இன்று மனித இதய ஓட்டத்தை துல்லியமாய் ஒரு காகிதத்தில் கோடு போட்டு காண்பிக்கும் ஈ.சி.ஜி. போல அன்று அயல் தேசங்களில் வாழும் நம் சொந்த பந்தங்களும், ஊரில் இருக்கும் உறவுகளும் தன் உள்ள ஓட்டத்தை ஒரு காகிதத்தில் பேனா மை கொண்டு கடிதமாய்/கடுதாசியாய் எழுதி முடித்து உரியவருக்கு நாட்கள் பல ஆகினாலும் சென்று சேர அனுப்புவதே அக்கால மக்களின் ஒரே வழக்கமாய் இருந்து வந்தது. தொலைத் தொடர்புகளும், தொடு திரைகளும் இன்னும் உலகில் பிரசவிக்காத நேரம் அது.
எங்கோ தெருவின் ஒரு மூலையில் இருக்கும் வசதி படைத்தவர் வீட்டில் மட்டும் இருக்கும் விரல் நுனி விட்டு எண்ணை சுழற்றும் இரு கை தசைகளை வலு பெறச்செய்யும் இரும்பாலான 'டம்புல்ஸ்' போல ரிசீவருடன் இருக்கும் அந்த கறுத்த மொரட்டு தொலைபேசி. எழுதப்படாத விதியாய் ட்ரிங்....ட்ரிங் மட்டுமே இருக்கும் அக்கால ரிங் டோன். ட்ரங்கால் புக் பண்ணி வீட்டிலுள்ளவர்களை ஒரு நேரம் குறிப்பிட்டு அவ்வீட்டிற்கு வரவழைத்து கொஞ்சம் காத்திருக்க வைத்து கண்களில் நீரும், வாயில் தற்காலிக சந்தோசத்தை சிரமப்பட்டு வரவழைத்து கொஞ்சம் பொய்யும் கலந்து இங்குள்ளவரும், அங்குள்ளவரும் பரஸ்பரம் யாரும் மனம் நோகாமல் ஒருவருக்கொருவர் கச்சிதமாய் வேதனையை சிரமங்களுடன் உள்ளுக்குள் சமாளித்து தொலைபேசி உரையாடல்களில் இருபக்க நல விசாரிப்புகள் சில நிமிடங்களுக்காக வரையறுத்து தொடரும் காலம் அது.
கையடக்க தொலைத் தொடர்புகளெல்லாம் சாத்தியமில்லை அக்காலத்தில். ஆனால் தினம்,தினம் சந்தோசங்கள் அவரவருக்கு தொடர்பில் சாத்தியமாய் தான் இருந்தது. ஒருவருக்கொருவர் உறவு முறைகூறிக்கொள்வதில் அப்படி ஒரு உற்சாகம் அன்று. இன்று போல் தம்பியாய் இருந்தாலும் (அண்ணாவியார் வீட்டில் விடிகாலையில் விஷ கடிக்கு வேர் கட்டி) திரும்பிப்பார்க்காமல் செல்லும் காலமல்ல அது.
இன்று பாசிசமும், மத துவேசமும் புற்றீசல் போல் எங்கும் பரவி மனிதம் மாசடைந்துள்ளது போல் அன்று கேன்சரும், கிட்னிப் பிரச்சினையும் பரவாமல் எங்கோ ஒரு மூலையில் மட்டும் வந்து யாருக்கும் அதிர்ச்சியூட்டாமல் அப்படியே மண்ணுக்குள் போய்ச் சேரும்.
கடிதங்கள் அன்று தந்த அந்த சந்தோசக்குவியலை இன்று தொடு திரைகள் சில சில்லரையாய்க்கூட நமக்கு தருகிறதா? தெரியவில்லை. 15 பைசா மஞ்சள் கார்டு தந்த அந்த அனுபவம் இன்று ஐ ஃபோன் தந்ததாக தெரியவில்லை. விண்டோஸ் நம் வீட்டின் ஜன்னலாக மட்டுமே இருந்த காலம் அது. மவுஸ், வீட்டின் தானியங்களை நாசம் பண்ணும் சிறு எலியாக மட்டுமே இருந்தது. ஹார்ட்வேர், கட்டுமான வீடுகளை ஆணி, கதவு, கொலிக்கி, திருகாணி, சுத்தியல், பூட்டு, கம்பி, வயர், லைட்டு, திருப்புளி கொண்டு பூர்த்தி செய்யும் சாமான்கள் விற்கும் கடையாக மட்டுமே இருந்தது. ஃபைல், காகித ஆவணங்கள் கச்சிதமாய் வைக்கப்பட்ட ஒரு கோப்பாக மட்டும் இருந்தது. பேஸ்ட், காலையில் பல் துலக்க பயன்படும் பற்பசையாக மட்டுமே இருந்தது. கட் என்றால் கத்தி கொண்டு வெட்டு ஒன்னு துண்டு இரண்டாக மட்டுமே இருந்தது. வெப் என்றால் சிலந்திவலையாக மட்டுமே இருந்தது. வைரஸ் என்றால் நோய் பரப்பும் நோய்க்கிருமியாக மட்டுமே இருந்தது. அப்ளிகேசன் என்றால் அது மனு கொடுப்பதாக மட்டுமே இருந்தது. ஆப்பிள், ப்ளேக் பெர்ரி போன்றவைகள் புரதம் நிறைந்த பழங்களாகவே இருந்தன.
பிறை போட்டு அதன் நடுவில் 786 முதலில் எழுதி நாயன் துணை, ஆண்டவன் துணை, தேவரீர், அன்பும், பாசமும், நேசமும் உள்ள........ என்றெல்லாம் பாசத்தின் பரிசுத்த மொழியை அடைமழைபோல் கடிதத்தில் கொட்டி தீர்த்து அத்துடன் சிலசமயம் ஆசையாய் ஸ்டூடியோவில் எடுத்த அக்கால வண்ண புகைப்படத்தை ரகசியமாய் அதனுள் இணைத்து அனுப்ப வேண்டியவர்களுக்கு அனுப்பி இருபத்தைந்து நாட்கள் கழித்து வரும் பதிலுக்காக உள்ளத்தில் உற்சாகமாய் காத்துக்கிடக்கும் காலம் அது.
சில சமயம் ஆசை வார்த்தைகளுடன் அது,இது அனுப்பி இருக்கிறேன் உம்மாவுக்கு தெரிய வேண்டாம் என்று மனைவிக்கு எழுதிய கடிதமும், மனைவிக்கு தெரிய வேண்டாம் என உம்மா வீட்டிற்கு அனுப்பும் சாமான்கள் பற்றி உம்மாவுக்கு எழுதிய கடிதமும் அங்கிட்டு, இங்கிட்டு மாறிப்போய் பெரும் சண்டை சச்சரவுகளில் முடிந்த சில சங்கட சம்பவங்களையும் கேள்விப்பட்டதுண்டு.
அரசுத்துறை மூலம் நடக்கும் மணியார்டர் எனும் பண பட்டுவாடா,தபால் பரிமாற்றங்களுக்கு மாரிமுத்து, நாடிமுத்து, குப்புசாமி, முனுசாமி.....போன்ற பெயர்களில் தபால்காரர்களும், நம்மைப்போன்ற அரசுசாரா அயல்நாட்டு (பிழைப்பு) சம்மந்தமான தபால், தகவல் பரிமாற்றங்களுக்கு சீருடை போல் என்றும் தலையில் அந்த தொப்பியும், கையில் ஒரு முரட்டு துணிப்பையும், இடது கால் மாற்றி வலது கால், வலது கால் மாற்றி இடது கால் என வழக்கமாய் மாற்றி போடப்பட்ட செருப்புமாய் வீட்டு வாசல் முன்னே வந்து நின்று "ராத்தா, அவ்வூட்லெ இவ்வொ வர்ர செவ்வாக்கெழமெ ராத்திரி சவுதிக்கு பொறப்புட்ராஹ...... தவாலு ஏதாச்சும் இருந்தா எழுதி வைங்க சாய்ங்காலம் வந்து வாங்கிக்கிட்டு போரேன்........" என்று எல்லோருக்கும் பரிச்சயப்பட்ட குரலுடன் வந்து நிற்கும் "தொனா.கானா." என்று எல்லோரும் ஒருமித்து ஆசையாய் அவரை எதிர்பார்த்து அழைக்கும் முத்து மரைக்காயர் அவர்களின் மரணச்செய்தி இரண்டு நாட்களுக்கு முன் நமதூர் வலைத் தளத்தில் பார்த்து நிழலாடும் அவர்களின் அக்கால மகத்தான தபால் பரிமாற்றப் பணியை இங்கு இச்சிறு கட்டுரை மூலம் என்னை நினைவு கூறச் செய்தது .... அல்லாஹ் அவர்களின் எல்லாப் பாவங்களையும் மன்னித்து கப்ரை பிரகாசமாக்கி வைப்பானாக!
எண்ணற்ற நம் சொந்தபந்தங்களின் ஏர்மைல் கடிதங்களை சுமந்து சென்றதால் தான் என்னவோ அந்த கம்பனும் இன்று ஏர்மைல் கடிதம் போல் காணாமல் போய் விட்டது.
உலகில் இன்று எங்கோ நாம் எப்படித்தான் பிஸியாக இருந்தாலும் ஒரு நாள் நம் வாழ்க்கை பிசுபிசுத்து காணாமல் போகத்தான் போகிறது. அது பற்றிய நினைப்புகள் அடிக்கடி வந்து செல்வது நல்லதே.
இப்பொழுதுள்ள இளைஞர்களுக்கு தொனா.கானா. பற்றி அந்தளவுக்கு பரிச்சயம் இல்லாமல் இருக்கலாம். பரிச்சயம் இல்லை என்பதற்காக நாம் பழசுகளையும், காலம் சென்ற நம் உறவுகளையும் எளிதில் மறந்து விட முடியுமா? அதற்கு தற்கால சொகுசு, பகட்டு, ஆடம்பர வாழ்க்கை தடையாக இருக்கலாம். மரணம் என்பது கேன்சர் பேஷண்டுக்கும், கிட்னி ஃபைலியர் ஆளுக்கு மட்டும் வரும் சமாச்சாரம் என யாரும் நினைத்துக்கொண்டு திரிந்தால் அதற்கு மரணமும் அதை சரியான நேரத்தில் தவறாமல் உரியவருக்கு அனுப்பி வைக்கும் உயிரை படைத்த அந்த உரிமையாளனும் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டார்கள். இது யாருக்கும் இக்கட்டுரை மூலம் அறிவுரையல்ல எழுதியவனுக்கும் சேர்த்தே ஒரு நினைவூட்டல்.
மு.செ.மு. நெய்னா முஹம்மது


