Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label அச்சு. Show all posts
Showing posts with label அச்சு. Show all posts

ஒரு புத்தகம் பிறக்கிறது - தொடர் - 4 13

அதிரைநிருபர் பதிப்பகம் | September 01, 2013 | , , , , , , ,

பதினான்காம் நுற்றாண்டுகளில் ஜெர்மனியில் ஜான்கூட்டன் பெர்க் என்பவர் அச்சு இயந்திரம் கண்டுபிடித்தார். இது சீனாவின் காகிதத்துக்கு கிடைத்த பொருத்தமான ஜோடியாக அமைந்தது.  சீனாவின் காகிதமும் ஜெர்மனின் ‘அச்சு-வீட்டு’ இயந்திரமும் பெரியவங்களை  கொஞ்சம் கூட கலந்துக்காமே கலப்பு திருமணம் செய்துக்கிட்டாங்கன்னா பார்த்துக்கிடுங்களேன்! காலம் அப்போவே தலை கீழே மாறிப்போச்சு!!.

இதன் விளைவு நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள்  வெளிவர ஆரம்பித்தன. ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் வாழும் மக்கள் புத்தகத்தின் மீது நீங்கா மோகம் கொண்டனர். மோகம் தணிக்க மேலும் மேலும் புதிய புதிய புத்தகங்கள் வந்து விழுந்து கொண்டே இருந்தன.  அறியாமை எனும் அஜீரணக் கோளாறால் அவதிப்பட்ட மக்களுக்கு நோய் தீர்க்கும் மருந்தாக புத்தகம் வந்தது. மனிதனுக்கு தேவையான அனைத்து துறைகளிலும் புத்தகங்கள் வெளிவந்தது.  புத்தகம் மனிதனின் ஞானப் பசிக்கு பால் கொடுக்க வந்த ஞானப்பசு. பசித்தவர்கள் மட்டும் புசித்துப் பலன் பெற்றனர்.


பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் தன் எண்ணங்களை ஈரக்களிமண் ஓடுகளில் எழுதியபோது தொடங்கிய தேடல் ‘பசி’ இன்று உலகெங்கும் அறிவு ஜோதியாய் பிரகாசிக்கிறது.  அவன் கண்ட ஊமைக் கனவுகள் இன்று ஒளிமயமான காலத்தை நமக்குத் தந்தன. மனிதன் அன்றைய ஓடுகளில் மண் போட்ட கீறல் ஒரு கிறுக்கன் போட்ட வெறும் கீறல் அல்ல; அது  தனக்குப் பின்  வரும் மனித சமுதாயத்திற்கு அவன் போட்ட பொற்பாதை. கல்லிலும் முள்ளிலும் மலையிலும் மடுவிலும் அவன் நடந்து நடந்து போட்ட படிக்கட்டுக்கள் எல்லாம் நமக்காகவே போட்ட பாதைகள். அவன் சிந்திய ரத்த வியர்வைத் துளிகளுக்கும் கண்ணீர் சொட்டுகளுக்கும் ஈடாக நாம் கோடிகோடி வைரமணிகளை கூடை கூடையாக கொட்டிக் கொடுத்தாலும்  அவன் செய்த தியாகத்துக்கும் சிந்திய வியர்வைக்கும் ஈடாகுமோ? அன்று மனிதன் களிமண் ஓட்டில் கீறிய கீறல்கள் இன்று பல கோடி மக்கள் படித்துப் பயனடையும் புத்தகங்களை தந்தது.

ஒரு நாட்டின் முன்னேற்றதுக்கு இயற்கை வளங்கள் மட்டும் போதாது. அறிவுசார் மனித வளமும் வேண்டும் அவைகள் உருவாக மக்கள் கொண்ட விரிவான அறிவு வளர்ச்சி நான்கு சுவர்களுக்குள் மட்டும் அடங்கிய பள்ளிக் கல்வி மட்டும் அல்ல, அதற்கு அப்பாலும் ஒன்று உண்டு அதுதான் புத்தகம். புத்தகம் அறிவையும்  அனுபவத்தையும் வளர்க்கும் . புத்தகம் ஒரு இடைத் தரகர் அதைநாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காலத்தை வீணே கழித்து விடாமல் நல்ல நல்ல புத்தகங்களைப்  படித்து பயனடையலாம். மேலை நாடுகள் கீழை நாடுகளைவிட முன்னேறியதற்கு கல்வி ஒரு முக்கிய காரணம். 

சுதந்திரத்துக்கு முன் தமிழ் முஸ்லிம்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. நம் முன்னோர்கள் ஆங்கில மொழியுடன் நம் மார்க்கத்தையும் போட்டு குழப்பினார்கள்’. உயர்கல்வி (இங்கிலீஷ்) தன் மகன் படித்தால் கிறிஸ்துவ மதத்துக்கு மாறிவிடுவான்,” என்ற கற்பனை பயம் தன் பிள்ளைகளை உயர்கல்வி கற்க பள்ளிக்கு அனுப்ப தடை போட்டது. எப்படி அமாவசைக்கும் அப்துல்லாவுக்கும் சம்பந்தம் இல்லையோ அப்படியே இங்கிலீஷ்சுக்கும் ‘ஈசா-நபி’க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 

ஈசா நபிக்கு இங்கிலீஷ்  தெரியாது, அவர்களின் தாய்மொழி ஹிப்ரு மொழி. ஆங்கில மொழி கிருஸ்தவ மொழி என்னும் பிரமையில் அதை கற்பதை வெறுத்தோம். மறுத்தோம், பகைத்தோம், வீழ்ந்தோம், ஆனாலும் முற்றிலுமாக வீழ்ந்தே விடவில்லை. நம்மை எழுப்பிவிட “கொக்கொ றோக்கோ.......” என்று ஒரு சேவல் கூவியது.

கூவியது சேவல் அல்ல; காதிர் முகைதீன் உயர் நிலைப் பள்ளி!, சில ஆண்டுகளுக்கு பின் அதற்கு மேலே படிக்க ஒரு அண்ணன் பிறந்தான். அவன் பெயர் காதிர் முகைதீன் கல்லூரி. “பொழுது விடிந்தது, தூங்கியது போதும் எழுந்திரு" என்றது காலம். விழித்து எழுந்தவர்கள் எல்லாம் 'விழித்துக்’கொண்டார்கள். “நல்ல பொழுதை எல்லாம் தூங்கி கழித்தோமே”யென அலுத்தும் கொண்டார்கள், என்றாலும் ஒளி மயமான எதிர் காலம் தங்கள் வருங்கால சந்ததிகளுக்கு காத்துக் கிடக்கிறது என்ற நம்பிக்கையின் கயிற்றைப்  பற்றிப் பிடித்து கொண்டார்கள்.


மேலை நாடுகளின் முன்னேற்றதுக்கு அவர்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் ஒரு காரணம்.மேலை நாடுகளை எடுத்துக் கட்டாக சொல்வதை விட நம் அடுத்த வீடு சிங்கப்பூரை கொஞ்சம் எட்டிப் பாருங்களேன் காரணம் தெரியும்.

பள்ளி படிப்போடு படிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து படிப்பது மலேசியா, சிங்கப்பூரில் அன்றாடம் கடமைகளில் ஒன்றாக செய்கிறார்கள். பஸ், விமானம், ரயில் பயணங்களிலும் கூட படிப்பதை நிறுத்துவதில்லை. புத்தக கண்காட்சிகள் நடத்தி படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறார்கள். படிக்கும் பழகத்தை வளர்க்க அரசு சலுகை செய்கிறது. புத்தகங்கள் பற்றிய கலந்துரையாடல் பத்திரிகைகளில் நூல் அறிமுகம் ஆகியவை பொது அறிவை வளர்க்கும் தூண்டுகோள்கள். 

ஆனால் இங்கோ நடிகைகளின் காதல் கிசுகிசுக்களை (goosip) தவறாமல் போடுவதால் வளரும் இளைய தலை முறையின் எதிர் காலம் இருள் மயமாகிறது.

நடிகர் நடிகைகளுக்கு ரசிகர் மன்றம் அமைத்ததோடு நில்லாமல் ஒரு நடிகைக்கு கோயிலே கட்டி கும்பாபிசேகமும் செய்து அம்பிகையின் {நடிகையின்}’ அருளையும் ஆசியையும்’ பெற்றார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்!,..

புத்தகம் வாங்குபவர்களுக்கு மலேசிய அரசு வருமான வரிவிலக்கு அளிக்கிறது. ஏறத்தாழ அறுபது சதவிகிதத்தினர் பத்திரிகை அல்லது புத்தகம் படிக்கும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். இந்தியர்களை இந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நலம். குறிப்பாக தமிழ் முஸ்லிம்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களுக்கு புத்தகம் எட்டிக் காயாக கசக்கும். சுட்டாலும் புத்தகத்தில் கை வைக்கவே மாட்டார்கள். அவர்களின் “தீண்டாமை” கொள்கை வட்டத்தில் புத்தகம் முதலிடம் பெறுகிறது.

மலேசியாவில் பெரிய புத்தகக் கடை ஒன்றில் தனி இடம் ஒதுக்கி வேலையில் ஓய்வு பெற்ற முதியோர்களுக்கு இலவசமாக புத்தகம் படிக்கும் வாய்ப்பை அளித்திருக்கிறார்கள். ஓய்வு  பெற்றவர்களுக்கு விலைகொடுத்து புத்தகம் வாங்கி படிக்கும் அளவுக்கு பொருளாதார நிலை இல்லாமல் போகலாம். பொருளாதார குறைபாடு படிக்கும் பழக்கத்திற்க்கு ‘தடையாக’ இருக்கக்கூடாது என்ற நல்ல மனதோடு இதை செய்துள்ளார்கள்.

சில்லறை வியாபாரம் செய்யும் புத்தகக்கடைகளுக்கு மலேசியா அரசு சலுகை கொடுத்து ஊக்கப்படுத்துகிறது. ஆண்டு ஒன்றுக்கு பல இலட்சம் மலேசியா ரிங்கிட் [ரிங்கிட் என்பது மலேசிய நாணயம்] மதிப்பிலான புத்தகங்களை நூலகங்களுக்கு விநியோகம் செய்கிறது. 

ஆனால் நம்ம தமிழ் நாட்டுலே ஏதாச்சும் புத்தகம் படிக்கலாம்ன்னு நூலகத்துக்கு போனால்,  ’’இன்னா நாய்னா சொல்லு! தளவல்கிதா?  வஊறு வல்கித? சொல்லு. வூசிகுத்றேன்’’ன்னு சொல்றான். ‘எந்த எடத்துக்கு வந்தோம்’னு விசாரிச்சுப் பாத்தா நூலகம் இருந்த இடம் ஒரே இரவுல ஆஸ்பத்ரியா போச்சு. அலிபாபா கைலே அற்புத விளக்கே புடிச்சுகிட்டு நம்ம ஊருக்கு வந்துட்டான் போலே.
தொடரும்...
S.முஹம்மது ஃபாரூக்

ஒரு புத்தகம் பிறக்கிறது - தொடர் - 1 24

அதிரைநிருபர் பதிப்பகம் | August 10, 2013 | , , , , ,


அன்புள்ளம் கொண்ட அதிரைநிருபர் அபிமான நெஞ்சங்களே! 

அஸ்ஸலாமுஅலைக்கும் [வரஹ்]...

புத்தகம் தொடர்பான கட்டுரை எழுத ஆசை வந்தது. இது ஒரு பேராசைதான் ‘கடலைக் கலக்க கட்டெறும்பு கச்சை கட்டியது’ போன்றதே என் ஆசையும். என்றாலும் முயற்சித்துத்தான் பார்ப்போமே என்ற நம்பிக்கையில் என் பயணத்தை “பிஸ்மில்லாஹ்” என்று ஆரம்பிக்கிறேன். “ஆயிரங்காத பயணத்தின் ஆரம்பமே நாம் எடுத்து வைக்கும் ஒரு முதல் அடியில் தான் துவங்குகிறது’’.என்று ஒருமேதை சொன்னதாக  நினைவு.

மடிமீது எனை வைத்து தன் முந்தானையில்  மூடி பாலூட்டிய என் தாய்க்கு அடுத்து சுமார் ஐம்பது ஆண்டுகாலத்துக்கும் மேல் பாலும் சோறும் ஊட்டி என்னை ஆளாக்கிய செவிலித்தாய் புத்தகமே. கதை சொல்லி அறிவூட்டி ஊக்கமும் ஆக்கமும் தந்த அந்த புத்தகத்தின் கதை கூற மகன் வந்தேன். இது ஒரு நன்றிக்கடன். (பெரும்பாலான இந்தியர்கள் உச்சரிக்க மறப்பது அல்லது மறுப்பது இரண்டு வார்த்தைகள். ஒன்று; நன்றி. மற்றது; ஸாரி. இதைச் சொன்னது அதிரைநிருபர் தளத்துக்கு மிகநெருக்கமான ஒருவர்தான். அவர் சொன்னதை நான் வழி மொழிகிறேன்.)


சுமார்ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வயிறு வளர்க்க கப்பல் ஏறி மலேயா நாட்டுக்கு போய் பினாங்கு மாநகரில் வேலைதேடி கடை கடையா  அலைந்து அலைந்து வேலை கேட்டபோது எல்லாக் கடையும் கை விரித்து “இல்லை இல்லை” என்ற ஒரே பல்லவி பாட ஒரே ஒரு கடை முதலாளி மட்டும் எந்த ஊர் என்றுகேட்டார். ஊரைச் சொன்னேன்.” ஆட்டைக் கழுதை ஆக்கிய....” என்று இழுத்தவர் மனமிறங்கி “கடைல சேத்துகிறேன் ‘’என்று, கருணையோடு சொன்னார்.  அப்போதெல்லாம் நம்ம ஊர்க்காரங்க யாரும் கடைகளில் சம்பளகாரர்களாகவோ அல்லது கடைகண்ணி வச்சு பெருசாவோ சிறுசாவோ யாவாரம் செஞ்ச முதலாளி யாருமே  இல்லவே இல்லேன்னு எவர் முன்னால் வந்து நின்றும் நேர்படச் சொல்வேன்... 

ஒரு வியாபாரி இன்னொரு வியாபாரியிடம்‘ இவன் ஒழுங்கான பையன் கை சுத்தமான ஆளு சொல்ற பேச்சுக்கு மறு பேச்சு பேசாம வாயே மூடிகிட்டு வேலை பார்ப்பான். காசு பண விஷயத்தில் கை நீளாது” என்று ஒரு பரிந்துரையை ஒரு முதலாளி இன்னொரு முதலாளி காதுலே போட்டாத்தான் அந்த முதலாளியும் நம்மளை நம்பி வேலை போட்டுக் கொடுப்பார். 

இல்லேன்னா அம்போதான்! அந்த மாதிரியான பரிந்துரை செய்ய  நம்ம ஊரு ஆளுங்கதான் அந்த வெயிட்டுலே அங்கே யாரும் இல்லையே! “சோறு போடுறேன் வந்து வேலையே ஒழுங்கா பாரு. வேலை எப்புடினு பாத்துத்தான் சம்பளம் சொல்ல முடியும். இரண்டு வேளைச் சோறு; ஒரு வேளை பசியாற அம்பது காசு  இந்த அம்பது காசுக்கு இன்னொரு பேரு செலவுக் காசு [‘போனஸ் கீனஸ்’ என்றெல்லாம் பேச்சு வரப்படாது] நாங்களா பாத்து கொடுத்தாதான் வாங்கிகிடனும் .காலையில வெள்ளன (ஆறு மணிக்கு கடைக்கு வந்துடனும்” (இது முதல் எச்சரிக்கை) கடை மூடும் நேரம்? முதலாளி மூடு எப்படி இருக்கோ அப்படியே அமையும். இரவு மணி 9 லிருந்து 10 மணிக்கு மேல் போகாது [கொசுறு தகவல் : ”மூடும்’’ என்றசொல்’ அபசகுனம்’ என்பதால் எடுத்து வைப்பது” என்ற சொல் உபயோகத்தில் இருக்கும்].

"'நல்லா வேலை செஞ்சா பின்னாடி பார்த்து செய்வோம்” என்ற வாய்மொழி ஒப்பந்தம் போட்டு ஒரு புத்தககடை முதலாளி எனக்கு ’அபயக்கரம் நீட்டினார். நீட்டிய கரத்தை சிக்கெனப் பிடித்து நீண்டது என் பிழிப்பு. பிழைப்பில் பிழை ஏதும் செய்யாமல் ‘கை’ பதனம் வாய் பதனம் என்று கருமமே கண்ணா இருந்ததால் வயிற்றுக்கு கிடைக்க வேண்டிய சோறு கிடைத்தது. சில நேரங்களில் அறுபது நிமிசம் அல்லது கூடக்கூடப் போனால் நூற்று இருபது நிமிசம் தாமதம் ஆகும். அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அவர்கள் போட்டதையே சாப்பிட்டுவிட்டு அறுசுவை சங்கதியெல்லாம் நாக்குக்கு காட்டாம கர்மமே கண்ணா இருந்து  வேலையே மட்டும் வெரசு வெரசா செஞ்சு முடிக்கனும். 

அதுதான் முதலாளிகளின் கோட்பாடு, ‘பசி வந்திட பத்தும் பறந்து போகும். ’இதை நன்றாகத் தெரிந்து கொண்ட புத்திசாலிகள் முதலாளிகளானார்கள். இந்த சூத்திரம் அறியாத அப்பாவிகள் நல்லபொழுதை எல்லாம் தூங்கிக்  கழித்தார்கள். உழைப்பாளிகளின் பசியும் மூடத்தனமும் முதலாளிகளின் மூலதனம் ஆனது. உழைப்பவனைப் பிழிந்து பிழிந்து சாற்றைக் குடித்து சக்கையைத் துப்பி முதலாளிகள் கொழுத்தார்கள். இவர்கள் ஒன்று கூடி தங்களுக்கு ஒரு  வர்க்கத்தை  நிறுவிக் கொண்டார்கள். இதை முதலாளி வர்க்கம் என்றும் சொல்லாம்.

"பசிநோக்கார் கண் துஞ்சார் செவ்வி அருமையும் பாரார் கருமமே கண்ணாயினார்" என்று சொன்னபடி நான் பணியாற்றிய போது இவர்களைக் கற்றேன். கற்றது பல; பெற்றது பல; விட்டது பல; விற்றது பல. . 

விட்டதை மட்டும் விட்டுவிட்டு மற்றதை தந்த “புத்தகத்திற்கு’’ நன்றிக் கடன் ஆற்றும் வண்ணம்’’ ஒரு புத்தகம் பிறக்கிறது” என்ற தலைப்பில் சிறு தொகுப்புக் கட்டுரை வரைய எனக்கு ஒரு ஆசை அந்த ஆசையில் பிறந்ததுதான் இந்த  சின்னஞ்சிறு தொடர் கட்டுரை.

தொடரும் இன்ஷா அல்லாஹ் !
S.முஹம்மது ஃபாரூக்

அறிவிப்பு : இந்த தொடர் வாரந்தோறும் பிரதி ஞாயிற்று கிழமை தோறும் பதிக்கப்படும் இன்ஷா அல்லாஹ் !


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு