்விகளை நாம் கேட்டுப் பார்த்தால் , வரும் விடைகள் - பிள்ளைகள் தங்களது தாய் தந்தையர்க்கு சமமாகப் பாவிக்கப்பட வேண்டியவை மரங்கள்; காடுகளில், வீடுகளில், தோட்டங்களில், சாலை ஓரங்களில் இருந்து அன்புப் புரட்சியையும் அமைதிப் புரட்சியையும் அழகாக நிகழ்த்திக் கொண்டிருப்பவை மரங்கள்; ஆன்மீகவாதிகளுக்கும் அறிவியல்வாதிகளுக்கும் அன்றாடங் காய்ச்சிகளுக்கும் கூட ஆறுதலும் அரவணைப்பும் தருவதே மரங்கள் என்ற பதில்கள் கிடைக்கின்றன.

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களால் நல்லவருக்கு உவமையாகக் காட்டப்பட்டது பேரிச்சை மரம். இன்னும் பிற சமயங்களில் புத்தனுக்கு ஞானம் தந்தது போதி மரம் என்றும்; ஆண்டவனின் அற்புதத்தை சொல்வது அரசமரம்; மேலும் புராணக் கதைகளான இராமாயணத்தில் சீதைக்கு சிறையாய் இருந்தது அசோக வனம். மகாபாரதத்தில் அர்ச்சுனனுக்கு பகவத் கீதை உபதேசிக்கப்பட்டது ஒரு ஆலமரத்தின் அடியில்தான் என்று பிறமதத்தவர்களும் நம்புகிறார்கள்; அத்திமரமும், ஆலிவ் மரமும், செடார் மரமும் இந்து மத வேதங்களிலும் பைபிளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. திருமறை குர்ஆனிலும் இறைவன் இந்த மரங்களின் மீது சத்தியமிட்டு ஒரு அத்தியாயத்தை இறக்கினான். (அத்தியாயம் : 95 அத்-தீன்)


வாழையடி வாழையாக குடும்பம் தழைத்து வாழுங்கள் என்று வாழ்த்தும் மரம் வாழ (வாழை) மரம்; உடலின் உறுதியை உலகுக்கு உரைப்பது தேக்கு மரம்; தேன்காயாக குலைகளைத் தருவது தென்னை மரம் ; பெரிய என்ற பொருள்தருவது பெருந்தமையான மா மரம். 

"தினைத் துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன் தெரிவார்" 

என்று நன்றி உடையோரின் அளவுகோலாக வள்ளுவனால் காட்டப்படுவது பனைமரம். அதே பனை மரம்தான் நிலையற்ற உறவு கொண்டாடுவோரையும் நன்றி கொன்றோர் உறவும் பனை மரத்து நிழலும் ஒன்றுதான் என்றும் காட்டப்படுகிறது.

“பெத்த புள்ளே தராவிட்டாலும் வச்ச புள்ளே தரும்” என்று பெற்று வளர்த்த பிள்ளைகளை விடவும் தென்னை மரங்களை பிள்ளையாகப் பாவித்து நம்பிக்கை வைப்பது நமது பண்பாடு. அதனால்தான் தென்னங்கன்றுகளுக்கு தென்னம் பிள்ளை என்று பெயர். அதுமட்டுமல்லாமல், இள வயது மரங்களை, பசு தான் ஈன்ற ஒரு கன்றுக்கு இணையாக மரக் கன்றாக கருதுவதும் பண்பாடுதான். வளர்ந்து ஆளாகும் வரை பிள்ளைகளைப் பராமரிப்பதுபோல் கன்றுகளையும் பராமரிக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்வதுதான் இதன் நோக்கம்.

மத , இன பேதமின்றி அவரவர் வழிபாட்டுத்தலங்களில் மரம் நட்டு வைப்பது நமது நாட்டின் கலாச்சாரம். அந்நாளில் பல்வேறுபட்ட அரசுகள் தங்களுக்காக எல்லைகளில் காவல் மரங்களை நட்டு வைத்து அடையாளப்படுத்தியதாக சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. கிராமங்களில் மரத்தடிகள்தான் உச்ச நீதிமன்றமாகவும் உயர்நீதி மன்றமாகவும் இன்றும் திகழ்ந்து வருகின்றன. நாட்டாமையும் சின்னக் கவுண்டர்களும் அங்குதான் உருவாகின்றனர். மரங்கள், வாழ்வோடு இணைந்து இழைந்து இருந்தும் பயன் தருகின்றன; இறந்தும் பயன் படுகின்றன. 

மரங்களை காட்டு மரம், வீட்டு மரம், வழிபாட்டுத்தளங்கள் அல்லது கல்விக் கூடங்களில் வைக்கும் மரம் என மூன்று பிரிவாக பிரித்து வகுத்து உள்ளனர் நமது முன்னோர்கள். உலகில் ஏறத்தாழ ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பல்வேறுவகையான மரங்கள் இருப்பதாக உலக மூலவள ஆதார அமைப்பு (World Resources Institute) கணக்கிட்டுள்ளது. உலகெங்கும் சுமார் 400,246, 300, 201 மரங்கள் இருப்பதாக நாஸா விண்வெளி நிறுவனம் (NASA) கணக்கிட்டுள்ளது.

மரம் நடுவோம் ! மரம் நடுவோம்! என்று அரசுகளும் நல்ல எண்ணம் கொண்ட மனிதர்களும் தங்களின் மார்பில் அடித்துக் கொண்டு கதறக் காரணங்கள் யாவை?

மரங்கள் நிழலைத் தருகின்றன; மரங்கள் மழை மேகங்களை ஈர்த்து மழை பொழிய வைக்கின்றன; மரங்கள் இருக்கும் இடத்துக்கு அழகூட்டுகின்றன. அனைத்துக்கும் மேலாக, மரங்கள் மனித இனம் உயிர் வாழத்தேவையான பிராண வாயு என்கிற ஆக்சிஜனை உற்பத்தி செய்து, மனித இனம் உயிர்வாழத் தேவையற்ற கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சி அழிக்கின்றன.

இன்று உலகமெங்கும் புவி வெப்பமாகிறது என்று ஓங்கி ஒலித்து கதறப்படுகிறது. இதற்குக் காரணங்கள் பல. அவற்றுள் முக்கியமானது – அழைக்கப்பட வேண்டிய காடுகள் அழிக்கப்படுவதுதான். ஊட்டி, கொடைக்கானல் போன்ற கோடை வாசஸ்தலங்களில் கூட குடிநீர்ப் பிரச்னை என்று கேள்விப்படுகிறோம். காரணம், நகர் மயமாகும் நச்சுத் திட்டத்தின்கீழ் அரசியல்வாதிகளாலும் செல்வாக்குப்பெற்றோர்களாளும் வனப்பகுதிகள் கதறக்கதற கசக்கப்பட்டு கற்பழிக்கப்படுவதே. உத்தரகாண்ட் மாநிலத்தில் கேதார்நாத் உள்ளிட்ட இயற்கை வளம் சூழ்ந்த பகுதிகளில், சுற்றுச்சூழல் விதிகளை மீறி இயற்கை வளங்களை அழித்து கட்டடங்கள் பெருகியதே அங்கு மண்சரிவு ஏற்பட்டு பேரழிவுக்கு காரணமாக அமைந்தது.

நச்சு வாயுக்களின் வெளியேற்றம் என்பது நகர மயமாக்கல் – பொருளாதார வளர்ச்சி ஆகியவை நமக்குத் தந்த பரிசுகளாகும். கழிவறைகளே இல்லாத வீடுகள் இருந்ததன ஒரு காலம் ; ஆனால் இன்றோ அனைத்து அறைகளிலும் பிரிட்ஜ் முதல் ஏர்கண்டிஷனர் வரை உள்ளீடாக வைத்தே வீடுகள் கட்டப்படுகின்றன. இவைகளுடன் இன்று ஒரு குடும்பத்தில் ஒன்பது வகை இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் இருக்கின்றன. இவைகள் கக்கும் புகைகள் காரணமாக காற்றில் கார்பன் டை ஆக்சைடின் விகித்தாச்சார அளவு அதிகரிக்கிறது. இந்த அத்துமீறலை எதிர்த்து அமைதிப் புரட்சி நடத்துவது மரங்கள் மட்டுமே. ஆக்சிஜனை உற்பத்தி செய்து கார்பன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றின் விகிதாச்சாரத்தை சமன் செய்யும் ஒரு ஆக்சிஜன் மையமாக செயல்பட்டு, காற்றில் தனது தலையை விரித்துப் பேயாடிப் போராடுவது மரங்கள் மட்டுமே.

மரங்களை அழிப்பதே மழை இன்மைக்குக் காரணம் என்று அறியாத பேதையர்கள் கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் செய்து வைக்கிறார்கள்; கோயில்களில் இருக்கும் நந்திகளுக்கு பால் அபிஷேகம், மிளகு அபிஷேகம், நெய்யூற்றி நடத்தும் யாகங்கள், பெண்களின் நடுநிசி நிர்வாண பூஜைகள், முழங்கால் தண்ணீரில் அம்ர்தவர்ஷினி ராகத்தை கழுதையாக கத்துவது, வருண ஜெபம் என்றெல்லாம் இன்றும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. நோய்க்கு மருந்து கொடுப்பதற்கு பதிலாக பேய்க்கு தூபம் போட்டுக் கொண்டிருப்போர் மனித மாமிச மலைகள், மரங்களை வேருடன் பிடுங்கி வீசி எறிவதுதான் முக்கியக் காரணம் என்று எப்போது உணர்வார்களோ அன்றுதான் விடியும்.

அறிவியல் ரீதியாக சில புள்ளி விபரங்களை நாம் பார்ப்போமானால் பயனாக இருக்கும்.

ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள வளர்ந்த மரங்கள் ஒரு வருடத்தில் உள்ளே உறிஞ்சி காற்றை தூய்மைப்படுத்தும் கார்பனின் அளவு, ஒரு வாகனம் 26000 மைல் பயணிப்பதால் வெளியிடும் கார்பன் அளவிற்கு ஈடானதாகும், அதுமட்டுமல்லாமல், 18 மனிதர்கள் ஒரு வருடம் முழுதும் சுவாசிக்க தேவையான ஆக்சிஜனையும் அவை வெளியிடுகின்றன.

ஒரு தனி மரம் ஆண்டுக்கு 260 பவுண்டுகள் ஆக்சிஜனை வெளியிடுகிறது. இது இரண்டு மனிதர்கள் ஒரு வருடம் சுவாசிக்க போதுமானதாகும். ஐம்பது வருடங்கள் வாழும் ‘ஒரு மரம்’ உற்பத்தி செய்யும் சேவைகளை பணத்தால் மதிப்பிட்டால் ஆக்சிஜன் US$ 30,000, சுத்திகரிக்கும் நீர் US$ 35,000 கார்பனை வடிகட்டுவதற்கான செலவு US$ 1,25,000 ஆகுமென்று ஒரு கணக்கீடு சொல்கிறது. 

அரசாங்கங்கள் நீரை சுத்திகரிக்கவும், கார்பன் வெளியேற்றத்தை குறைக்கவும் பல பில்லியன் டாலர்களைச் செலவிடுகின்றன. இவை அனைத்து சேவைகளையும் மரங்கள் இலவசமாகவே செய்து வருகின்றன. ஒருவேளை இலவசமாக இந்த சேவை கிடைப்பதால்தான் மரங்களின் அருமை நமக்குத் தெரியவில்லையோ என்னவோ. மரங்கள் செய்யும் இத்தகைய விலைமதிப்பற்ற சேவைகளைக் கூட பணத்தால் மதிப்பீடு செய்யப்படுவதற்குக் காரணம், பணத்தாசை கொண்ட பலரால் மரங்கள், பணத்தால் மதிப்பிடப்பட்டு வெட்டப்பட்டு விற்கப்படுவதுகூட ஒரு காரணமாக இருக்கலாம்.

மரங்கள் செய்யும் சேவைகள் என்கிற பட்டியலில் மேலே நாம் சுட்டிக்காட்டிய மூன்று சேவைகளை மட்டும் அல்லாமல் மரங்கள் நில அரிப்பை தடுகின்றன; நிலத்தடி நீரின் அளவை உயர்த்துகின்றன; ஆறுகளின் பாதையையும் ஆற்றுப் பெருக்கையும் கட்டுப்படுத்துகின்றன; ஊரைக் குளிர்விக்கின்றன; குருவிகள் கூடுகட்டும் இடமாகி பல்லுயிர்களை பெருக்குகின்றன; பட்டுப் போன மரங்கள் வீட்டுக்காகவும் விறகுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்தையும் விட ‘நீரின்றி அமையாது உலகு ‘ என்ற நிலையில் அடிப்படையான மழை பெய்யக் காரணமாகின்றன; அதன் காரணமாக விவசாய உற்பத்திப் பொருள்கள் விளைவிக்கப்படுகின்றன என்ற மரங்களின் பணிகளுக்கெல்லாம் பணத்தால் மதிப்புப் போட்டால் இந்த உலகையே மரங்களுக்கு விலையாக கொடுத்தாலும் ஈடாகாது.

மாமன்னர் அசோகர் போர் செய்து பலரைக் கொன்றார் என்பதை விட அவர் சாலை ஓரங்களில் மரங்களை நட்டினார் என்பதையே சரித்திரம் புகழ்கிறது. எல்லா மதங்களும் மரம் நடுவதை தலையாய தர்மங்களில் ஒன்று என்று சொல்கின்றன. குறிப்பாக இஸ்லாம் பெருமானார் ( ஸல்) அவர்களின் பொன் மொழிகள் மூலமாக மரம் நடுவதை மிகவும் உயர்வாகப் பேசுகிறது. இதோ சில சான்றுகள்!

“எவரேனும் மரம் நடுவாரேனால் அம்மரத்திலிருந்து எவ்வளவு உண்ணப்படுமோ அவ்வளவு தர்மம் செய்த நன்மை மரம் நட்டவருக்கு கிடைக்கும். அதிலிருந்து திருடப்பட்டதும் தர்மாகிவிடும். பிராணிகள் உண்டதும் தர்மமாகிவிடும் “ அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி) ( முஸ்லிம் )

“ஒருவர் மரம் நாட்டினால் அம்மரத்தின் மூலம் எத்தனை பழங்கள் உற்பத்தியாகுமோ அவற்றின் அளவுக்கு மரத்தை நட்டவருக்கு அல்லாஹ்விடம் நன்மை கிடைக்கும்" அறிவிப்பாளர்: அபூ அய்யூப் (ரலி) (முஸ்னத் அஹ்மத்)

ஒரு மனிதன் இறந்து போனதும் அவனது நல்ல மற்றும் கெட்ட செயல்களும் அதன் மூலமான நன்மை மற்றும் பாவங்களும் நின்று போய்விடுகின்றன. ஆனால் அந்த மனிதன் உயிரோடு இருக்கும் போது வெட்டிய கிணறு , ஏற்படுத்திய கல்வி நிறுவனம், நட்டு வைத்த மரங்கள் ஆகியவை அவை மக்களுக்குப் பயன்படும் கால காலமெல்லாம் அவன் உலகைவிட்டு மறைந்தாலும் அவனுக்கு நன்மையை சேர்த்துக் கொண்டே இருக்கும் என்று கூறும் இஸ்லாம் அதை ‘சதக்கத்துல் ஜாரியா’ என்று வகைப்படுத்துகிறது. செத்தும் கொடுத்த சீதக்காதிகள் இவர்கள். 

“பயன்மரம் உள்ளூர் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின் “ - என்று திருக்குறளும் கூறுகிறது. 

நாம் செய்தால் என்ன? இப்படித் தொடங்கினால் என்ன? என்ற வகையில் சில கருத்துக்களை சீர்தூக்கிப் பார்க்கலாம். 

எல்லா நற்காரியங்களும் அவரவர் இல்லங்களிளிருந்துதான் ஆரம்பிக்கின்றன என்று சொல்வார்கள். ( CHARITY BEGINS AT HOME ) . அதே போல் நாம் வீடு கட்டத் திட்டமிடும்போதே வீட்டின் நான்கு மூலைகளிலும் நான்கு மரங்களையாவது நட்டு வைக்க இடம்விட வேண்டும். அதனால் முதலாவதாக நமது வீடுகளின் வசிப்பிடம் காற்றோட்டமாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும். இதனால் 6 முதல் 9 செல்சியஸ் வரை உஷ்ணம் குறைவதாக கணக்கிட்டு இருக்கிறார்கள். குளிர் சாதனங்களைப் பயன்படுத்தும் நேரமும் மின்சாரச் செலவும் குறையலாம்.. 

இதற்காக வீட்டில் நடத்தக்க பப்பாளி, முருங்கை, மாதுளை, கொய்யா, நெல்லி போன்ற பயன்தரும் செடிகளை நடலாம். வீட்டை சுற்றி அழகுதரும் வண்ணப் பூச்செடிகளை நடலாம். அரளி, மல்லிகை, செம்பருத்தி, இட்லிப் பூ ஆகியவை அழகும் மணமும் தருமே. இந்த மரம் மற்றும் செடிகளுக்கான தண்ணீருக்கு நாம் ஒன்றும் பிஸ்லேரி மினரல் வாட்டருக்கு ஆர்டர் செய்ய வேண்டாம். நமது குளியலறைகளிலிருந்து வெளியேறும் பயன்படுத்தப்பட்ட தண்ணீரை பாயச் செய்தாலே போதுமானது. இதனால் தெருக்களில், கால்வாய்களில் சாக்கடை நீர் கலப்பதையும் தடுக்கலாமே! 

வீட்டினுள் நிழலில் வளரும் செடிகளை தொட்டிகளில் வைத்து வளர்க்கலாம். முக்கியமாக துளசி, ஓமவல்லி, கற்றாழை போன்ற செடிகளை இவ்விதம் வளர்ப்பதால் அவை தொற்று நோய்கள் அண்டாமல் காக்கும். மணி பிளான்ட் செடிகளை துணைச் சுற்றி வளர்த்தால் காண ரம்மியமாக இருக்கும்.

குழந்தை பிறந்தால் அதன் நினைவாக தேக்கு மரக் கன்றுகளை நடலாம்; குழந்தைகள் பிரசவமாகும் மருத்துவமனைகளுக்கு மருத்துவச செலவுடன் நான்கு மரக்கன்றுகளையும் பரிசளிக்கலாம். திருமணங்கள் நடத்தால் ஊரெங்கும் அழைப்பு விடுத்து விருந்து வைக்க முன்பு, திருமண மாப்பிள்ளை பள்ளிக்கு திருமண ஒப்பந்தத்துக்காக வரும் பாதைகளில் செடிகளை நட்ட பிறகே வருவதை வழக்கமாக்கலாம். திருமண அழைப்பிதழோடு ஒரு சில விதைகளையும் கொடுத்ஹ்டு அழைக்கலாம். திருமணப் பரிசாக எவர்சில்வர் தட்டுகளையும் குடங்களையும் வழங்கி அவைகளைப் பழைய சாக்கில் கட்டிப் பரண்மேல் போடுவதற்கு பதிலாக மரக் கன்றுகளை நட்டு பரிசளிக்கலாம். 

யாராவது இறந்தால் கபர்ஸ்தானின் சுவர் ஓரங்களில் வேப்பங்கன்றுகள் போன்றவற்றை நடலாம். தலைவர்களின் பிறந்த நாள்களைக் கொண்டாடும் கட்சிக்காரர்கள் சாலை ஓரங்களில் நிழல் தரும் மரச் செடிகளை நட்டு புதிய அத்தியாயம் படைக்கலாம். நடிகர்களின் பிறந்த நாளுக்கு, தலைகளை மொட்டை அடிக்கத் தயாராகும் இரசிகர்கள் அவரது வயதின் எண்ணிக்கைக்கு ஏற்ப மரக்கன்றுகளை நடலாமே! 

நெல் வயல்களையும் தென்னந்தோப்புகளையும் வீட்டுமனைகளாக மாற்றி விற்றுத்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்போர் அந்த இடங்களில் இருந்த மரங்களை வெட்டிய பாவத்துக்குப் பரிகாரமாக மனைப் பகுதியில் சாலைகளுக்காக ஒதுக்கப்படும் இடங்களில் இருபுறமும் பராமரிப்புடன் கூடிய புன்னை, புங்கை , வேம்பு , பாதாம் செடிகள் போன்ற மரக்கன்றுகளை பாதுகாப்புடன் நட்டு வைக்கலாம். மனைகளை வாங்குவோருக்கு ஆளுக்கு நான்கு மரக்கன்றுகளை பரிசாக வழங்கலாம்.

மா, ஆல, அரச, புளிய , வாகை, பெருவாகை ஆகிய மரங்கள் நிறைய இடங்களை ஆக்கிரமித்து வளரும் வகையானவை. பரந்த நிழலைத் தரக் கூடியவை. வேர்களைப் பரப்பி வளரக் கூடியவை. இவைகளை வீட்டில் வளர்ப்பதைவிட பள்ளிக் கூடங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள், அரசு அலுவலகங்கள், மைதானங்கள் ஆகியவற்றில் நட்டு வளர்க்கலாம்.

மனிதன் செய்யும் செயல்களிலும் தர்மங்களிலும் சிறந்த தர்மமாக மரக்கன்றுகளை நடுதல், அவைகளைப் பேணுதல், பராமரித்தல் ஆகியவற்றை கருதிட வேண்டும். மரம் நடுவது ஒரு அறம் அதுவும் தலையாய அறங்களில் ஒன்று என்ற எண்ணம் நம்மிடையே பரவலாக வேண்டும். நமக்காகவும் நமது வசதிகளை மேம்படுத்திக் கொள்ளவும் எவ்வளவோ செய்கிறோம். அந்தப் பட்டியலில் இனி மரங்களை நடுவதையும் சேர்த்துக் கொண்டால் ஊர் செழிக்கும் நமது உள்ளமும் மகிழும்; சுற்றுச் சூழல் மேம்படும்; நாம் எண்ணிப் பார்க்காத நன்மைகளெல்லாம் நம்மை வந்து சேரும்.

நமக்கு முந்தைய தலைமுறையிலும் நம்முடைய இளமைக் காலங்களிலும் இல்லாத ஒன்றாக இன்று நமது காலடியில் இருக்கும் தணணீரை காசு கொடுத்து வாங்குகிறோம். அது போதாது என்று இப்போது காற்றையும் காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு மெதுவாகத் தள்ளப்படுகிறோம். எதிர்கால தலைமுறை காற்றுக்கு காசு செலவழிக்கப் போகும் முன் நாம் மரக்கன்றுகளை நமது கைகளில் எடுத்துக் கொண்டு விழித்திடவும், செயல் புரிந்திடவும் வேண்டும். உயிர் இல்லாத விதைகளை உயிர்ப்பித்துக் கொடுக்க மண் தயாராக இருக்கிறது. கைப்பிடி அளவு மணல் நமது கைகளில் இருந்தாலும் அதில் ஊரையே வளைக்கும் ஒரு ஆலம் விதை முளைத்து விடுகிறது. 

விதைகள் தயாராய் உள்ளன; விதைகளை வரவேற்க மண்ணும் தயாராக உள்ளது. அதே போல் இலவச மரக் கன்றுகளை வழங்கிட அரசுத்துறைகளும் தன்னார்வ அமைப்புகளும் தயாராக உள்ளன. பசுமை அதிரை 2020 திட்டமும் தயாராக உள்ளது. மனிதர்கள்தான் தயாராக வேண்டும். தயாராவோமா தாயபுள்ளைகளே!

இப்ராஹீம் அன்சாரி

அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா? – பகுதி - 1 16

அதிரைநிருபர் பதிப்பகம் | November 07, 2015 | , ,

அண்மைக்காலமாக,  மதமாற்றம் பற்றி பல்வேறு திசைகளில் இருந்தும் எதிர்க்குரல் சற்று உரத்து சத்தமாகக் கேட்டுக் கொண்டு இருக்கிறது.. இதற்குக் காரணம் சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்திய மக்கள் தொகை தொடர்பான மதவாரியான  புள்ளிவிபரங்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், கிருத்தவ மக்களின் எண்ணிக்கை வளராமல் இருப்பதாகவும்  இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் ஒரு விவாதம்   எழுப்பப்பட்டது. இந்த அளவீடுகளை ஆய்ந்தால் அவை எதிர்மறையான  முடிவுகளைத் தருவதே  உண்மை . ஆனாலும் ஈரைப் பேனாக்கிப் பேனைப் பெருமாளாக்கும் சில  அரசியல் கட்சிகள் ,   சகோதரர்களாகப் பழகும் சகிப்புத்தன்மை மிக்க சாதாரண மக்களிடையே முஸ்லிம்களும் கிருத்தவர்களும் மதமாற்றம் செய்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்து பிளவு படுத்தி, அவர்களின் நெஞ்சங்களில் நஞ்சை விதைத்தன. தேர்தல் ஆதாயம் தேடும் சக்திகள், பெரும்பான்மை மக்களின் வாக்கு வங்கிகளை தங்களுக்கு ஆதரவாகத் திருப்பும் முயற்சிகளின் முனைப்பாக இந்தக் கருத்தைப் பரப்புவதில்  ஈடுபட்டு இருக்கிறார்கள். 

அத்தகையோர்க்கு சிறு விளக்கம் தரவேண்டுமென்பதற்காகவே ஒரு அழைப்பாளன் என்ற முறையில் இந்தப் பதிவைத் தரவேண்டியது இதை எழுதுபவரின் சமுதாயக் கடமையாக உணரப் பட்டு இங்கு பதியப்ப\டுகிறது. 

அழைப்புப் பணி என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் பிறவிக் கடமையாகும். ‘சுதந்திரம் எனது பிறப்புரிமை’  என்று இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சில தலைவர்கள் முழங்கியதாக சொல்கிறோமே அதே போல் ஒரு முஸ்லிமுக்கு விதிக்கப்பட்ட  கடமைகளில் அழைப்புப் பணியும் ஒரு கடமையாகும். 

காரணம் ,  பெருமானார் (ஸல் ) அவர்களின் இந்த சமுதாயத்தை படைத்த இறைவனே  நற்சான்றிதழ் கொடுத்து இது ஒரு நல்ல சமுதாயம் என்று சொல்கிறான். உலகில் உலவும் எந்த ஒன்றையும் சுட்டிக் காட்டி அதை நல்லது என்றும் சிறப்புக்குரியது என்றும் சான்றிதழ் வழங்க வேண்டுமானால் அவ்வாறு சுட்டபப்டும்  பொருள் அல்லது சமுதாயம் தன்னகத்தே சிறப்பாக ஏதாவது  ஒரு தரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பது உலக நியதி. அந்த வகையில் சந்தையில் உலவும் சில வணிகப் பொருள்களை சிறந்தது என்று நாம் ஏன் தரம் பிரிக்கிறோமென்றால் சில சிறப்புக்குரிய தன்மைகள் அப்பொருளோடு இருந்தே ஆகும். 

உதாரணமாக,  மக்கள் பயன்படுத்தும் சில நுகர்பொருள்கள் தரத்தில் சிறந்தவைகளாக மக்களால் பெயர் குறிப்பிடப்பட்டு வாங்கப்படுகின்றன. பல நுகர்பொருள்களை அவற்றின் உள்ளடக்கத்  தரத்துக்காக வாங்குகிறோமே அதேபோல் படைக்கப்பட்ட மனித சமுதாயத்திலேயே இதுதான் சிறந்த சமுதாயம் என்று         படைத்தவனே குறிப்பிடுகிறான் என்றால் இந்த சமுதாயம் தனது உள்ளடக்கமாக வைத்திருக்கும் தரம் என்ன? 

அது வேறொன்றுமல்ல .  நன்மையை ஏவி தீமையை தடுக்கும் தன்மையை தன்னகத்தே கொண்டிருக்கும் சமுதாயம் இது  என்பதுதான். அதுமட்டுமல்லாமல்  பாவங்களில் ஈடுபடுவோரை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் இந்த சமுதாயத்தின் தன்மைதான்.  எல்லாம் வல்ல இறைவன் தனது திருத் தூதர்களுக்கு வழங்கிய பணியும் இவைதான்.  இந்தத் தன்மைகள்  இறைநம்பிக்கை கொண்ட மனித சமுதாயத்தின் உள்ளீடாக ஓடும் ரத்தத்திலும் இயங்கும் உறுப்புகளிலும் நாடி நரம்புகளிலும் நடை பயின்று கொண்டே இருக்க வேண்டுமென்பதே படைத்தவனின் எதிர்பார்ப்பு. 

நமது தலைவரான பெருமானார் (ஸல்) அவர்களின் முழு வாழ்வே அழைப்புப் பணியால் அலங்கரிக்கபட்டதுதான். முதன் முதலாக, ஹீராக் குகையில் தனது தூதருக்கு வஹீ என்கிற இறைத்தூதை அனுப்பிய இறைவன் தனது தூதருக்கு விதித்த கட்டளையின் அடிநாதமே அழைப்புப் பணிதான். 

நபியே! நீங்கள் எழுந்து நின்று மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்!” (74: 1-7) என்பதே அல்லாஹ்வின் அருட் தூதருக்கு வழங்கப்பட்ட  கட்டளை. தான் ஏற்றுக் கொண்ட நல் வழியை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லி , அவர்களையும் நல்ல வழியின் பக்கம் திருப்பிவிட  முயற்சி எடுப்பதே அழைப்புப் பணியாகும். 

இந்த வகையில்தான் தனக்கு விதிக்கப்பட்ட  முதல் கட்டளையை எடுத்துக் கொண்டு ஒரு நிமிடத்தைக் கூட   வீணாக்காமல்  நேராக தனது மனைவி ஹதிஜா (ரலி) அவர்களை நோக்கி விரைந்த   பெருமானார் (ஸல்) தனது மனைவியிடம் நடந்ததைக் கூற,   அவர் அங்கேயே அப்பொழுதே இஸ்லாத்தை ஏற்கிறார். அதைத்தொடர்ந்து அபூபக்கர் ( ரலி ) அவர்களுக்கும் , அலி (ரலி) அவர்களுக்கும் வளர்ப்பு மகன் ஜைது ( ரலி) அவர்களுக்கு இஸ்லாத்தை ஏத்தி வைத்தார்கள். தொடர்ந்து இரகசியமாகவும் அதன்பின் தங்களின் சொந்தங்களையும் அதையும் தொடர்ந்து  அல்லாஹ்வின் கட்டளைப் படி அழைப்பை பகிரங்கப்படுத்தியும் தனது தூதுத்துவப் பயணத்தைத் தொடர்கிறார்கள். 

மக்காவில் எதிரிகளின் இடையூறுகளுக்கிடையே தொடர்ந்த அண்ணலாரின் அழைப்புப் பணி மக்காவில் எல்லை தாண்டி முதலில் தாயிப்  நகர் வரை விரிகிறது. அங்கு இருந்த பெரும் செல்வாக்குப் பெற்றவர்களிடம் அச்சமில்லாமல் அழைப்புப் பணி செய்து அவர்களால் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு இரத்தம் சொட்டிய நிலையில் ஒரு திராட்சைத் தோட்டத்தில் சோர்ந்து போய் சுருண்டு கிடந்த நேரத்திலும் ஒரு அடிமைக்கு இஸ்லாத்தை எத்திவைத்து இன்புறுகிறார்கள். அதையும் தொடர்ந்து மதீனாவிலிருந்து ஹஜ்ஜுக்காக வரும் பயணிகளிடம் அழைப்புப் பணி செய்து அவர்களுடன் அகபாவில் ஒப்பந்தம் செய்து அந்தப்  பணிக்காகவே முஸ் அப் இப்னு உமைர் ( ரலி) அவர்களை மதீனாவுக்கு அனுப்பி , அழைப்புப் பணியை பரவலாகச் செய்த பின்னர், அதன்பின் தானே மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரா செய்யும்போது போகும் வழியிலேயே அஸ்லம் குலத்தைச் சேர்ந்த எண்பது பேருக்கு இஸ்லாத்தை எத்தி வைத்து  மதினாவை  அடைந்து இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை அமைக்கிறார்கள்.                  

மதினாவில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை அமைத்ததும் உலகெங்கிலும் இருந்த  அபிசீனிய, எகிப்திய, பாரசீக, ரோமானிய, பஹ்ரைன், யமாமா, சிரியா, ஓமன் முதலிய நாடுகளின்   அரசர்களுக்கும் இஸ்லாத்தை அறிமுகம் செய்து அழைப்புக் கடிதங்களை அனுப்பினார்கள். பலர் உடனே அழைப்பை அங்கீகரித்தார்கள்.  சிலர் சற்று காலம் கடந்து ஏற்றுக் கொள்கிறார்கள். மக்காவில் ஒரு குஹையில் பிறந்த  இஸ்லாம் உலகப் பேரரசர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றால் அதற்கு பெருமானார்       ( ஸல் ) அவர்களின் ஒட்டு மொத்த வாழ்வுமே இஸ்லாமிய அழைப்புப் பணிக்கு அர்ப்பணிக்கப்பட்டதே காரணம் என்பதைத்தான் இந்த வரலாற்று  வரிகள் நமக்கு நினைவூட்டுகின்றன.  

பெருமானார் ( ஸல்) அவர்களுடைய மறைவுக்குப் பிறகு, நபித் தோழர்கள் பெருமானார் ( ஸல்) அவர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றி உலகமெங்கும் பரவிச்சென்று சத்தியமார்க்கத்தை எடுத்துரைத்தார்கள். உலகின் பல பாகங்களில்,  ஆங்காங்கே  இருந்த சமுதாய சூழ்நிலைகளில்-  சமத்துவமின்மை இல்லாத  ஏற்ற தாழ்வுகளில் - ஆண்டான் அடிமை என்கிற பேதம் நிலவிய நாடுகளில்  எல்லாம் சகோதரத்துக்காகவும் சமத்துவத்துக்காகவும் ஒரு மாமருந்தாக இஸ்லாம் திகழ்கிறது என்பதை உணர்ந்த பல மக்கள் இஸ்லாத்தை தங்களின் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டனர். அந்த நிலை இன்றும்  தொடருகிறது.  

கல்வியிலும் அறிவியல் வளர்ச்சியிலும் ஏற்றம் கொண்ட நாடுகள் என்று போற்றிப் புகழப்படும் நாடுகளிலெல்லாம் இஸ்லாமிய வெளிச்சம் விரைவாகப் பரவத் தொடங்கி இருக்கிறது. பல்துறை அறிஞர்களும் ஏற்றுக் கொள்ளத்தக்க மார்க்கம் இஸ்லாம்தான் என்பதை உணர்ந்து தங்களின் வாழ்வின் தித்திப்பான திருப்புமுனையாக இஸ்லாத்தைத் தேர்ந்தெடுத்துத் தழுவிக் கொண்டிருக்கிறார்கள். யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த உண்மையை ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இன்று உலகில் அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் புரட்சி இதுதான். 

பள்ளிவாசல்கள் பற்றாக்குறை என்ற செய்தி பிரான்சு நாட்டிலிருந்து வந்த போது, புதிய பள்ளிவாசல்கள் அங்கு பரவலாகக்  கட்டப்பட்டன.  ஏற்கனவே ஒளிவெள்ளமாக இருந்து பின்னர்  பூட்டுப் போட்டு இழுத்து மூடப்பட்ட பள்ளிவாசல்களின் , கதவுகளில் தொங்கிய பூட்டுக்கள்  ஆட்சியாளர்களால் நொறுக்கப்பட்டு திறக்கபட்டு ஐந்துவேளை  வழிபாட்டுக்குத் திறந்துவிடப்பட்ட  நிகழ்வுகள் போராட்டமின்றி மனமாற்றத்தால் ஆப்ரிக்காவின் அங்கோலாவில் அரங்கேறியது. மேலும் அங்கு புதிய பள்ளிவாசல்களும்  கட்டப்படுகின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளில் திருச்சபைக்குச் சொந்தமான கட்டிடங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டும் சொந்தமாக வாங்கப்பட்டும் பள்ளிவாசல்களாக மாறப்பட்டு  அங்கெல்லாம் “ அல்லாஹு அக்பர் “  என்ற முழக்கம் ஒலிக்கிறது. இந்த மறுமலர்ச்சிக்கெல்லாம் காரணம் பெருமானார் (ஸல்) அவர்களின் வழி ஒற்றிய அழைப்புப் பணிதான். 

“ யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் ! ”  என்றான்  பெருந்தன்மை மிக்க  ஒரு தமிழ்ப் புலவன். அந்த வகையில் இஸ்லாம் என்ற இனிய மார்கத்தை நான் மட்டும் நுகர்ந்தால் போதாது; அந்தப் பூஞ்சோலையில் நான் மட்டும் நுழைந்தால் போதாது என்று அடுத்தவருக்கும் அதன் சிறப்பியல்புகளை எடுத்துரைப்பது முஸ்லிமாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் கடமையாகும். இந்தக் கடமையை நிறைவேற்றாவிட்டால் மறுமையில் இறைவனுக்கு இதற்கும் சேர்த்து பதில் சொல்ல வேண்டி வருமென்று அறிஞர்களின் தரப்பிலிருந்து எச்சரிக்கை விடப்படுகிறது. 

அறிஞர் இப்னுல் கைய்யிம் ( ரஹ்) அவர்கள் கோடிட்டுக் காட்டுகிறார்கள். மனித சமுதாயத்தின் வெற்றியின் நிலைத் தரங்கள் நான்கு. 

1.. மனிதனுக்கு இம்மையிலும்  மறுமையிலும்   வெற்றியைத் தரும் சத்திய மார்க்கத்தையும் அது தொடர்பான கல்வியையும் கற்பது 

2.. தான் கற்றதை அமல் என்கிற செயல்பாட்டில் தங்களின் சொந்த வாழ்வில் நிறைவேற்றிக் காட்டுவது , 

3. தான் கற்றதையும் செயல்படுத்தியதையும் அதன் இன்பங்களையும் அடுத்தவருக்கும் எத்திவைப்பது,  கற்றுக் கொடுப்பது, அழைப்பது. 

4. அவ்வாறு அழைப்பதனால் ஏற்படும் துன்ப துயரங்களைத் தாங்கிக் கொள்ளும் நெஞ்சுரம் பெறுவது.; பொறுமையை மேற்கொள்வது    
  
அழைப்புப் பணி என்றாலே அது ஏதோ மதமாற்றம் என்று சிலர் விவாதத்தை எடுத்து வைக்கிறார்கள். மதமாற்றம் என்பது ஒரு உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தானும் தனது சமுதாயமும் அனுபவிக்கிற கொடுமைகளைக் களைய ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தார் எடுக்கிற முடிவாகும். ஆனால் அது அறிவின் அடிப்படையில் ஏற்படுவதாகும். 

இவைகளுக்கு  உதாரணம் சொல்ல வேண்டுமானால் பெருமானார் ( ஸல்) அவர்களின் சிறிய தந்தையார்  ஹம்ஜா ( ரலி ) அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சியையும் உமர் (ரலி ) அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சியையும்  குறிப்பிடலாம். 

தனது அண்ணன் மகனான முகமது (ஸல்) அவர்களை ஒருவன் கல்லால் அடித்துத் தலையில் காயம் ஏற்படுத்திவிட்டான் என்ற உடனே நானும் இஸ்லாத்தை ஏற்கிறேன் என்னை நீங்கள் என்ன செய்ய இயலும் என்று உணர்வுபூர்வமான முடிவெடுத்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர் ஹம்சா  ( ரலி ) அவர்கள். 

இதற்கு மாறாக, பெருமானார் (ஸல்) அவர்களைக் கொலை செய்து அவர்களுடைய தலையை கொண்டுவந்து கொடுத்து  நூறு ஒட்டகங்களை பரிசாகப் பெறுவேன் என்று சபதமிட்டு வாளோடு கிளம்பிய உமர் (ரலி ) அவர்கள் தாஹா  என்கிற திருமறையின் அத்தியாயம் ஓதப்பட்டதை காதால் கேட்டு அதன் அறிவுபூர்வமான அர்த்தங்களைப் புரிந்துகொண்டு வாளை தூக்கி வீசிவிட்டு இஸ்லாத்துக்கு தோள் கொடுக்க துணிந்து வந்தார். இது அறிவின் அடிப்படையிலான முடிவு. 

இவ்வாறு அறிவுபூர்வமான மன மாற்றங்கள் ஏற்பட வேண்டுமானால் மற்ற சமுதாய  மக்கள் வாழும் நாட்டில் அவர்களுடன் ஒன்றிணைந்து வசிக்கும்  முஸ்லிம்கள்,  ஒரு முன்னுதாரண வாழ்வை மேற்கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் வாழும் வாழ்க்கை முறைகளைப் பார்த்தது மற்றவர்கள் பாடம் கற்றுக் கொள்ளத் தக்க வகையில் அவர்களது வாழ்க்கை இருக்க வேண்டும்.  நம்பிக்கை, நாணயம், வணிகத்தில் நேர்மை, வாக்குறுதிகளைக் காப்பாற்றுதல் போன்ற நல்ல தன்மைகளை பொதுவாழ்வில் வெளிச்சம் போட்டுக் காட்டும் முஸ்லிம்களால் அவர்கள் மேற்கொண்டுள்ள வாழ்வியல்  முறையான இஸ்லாத்துக்கு அவை பெருமை தேடித்தரும். இத்தகைய இஸ்லாம் போதித்த  வாழ்வுமுறைகளை முஸ்லிம்கள் வாழ்ந்து காட்டும்போது அது ஒரு மறைமுக அழைப்புப் பணியாக கருதப்படும்.  அறிவுபூர்வமான மனமாற்றங்கள் ஏற்பட     பொதுவாழ்வில் நமது நற்குணங்களும் நற்பணிகளும்       வழிவகுக்கும். 

அழைப்புப் பணி என்பது ஒரு கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு கைகளில் குர் ஆனையும் பிற நூல்களையும் எடுத்துக் கொண்டு மற்றவர்களை அணுகிப் பேசி, விவரித்து, விவாதித்துத்தான் செய்ய வேண்டுமென்பது இல்லை. நமது அன்றாட வாழ்வின் அணுகுமுறைகள் ஒவ்வொன்றுமே அழைப்புப் பணிதான். இதோ இந்த  சிறிய சம்பவம் எவ்வாறு ஒரு பெரிய அறிஞரை இஸ்லாத்தில் கொண்டு வந்து சேர்த்தது என்று பார்க்கலாம். 

பிக்தால் என்ற பெயரை நம்மில் பலர் அறிந்து இருக்கலாம் ; அறியாதவர்களும் இருக்கலாம். திருமறையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்களின் ஒருவர்தான் பிக்தால். இதற்கு முன் பலர்  மொழி பெயர்த்து இருந்தாலும் அவர்கள் எல்லாம் இஸ்லாத்தில் இணைந்த பின்  மொழி பெயர்த்தவர்கள் அல்ல. ஒரு முஸ்லிமாக மாறி அதன்பின் , திருக் குரானை மொழிபெயர்த்தவர் என்ற வரிசையில் பிக்தால் முதலாமவர் ஆவார்.  

லண்டன் கேம்பிரிட்ஜில் ஒரு கிருத்தவராகப் பிறந்த பிக்தால் (Muhammad Marmaduke Pickthall (born Marmaduke William Pickthall, 7 April 1875 – 19 May 1936) அவர்கள் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்பட்டது எப்படி ? 

மத்திய கிழக்கு நாடுகளில் தனது பிரிட்டிஷ் நிறுவனத்துக்காக பணியாற்றிவந்த பிக்தால் , தான் குடியிருந்த வீட்டின் மேல்தளத்திலிருந்து  ஒரு காட்சியைக் கண்டார்.  

ஒரு பெரியவர்,   ஆடுமேய்க்கும் இளைஞன் ஒருவனை வாய்க்கு வந்தபடி பேசி கை நீட்டி அடிக்கிறார். அவனோ எவ்வித எதிர்ப்பையும் காட்டாமல் பேச்சையும் அடியையும் வாங்கிக் கொண்டு பொறுமையாக கை கட்டி நிற்கிறான்; ஆனால் கண்ணீர் மட்டும் வழிகிறது. இப்படி ஒரு ஜடம்போல நிற்கும் அந்த இளைஞனை நோக்கி பிக்தால் படி இறங்கி  வந்தார். உங்களுக்குள் என்ன பிரச்னை? ஏன் அவர் உன்னை அடித்தார்? என்று அவனிடம் கேட்டார். 

“நான் அந்தப் பெரியவரிடம் கடன் வாங்கி இருந்தேன். அதை என்னால் குறிப்பிட்ட நேரத்தில் திருப்பித் தர இயலவில்லை அதனால் அவர் ஏசுகிறார்; அடிக்கிறார் “ என்றான் இளைஞன். 

“பணம் தரக்கூடாது என்று நான் நினைக்கவில்லை தந்துவிடுவேன் என்று சொல்லி இன்னும் சில நாட்கள் தவணை வாங்கி இருக்கலாமே!” என்றார்  பிக்தால். 

“இல்லை சார்! யாராவது கடனை வாங்கினால் உரிய நேரத்தில் திருப்பித் தரவேண்டியது உங்களின் கடமையாகும் என்று எங்கள் நபிகள் ( ஸல்) அவர்கள் கூறி இருக்கிறார்கள். நாம் சொன்ன கெடு முடிந்துவிட்டால் கடனைக் கேட்க கொடுத்தவருக்கு முழு உரிமை இருக்கிறது. கெடுவுக்குள் கொடுக்க இயலாத குற்றத்துக்கு நான் ஆளாகி கூனி நிற்கிறேன் . ஏற்கனவே அந்தக் குற்றத்துக்கு ஆளான நான்,  அந்த மனிதரை எதிர்த்துப் பேசியும் திருப்பி அடித்தும் இன்னொரு குற்றத்தையும்  செய்ய    விரும்பவில்லை . எனது இறைவனுக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும் “ என்று இளைஞன் கூறினான். 

பிக்தால் சிந்திக்க ஆரம்பித்தார். எத்தனையோ நூற்றண்டுகளுக்கு முன் வாழ்ந்து ,  உபதேசித்து மறைந்த ஒருவர் மீதும் அவரது போதனைகள் மீதும் இவ்வளவு பற்றுள்ளவனாக ஒரு பாமரன் இருக்கிறானே அப்படியானால் அவர்  இன்னும் என்னவெல்லாம் சொல்லி இருப்பார்? அவரை  அப்படி சொல்ல வைத்த சக்திதான் எது என்று தேட ஆரம்பித்தார். அவரது தேடலின் விளைவு வில்லியம் பிக்தாலை முகம்மது பிக்தாலாக மாற்றியது.  

மாஷா அல்லாஹ்! 

நான் மீண்டும் குறிப்பிடுகிறேன். 

இஸ்லாம் போதித்த  வாழ்வுமுறைகளை முஸ்லிம்கள் வாழ்ந்து காட்டும்போது அதுவே  ஒரு மறைமுக அழைப்புப் பணியாக கருதப்படும்.  அறிவுபூர்வமான மனமாற்றங்கள் ஏற்பட     பொதுவாழ்வில் நமது நற்குணங்களும் நற்பணிகளுமே       வழிவகுக்கும். 

அன்பான அணுகுமுறை, வெல்ல இயலாத மனங்களை வென்று விடும். அப்போது அழைப்புப் பணி,  மதமாற்றமாகத் தோன்றாது; மனமாற்றமமாகவே தோன்றும்.

இப்ராஹிம் அன்சாரி

ராஜா வீட்டு விருந்து ! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | October 13, 2015 | , , , ,

சாக்கடைச் சேறு கலந்து போடும் சோறு!

கடந்த இரண்டு வாரங்களாக இந்தியாவை உலுக்கிக் கொண்டிருக்கும் பிரச்னை உ பி மாநிலம் தாத்ரி என்ற கிராமத்தில் மாட்டுக் கறி வைத்திருந்தார் என்ற குற்றத்துக்காக ஒரு முஸ்லிமை அரக்கர்கள் அடித்துக் கொன்றதுதான். இந்தியாவே இந்தக் கொடூரத்தை விமர்சித்தது ; விசாரித்தது; விவாதித்தது. இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு எதிராக எழுந்த எதிர்ப்புக்குரல் இமயமலையில் கூட எதிரொலித்தது. நாம் இன்று இந்தத் தலைப்பில் பெரும்பகுதி பேசப் போவது முகமது அக்லக் என்ற ஏழையின் கொடூரக் கொலையைப் பற்றி அல்ல. அந்தக் கொலையைத் தொடர்ந்து நாட்டின் சில தலைவர்கள் தெரிவித்துள்ள சீண்டிவிடும் கருத்துக்கள் பற்றித்தான் அலச இருக்கிறோம்.

முதலாவதாக ஒரு இழவு விழுந்த வீட்டில் ஆறுதல் சொல்லும் பண்பாடும் கண்ணியமும் கலாச்சாரமும் அற்ற மகேஷ் சர்மா என்கிற ஒருவர்தான் இந்தியாவின் கலாச்சாரத்தை கட்டிக் காப்பாற்றும் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ள கலாச்சாரத்துறை அமைச்சர் என்று அறிகிறபோது “ பாரத நாடு பழம்பெரும் நாடு" என்று பாடிய பாரதி இப்போது இருந்தால் தற்கொலை செய்து கொள்வார். 

முகமது அக்லக் கல்லாலேயே அடித்துக் கொள்ளப்பட்டது ஒரு சாதாரண விபத்து, இத்தகைய சம்பவங்கள் நடப்பது தவிர்க்க முடியாதது என்பதுதான் அமைச்சரின் வாயிலிருந்து உதிர்ந்த மணிமொழிகள். அதுமட்டுமல்ல அதையும்தாண்டி அவர் சொல்லி இருப்பது முகமது அக்லக்கை கொன்றதை விடவும் கொடூரமானது. முகமது அக்லக்கை கொல்லத்தானே செய்தார்கள் அவருடைய வீட்டில் 17 வயது பெண் இருந்தாளே அவளை கற்பழிக்கவா செய்தார்கள்? என்றும் கேட்டிருக்கிறார். அமைச்சரின் இந்த இரண்டு கொடிய வார்த்தைகளும் அவர் வகித்துவரும் பதவிக்கும் அவர் பொறுப்பேற்றுள்ள துறைக்கும் இந்த நாட்டுக்கும் ஏற்பட்டுள்ள இழிவு என்றுதான் வேதனையுடன் குறிப்பிடவேண்டும். 

அடுத்ததாக, இந்தியாவின் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வண்டிய பொறுப்பில் இருக்கும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “ இது ஒரு சாதாரண உள்ளூர் சம்பவம் இதை அரசியலாக்குகிறார்கள் ஊடகங்கள் பெரிது படுத்துகின்றன" என்று கூறி இருக்கிறார். எது சாதாரண சம்பவம்? 

சம்பவம் நடந்த தாத்ரியில் ஒரு இந்துக் கோயிலில் இந்து சகோதரார்கள் கைதட்டி பஜனைப் பாடல்கள் பாடிக் கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்போது அங்கு வந்த சில குண்டர்கள் நம்மை அவமானப்படுத்த வேண்டுமென்பதற்காகவே ஒரு முஸ்லிம் பசுவைக் கொன்று கறி சமைத்திருக்கிறான் அதற்கு நாம் பழி வாங்க வேண்டுமென்று உசுப்பேத்திவிடவும் பஜனையில் ஈடுபட்டிருந்த கூட்டம் வெறிகொண்டு அக்லக்கின் வீடு நோக்கிக் கிளம்பி அவர்கள் சொன்னது எதையும் காதிலே வாங்கிக் கொள்ளாமலேயே செங்கல்லால் அடித்தே அக்லக்கை கொன்று இருக்கிறது இப்படி ஊர் கூடி ஒருவரை அடித்துக் கொள்வது சாதாரண சம்பவமா? இதுபோல சம்பவங்கள் இந்தியா முழுதும் நடந்தால் மத்திய உள்துறை அமைச்சர் கைகளை கட்டிக கொண்டு சாதாரண சம்பவம் என்று சல்லாபக் கட்டிலில் சாய்ந்து படுத்திருப்பாரா?

நாடெங்கும் நடைபெற்ற விவாதங்களில் கலந்து கொண்டவர்களில் தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் பொருளாளர் எஸ் ஆர் சேகர் என்பவரும் முக்கியமானவர். தாத்ரி படுகொலை பற்றி இவர் எடுத்துவைத்த வாதம் என்னவென்றால் பசுவதை தடை சட்டம் அமுலில் உள்ள மாநிலத்தில் சட்ட மீறுதல் நடந்திருக்கிறது அதனால் வெகுண்டேழுந்த மக்கள் இவ்வாறு செய்துவிட்டாகள் என்று சொல்லி இருக்கிறார். எஸ் ஆர் சேகர் கூறுவதை நாம் எஸ் ஸார் என்று சொல்ல முடியாது இருந்தாலும் ஒரு வாதத்துக்காக ஒப்புக் கொண்டு நாம் கேட்க விரும்புவது என்னவென்றால் பசுவதை சட்டம் அமுலில் உள்ள இடத்தில் அதை மீறினால் அதற்கு தண்டனை தருவதற்கு அந்த சட்டப்படித்தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமா அல்லது தடி எடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள் ஆகவேண்டுமா? என்பதுதான். பல கொடிய குற்றங்களைச் செய்தவர்கள் மீதெல்லாம் வருடக்கணக்காக வழக்குகளை நடத்திக் கொண்டிருப்பானேன். ஒவ்வொரு குற்றவாளிகள் வீட்டுக்கும் ஆயிரம் அடியாட்களை அனுப்பி அடித்துக் கொல்ல வேண்டியதுதானே! இவர்களில் முதல் பட்டாளத்தை மத்தியப் பிரதேசத்துக்கு அனுப்பி வியாபம் ஊழலில் ஈடுபட்டவர்களை கொலை செய்த குற்றவாளிகளின் வீடுகளுக்கு அனுப்ப வேண்டியதுதானே. இரண்டாவது பட்டாளத்தை தேடப்படும் குற்றவாளியான லலித் மோடிக்கு உதவிய உன்மத்தர்களின் வீடுகளுக்கு அனுப்ப வேண்டியதுதானே. இந்த நாட்டில் வீதிக்கொரு சாதி ஆளுக்கொரு நீதி யென்று அட்டூழிய ஆட்சியை தொடர்ந்து நடத்த இயலுமென்று எண்ணிக் கொண்டு இவ்வாறெல்லாம் பேசுகிறார்களா? 

அடுத்ததாக, தரங்கெட்ட பேச்சுக்களுக்காகவே நாட்டில் ஒரு விருது வழங்கப்பட வேண்டுமென்றால் தனது விலங்கினத் தோழர்களுடன் சேற்றில் புரளத் துடிக்கும் பாரதீய ஜனதாவின் தேசிய செயலாளர் ஹெச் ராஜாவுக்குத்தான் வழங்கப்பட வேண்டும். அந்த அளவுக்கு தரக்குறைவாகப் பேசுவதற்கு, அகில இந்தியாவிலும் இவரை விட்டால் ஆள்கிடைக்காது. இவரது அடக்க இயலாத நாவின் அத்துமீறலான பேச்சுக்கு ஆயிரம் உதாரணங்கள் உள்ளன. தந்தை பெரியாரை செருப்பால் அடிக்க வேண்டுமென்றார்; வை. கோ பத்திரமாக வீட்டுக்குப் போக இயலாது என்றார்; முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது பரீட்சைகளில் காபி அடிக்கவே என்றார். இப்போதும் ஏதோ முஸ்லிம்களை அவமானப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு ஏற்கனவே தரம் தாழ்ந்து போயிருக்கும் இவர் இன்னும் தன்னையே தரம் தாழ்த்திக் கொண்டு ஓர் கருத்தை சொல்லி இருக்கிறார். 

ஹெச் ராஜா , அந்தக் கருத்தை சொல்ல வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்றால் மாட்டுக் கறி வைத்திருந்தார் என்ற குற்றத்துக்காக அநாதரவாக இருந்த முகமது அக்லக்கை அடித்துக் கொன்றீர்களே இதோ நாங்கள் மாட்டுக் கறி விருந்தே வைக்கிறோம் முடிந்தால் வந்து பாருங்கள் என்று நாடெங்கும் ஊடகங்களில் அழைப்பிதழ் கொடுத்து மாட்டுக் கறி பிரியாணி, கபாப், வறுவல், மசாலா போன்ற பல சுவைதரும் அயிட்டங்கள் பரிமாறப்பட்டன. தமிழ்நாட்டில் , தலைநகர் சென்னை முதல் திண்டுக்கல் , திருச்சி, மதுரை, சேலம் முதலிய பெரு நகரங்களிலிருந்து சிறிய கிராமம் வரை இத்தகைய விருந்துகள் நடத்தப்பட்டன. சமூக வலைதளங்களில் அவற்றின் வண்ணப்படங்கள் வெளியிடப்பட்டன. 

இவைகளைப் பார்த்த ஹெச் ராஜாவுக்கு தானும் ஏதாவது சொல்லவேண்டுமென்று ஒரு அரிப்பு. நீங்கள் மாட்டுக் கறி விருந்து வைத்தால் நாங்கள் பன்றிக்கறி விருந்து வைப்போம் என்று சொல்லி இருக்கிறார். பன்றிக் கறி விருந்து வைக்கிறார் என்றால் முஸ்லிம்கள் கொதித்து எழுவார்கள் அதனால் கலகம் வரட்டும் என்று தப்புக் கணக்குப் போட்டு அந்த வார்த்தைகளை சொல்லி இருக்கிறார். தனது தொழிலில் இவர் ஒரு சார்டட் அக்கவுண்டன்ட் ஆனால் அரசியலில் அல்லது ஆன்மீகத்தில் இவர் போடும் கணக்கு தவறானது என்பதை ஹெச் ராஜா உணரவேண்டும். 

இஸ்லாம் பன்றிக் கறிக்கு எதிரானது ; இது பற்றி திருக் குர் ஆன் தடைகளை விதிக்கிறது அதனால் நாம் பன்றிக்கறி விருந்து வைப்போம் என்று தனது அரைகுறை அறிவை வைத்து சிந்தித்து இருக்கிறார். ராஜா அவர்களுக்கு சொல்லிக் கொள்வோம். ஆமாம் ! இஸ்லாம் பன்றிக்கறியை தடை செய்துதான் இருக்கிறது. ஆனால் அது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல ; ஒட்டு மொத்த மனித சமூகத்துக்கே அந்தத் தடை. காரணம் திருமறை குர் ஆன் அகில உலகத்துக்குமே அருட்கொடையாக அருளப்பட்டது. உலகமக்கள் நல்ல உடல்நலத்தோடு இருக்க வேண்டுமென்று அவர்களைப் படைத்த அல்லாஹ் காட்டிய வழி அது.

இஸ்லாத்தை பற்றிய தவறான புரிந்துணர்வில் இருக்கும் ராஜா போன்றவர்களுக்கு அன்புடனும் பண்புடனும் அவர்களுடைய தவறான புரிந்துணர்வை நீக்கும் நோக்கத்தில் கீழ்க்காணும் சில அறிவியல் ரீதியான உணமைகளை சொல்லிக் காட்டுவோம்.. காரணம் நாங்கள் கற்ற தாவா என்கிற அழைப்புப் பணியில் பிற மத சகோதரர்களுடைய தவறான புரிந்துணர்வை நீக்கும்வண்ணம் உண்மைகளைச் சொல்வதும் ஒரு அம்சம் 

மனித குலத்துக்கு வழிகாட்ட திருமறை குர் ஆனை தந்து அருட் தூதர் மூலம் இறக்கி வைத்த இறைவன் கீழ்க்கண்ட தனது வசனங்களில் பன்றிக்கறியைத் தடை செய்து இருக்கிறான். 
  • 1. "தானாகவே செத்ததும் இரத்தமும் பன்றியின் மாமிசமும் அல்லாஹ் அல்லாதவற்றுக்காக அறுக்கப்பட்டதையும் தடை செய்து இருக்கிறான்" (2: 173)
  • 2. தானாக செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதவருக்காக அறுக்கப்பட்டதும் ,கழுத்து நெரித்து செத்ததும் அடிபட்டுச் செத்ததும் கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டபட்டு செத்ததும் விலங்குகள் கடித்து செத்தவையும் உங்களுக்கு விலக்கபட்டிருக்கின்றன. ( 5:3)
  • 3. நபியே! நீர் கூறும் தானாக இறந்ததாக அல்லது ஒட்டப்பட்ட இரத்தமாக அல்லது பன்றிக் கரியின் மாமிசமாக உள்ளதைத் தவிர வேறு எதையும் உண்பவருக்கு அது உண்ணத் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை . ஏனெனில், நிச்சயமாக அவை அசுத்தமானதாகும். ( 6 : 145)
  • 4. நீங்கள் புசிக்கக்கூடாது என்று உங்களுக்கு அவன் தடுத்திருப்பவையெல்லாம் தானே செத்ததும், இரத்தமும், பன்றியின் இறைச்சியும் எதன் மீது அல்லாஹ் அல்லாத வேறு பெயர் கூறப்பட்டு அறுக்கபட்டதோ அதுவுமேயாகும். ( 16:115 )
மேற்கண்டவாறெல்லாம் , பன்றிக்கறியை திருமறையில் தடை செய்துள்ள இறைவனும் அதை எடுத்துச் சொல்லிய இறைத்தூதர் நபி ( ஸல்) அவர்களும் இந்தத் தடைக்கான காரணத்தைக் கூறவில்லை. தனது திருமறை முழுதும் மனிதனை சிந்தித்துப் பார்க்கச் சொன்னான். 

அதன்படி , ஆறறிவு படைத்த மனிதன் அறிவியல் ரீதியாக ஆராய்ந்தான். பன்றிகள் தனது மலத்தையும் மனிதர்களின் மலத்தை உண்பதாலும், சாக்கடைச சேற்றில் புரள்வதை தங்களின் உயிர்நாடியாக வைத்திருப்பதால் தான் பன்றியின் மாமிசம் அசுத்தமானதாக இருக்கலாம் அதனால் தடை செய்யப்பட்டு இருக்கலாம் என்று என்று சிலர் மேம்போக்காகக் கருதினர். 

இதுதான் காரணம் என்றால் மலத்தை உண்ணும் மாடு, கோழி போன்ற எத்தனையோ உயிரினங்களை ஏன் தடை செய்யவில்லை என்றும் மனிதன் தனக்குள் கேள்வியை எழுப்பிக் கொண்டான். சாக்கடையில் புரளும் பன்றிகள் மட்டுமல்ல மலத்தை உண்ணாத அளவில் சுகாதார சூழ்நிலையில் பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றிகள் கூட தடை செய்யப்பட்டிருக்கிறதே ஏன் என்று அதையும் தாண்டி விரிவாக மனிதன் சிந்தித்தான்.

அந்த சிந்தனையின் பலனாக ஆய்வாளர்களுக்கு , அறிஞர்களுக்கு பல உண்மைகள் வெளிப்பட்டன. அவர்கள் கண்டு பிடித்த உணமைகளின் ஒட்டுமொத்த முடிவு பன்றியின் மாமிசம் மனித உடம்புக்கு ஒவ்வாதது; தீங்கு விளைவிப்பது ; கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டியது என்பதுதான். 

முதலாவதாக பாரதீய ஜனதாகட்சியின் தேசியச் செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் வாய்க்கொழுப்பெடுத்து , பன்றிக்கறி விருந்து வைப்பேன் என்று அறிவிக்கும் முன்பு அவர் விருந்து வைக்கத் தேர்ந்தெடுத்த மெயின் அயிட்டத்தில் ( பன்றிக் கறியின் ) அடங்கி இருக்கும் உட்கூறுகளின் அறிவியல் தன்மைகளை ஆராய்ந்தாரா? 

மனிதன் சாப்பிடும் உணவுகளில் கொழுப்பு – கொலாஸ்டரால்- அவனது உடல் நலத்துக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கிறது என்பதை மருத்துவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். இதயத்தின் இயக்கத்துக்கு கொழுப்பு கேடு விளைவிக்கிறது என்பது மருத்துவத்தின் முடிவு. 

ஹெச் ராஜா அவர்கள் தனது சுய புரிதலுக்காக வேண்டுமானால் ஒரு சோதனைக் கூடத்துக்கு ஆட்டுக்க்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி ஆகிய மூன்றிலும் 100 கிராம் வீதம் எடுத்துப் போய்க் கொடுத்து அவற்றின் கொழுப்பின் அடக்க விகிதத்தை சோதித்துப் பார்க்கட்டும் 100 கிராம் ஆட்டிறைச்சியில் 17 கிராம் கொழுப்பும் 100 கிராம் மாட்டு இறைச்சியில் 5 கிராம் கொழுப்பும் 100 கிராம் பன்றி இறைச்சியில் 50 கிராம் கொழுப்பும் உள்ளது என்கிற உண்மையை அவர் தெரிந்து கொள்வார். அதாவது பாதிக்குப் பாதி கொழுப்பு பன்றி இறைச்சியில் உள்ளது. இஸ்லாம் ஏன் பன்றி இறைச்சியைத் தடை செய்துள்ளது என்பது அப்போதாவது அவருக்குப் புரியுமா? .

அடுத்து ஹெச் ராஜா அவர்கள் செல்ல வேண்டிய இடம் ஒரு கால்நடை மருத்துவமனை. அங்கு போய் அங்குள்ள மருத்துவரிடம் கால்நடைகளின் உடற்கூறு அமைப்பைபற்றி அவர் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். வியர்வைச் சுரப்பிகள் என்பவை இறைவனால் மனித உடலில் அமைக்கப்பட்டுள்ள அதிசயங்களில் ஒன்று. இவை கால்நடைகளுக்கும் உள்ளன. 

உடல் சூடாகும்போது தானாகவே வியர்வை சுரந்து வெளியாகி உடல் சூட்டை தணிக்கும் அத்துடன் உடலுக்குத் தேவையற்ற உப்பு முதலிய ஒவ்வாதவைகளும் நீராக வெளியேற்றப்படும். அதனால்தான் வியர்வை நாறுகிறது. . பன்றிக்கு இந்த வசதி கிடையாது. அதாவது மிருகங்களில் பன்றிக்கு வியர்வை சுரப்பி கிடையாது. மனிதர்களும் பன்றி அல்லாத மற்ற உயிரினங்களும் 40 டிகிரி சென்டிகிரேட் அதற்கு மேலும் உடல் சூட்டை தாங்கிக் கொள்ள இயலும் காரணம் வியர்வை சுரப்பிகள் சுரக்கும் வியர்வையின் நீர்த்தன்மையால் உடல் குளிர்ந்து விடுகிறது. . . ஆனால் பன்றிக்கு 29 டிகிரி செண்டிகிரேடுக்கு மேல் உடல் சூட்டைத் தாங்க இயலாது. அதனால்தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்பது போல் சேறு கண்ட இடங்களிலும் சாக்கடைகளிலும் அவை படுத்துப் புரளுகின்றன. 

இதற்கு அடுத்து ஹெச் ராஜா அவர்கள் செல்லவேண்டிய இடம் மைக்ரோ பையாலஜி என்கிற நுண்கிருமிகள் பற்றிய ஆய்வுக்கூடம்.

பன்றியின் இறைச்சியில் மனிதனுக்குக் கேடு செய்கின்ற நாடாப் புழுக்கள் என்ற நுண்கிருமிகள் உள்ளன என்று 2007- ல் கொலம்பியா பல்கலைக் கழகம் கண்டு பிடித்து இருக்கிறது. எவ்வளவு அதிகபட்ச வெப்பத்தில் சூடாக்கி சமைத்தாலும் இந்தப் புழுக்கள் சாவதில்லை. பெருங்குடல் புற்று நோய் போன்ற வியாதிகள் ஏற்பட இந்த நாடாப்புழுக்களே காரணமாகின்றன.. மூளைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல், இதய வீக்கம் உள்ளிட்ட 66 நோய்கள் பன்றி இறைச்சியை உண்பதால் ஏற்படுவதை மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது.

பன்றி உணவை தடை செய்துள்ள அரபு முதலிய இஸ்லாமிய நாடுகளில் இதய வீக்கம் என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களை விட, பன்றியை உணவாகக் கொள்ளும் ஐரோப்பாவில் இதய வீக்கம் உள்ளவர்கள் ஐந்து மடங்கு அதிகமாக உள்ளனர். என்று ஆய்வுகள் கூறுகின்றன. 

ப‌ன்றி இறைச்சியை உண்ப‌தால் "டேனியா சோலிய‌ம்" Taenia Solium (Pork Tapeworm) என்ற‌வொரு புழு, ந‌ம் உண‌வுக்குழ‌லின் அடிப்பாகத்தில் அட்வான்ஸ் தராமல் குடியேறி, அதே பகுதியில்  தன் முட்டைகளை (Ova) இடுகிறது. இந்த முட்டைகள் தான் மிகவும் ஆபத்தானவை. இவை மனிதனின் இரத்த குழாய்களில் பயணிப்பதால் அதன் மூலம் எல்லா உறுப்புகளையும் சென்றடைந்து விடுகின்றன. மனித உடல் உறுப்புகளில் எந்த பகுதிக்கு இந்த முட்டைகள் பரவினாலும் அங்கே ஒரு பாதிப்பை ஏற்படுத்தி விடும். இத‌ய‌ம், மூளை, க‌ண், நுரையீர‌ல் என‌ எல்லா இட‌ங்க‌ளிலும் இந்த டேனியா சோலிய‌த்தின் முட்டைக‌ள் கைவ‌ரிசையைக் காட்டுகின்ற‌ன.

டேனியா சோலியம் என்ற புழுவைப் போன்றே இன்னுமொரு புழு உயிரினம் "ட்ரிசுரா ட்ரிசுராஸிஸ்" (Trichura Tichurasis) பன்றி மாமிசத்தின் மூலம் தான் இதுவும் மனித உடலில் பரவுகிறது .டேனியா சோலியமும் இந்த ட்ரிசுராவும் ஒரே மாதிரியான குணமுள்ள உறவினர்கள்தான்.

ஆனால் இந்த புழுக்களின் முட்டைகள், பன்றி இறைச்சியை நன்கு சமைப்பதால் இறந்து விடுகின்றன என்பது எல்லோர் மத்தியிலும் இருக்கும் பொதுவான தவறான கருத்து. .அமெரிக்காவில் பலமுறை நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ட்ரிசுராஸிஸ்-ஆல் பாதிக்கப்பட்ட 24 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 22 பேர் பன்றிகறியை கருகக் கருக நன்கு சமைத்து உண்டவர்கள்தான். ஆகவே, இந்த புழுக்களின் முட்டை நீரின் கொதிநிலையில் இறப்பதில்லை.

பன்றிக் காய்ச்சல் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். எங்காவது மாட்டுக் காய்ச்சல் , ஆட்டுக் காய்ச்சல் என்று கேள்விப்பட்டு இருக்கிறோமா? "இன்ஃபுளூயன்ஸா ஏ எச்1 என்1' வைரஸ்தான் பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்துகிறது. இதுதான் முதலில் "ஸ்வைன் ஃப்ளூ' என்று அழைக்கப்பட்டது. இந்த வைரஸ் முதன்முதலில் மெக்ஸிகோவில் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது இந்தியா உள்பட 76 நாடுகளுக்குப் பரவியுள்ளது. வட அமெரிக்காவில் உள்ள பன்றிகளில் காணப்படும் வைரஸ் , இந்த வைரஸுடன் ஒத்திருப்பதால் முதலில் "ஸ்வைன் ஃப்ளூ' என அழைக்கப்பட்டது.

இன்னொரு செய்தியும் இருக்கிறது ஆனால் அதை ஹெச் ராஜா அவர்கள் தேவையானால் பயன்படுத்தலாம். அர்ஜென்டினாவில் அதிபர் மாளிகையில் வர்த்தகர்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் அந்நாட்டின் அதிபர் கலந்துகொண்டு பேசும்போது தற்போது பாலின உணர்வைத்தூண்டுவதற்காக வயாகரா என்கிற மாத்திரை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பன்றியின் இறைச்சி அதைவிடச் சிறந்தது என்று பேசினார். அதை தனது சொந்த அனுபவத்தில் தானும் தனது கணவரும் உணர்ந்து இருப்பதாகப் பேசினார் அந்தப் பெண் அதிபர். ஒரு வேளை பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியில் தனது கட்சியின் உறுப்பினர்கள் இன்புற்று வாழ அந்தக் கட்சியின் தேசிய செயலாளர் பன்றிக்கறி விருந்தை ஏற்பாடு செய்வதில் யாருக்கும் மாறுபட்ட கருத்தில்லை. மனைவியைப் பிரிந்து இருக்கும் பிரதமர், அதில் கலந்துகொண்டால்தான் கஷ்டம்.

பன்றிக்கறி இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டு இருக்கலாம். அந்தத்தடை மனித குலத்தின் நன்மையைக் கருதிய தடை. ஆனால் இவ்வாறு இஸ்லாம் தடை செய்த பன்றிக்கறியை மற்ற மத சகோதரர்கள் சாப்பிடக் கூடாது என்றோ பன்றிகளை வளர்க்கக் கூடாது என்றோ எந்த முஸ்லிமாவது எப்போதாவது எங்காவது போராட்டம் நடத்தி இருக்கிறானா? பன்றிக்கறி சாப்பிடுபவன் வீட்டிலோ அல்லது கடைகளிலோ வன்முறையைப் பயன்படுத்தி தடுத்திருக்கிறானா? முஸ்லிம்களுக்கு தடை செய்யப்பட்டதை விட்டு அவன் விலகி இருக்கிறான். அவ்வளவுதான். இவ்வாறிருக்க முஸ்லிம்களுக்கு எதிராக சொல்வதாக நினைத்துக் கொண்டு திரு ராஜா சாக்கடையில் புரளும் தனது சக நண்பர்களை அறுத்து சோறு சமைத்து விருந்து வைக்க விரும்பினால் அது அவரது இஷ்டம். குடல் நோய் ஏற்பட்டு, மாரடைப்பு ஏற்பட்டு, காமக்கொடூரனாகி வாழ வேண்டுமென்றால் பன்றிக்கறியை பட்டி தொட்டி எங்கும் பரப்பிவைத்து அவர்கள் சாப்பிடட்டும். எந்த முஸ்லிமும் இதற்காக, அவர்களைப் பார்த்து பரிதாபப்படுவதைதவிர வேறு ஒன்றும் செய்யப்போவதில்லை. சீண்டுகிறேன் என்று சீரழிய வழி தேடுபவர்களைப் பார்த்து சிரிப்பதைத் தவிர ஒன்றுமில்லை. அறிவியல் ரீதியாக அல்லாஹ் வகுத்துத் தந்த ஹராம் ஹலால் பேணி , மறை 
வழி நடப்பதைவிட ஒரு முஸ்லிமுக்கு வேறு ஒன்றுமில்லை. 

இப்ராஹிம் அன்சாரி

பசுமை அதிரை 2020 - WE SUPPORT ! 11

அதிரைநிருபர் பதிப்பகம் | October 10, 2015 | , ,

அஸ்ஸலாமு அலைக்கும்.

முகநூல் என்பது வெறும் பொழுது போக்கு அதில் பயனுள்ள காரியங்களை சாதிக்க  இயலாது என்று ஒரு வாதம் உலவுதல்  உண்டு. ஆனால் அதையும் பயனுள்ள காரியங்களுக்குப் பயன்படுத்தலாம் என்பதை  சிந்தித்து இந்தக் குழுவை உருவாக்கி நமது ஊரைச் சேர்ந்த பலரை இதில் இணைத்து இருக்கிறார்கள். 

நமது ஊரைச் சார்ந்த பல பிரச்னைகள் , கருத்துக்கள் இங்கே விவாதிக்கப்படுகின்றன. இதுவரை பயனுள்ளதாக எதையும் நாம் செய்யவில்லை என்றாலும்  சில சிந்தனைகளின் பிறப்பிடமாகவும் சில செயல்பாடுகளின் களமாகவும் இந்தத் தளம் அமைந்திருப்பதையும் உருவெடுத்து வருவதையும்  மறுக்க இயலாது. 

அந்த வகையில் அதிரை பசுமை 2020 என்ற ஒரு அழகிய  கருத்து இந்தக் குழுவால் முன்னெடுக்கப்பட்டு திட்டமிடப்பட்டு இருக்கிறது. நான் அறிந்த வரை இந்தத் திட்டத்தில் கீழ்க்கண்ட     பணிகளை முன்னோடியாக செயல் படுத்த  இருக்கிறோம். 
  • 1. ஊரைச் சுற்றியுள்ள  காட்டுக் கருவைச் செடிகளை வேரோடு பிடுங்கி வீசி எறிவது. 
  • 2. நீர் நிலைகளில் , நீர்நிலைகளைச் சுற்றியுள்ள கரைகளில் முளைத்திருக்கும் காட்டுக் கருவை முதல் ஆகாயத் தாமரை, கோரைப்புல்  முதலிய ஆக்கிரமிப்புச் செடிகளை அகற்றுவது 
  • 3. காட்டுக் கருவை அழிக்கப்பட்ட இடங்களில் வாய்ப்புள்ள இடங்களில் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத புங்கை, புன்னை, செம்மரம், வேம்பு, வேப்பங்கன்றுகள் ஆகிய மரக்கன்றுகளை நடுதல் 
  • 4. இராஜமடம் ரயில்வே கேட்டிலிருந்து  முத்தம்மாள் தெரு முனை வரை சாலையின் இரு புறமும் மரக் கன்றுகளை நடுவது
  • 5. முத்தம்மாள் தெரு முனையிலிருந்து தக்வா பள்ளி ஆட்டோ ஸ்டாண்ட் வரை சாலையின் இரு புறமும் மரக்கன்றுகளை நடுவது 
  • 6. கருங்குளம் பாலத்திலிருந்து மாரியம்மன் கோயில் ஆர்ச் வரை சாலையின் இருபுறமும்  மரக்கன்றுகளை நடுவது 
  • 7. நடுவிக்காடு சாலைப் பிரிவு முதல் வண்டிப்பேட்டை வரை சாலையின் இரு புறமும் மரக்கன்றுகளை நடுவது 
  • 8. மழைவேனிற்காடு ( எவ்வளவு அழகான பெயர்)  மில் முதல் வண்டிப்பேட்டை வரை சாலையின் இருபுறமும் மரக் கன்றுகளை நடுவது 
  • 9. நடுத்தெருவிலிருந்து மறைக்கா பள்ளி செல்லும் சாலை வழியாக ஒரு புறம் நெசவுத்தெரு மறுபுறம் மேலத்தெரு கடைசி வரையும்  மரக்கன்றுகளை நடுவது 
  • 10. இ சி ஆர் சாலையிலிருந்து  ரயில்வே சதேஷ செல்லும் சாலையிலும் இரு புறமும் மரக்கன்றுகளை நடுவது  
  • 11. பட்டுக் கோட்டை சாலைப் பிரிவிலிருந்து சி. எம். பி கால்வாயின் இருபுறமும் வள்ளியம்மை நகர் வரை மரக்கன்றுகளை நடுவது 
  • 12. பிளாஸ்டிக் உபயோகத்தை தடுக்கும் விதமாக இந்தக் குழு உறுப்பினர்கள் தங்களின் சொந்த பண்பாட்டிலும் குடும்ப நிகழ்ச்சிகளிலும் பிளாஸ்டிக்கை அறவே பயன்படுத்தாமல் மற்றவர்களுக்கு வழி காட்டுவது 
ஆகிய திட்டங்களை இந்த தாயபுள்ளைவோ  குழு ஆரம்ப கட்டமாக பரிந்துரைக்கிறது. தொடர் பணிகளை இதற்காக அமைக்கப்படும் குழுவினரின் தேவைக்கேற்ற பரிந்துரையின்படி செயல்படுத்த முயல்வோம்.  

கருவைச்செடி அழிப்பு, மரக்கன்று நடல் ஆகிய பணிகளுக்காக  கல்லூரி , பள்ளி மாணவர்களை களமிறக்கத் திட்டமிட்டு இருக்கிறோம். அதற்காக முதல்வர் மற்றும் தலைமை ஆசியர்களை முதல் கட்டமாக சந்தித்துப் பேசி இருக்கிறோம். மேலும் சில  பணியாட்களையும் நியமிக்க நேரிடும். அவர்களுக்கு ஊதியம் கொடுக்க நேரிடும்.  

மரக் கன்றுகள் பல  இலவசமாகவும்  கிடைக்க ஏற்பாடு செய்து இருக்கிறோம். அத்துடன் வெளிநாடுகளிருந்து மரக் கன்றுகளுக்காக பொருளுதவி செய்யவும் பலர்  போட்டி போடுகிறார்கள். மேலும் கன்றுகள் நடப்பட்டபின் அதற்கான இரும்புக் கூண்டுகளை அமைக்கவும் பலர் பொறுப்பேற்க வேண்டும். அல்லது திரட்டப்படும் நிதியிலிருந்து அவற்றை இந்தக் குழு வழங்கும். 

ஜே சி பி போன்ற இயந்திரங்களை வாடகைக்கு எடுக்க, பணி செய்வோருக்கு குடி தண்ணீர், காலை உணவு, தேநீர் ஆகியவற்றை வழங்க கணிசமாக பொருட்செலவு ஏற்படும். அவற்றை தந்து உதவ பல நல்ல உள்ளங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. 

அந்தந்த மொஹல்லாவில் கன்றுகள் நடுவதற்கு அந்தப் பகுதியின் வயதானப் பெரியவர்களை அழைத்து அவர்களது கரங்களால் நடச்செய்ய வேண்டுமென்றும் குறிக்கோள் வைத்து இருக்கிறோம்.   அந்தந்த தெருக்களில் நடப்படும் கன்றுகளை அந்தந்த தெருவினர் பராமரித்துக் கொள்ள கோரிக்கைவிடப்படும்.  

இந்தப் பணிகளை   நிர்வாகப்படுத்துவதற்காக ஒரு குழுவை அமைப்பது தொடர்பாக வரும் வாரங்களில் பேரூராட்சித் தலைவர்  , பேராசிரியர் அப்துல் காதர் , கல்லூரி முதல்வர், தலைமை ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், தன்னார்வ தொண்டு அமைப்பின் நிர்வாகிகள், ஊர்ப் பெரியவர்கள், அனைத்துத் தெரு மொஹல்லா தலைவர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், இணைய தள நிர்வாகிகள், இயக்கங்கள் மற்றும் பொதுநல சங்க நிர்வாகிகள்  ஆகியோர் கலந்து கொள்ளும் ஒரு கலந்துரையாடலை தொடக்கமாக ஏற்பாடு செய்ய இருக்கிறோம். அந்த விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். 

இந்தக் கலந்துரையாடலுக்குப் பிறகு பசுமை அதிரை என்ற பெயரில் ஒரு வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டு இதற்காக வழங்கப்படும் நிதியைக் கையாள ஒரு பொருளாளர் நியமிக்கபடுவார். இவற்றை மேற்பார்வை இடவும் திட்டம் மற்றும் செலவுகளுக்கு ஒப்புதல் அளிக்கவும் தலைவர்  உள்ளிட்ட  ஒரு குழுவும் நியமிக்கப்படும்.  

தொடக்கமாக, உள்ளூரில் மக்கள் தொடர்பு மற்றும் அரசு தொடர்பான காரியங்களை  மேற்கொள்ள அதிரை நியூஸ் வலைதளத்தின் தலைமை நிர்வாகி ஷேக்கனா  நிஜாம் அவர்கள் முன்வந்து இருக்கிறார்கள்.  

இந்தப் பணி முழுக்க முழுக்க ஒட்டுமொத்த சமுதாய நலனை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. அரசியல் , தனி நபர், சாதி, சமய  வேறுபாடுகள் அல்லது விளம்பரங்கள் இல்லாமல் மனமார்ந்த அர்ப்பணிப்போடு மட்டுமே மேற்கொள்ளப்படும். 

இந்தப் பணியில் கரம் கோர்க்க விரும்பும் வெளிநாடு , உள்ளூரில் இருக்கும் நண்பர்கள் தங்களின் விருப்பத்தை இந்தப் பணிக்கான தொடர்புக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும்   0091 – 8148440853 என்ற அலைபேசியில் தொடர்பு கொண்டு பதிந்து கொள்ளலாம். பதியும் நேரம் எல்லா நாட்களிலும் இந்திய நேரம் காலை 6 மணி முதல் 9 மணி வரையும் , பிற்பகல்  4 மணி முதல்  10 மணி வரையும் ஆகும். 

தாய புள்ளையலுவொ முநூல் குழுமத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருப்பவர்கள் அல்லது இணைய இருப்பவர்க்ள் தங்களது மனதைத் திறந்த கருத்துக்களை அந்த குழுமத்தில் எடுத்துரைக்க அன்போடு அழைக்கிறோம் !

இந்த நற்பணியில் அனைவரும் தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்து கரம் கோர்க்கும்படிக் கோருகிறோம்.  

இந்தப் பணி பற்றிய தங்களின் அன்பான கருத்துக்களையும் அன்பான மேலதிக பதிவிட வேண்டுகிறோம். 

வஸ்ஸலாம். 

இப்ராஹிம் அன்சாரி


சீனி சக்கரை சித்தப்பா சீட்டிலே எழுதி நக்கப்பா – எபிசோட் எண் இரண்டு 8

அதிரைநிருபர் பதிப்பகம் | October 03, 2015 | , , , , , ,

தமிழ் மொழியில் தலையாயதும் அழகானதும் உணர்வுபூர்வமானதுமான வார்த்தை என்ன என்று கேட்டால் “அம்மா “ என்றுதான் அனைவரும் சொல்வார்கள். இன்று தமிழ்நாட்டைப் பொறுத்தவரை “ அம்மா” என்கிற வார்த்தைக்குப் பொருளும் புகழும் சக்தியும் - அந்த வார்த்தையின் உண்மைப் பொருளைவிடவும் - அதிகமாகும். காரணம் தமிழகத்தின் முதல்வரின் பெயர் செல்வி ஜெயலலிதா என்று சொல்பவர்களைவிட அம்மா என்று சொல்பவர்கள்தான் அதிகம். அம்மா என்றால் என்ன என்று யாராவது கேள்வி எழுப்பினால் அடிமைப் பெண் என்ற திரைப்படத்தில் இன்றைய தமிழக முதலமைச்சர் அவர்கள் தனது சொந்தக் குரலில் பாடிய ஒரு முழுப் பாடலையே நாம் பதிலாகக் சொல்லாம்.

“அம்மா என்றால் அன்பு
      அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி “

- என்று தொடங்கும் அந்தப் பாட்டில்

“அன்பின் விளக்கம் பண்பின் முழக்கம்
          அம்மா என்றொரு சொல்லில் உண்டு
பத்துத் திங்கள் மடி சுமப்பாள் பிள்ளை
          பெற்றதும் துன்பத்தை மறப்பாள்
பத்தியமிருந்துக் காப்பாள் தன்
          ரத்தத்தைப் பாலாக்கிக் கொடுப்பாள் ” 

என்றெல்லாம் செல்வி ஜெயலலிதா  அம்மாவின் தன்மைகளைப் புகழ்ந்து பாடி இருப்பார்.

இவர் இப்படிப் பாடாவிட்டாலும் கூட ,  உலகில் பிறந்த அனைவரையும் அன்பால் கட்டிப் போடும் ஒரு மந்திரச் சொல்தான் அது . அம்மா என்கிற வார்த்தைக்கு இவ்வளவு மகிமை ஏற்படக் காரணம் அம்மா என்பவள் ஒரு ஒப்பற்ற தியாகி; இருக்கும் பிடி சோறும் தனக்கென எண்ணாமல் பிள்ளைக்கு ஊட்டி மகிழ்கிற தேவைதை அவள்; ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தால் வாங்கலாம் அம்மாவை வாங்க முடியாது. இரண்டு நிமிடம் கூட இறக்கிவைக்க இயலாமல் அந்த சுமையை பத்துமாதம் சுமந்து பெற்று பாலூட்டி வளர்ப்பவள் அம்மா. பெற்ற பிள்ளைகளிடம் பாசமுள்ள அம்மா பொய் சொல்ல மாட்டாள்; பெற்ற பிள்ளைகளை பாசமுள்ள அம்மா ஆசைகாட்டி மோசம் செய்ய மாட்டாள். பெற்ற பிள்ளைகளை அம்மா பேணி வளர்க்க தன்னையே தியாகம் செய்வாள். பிள்ளைகள் கேட்பதையும் கேட்காததையும் கூட குருவி,  கூட்டில் வாழும் தனது  குஞ்சுகளுக்கு இரை தேடிக் கொடுப்பது போல் கொடுப்பாள். கோழி தனது குஞ்சுகளை தனது இறக்கைகளுக்குள் அணைத்துப் பாதுகாப்பது போல் பாதுகாப்பாள்  அவள்தான் அம்மா; உண்மையான அம்மா.

மேற்கண்டவைகள் சுருக்கமாக,  பொதுவான அம்மாமார்களுக்குரிய அழகான தன்மைகள்; உண்மைகள்.

குடும்பத்தில் வாழும் அம்மாக்களை விட ஆட்சி, அதிகாரம் , நினைத்ததை முடித்திட   இயன்ற ஆற்றல் ஆகிய யாவும் ஒருங்கே குவிந்து அமைந்த அம்மாவுக்கு தனது பிள்ளைகளிடம் இன்னும் அதிகமான அளவுக்கு  அன்பும் பாசமும் செலுத்த இயலும்; அவர்களுக்குத் தேவையானவற்றை தேடிக் கொடுக்கவும் அந்த  அம்மாவால் இயலும். அதுவும் இந்த அம்மாவால் இமயத்தைக் கூட கன்னியாகுமரியில் வைக்க இயலும் என்று அவரது கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் பேசுகிறார்.

இப்போது அம்மாவை விட்டுவிட்டு அரசியலுக்கு  வருவோம்.

கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் மீது அதிருப்தி அடைந்த மக்கள் இன்னொரு முறை வாய்ப்புக் கொடுப்போமென்று நல்ல பெரும்பான்மையில் ஆட்சியமைக்கும் வகையில் அம்மையார் செல்வி ஜெயலலிதா அவர்களிடம் முதலமைச்சர் பொறுப்பை மீண்டும் வழங்கினார்கள். தமிழ்நாடு ஒரு தன்னிகரற்ற  மாநிலமாக – இந்தியாவிலேயே முதலிடம் பெரும் தகுதி படைத்த மாநிலமாக மாற்றிக் காட்டுவேன் என்று அம்மையார் அறைகூவினார்கள்; அம்மாவே சொல்லிவிட்டார்கள் ஆகவே முன்னேற்றம் நிச்சயமென்று மக்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்போது இந்த ஆட்சியின் ஐந்தாண்டுக் காலம் நிறைவடையும் நேரம் வந்துவிட்டது. இப்போது மக்கள் தராசுப் படிக் கற்களை தங்களின் கரங்களில் எடுத்து எடை போட ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த நான்கரை ஆண்டுகள்  ஆட்சியில் கட்சி சார்பில்லாத நம்மைப் போன்ற நடுநிலையாளர்களின் கண்களுக்குப் பளிச் என்று தெரிவது முதலமைச்சர் அம்மையார் அவர்கள் சட்டமன்றத்தில் 110 விதியின்  கீழ் அறிவித்த அறிவிப்புகள்தான். இந்த அறிவிப்புகளைப் பற்றி அலசும் முன்பாக, 110 விதி என்றால் என்ன என்பதை சொல்லி விடலாமென்று கருதுகிறோம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 208  வது பிரிவு,  1- வது உட்பிரிவின் ஷரத்துக்களின்படி தமிழ்நாடு சட்டமன்றத்தின் நடப்பு விதிகள் இயற்றப்பட்டிருக்கின்றன. இவற்றில்  23 அத்தியாயங்களும்  292 விதிகளும் உள்ளன. விதிகளில் உட்பிரிவுகளும் உள்ளன.. இந்த விதிகளின் அம்சங்களின் அடிப்படையில்தான் சட்டபேரவை , பேரவைத் தலைவரால் நடத்தப்பட வேண்டும். இந்த விதிகளின்படிதான் அமைச்சர்கள் முதல் அனைத்து உறுப்பினர்களும் சட்டமன்றத்தின் நடந்துகொள்ள வேண்டும்.  மேலே குறிப்பிட்ட  292 விதிகளுக்குள்தான் விதி எண்  110- ம் வருகிறது.

இந்த 110 – ஆம் விதி என்ன சொல்கிறது என்றால் ,

( 1 ) பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளைப் பற்றி ஓர் அமைச்சர் பேரவைத் தலைவரின் அனுமதியுடன் அறிக்கை ஒன்றை அவைக்கு அளிக்கலாம்

(2) அவ்விதம் அளிக்கப்படும் அறிக்கையின் மீது அவையில் எவ்வித விவாதமும் இருக்கக் கூடாது.

(3) உள் விதி  1- ன் கீழ் அறிக்கையளிக்க விரும்பும் அமைச்சர் எந்த நாளில் அந்த அறிக்கையை அவைக்கு அளிக்க இருக்கிறார் என்பதை பேரவைத் தலைவரின் பார்வைக்கு வைக்கவேண்டும். அதன் பிரதியையும் சட்டபேரவை செயலாளருக்கும் முன்கூட்டியே அனுப்பிவிட வேண்டும்.

இந்த ஏழெட்டு வரிகள்தான் இன்றைய தமிழக அரசியலை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் விதி 110 பற்றி அடிப்படையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியதாகும்.

இந்தவிதி எந்த நிர்வாகப்  பொதுநல நோக்கத்துக்காக கொண்டுவரப்பட்டது என்பதையும் தெரிந்து கொள்வோம்.

அவசர- அவசிய- தலைபோகிற- பட்ஜெட்டில் குறிப்பிடப்படாத- சூழ்நிலையின்  முக்கியத்துவம் கருதி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு பிரச்னையில் அரசு ஈடுபடப் போகிறது என்பதை அவைக்கு அறிவிக்கும் வாய்ப்பே இந்த விதியின் தலையாய நோக்கம். உடனடியாக செய்யவேண்டிய ஒரு பிரச்னையைப் பற்றி அவையில் விவாதித்துக் கொண்டிருந்தால் காலம் கடந்துவிடும் அதனால் பிரச்னை எல்லை மீறிவிடும் என்பதால் அவையில் விவாதிக்காமலேயே அரசு நடவடிக்கையில் இறங்குவதற்கு வழிவகுப்பது இந்த விதியின் முக்கிய அம்சமாகும்.

ஒரு அண்மைக்கால உதாரணத்தை நாம் குறிப்பிட வேண்டுமானால் புனித மெக்காவில் ஏற்பட்ட விபத்தால் பல நூற்றுக் கணக்கான ஹஜ்ஜாஜிகள் எதிர்பாராமல் இறைவனின் நாட்டப்படி மரணமடைந்தார்களே ( இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ) ,   அம்மாதிரியான நிகழ்வுகள் ஏற்பட்டால் ( அல்லாஹ் பாதுகாப்பானாக!) – சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் நிவாரண உதவிகளை அறிவிக்கலாம். சுனாமி, கடும் வெள்ளம் போன்ற இயற்கைப் பேரழிவுகள் எதிர்பாராமல் ஏற்பட்டால் அதற்கான விபரங்களையும் பரிகாரங்களையும் இந்த விதியின் கீழ் அறிவிக்கலாம்.  

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த விதியின் கீழ் வரும் அறிவிப்புகள் அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் சட்டபேரவைத் தலைவர் பி. தனபால் அவர்களே குறிப்பிட்டதைப் போல கின்னஸ் உலக சாதனையில் இடம் பெறத் தக்க வகையில் மொத்தம்  181 அறிவிப்புகளை 110 விதியின் கீழ் அறிவித்து இருக்கிறார். ( இந்து – தமிழ் 30/09/2015)  .

மேலே நாம் குறிப்பிட்டுள்ளபடி அவசர- அவசிய- தலைபோகிற- பட்ஜெட்டில் குறிப்பிடப்படாத- சூழ்நிலையின்  முக்கியத்துவம் கருதி ஏற்படுகிற பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு இந்த 181 அறிவிப்புகளும் உண்மையிலேயே பயன்பட்டிருக்கிறதா என்பதையும் அவ்வாறு அவசரமாக அறிவிக்கபப்ட்டவைகள் அதே  அவசரகதியில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றனவா என்பதையும்தான் நாம் காணவேண்டும்.  இவற்றைக் காண்பதற்கு முன் மாதிரிக்காக  இப்படி அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் எவ்வளாவு காலக்கெடுவில் அறிவிக்கப்பட்டன என்பதன் தொகுப்பை நாம்  காணலாம். .

2011ஆம் ஆண்டு 8-6-2011 முதல் 13-9-2011 அன்று வரை முதலமைச்சர் ஜெயலலிதா 110வது விதியின் கீழ் 19 அறிக்கைகளைப் படித்தார்.

2012ஆம் ஆண்டு 29-3-2012 முதல் 2-11-2012 அன்று வரை முதலமைச்சர் ஜெயலலிதா 61 அறிக்கைகளைப் படித்தார்.

2013ஆம் ஆண்டு 1-4-2013 முதல் 15-5-2013 அன்று வரை முதலமைச்சர் ஜெயலலிதா 46 அறிக்கைகளைப் படித்திருக்கிறார்.

2014ஆம் ஆண்டு 14-7-2014 முதல் 12-8-2014 அன்று வரை முதலமைச்சர் 39 அறிக்கைகளைப் படித்திருக்கிறார்.

இந்த அனைத்து அறிக்கைகளையும் ஒன்று சேர்த்துத்தான் தற்சமயம் நடைபெற்று நிறைவு பெற்ற சட்டமன்றத்தில் , பேரவைத் தலைவர் ஒட்டு மொத்தமாக 181 அறிவிப்புகளைப் படித்து இருக்கிறார் என்று பெருமையுடன் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த 181 அறிவிப்புகளிலும் பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் அறிவிப்புச் செய்து இருக்கிறார். அவைகளின் எண்ணிக்கை சற்றேறக்குறைய அறுநூறு திட்டங்களாகும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

வெளிப்படையாகப் பார்க்கும் போது,  மக்கள் நல அரசு இவ்வாறு அவசரமாக மக்களுக்காக திட்டங்களை அறிவித்து நிறைவேற்றுவது நல்லதுதானே என்றே தோன்றும். ஆனால் இப்படி அறிவிக்கப்பட்ட திட்டங்கள் யாவை என்று ஓரக்கண்ணால் பார்த்தோமானால் அவற்றுள் நமக்குத் தென்படும் சில குறிப்பிடத் தகுந்த அவசரமும் அவசியமும் மக்களுக்கு இன்றியமையாத – இந்தத் திட்டங்கள் நிறைவேறாவிட்டால் நாட்டில் பட்டினிச் சாவு போன்றவை  ஏற்பட்டு விடும் என்கிற அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் சில :

1. மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைப்பது
2. நடப்பாண்டு முதல் மகளிர் இலக்கியங்களைப் படைப்பதில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தித் தொண்டாற்றி வரும் பெண் படைப்பாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் “அம்மா இலக்கிய விருது” என்ற புதிய விருது
3. பிறமொழி படைப்புகளைச் சிறந்த முறையில் தமிழாக்கம் செய்யும் 10 மொழி பெயர்ப்பாளர்களுக்கு ஆண்டுதோறும் சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது வழங்கப்படும்.
4. பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் புகழைப் பரப்பிடும் வகையில் அவரின் 125-ஆவது பிறந்த நாளையொட்டி 125 கவிஞர்களைக் கொண்டு, இரண்டு நாள் கவியரங்கம் ஐந்து லட்சம் ரூபாய் செலவில் நடத்தப்படும்.
5. தமிழ் மொழியின் அற நெறிக் கருவூலமான ஆத்திசூடியை சீனம் மற்றும் அரபு மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.
6. இலக்கணம், இலக்கியம் மற்றும் மொழியியல் துறைகளில் சிறந்து விளங்கும் அயலகத் தமிழறிஞர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும், சித்திரை தமிழ்ப் புத்தாண்டில் `உலகத் தமிழ்ச் சங்க விருதுகள்’ வழங்கப்படும். விருது பெறும் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் பண முடிப்பும் தகுதியுரையும் வழங்கப்படும்

மேலே நாம் குறிப்பிட்டிருக்கும் அனைத்துத் திட்டங்களும் அறிவிப்புகளும் அறிவிப்புகளின் மாதிரிகளில் சில மட்டுமே. மேலோட்டமாகப் பார்க்கும்போது தமிழ் மொழி வளரவும் , தமிழை வளர்க்கவும் முதலமைச்சர் சிறந்த திட்டங்களைத் தானே அறிவித்து இருக்கிறார் என்றே நமக்குத் தோன்றும். நாமும் அதை ஒப்புக் கொள்கிறோம். இந்தத் திட்டங்களை வரவேற்கிறோம்; முதல்வரைப் பாராட்டுகிறோம். ஆனால் இவற்றை 110 விதியின் கீழ் அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? என்பதே எம் கேள்வி.

அண்மையில்தான் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த நிதி நிலை அறிக்கையில் இவற்றை இணைத்து இன்னும்  கூடுதலாகக் கைதட்டல்களை வாங்கிச் சென்று இருக்கலாமே!

மேலே மாதிரிக்காக குறிப்பிட்டுள்ள ஆறு திட்டங்களும் அறிவிப்புகளும் உடனே நிறைவேற்றப் பட்டால் எத்தனை உயிர்கள் அவற்றால் காப்பாற்றப்படும் ?  பற்றி எறியும் நெருப்பை இந்தத் திட்டங்கள் /அறிவிப்புகள் அணைத்துவிடுமா? பஞ்சம் பசியை நீக்கிடுமா? குடிக்க நீரைக் கொண்டுவந்து தந்திடுமா? காவிரியில் நீரை கரைபுரண்டு ஓடவைக்குமா? மின்வெட்டை சீர் செய்து மக்களின் அன்றாட வாழ்விலும் தொழிற்சாலைகளிலும் இருளை நீக்கிடுமா? வேலை வாய்ப்புகளை ஊக்கப்படுத்திடுமா? இல்லை! இல்லை! இல்லவே இல்லை!

ஆனால் இந்த அறிவிப்புகள் பற்றி விதிகளின்படி , சட்டமன்றத்தில்  எதிர்க் கட்சிகள் விவாதிக்க இயலாது ; விளக்கம் கேட்க இயலாது; கருத்துச் சொல்ல இயலாது. எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதற்காகவே இப்படிப்பட்ட சாதாரணமான திட்டங்களை அரசியல் சட்டத்தால் அவசரத்துகாகவே வழங்கப்பட்ட  . 110 விதியின் கீழ் அம்மா அறிவிப்புச் செய்கிறார் என்பதுதான் அரசியலை அறிந்தோர் கருத்தாகும்.

ஜனநாயகம் என்ற தாய்தான் இந்த ஜெயலலிதா  அம்மாவை ஈன்றெடுத்து தமிழக மக்களுக்கு வழங்கினாள். அப்படிப்பட்ட ஜனநாயகத்தாயின் குரல்வளையை – அம்மாவே நெறிக்கலாமா?

இந்தக் கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். உணமையாகவே  110 விதியின் கீழ் அறிவித்து உடனே களப்பணி ஆற்றிடத் தகுதி பெற்ற எந்தத திட்டங்களையுமே அம்மையார்  அறிவிக்கவே இல்லையா?

அப்படி ஒரேயடியாக அம்மாவைக் கைவிட்டு விட இயலாது. பற்பல திட்டங்களை அறிவித்து இருக்கிறார். சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலேயும் ஆகிவிட்டது. அத்தகைய திட்டங்கள் எல்லாம் தமிழக முன்னேற்றத்துக்கு அவசியமானவை; மக்களின் வாழ்வில் உணமையிலேயே மாற்றங்களைக் கொண்டுவரத் தக்கவை. பெயரளவு புரட்சித் தலைவியை உண்மையான புரட்சித் தலைவியாக வைத்துப் போற்றத் தக்கவை. துணை நகரங்கள் முதல் ஒளிரும் மின்திட்டங்கள் , சாலை மேம்பாடு, மேம்பாலங்கள், ரயில்வே மேம்பாலங்கள், அடுக்கு மாடி குடி இருப்புகள், தூர்வாரும் திட்டங்கள் இப்படி பல்வேறு பயன்படும் அறிவிப்புகள் /திட்டங்கள் இந்த விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

அவை யாவை? அவைகளின் நிறைவேற்றம்  எந்த நிலையில் இருக்கின்றன?  

இப்போதுதான்  தலைப்பு நமக்கு நினைவுக்கு வருகிறது. அத்துடன் சிரிப்பும் வருகிறது.

சீனி சக்கரை சித்தப்பா! சீட்டிலே எழுதி நக்கப்பா.

இந்த அலசல் இன்னும் முழுமைபெறவில்லை. சந்திக்கலாம்.. இன்ஷா அல்லாஹ்.

இப்ராஹிம் அன்சாரி

இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் 7

அதிரைநிருபர் பதிப்பகம் | July 05, 2015 | ,

உலகில் தோன்றிய ஒவ்வொரு இனத்துக்கும் மொழிக்கும் சமுதாயத்துக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. தங்களுடைய முன்னோர்களின் வரலாறுகளும் வாழ்க்கை முறைகளும் தற்கால சமுதாயத்துக்கு வழிகாட்டியாக நின்று விளங்கும். தங்களின் கடந்தகால வரலாற்றை மறந்த எந்த சமுதாயமும் தாங்கள் வாழும் நிகழ்காலத்தை நெறிப்படுத்தி வாழவோ எதிர்காலத்தை ஒளிமயமாக்கவோ இயலாது. அந்த வகையில் வரலாறு என்பது வாழும் சமுதாயத்துக்கும் வளரும் சமுதாயத்துக்கும் இன்றியமையாததாக இருக்கிறது. வரலாற்றில் இழைத்த நன்மையான காரியங்களை தொடர்ந்து செய்யவும் தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் வரலாற்று நிகழ்வுகள் படிப்பினையாக நின்று நிலவும். அந்த வகையில் இஸ்லாத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் மின்னலைப் போல் வெட்டி ஒளிவீசிய ஒப்பற்ற சில நிகழ்வுகள் – படிப்பினைகள்- தியாகங்கள் – நினைவை விட்டும் மாறாத சம்பவங்கள் ஆகியவற்றுள் சிலவற்றை மட்டும் இங்கே பட்டியலிட விரும்புகிறேன்.

*பெருமானார் நபி ( ஸல் ) அவர்களை பிடித்துப் போக வந்தவர்கள் :-

பாரசீகத்தை ஆண்ட மன்னன் கிஸ்ரா (Cbosreos Eparwz) என்பவனுக்கு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும்படி அழைப்பு விடுத்து பெருமானார் (ஸல்) அவர்கள் கடிதம் எழுதி அனுப்பினார்கள் . இந்த அழைப்பு அந்த ஆணவம் பிடித்த மன்னனுக்கு ஆத்திரத்தைத் உண்டாக்கியது . பெருமானார் (ஸல்) அவர்களை கைது செய்து பாரசீக மன்னனின் அரசவையில் நிறுத்துமாறு தனது ஆளுமைக்குட்பட்ட எமன் நாட்டு கவர்னருக்கு உத்தரவிட்டான். யாரோடு மோதுகிறோம் என்று எண்ணிப்பார்க்காத அந்த எமன் நாட்டு கவர்னரும்  உடலால் பலம் பொருந்திய தனது  இரண்டு அடியாட்களை பெருமானார் (ஸல்) அவர்களின் சமூகத்துக்கு அனுப்பி அல்லாஹ்வின் அருள் தூதர்   அவர்களைக்  கைதுசெய்து வரும்படி அனுப்பிவைத்தான். 

மதீனாவுக்கு வந்து மாநபி அவர்களின் முன்னே தோன்றிய அந்த இரண்டு அடியாட்களும் பெருமானார் (ஸல்) அவர்களிடம் தாங்கள் வந்த நோக்கத்தைக் கூறி வாயை மூடிக் கொண்டு தங்களுடன் வந்துவிட வேண்டுமென்றும் இல்லாவிட்டால் பாரசீக மன்னனின் படையெடுப்பால் மதினா அழிக்கப்படும் என்றும் பயமுறுத்தினார்கள். இதைக் கேட்ட பெருமானார் (ஸல்) அவர்களின் இதழோரம் ஒரு புன்னகையின் கீற்று மட்டும் வெளிப்பட்டது. இந்த நிகழ்வைக்கண்டு கொண்டிருந்த சஹாபாக்களின் கரங்களோ தங்களின் கொடு வாள்களைத் தொட்டன. தனது தோழர்களை தனது பார்வையால் அமைதிப் படுத்திய பெருமானார் ( ஸல்) அவர்கள் ஏமன் நாட்டு ஏவலர்களைப் பார்த்து , “ நல்லது! இன்று போய் நாளை வாருங்கள் “ என்று சொன்னார்கள். 

இவ்வளவு இலகுவாக தாங்கள் வந்த வேலை முடியுமென்று எதிர்பாராத ஏமன் நாட்டினர் சரி என்று தலையசைத்து, அடுத்தநாள் பெருமானார் (ஸல்) அவர்களைக் கைது செய்து கட்டிக் கொண்டு போகும் ஆவலுடனும் ஆசையுடனும் அவர்களின் முன் தோன்றி, "என்ன தயாராக இருக்கிறீர்களா?" என்று கேட்டனர். உடனே பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்ன செய்தி அந்த அவையில் இருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஆம்! எந்த ஆணவம் பிடித்த கிஸ்ராமன்னன் இறைவனின் அருள் தூதர் அவர்களிக் கைது செய்ய ஆணை இட்டானோ அந்த கிஸ்ரா மன்னன் நேற்று இரவே தனது மகனாலேயே கொலை செய்யப்பட்டுவிட்டான் என்கிற செய்தியே பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னதாகும். 

அவை அதிர்ந்தது. செய்தி எமன் கவர்னருக்குத் தெரிவிக்கப்பட்டு கிஸ்ரா மன்னன் கொல்லப்பட்டதாக பெருமானார் (ஸல்) அவர்களால் சொல்லப்பட்டது உண்மைதான் என்று உறுதிப் படுத்தப்பட்டது. அண்ணல் நபி ( ஸல்) அவர்களின் வாயில் இருந்த வந்த வார்த்தைகளின் வலு என்ன என்பதை வரலாறு குறித்துவைத்துக் கொண்டது. 

ஏமனிலும் இஸ்லாம் உள்ளச்சத்துடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

*ஏழைகளின் பட்டியலில் இடம் பிடித்த கவர்னர்:- 

ஸஅத் இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் இஸ்லாமிய வரலாறு காணும் மனிதர்களில் மறக்க முடியாதவர் ஆவார். ஹஜரத் உமர் (ரலி) அவர்கள் கலீபாவாக பதவி ஏற்ற பிறகு ஸஅத் இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் ஹிம்ஸ் பகுதியின் கவர்னராக நியமிக்கப்பட்டார்கள். பதவிதான் கவர்னர் பதவி . ஆனால் அந்த பதவியின் சுகம் மட்டுமல்ல சாதாரண குடிமக்கள் அனுபவிக்கும் வாழ்க்கைச் சுகங்கள் எதையுமே அனுபவிக்காமலும் அவற்றை அரசு வழங்கியும் ஏற்றுக் கொள்ளாமலும் மிக மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

கவர்னராக ஹிம்ஸ் பகுதிக்கு அனுப்பப்படும்போது அரசாங்க கஜானாவிலிருந்து கவர்னரின் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளும்படி ஹஜரத் உமர் (ரலி) அவர்கள் உத்தரவிட்டுக் கொடுத்த சிறு தொகையைக் கூட ஏழைகளுக்கு தர்மம் செய்துவிட்டு அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழ்க்கையை நடத்தினார்கள். 

இந்த நேரத்தில் , ஹிம்ஸ் வட்டாரத்திலிருந்துஒரு தூதுக்குழு கலிபா ஹஜரத் உமர் (ரலி) அவர்களை சந்திக்கச் சென்றது. அந்த தூதுக் குழுவிடம் உங்கள் வட்டாரத்தில் உள்ள பரம ஏழைகளின் பட்டியல் ஒன்றைத் தருமாறு கலிபா உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். கலிபா அவர்களின் கரங்களில் அத்தகைய ஒரு பட்டியல் தரப்பட்டது. 

அந்தப் பட்டியலில் முதல் பெயர் ஸஅத் இப்னு ஆமிர் (ரலி) அவர்களுடையதாக இருந்ததைக் கண்ட உமர் (ரலி) அவர்கள் அதிர்ச்சியுற்றார்கள். தனது சாம்ராஜ்யத்தின் ஒரு கவர்னரின் பெயர் பக்கீர்களின் பட்டியலா என்று அதிர்ந்தார். கவர்னரின் எளிய வாழ்வை அறிந்த கலிபா அவர்கள் கவர்னரிடம் தரும்படி கொஞ்சம் பணத்தைக் கொடுத்து அனுப்பினார்கள்.

ஆனால் அந்தப் பணத்தை வாங்கி அனுபவிக்க மனமில்லாத கவர்னர் ஸஅத் இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் தனது மனைவிடம் தன்னைத் தேடி இம்மையின் மோசமான பொருள் வந்திருக்கிறது அதை உடனே களைய வேண்டுமென்று சொல்லிவிட்டு அந்தப் பணத்தையும் ஏழைகளைத் தேடித் போய் பகிர்ந்தளித்துவிட்டு என்றும் போல தனது எளிய வாழ்வையே தொடர்ந்தார்கள். அல்லாஹ் அவர்களை நல்ல அடியார்களோடு பொருந்திக் கொள்வானாக. ஆமீன். 

*நினைத்ததும் நடந்ததும் வெவ்வேறு:-

இது ஒரு அழகிய வாழ்வியல் தொடர்பான வரலாற்று நிகழ்வு. ஒரு இளைஞருக்கு கல்விப்பசி அதோடு கூடவே வயிற்றுப் பசியும். பசி வந்திடப் பத்தும் பறந்து போய்விட்டது. இன்னொருவருக்கு சொந்தமான ஒரு ஆப்பிள் தோட்டத்துக்குச் சென்று ஒரு ஆப்பிள் பழத்தைப் பறித்து சாப்பிட்டுவிட்டார். 

வயிற்றுப்பசி நீங்கியது. ஆனால் மனசாட்சி உறுத்தியது. ஆப்பிள் தோட்டத்துக்கு சொந்தக்காரரைத் தேடித் போய் அவரிடம் உண்மையைக் கூறி மனம் பொறுக்கச் சொல்ல வேண்டுமென்று பல இடங்களில் அவரைத்தேடி அலைந்து கண்டுபிடித்து நடந்ததைக் கூறி அவரிடம் மன்னிப்புக் கோரினார். 

ஆனால் தோட்டத்தின் உரிமையாளரோ மன்னிக்க மறுத்தார். அத்துடன், "உனது தவறுக்காக மறுமை நாளில் அல்லாஹ்விடம் உனக்கு எதிராக வாதிடவும் செய்வேன்” என்றார். அந்த இளைஞர் மீண்டும் மீண்டும். “என்னை தயவு செய்து மன்னியுங்கள்” என்று கெஞ்சிக் கொண்டே இருக்க அவரோ எதுவும் பேசாமல் வீட்டினுள்ளே சென்று விட்டார்.

ஆனால் அந்த இளைஞரோ, வீட்டு வாசலிலேயே கால்கடுக்கக் காத்திருந்தார். பொழுதும் சாய்ந்தது இளைஞர் தான் நின்ற இடத்திலிருந்து நகரவில்லை. தோட்டக்காரர் வீட்டை விட்டு வெளியே வந்ததும் மீண்டும் மன்னிப்புக் கோரியதுடன், “ வேண்டுமானால் நான் செய்த தவறுக்காக உங்கள் வீட்டில் வேலைக்காரனாக இருந்து எனது பாவத்தைக் கழிக்க அனுமதியாவது தாருங்கள் “ என்று கேட்டான். 

இளைஞனின் தொடர் போராட்டத்தையும் முயற்சியையும் பார்த்த பெரியவர், 

“சரி! ஒரு நிபந்தனைக்கு நீ உடன்பட்டால் உன்னை மன்னிக்கிறேன் “ என்றார்.

"அப்பாடா!" என்று ஆசுவாசப்பட்ட இளைஞர் அதற்கு சம்மதித்து நிபந்தனையைக் கேட்டார். 

“எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவளை நீ திருமணம் முடித்துக் கொள்ள வேண்டும் அந்த நிபந்தனைக்கு சம்மதமா?" என்று கேட்டார் பெரியவர். இளைஞனுக்கு கரும்பு தின்னக் கசக்கவில்லை. அந்தகனத்திலேயே, “ சரி” என்றான்.

பெரியவர் சொன்னார்., “ அவசரப்படாதே! என் மகளுக்கு சில குறைபாடுகள் உள்ளன. அவள் ஊமை! செவிடு! குருடு ! ஊனமுற்றவள் ! “ என்று சொன்னார். 

இளைஞர் அதிர்ந்தார். ஆனாலும் செய்த சிறு தவறுக்கு இறைவன் முன் மறுமையில் கை கட்டி நிற்க பயந்து அந்தப் பெண்ணை மணம் முடிக்க சம்மதித்தார். திருமண நாள் குறிக்கப்பட்டது. இளைஞரின் மனதிலோ சோகம். அவரது சோகம் நிறைந்த அகத்தின் அழகை முகம் காட்டியது. அதே நிலையில் திருமண ஒப்பந்தம் நிறைவேறியது. பெண்ணைக் கைப்பிடிக்க வீட்டினுள் நுழைந்த இளைஞருக்கு இன்னுமொரு அதிர்ச்சி காத்திருந்தது. 

தனது மனைவியாக ஏற்றுக் கொண்ட பெண்ணைக் கண்ட இளைஞர் ஆச்சரியப்பட்டுப் போனார். ஆம்! அவரின் முன்னே இருந்தது எவ்வித உடல் குறைபாடும் இல்லாத அழகான ஒரு பெண். 

“என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்? நான் ஊமையோ, குருடோ, செவிடோ , ஊனமுற்றவளோ அல்ல. எனக்காக ஒரு பொறுமைசாலியை- இறைவனுக்கு பயந்தவரை என் தந்தை தேடிக் கொண்டிருந்தார். ஒரு பழத்தைத் திருடி சாப்பட்ட காரணத்துக்காக நீங்கள் அல்லாஹ் வுக்கு பயந்து மன்னிப்புக் கோரி நின்ற விதம் அவருக்குப் பிடித்துப் போய்விட்டது. என் சம்மதம் வாங்கி உங்களை எனக்கு மணமுடித்துத் தந்தார்“ என்று அந்தப் பெண் சிரித்துக் கொண்டே சொன்னாள். 

“நான் ஹராமானதைப் பார்ப்பதிலிருந்து குருடானவள்! ஹராமனதைக் கேட்பதிலிருந்து செவிடானவள்! தீயவற்றைப் பேசுவதிலிருந்து ஊமையானவள்! தீய காரியங்களைத் தேடி நடக்காததிலிருந்து ஊனமுற்றவள்! மற்றபடி எனக்கு எந்தக் குறையும் அல்லாஹ் உதவியால் இல்லை" என்றும் கூறினாள். 

இந்த இரு நல்லவர்களுக்கும் பிறந்த மகன்தான் இமாம் அபூஹனிபா ரஹ்மாஹூமுல்லா அவர்கள். 

எறும்புக் கூட்டமும் பறவையும் எத்திவைத்த இஸ்லாம் :- 

திருமறையின் அந்நம்ல் என்கிற 27 ஆம் அத்தியாயம் பல வரலாற்று நிகழ்வுகளைச் சொல்கிறது. குறிப்பாக நபி சுலைமான் ( அலை ) அவர்கள் தொடர்பான இரு வரலாற்று சம்பவங்கள் படிக்கும் நமக்கு படிப்பினை தருவதாகும். 

ஒரு முறை சுலைமான் ( அலை ) அவர்கள் தனது படைகளுடன் போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு எறும்பு, தனது கூட்டத்தின் மற்ற எறும்புகளைப் பார்த்து “எறும்புகளே! நீஙகள் உங்கள் புதருக்குள் புகுந்து கொள்ளுங்கள்; சுலைமானும் அவருடைய படையினரும் தாம் அறியாமலேயே உங்களைத் திண்ணமாக மிதித்து விட வேண்டாம்” எனக் கூறியது. ( 27: 17-18)

இந்த சம்பவம் நமக்கெல்லாம் ஒரு படிப்பினையாகும். ஒரு ஐந்தறிவுள்ள எறும்பு தனது இனத்தைச் சேர்ந்த அறியாமையில் உள்ள எறும்புகள் அழிந்துவிடக் கூடாது என்பதில் காட்டியிருக்கும் அக்கறையை நாம் இதன் மூலம் உணரவேண்டும். ஒரு எறும்புக்கு இருக்கும் சமூகப் பொறுப்பு நமக்கு இருக்கிறதா என்று இந்த வரலாற்று சம்பவத்தை வைத்து நாம் சிந்திக்க வேண்டும். 

நமது சமுதாயத்தின் சகோதரர்கள் அறியாமையால், ஷிர்க்கிலும் பித்அத்துக்களிலும் ஹராம்களிலும் மூழ்கியிருக்கும் போது மது, போதை, சினிமா, புகைத்தல், வட்டி, சூது என தம்மைத்தாமே அழித்துக் கொள்ளும் காரியங்களில் ஈடுபடும் போது நாம் அவற்றைத் தடுக்காமல் இருக்கலாமா? அப்படி இருந்து விட்டால் எறும்பைவிட கீழான நிலைக்கல்லவா மனிதர்களாகப் படைக்கப்பட்ட நாம் சென்று விடுவோம்.

அதே அத்தியாயம் மற்றுமொரு வரலாற்று நிகழ்வையும் கூறுகின்றது. சுலைமான்(அலை)அவர்கள் தனது படையைப் பார்வையிட்டுக் கொண்டு வரும்போது வழக்கமாக இருக்கும் “ஹுத்ஹுத்” என்ற பறவையைக் காணவில்லை. இந்தப் பறவை தாமதித்து வந்து அதற்குரிய காரணத்தைக் கூறாவிட்டால் அதைக் கொன்று விடுவேன்; அல்லது கடுமையாகத் தண்டிப்பேன் என்று கோபத்தோடு கூறினார்கள். அடுத்தநாள் அந்தப் பறவை வந்து சுலைமான் (அலை) அவர்கள் முன் ஆஜராகி தான் வர இயலாத காரணத்தைத் தெரிவித்தது.

"நீங்கள் அறியாத ஒரு செய்தியை நான் அறிந்து வந்துள்ளேன். ஸபாவில் இருந்து உறுதியான ஒரு செய்தியை உங்களிடம் கொண்டுவந்துள்ளேன். அந்த மக்களை ஒரு பெண் ஆட்சி செய்கிறாள். அந்த நாட்டில் சகல வளங்களும் காணப்படுகின்றன. மகத்தானதொரு சிம்மாசனமும் அவளுக்குண்டு. அவளும் அவளது சமூகமும் ஒரே அல்லாஹ்வை வணங்காமல் சூரியனை வணங்குகின்றனர். ஷெய்த்தான் அவர்களது செயல்களை அவர்களுக்கு அழகாக்கி அவர்களை நேர்வழியைவிட்டு தடுத்துவிட்டான். அவர்கள் அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்க வேண்டாமா? என்று கூறியது. ( 27: 20-26)

பறவை தந்த இந்தத் தகவலைக் கேட்ட சுலைமான் ( அலை ) அவர்கள் அந்தப் பெண்ணுக்கு, இஸ்லாத்தின்பால் இணையும் அழைப்பைக் கொடுத்து தஃவா செய்து, அந்தப் பெண்ணும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு இஸ்லாத்தில் இணைந்ததை திருமறையின் இந்த அத்தியாயம் எடுத்துக் காட்டுகிறது. 

ஒரு நாட்டு மக்கள் சூரியனை வணங்குவதைக் கண்டு ஒரு பறவை கவலை கொண்டுள்ளது. தனது இனத்தை அழிவிலிருந்து எச்சரிக்கை செய்து காப்பாற்ற வேண்டுமென்று ஒரு எறும்புக்குத் தோன்றியுள்ளது. நமது சகோதரர்களில் பலர் அறிந்தும் அறியாமலும் மார்க்கத்துக்கு விரோதமான செயல்களிலும் மார்க்கம் தடுத்த காரியங்களிலும் ஈடுபடுகிறார்கள். இத்தகைய வரலாற்று செய்திகளை நமது மக்கள் நிறைய அறியவேண்டும்; அறிந்து உணரவேண்டும்; அறிவுஜீவிகள் உணர்த்த வேண்டும். 

இஸ்லாமிய வரலாற்றுக் கடலில் மூழ்கி எடுத்த சில முத்துக்களே இவைகள். இதே போல் எண்ணற்ற வரலாற்றுச் சம்பவங்கள் பாடங்களாகவும் படிப்பினைகளாகவும் காணப்படுபவற்றை நாம் தேடித் தேடித் படிப்பதுடன் அவற்றை நமது வாழ்விலும் அமல் செய்ய அல்லாஹ் அருள் புரிவானாக!

இப்ராஹிம் அன்சாரி


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு