Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label அபூஹாமித். Show all posts
Showing posts with label அபூஹாமித். Show all posts

நமதூரில் புதியக் கலாச்சாரம் உருவாகுது! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | August 18, 2016 | , , , ,

பிஸ்மில்லாஹ்

நமதூரில் புதியக் கலாச்சாரம் உருவாகுது! 

மாப்பிள்ளைக் கடத்தல்

25, 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் அதிகமாக இரவுக் கல்யாணம் தான். திருமணம் நடந்தால், நிக்காஹ் மஜ்லிஸ் முடிந்து மணமகன் – மணமகள் கை இணைப்பு ஏற்படுத்திய பின் மணமகன் ரூமிலிருந்து வெளியே வந்து பந்தலில் இருக்கும் நண்பர்களைச் சந்தித்து நன்றி கூறி, பதிலுக்கு நண்பர்களும் வாழ்த்துக் கூறி சென்றிடுவர்.

'காலையில் ரெடியாக இரு' என மாப்பிள்ளையும் நண்பர்களை அன்பாக, அதிகாரமாகக் கூறிடுவார் "தோழன் சாப்பாட்டுக்கு". மாப்பிள்ளைத் தோழர் விருந்து என சகட்டுமேனிக்கு 3 நாட்கள், 5 நாட்கள் என வெவ்வேறு நண்பர் குழாம் சாப்பிட்டு வெளுத்துக்கட்டிவிட்டு வருவர். 
ஆனால், இன்றோ பகல்நேர,  மாலைநேரத் திருமணங்கள் தான் அதிகம். அதில் பல நன்மைகளும் உண்டு. குறிப்பாக இன்றைய காலத்தில் மாத்திரைகள் சாப்பிடுவோர் அதிகமாகிவிட்டனர். இவர்களுக்கு இரவுத் திருமணங்கள் மிகவும் கஷ்டமாக உள்ளது. நான் கடந்த விடுமுறையில் நடந்தத் திருமணங்களில் அதைக் கண்டு கொண்டேன். மக்கள் அவ்வாறுக் கூற எனது காதுகளினால் கேட்டேன். இரவு 9 மணி 10 க்கு திருமணம் வைத்தால் நாங்கள் எப்போது மாத்திரை சாப்பிட்டு, எப்போது உறங்குவது என்று கூறிய வார்த்தைகள் இன்னும் என் காதுகளில் ரீங்காரமிடுகிறது.

சரி, மேட்டருக்கு வருகிறேன்.

நிக்காஹ் மஜ்லிஸ் முடிந்து, மணமகன் மணமகள் கை இணைப்பும் முடிந்தது. பந்தலில் நண்பர்கள் காத்திருக்கின்றனர். மணமகன் வெளியே வந்து சலாம், நன்றி கூறி விடைபெறுவார்கள் என நாம் வழக்கம் போல் எதிர்பார்த்து இருந்தோம். வெளியே சென்று பந்தலில் இருந்த நண்பர்களுக்கு கைகொடுத்ததுதான் தாமதம் அப்படியே நைஸாக அழைத்து, காரில் ஏற்றி வெகுதூரம் (கடத்திச்) சென்றுவிடுகின்றனர். பெண் வீட்டார் மாப்பிள்ளை இதோ வருவார், இதோ வருவார் என ஏக்கத்துடன் சற்று மன சஞ்சலத்துடன் எதிர்பார்த்து இரவைக் கழிக்கின்றனர். என்ன ஆச்சோ, ஏது ஆச்சோ என்று பல நினைப்புகள். அந்த நண்பர்களுக்கு இப்படிக்கடத்திச் செல்வதில் அலாதியான பெருமகிழ்ச்சி. காரணம் மணமகனான நண்பனின் முதலிரவை வெற்றிகரமாக வெற்றிடமாக ஆக்கிவிட்டோம் என்று!

அடப்பாவிகளா அந்தப் பெண் என்ன பாவம் செய்தாள்? பெண் வீட்டார் என்ன தப்பு செய்தனர்? விசாரித்ததில் அவர்கள் தொண்டி, இராமேஸ்வரம் என வெகுதொலைவுக்குக் கடத்திச் சென்று, வெத்துப் பேசி, இரவைக் கழித்து ஊர் திரும்புகின்றார்களாம்.

கடந்த விடுமுறையில் ஊரில் இருந்தபோது ஒரு திருமணம் அதுவும் இரவில்! மாப்பிள்ளை வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. பெண் வீட்டாரோ மாப்பிள்ளையை, "வெளியே சென்று நண்பர்களுக்கு சலாம், நன்றி கூறி வாருங்கள்" என சொன்னபோது, பயம் கலந்த வார்த்தைகளில் மணமகனின் பதில் அதிர்ச்சியாக இருந்தது: "என்னைக் கடத்திச் சென்றுவிடுவர்" என்றாரே பார்க்கணும்! ஏன் என விசாரித்ததில் "பதிலுக்குப் பதில் - பதிலடி" காத்திருந்தது தெரிந்தது. ஆம், இவரும் பல திருமணங்களில் மணமான நண்பர்களை கடத்தல் காரியங்களில் ஈடுபட்டு இருந்தது தெரிய வந்தது.

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமகின்னா பிற்பகல் தாமே வரும் என்பதிற்கிணங்க காத்திருந்தது கடத்தல் செய்தி.

இதற்கிடையில் நண்பர்கள் பொறுமையிழந்து வீட்டின் முகப்பு உள்வாசல் வரை வந்து கூச்சல். மணமகன் எங்கே? என்ற கேள்வி. "மேல்வீட்டில் இருக்கின்றார்" என்று சொன்னபோது உடனே யாவரும் மேலே சென்றுவிட எத்தனித்தபோது, "அங்கே பெண்கள் இருக்கிறார்கள்" என நாங்கள் சொன்னதும்; இல்லை, இல்லை நாங்கள் மேல்வீட்டிற்கு (மொட்டமாடிக்கு) போய்விடுகிறோம், மேலும் மாப்பிள்ளை வந்தால் தான் நாங்கள் வீட்டிலிருந்து கீழே இறங்குவோம் என Blackmail செய்துவிட்டனர்.

வேறு வழியில்லாமல் மாப்பிள்ளை தனது காக்காவுடன் மேலே சென்றால் கூத்தும் கூச்சலும். அப்போது நடு இரவு தொட்டுவிட்டது. அங்கே பேரம் நடக்கிறது. மாப்பிள்ளைக்கும் நண்பர்ளுக்கும்.

இதில் கொடுமை என்னவென்றால் வந்திருந்த நண்பர்களில் பலர் தாடி (Untrimmed Beard), தொப்பி அணிந்த முழு முஸ்லிம் உருவம். நாங்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் கீழே இறங்குபவர்களாக இல்லை. "நாங்கள் கொஞ்ச நேரம் இவனுடன் பேசிவிட்டு, சின்ன டீ பார்டி முடித்துவிட்டுச் சென்று விடுகிறோம்" எனக் கூறி பொழுதைக் கடத்தினர்.

சற்று நேரம் கழித்து யாவருக்கும் இஞ்சி டீ ஆர்டர் வந்தது. சப்ளை முடிந்தது. அவ்வளவாக யாரும் எழும்புவது போல் இல்லை. பிறகு ஒரு நபர் கீழே இறங்கினார். இன்னும் சற்று நேரம் கழித்து ஓரிருவர் இறங்கினர். நேரம் நடு இரவைத் தாண்டிவிட்டது.

இவை யாருடைய பழக்கம்? யாருடைய கலச்சாரம்? சற்றுமுன் தான் "திருமணம் எனது வழிமுறை" என்ற ஹதீஸ் வரிகளைக் கேட்டுத்தான் வந்திருக்கிறோம் என்கிற உணர்வு கூட இல்லாமல், எல்லோருக்கும் இடைஞ்சல், சிரமம் தரக் கூடிய வகையில் இந்த நண்பர்கள் கூட்டம் செயல்படுகிறது.

வாலிபர்களே, இளைய தலைமுறையே! சிந்தியுங்கள். நமது பழக்க வழக்கம் மாற்றாருக்கு "தஃஅவா"-வாக அமைய வேண்டும். தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடக் கூடாது. நமதூரில், நமக்கு அருகில் மாற்று மதத்தினர் இருக்கின்றனர் என்ற சிந்தை வேண்டும்.

இது போதாததற்கு, இப்போது வெடி வெடிக்கும் கலச்சாரமும் கொஞ்சம் தலைக் காட்டுகிறது. மணமகன் வீட்டிலிருந்து மாப்பிள்ளை கிளம்பிவிட்ட சிக்னல்: வெடி. பெண் வீட்டில் வந்து கை இணைப்பு முடிந்தவுடன் ஒரு சிக்னல் மறு வெடி. என்ன பழக்கம் இதுவெல்லாம்?

நமதூரில் பல ஆண்டுகளுக்கு முன் திருமணத்தில் வெடி வெடித்து பல தகாத சம்பவங்கள், ஏன் விபரீதமே நடந்திருக்கிறது. அத்தோடு வெடி கலாச்சாரம் ஓய்ந்து இருந்தது. இப்போது அது இலேசாகத் தலைக்காட்டுகிறது.

எல்லாம் வல்ல ரப்புல்ஆலமீன் நமது இளைஞர்களுக்கும் இளைய சமூகத்திற்கும் நேர்வழி காட்டுவானாக. ஆமீன்.

குறிப்பு: ஊரில் நடக்கும் எல்லாத் திருமணங்களிலும் இவை நடப்பதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தான் நடக்கிறது. இருப்பினும், இவை நம் சமூகத்திலிருந்தே துடைத்தெறியப் படவேண்டியவை என்பதால் இங்கே பதிவிடுகிறேன்.

அபூஹாமித்
அல்லாஹ் நாடினால் மீண்டும் சந்திப்போம்…

காலைநேர நடையும் பள்ளியில்லாக் கவலையும் 12

அதிரைநிருபர் பதிப்பகம் | August 08, 2016 | , , , , , ,

பிஸ்மில்லாஹ்...

கடந்த ஆண்டு விடுமுறையில், இதே ஆகஸ்டு மாதம்!

தினமும் ஃபஜ்ர் தொழுதுவிட்டு ஓதவேண்டிய தஸ்பீஹ், திக்ர் மற்றும் துஆ
யாவும் முடித்துவிட்டு நடைப்பயிற்சிக்கு செல்வது வழக்கம்.

தினமும் ஒவ்வொரு பகுதி, ஒவ்வொரு திசை.

ஒருநாள் முத்துப்பேட்டை சாலையில் நசுவினி ஆற்றுப்பலம் வரை. மறுநாள் ராஜாமடம் ஏரி வரை. அடுத்த நாள் மதுக்கூர் சாலை. இப்படியாக பல பகுதிகள், பல திசைகளில் நடை.

அன்று ஒரு நாள் C M P லைன் வழியாக பக்கத்து கிராமத்தை அடைந்து திரும்பி வரும் வேலையில் ஃபாரூக் மாமாவை சந்தித்து என்னை நானே அறிமுகம் செய்துகொண்டு (காரணம் பல ஆண்டுகள் கழித்து சந்திதோம்) தெருவில் நடந்த நிகழ்வுகள், குடும்ப செய்திகள் யாவற்றையும் நின்று கொண்டே சுமார் ஒரு மணி நேரம் பேசி, நடைப் பயிற்சியை மறந்தோம். அவர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். எனக்கும் பிரிந்த சொந்த மொன்று வந்து சேர்ந்த சந்தோஷம். இழந்த ஒன்றை பெற்ற மகிழ்ச்சியை அவர்கள் அடைந்தது போன்ற ஓர் உணர்வை அவர்களின் முகத்திலிருந்து நான் அறிந்துகொண்டேன்.

சவூதிக்குப் புறப்படுவதற்கு முன் ஒரு நாள்! கால்கள் நடந்தது ஊரின் பெரிய ஜுமுஆ பள்ளி எனப் போற்றப்படும் மேலத் தெரு ஜுமுஆ பள்ளியைத் தாண்டி நடந்தேன். சானாவயல் வந்தது. அதனையடுத்து ரயில்வே கேட் வரைச் சென்று திரும்பினேன். திரும்பி வரும்போது ஓர் ஆழ்ந்த கவலை மேலிட்டது. மாஷா அல்லாஹ் ஊர் பல்கிப் பெருகிவிட்டது. குறிப்பாக மேலத் தெருவின் பெருக்கம் பக்கத்து கிராமம் வரை சென்றுவிட்டது. அல்ஹம்து லில்லாஹ்! ஆனால், "ஜுமுஆ பள்ளியைத் தவிர வேறு எந்த பள்ளிவாசலும் இங்கே இல்லையே. தொழுவதற்கு சுமார் 1 கி.மீ. தூரம் வரை செல்ல வேண்டியுள்ளதே" என்பது தான் அந்தக் கவலை !

இந்தக் கவலையை யாரிடம் சொல்வது என்ற நினைப்பிலேயே திரும்பி வந்துகொண்டிருந்தேன். இதற்குச் சரியான ஆள் சகோ. ஹலீம் தான் என்று நினைத்துக்கொண்டு வந்தேன். தூரத்தில் ஒருவர் நடைப்பயிற்சிக்கு ஏற்றாற்போல் ஷூ அணிந்து வருவது தெரிந்தது. நெருங்கி வந்த போதுதான் ஆச்சர்யம், நான் நினைத்து வந்த அதே சகோ. ஹலீம். வழக்கமாக நான் அவரை செயலாளர் என அழைப்பேன். காரணம் ABM தமாம் கிளையின் சிறந்த செயலாளராகப் பல ஆண்டுகள் பொறுப்பேற்று செயல்பட்டார் என்பதற்காக! கிட்டே வந்ததும் சலாம் கூறி நலம் விசாரித்து என்னுடைய கவலையைச் சொன்னேன். அதற்கு அவர்கள்: அதோ சுடுகாடு தாண்டி ஓர் இடம் பள்ளிக்காக ஒதுக்கி இருக்கிறார்கள். கூடிய விரைவில் கட்டுமானப் பணி தொடரும் எனக் கூறினார். மகிழ்ச்சி! அவசரகமாக தொடங்குங்கள் எனக் கூறிவிட்டு விடைபெற்றுத் திரும்பினேன். 

அடுத்த நாள் பயணம், சவூதி வந்து சில மாதங்கள் கழிந்தது. நமதூர் வலைத்தளத்தில் ஒரு செய்தி: "சானாவயல் பகுதியில் ஒரு சகோதரர் தனது சொந்த இடத்தில் பள்ளிவாசல் நிர்மானித்துள்ளார்" என்பது தான் அது! மிக்க மகிழ்ச்சியடைந்து அந்தச் செய்தியில் எனது கமென்ஸ்ஸும் போட்டேன். அந்தச் சகோதரருக்கு எனது துஆவும் பாராட்டும்.

அதேபோல், இந்த வருட விடுமுறையில் ஷாதுலிய்யா புதுப்பள்ளியில் லுஹர் தொழுது கொண்டிருக்கும் போது ஆட்டோவில் ஒரு விளம்பரம்: சானாவயலில் அன்னை ஃபாத்திமா (ரழி) மஸ்ஜிது என்ற செய்தி மிகவும் ஆச்சரியமான மகிழ்வைத் தந்தது. கடந்த ஆண்டு நாம் கவலைப்பட்டோம். அல்ஹம்துலில்லாஹ்! இந்த வடரும் அந்தப் பகுதியில் இரண்டு இறையில்லங்கள்.

சரியாக, போனவருடம் போல் புறப்படுவதற்கு முன் ஒரு நாள் அதே பகுதிக்குச் சென்று இரண்டு இறையில்லங்களையும் பார்வையிட்டு வந்தேன். அல்ஹம்துலில்லாஹ்! 

இதற்கிடையில் ஒரு சகோதரர் சொன்னர் "அடுத்த வருடம் வரும்போது இன்ஷாஅல்லாஹ்  இன்னுமோர் மஸ்ஜிது கூடுதலாக இருக்கும் என்று!

ஆம்! மஸ்ஜிது தேவையான பகுதிதான் அது. கூடிய விரைவில் திறப்பு விழா அழைப்பிதழ் வரும்.

பள்ளிவாசல்கள் பல்கிப் பெருகுவது சந்தோஷமே! அவற்றில் பித்அத்கள் இல்லாதவையாகத் திகழ வைப்பது அந்தந்த நிர்வாகிகளின் பொறுப்பாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நமது எண்ணங்களைத் தூய்மையாக்கி, இஹ்லாஸுடன் பணிகளாற்ற அருள்புரிவானாக. ஆமீன்.

அபூஹாமித்
அல்லாஹ் நாடினால் மீண்டும் சந்திப்போம்…


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு