அழிப்பவன் மட்டுமே இறைவன் என
எதிர்மறையாய் எண்ணாதே
அளிப்பவனும் அவனே!
ஆலுக்குப் பிடிமானம் முதுமையில்
விழுதுகள்
ஆளுக்கு வெகுமானம் மறுமையில்
தொழுதுகொள்
இளமையில் கள் ளென
இழிபோதையில் அழியாமல்
இளமையில் கல்

ஈனப்பிறவி யாகாமல்
ஈயென்று எடுத்துச் சொல்
இயன்றவரை கொடுத்துக் கொள்
ஓட்டைச் சரி செய்தால்
கூரை நிறைவாகும் - சலன
ஓட்டையை அடைத்து நல்
ஒழுக்கம் தங்கவிடு
கல்லாமை பிணியாகும்
ஓட்டுக்குள் உடல் முடக்கி
உள்ளுக்குள் தலை யிழுக்கும்
கடலாமை போலாகும்
அம்பின் முனைகூட
அன்பினால் கூர்மழுங்கும்
குத்திக் கொல்லாமல்
புத்தி சொல்லி புன்னகைக்கும்
உண்ணவும் உடுக்கவும்
உடல் உழைத்து வருவாய்
உழைப்பற்ற வருவாய்
நிலையற்ற ஒரு வாயில்!
உடல் களைக்க உழை
ஊர் மெச்சப் பிழை
பட்டினிச்சாவு பயமுறுத்தினாலும்
பிழையறப் பிழை!
Sabeer AbuShahruk
நன்றி : சத்தியமார்க்கம்.com