அண்மையில் இராமநாதபுரம் சென்று வந்தோம். அங்குள்ள ஒரு கல்லூரியில் எனது தோழர் முதல்வராகப் பணியாற்றுகிறார். அவருடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த போது அவருடைய மேசையின் மேல் கையால் எழுதப் பட்ட கவிதை ஒன்று கிடந்தது. கவிதை வடிவம் என்றாலே அது நமது கண்களைக் கவர்ந்துவிடுமே! அனுமதி பெற்று எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.
அது ஒரு கவிதை மட்டுமல்ல. ஒரு மாவட்டத்தின் கதறல். அந்தக் கதறலில் நாமும் தெரிந்து கொள்ள வேண்டிய பல உண்மைகள் இருந்தன. அத்துடன் நாமும் இப்படி இவருடன் சேர்ந்து கதற வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம். இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கிவைக்கப் பட்டு இன்று தமிழகமெங்கும் தழைத்தோங்கி வளர்ந்திருக்கும் காட்டுக் கருவை பற்றிய செய்திகள் நிறைந்த கவிதை . நான் படித்துப் பார்த்த இந்தக் கவிதை பல உண்மைகளைத் தோண்ட என்னைத் தூண்டி விட்டது.
இன்றைய தண்ணீர் பற்றாக்குறைக்கும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போய்க் கொண்டே வருவதற்கும் காலாகாலத்தில் மழை பெய்யாத நிலைமைகளுக்கும் காட்டுக் கருவைச் செடிகளின் வளர்ப்பும் வளமும் காரணமாக இருப்பதை அறிவியல் ரீதியாகப் புரிந்து கொண்டேன் ; தெரிந்து கொண்டேன். அவற்றைப் பகிர்ந்து கொள்வோம்.
அதற்கு முன் ஒரு அறிமுகத் தகவல் இந்தக் காட்டுக் கருவைச் செடிகள் அறிமுகப் படுத்தப் பட்டது கல்விக் கண் திறந்த காமராசர் முதலமைச்சராக இருந்த காலத்தில் என்பதாகும். இராமநாதபுர மாவட்டத்து மக்களின் வேலைவாய்ப்புக்காக வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த விஷச்செடியின் விதைகள் விளைந்து காடாகி பல விபரீதமான பின் விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது. முதலில் கவிதையைப் படிக்கலாம்.
மாறும் தொன்மம்
தெற்கத்திச் சீமையை தெம்பாக்க
மரம் வளர்ப்புத் திட்டம் தந்த
மகராசரே !
“கல்விக்கண் திறந்தவரு
கண்மாய்குலம் கண்டவரு” னு
கட்சிக்காரங்க பாடுற பாட்டைக்
காதுகொடுத்துக் கேட்டிருக்கேன்
காமராசரே!
நீ தந்த திட்டத்தால்
நாங்க படும் பாட்டையும்
கோவிச்சுக்காம கொஞ்சம் கேளு!
வருணபகவானுக்கு வழிதெரியாத
எங்கஊருக் காடு கழனியில்
வேலை எதுவும் இல்லாம
வெட்டியா இருந்த எஞ்சனங்களுக்கு
வெட்டிவேலை தந்த
கெட்டிக்காரரே!
ஆமா.....
நீ தந்த கருவேலவிதைகள்
உன்புகழச் சொல்லிச்சொல்லி
உன்புகழச் சொல்லிச்சொல்லி
‘ஒய்யாரமா ’ வளந்திருக்கு
அதுனாலே நீ
கர்மவீரர் மட்டுமல்ல
கருவேலரும் தான். !
வெறகு வெட்டி மூட்டம் போட்டு
வருமானத்தை பெருக்கச் சொல்லி
நீதந்த வெதைவித்துக்களை
அறுவடைசெய்ய
எஞ்சனங்களும்
வெட்றாங்க... வெட்றாங்க
வெட்டிக்கிட்டே இருக்காங்க
அருவாளும் அழுகுது
இடைவேளை கேட்டு!
அண்ணா தந்த அரிசி கூட
அள்ள அள்ளக் குறையுது
ஆனா-
நீ தந்த அட்சய மரம் ...
அடடா...!
உன்னால நான் படிச்ச பாடம்
“வெட்ட வெட்ட
வேகமாத் தழையிறது
வாழைமரம் மட்டுமில்ல
நீ தந்த
வேலமரமும் தான்!”
நீதந்த அதிசய மரங்கள்
என்னைக்காவது ஏமாந்ததனமா
வழிதவறிப் பெய்யுற
கொஞ்ச நஞ்ச மழைத்தண்ணியவும்
அடையாளம் தெரியாத அளவுக்கு
அப்பவே சாப்பிட்டுருதே..!
ஒருகாலத்துல –
முத்துமுத்தா நெல்லு வெளஞ்ச
எங்க சேதுசீமையோட
சொத்துக்களைக் காப்பாத்த-
வறட்சியத் தாங்குற
புரட்சியச் செஞ்ச கர்மவீரரே! – நீ
என்னைக்குமே எங்களுக்குக்
‘கர்மா வீரர்’ தான்!
அரசியல் வளர்ச்சிக்கு
நீதந்த ‘ K Plan ’ ஐ
ஆட்சியில மாறிமாறி
அமருறவங்க நினைவுல
இருக்கோ இல்லையோ
நீ தந்த இந்த ‘ K Plan ‘ ஐ
மாத்தி- எங்க
மண்ணைக் காக்குற திட்டம்
மருந்துக்குக்கூட இல்லை!
காந்திக்குக் கதர் மாதிரி
ஒருவேளை – உன்
நெனவுக்கு அடையாளம்னு
நெனக்கிறாங்களோ என்னமோ ...!
இன்பச்சுற்றுலான்னு
கேட்டிருக்கேன் – ஆனா
என்னைக்காவது
இராமநாதபுரத்துப் பக்கம்
யாரும் வந்ததுண்டா?
எது எப்படியோ –
ஆனை கட்டிப் போரடிச்ச
பாண்டியனார் தேசத்துக்கு
இப்போ
‘ தண்ணியில்லாக்காடு’னு
பேருவாங்கித் தந்த
பெருமையெல்லாம்
உங்களைத்தான் சேரும்...
இத்தனைக்கும் உத்தமரே – இது
நீ பொறந்த மண்ணு இல்லையா...!
இதுக்குமேல உன் புகழச் சொன்னா
‘ இவன் ஏதோ
சாதிக்கலவரத்த தூண்டுறான்டா ‘ னு
சங்கத்தைக் கூட்டி சிலபேரு
சந்திக்கு வந்துருவாங்க
ராசரே...!
நேரமாச்சு ,
நான் போறேன் வெறகு வெட்ட...
- பெயர் சொல்ல விரும்பாத மண்ணின் மைந்தரான ஒரு பேராசிரியர். #
காட்டுக் கருவேல மரங்கள்! காட்டுக் கருவை என்றும் வேலிக்கருவை என்றும் இதை அழைக்கலாம். Proposis Juli Flora என்று தாவர இயலில் இதை அழைக்கிறார்கள். சுட்டெரிக்கும் வெயிலும் வறட்சியும் தலைவிரித்துத் தாண்டவம் ஆடினாலும் என்றும் பசுமையாக இருக்கும் இந்த மரத்தினையும் செடிகளையும் பார்க்காத ஒரு தமிழன் தமிழ் நாட்டில் இருக்கமுடியாது. விதைபோடாமல் நீர் ஊற்றாமல் பராமரிக்காமல் ஒரு தாவரம் தழைத்து வளருமென்றால் அது இதுதான்.
கொடியவைகள்தான் தமிழ்நாட்டில் இலகுவாக தழைத்து வளரும் என்பதற்கு இந்தத் தாவரமும் ஒரு உதாரணம். தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் பரவி வியாபித்து வளர்ந்து கொண்டு இருக்கிறது இந்த ஒரு மரம். எந்த ஒரு வறண்ட நிலத்திலும் எந்த ஒரு தட்ப வெப்பத்திலும் இது தழைத்து வளர்ந்து கொண்டு இருப்பதை நாம் பார்க்கலாம். சாலை ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் இது .
தமிழகத்தின் இன்றைய வறட்சியான நிலைக்கு இந்த மரங்கள் தான் காரணம் என்று வல்லுனர்கள் உறுதியாக சொல்கிறார்கள். இந்தக் காட்டுக் கருவேல மரங்கள் எந்தவித வறட்சியிலும், கடும் கோடையிலும் நன்கு வளரக்கூடியவை . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலைப்படாது. ஏனெனில் ஒரு காட்டுக் கருவேலமரம் தனது வேர்களை பூமியின் ஆழத்தில் நாற்பது அடி, அகலத்தில் நாற்பது அடி வரையில் அனுப்பி மண்ணின் நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால் நிலத்தடிநீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது.
இதன் கொடூரம் அத்துடன் நிறைவுபெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னைச் சுற்றி இருக்கும் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தையும் இம்மரம் உறிஞ்சி விடுகிறதாம். காற்றில் ஈரப்பதம் இருந்தால் கூட உறிஞ்சி விடுகிற இம்மரம், மனிதர்களையும் விட்டு வைப்பதில்லை. தன்னை சுற்றி இருக்கிற மனிதர்களின் உடலில் இருக்கிற ஈரப்பசையையும் எண்ணெய்ப் பசையையும் கூட உறிஞ்சி விடுவதால் இந்த மரத்தின் அருகாமையில் வசிக்கிறவர்களின் உடல் தோல்கள் வறண்டு போய் விடுவதாக உணரப் படுகிறது.
தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம். கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கியகாரணம் என்பது புரியவேண்டிய யாருக்கும் இதுவரை புரியவில்லை.
ஆனால் இதை அறியாமல் தமிழ் மக்கள் இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள். தங்கள் வீடுகளுக்கும் தோப்புகளுக்கும் வயல்களுக்கும் வேலியாக இம்மரத்தை நட்டு வைக்கிறார்கள். வணிக ரீதியாகவும் இதை நம் தமிழ்நாட்டில் விறகிற்காக இந்தமரத்தை வளர்த்துவருகின்றனர். அத்துடன் இம்மரத்தை வெட்டி மூட்டம் போட்டு எரிபொருள் கரியாக மூட்டை மூட்டையாக பெரு நகரங்களின் தேநீர் விடுதிகளின் பாய்லரில் போட அனுப்புகிறார்கள். இந்த மரம் நம் வாழ்வை கரியாக ஆக்குகிறது என்கிற உண்மையையும் இந்த மண்ணின் நீர் வளத்துக்கும் பேராபத்தை உருவாக்குகிறது என்பதையும் அவர்கள் அறியாது இருக்கிறார்கள்.
இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. இதன் காயை வெட்டிப் போட்டு சாம்பார் வைக்க முடியாது. இதன் பூவைப் பறித்துப் போட்டு ரசம் வைக்க முடியாது. பழங்களைப் பறித்து பைகளில் போட்டு யாருக்கும் பரிசளிக்க முடியாது. ஆடுமாடுகள் கூட இதன் பக்கம் நெருங்காது. இதன் ஒரே உபயோகமாக நாம் காண்பது நமக்குப் பிடிக்காத பக்கத்து வீட்டுக்காரர்கள் நடக்கும் பாதையில் இதன் கிளைகளை வெட்டிப் போட்டு இடையூறு செய்யலாம் என்பது மட்டுமே. வேறொரு முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது, ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடுமாம், கருத்தரிக்காதாம். ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமேஅது ஊனத்துடன்தான் பிறக்கும். கருவைக் கலைக்கும் மரத்துக்கு கருவை மரம் என்று பெயர் வைத்து இருப்பதே ஆச்சரியமானது.
ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில்வேறு எந்தச் செடியும் வளராது . தவிர இம்மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடு கட்டுவதும் இல்லை. தேனீக்கள் கூடுவதும் இல்லை. காரணம் என்னவென்றால் இந்த வேலிக்கருவை கருவேல மரங்கள், ஆக்சிஜனை மிகக் குறைந்த அளவே உற்பத்தி செய்கின்றன, ஆனால் கார்பன் டை ஆக்சைடு என்கிற கரியமில வாயுவை மிக அதிக அளவில் வெளியிடுவதால் சுற்றுப்புறக் காற்று மண்டலமே நச்சுத் தன்மையாக மாறி விடுகிறது.
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர். அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஓர் இடத்தில் கூட காண முடியாத நிலையை உருவாக்கி வருகிறார்கள். சில ஆண்டுகளுக்குமுன் ஒரு திட்டமிடலுடன் செயல்பட்டு இந்தமரத்தை அவர்கள் தேடித் தேடி அழித்து இருக்கிறார்கள். அதனால் தான் இன்று கேரளா நீர் வளத்தில் அபரிமிதமான நாடாக இருக்கிறது. நமதூர் வனத்துறையினர் குருவி பிடிப்பவர்களை சுடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம். அமெரிக்க தாவரவியல் பூங்கா, வளர்க்க கூடாத நச்சு மரங்கள் என்று ஒரு தனிபட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பதுதான் இந்த காட்டுக் கருவேல மரம் தான். அந்த மரத்தை வெட்டினால்தான் நம் மண்ணின் மாண்பைக் காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் செய்தி ! தமிழ்நாட்டில் அகற்றப்பட வேண்டியவை அரசியலிலும் சமுதாயத்திலும் மட்டும்தான் என்று நினைக்க வேண்டாம். மண்ணிலும் வேரூன்றி இருக்கின்றன. ஆகவே கருவேலமரங்களை கண்ட இடங்களில் உடனே ஒழிப்போம் ! நம் மண்ணின் தன்மையைக் கட்டிக் காப்போம்!
#இந்தக் கவிதையை எழுதிய கல்லூரியின் பேராசிரியர் “ உயிர் வாழப் போராடும் கருவாடு “ என்கிற தலைப்பில் ஒரு கவிதைத் தொகுப்பை விரைவில் வெளியிட இருக்கிறார். இந்தக் கவிதைத் தொகுப்பு இராமநாதபுர மாவட்ட மக்களின் வாழ்வின் பல பரிமாணங்களைப் பேசும் . நாமும் பகிர்வோம். இன்ஷா அல்லாஹ்.
இபுராஹீம் அன்சாரி