அதிரைநிருபர் இரண்டு ஆண்டுகளைக் கடந்து சாதித்தது ஏராளம், அதனை நேசிப்பவர்களின் எண்ணிக்கையோ எக்கச்சக்கம் !
அதிரை வலைத் தளங்களில் முன்னணெயிலும் குறிப்பிடத்தக்க நிலையிலும் முன்னெடுத்துச் செல்வதை நற்பண்புகள் நிறைந்த அதிரை மற்றும் அனைத்து சமுதாய சகோதரர்களும் நன்கறிவர். எல்லாப் புகழும் இறைவனுக்கே !
துவங்கி இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன....
கற்றதோ….!
இருபது வருடங்களுக்கான அனுபவங்கள்...
இரண்டு தலைமுறைகளல்ல மூன்று தலைமுறை பதிவர்களின் வட்டம் !
இருபாலரின் இதயங்களில் இடம்பிடித்துக் கொண்ட தனித்துவம் !
அதிரைநிருபரில் சிறப்பம்சமாகத் திகழ்வது இணைய வாசகர்கள் மீதான முழுநம்பிக்கை. அதனால்தான் ஒவ்வொரு பதிவின் கருத்துப் பெட்டிகளும் எப்போதும் திறந்தே இருக்கும், அன்பு நேசங்க்ளின் திறந்த மனத்தோடு வெளிப்படையாக, தனிமனித சாடல் இல்லாத, இறைவனுக்கு அஞ்சிய கருத்துக்களைப் பதிவதற்கு ஏதுவாக இருப்பதே சிறப்பம்சம்.
பதிவுகளையும் பதிவர்களையும் பாராட்டும் நோக்கமும், அவர்களின் எழுத்தாற்றலை ஊக்குவிப்பதிலும், அதிரை மற்றும் இஸ்லாமிய சமூகத்திற்கு எதிரான சீர்கேடுகளைச் சுட்டிக் காட்டுவதிலும் மும்முரம் காட்டி வருவதோடு. அடுத்தவர்களின் தனித் தன்மைக்கு எவ்விதத்திலும் பங்கமில்லாத ஊடக தர்மத்தைப் பேணுவதில் என்றுமே கவனமாக இருப்பதில் அதிரைநிருபர் குழு தனித்துவமானது.
கட்டுரைகள், பொதுசார்பு பதிவுகள், கவிதைகள், மார்க்க பதிவுகள், கல்வி சார்ந்த பதிவுகள், புதுமைசார்ந்த பதிவுகள், வணிகசார்பு பதிவுகள், வாழ்வியல் ஆய்வுகள், தனித்தன்மை மேம்பாடு, நெறியாளர் பக்கம், இப்படியாக பல்வேறு பிரிவுகளாக பதிவுகளைத் தினமும் ஒன்று அல்லது அதற்கு மேலாக தொடர்களாகவும், குறுந்தொடர்களாகவும் பதிந்து வருகிறது.
தனி மின்னஞ்சல்களில் வந்து குவியும் கருத்துகளையும், வாசகர்களின் ஆலோசனைகள், அறிவுரைகள், பரிந்துரைகள், கண்டனங்கள், விமர்சனங்கள் இவைகள் அனைத்தும் அதிரைநிருபரை பண்படுத்த பயன்படும் படிக்கட்டுகளே, அவற்றில் எதனையும் புறந்தள்ளியதே இல்லை. இவ்வாறு எங்களுக்கு பதிவுகளில் கருத்துக்களாகவும், வயது பேதமின்றி தனி மின்னஞ்சல் வழியாக தொடர்ந்து கருத்துகளைப் பரிமாறும் உங்கள் அனைவரையும் நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.
அதிரைநிருபரில் பதிவாகும் தொடர் பதிவுகள், சிறப்பு பதிவுகள், வழமையான வாழ்வியல் பதிவுகள் யாவும் பிற இணையதளங்களில், வலைப்பூக்களில் எங்கள் அனுமதியுடனும், சில அனுமதியின்றியும் பகிர்ந்து வருவதை இணைய தேடலில் இருப்பவர்கள் அனைவரும் அறிவர்.
தொலைக்காட்சி ஊடகங்களின் கவனமும் அதிரைநிருபர் பக்கம் திரும்பியிருக்கிறது, புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்தும் மாணவர்களின் விவாதங்களில் அதிரைநிருபரில் வெளிவரும் "படிக்கட்டுகள்" பதிவு கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. மற்றொரு பிரபலமான "விஜய்" தொலைகாட்சியில் விவாதங்கள் பகுதியில் "ரியல் எஸ்டேட் சிந்திப்போம் - குறுந்தொடர்" பற்றிய விவாத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு வந்ததும் சான்றுகளே அதிரைநிருபர் வலைத்தளம் விரிந்த இணைய வலையில் பரந்து இருப்பதற்கு.
அதிரை வலைத்தளங்கள் என்றில்லாமல், இலவச வலைப்பூக்களில் எத்தனையோ அற்புதமான வலைப்பூக்கள், இணையதளங்கள் இருந்தாலும் வலைத்தளங்களுக்கான ஊடக தர்மம் மீறல் இன்றி தனிமனித தனித்தமை போற்றி, கருத்து திணிப்பின்றி, சுதந்திரமாக எடுத்துவைத்து ஒரு வெற்றிப் பாதையை அமைத்துக் காட்டியதை யாவரும் அறிவர் அல்ஹம்துலில்லாஹ் !
இயக்க செய்திகளோ, அரசியல் கட்சி ஆதரவு நாடும் தகவல்களோ பதிவதில்லை என்ற நிலைபாடு நடுநிலையென்ற சொல்லுக்கு இலக்கணமல்ல. நடுநிலமை என்பது எந்த ஒரு விடயமும், காரியங்களும் நிறைவுக்கு வரும்போது அங்கே தெரியும் அந்த நடுநிலமை எந்தப்பக்கம் சாய்ந்திருக்கிறது. அதுவே ஊடக தர்மம் கற்றுக் கொடுத்த உண்மைநிலை அறிந்து அதன் பக்கம் சார்ந்திருப்பதே.
ஊடக வரலாற்றில் அதனை ஆளுமை செய்பவர்களை விட அதனை நேசிக்கும் வாசர்கள்தான் அறிவில் சிறந்தவர்கள் என்பதை ஒவ்வோர் ஊடகவியலாளரும் உணந்திருக்க வேண்டும் அதனை அதிரை நிருபர் நன்றாக அறிந்தும் அதன்படியே செயல்பட்டும் வருகிறது.
இந்த பதிவை எழுதத் தூண்டிய அதிரைநிருபர் வாசகர்களின் பதிவுகளில் பதியும் மற்றும் மின்னஞ்சல் வழி தனி-கருத்துக்களே என்றால் அது மிகையாகாது.
அதிரைநிருபர் குழு