Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label நிதி அமைச்சர். Show all posts
Showing posts with label நிதி அமைச்சர். Show all posts

ப.சி. போடும் பட்ஜெட் பசி போக்குமா? 35

அதிரைநிருபர் பதிப்பகம் | February 21, 2013 | , , , ,


1950 களில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய இந்தப் பாட்டு , நாட்டின் அன்றைய பொருளாதார சூழ்நிலைகளை எளிய  முறையில் படம் பிடித்துக் காட்டியது. இன்று ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்தப் பாடலில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள நிலைமைகள் மாறி இருக்கின்றனவா என்று சற்று சிந்தித்துப் பார்த்தால் இல்லை இல்லை என்றுதான் பெரும்பான்மையானோர் கூற முடியும்.

கையிலே வாங்கினேன் பையிலே போடலே
காசுபோன இடம் தெரியலே _ என்
காதலிப் பாப்பா காரணம் கேப்பா
ஏது சொல்வதென்றும் புரியலே
ஏழைக்கும் காலம் சரியில்லே

மாசம் முப்பது நாளும் ஒளைச்சு
வறுமை பிடிச்சு உருவம் இளைச்சு
காசை வாங்கினாக் கடன்கார னெல்லாம்
கணக்கு நோட்டோட நிக்கிறான் _ வந்து
எனக்கு உனக்குன்னு பிய்க்கிறான் 

சொட்டுச் சொட்டா வேர்வை விட்டா
பட்டினியால் பாடுபட்டா
கட்டுக்கட்டா நோட்டுச் சேருது
கெட்டிக்காரன் பொட்டியிலே _ அது
குட்டியும் போடுது வட்டியிலே 

விதவிதமாய்த் துணிக இருக்கு
விலையைக் கேட்டா நடுக்கம் வருது
வகைவகையா நகைகள் இருக்கு
மடியைப் பார்த்தா மயக்கம் வருது
எதைஎதையோ வாங்கணுமின்னு 
எண்ணமிருக்குவழியில்லேஇதை
எண்ணாமிலிருக்கவும்முடியல்லே 

இந்தச்  சூழ்நிலையில் வரும் பிப்ரவரி இருபத்தி எட்டாம் நாள் வழக்கம் போல் இந்தியப் பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்கள் 2013- 2014 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை சமர்ப்பிக்கும் சடங்கை நிறைவேற்ற இருக்கிறார்.   

இப்போது சமர்ப்பிக்கப் படப்போகும் நிதிநிலை அறிக்கையில் பொதுவாக மக்கள் எவற்றை எதிர்பார்க்கலாம் என்ற கருத்தின் அடிப்படையில் நமது கோணத்தில் சிலவற்றை விவாதிக்கலாம். 

முதலாவதாக இந்த வரப்போகும் பட்ஜெட்டின் காலத்தில் நாட்டின் பாராளுமன்றத்திற்கு தேர்தல் வரவிருக்கிறது. மக்களுக்கு சில மாயாஜால வித்தைகளையும் கண்ணைக்கவரும் காட்சிகளையும் காட்டி ஓட்டைப் பறிக்கும் நோக்கத்தில் இந்த பட்ஜெட் போடப்படலாம் என்று பல பொருளாதார வல்லுனர்கள கருதுகின்றனர். முதலில் இடத்தைப் படித்து விட்டால் பிறகு மடத்தை பிடுங்குவது பெரிய காரியம் அல்ல என்பதை அரசியல் வரலாறுகள் மெய்ப்பித்துக் கொண்டுதானே இருக்கின்றன. 

இருந்தாலும் ‘தலை முறைகளைப் பற்றிக் கவலைப் படுபவன் தான் தலைவனாக இருக்க முடியும் “ என்கிற தத்துவத்தின் அடிப்படையில் இன்று நாடு இருக்கும் சூழ்நிலையில் இந்த வரப்போகும் பட்ஜெட் எவற்றை எல்லாம் உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமென்ற நமது ஆசைகள் அல்லது எதிர்பார்ப்புகளை சொல்லி வைக்கலாம். பட்ஜெட் வெளிவந்த பிறகு இவற்றுள் எவை நிறைவேறி இருக்கின்றன என்கிற விவாதக்களம் வைத்துக் கொள்ளலாம்.

முக்கிய மாக அத்தியாவசியப் பொருள்களின் விலை ஏற்றம், பண வீக்கம், அரசின் நடப்புக் கணக்கில் வரவுக்கும் செலவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இடைவெளி அல்லது பற்றாக்குறை, எண்ணெயின் விலையில் எண்ணிப் பார்க்க முடியாத உயர்வுகள், தங்கத்தின் இறக்குமதி மீது வரி விதிப்பு, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை மேலும் பல துறைகளுக்கு விரிவுபடுத்துவது, நலிவுற்றுக் கிடக்கிற விவசாயத்தை தூக்கி நிறுத்துவது, நாடெங்கும் மின்சாரப் பற்றாகுறையால் தடுமாறிக்கிடக்கும் சிறு, குறு  மற்றும் பெரும் தொழில்கள் , தனி நபர்  வருமான வரியின் உச்சவரம்பை உயர்த்துவது, வீட்டுக்கடன் வட்டி விகித உயர்வு அல்லது தாழ்வு, ஒட்டு மொத்த நாட்டின் கட்டமைப்பு வசதிகள், வெளி நாட்டில் பதுக்கப்பட்டு இருக்கும் கறுப்புப் பணத்தை வெளியில் கொண்டுவருவதகான ஆக்க பூர்வத்திட்டம், ரியல் எஸ்டேட் வணிகத்திற்கு சில ஒழுங்கு முறைகள், மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பங்கீடு , கல்வித் துறையில் அந்நிய நாட்டுப் பல்கலைக் கழகங்களை அனுமதிப்பது   ஆகியவை இந்த பட்ஜெட்டில் குறிப்பிடப்படும் சில முக்கிய கோட்பாடுகள் அல்லது கருத்துக்களாக இருக்கலாம். 

பட்ஜெட் வெளியிடப்படும் முன்பே அரசு நாட்டின் வளர்ச்சி வீதத்தை  6 முதல்  7 % என்று இலக்கு நிர்ணயித்து  இருக்கிறது.  இது எப்படியென்றால் ஒரு கட்டிடத்தை உயர எழுப்பி அதற்கு வர்ணம் தீட்டும் முயற்சி. ஆனால் வர்ணம் தீட்டும் முன்பு அங்கு ஏறிப்போக “ சாரம்” என்கிற அல்லது Scaffolding என்கிற கட்டமைப்பு வசதி தேவை. நாட்டின்  கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்த அரசு இந்த பட்ஜெட்டில் முதலில் முயற்சிக்க வேண்டும். 

கட்டமைப்பு வசதிகளில் தலையாய இடம் தரப்பட வேண்டியது மின்சாரத்துக்கும் விவசாயத்துக்கும் ஆகும் . இந்த பட்ஜெட்டில் தனியார் மின்சார நிலையங்கள் ( Power Generation Projects) அமைப்பதற்கு முன்னுரிமை தரப்பட்டால் பல தொழில்கள் தடையின்றி வளர உதவும். விவசாயிகள் தற்கொலை என்கிற அளவுக்கு ஒரு விவசாயத்தை நம்பி இருக்கிற நாட்டின் நடப்புகளை  அரசு கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வேடிக்கையாகவே இருக்கிறது. தற்கொலை செய்துகொண்ட விவசாயியின் குடும்பத்துக்கு சில லட்சம் ரூபாய்களை நன்கொடையாக அளிப்பதோடு தனது பணி முடிந்துவிட்டது என்று அரசுகள் கருதுமானால் அது கடப்பாரையை விழுங்கிவிட்டு கசாயம் குடிப்பதற்கு சமமாகவே இருக்கும். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அரசின் மானியம் வந்தால்தான் விவசாயி உயிர் வாழ முடியும் என்கிற நிலை நீடித்துக் கொண்டே இருப்பது தற்சார்புக் கொள்கைக்கு வேட்டு வைப்பதாகவே முடியும். தவிரவும் அரசுகள் மானியமாக வழங்கும் தொகைகள் நெல்லுக்கு இறைத்த நீர்  புல்லுக்கும்  பொசிந்து அரசியல்வாதிகளின் இன்னோவா கார்களாக மாறி பவனி வருவதை மறுக்க இயலாது.

நதி நீர் இணைப்பு என்று ஒரு திட்டம் வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்திலிருந்தே    பேசப்பட்டு வருகிறது. ஒரு விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டிருக்கிற மக்கள் நிறைந்த நாட்டில் அந்த விவசாயத்துக்காக தேவைப்படும் நீர் ஆதார வசதிகளைத் தேடிக்கொடுக்காமல் - அவற்றில் கவனம் செலுத்தாமல் - அவற்றுக்கு நிதி ஒதுக்காமல் அந்நிய நாடு முதலீடுகளை கொண்டுவந்து குவித்து  நாட்டின் சிறு தொழில்களை அழிப்போம் என்று முனைப்போடு செயல்படும் ஒரு அரசு ‘இருப்பதை விட்டு விட்டு ப் பறப்பதற்கு ஆசைப்படும்    அரசாகவே இருக்க முடியும். ஆகவே நீர் ஆதாரங்களைப் பெருக்கவும், மாநிலங்களுக்கிடையே நிலவும் நதி நீர்ப் பங்கீட்டுப் பிரச்னைகளைத் தீர்க்கவும் ஒரு அரசியல் நந்தி குறுக்கிடாத செயல் திட்டத்தை இந்த பட்ஜெட் தீர்க்கமாக தருமானால் அது இந்த நாட்டுக்கு நல்லது. 

ஒவ்வொரு வருடமும் நாட்டின் பாதுகாப்பு, மற்றும் இரயில்வே திட்டங்களுக்காக நாட்டின் மொத்த வருமானத்தில்  பெரும் தொகை செலவிடப்படுவது வாடிக்கை.  இந்த வருட பட்ஜெட்டிலாவது பாதுகாப்பு செலவு என்று பெரும் செலவைக் குறைத்துக் கொண்டு அந்தப் பணத்தை குடிநீர் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காக ஒதுக்கினால் நனமையாக இருக்கும். ஒரு வருடம் பாதுகாப்புச் செலவைக் குறைப்பதானால் பெரும் ஆபத்து வந்துவிடப் போவதில்லை. இப்போது இத்தனை கோடிகள் செலவு செய்தும் என்ன நாட்டுப் பாதுகாப்பு கிழிக்கிறது? தலைவெட்டித் தம்பிரான்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். 

வருமான வரி விலக்கு பெரும் தொகையின் உச்சவரம்பை போதுமான அளவு இந்த பட்ஜெட்டில் உயர்த்திக் கொடுக்கவேண்டுமென்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். காரணம் நாட்டின் அரசு ஊழியர்களின் வருமானம் சம்பளம் தரப்படும் இடத்திலேயே பிடித்தம் செய்யப்படுகிறது. அவர்கள் கையில் கிடைக்கும் மிச்சப் பணம் விலைவாசிகளின் அன்றாட உயர்வுக்கு ஈடுகொடுக்க முடியாமல்  சேமிப்பு என்பது கனவாகவே இருக்கிறது. சேமிப்பு இல்லாத மக்களால் முதலீடுகள் சாத்தியமில்லை. முதலீடுகள் சாத்தியமில்லாத மக்கள் வாழும் நாட்டில் வளர்ச்சி விகிதம் எட்டாக் கனியாகவே இருக்கும். ஆகவே ஏறி இருக்கும் விலைவாசிகளின் அடிப்படையில் வருமானவரி கட்டுவோருக்குக்கான உயர்ந்தபட்ச வருமானம் பல மடங்குகள் உயர்த்தப் படவேண்டும். 

அது மட்டுமல்லாமல், மிக அதிகமான சதவீதம் வருமானவரி நிர்ணயம் செய்து இருப்பதால் வரி ஏய்ப்பும் அதிகமாக இருக்கிறது. இது அரசுக்கே இழப்பைத்தரும். வருமானவரி கட்டும் முறைகளையும் வரிகளை கணக்கிடும் முறைகளையும்  எளிதாக்கி உயர்ந்த பட்ச வருமானவரி சதவீதத்தையும் குறைத்தால் தாமாக முன்வந்து வருமானத்தை மறைக்காமல் அரசுக்கு வருமானம் வர வாய்ப்பு இருக்கிறது. முப்பது சதவீதத்துக்கு மேல்  வரி போடும் இன்றைய நடை முறை மாற்றப்பட்டால்  அது சிறப்புச் செய்தியாக இருக்கும்.  

மருத்துவ செலவு மற்றும் பயணப்படிக்காக வரிமானவரித்துறையால் கழித்துக் கொள்ளப்படும் தற்போது அமுலில் இருக்கும் சதவீதம் சற்றும் பொருத்தமில்லாமல் இருக்கிறது. ஒரு முறை மருத்துவத்துக்காக ஒரு சிறப்பு மருத்துவரைப் பார்த்து வந்தாலே பதினைந்தாயிரம் ரூபாய் செலவாகிவிடுகிறது. அதையே வருடம்  முழுவதற்கும் வருமானத்திலிருந்து கழித்துக் கொள்ள அளவு வைத்து இருப்பது அநீதி. அதேபோல் இரயில்  பஸ் கட்டணங்களை உயர்த்தும் அரசுகள் பயணப்படியை  மட்டும் அப்படியே வைத்திருப்பதும் அநீதி. இவைகளின் உயர்ந்த பட்ச அளவுகளை இந்த பட்ஜெட்டில் உயர்த்தித் தர வேண்டும்.   

புதிய வேலைவாய்ப்புகளை பெருக்குவதும் இந்த பட்ஜெட்டில் தேவைப்படும் அம்சமாகும். வேலை  வாய்ப்பு என்றால் நூறு நாள் வேலை என்று தலையில் கூடையை கொஞ்ச நேரம் வைத்துக் கொண்டு பிறகு கருவைச் செடி நிழலில் உட்கார்ந்து கஞ்சி குடித்துவிட்டுப் போகும் வேலை அல்ல. வருடாவருடம் கல்லூரிகளில் இருந்து படித்துப் பட்டம் பெற்றோர் வெளியேறி வந்துகொண்டு இருக்கிறார்கள். வருடா வருடம் புதிய புதிய கல்லூரிகள் தொடங்கப் பட்டுக்கொண்டே இருக்கின்றன. Demographic Profile என்கிற தகுதி படைத்தவர்களின் எண்ணிக்கை அளவு கூடிக்கொண்டே போகிறது.  இப்படி     வெளியேறும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உடனடியாக வழங்கிடும் வகையில் சில புரட்சிகரமான  அறிவுப்புக்களை  இந்த பட்ஜெட்டில்  வெளியிட்டால் சிறப்பாக இருக்கும். 

நாடெங்கும் விவசாய நிலங்கள் – உணவை உற்பத்தி செய்து தந்துகொண்டிருந்த தாய்க்கு நிகரான நிலங்கள் தரிசு நிலங்களாகவும் வீட்டு மனைகளாகவும்  போடப்பட்டு           வீணடிக்கப்பட்டுக் கிடக்கின்றன. இவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கணிசமான கேட்டை விளவித்துவிட்டன. ஒன்று, உணவு உற்பத்தி  குறைந்துவிட்டது.          இரண்டு,  விவசாயக் கூலித்தொழிலாளர்கள் இடம் பெயர்ந்துவிட்டனர். மூன்று, குறைந்த வருமானம் உடையவர்கள் ஒரு மனை வாங்கி வீடு கட்ட முடியவில்லை. நான்கு சிலர் திடீர்      குபேரர்களாக ஆகிவிட்டனர்.  ஐந்து,   சிறு விவசாயிகளின் நிலங்கள் அடிமாட்டு விலைக்குப் பிடுங்கப் பட்டுவிட்டன. ஆறு, ஒரே குடும்பம் அல்லது நிறுவனம் பல இடங்களை தங்களின் பொறுப்பில் வைத்துக் கொண்டு    சாம்ராஜ்ஜியம் நடத்திக் கொண்டு இருக்கின்றன. இந்த பட்ஜெட்டில் இந்த குறைபாடுகளுக்கேல்லாம் ஒரு நிவாரணம் தேவைப் படுகிறது.  

நில உச்சவரம்பு என்கிற விவசாய நிலங்களுக்குக் கொண்டுவரப்பட்ட சட்டம் போல் வீட்டு மனைகளுக்கும் கொண்டுவரப்படவேண்டும்.  மின்சாரத்துக்கும், தொலைபேசிக்கும் ஒழுங்கு முறை ஆணையம் வந்ததுபோல் REAL ESTATE REGULATORY AUTHORITY என்று ஒரு அமைப்பு வந்தால் நலம். மாசுக் கட்டுப்பட்டு வாரியத்தின் முன் அனுமதியும் இந்த மனைப் பிரிவுகளுக்குக் கொண்டுவரப் படவேண்டும். இப்படிப்பட்ட ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக வேலை செய்பவர்கள் இதற்காக ஒரு பதிவினைப் பெற்றிருக்க வேண்டும். அவர்களுக்கென்று சில தகுதிகள் நிர்ணயிக்கப்பட வேண்டும். பேராசை காட்டி நிலங்களை விற்றால் அதற்கான தண்டனை அல்லது இழப்பீடு நிர்ணயம் செய்யப்பட வேண்டும். ( குறைந்த பட்சம் காலையில் பிரஷ் கொண்டு பல் விளக்குபவர்களாக இருக்க வேண்டும்). 

இன்னும் , அந்நிய முதலீடுகளுக்கு இரத்தினக் கம்பளம் விருப்பத்தை குறைத்துக் கொண்டு உள் நாட்டினர் சொந்த நாட்டில் முதலீடு செய்பவர்களுக்கு தாராளமான சலுகைகளை வழங்க அரசு முன்வர வேண்டும். முக்கியமாக லைசென்ஸ் மற்றும் பதிவுகள் முதலியன பெறுவது, வங்கிக் கணக்குத்திறப்பது, தொடர்புடைய அரசுத்துறைகளில் இருந்து உடனடி அனுமதி பெறுவது ஆகியவற்றில் உள்ள நடைமுறை சிக்கல்களை அன்றே தீர்த்துவைத்து வழங்கிடும் வண்ணம்  சில புரட்சிகரமான ஊக்கமான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் தேவை. அத்துடன் உள்நாட்டுத்தொழில் முனைவோருக்கு சிறப்பான வரிச்சலுகைகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப் பட வேண்டும். 

மின்சார உற்பத்தித் துறையில் முதலீடு செய்வோருக்கும், விவசாய முன்னேற்றத்துக்கு உதவிடும் தொழிலில் முதலீடு செய்வோருக்கும் ஆக்கமும் ஊக்கமும் தரும் வகையில் பசி போக்கிட ப.சி. உதவிட வேண்டுமென்று எதிர்பார்த்து பல இதயங்கள் இந்த பட்ஜெட்டை எதிர் நோக்குகின்றன. 

எண்ணெய் பற்றாக்குறை, தினசரி விலையேற்றம் என்பது ஒரு திக்கு முக்காட வைத்து திணற வைக்கும் பொருளாதாரத் திட்டம். ஒரே இரவில் விலை ஏற்றுவது எத்தகைய   அறிவற்ற அரசும் செய்யாத கண்டிக்கப்பட வேண்டிய திட்டம். இதனால் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களை பாதிக்கும் என்பதும் – ஒப்புக்கொள்ளப்பட்ட விலையில் ஆர்டர்கள் டெலிவரி செய்ய இயலாமல் போகும் இதனால் வணிக நிறுவனங்கள்  நஷ்டப்படும் என்பவை  ஹார்வேடுக்கும், முன்னாள் ரிசர்வ் வங்கிக்கும் தெரியாதா?  எண்ணெய் நிறுவனங்களிடம் வழங்கப் பட்டிருக்கும்  இந்த பொருளாதாரத்தின் பொம்மலாட்டக் கயிறு உடனே இந்த பட்ஜெட்டில் பிடுங்கப் படவேண்டும்.  

சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு பதிலாக அந்நிய நிறுவனங்களை வேண்டுமானால் கடன்பத்திரத் திட்டங்களில் முதலீடு செய்ய வைக்கலாம். இததகைய கடன் பத்திர முதலீடுகளுக்கு இப்போது உச்ச வரம்பு இருக்கிறது, இந்த உச்சவரம்பை நீக்கலாம். அப்போது யார்  வருகிறார்கள் என்று பார்க்கலாம். 

கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படும்போது பெரும் பாலங்கள், சாலைகள் மேம்பாடுகள் மட்டுமல்ல. சுகாதார வசதிகள் குறிப்பாக சுத்தமான கழிப்பிட வசதிகள், குளியலறை வசதிகள் எல்லா சிறு ,  பெரு நகரங்களிலும் அவசியம் எற்படுத்தித்தரவேண்டும். நகரங்களில் இல்லாவிட்டாலும் குறைந்த பட்சம் இரயில்  நிலையங்களில் கண்டிப்பாக ஏற்படுத்த வேண்டும். இதை ஏன் எழுதவேண்டிய அவசியம் என்பதை ஒரு முறை காரைக்குடிக்கு செல்லும் வழியில் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் உள்ள கழிப்பிடம் போய் ஒரு முறை தனது காலைக் கடன்களைக் கழித்துப் பார்த்துவிட்டு  வேண்டுமானால் நிதியமைச்சர்  நாட்டின் நிலைமைகளை முடிவு செய்து கொள்ளலாம். 

வெளிநாட்டில் இந்தியர்களால் கோடி கோடியாக குவிக்கப்பட்டு இருக்கிற கருப்புப்பணம் இந்த பட்ஜெட்டிலாவது வெளிக்கொண்டுவரப்பட வழி பிறக்குமா என்பதும் அப்படி பதுக்கியோரின் பட்டியல் வெளியிடப்படுமா என்பதும் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் பதில்கள். 

நிலக்கரி முதல் கிரானைட்  வரை நிலத்துக்கு கீழ் புதைந்து கிடக்கும் நாட்டின் செல்வங்கள் தனியாருக்குத் தாரைவார்க்கப் படாமல் அனைத்து செல்வங்களும் நாட்டுக்கே என்று  அர்ப்பணிக்கப் படுமா என்பதும் – அவற்றின் விற்பனை மூலம் கிடைக்கும் இலாபங்கள் நாட்டின் வருமானத்தில் சேர்க்கப்பட்டு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளப்படுமா என்பதும் இந்த பட்ஜெட் விடையளிக்க வேண்டிய கேள்விகள். 

பார்க்கலாமே ப. சி. போடப் போகும் பட்ஜெட் பசி போக்குமா? இல்லையா என்று காத்திருப்போம் இன்னும் ஒரு வாரம். 

"நூறு குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்ந்தால் அவர்களில் ஐம்பது பேர் மட்டுமே ஆறாம் வகுப்புக்கு வருகிறார்கள். ஐம்பது பேர் படிப்பை நிறுத்தி விடுகிறார்கள். ஆறாம் வகுப்பில் சேர்ந்த குழந்தைகள் பத்தாம் வகுப்புக்கு வரும்போது 35 குழந்தைகளே படிக்கிறார்கள். காரணம், ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வருவதற்குள் அவர்களில் பலர் தேர்வில் வெற்றிபெற முடியாமல் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விடுகிறார்கள். பிளஸ் டூ வரும்போது வெறும் 30 குழந்தைகளே படிக்கிறார்கள். அதாவது ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த 100 குழந்தைகளில் 70 பேர் படிப்பை நிறுத்தி விடுகிறார்கள்.

பிளஸ் டூ-க்குப் பிறகு இடைநிலை பட்டப்படிப்பு (பி.ஏ., பி.எஸ்சி.) படிக்க 15 பேர் வருகிறார்கள். முதுநிலை படிக்க (எம்.ஏ., எம்.எஸ்சி.) வெறும் 7 அல்லது 8 பேரே வருகிறார்கள். ஆக, மொத்தம் ஒன்றாவதில் சேர்ந்த 100 குழந்தைகளில் 92 பேர் முதுநிலைப் பட்டப்படிப்பு வரை வருவதில்லை. இது இந்தியா முழுவதும் உள்ள நிலைமை'' என்று சமீபத்தில் ஒரு கருத்தரங்கில் கவிஞர் பாரதி கிருஷ்ணகுமார் வெளியிட்ட தகவல், "அசர்' அமைப்பின் புள்ளிவிவரத்தைவிட அதிர்ச்சி அளிக்கும் தகவல்.

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், வரும் 28ம் தேதி, 2013-14ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, பார்லிமென்டில் தாக்கல் செய்ய உள்ளார். 2014ம் ஆண்டு வரவிருக்கும் பொதுத் தேர்தல், பணவீக்க உயர்வு, அதிகரித்துள்ள நடப்பு கணக்கு பற்றாக்குறை, அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம் உள்ளிட்டவற்றை மனதில் கொண்டு, அனைத்து தரப்பினருக்கான பட்ஜெட்டை உருவாக்கும் பெரும் பொறுப்பு அவருக்கு உள்ளது.

அதே சமயம், மக்களுக்கு, விலைவாசி குறையுமா, சமையல் எரிவாயுவிற்கான கட்டுப்பாடு அடியோடு நீக்கப்படுமா என்பது போன்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.வருமான வரி வரம்பு உயர்த்தப் படுமா, வீட்டு கடன் வட்டிக்கான வரிச் சலுகை கூடுமா என்பது போன்ற எதிர்பார்ப்புகளும், வரி செலுத்துவோருக்கு உள்ளன. இவற்றுக்கான விடை, அடுத்த 16வது நாளில் தெரிந்து விடும். இந்நிலையில், வரி செலுத்து வோரின் பட்ஜெட் எதிர்பார்ப்புகளை இனி பார்க்கலாம்.வருமான வரி வரம்பு : தற்போதுள்ள வருமான வரி வரம்பை, 2 லட்சம் ரூபாயில் இருந்து, 3 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். 10 லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட வருவாய்க்கு, உச்சபட்சமாக, 30 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதே மதிப்பிலான தொகைக்கு, ரஷ்யாவில், 13 சதவீதமும், ஹாங்காங்கில், 17 சதவீதமும், சிங்கப்பூரில், 20 சதவீதம் என்ற அளவில் தான் வரி விதிக்கப்படுகிறது.

அதை பின்பற்றி, உச்சபட்ச வரி வரம்பிற்கான வருமானத்தை, 10 லட்ச ரூபாயில் இருந்து 20 லட்ச ரூபாயாக உயர்த்தலாம். நேரடி வரிகள் குறித்து, பார்லிமென்ட் நிலைக்குழு, மத்திய அரசுக்கு அளித்த பரிந்துரையை பின்பற்றலாம். வீட்டு வாடகைப் படிவீட்டு வாடகைப் படிக்கான வரி விலக்கு, முதல் நிலை நகரங்களுக்கு, 50 சதவீதமாகவும், இரண்டாம் நிலை நகரங்களுக்கு, 40 சதவீதமாகவும் உள்ளது. சிறு நகரங்களிலும், வாழ்க்கை செலவினம் உயர்ந்துள்ளதால், இதை, அனைத்து நகரங்களுக்கும் பொதுவாக, 50 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும்.

வீட்டு வசதிக் கடன் : வீட்டு வசதி கடனில், ஆண்டுக்கு, 1.50 லட்ச ரூபாய் வரை செலுத்தப்படும் வட்டிக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இதை, 5 லட்ச ரூபாயாக உயர்த்தலாம். கடந்த, 1999ம் ஆண்டுக்குப் பிறகு, இந்த வரம்பு உயர்த்தப்படவில்லை. அதே சமயம், நிலத்தின் மதிப்பு பன்மடங்காக உயர்ந்து விட்டது. வட்டியும் அதிகரித்துள்ளது. வரி விலக்கு வரம்பு உயர்த்தப்பட்டால், ரியல் எஸ்டேட் துறையிலும் முதலீடு குவியும்.

மருத்துவ செலவினங்கள் : தற்போது, ஒருவர் தமக்கும், குடும்பத்தாருக்கும் செய்யும், 15 ஆயிரம் ரூபாய் வரையிலான மருத்துவ செலவினங்களுக்கு, வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இதை, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தலாம்.

பயணப்படி : தற்போது, ஒரு நிறுவனம், அதன் ஊழியருக்கு மாதம், 800 ரூபாய் வரை வழங்கும் பயணப்படிக்கு, வரி விலக்கு வழங்கப்படுகிறது. இந்த வரம்பை, 3,500 ரூபாயாக உயர்த்த வேண்டும்.

கடந்த 1997ம் ஆண்டுக்குப் பிறகு, இதுவரை இந்த வரம்பு உயர்த்தப்படவில்லை. அதே சமயம், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டன. பல ஆண்டுகளாக, ஒரு லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டிற்கு, வருமான வரிச் சட்டம், 80 சி., பிரிவின் கீழ் வரி விலக்கு வழங்கப்படுகிறது. இந்த வரம்பை, 3 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். இதனால், பல்வேறு சேமிப்பு திட்டங்களில், முதலீடு அதிகரிக்கும்.

கல்வி செலவினங்கள் : கல்வி சார்ந்த செலவினங்கள் அனைத்திற்கும், வரிச் சலுகை வழங்க வேண்டும். தற்போது, கல்விப் பயற்சிக் கட்டணத்திற்கு மட்டுமே, 80 சி., பிரிவின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இச்சலுகை, பள்ளி சேர்க்கை கட்டணம், விடுதிக் கட்டணம் போன்றவற்றுக்கும் விரிவுபடுத்த வேண்டும். இந்தியாவில் தனியார் கல்வி நிறுவனங்கள் பெருகி வருகின்றன. கல்விச் செலவினமும் அதிகரித்து வருகிறது. அதனால், 10 லட்சத்திற்கு மேற்பட்ட கல்விச் செலவினத்திற்கு, 80 சி., பிரிவின் கீழ், தனி வரம்பை ஏற்படுத்தலாம்.

இபுராஹீம் அன்சாரி


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு