Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தோழியர்... 15

அதிரைநிருபர் பதிப்பகம் | August 31, 2014 | , , , ,

சத்தியமார்க்கம்.com 'தோழியர்' நூல் வெளியீடு நிகழ்வில் அதிரைநிருபரின் ஆஸ்தான கவிஞர் சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் அவர்களால் எழுதி வாசிக்கப்பட்ட கவிதை.

தோழியர் !

புதினத்தின் சுவையில்
போதனைகள்;
புனைவுகளற்ற
புனிதவதிகளின்
வரலாற்றுப் பக்கங்கள்!

சோதனை காலத்தின்
சுவடுகள்;
வலி நிறைந்த
வழித் தடத்தின்
பயணக் குறிப்புகள்!

உயிர்த் தியாகம்
உடல் வருத்தம்
உளத் தூய்மை என
உன்னதத் தோழியரின்
மொத்த அர்ப்பணிப்பைச் சொல்லும்
புத்தகம்!

போர்முனைக்கும்
புலம்பெயர்ந்து போதிக்கவும்
தோழர்கள்;
பின்புலமாய்
பெரும் துணையாய்
ஊழியராய்
தோழியர்!

ஆண் எழுத்தாளரின்
ஆதிக்கத்தில்
பெண்களுக்கான வக்காலத்து!

சஹாபியப் பெண்களின்
இறையச்சம் மெச்சி
சமகாலப் பெண்டிருக்கு
வகுப்பெடுக்கிறார் ஆசிரியர்!

தோழர்களுக்குச்
சளைத்தவர்கள் அல்லர்
தோழியர் -
நூலிலும் நூருத்தீனிலும்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
நன்றி : சத்தியமார்க்கம்.com

நலமில்லா நவீனமும்..
உழைப்பில்லா உடல்களும்!!
5

அதிரைநிருபர் பதிப்பகம் | August 31, 2014 | , , ,

(*) மின்னிலே சுழன்றிடும்
மிக்ஸியின் ஆட்சியில்
மண்ணிலே புதைந்தன
அம்மியும் குளவியும்..

(*) அறவை மில்களின்
ஆற்றலின் உதவியால்
உரலும் உலக்கையும்
உதவாக் கரைகளாம்..

(*) ஆயத்த மாவினில்
ஆப்பமும் தோசையும்..
ஆட்டு கல்லுக்கு
அலுவலும் இல்லையாம்..

(*) குடங்கள் சுமந்து
கொண்டு வந்திட்டார்
குடிநீர் ஒருகாலம்!!
குழாய்கள் இப்போது.

(*) அறிவீர் ஓருண்மை..
ஆதியில் சொன்ன
கருவிகள் மாறின
கடைசியில் பலனென்ன?

(*) மறைந்த அம்மியில்
கரங்களின் வலிமையும்
உரலின் மறைவினில்
உரமான தேகமும்

(*) குடைகல்லின் மறைதலில்
விரல்களின் வீரியம்
குடங்களின் மறைதலில்
கொடியிடை மேனியும்

(*) கூடவே மறைந்ததை
குறையல்ல! வரமென்றோம்
மாடர்ன் உலகுக்கு
மாறுதல் பலமென்றோம்..

(*) அறிவியல் வளர்ச்சியில்
யாவுமே நடந்திடும்
துரிதமாய்..அங்ஙணம்
மரணமும் வரின்?

(*) குறைவாய் உழைப்பும்
கூடுதல் உணவும்
நிறைவாய் சேர்க்கும்
நீள்பிணி நம்மில்..

(*) உண்ணுதலொத்த உடலுழைப்பும்
உழைப்பிற்கேற்ற உணவுகளுமே
முன்னவர் சொல்லிய
முறை ஆகும்..

(*) விகிதம் மாறா
விதம், உடல்பேணிடும்
சகிதம்வாழ, நம் அகவை
சதமென்றாதல் சாத்தியமே!! (இன்ஷா அல்லாஹ்)

அதிரை என்.ஷஃபாத்

இது ஒரு மீள்பதிவு

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

11

அதிரைநிருபர் பதிப்பகம் | August 30, 2014 | , , , , ,

தொடர் : பகுதி ஆறு

உலக வரலாற்றில் பல விந்தையான வித்தியாசமான குணாதிசயங்கள் கொண்ட பலரை சந்தித்து இருக்கிறோம். வெறி கொண்ட வேங்கைள் போல உயிர்களை வெட்டிச் சாய்த்தவர்களையும் தன்னலம் கருதாது பிறர் நலம் கருதியவர்களையும் நல்லது செய்யப் போய் தானாகவே வம்புகளில் மாட்டிக் கொண்டவர்களையும் நல்லவர்களாக நடித்த கெட்டவர்களையும் வரலாறு நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது.

பாலஸ்தீனத்தின் வரலாற்றில் நாம் சந்திக்க இருக்கும் சலாஹுதீன் அய்யூபி என்ற பெயர் படைத்த ஒரு மாவீரர் தான் செய்திருக்கும் சாதனைகளின் அளவுக்கு அவ்வளவாக உலகத்தாரால் அறியப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். அடிப்படையில் ஒரு வீரராகவும், ஆளுமையில் ஒரு இராஜ தந்திரியாகவும், சூழ்நிலைகளைக் கையாளுவதில் சாதுரியம் மிக்கவராகவும், துயரத்தில் இருப்பவர்களை அரவணைப்பதில் காருண்யம் மிக்கவராகவும் சலாஹுதீன் அய்யூபி அவர்கள் வரலாற்றில் ஆஜராகி இருக்கிறார். வீரமும் அன்பும் கருணையும் காருண்யமும் நிறைந்த அந்த மாவீரரின் வீரப்படலத்தைப் பார்க்கலாம். ஒரு குறுநில மன்னராக அறிமுகமாகி அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்து வெற்றிக் கனிகளைத் தன் மடி நிறையக் கட்டிக் கொண்ட சலாஹுதீன் அய்யூபி அவர்களைப் பற்றிக் காணலாம். 

பாலஸ்தீனம், கிருத்துவர்களால் கைப்பற்றப்பட்ட பிறகு எஞ்சி இருந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் எகிப்து நாட்டில் கலிபாவின் பிரதிநிதியாக இருந்து ஆட்சி செய்து கொண்டிருந்தவர்தான் குர்திஷ் இனத்தைச் சேர்ந்த சலாஹுதீன் அய்யூபி. நபிமார்கள் அடங்கப்பட்ட ஜெருசலமும் வளமிக்க பாலஸ்தீனமும் முஸ்லிம்களின் கைகளில் இருந்து பிடுங்கப்பட்டது சலாஹுதீன் அய்யூபிக்கு மண்டைக் குடைச்சலைக் கொடுத்துக் கொண்டு இருந்தது. மீண்டும் பாலஸ்தீன் முஸ்லிம்களின் கைகளுக்கு வரவேண்டுமென்று இரவுபகல் எண்ணம் கொண்டவராக இருந்தார். ஆனால் மிச்சம் இருக்கும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் சலாஹுதீன் அய்யூபின் நிலை, ஒரு மாநிலத்தின் மன்னர் என்பது மட்டும்தானே தவிர முழு அதிகாரமும் படைத்தவரல்ல. ஆகவே நடை முறைப்படி, அரசராக இருப்பவரின் அனுமதி பெற்றே காய்களை நகர்த்த வேண்டிய நிலை. 

ஆனாலும் அவர் வைத்திருந்த வாளின் அரிப்பைத் தாங்க முடியாமல் லிபியாவின் ஒரு பகுதியையும் கூடவே யேமன், ஹிஹாஸ் ஆகிய பகுதிகளையும் கிருத்தவர்களுடன் போரிட்டு வென்று இஸ்லாமிய சாம்ராஜ்யத்துடன் இணைத்த பெருமைக்குரியவராக இருந்தார். 

இத்தனை பகுதிகளை வென்ற சலாஹுதீன் அய்யூபிக்கு ஜெருசலத்தையும் வெல்ல முடியும் என்ற தன்னம்பிக்கை உருவாகி இருந்தது. இதற்காக அவருக்குத் தேவைப் பட்டது இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி உடைய அனுமதியும் ஒத்துழைப்பும்தான். அதற்காக சக்கரவர்த்தியைச் சந்தித்து தனது திட்டங்களை விவரித்து ஜெருசலத்தை வெற்றி கொண்டுவிட வேண்டுமென்ற வெறி அல்ல இன உணர்வு, சலாஹுதீன் அய்யூபினுடைய உள்ளத்தில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தது. 

ஆனால் சக்கரவர்த்தியோ இன்னொரு சுயனலவாதியின் கைப்பாவையாக மட்டுமல்ல நடப்பது எதையுமே அறியாத அறிய இயலாத சின்னஞ்சிறு வயதினராகவும் நோஞ்சானாகவும் இருந்தார். அவருடைய தந்தை நூருத்தின் மஹ்மூத் என்பவர் மறைந்ததால் வாரிசு முறைப்படி, முகத்தில் மீசை கூட முளைக்காத அல்ல .... அரும்பு கூட விடாத மலீக்க்ஷா என்பவர்தான் சக்கரவர்த்தியாக இருந்தார். 

வேங்கைகள் அமர்ந்து இருந்த சிம்மாசனத்தில் மலீக்க்ஷா என்கிற வெள்ளாட்டுக் குட்டி அமர்ந்து கொண்டு செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்தது. சக்கரவர்த்தியின் கைகளில் சட்டி குடுவைகள் கொடுக்கப்பட்டு அவர் சிம்மாசனத்தில் அமர்ந்து அவைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்.

சக்கரவர்த்தியை பொம்மையாக்கி சாவி கொடுத்து ஆடவைத்துக் கொண்டிருந்தவர் இன்னொரு மாநிலத்தின் மன்னராக இருந்த குமுஷ்தஜின் என்பவராவார். அறியாப் பருவத்தில் சக்கரவர்த்தி - அவரை ஆட்டிவைக்க கொடிய எண்ணம் கொண்ட குமுஸ்தஜின் ஆகியோர் கொண்டதே அரசியல் அமைப்பாக இருந்தது.

சக்கரவர்த்தியைத் தடம் புரளச் செய்து ஒழித்துக் கட்டிவிட்டு தானே சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக பட்டம் சூட்டிக் கொள்ள குமுஸ்தஜின் ஆசையும் ஆர்வமும் கொண்டு அதற்கான காய்களை நகர்த்தத் தொடங்கி இருந்தான். அவன் ஏற்படுத்திய இரும்புத்திரைக்குப் பின்னால் சக்கரவர்த்தி ஒரு சிறைக்கைதியைப் போல் போட்டதைத் தின்று கொண்டு பொழுது போக்கிக் கொண்டு இருந்தார்.

சட்டப்படி, அந்நியருடன் போடும் சண்டைகளுக்கு சக்கரவர்த்தியின் அனுமதிவேண்டுமென்ற நிலையில் அவரை சந்தித்து சம்பிரதாயமாக ஒரு அனுமதி வாங்கி பாலஸ்தீனத்தின் மீது படையெடுக்க சலாஹுதீன் அய்யூபி திட்டமிட்டார். ஆனால் சக்கரவர்த்தியை சலாஹுதீன் அய்யூபி போன்ற மாவீரர்கள் சந்தித்து விட்டால் தனது சதி வேலைகளுக்கு சக்தி இல்லாமல் போய்விடுமென்று உணர்ந்த குமுஸ்தஜின், சக்கரவர்த்தியை சலாஹுதீன் அய்யூபி சந்தித்து விடாமலிருக்க அனைத்து வகையான தடைகளையும் ஏற்படுத்தினார். 

ஏற்கனவே தன்னந்தனியாக பல பிரதேசங்களை வென்று இருந்த சலாஹுதீனுக்கு இந்த நிலை சலிப்பை ஏற்படுத்தியது. தானே சுதந்திர மன்னராக பட்டம் சூட்டிக் கொண்டு போர் தொடுக்கலாமா என்று கூட யோசித்தார். ஆனால் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியுடனேயே போர் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டாலும் ஏற்படுமே என்ற எண்ணத்தில் அவரது ஆர்வத்தைத் தள்ளிப் போட்டார். 

ஆனாலும் காலம் கடந்ததே தவிர சக்கரவர்த்தியால் சரியான நிலைக்குவர இயலவில்லை. குமுஸ்தஜின் குறுக்கே நின்று கொண்டே இருந்ததால் பொறுமை இழந்த சலாஹுதீன் அய்யூபி போருக்கு தயாராக வேண்டிய நிலை வந்தாலும் தான் கவலைப்படப் போவதில்லை என்று அதிரடியாக அறிவித்தார். அவரது அந்த அறிவிப்பு சாம்ராஜ்யத்தை ஒரு கலக்கு கலக்கியது. சலாஹுதீன் அய்யூபி போன்ற நினைத்ததை முடிப்பவருடைய அறிவிப்பால் உள்ளதும் போய்விடுமோ என்று சாம்ராஜ்யத்தை யோசிக்க வைத்தது. அதனால் சலாஹுதீன் அய்யூபியை தனி உரிமை பெற்ற சுல்தானாக சாம்ராஜ்யம் அங்கீகரித்தது. சலாஹுதீன் அய்யூபி ஆளும் பகுதிகளில் சாம்ராஜ்யம் தலையிடாது; குறுக்கிடாது என்று அறிவிக்கப்பட்டது. இப்படியாக சலாவுதீன் ஆண்டுகொண்டிருந்த எகிப்து மற்றும் அவர் வெற்றி கொண்ட பகுதிகளுக்கு சாதாரண சலாஹுதீன் அய்யூபி சுல்தான் சலாஹுதீன் அய்யூபியாக உருவெடுத்தார்.

நோஞ்சானாகவும் விளையாட்டுப் பிள்ளையாகவும் சாம்ராஜ்ய சக்கரவர்த்தியின் பதவியில் அமர்ந்து இருந்த மலீக்க்ஷா 1182 ஆம் ஆண்டில் தனக்கு இருபது வயது கூட நிரம்பாமல் இருந்த நிலையில் இறந்து போனார். சக்கரவர்த்தியின் இறப்புக்காகவே காத்திருந்தது போல் சக்கரவர்த்தி மறைந்த செய்தி கிடைத்ததுமே சலாஹுதீன் விஸ்வரூபம் எடுத்தார். தனது படைகளைத் திரட்டிக் கொண்டு பெரும்பாலும் மத்திய ஆசியா முழுவதையுமே கைப்பற்றினார். சலாஹுதீனுடைய சண்டமாருத நிலையைக் கண்ட பல சின்னஞ்சிறு அரசுகள், சலாஹுதீனுடன் போர் செய்து புண்ணியமில்லை என்று கருதி தங்களின் பொழுதை வீணாக்காமல் வா! ராஜா வா! என்று சலாஹுதீனை வரவேற்று சலாஹுதீனுடைய அதிகாரத்துக்கு அடிபணிவதாக தாங்களே முன் வந்து எழுதிக் கொடுத்துவிட்டு சலாஹுதீனை அரசராக ஏற்றுக் கொண்டார்கள். மத்திய ஆசியா முழுதும் சலாஹுதீன் வெற்றிக் கொடி கட்டி- பகைவரை முட்டும்வரை முட்டி – அவரை தட்டும் வரைதட்டி தன்னிகரில்லாத் தலைவராக உருவெடுத்தார். ‘மாபெரும் சபைகளில் அவர் நடந்தால் அவருக்கு மாலைகள் விழுந்தன. ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் என்று அவரைப் போற்றிப் புகழ்ந்தார்கள் ‘ . அரசர்கள் அய்யூபியின் வீரத்துக்கு முன் மண்டியிட்டார்கள். வலிமை நிறைந்த சலாஹுதீனை வலிய வந்து ஏற்றுக் கொண்டு தங்களை அவருடன் இணைத்துக் கொண்டார்கள்.

ஆனால் விதிவிலக்காக சிரியா மட்டுமே கிருத்தவர்களின் ஆட்சியின் கீழ் மிச்சம் இருந்தது. சிரியாவையும் வீழ்த்திவிடவேண்டுமென்று சலாஹுதீன் தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது சிரியா தானாக வந்து பொறியில் மாட்டியது. ஒரு முஸ்லிம்களின் வணிகக் குழு சிரியாவின் வழியாகச் சென்று கொண்டிருந்த போது, சிரியாவின் கிருத்தவ இராணுவம் அவர்களைத் தாக்கி வணிககுழுவில் இருந்த அனைத்து முஸ்லிம்களையும் கொன்று போட்டது. இதுவே சிரியா மீது படை எடுப்பதற்கு சலாஹுதீன் அவர்களுக்கு போதுமான காரணமாக அமைந்தது. பொங்கி எழுந்தார்; புறப்பட்டார் சிரியா நோக்கி. 

ஆக்ரோஷமாக போரில் இறங்கிய சலாஹுத்தீனின் படை சிரியாவின் இராணுவத்தை துவம்சம் செய்தது. வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப் படி கிட்டத்தட்ட பத்தாயிரம் கிருத்துவ வீரர்கள் இந்தப் போரில் கொல்லப்பட்டார்கள். இன்றைய லெபனான் நாட்டின் பிரதேசங்களாக நாம் காணும் பெய்ரூட், ஜாபா முதல் ரமல்லா, டால்மெய்ஸ், நப்லஸ் போன்ற அன்றைய சிரியாவின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகள் சலாஹுதீன் அவர்களின் வசமாயின. இப்படியாக , சிரியாவுடனான இந்த யுத்தத்தின் போக்கும் பாதையும் சலாஹுதீன் அவர்களை ஜெருசலத்தின் எல்லை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் கொண்டு போய் நிறுத்தியது

அடுத்தது என்ன?

சலாஹுதீன் அய்யூபி அவர்களின் நீண்டநாள் கனவான ஜெருசலமும் பாலஸ்தீனமும் வீழ்ந்து மீண்டும் முஸ்லிம்களின் ஆட்சி அங்கு ஏற்பட்ட வரலாறுதான்.

அங்கே நடந்த அரசியல் அதிகாரத்தின் அதிசயங்களை அடுத்த வாரம் காணலாம். இன்ஷா அல்லாஹ். 

இபுராஹீம் அன்சாரி

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 84 1

அதிரைநிருபர் பதிப்பகம் | August 29, 2014 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!

காரணமின்றி முஸ்லிம்களை தவறாக எண்ணுவது கூடாது!

அல்லாஹ் கூறுகிறான்:
நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றி புறம் பேசாதீர்கள்!  உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன். நிகரற்ற அன்படையோன். (அல்குர்ஆன்: 49:12)

''சந்தேகம் கொள்வது பற்றி உங்களை எச்சரிக்கிறேன். நிச்சயம் சந்தேகம், பேச்சில் மிகப் பொய்யாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1573)

முஸ்லிம்களை இழிவாகக் கருதுவது கூடாது!

அல்லாஹ் கூறுகிறான்:
நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள். ( அல்குர்ஆன் : 49:11 )

''ஒரு முஸ்லிமான தன் சகோதரரை இழிவாக நடத்துவதே, ஒரு மனிதனுக்கு தீமையாக அமைய போதுமானதாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.    (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1574)

''அணுவளவேனும் பெருமையை தன் உள்ளத்தில் வைத்திருப்பவர், சொர்க்கத்தில் நுழைய முடியாது' என்று நபி(ஸல்) கூறினார்கள். அப்போது ஒருவர், ''தன் ஆடை அழகாக, தன்  செருப்பு அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இது பெருமையா?)'' என்று கேட்டார். ''நிச்சயமாக அல்லாஹ், அழகானவன். அழகை விரும்புகிறான். பெருமை என்பது, சத்தியத்தை மறுப்பதும், மக்களை கேவலமாகக் கருதுவதுமாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (முஸ்லிம்)  ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1575 )

''அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இன்ன மனிதரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்று ஒருவர் கூறினால், அப்போது அல்லாஹ் ''இன்னாரை நான் மன்னிக்க மாட்டேன் என்று கூறி என்மீது அதிகாரம் செலுத்துபவன் யார்? இதோ! நான் அவனை மன்னித்து விட்டேன். உன் நற்செயலை வீணாக்கி விட்டேன்'' என்று கூறுவான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜுன்துப் இப்னு அப்துல்லா (ரலி) அவர்கள் (முஸ்லிம்)        (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1576)

பாரம்பரியத்தைக் குத்திக் காட்டிப் பேசுவது கூடாது!

அல்லாஹ் கூறுகிறான்:
நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும், தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர். (அல்குர்ஆன் : 33:58)

''இரண்டு விஷயங்கள், மக்களிடம் உள்ளன. அந்த இரண்டுமே இறை மறுப்புக் கொள்கையாகும். 1) பாரம்பரியத்தைக் குத்திக் காட்டிப் பேசுவது 2) இறந்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுவது என்று நபி(ஸல்) கூறினார்கள்.    (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1578 )

ஏமாற்றுவது கூடாது!

''நபி(ஸல்) அவர்கள் உணவுக் குவியல் அருகே சென்றார்கள். அதனுள் தன் கையைப் புகுத்தினார்கள். விரல்களில் ஈரப்பதம் பட்டது. ''உணவுப் பொருள் விற்பவரே! இது என்ன?'' என்று கேட்டார்கள். ''இறைத்தூதர் அவர்களே! மழை பெய்து விட்டது'' என்று அவர் கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள், ''அந்த ஈரம் பட்ட தானியத்தை மக்கள் பார்க்கும் வகையில் மேற்பகுதியில் நீர் வைத்திருக்க வேண்டாமா? நம்மை ஏமாற்றுகிறவர், நம்மைச் சேர்ந்தவர் அல்லர்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1579)

''பொருளின் விலையை ஏற்றி விடும் வகையில் நீங்கள் ஒருவருக்கொருவர் செயல்படாதீர்கள்'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1580)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு
வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

இவர்களும் அதிரை நிருபர்களே 7

அதிரைநிருபர் பதிப்பகம் | August 28, 2014 | , ,

அதிரை அஹ்மது காக்கா:
தமிழுக்கு தாதா...
இங்கிலீஸுக்கு துரை!
தமிழில்...
தன்னிகரற்ற
தனிக்காட்டு ராஜா!
இலக்கணம் உடுத்திய
இதயத்தில் இளைஞர்!
மரபுடைத்தோ
மரபை உடைத்தோ
இவர்கள்மேல் என்றும்
எமக்குப் பிரியம்!

ஆசான் ஜமீல் காக்கா:
புதையல் தேடி
ஜமீனைத் தோண்டு - அறிவு
பொக்கிஷம் வேண்டி
ஜமீல் காக்காவைத் தூண்டு!
கற்பித்தலும் கற்றலும்
காக்காவின் கண்கள்!
தமிழ்...
தன்னை
அலங்கரித்துக் கொள்கிறது-
அதி-அழகு ஆசானின்
ஆணைக்குட்படும்போதெல்லாம்!

சகோ. ஷாஃபி:
வலைப்பூவின்
தலைப்புக்கு
முழக்கம் தந்தவர்.
தர்க்கங்களின்போது
தகிக்கும் தமிழ்...
வாழ்வியல் வசனங்களில்
வருடும்...
இவர்கள்
வார்த்தெடுக்கும் மொழி!

என் ஜாகிர்:
இவன்
படைப்பை
படிக்கையில்
புகைப்பட வாயிலும்
புன்னகை பூக்கும்...
கசப்போ கரிப்போ
இவன்
கையெழுத்தில் இனிக்கும்!
தீய சக்திகள்
தீண்டாமல் வாழ
இவன் சிந்தனயை
தினமும்
மூன்று வேளை
உணவுக்குப் பின்
உட்கொள்ளவும்!

சகோ. ஹாலித்:
பதிவர்களை
முன்னேற்றப் பாதையில்
உந்தும் சக்தியில்
என்னைப்போல் ஒருவரான
இவரைப்போல் ஒருவராக
எல்லோரும் மாறனும்!
கச்சித மொழியாடலின்
குத்தகைக்காரர்!

அலாவுதீன்:
அல்லாஹ்வின் மார்க்கத்தை
அழகாய் எத்தி வைப்பான்,
கடனின்றி வாழ
கச்சித புத்தி சொல்வான்!
நல்லொழுக்க வாழ்க்கையை
தமக்குள் சாதித்து
தரனிக்கும் போதிப்பவன்!

ஹமீது!
வழக்கு மொழிமூலம் அதிக
வாக்குகள் பெற்றவர்,
விஞ்ஞான கட்டுரைகூட
விளையாட்டாய் விளக்குவார்!
நாக்கிலே நக்கல் - நல்
வாக்கிலே நையாண்டி
குட்டிப் பின்னூட்டங்களில்
சுட்டி வள்ளுவன்!

அபு இபுறாஹீம்:
கணினிக் காட்டுக்குள்
கம்பீர சிங்கம் நீர்...
கூட்டுக் குழுமத்தின்
கொத்தான ஆணி வேர்...
வலைப்பூ உலகத்தில்
வனப்பான பூங்கா நீர்!
சொல்லாடல் சாம்ராஜ்யத்தின்
சக்கரவர்த்தி!

கிரவுன் தஸ்தகீர்:
தமிழொரு மொழியெனில்
தாமதில் எழில்!
சொல் விளையாட்டில்
சங்ககாலச் சித்தர்!
கவிதைப் பிரியர் - உமை
கவி யாரும் பிரியார்!
இவர்
அழைத்தால் மட்டும்
கைகட்டி வாய் பொத்தி
எப்படி...
வரிசையில் நிற்கின்றன
வார்த்தைகள்?!

எம் எஸ் எம் நெய்னா முஹம்மது:
மழை பெய்தால்
மண்மணக்கும்...
இவர்
எழுத்திலெல்லாம்
மனம் மயங்கும்!
நாம்
அறிந்த அதிரையைவிட
இவர்
அறிவித்த அதிரையே...
அழகோ அழகு!

சகோதரி அன்புடன் மலிக்கா:
தமிழ் மொழி தறித்து
தமிழ்நாட்டில் போரிட்டு
யுனிகோட் வள்ளல்
உமர்தம்பி காக்காவுக்கு
அங்கீகாரம் வென்றெடுத்த
எங்கூரு வேங்கை!
கவிதையை சுவாசித்து
கவிதையை உண்டு
கவிதையாய் வாழ்பவர்!

யாசிர்:
யாசிரின் பின்னூட்டம்
யாசிக்கவும் தயார்!
ஆக்கத்தைக் குறைத்து
ஊக்கத்தை பதிபவர்!
இவரின்
பின்னூட்டங்கள் தொகு...
பி ஹெச் டி பெறு!

அப்துர்ரஹ்மான்
கற்பனை செய்வதில்
விற்பன்னர் இவர்!
பூவோ பொண்ணோ
நதியோ நாற்றோ
இவர் கவிதைக்கு
உட்பட்டால்...
காலமெல்லாம் செழிப்பே!

ஹிதாயத்துல்லாஹ்:
உயிரூட்டப்பெற்ற
அறிவுக்களஞ்சியம் - இவர்
உரமேற்றப்பெற்ற
குறிஞ்சி பூதம்!
இவருக்கு
சின்ன கிரீடம் ஒன்று
செய்தணிவித்து...
குட்டி கிரவுன்
என்றே
கூப்பிட ஆசை!

அதிரை முஜீப்:
இவர் ஒரு டாட் காம்
ஆனால் நாட் காம் (calm)
குறை சொல்லமுடியாத
கோபத்தில் கோமான்!
சமூக அக்கறையில்
சுயநலமற்ற சீமான்!

ஷரபுதீன் நூஹு:
படித்த சமுதாயம்
இவருக்குப்
பிடித்த கனவாகும்...
கல்வி விழிப்புணர்வு
இவர்
வகுத்த வழியாகும்!

அதிரை மீரா:
மீரா வுக்கொரு
தீராக் கனவு
யாரா வது ஒரு
பேரா வது
ஊரா ளும்படி பயிலவேண்டும் என!
படித்தது பொறியியல்
படிப்பு மட்டுமே தம் பொறியில்!

அப்துல் மாலிக்:
சமூக
அக்கறைத் தூரிகையால்
அழகு தமிழ் தொட்டு
இவர்
தீட்டியதெல்லாம்
சீர்திருத்த சிந்தனைகள்!

அபு ஆதில்:
இவர்
ஆக்கமெல்லாம் நல்
நோக்கம் நிரம்பிய நீர்
தேக்கம்போல!

சின்னக் காக்கா:
சின்னக் காக்கா
ஒரு
பெரிய தம்பி,
பருவத்தில் தம்பி...
சமூக
பார்வையில் காக்கா!

மீராஷாஹ் (எம் எஸ் எம்):
ஏறத்தாழ எமக்கு
செல்லப்பிள்ளை எனினும்
எடுத்துரைக்கும் திறமையிலே
யாருக்கும்
சலைக்காப் பிள்ளை!

அபு ஈஸா:
திட்டமிடும் நேர்த்தியை
இவரிடம்
பிச்சையாய்க் கேட்கலாம்!

அதிரை ஷஃபாத்:
செக்கடிக் குளமும்
செல்ல அலைகளும்
முக்குளித் தாராவும்
முல்லை மலரும்
என
மயக்கியவர்
தொடர
தற்போது தயக்கம் ஏனோ?

தாஜுதீன்:
யுத்த முடிவில்
பூத்த
புத்தம்புது பூ இவர்!
பதிவர் மனம் திரட்டி
அதிரைமணம் கண்டவர்!
இவர்
நாடுவது நலம்...
எனவே
இவரோடு
கூடுவரும் நலமே!

அப்புறம்...நான்:
கனவை விதைத்தேன்
கவிதை என்றனர்...
புத்திமதி சொன்னேன்
கவிக்காக்கா என்றனர்...
ஊர் நினைவில் உழன்றேன்
அதிரைக் கவி என்றனர்...
தற்போது...
அஞ்சலில் சேர்க்க மறந்த
என்
அத்தனைக் கடிதங்களுக்கும்
முகவரி தந்து
முத்திரை யிட்டனர்...
அதிரை நிருபரின்
ஆஸ்தான கவி என்று!

ஊக்கத்தை
ஊட்டி வளர்ப்பதில்
போட்டியின்றி வென்ற
ராஃபியா காக்கா (எம் எஸ் எம்):
ஜஹபர் சாதிக்
அபு இஸ்மாயில்
அஹமது மன்சூர்
அப்துல் ரஷீத் ரஹ்மானி
அதிரை அபூசகோதரிகள்
ஃபாத்திமா ஜொஹரா
கதீஜா

இன்னும்...
இர்ஷாத் எனும்
இளங்காற்றும்...
கடைசியில் வந்தாலும்
கலக்கும் ரியாஸ்...
அதிரை ஆலிம் எனும்
அறுமைத் தோழர்...
தற்போது
ஜகா வாங்கி நிற்கும்
ஜலீல் மற்றும் ஜலால்

வலைப்பூ வந்து
வாசித்து
கருத்தைக் கருவேற்ற
வாசக வட்டமும்
அதை
பின்னூட்டமெனெ
பின்னியெடுத்த பங்களிப்பாளர்களும்
இழு என இழுத்த
இழுப்புக்கெல்லாம்
அழுதுவடியாமல்
எழுந்து நிற்கும்
அதிரை நிருபர் குழுவும்
என-
அத்தனை பேரும்
அதிரை நிருபரே!


சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
Sabeer.abuShahruk
இது ஒரு மீள்பதிவு

உணர்ச்சி வசப்படும் சமுதாயமாகி விட்டோமா? 3

அதிரைநிருபர் பதிப்பகம் | August 27, 2014 | ,

இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா...? - 3 

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

"அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்! 

அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடியவனாக, அல்லாஹ் நேர்வழி காட்டியவரை கெடுப்பவன் இல்லை. அவன் வழிகேட்டில் விட்டவரை நல்வழிப்படுத்துபவன் இல்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை என்றும்,  முஹம்மது (ஸல்)அவர்கள் அவனது அடியார் என்றும், அவனது தூதர் என்றும் உறுதி கூறுகின்றேன்”. நம்முடைய வாழ்வின் வழிகாட்டி, நம் உயிரினும் மேலான உத்தம நபி முஹம்மது(ஸல்) அவர்கள் தம்முடைய ஒவ்வொரு உபதேசத்திலும் மக்களுக்கு எடுத்துச் சொன்ன அதே உபதேசத்தை உங்களுக்கும் எனக்கும் நினைவூட்டியவனாக ஆரம்பிக்கிறேன்.

உலக மாந்தர்க்கெல்லாம் முன்மாதிரி நம் அருமை இறைத்தூதர் அண்ணல் நபி(ஸல்) என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை, ஏன் பிற மதத்தவர்கள் பலருக்கும் தெரியும் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மட்டும் தான் இந்த மனித இனத்திற்கு முன்மாதிரிகளில் முதன்மையானவர் என்று. ஆனால், முன் மாதிரி, என்று வெறும் பேச்சளவில் மட்டுமே நாம் சொல்லுகிறோமே தவிர அவர்கள் நமக்காக அல்லாஹ்விடமிருந்து கொண்டு வந்த வஹியான திருக்குர்ஆனின் கட்டளைகள், அல்லாஹ்வின் கட்டளைப்படி மார்க்கமாக்கப்பட்ட முஹம்மது (ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் இவைகளை நம் வாழ்வில் கடைப்பிடித்து இறை மார்க்கமான “இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா ?” என்ற வினாவோடு இந்த அத்தியாயம் தொடர்கிறது.

உணர்ச்சி வசப்படும் சமுதாயமாகி விட்டோமா?

இஸ்லாமிய வரலாற்றில் பொறுமைக்கும், அமைதிக்கும், சகிப்புத்தன்மைக்கும் எடுத்தகாட்டாக வாழ்ந்த அண்ணல் நபி(ஸல்) அவர்களை முன்னுதாரணமாக கொண்ட நம் முஸ்லீம் சமூகம் கண்டதுக்கெல்லாம் உணர்ச்சிவசப்படும் சமூகமாக மாறி வருவதை நாம் அன்றாடம் அவதானிக்க முடிகிறது. உலகலாவிய அளவில் ஒரு சிலர் முஸ்லீம்கள் என்ற போர்வையில் எடுத்ததற்கெல்லாம் உணர்ச்சிவசப்படுவதாக சித்தரிக்கப்பட்டு, நம்மை ஒரு தனிமைப் படுத்தப்பட்ட சமுதாயமாக மாற்ற மிகப்பெரிய சூழ்ச்சி யூத நஸாராக்களால் கட்டவிழ்த்தப்படுகிறது என்ற நிலையை மறுக்க முடியாத உண்மை.

இந்தியா, இலங்கை, ஈராக், ஆப்கானிஸ்தான், செச்சன்யா போன்ற பிரதேசங்களில் முஸ்லீம்கள் தங்கள் உரிமைக்கு போராடினார்கள் என்று வரலாற்று புத்தகத்தை புரட்டினால், அவைகளில் உண்மை சம்பவங்களை மறைத்து, முஸ்லீம்கள் பொறுமை காக்கவில்லை என்பதையே பதிவு செய்யப்படுகிறது யூத நஸாராக்களின் சூழ்ச்சிகளால்.

ஆனால் ஒரு காலத்தில் ரஷ்யாவை அடக்க அல்கயிதா உருவாக காரணமாக இருந்தது அமெரிக்கா, ரஷ்யாவை ஒடுக்கியபின், அல்கயிதா இஸ்லாமியர்களின் மனதில் இடம்பிடிக்க ஆரம்பித்தவுடன், அவர்களின் அதீத வளர்ச்சிக்கு அஞ்சி, ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளின் மேல் போர் தொடுத்து அப்பாவி முஸ்லீம்களை தங்களின் பொட்டைத்தனமான வான்வழி தாக்குதலால் கொன்று குவித்தார்கள். பின் தன்னால் வளர்த்து விடப்பட்டவன் தனக்கு காலம் முழுக்க அடிமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறாத காரணத்தால், அமெரிக்கா அல்கயிதாவை அழிக்க திட்டம் தீட்டி. தான் வைத்திருக்கும் மீடியா பலத்தால், அல்கயிதாவை கொடூர இயக்கமாக சித்தரித்து முஸ்லீம்கள் மத்தியிலும் அல்கயிதாவின் மீது வெறுப்பை உருவாக்கி, பின்னார் அதன் தலைவரையும் கொலை செய்தது. இருப்பினும் அல்கயிதா தலைவரை கொன்றால், அல்கயிதாவையும் அழித்துவிடலாம் என்று கட்டம் கட்டிய அமெரிக்காவுக்கு தற்போது இருக்கும் மிகப்பெரும் சவாலாக உலக அளவில் உருவெடுத்துள்ளது தான் யூ எஸ் ஏ வின் செல்லப்பிள்ளை என்று முதலில் அறிமுகப்படுத்தபட்ட ஐ.எஸ்.ஐ.எஸ்.

இஸ்லாமிய வரலாற்றில், நபி(ஸல்) அவர்களின் காலத்திற்கு பின்னர் சத்திய சஹாபாக்கள், பின்னர் இமாம்கள், ஏராளாமான நல்லாட்சியாளர்கள் இஸ்லாமிய வழி முறையில் தங்களின் ஆட்சியை மிகச் சிறப்பாக செய்து மக்களுக்கு நன்மைகள் பல செய்து உலக மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளார்கள். இருப்பினும் சில பெயர் தாங்கி முஸ்லீம்கள் இஸ்லாத்திற்கு அவபெயர் தரும்விதமாக தங்களின் சுய லாபத்திற்காக வழிதவறி ஆட்சி செய்தார்கள். இவ்வாறானவர்களின் ஆட்சி முறைகளை எடுத்துக்காட்டி முஸ்லீம்களை கொடூரக்காரர்கள், கேவலமானவர்கள் என்று சித்தரித்து அல்லாஹ்வின் மார்க்கமான இஸ்லாத்தை இவ்வுலகை விட்டு அழித்தொழிக்க அன்றாடம் திட்டம் தீட்டியவண்ணம் உள்ளனர் காவித் தீவிரவாதிகளும், யூத நஸாராக்கூட்டனியும். அல்லாஹ்வின் மார்க்கத்தை அழிக்க இந்த சுண்டக்காய்கள் செய்யும் சூழ்ச்சியால் ஒன்று செய்ய முடியாது. மாறாக இன்று வளர்ந்து வரும் கொள்கையில் முதன்மையாக இருப்பது இஸ்லாமிய கொள்கையே என்பதை மேற்கத்திய நாடுகள் இன்று அவர்களின் குடிமக்கள் இஸ்லாத்தை அதிகமதிகம் ஏற்கிறார்கள் என்ற அத்தாட்சிகளை கண்டு அதிர்ந்து போய் உள்ளார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

மேற்கத்திய யூத நஸாராக்களின் சூழ்ச்சிகள் ஒரு புறமிருக்க, முஸ்லீம்கள் என்று தங்களை அறிவித்துக் கொண்டுள்ள ஷியாக்களும் தங்களுடைய வழிகெட்ட கொள்கையை சதாகமாக்கிக் கொள்வதற்காக, இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சினைகளை வைத்து அரசியல் செய்து, அவ்வபோது முஸ்லீம்களை உணர்ச்சிவசப்பட வைத்து வேடிக்கை பார்த்து வருகிறது என்று வரலாற்றில் மறைக்கப்பட்டு வரும் மிகப்பெரும் மோசடியாக கருத்தப்படுகிறது. ஒரு புறம் சிரியாவிலும், ஈராக்கிலும் கொத்து கொத்தாக அப்பாவிகள் கொல்லப்படுகிறார்கள், முஸ்லீம்களை உணர்ச்சி வசப்பட வைத்து வேடிக்கை பார்க்கிறார்கள் ஷியா அடி வருடிகளான பஸ்ஸார் அல் அசத், ஈரானிய அரசு, ஹிச்பல்லா இயக்கம். மேலும் இவர்களின் இந்த இனப்படுகொலை செயலை கண்டிக்கக்கூட துப்பற்றவர்களாக இன்று கிலாபத்தை (ஐ.எஸ்.ஐ.எஸ். அல்லாத)  முன்னிலைப் படுத்தி அரசியல் சாக்கடையில் விழும் இஸ்லாமிய இயக்கங்கள் இருக்கிறார்கள்.

ஐஎஸ்ஐஎஸ் பற்றி பரவலாக தகவல்கள் மீடியாக்களில் அவ்வபோது வெளிவந்த வண்ணம் உள்ளது. அவைகளில் உண்மையும் இருக்கலாம், பொய்யும் இருக்கலாம். இஸ்லாம் எந்த மனிதனையும் அநியாயமாக கொலை செய்யக்கூடாது என்கிறது. ஒருவன் செய்யும் பாவத்தை மற்றவன் ஏற்க வேண்டும் என்ற விதி இஸ்லாத்தில் இல்லை. மேலும் பழிவாங்குவதையே முன்னிலைப்படுத்துவதை விட மன்னிப்பை முன்னிலைப்படுத்தும் அழகிய மார்க்கம் இஸ்லாம். ஐ எஸ் ஐ எஸ் இஸ்லாமிய கிலாபத்தை அறிவித்திருப்பது மார்க்கப்படி சரியா? தவறா? என்பது விவாதிக்கப்பட வேண்டிய விசயம் என்றாலும். இன்று ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள் அங்குள்ள மக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் உணவு பொருட்களை, சமையல் எரிவாயு போன்றவைகளை மலிவு விலையில் விநியோகித்து, பசி பட்டினியால் சாகக்கிடக்கும் ஏராளாமான மக்களை அல்லாஹ்வின் உதவியுடன் காப்பாற்றி வருகிறார்கள் என்பதை காணொளிகள், புகைப்படங்களில் காண முடிகிறது. ஆனால் அவர்கள் பெயரில் வரும் மாறுபட்ட சில செய்திகள், அதாவது அப்பாவிகளை கொல்லுவது போன்ற காட்சிகள் முஸ்லீம்களிடம் ஐஎஸ்ஐஎஸ் போராளி இயக்கம் வெறுப்பை சம்பாதிக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது. உண்மையில் ஈராக்கிலும், சிரியாவிலும் என்ன நடக்கிறது என்பது யாருக்கு தெரியாது. ஆனால் ஐஎஸ்ஐஎஸ் பற்றிய செய்திகளை ஆய்வு செய்யாமல் அர்வக் கோளாற்றால் முகநூலில் எதிராகவும் சார்பாகவும் மனதில் தோன்றியதை எழுதி வருகிறார்கள்.

இது போல் காஸாவில் 1000க் கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதை எந்த ஒரு மனிதாபமான உள்ளவனாலும் சகிக்க முடியாது. இது ஒரு புறமிருக்க, உணர்ச்சிவசப்படும் சில முஸ்லீம்கள் சிரியா, ஈராக்கில் போராளிகள் சில வருடங்களுக்கு முன்பு வெளியிட்ட தாக்குதல் காணொளி காட்சிகளை வெளியிட்டு, இது ஹமாஸ் இஸ்ரேலுக்கு பதிலடி என்று பொய்யான செய்திகளை பரப்பி மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உலகில் பல்வேறு நாடுகளில் அப்பாவி முஸ்லீம்களுக்கு ஏகப்பட்ட இன்னல்கள், தொந்தரவுகள் இருக்கும் இந்நிலையில். தமிழகத்தில் பரபரப்பாக பேசப்படும் செய்து சூனியம். இன்று முஸ்லீம்களுக்கு தேவைப்படும் ஏதோ ஒரு மிகப்பெரும் ஆபத்துப் போன்று பொய்யாக சித்தரித்து மக்களை வழிகெடுத்து வருகிறது ஒரு கூட்டம். இதற்கெல்லாம் காரணம் நம் சமூகத்தில் உணர்ச்சி வசப்படக்கூடிய ஒரு பக்கம் சாயும் தக்லீத் கூட்டம் இருப்பதால்.  குர்ஆனிலும் ஷஹீஹான ஹதீஸ்களிலும் சூனியம் பற்றி வந்துள்ளதால், நபி(ஸல்) காலம் முதல், ஸஹாப்பாக்கள் காலம் தொடர்ந்து இன்று வரை இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்துச் சொல்லும் அனைத்து மார்க்க அறிஞர்களும் சூனியத்திற்கு தாக்கம் உண்டு, அல்லாஹ் நாடினால் மட்டுமே அதற்கு தாக்கம் ஏற்படும் என்று சொல்லி வருகிறார்கள். மேலும்  சூனியம் செய்யக்கூடாது, சூனியம் கற்கவோ கற்பிக்வோ கூடாது, சூனியக்காரனிடம் சூனியம் வைக்கவோ வெட்டவோ கூடாது.. சூனியம் அவனுக்கு செய், எனக்கு செய் என்று ஒருவனை தூண்டக்கூடாது, அது மிகப் பெரிய பாவம், குப்ரு, ஷிர்க் ஆனால் குர்ஆனிலும் ஷஹீஹான ஹதீஸ்களிலும் சூனியம் பற்றி ஏராளமான சம்வங்கள் வந்திருப்பதால், சூனியத்திற்கு ஒரு தாக்கம் உண்டு அது அல்லாஹ்வின் நாட்டமின்றி அதனால் எந்த தாக்கமும் ஏற்படாது. இது தான் துளி அளவு முரண்பாடுகள் இல்லாத சரியான நிலைபாடு என்பதை குர்ஆன் ஹதீஸ் வழியில் நாம் அறிந்துள்ளோம்.

உணர்ச்சிகளை தூண்டி உலக அளவில் முஸ்லீம்களை இஸ்லாமிய வாழ்க்கையை விட்டு வழிதவற செய்ய மேற்கத்திய சக்திகள் ஒரு புறமும், மற்றொரு புறம் ஸஹாப்பாக்களை சபிக்கும் ஷியாக்கூட்டமும் ஏராளமான சூழ்ச்சிகள் செய்து வெற்றியும் கண்டு வருகிறார்கள். இது போல் தமிழ் முஸ்லீம்களிடமும் உணர்ச்சிகளை தூண்டி, பொய்யான தவறான விளக்கங்களை குர்ஆன் மற்றும் ஷஹீஹான ஹதீஸ்களுக்கு கொடுத்து ஏனைய முஸ்லீம்களை முஷ்ரிக்குகளாக்க மிகப்பெரிய சூழ்ச்சிகளை அறிந்தோ அறியாமலோ ஒரு கூட்டம் செய்து வருகிறது. ஒரு ஆபத்தான காலகட்டத்தில் உலக முஸ்லீம்களும் இந்திய முஸ்லீம்களும் உள்ளனர் என்பதை நாம் எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாமிய வரலாற்றில் வழிகேட்டு சிந்தனைக்கு மிக முக்கிய பங்கு ஒரு தலைவனை தக்லீத் செய்யும் ஒரு கூட்டம் இருந்து வந்ததே. அல்லாஹ் நம் எல்லோரையும் எவனையும் இவ்வுலகில் தக்லீத் செய்து வழிகேட்டுக்கு செல்லாமல் பாதுகாப்பானாக.

நம் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்களும், உத்தம சஹாபாக்கள் செய்த தியாகத்தில், அர்பணிப்பில் நம் வாழ்நாட்களில் இஸ்லாத்திற்காக ஒரு துளியளவு நாம் அர்ப்பணிப்பு செய்திருக்கிறோமா? என்ற வினாவை நமக்குள் ஒவ்வொரு நிமிடமும் நம்மிடம் கேட்டுக் கொள்வோம். நம்மை இஸ்லாத்திற்காக முழுமையாக அர்ப்பணிப்போம். இன்ஷா அல்லாஹ்..

யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்...
M.தாஜுதீன்

எம் சிந்தையைக் கவர்ந்த கல்வித் தந்தை! S M S 4

அதிரைநிருபர் பதிப்பகம் | August 26, 2014 | , , , ,

சுருங்கப் பேசுகின்ற எஸ். எம். எஸ்.,
சுருக்காய்ச் செயல்படும் எக்ஸ்பிரஸ்!
உழைப்பில் எறும்பாய் இயங்கிடுவார்;
உறுதியில் இரும்பாய் இருந்திடுவார்!

சுவைபடப் பேசிச் சொக்க வைப்பார்;
நயம்படச் சொல்லி ரசிக்க வைப்பார்;
வசிய வார்த்தையில் சிக்க வைப்பார்;
மசியா மனிதரை மசிய வைப்பார்!

திட்டினால் நமக்கு அறிவுரை; அவர்
குட்டினால் அனுபவம்! இவைகளின்
சொந்தக்காரர் நமது தாளாளர்; தன்
சொந்தக்காலில் நின்ற செயலாளர்!

மடிக் கணினி வரு முன்னரே
மடியில் வைத்துத் தட்டச்சில்,
பணி ஆணைகள் பல அச்சிட்டு,
படித்தோர்க்குப் பலன் தந்தார்.

ஆங்கிலத்தை ஆளும் துரை! இவர்
ஆளுமையில் அடங்கும் துறைகள்;
கோட்டுகளும் சூட்டுகளும் வசமாய்
மாட்டிக் கொண்டு குட்டுப் படும்!

வாசகமொன்று இவர் எழுதிடின்,
வக்கணை பேச யாருளர்? பிறர்
வாசகத்தை இவர் திருத்திடின்,
வாய்திறந்து மறுப்போர் யாருளர்?

அலுவலகங்களுக்கு ஓர் உடை,
விழாக்களுக்கு என்று ஓர்உடை,
பிரமுகரைச் சந்திக்க ஓர் உடை
என்ற வழக்கம் உடையாரல்லர்!

யாவும் உடையார்க்கு உயருடையா?
பயமே அறியார்க்குப் படை பலமா?
தளரா நடையே போதும் அவருக்கு,
அடையா இலக்கை அடைவதற்கு!

நீட்டோலை வாசியா நின்றவரை,
ஏட்டோடு பள்ளிக்கு வரச் செய்தார்!
படிப்பின்றி வீட்டோடு இருந்தோர்,
பள்ளியில் சேர்ந்து புள்ளியாயினர்.

பட்டறிவில்லா எம் போன்றோரை,
பட்டை தீட்டி மதிப் பேற்றினார்!
அறிவுரைகளால் அதட்டி என்னை
முது கலையை அடைய வைத்தார்!

ஆசிரியப் பணி வாய்ப்பு தந்தார்;
அரவனைத்தார்; தலைமை யாசிரியர்
பதவி நெருங்கும் வரை அவர்
அன்பில் எம் முயர்வு இருந்தது!

பரவட்டும் தாளாளர் புகழொளி
பாரெல்லாம்! வல்ல இறைவன்,
புவனப் பதவி பல தந்தவருக்கு
சுவனப் பதவியை வழங்கட்டும்!

A.M. அப்துல் காதிர், M.A.,Bed. (வாவன்னா)
முன்னாள் மாணவர், முது கலைப்
பட்டதாரி ஆசிரியர்,
காதிர் முகைதீன் மேல் நிலைப்பள்ளி
நன்றி : தென்றல்

அடுக்குத் தொடர்… ஒடுக்கு இடர்! 7

அதிரைநிருபர் | August 25, 2014 | , , , , , ,

திடீர்திடீர் என வரும் மனக்கஷ்டம்
தினந்தினம் செய்யும் திக்ரே குணம்
சும்மா சும்மா உண்ணும் தப்பான பழக்கம்
காலங்காலமாய்த் தொடர்வது உடலின் பலஹீனம்

பளிச்பளிச்சென்று மின்னினாலும்
மின்னமின்ன மதிப்பில் குறையாத்தங்கம்
என்றென்றும் சிரித்த முகத்திற்கு
பற்பலரிடம் நன்மதிப்பு உண்டு என்றும்

சிறுசிறு சேமிப்புகள்
பெருகப்பெருக பெருமதிப்பு
குளிரகுளிர நேசிக்கும் உறவுக்கு
காலங்காலமாய் நன்மதிப்புண்டு

வருகவருக என அழைக்கும் பாங்கொலி
நெருங்க நெருங்க தழைக்கும் நன்மை
வாவா என் அழைக்கும் மண்ணறை
போபோ எனத் தள்ளும் இளமை

யார்யார் பேசினாலும்
மிகமிக எடுபடுவது கனிவே
திடீர்திடீர் என்ற வளர்ச்சி
செல்லச்செல்ல சில வீழ்ச்சி

அடிக்கடி செய்யும் திக்ர்
தினந்தினம் கேட்கும் பாங்கொலி
 வாராவாரம் வரும் குத்பா
வருடாவருடம் ரமலான் நம் வழக்கங்கள்

நான் நான் என்ற ஆசை ஒழித்து
காலங்காலமாய் சொல்லபட்ட ஒற்றுமையை
அலைஅலையாய் ஒன்றாய் சங்கமத்தில்
வாழ்க வாழ்க என ஒன்றிய அதிரை எப்போது?

M.H.ஜஹபர் சாதிக்

பேசும் படம் - தொடர்கிறது... 12

அதிரைநிருபர் பதிப்பகம் | August 24, 2014 | , ,

நிழற்படங்கள் நிஜத்தை பிரதிபலிக்கும் பிம்பங்களாக தெரிவது அதன் தத்ரூபமான காட்சியமைப்பை அப்படியே கொண்டு வரும்போது, அதனை அப்படியே காட்சிப் படுத்தி காட்டும் மூன்றாம் கண் நிமிர்ந்து நிற்கிறது.


கருவுற்றிருக்கும்  பல்லி இதுகளெல்லாம் கரு கலைப்பு செய்து கொள்வது கிடையாது.


இந்த பூக்களெல்லாம் ஒற்றை காலில் நிற்பது ஏன் தெரியுமா பெண்கள் தலையில் சூடச் சொல்லித்தான்.


ஊட்டி கொடைக்கானல் செல்பவர்கள் இதை சுவைக்காமல் ஊர் திரும்புவதில்லை.


இயற்கையான இடங்களை காண்பதில் மனதுக்கு ஒரு இதமே 


வழுக்கும் பாறையில் வழுக்கிக்கொண்டு ஓடும் நீர்.

Sஹமீது

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

13

அதிரைநிருபர் பதிப்பகம் | August 23, 2014 | , , , , ,

தொடர் : பகுதி ஐந்து

உலகையே ஆட்டிப்படைக்கிற இந்த உணர்வு பூர்வமான பேசுபொருள் தொடரை தொடர்ந்து எழுதும் முன்பு இத்தொடரின் கடந்த அத்தியாயத்தில் நாம் எடுத்துக் காட்டி எழுதி இருந்த சில வரலாற்றுச் செய்திகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து (தம்பி) சகோதரர் இப்னு அப்துல் ரஜாக் அவர்கள் அதிரைநிருபரின் வாசகராக எழுப்பி இருந்த சில கேள்விகளுக்கு பதில் கூறிவிட்டே தொடர வேண்டுமென நினைக்கிறேன்.

தம்பி இப்னு அப்துல் ரஜாக் அவர்கள் எழுப்பி இருந்த வினாக்களுக்கு கருத்துரைப் பகுதியிலேயே தம்பி கவிஞர் சபீர் அவர்கள் சுருக்கமான ஆனாலும் பொருத்தமான பதிலை பதிவு செய்து இருந்தாலும் தொடரின் எழுத்தாளர் என்கிற முறையில் விரிவான விளக்கம் தேவை என்று சில பெரியவர்களும் உலகின் பல பாகங்களில் இருந்து சில நல்லெண்ணம் கொண்ட சகோதரர்களும் அலைபேசிகள் அழைப்பின் மூலம் கேட்டுக் கொண்டதால் அந்த சந்தேகங்களுக்குரிய பதில்களை நான் அறிந்தவரை எழுதிவிட்டுத் தொடரைத் தொடர நினைக்கிறேன். இன்ஷா அல்லாஹ்.

முதலாவதாக எழுப்பப்பட்டுள்ள சந்தேகம் / ஆட்சேபம் / கேள்வி /கருத்து என்னவென்றால்
சகோதரர் இப்னு அப்துல் ரஜாக் அவர்களின் கருத்து
என்பதாகும். இதற்கான பதில் :

இதுவரை எழுதி இருந்த அந்தப் பகுதி ஒரு மறைமுகமான நையாண்டியின் முறையிலேயே எழுதி இருந்தேன் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். போப் ஆண்டவர் அர்பன் அவர்கள் தனது பாவத்தை மன்னிக்கும்படி அவர் நம்பிய ஆண்டவர் என்று குறிப்பிட்டது அவர் நம்பிய ஆண்டவரையே நானும் நம்பியதால் எழுதப்பட்டதல்ல. போப்பாண்டவர் நம்பிய ஆண்டவருக்கு அந்தப் பாவங்களை மன்னிக்கும் அளவுக்கு சக்தி அல்லது ஆற்றல் இல்லை என்பதையும் கேள்வி தொடுத்து இருக்கும் தம்பி அவர்களே சுட்டி இருப்பதுபோல் is a prophet and slave தான் என்பதை நானும் உறுதியாக நம்பியே ஈமான் கொண்டு இருக்கிறேன். எனது எழுத்தில் ஒரு இறைத்தூதரான நபி ஈசா (அலை) அவர்களை மனிதர்களின் பாவங்களை மன்னிப்பதற்காக நம்பிப் பயன் இல்லை அந்த ஆற்றல் அவருக்கு இறைவனால் வழங்கப் படவில்லை என்ற செய்தி தொக்கி நிற்கிறது. கருத்தை தொப் என்று முகத்தில் அடித்தாற்போல் போட்டு உடைக்காமல் நளினமாக இப்படி தொக்கி நிற்கும்படி எழுதியது மட்டுமே எனது தவறாக இருக்க முடியும். மற்றபடி Your Comment is unacceptable என்று சொல்லுமளவுக்கு எனது ஈமானை நான் விட்டுவிடவில்லை என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

மேலும், அதே கருத்தில் கேள்வி எழுப்பிய தம்பி அவர்கள் //And the pope believed a fake god, Jesus.// என்று குறிப்பிட்டு இருப்பதில் FAKE GOD, JESUS என்கிற வார்த்தைகளை நான் ஆட்சேபிக்கிறேன். அடுத்த மத நம்பிக்கையாளர்களை நோக்கி, இப்படிப் பட்ட கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. காரணம் “உங்களது மதம் உங்களுக்கு ; எங்களது மதம் எங்களுக்கு” என்கிற பொருள் பதிந்த “ லக்கும் தீனுக்கும் வலிய தீன்” என்கிற அருள்மறையின் வார்த்தைகளை தம்பி அவர்கள் உணர்ந்து பார்த்து விட்டு அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்க வேண்டுமென்று நான் எதிர்பார்க்கிறேன். காரணம் , அடுத்தவர்களுடைய நம்பிக்கைகளை நாமும் நம்ப வேண்டுமென்ற கட்டாயமில்லை எனினும் அவர்களின் நம்பிக்கையைப் புண்படுத்தக் கூடாது என்கிற அடிப்படையிலேயே //அவர் நம்பிய ஆண்டவர் அவரது பாவங்களை மன்னித்தாரா என்று தெரியவில்லை.// என்று மூடு மந்திரமாக நான் குறிப்பிட்டு இருக்கிறேன். மற்ற மதத்தவர்களின் நம்பிக்கைகளை கடினமான வார்த்தைகளால் விமர்சிப்பதை நாம் விரும்பவில்லை. காரணம் அது இறைவனாலும் தடுக்கப்பட்டதாகும்.

“இறைவனை விடுத்து மற்றவர்களை அழைத்துப் பிரார்த்திப்பவர்கள் ஊகத்தைத்தான் பின்பற்றுகிறார்கள் “ (10:66,67)

“அல்லாஹ்வை விடுத்து, இவர்கள் யாரை அழைக்கிறார்களோ அவர்களால் ஒரு ஈயைக் கூட படைக்க முடியாது “ ( 22:73)

“எதனால் படைக்க இயலாதோ , இலாபமும் நஷ்டமும் அளிக்க எதனிடம் ஆற்றல் இல்லையோ, மரணமும் வாழ்வும் எதன் கைவசம் இல்லையோ அது கடவுளாக முடியாது “ ( 25:3 )

ஆகிய திருமறையின் வாசகங்களை போப் ஆண்டவர் அர்பன் வேண்டுமானால் அறிந்திருக்க வாய்ப்பு இல்லாமல் இருந்திருக்கலாம் . நாம் அறியாமல் இருந்திருக்க முடியுமா?

இரண்டாவதாக, கீழ்க்கண்ட கண்டனத்துக்கும் நாம் பதில் அளிக்க வேண்டி இருக்கிறது.
சகோதரர் இப்னு அப்துல் ரஜாக் அவர்களின் கருத்து
இந்தக் கண்டனத்தில் Where did you take this idea to write against truth. என்று கேட்டிருப்பதற்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கற்பனைக் கதைகளை எழுதுபவர்கள்தான் அவர்களின் ஐடியாவின் பிரகாரம் கதைகளை நகர்த்திச் செல்வார்கள். நாம் எழுதுவது நாவல் அல்ல; வரலாற்றின் அடிப்படையிலான செய்திகள்தான். இவற்றுள் சொந்தக் கருத்துக்களின் சாயலோ சாரலோ துளியும் கிடையாது. Idea என்கிற வார்த்தைப் பிரயோகத்துக்கு எனது கடுமையான கண்டனங்களை நான் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு வேறு வழி இல்லாமல் தள்ளப்பட்டு இருக்கிறேன்.

வேண்டுமானால் இந்த ஐடியா என்கிற வார்த்தைக்கு பதிலாக இந்தத் தகவல்களை எங்கிருந்து பெற்றேன் (Source) என்று கேட்டிருந்தால் வெளிப்படையாக கேட்டிருப்பதாக எண்ணி நானும் அவற்றை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டிருக்க இயலும். ஆனால் நானே கற்பனை செய்து பொய்களை எழுதி இருப்பதாக ஒரு குற்றச்சாட்டை இந்தத் தம்பியிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை.

இந்தத் தொடரை எழுதும் முன்பு பல வரலாற்று நூல்களை நேரிலும் இணைய தளங்களிலும் தேடிப் படித்தே எழுதுகிறேன். அவற்றிலிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சிலவற்றை மட்டுமே நான் குறிப்பிட்டு இருக்கிறேன்.

பெருமானார் (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு பதவி ஏற்ற கலிபாக்களை வரலாறு, The Rightly guided Caliphs என்றே கவுரவித்து அழைக்கிறது. அவர்களுக்குப் பிறகுதான் அனைத்தும் மாறிப்போய் இருக்கிறது என்று குறிப்பிடும் வரலாறுகள் ஹஜரத் அலி (ரலி) அவர்களுக்குப் பிறகு இஸ்லாமிய பேரசின் ஆட்சியானது Umayyads, Abbasis, Ottaman Turks என்று பல கைகளில் மாறி மாறி வந்தது. நான் குறிப்பிட்டு இருக்கிற மத சகிப்புத்தன்மையற்ற செயல்கள் நடைபெற்றது சஹாபாக்கள் ஆண்ட காலத்தில் அல்ல. இதை தம்பி அவர்கள் நன்றாக கவனத்தில் கொண்டு கருத்துத் தெரிவித்து இருக்க வேண்டும். இதையே கவிஞர் சபீர் அவர்களும் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள்.

கி . பி 637 – ல் ஹஜரத் உமர் (ரலி) அவர்களின் காலத்தில் ஜெருசலம் கைப்பற்றப்பட்டு அவர்கள் பொறுபேற்றுக் கொண்ட செய்திகளை முன் அத்தியாயங்களில் விவரித்து இருக்கிறோம். அதன் பின் 1076 - ல் அதாவது நானூற்று நாற்பது ஆண்டுகளுக்கிடையில் ஜெருசலத்தில் நடைபெற்ற செயல்பாடுகள் பற்றி – குறிப்பாக துருக்கியர்கள் கைகளில் பாலஸ்தீனம் அகப்பட்டதும் நடைபெற்ற செயல்களின் சின்ன ஒரு சித்திரத்தைத்தான் வரலாற்று நூல்களில் இருந்து படித்துத் திரட்டி தந்திருந்தேன். அது கூட இத்தகைய மத சகிப்பற்ற தன்மைகள் காரணமாக வெறுப்புத் தீ மூட்டப்பட்டு சிலுவைப் போர்கள் மூண்டன என்று குறிப்பிட்டுக் காட்டவுமே அவைகளை திரைபோட்டு மறைத்து விடாமல் நடுநிலையோடு குறிப்பிட வேண்டி இருந்தது.

வரலாறு நம்மைப் புகழும் வரிகளை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்றவைகளை மறைத்துக் காட்டுவது ஒரு நேர்மையான அரசியல் அல்லது வரலாற்று அரசியலின் விமர்சனம் ஆகாது. அந்த அடிப்படையிலேயே இஸ்லாமிய ஆட்சியாளர்களாக இருந்தவர்கள் செய்த வெறுப்பூட்டும் செயல்களையும் குறிப்பிட்டுக் காட்ட வேண்டியது ஒரு கடமையாக இருந்தது. இத்தகைய காரணங்களால் பாதிக்கப்பட்டவர்கள் திரண்டு ஆட்சியைப் பறித்துக் கொண்டதையும் பல படுபாதக படுகொலைகளை நிகழ்த்தி இஸ்லாமிய சமுதாயத்தை அழித்த காட்சிகளையும் காட்டவேண்டிய கடமையும் இருந்தது.

ஆகவேதான் முஸ்லிம்களாக இருந்தாலும் அவர்களும் நடத்திய சில தவறான நிகழ்வுகள் தகவல்கள் அடங்கிய சரித்திர வரிகளை A History of the Jewish People – என்கிற நூலில் HAIM HILLEL BEN SASSON எழுதி இருந்த சுருக்கத்தையே நாம் நமது இயல்பான தமிழ் நடையில் பகிர்ந்து இருந்தோம். அந்த செய்திகள் எல்லாம் நமது கற்பனையில் உதித்தவை அல்ல. இன்னும் மேலே குறிப்பிட்டுள்ள நூலில் பகுதி இரண்டில் Jews Under Islamic Rule என்ற அத்தியாயத்தை கேள்விகள் எழுப்புவோர் படித்துப் பார்த்தால் இவைகளைத் தெரிந்து கொள்ளலாம். நமது பக்கத்திலும் நடந்த தவறுகள் நமக்குப் பாடமாக அமைய வேண்டும் என்கிற உணர்வையும் பெற முடியும்.

தனிமரம் தோப்பாகாது, ஒரே ஒரு வரலாற்றாசிரியர் சொன்னவைகளை மட்டும் வைத்துக் கொண்டு அந்தப் பட்டியலை நான் தரவில்லை. The Decline and Fall of the Roman Empire என்கிற நூலின் Volume II-ல் Edward Gibbon என்பவர் எழுதியுள்ள பக்கங்கள் 367 to 440 வரை உள்ள நீண்ட நெடிய பல செய்திகளைப் படித்துப் பார்த்தால் பல விபரங்கள் வெளிப்படுகின்றன. மேலும் அனந்தன் ராஜா ராமன் என்பவரும் இவற்றை சொல்லி இருக்கிறார். அவர் கிருத்தவர் அல்ல.

கிருத்தவர்கள் இட்டுக்கட்டி எழுதியதாக மட்டும் இவற்றைப் புறந்தள்ள இயலாது. அப்படிப் புறந்தள்ளினால் சிலுவைப் போர்கள் ஏற்பட்டதற்கான காரணங்கள் யாவை என்பதை நாம் உலகத்துக்குச் சொல்லியாக வேண்டும். காரணமின்றிக் காரியம் நடக்காது என்பதை நாம் அறிய மாட்டோமா?

அதே கிருத்தவர்கள் எழுதிய பல வரலாற்று நூல்களில்தான் நமது நான்கு கலிபாக்களையும் வானளாவப் புகழ்ந்து இருக்கிறார்கள். மேலும் கீழ்க்கண்ட பகுதியும் இஸ்லாத்தின் மாண்புகள் குறித்தும் கிருத்துவ ஆட்சியாளர்களின் சதிகளை அம்பலபப்டுத்தியும் தாக்கியும் கிருத்துவ வரலாற்று ஆசிரியர்களே எழுதியதுதான்.

சாம்பிளுக்காக,

“துருக்கியில் ஒஸ்மான் அலி தலைமையிலான துருக்கி இஸ்லாமியப் படைகள், துருக்கியை கைப்பற்றியதுடன் நில்லாது இன்றைய பொஸ்னியா வரை தமது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். மதம் மாற்றுவதில் கிறிஸ்தவ ராஜ்யத்திற்கும், இஸ்லாமிய ராஜ்யத்திற்குமிடையில் பெரிய வேறுபாடுகள் இருந்தன. கிறிஸ்தவ ஆட்சியாளர்கள் தமது நாட்டினுள் பிற மதங்களை பொறுத்துக் கொள்ளவில்லை. இதனால் பலர் பலவந்தமாக கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டனர். அதற்கு மாறாக இஸ்லாமிய ஆட்சியாளர்கள், தமது நாட்டினுள் கிறிஸ்தவர்களை, (யூதர்களையும்) வாழ விட்டனர். இஸ்லாத்தைப் பிடித்தவர்கள் விரும்பினால் மதம் மாறிக்கொள்ளலாம் என்ற நிலை இருந்தது.

ஐரோப்பியர்கள், அரபு-இஸ்லாமிய ஆட்சியாளரிடம் இருந்து கற்றுக் கொண்டவை நிறைய இருக்கின்றன. ஒரு வகையில் சிலுவைப் போர்களின் எதிர்மறையான, அதே நேரம் அனைவருக்கும் நன்மையளித்த விளைவுகள் அவை. இஸ்லாமிய சாம்ராஜ்ய தலைநகரான பாக்தாத்தில் கணிதம், விஞ்ஞானம், மருத்துவம், வானசாஸ்திரம், தத்துவவியல், இலக்கியம் போன்ற பலவற்றை கற்றுத்தேர்ந்த அறிஞர்கள் இஸ்லாமிய அரசின் உதவியால் பல நூல்களை எழுதினார்கள். அதே நேரம் ஐரோப்பாவில் பெரிய அரசனாக கருதப்பட்ட காரல் சக்கரவர்த்தி தனது பெயரைக் கூட எழுத்துக் கூட்டி எழுதத் தெரியாதவராக இருந்தார். அந்தக்காலத்தில் அனேகமாக போப்பாண்டவர் உட்பட கிறிஸ்தவ மதகுருக்கள் மட்டும், எழுதப்படிக்க தெரிந்தவர்களாக அதுவும் லத்தீன் மொழியில் மட்டும் பைபிளை மட்டும் படித்துக் கொண்டிருந்தனர்.

ஐரோப்பாவை கிறிஸ்தவமதம் இருண்ட கண்டமாக வைத்திருந்த காலம் ஒன்றுண்டு. இங்குள்ள சரித்திர பாடப் புத்தகங்களும் அப்படித் தான் கூறுகின்றன. சிலுவைப் போரில் இஸ்லாமிய ராஜ்யப் பகுதிகளை கைப்பற்றிய கிருஸ்தவ வீரர்கள், அங்கே தம்மை விட நாகரீக வளர்ச்சியடைந்த முஸ்லீம் சமுதாயத்தை கண்டு வியந்தனர். அதன் பிறகுதான் ஐரோப்பா சொந்தம் கொண்டாடும் அறிவியல் ஐரோப்பாவை வந்தடைந்தது. உண்மையில் அறிவியலின் தகப்பன்மார்கள் இஸ்லாமியர்களே!

குறிப்பாக நவீன மருத்துவம் அரேபியரிடம் இருந்து கற்றுக் கொண்டதால் தான் , ஐரோப்பிய மக்கள் உயிர் காப்பாற்றப்பட்டனர். அதுவரை சாதாரண தலைவலி என்றாலும், மண்டைக்குள் இருக்கும் "அசுத்த ஆவியை" ஆணியடித்து ஓட்டை துளைத்து வெளியேற்றும் மருத்துவர்களைத் தான் ஐரோப்பா கண்டிருந்தது. கிருத்துவ மதம் பரவ முன்னர், மூலிகை வைத்தியம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் கிறிஸ்தவ மதம் அவ்வாறு வைத்தியம் செய்வோரை எல்லாம், "சூனியக்காரிகள்" என்று கூறி உயிரோடு எரித்து, மூலிகை மருத்துவர்களை இல்லாமல் செய்து விட்டது.

ஸ்பெயின் எட்டு நூறு ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாமிய நாடாக இருந்தது. அதன் ஆட்சியாளர்கள் இன்றைய மொரோக்கோவில் இருந்து வந்த "மூர்கள்". அன்று கல்வியறிவில் பின்தங்கியிருந்த ஐரோப்பியக் கண்டத்தில், "இஸ்லாமிய ஸ்பெயினில்" பல்கலைக்கழகம் நிறுவப்பட்டிருந்தது. அங்கே பல மருத்துவ, அறிவியல் நூல்கள் வெளியிடப்பட்டன.

ஸ்பெயினில் இஸ்லாமியர்களை சதி செய்து ஓடச் செய்த கிறிஸ்தவப் படைகள் அங்கிருந்த அறிவுபூர்வமான நூல்களை எல்லாம் கைப்பற்றி ஸ்பானிய மற்றும் ஐரோப்பிய மொழிகளுக்கு மொழிபெயர்த்ததால் தான் நாம் தற்போது காணும் நவீன மருத்துவம் தோன்றியது.

முஸ்லிம்கள் கடல் வணிகத்தில் முன்னோடியாக இருந்தனர். அவர்களிடம் இருந்து ஐரோப்பிய நாடுகள் நாகரிகத்தையும், மருத்துவத்தையும், விஞ்ஞானத்தையும், கணிதத்தையும், கடல் வணிகத்தையும், சகிப்பு தன்மையுடைய ஆட்சி முறையையும் கற்று கொண்டனர். இன்று தாம் முஸ்லிம்களிடமிருந்து பெற்ற அறிவை விற்று பொருளீட்டுகின்றனர். சேர்த்த செல்வத்தை முதலீடு செய்து பணமாக்குகின்றனர்.”

என்றெல்லாம் கிருத்துவ வரலாற்று ஆசிரியர்கள் இஸ்லாத்தைப் புகழ்ந்து எழுதி இருக்கிறார்கள். அதற்காக தம்பி இப்னு அப்துல் ரெஜாக் அவர்களின் அச்சத்தை நாம் ஒரேயடியாக மறுத்துவிடவும் முடியாது. முடிந்தவரை நடுநிலையாளர்கள் என்று நாம் நம்புபவர்களின் கருத்துக்களையே படித்த பதிவு செய்து இருக்கிறோம். அதற்குமேல் அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.

இதுபற்றி நாம் மீண்டும் மீண்டும் சொல்ல வருவது என்ன வென்றால் ஒரு நாட்டின் வரலாற்றை அலசும்போது அந்த நாட்டில் நடைபெற்ற நல்லவை கெட்டவைகளையும் எடுத்து வைப்பதுதான் ஒரு நேர்மையான அலசலாக இருக்க முடியும். இல்லையேல் அந்த அலசல் ஒரு சார்பான அலசலாக இருக்கும் ; உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர இயலாது; தெளிவான படப்பிடிப்பைக் காட்ட இயலாது . ஆகவே , இன்று யூதர்கள் செய்த அல்லது செய்யும் கொடுமைகளை சுட்டிக் காட்டிக் கண்டிக்கும் அதே நேரத்தில் இந்த நீண்ட நெடிய வரலாற்றில் இஸ்லாமியக் கொள்கைகள் இடறிய இடங்களையும் அப்படி இடரவைத்தவர்களையும் சுட்டிக் காட்டுவதுதான் ஒரு நேர்மையான முறையாக இருக்குமென்று நாம் நம்புகிறோம். அதே அடிப்படையில் இந்த நடுநிலையான அலசல் இன்ஷா அல்லாஹ் தொடரும்.

இந்தத் தொடரின் அனைத்துவரிகளையும் ஆழ்ந்து படித்து சுய விருப்பு வெறுப்பின்றி கேள்விகளை எழுப்பி எங்களை மீண்டும் மீண்டும் புடம் போடும் தம்பி இப்னு அப்துல் ரஜாக் அவர்களை மனமாரப் பாராட்டுகிறேன். இன்னும் இது போல கேள்விகளை வரவேற்கிறேன். பண்பாடு மிக்க உங்களின் கேள்விகள் எங்களை தலையில் தட்டாது ஆனால் பாராட்டும் நோக்கோடு முதுகில் தட்டுமென்றே நம்புகிறோம்.

இப்போது தொடரின் அடுத்த பகுதிக்குச் செல்லலாம். கிருத்தவர்களிடமிருந்து மீண்டும் பாலஸ்தீனம் முஸ்லிம்களின் கரங்களுக்கு மாறிய வரலாறு. அந்த வரலாற்றின் நாயகன் சலாவுதீன் என்கிற மலைக்க வைக்கிற மனிதாபிமானமிக்க மாவீரன்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம்.

இபுராஹீம் அன்சாரி

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 83 1

அதிரைநிருபர் பதிப்பகம் | August 22, 2014 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!

பிறரை நோவினை செய்தல் கூடாது!

அல்லாஹ் கூறுகிறான்:
நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும்,தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர்.  (அல்குர்ஆன் : 33:58) 

''ஒருவரின் நாவால் அவரது கையால் பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற்றால், அவரே முஸ்லிமாவார். அல்லாஹ் தடுத்துள்ளவற்றை வெறுத்து ஒதுக்கியவரே ஹிஜ்ரத் செய்தவர் ஆவார்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1565 )

''தான் நரகத்திலிருந்து காப்பற்றப்படவும், சொர்க்கத்தில் சேர்க்கப்படவும் ஒருவர் விரும்பினால், அவர் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிய நிலையில் மரணம் அவரிடம் வரட்டும். மேலும் தன்னிடம் மக்கள் அன்புடன் நடந்து கொள்வதை விரும்புவர், மக்களிடமும் அவ்வாறே நடந்து கொள்ளட்டும்'' என்று   நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் (முஸ்லிம்)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1566)

ஒருவருக்கொருவர் பகமை கொள்வது, உறவை முறிப்பது, புறக்கணிப்பது கூடாது!

அல்லாஹ் கூறுகிறான்:
நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள். (அல்லகுர்ஆன் : 49:10)

''நீங்கள் ஒருவருக்கொருவர் பகமை கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். புறக்கணிப்பு செய்து கொள்ளாதீர்கள். உறவுகளைத் துண்டித்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் அல்லாஹ்வின் அடிமைகளாக – சகோதரர்களாக ஆகி விடுங்கள். ஒரு முஸ்லிம், தன் சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்திருப்பது கூடாது'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம் (ரியாளுஸ்ஸாலிஹீன்:1567 ).

''திங்கள் கிழமையும், வியாழக் கிழமையும் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படும். அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காத அனைவருக்கும் மன்னிப்பு வழங்கப்படும். ஆனால் ஒருவருக்கும், அவரின் சகோதரருக்கும் பகைமை இருக்கும் மனிதனைத் தவிர, ''இவ்விருவரும் (இணக்கமாக) ஆகும் வரை பொறுத்திருங்கள். இந்த இருவரும் ஒற்றுமை ஆகும் வரை பொறுத்திருங்கள் என்று கூறப்படும்'' என்று   நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்)  ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1568 )

பொறாமை கொள்வது கூடாது!

அல்லாஹ் கூறுகிறான்:
அல்லாஹ் தனது அருளை இம்மக்களுக்கு வழங்கியதற்காக அவர்கள் பொறாமை கொள்கிறார்களா? (அல்குர்ஆன் : 4:54)

''பொறாமை கொள்வது பற்றி உங்களை எச்சரிக்கிறேன். நெருப்பை விறகு சாப்பிடுவது போல் (அல்லது காய்ந்த வைக்கோலைத் தின்பது போல்) நன்மைகளை பொறாமை சாப்பிட்டு விடும்''என்று நபி(ஸல்) கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1569 )

பிறர் குறையை தேடி அலைவது கூடாது:

அல்லாஹ் கூறுகிறான்:
நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றி புறம் பேசாதீர்கள்! (அல்குர்ஆன் : 49:12)

நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும், தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர்.
(அல்குர்ஆன் : 33:58)

''நீங்கள் சந்தேகம் கொள்வது பற்றி உங்களை எச்சரிக்கிறேன். சந்தேகம் எண்ணம் கொள்வது, பேச்சில் மிகப்பெரும் பொய்யாகும். நீங்கள் ஒட்டுக் கேட்காதீர்கள். பிறர் குறையை ஆராயாதீர்கள். ஒருவருக்கொருவர் பெருமை கொள்ளாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். புறக்கணித்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு கட்டளையிட்டபடி நீங்கள் அல்லாஹ்வின் அடிமைகளாக, சகோதரர்களாக ஆகி விடுங்கள். ஒரு முஸ்லிம், மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். இவனுக்கு அவன் அநீதம் செய்ய மாட்டான். இவனை அவன் ஏமாற்ற மாட்டான். இவனை அவன் இழிவுபடுத்திடமாட்டான். இறையச்சம் இங்கே உள்ளது. இறையச்சம் இங்கே உள்ளது என்று நபி(ஸல்) அவர்கள் கூறிக்கொண்டே தமது நெஞ்சை சுட்டிக் காட்டினார்கள். மேலும் தொடர்ந்து, ''ஒருவன் தன் சகோதர முஸ்லிமை இழிவாக எண்ணுவது தீமையாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஒரு முஸ்லிமின் ரத்தம், அவனது கண்ணியம், அவனது சொத்து ஆகியவை (சீர்குலைக்க) தடை செய்யப்பட்டதாகும். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் உடலையோ, உங்கள் தோற்றத்தையோ பார்க்கமாட்டான். எனினும் உங்களின் இதயம், உங்களின் செயல்களின் பக்கமே பார்க்கிறான்'' என்றும் கூறினார்கள்.

மற்றொரு அறிவிப்பில் (கீழ்கண்டவாறு)உள்ளது :

"நீங்கள் பொறாமை கொள்ளாதீர்கள். நீங்கள் கோபம் கொள்ளாதீர்கள். நீங்கள் பிறர் குறையைத் தேடி அலையாதீர்கள். நீங்கள் ஒட்டுக் கேட்காதீர்கள். பிறர் வியாபாரத்தில் தலையிட்டு விலையை உயர்த்தாதீர்கள். அல்லாஹ்வின் அடிமைகளாக சகோதரர்களாக ஆகிவிடுங்கள்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்)   (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1570 )

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு
வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

அவசரம்...? 3

அதிரைநிருபர் பதிப்பகம் | August 21, 2014 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்). எங்கு பார்த்தாலும் பரபரப்பு எல்லா காரியங்களிலும் அவசரம் அவசரம் அவசரம் என்று மனிதர்கள் காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு பறந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த அவசரம் தேவைதானா? நலன்  அளிக்குமா? என்பது பற்றி இந்த ஆக்கத்தில் பார்ப்போம்.

மனிதன் நன்மைக்கு பிரார்த்திப்பது போலவே (சில சமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கின்றான் (ஏனென்றால்) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 17:11)

அவசரம்?

இந்த நவீன உலகில் எங்கு பார்த்தாலும் அவசரம் எதிலும் அவசரம். பஸ் நிலையம், ரயில் நிலையம், கடைகளில் பொருட்கள் வாங்குவது, ஊருக்கு புறப்படுவது என்று எல்லாவற்றிலும் மனிதர்களோடு சம்பந்தப்பட்ட எந்த காரியமானாலும் அவசரம்தான். கஷ்டப்பட்டு சம்பாரிப்பது எதற்கு வயிற்றுக்குத்தானே அட அந்த வயிற்றுக்கு சாப்பிடுவதிலும் கூட அவசரம் காட்டினால் பின் எதற்கு பணம். சிலபேர் விதி விலக்காக இருக்கலாம்.   பொறுமை என்றால் என்ன விலை என்று  கேட்கும் நிலைக்கு ஆளாகி விட்டார்கள் இன்றைய அவசர உலகத்தின் நவீன மனிதர்கள்.

பொறுமையாளர்கள்:

பொறுமையக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள் எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.(அல்குர்ஆன் : 2:45)

வல்ல அல்லாஹ் கூறுவது போல் நாம் உதவி தேடியிருப்போமா? இப்படி உதவி தேடுவதில்லை  நமக்கு நினைத்தது உடனே கிடைக்க வேண்டும். எதிர்பார்ப்பதும் தாமதம் இல்லாமல் நம்மை வந்து சேர வேண்டும். இதுதான் பெரும்பாலோரின் எண்ணமாக உள்ளது. மேலும் பொறுமையோடும், தொழுகையோடும் உதவி தேடுவது இறைவனின் மேல் அச்சம் உள்ளவர்களுக்குத்தான் முடியும் என்று அல்லாஹ் கூறுகிறான். அப்படி என்றால் நம்முடைய உள்ளம் எப்படி உள்ளது என்பதை நாம்தான் சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

அல்லாஹ் யாரோடு? இருக்கிறான்:

நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடவர்களுடன் இருக்கிறான். (அல்குர்ஆன் : 2:153).

என்ன சகோதர, சகோதரிகளே வல்ல அல்லாஹ் கூறுவது புரிகிறதா? நாம் எவ்வாறு இருக்கிறோம். பொறுமையுடன் இருக்கிறோமா? எந்தக்காரியத்தையாவது நன்றாக சிந்தித்து நிதானமாக செயல்படுத்தியிருப்போமா?

பிள்ளைகளிடம், பெற்றோர்களிடம், உடன் பிறந்தவர்களிடம் உறவினர்களிடம், நண்பர்களிடம், வேலையாட்களிடம் இப்படி யாரிடமும் நாம் பொறுமையுடன் நடந்து கொள்வதில்லை. இவர்கள் அனைவரிடமும் நாம் பழகும் விஷயத்திலும் நிதானத்துடன் நடந்து கொள்வதில்லை, நாம் சொல்வதை பிறர் கேட்க வேண்டும், நாம் திட்டினாலும் மற்றவர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் நாம் மட்டும் யாருடைய ஏச்சுக்களையும், கோபத்தையும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்பது நம்முடைய கொள்கையாக உள்ளது.

நாம் பொறுமையிழந்து மற்றவர்களை மனிதர்களாகட்டும் பொருள்களாகட்டும் எல்லா காரியங்களிலும் சாபம் இடக் கூடியவர்களாக  இருக்கிறோம். இப்படி இருப்பவர்களிடம் பொறுமையாக இருந்து, விட்டுக் கொடுத்து மன்னிக்கும் மனப்பான்மையுடன் இருங்கள் என்று அறிவுரை கூறினால் முயற்சி செய்கிறோம் என்று வாயால் சொல்வதோடு முயற்சி நின்று விடுகிறது. 


சில சகோதரிகள் உறவுகளுக்குள் ஏதாவது கருத்து வேறுபாட்டால் சண்டை போடும்பொழுது, மகளாக, தாயாக இருந்தாலும் நிதானம் தவறி வாயில் வந்ததை எல்லாம் திட்டி விட்டு உறவே வேண்டாம் என்று ஒதுங்கி விடுகிறார்கள். அவர்களிடம் கேட்டால் நான் நல்லபடியாகத்தான் நடந்து கொள்கிறேன், மற்றவர்கள்தான் என்னை நோவினை செய்கிறார்கள் என்று கூறுகிறார்கள். தாம் பிறரை நோகடிப்பது தவறு கிடையாது. ஆனால் மற்றவர்கள் பதிலுக்கு தம்மை ஏதும் சொல்லி விட்டால் பொறுத்துக் கொள்ள மாட்டார்களாம் என்ன நியாயம் இது?  திட்டுவதை எல்லாம் திட்டி விட்டு பிறகு இப்படிப்பட்ட சகோதரிகள் என்னை  மன்னித்து விடுங்கள் என்று சொல்கிறார்கள். மன்னிப்பு கேட்பது மிக சுலபம் தங்களின்  கடுஞ்சொற்களால் மற்றவர்கள் அடைந்த மன வேதனையை சரி செய்ய முடியுமா?

நாம் யாரிடம் சண்டை போடுகிறோம் உறவுகளிடம் அல்லவா? நமக்கு உறவுதானே எல்லா காரியங்களுக்கும் உதவியாக இருக்கிறார்கள் என்ற சிந்தனை இல்லாமல் அவசரத்தில் திட்டி விட்டு பிறகு வருத்தப்படுவதால்  பயன் இல்லை. அவசரத்தில் உறவுகளோடு சண்டை போடும் சகோதர, சகோதரிகளே நன்றாக நிதானமாக யோசித்து பாருங்கள். வல்ல அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். ஒருவருக்கு ஒருவர் பொறுத்துக்கொள்வதால் யாருடைய சொத்தும் குறைந்து விடாது. உங்களுக்கு கோபமே வரக்கூடிய காரியத்தை உறவுகளும், வேறு யாரும் செய்து இருந்தாலும் அலட்சியப்படுத்தி மன்னித்து விடுங்கள். நீங்கள் மனிதர்களை மன்னித்தால் வல்ல அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னிப்பான். பொறுமையாளர்களுடன் நான் இருக்கிறேன் என்று வல்ல அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ் கூறும் பொறுமையாளாராக உங்களை மாற்றிக்கொள்ள வேண்டாமா?

எதற்கு அவசரப்படக்கூடாது?  எதற்கு அவசரப்படலாம்?

மறுமைக்கான செயல்களைத் தவிர மற்ற எல்லா விஷயத்திலும் நிதானத்துடனும் காலம் தாழ்த்தியும் நடந்து கொள்ள வேண்டும். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: சஆத் இப்னு வக்காஸ்(ரலி) நூல்: அபூதாவூத்)

இந்த நபிமொழியிலிருந்து  என்ன புரிந்து கொள்ள முடிகிறது. உலக காரியங்களில் நமக்கு நன்மை தருமா? தீமை தருமா? என்பது பற்றி எந்த மனிதருக்கும், எவ்வளவு பெரிய மகானாக இருந்தாலும் தெரியாது. அதனால் உலக காரியங்கள் எதுவாக இருந்தாலும் நிதானமாக பதற்றப்படாமல், அவசரப்படாமல், ஆலேசானைகள் தேவைப்பட்டால், உண்மையான ஆலோசனை தருபவர்களிடம் ஆலோசித்து காரியத்தில் ஈடுபடலாம். மேலும் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் நிதானமாக (அளந்து அளந்து பேசுகிறான் என்று சொல்வார்கள்) மற்றவர்கள் மனம் புண்படாமல் பொறுமையுடன் பேச வேண்டும். (பதறாத காரியம் சிதறாது என்ற பழமொழி கூட உண்டு). நமது காரியங்களில் பொறுமையை கடைபிடித்தால் அல்லாஹ் நாடினால் வெற்றி கிடைக்கும்.

இந்த உலகத்தில் நமக்கு வியாபாரத்தில் நஷ்டமடைந்து விட்டால் வேதனையின் உச்சிக்கு சென்று விடுகிறோம். நம்முடைய மதிப்பு மிக்க பொருள்கள் காணாமல் போய்விட்டால் வேதனையில் அழுகிறோம். இதுவெல்லாம் நிரந்தரமில்லா உலக வாழ்க்கைக்காக, ஆனால் நிரந்தரமான மறுமை வாழ்க்கையில் நஷ்டம் அடைந்து விட்டால் திரும்ப சரி செய்ய முடியுமா? முடியவே. . . . முடியாது. மறுமைக்கான காரியத்தின் விளைவுகள் வல்ல அல்லாஹ்வால் உறுதி செய்யப்பட்டு விட்டது. எந்த காரியங்களை எல்லாம் செய்தால் நமக்கு மறுமையில் நன்மை கிடைக்கும் என்ற பெரிய பட்டியலையே தயார் செய்து வைத்துக்கொள்ளலாம். ஏனென்றால் நம்முடைய இந்த உலக வாழ்வே பரீட்சை கூடம்தான் தேர்வு எழுதிக்கொண்டு இருக்கிறோம், மறுமையில் இறுதி தீர்ப்பு நாளில்தான் நமக்கு மார்க் கிடைக்கும் அந்த மார்க் எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியாது.

அதனால் எந்தச் செயல்களை செய்தால் மறுமையில் வெற்றி கிடைக்கும், சிறந்த செயல்கள் எது என்பது பற்றி திருக்குர்ஆனிலும், நபிமொழியிலும் அதிகம் அதிகம் காணலாம். நாம் ஆய்வு செய்ய வேண்டும். இதன்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

ஆகவே சகோதர, சகோதரிகளே! பிறரை பற்றி ஆய்வு செய்வதை விட்டு விட்டு மறுமையில் நம்முடைய காரியத்திற்கு நாம் மட்டும்தான் பதில் சொல்ல வேண்டும் என்பதை மனதில் வைத்து  மறுமையில் வெற்றியடைந்து சொர்க்கம் செல்லக்கூடிய நன்மக்களாக நம்மை மாற்ற முயற்சி செய்வோம் இன்ஷாஅல்லாஹ்.

காலத்தின் மீது சத்தியமாக!   நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக்கொள்வோரையும் தவிர. (அல்குர்ஆன் : 103:1,2,3)

 S.அலாவுதீன்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு